“குழந்தைகளின் உலகம் உயிர்ப்போடு இருக்கக் கூடிய மாய எதார்த்த உலகம். நிகழ்காலத்தைக் கொண்டாடக் கூடிய உலகம். தங்களால் தங்களுக்கான தேக்கநிலையை உருவாக்கிக்கொள்ளாத உலகம். அந்த உலகில் பயணிக்க பயணிக்க நம்முள் இருக்கிற குழந்தைமை உயிர்ப்போடு இருக்கும், இருக்கவும் செய்கிறது,” என நம்புபவர் இனியன்.
பல்லாங்குழி அமைப்பு மூலம் கலைகள் குறித்த அறிமுகங்களைக் தமிழகம் முழுக்க உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் நோக்கத்துடன் கலை இலக்கியக் கொண்டாட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து நடத்திவருகிறார். நாம் மறந்துபோன 150க்கும் மேற்பட்ட பாரம்பரிய விளையாட்டுகளை ஆவணப்படுத்தி, 140க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் தலைமுறை மாணவர்களுக்கு எடுத்துச் சென்றுள்ளார். குழந்தை வளர்ப்பு, சிறார் இலக்கியம், அதில் அரசியல் சரிநிலை, குறிப்பிடத்தகுந்த முன்னெடுப்புகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என இனியனுடன் நீள்கிறது இவ்வுரையாடல்.
உங்கள் வாசிப்புப் பழக்கம் எவ்வாறு துவங்கியது? எவ்வாறெல்லாம் விரிவடைந்திருக்கிறது?
நான்காம் வகுப்பு படிக்கும்போது தினசரி நாளிதழில் இருந்துதான் வாசிப்பு. பிறகு நாளிதழ் இணைப்புப் புத்தகங்கள், நூலகப் புத்தகங்கள் எனத் தொடர்ந்து இன்று kindle வரை வந்துகொண்டிருக்கிறது.
பள்ளிப் பருவத்தில் உங்களை அதிகம் கவர்ந்த படைப்பு எது? அதே படைப்பைக் காலம் கடந்தும் வாசித்த அனுபவமுண்டா?
பள்ளிப் பருவத்தில் கவர்ந்த படைப்பு என்றால், எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பிற்குச் செல்லவிருந்த முழுபரீட்சைக் கோடை விடுமுறையில் திருச்சி மைய நூலகத்திலிருந்து முதல்முறையாக எடுத்து வாசித்த எழுத்தாளர் ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்’ புத்தகம்தான்.
தற்போது வரை 15 முறைக்கும் மேல் வாசித்திருக்கும் ஒரே புத்தகம் இது மட்டுமே. என் வாழ்வோடு ஒன்றிவிட்டிருக்கிற புத்தகம் என்று இப்புத்தகத்தை நிச்சயம் சொல்லலாம். காரணம், பல மனச்சோர்வான காலங்களிலும் இப்புத்தகம் என்னோடு இருந்திருக்கிறது. அச்சோர்விலிருந்தெல்லாம் மீட்டெடுத்திருக்கிறது என்றாலும் அது மிகையாகாது. ஒவ்வொருமுறையும் புதிது புதிதான ஊக்கம் தந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்.
எந்த வகையில்?
வாழ்வை இப்படியெல்லாம் ரசித்துவிட முடியுமா? ஒவ்வொன்றையும் நாம் பார்க்கின்ற பார்வை என்னவாக இருக்க வேண்டும்? அதில் தனித்துவத்தை எப்படி உணர்ந்து, உணர்த்த வேண்டும் எனப் பலப் பரிமாணங்களைக் கொடுத்த வகையில் ஹென்றியும்.
குழந்தைகளிடத்தில் எப்படியெல்லாம் என்னவெல்லாம் உரையாடலாம். அப்படியான உரையாடல்கள் மூலமே ஹென்றிக்களை உருவாக்கிட முடியும் என்ற வகையில் சபாபதியும்.
தன்னம்பிக்கை என்பது உடனிருப்பவர்களுக்கு, அறிமுகமே இல்லாதவர்களுக்கு உதவுவதில் துவங்குகிறது என்பதை உணர்த்திய வகையில் அக்கம்மாவும்.
கவலை, கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகள் நம் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடிய ஒன்று. அவற்றை விட்டொழிக்க நமக்குள் நாம் உணரும் நிர்வாணம் ஒன்று தேவை என்பதை உணர்த்திய வகையில் பேபியும்.
ஒருவரிடம், நான் இருக்கிறேன் உங்களுடன், உங்களுக்காக என்பதைவிடப் பெரும் நம்பிக்கை வேறு இருக்க முடியாது என உணர்த்திய வகையில் தேவராஜும்.
விட்டுக் கொடுத்து வாழ்வதைவிட வேறு சுகம் உண்டோ? வாழ்வின் அனைத்து மேடு பள்ளங்களிலும் ஒரே குணத்துடன் பயணிக்க அழகான முரட்டுத்தனமான நேர்மை தேவை என்பதை உணர்த்திய வகையில் துரைக்கண்ணுவும்.
அனைத்துக் கதாபாத்திரங்களும் ஒவ்வொன்றையும் உணர்த்திக்கொண்டே இருந்த வகையில் இந்தப் புத்தகம் எனக்கு மிகவும் முக்கியமான புத்தகம்.
உங்களைப் பொறுத்தவரை சிறந்த சிறார் இலக்கியத்திற்கான அம்சங்கள் என எவற்றைச் சொல்வீர்கள்?
சமகால எதார்த்தங்கள், பன்முகதத் தன்மை கொண்ட சமூகப் பிரச்சனைகள், பல்வேறு நில அமைப்புகள், சமூக நீதி மற்றும் சமத்துவக் கருத்துகள், பாலியல் உட்பட சமூகப் பிரச்சனைகள், பகுத்தறியும் தன்மைகள், சிறார் உரிமைகள், அறிவியல், மருத்துவக் கதைகள் போன்றவற்றில் ஏதாவதொன்றை உள்ளடக்கியதாக சிறார் இலக்கியங்கள் இருக்க வேண்டும்.
(பி.கு: சிறார் இலக்கியம் 8 வயதிலிருந்து 14 வயது வரையிலான குழந்தைகளுக்கானது)
தற்போதைய சிறார் இலக்கியத்தின் உவகை அளிக்கும் போக்கு எது? கடுப்பேற்றும் விசயங்கள் எவை?
முந்தைய கேள்விக்கான பதிலில் உள்ள அம்சங்களை உள்ளடக்கிய படைப்புகள் அதிகரித்துள்ளன. அதேபோல் நேரடியாக ஒழுக்க நீதி போதனைகள் செய்யும் நிலையும் குறைந்திருக்கிறது. இவையெல்லாம் மகிழ்வைக் கொடுக்கின்றன.
கடுப்பேற்றும் விசயங்கள் என்றால் அடிப்படைவாதக் கருத்துகளை வழிந்து திணிப்பது போன்று இன்றைய காலக்கட்டத்திலும் வருகிற படைப்புகளும் அதற்கான கொண்டாட்டங்களும் பெருங்கடுப்பைத்தான் ஏற்படுத்துகின்றன.
0-1, 1-3, 3-6, 6-9, 9-14, 14-16, 16+ இப்படி வயது வாரியாக இலக்கியத்தைப் பிரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?
அப்படியான அவசியம் குழந்தைகளின் வாசிப்பு அனுபவங்களை அந்த வயதிலிருந்தே துவங்கிட உதவும். அதேபோல் அந்தந்த வயதிற்கு ஏற்றாற்போலான உடலியல் மற்றும் உளவியல் மாற்றங்களையும் சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் இப்படிப் பிரிப்பது மிக அவசியமாகத் தேவை.
இந்த வயதின் அடிப்படையிலான பிரிப்பு தமிழ் மற்றும் இந்திய ஒன்றியச் சூழலில்தான் பரவலாக இல்லை. மற்றபடி ஆங்கிலம், பிரன்ச் போன்ற மொழிகளில் இப்படியான பிரிப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
“மாய எதார்த்தங்கள், இங்கிருக்கும் நில அமைப்பு சார் வாழ்வியல் முறைகளில் இருந்து விழுமியங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதே போல் எதார்த்த அறிவியல் கதைகள், குழந்தைகள் மற்றும் சிறார்கள் தொடர்பான உரிமைகள் சார் கதைகள், மருத்துவக் கதைகள், சமூக நீதிக் கதைகள் போன்றவைகளும் அவற்றிற்கான விழுமியங்களோடு படைக்கப்பட வேண்டும்,” என பஞ்சுமிட்டாய் நேர்காணலில் குறிப்பிட்டிருந்தீர்கள். இத்திசையில் நம்பிக்கை தரும் சமீபத்தியப் படைப்புகள் சிலவற்றைப் பகிருங்கள்.
ஒற்றைச் சிறகு ஓவியா – விஷ்ணுபுரம் சரவணன்
மரப்பாச்சி சொன்ன ரகசியம் – யெஸ். பாலபாரதி
பறக்கும் ஹேர் கிளிப் – விஜயபாஸ்கர் விஜய்
சஞ்சீவி மாமா – கோ.ம.கோ. இளங்கோவன்
மாயக் கண்ணாடி – உதயசங்கர்
பேரன்பின் பூக்கள் – சுமங்களா (தமிழில் : யூமா வாசுகி)
அனிதாவின் கூட்டாஞ்சோறு – விழியன்
மொட்டை மாடியில் முசோலினி – கலைமதி
ராசுவின் யானைக் கதை – பூர்ணிமா செண்பக மூர்த்தி (Kindle only)
1729 – இரா.நடராசன்
இவையெல்லாம் சமீபத்திய படைப்புகள். இவற்றில் பெண் படைப்பாளிகள் மூவர் மட்டுமே உள்ளது கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது.
குழந்தைகளுக்கான கதைகளில் விழுமியங்களோ, அரசியல் உள்ளீடுகளோ இருந்தாக வேண்டுமா? நகைச்சுவைக்காக, வாசிப்பு இன்பத்திற்காக எழுதப்படும் படைப்புகளுக்கும் இடம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையா?
நகைச்சுவைக்காக, வாசிப்பு இன்பத்திற்காக எழுதப்படும் படைப்புகளில் விழுமியங்களும் அரசியல் உள்ளீடுகளும் அவசியம் என்கிறேன் அவ்வளவுதான்.
“சிறார் இலக்கியமென்பது பெரியவர்கள் அவர்களாகக் கற்பனை செய்துகொள்ளும் சிறார் உலகம் சார்ந்தது. அதற்கும் நிஜத்திற்கும் பெரிய வேறுபாடுகள் உண்டு,” என்கிற விமர்சனம் உலகளவில் உண்டு. இது உண்மையா?
நிச்சயம் உண்மையான ஒன்றுதான். ஆனால் இந்த விமர்சனம் பொய்த்துப்போன இடங்களும் உண்டு. அதேநேரம் சிறார்களே எழுத்தாளர்களாக அதிக அளவில் வரும்போது இந்த விமர்சனம் முற்றிலும் நீங்கிவிடவும் வாய்ப்பிருக்கிறது.
அறிவியல் துல்லியமும் (scientific accuracy) அரசியல் சரிநிலையும் (political correctness) சிறார் புனைவில் எந்த அளவிற்கு அவசியம்? அவை வாசிப்பின்பதையும் கற்பனை விரிவையும் தடுக்குமெனக் கருதுகிறீர்களா?
அறிவியல் துல்லியம் அனைத்து விசயங்களையும் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொடுக்கும். அரசியல் சரிநிலை சமத்துவத்தையும் சமூகப் புரிதலையும் ஏற்படுத்தும். இவையிரண்டும் வாசிப்பனுபவத்தையும், கற்பனை விரிவையும் நிச்சயம் தடுக்காது. மாறாக, கற்பனையுடன் கூடிய எதார்த்தச் சிந்தனைகளை உருவாக்கும்.
திராவிட வாசிப்பு மின்னிதழில் ‘குழந்தைகளுடன் நான்’ என்கிற தலைப்பில் கட்டுரைத்தொடர் எழுதியுள்ளீர்கள். சிறுவர் உலகம் குறித்துப் பெரியவர்களிடையே நிலவுகிற தவறான அனுமானங்கள் சிலவற்றைச் சொல்லுங்களேன்.
இவற்றைப் போன்று நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
“குழந்தைகள் நமது பராமரிப்பில் இருக்கிறார்கள், அவர்களை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும், எல்லாவற்றையும் சொல்லித்தர வேண்டும்.” இதுவே குழந்தை வளர்ப்பின் பொதுமுறையாக உள்ளது. இதன் சாதக பாதகங்கள் என்ன?
குழந்தை வார்ப்பில் சாதக பாதகம் என்பது கடமைக்கும் உரிமைக்கும் உண்டான வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல் வினையாற்றுவதற்கு ஒப்பானது.
கடமையைச் சரிவர செய்யும்போது அது சாதகமாகவும், கடமையைச் செய்கிறோம் அதனால் அவர்களது உரிமையில் தலையிடலாம் என்னும் அதிகாரத்தை அவர்கள் மீது செலுத்துகிற பொழுது பாதகமாகவும் அமைகிறது.
மற்றபடி சாதக பாதகங்களைப் பொதுமைப்படுத்தியெல்லாம் சொல்லிவிட முடியாது. அது ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்வியல் சூழலில் இருந்து அணுக வேண்டிய ஒன்று. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம்: குழந்தை வளர்ப்பு என்னும் கலையில் கடமைகள் எவை? உரிமைகள் எவை? என்பதையெல்லாம் குழந்தை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர் தேடித் தெரிந்துகொள்ளலாம்.
இது சம்பந்தமான புத்தகங்கள் ஏதேனும்?
தமிழில் இது தொடர்பான புத்தகங்கள் குறைவுதான் என்றாலும் சமீபத்தில் வெளிவந்திருக்கும் “உங்கள் குழந்தை யாருடையது? – ஜெயராணி”, “நம் காலத்தின் குழந்தைகள் – மனநல மருத்துவர். சிவபாலன் இளங்கோவன்” இந்த இரண்டு புத்தகங்களும் மேலே சொல்லிய கருத்துகளை ஒட்டி வந்திருப்பவைதான்.
அரசியல் அடிப்படையின் முதல் புள்ளியாக, சமூகத்தில் நடைபெறுகின்ற அன்றாட நிகழ்வுகளைச் சிறாருக்கு அறிமுகப்படுத்துவதில் குடும்பம் மற்றும் சமூகத்தின் பங்காக எவற்றைச் சொல்வீர்கள்?
தினசரி செய்தித்தாள்களை வாசிக்க வைத்தும் வானொலி, தொலைக்காட்சி செய்திகளைக் கேட்க வைத்தும் அவற்றைப் பற்றிய உரையாடல்களை நிகழ்த்தலாம். அதே போல் சமூகப் படிநிலைகளைக் காட்சிப்படுத்தக் கூடிய உரையாடல்களையும் ஆதிக்க மனோநிலையில் நிகழ்த்தாமல் சமத்துவச் சிந்தனைகளின் அடிப்படையில் நிகழ்த்த வேண்டும். அதற்கான முன்தயாரிப்புகளையும், தேடுதல்களையும் குடும்பங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டும்.
குடும்பம் என்னும் அமைப்பைக் கடந்து குழந்தைகளுக்கு அடுத்ததாக அறிமுகமாகும் சமூக அமைப்பு பள்ளியும் வகுப்பறையும்தான். மேற்சொன்ன அதே செயல்வடிவம்தான். ஆனால் கூட்டு உரையாடல்களாகச் செய்து தேடுதல்களைக் கட்டமைக்கும் விதமான பாடத் திட்டங்களாக இருக்க வேண்டும்.
இவையிரண்டும் சீராக நடைபெறும் நிலையில் பொதுச் சமூகம் மற்றும் அரசியல் அடிப்படைகள் பற்றிய புரிதல் மிக இயல்பாகவும் எளிமையாகவும் குழந்தைகளிடம் வந்தடையும்.
பள்ளிக்கு வெளியே வாழ்க்கையைக் கற்றலில் பெற்றோர்களின் பங்கு என்ன?
பெற்றோர்கள் பயணங்களை அறிமுகப்படுத்தலாம் என்பது சிறப்பான கருத்து. எந்த ஊர் என்றாலும் அதற்கு ஒரு டூர் பேக்கேஜுடன் வந்து நிற்கும் ஏஜெண்டுகள் சூழ் உலகத்தில், பயணங்களைத் திட்டமிடும்போது கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயமாக எதைச் சொல்வீர்கள்?
முதலில் சுற்றுலாவிற்கும் பயணங்களுக்கும் உண்டான வித்தியாசங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். சுற்றுலா செல்வதற்குத்தான் ஏஜென்ட்கள் தேவை. பயணங்களுக்கு நல் தொடர்புகள் இருந்தாலே போதும். அதே போல் பயணம் என்பது வெகு தொலைவுக்குத்தான் செல்ல வேண்டும் என்பதல்ல. நம்மைச் சுற்றியுள்ள நாம் இதுவரை கண்டிராத மிக அருகாமை இடமாகக்கூட இருக்கலாம். அவற்றைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்வதுகூடப் பயணம்தான். பேக்கேஜ் சுற்றுலாக்களில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான அட்வெஞ்சர்கள் மிகவும் குறைவுதான். அதற்குக் காரணம் போகிற இடங்கள் பற்றிய தகவல் தெளிவுகள் முன்னமே கிடைக்கப்பட்டுவிடுவது. அதேபோல் தகவல்கள் ஏற்கனவே இருப்பதால் உரையாடல்கள் குறைந்துவிடும் வாய்ப்புகளும் அதிகம். ஆனால் பயணங்களில் அப்படியில்லை. ஒவ்வொன்றையும் உரையாடித்தான் பெற்றுக்கொள்ள முடியும் என்னும் நிலையில் அதிக அளவிலான உரையாடல் நடைபெறும். அங்கிருக்கும் மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புகளும் கிடைக்கும். திட்டமிடாத் திட்டமிட்டப் பயணம் தெகிட்டாத இன்பமாக இருக்கும் குழந்தைகளுக்கு.
இனியன் பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கும் இடங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும்?
பயணத்திற்குத் தேர்ந்தெடுக்கும் இடம் என்றெல்லாம் தனிபட்ட முறையில் எதுவும் இல்லை. ஐந்திணைகளையும் பயணித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆவல். அதனடிப்படையில் பயணம், அவ்வளவுதான். கூடவே பள்ளி நிகழ்வுகள், குழந்தைகள் என நீள்கிறது. இருந்தும் குறிப்பிட்ட இடங்கள் எனச் சொல்வது என்றால் குறிஞ்சி, முல்லை, நெய்தல் மிகவும் ஈர்ப்பான ஒன்றாக இருக்கிறது.
அனுபவங்கள் பற்றி என்றால் நிறைய இருக்கின்றன. ஒவ்வொரு பயணமும் புதுப்புது மனிதர்களை அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அதுவே பெரிய அனுபவங்கள்தான்.
சமீபகாலங்களில், குழந்தைகள் விரைவிலேயே குழந்தைமையைத் தொலைத்துவிடுவதாக ஒரு சொல்லாடல் உள்ளது. அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நிச்சயம் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது. காரணம் இங்கிருக்கும் பன்முகத்தன்மைக் கொண்ட வாழ்வியல் முறைகள்தான். குழந்தைமையை விரைவாக இழக்கும் குழந்தைகளின் வாழ்வியல் சூழல், பெற்றோர் மனநிலை, பள்ளி எனப் பல காரணங்கள் இருக்கின்றன. இதில் கட்டாயத்தின் பெயரில் தனது குழந்தைமையைத் தொலைக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது என்பதுதான் எனது கருத்து. மற்றபடி குழந்தைகளின் வளர் இயல்புகளையும், ஆர்வங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்றாற்போலான அறிமுகங்களைச் செய்துகொண்டு வந்தாலே போதுமானது குழந்தைமைகளோடு குழந்தைகள் பயணிக்க.
வீட்டிலும் சமூகப் பொதுவெளியிலும் பதின்ம வயதினரின் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் கொடுக்கப்படும் கவனிப்பும், முக்கியத்துவமும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படுகின்றனவா? இல்லையெனில் இதை எவ்வாறு சமன்செய்வது?
இங்கு (இந்திய ஒன்றிய நிலப்பரப்பில்) இருவருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது. இவற்றை எல்லாம் சமன் செய்வதை வாழ்வியல் முறைகளில் இருந்துதான் துவங்க வேண்டும்.
அப்படியான துவக்கம் வேண்டுமென்றால் சமத்துவத்தை விரும்பக் கூடிய அரசும், அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்து, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆதிக்கமற்ற சமத்துவச் சிந்தனை உருவானால் மட்டுமே குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினருக்கான கருத்துகள் குடும்பம் என்ற அமைப்பில் துவங்கி சமூகம் என்ற அமைப்பு என அனைத்து மட்டங்களிலும் சமமாகச் செவிசாய்க்கப்படும்.
தமிழ்நாடு முழுக்கச் சுற்றியலைந்திருக்கிறீர்கள். கிராமப்புற மற்றும் நகர்ப்புறச் சிறார்களிடையே பெரிய வித்தியாசங்கள் தென்படுகின்றனவா?
நிறையவே இருக்கிறது. கிராமப்புறங்களில் நகர்ப்புறங்களின் தாக்கங்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.
குழுமனப்பான்மை இன்றும் கிராமத்தில் அதிக அளவில் இருப்பதாகவே தோன்றுகிறது. அதேபோல் நகரத்தின் உழைக்கும் மக்கள் வாழ்பகுதியிலும் அதே குழுமனப்பான்மையை உணர முடிகிறது. தொழில்நுட்பம் சார்ந்த விளையாட்டுகள் நகரத்துக்கு இணையாகப் பெரும்பான்மையான கிராமத்துச் சிறார்களிடமும் மேலோங்கி வந்து கொண்டிருகின்றன.
மேலை நாடுகளில் கிட்டத்தட்ட பன்னிரண்டு வயதிலேயே பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்திய ஒன்றியக் கல்விச் சூழலில் பாலியல் கல்வி எந்த நிலையில் உள்ளது?
இன்னுமும் துவங்கப்படாத நிலை என்றுதான் சொல்ல வேண்டும். அதேநேரம் பாலியல் கல்விக்கான தேவைகள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு இணையாக தொழில்நுட்பங்களைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான கல்வியும், பேரிடரியல் கல்வியும் குழந்தைகளுக்கு அவசியம் தேவைப்படுகின்றன.
தொன்மங்களை, வரலாற்றை, புராதனக் கதைகளைச் சிறுவர்களுக்குச் சொல்லும்போது பழமைவாத சமூக நீதிக்கு ஒவ்வாத கருத்துகளைத் தவிர்க்க வேண்டுமா?
நிச்சயம் தவிர்த்தே ஆக வேண்டும். சமூக நீதியை உணர்த்தும் கதைகள் நிறைய இருக்கின்றன. அந்தக் கதைகளையே சொல்லலாம். ஒவ்வாத கருத்துகளைக் கட்டாயம் தவிர்த்துதான் ஆக வேண்டும். கதைகளை மாற்றவெல்லாம் வேண்டாம். இருக்கிற கதைகளில் வருகிற நீதிக் கருத்துகள் யாருக்கான ஒன்றாக இருக்கிறது எவற்றை முன்னிலைப்படுத்திச் சொல்லப்படுகிறது என்பதையெல்லாம் உணர்ந்து அதற்கேற்றாற்போல் அதற்குள்ளிருந்தே எடுத்துக் கதைகள் சொன்னாலே போதும்.
உதாரணமாக புராணக் கதையான மகாபாரதக் கதைகளையே எடுத்துக்கொள்ளலாம். இன்று வரை அந்தக் கதைகள் எப்படிச் சொல்லப்பட்டு வருகின்றன. எந்தக் கதாப்பாத்திரங்கள் மட்டும் முன்னிலைப்படுத்தப் படுகின்றன எனச் சிந்தித்தால் ஒட்டுமொத்தக் கதைகளும் கவுரவர்கள், பாண்டவர்கள், பீஷ்மன், துரோணன், கிருஷ்ணன், திரௌபதி, கர்ணன் போன்றவர்களைச் சுற்றி மட்டுமே கட்டமைக்கப்படுகின்றன.
திட்டமிட்டே ஏகலைவனின் கதையையும், தட்சகனின் கதையையும் அவர்களது இருப்பிடமும் மக்களும் பாண்டவர்களால் கொல்லப்பட்ட கதையையும், போருக்குப் பிறகு பாண்டவர்களும் எஞ்சிய கவுரவர்களும் எப்படியெல்லாம் இன்னல் பட்டு இறந்தார்கள் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லாமல் ஒரு சாராருக்குத் தேவையான கருத்துகளை உடைய பகுதிகள் மட்டுமே கட்டமைக்கப்பட்டு, வெறும் சொத்துரிமை மற்றும் பங்காளிச் சண்டைகளைப் புனிதப்படுத்தும் கதைகள் அவசியம்தானா? அதேபோல் புராணக் கதைகள் ஏன் பெண்களின் பார்வையில் இருந்து சொல்லப்படுவதேயில்லை என்பதையெல்லாம் சிந்தித்தாலே, அது போன்று கட்டமைக்கப்பட்ட கதைகள் தேவையில்லை என்பதை நாம் நன்றாக உணர்ந்து அவற்றைப் புறந்தள்ள முடியும்.
இன்றைய பிள்ளைகள் பள்ளிகளிலும் வீடுகளிலும் கண்டிஷன் செய்யப்படுவதால் இயல்பான அறிவாவலையும் (curiosity) கேள்வி கேட்கும் தன்மையையும் இழந்துவருகிறார்களா?
கேள்வி கேட்கும் தன்மையை இழந்து வருகிறார்கள் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. கேள்விகள் கேட்க மறுக்கப்படுகிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஊக்கப்படுத்திக் கேள்விகள் கேட்க அனுமதித்து அதற்கான பதில்களை நாம் சொல்லத் தயாரானாலே போதுமானது. தெரியாததைத் தெரியாது எனச் சொல்வதில் இருக்கும் ஈகோ என்னும் மேட்டிமை மனோநிலையை நாம் கடந்து வர வேண்டும். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை என்றால் தெரியாது எனச் சொல்லிவிட்டு அந்த விடையை நாம் தேடத் துவங்கிக் கண்டடைந்து அவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். அப்படிப் பகிரும்போது அந்தப் பதிலுக்காக நாம் எப்படியெல்லாம் தேடினோம் என்பதையும் அவர்களுக்குச் சொல்ல வேண்டும்.
விளையாட்டுப் பொருட்களோ, தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், கைபேசியோ இல்லாதபோது, பொழுதைப் போக்க, சிறுவர் சிறுமிகள் தங்களுக்கே உரிய விளையாட்டுகளை உருவாக்கிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அப்படி இனியன் தான் மட்டும் தனியாக விளையாட உருவாக்கிக்கொண்ட விளையாட்டு ஒன்றைப் பகிருங்கள்.
சிறுவயதில் என்றால் தனிமையில் புதையல் விளையாட்டு விளையாடியிருக்கிறேன். கையில் கிடைக்கும் சிறு பொருள் எதுவாக இருந்தாலும் வீட்டிற்கு அருகே உள்ள மரத்தின் வேருக்கடியில் குழி தோண்டிப் புதைத்து வைத்துவிட்டு, மீண்டும் அதேபோன்ற தனிமை நாட்களில் அதனைத் தேடியிருக்கிறேன். ஆனால் இன்றுவரை புதைத்த எதுவும் கிடைத்தது இல்லை.
தற்போது அதிகம் தனிமையில் இருப்பது சென்னை அறையிலும் சன்னல் ஓரப் பேருந்துப் பயணங்களிலும்தான். சென்னையில் அறையில் உள்ள சுவற்றில் பதிக்கப்பட்டிருக்கும் டைல்ஸ் கல்லில் உள்ள பூக்களை எண்ணுவது மிகச் சுவாரசியமான ஒன்று. கடந்த ஏழு வருடங்களில் இன்று வரை முழுமையாக எண்ணி முடித்தது கிடையாது. பேருந்து பயணங்களில் எத்தனை கார்கள் முந்திச் செல்கிறது. அதில் எத்தனை கார்களைப் பெண்கள் ஓட்டிச் செல்கிறார்கள் என எண்ணிக்கொண்டே விளையாடுவது அலாதியான ஒன்றாக உள்ளது. பயண நேரத் தூக்கம் மற்றும் வாசிப்பைத் தவிர்த்து இந்த விளையாட்டு மிக உற்சாகத்தைத் தரும் ஒன்றாக இருக்கிறது.
தொடர்ந்து சமூக ஊடகங்களில் பலதரப்பட்ட விஷயங்களைக் குறித்து விரிவாக எழுதிவருகிறீர்கள். சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்த உங்கள் பார்வை?
சமூக ஊடகங்கள் தொழில்நுட்ப உலகின் இன்றியமையாத ஒன்று. அனைத்து தொழில்நுட்பங்கள் முதல் ஆட்சியாளர்கள் வரை சமூக வலைதளங்களையும் ஊடகங்களையும் பெரிதும் கணக்கில் கொண்டு தங்களது இயங்குதளங்களைக் கட்டமைக்கின்றன. அந்த வகையில் அதனைப் பயன்படுத்தி எழுதும் எழுத்துகளையும் ஏற்றுக்கொள்வதுதான் காலத்தின் கட்டாயம். அதில் நிறைய சாதகபாதகங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றில் எவை தேவையோ அவற்றை எடுத்துக்கொண்டு நிராகரிக்க வேண்டியதை நிராகரித்துக் கொள்ளவேண்டியதுதான்.
‘பேச மறந்ததைப் பேசுவோம்’ தொடர் நிகழ்வுக்கான தூண்டுதல் எவ்வாறு ஏற்பட்டது?
கிராமத்துப் பள்ளியொன்றில் குழந்தைகளுடன் விளையாடி முடித்து ஓய்வாக அமர்ந்திருந்தபோது, “உங்களை அப்பா ன்னு கூப்பிடவா?” எனக் கேட்ட 14 வயதுக் குழந்தையின் கதையில் வீட்டில் அப்பா இல்லை என்னும் நிலையில் துவங்கி, எனது பள்ளிக் காலங்களில் இதேபோன்று உடன் படித்த நண்பர்களின் மனோநிலையைச் சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் சென்னைக் கலை இலக்கியக் கொண்டாட்டம் நிகழ்வில் வந்திருந்த தனிப் பெற்றோர்கள் சிலரிடம் உரையாட நேர்ந்தது. அவர்களுக்கெனப் பிரத்தியேகமான வாழ்வியல் சிக்கல்கள் இருப்பதையும் உணர முடிந்தது. அந்தப் புள்ளியில் இருந்து உருவானதுதான் பேசமறந்ததைப் பேசுவோம் நிகழ்வு. அந்த வரிசையில் “தனிப்பெற்றோர் – குழந்தைகள்” நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. வரும் காலங்களில் வெவ்வேறு தொடர் நிகழ்வுகளும் நிச்சயம் இடம் பெரும்.
பெற்றோர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், களச்செயற்பாட்டாளர்கள் என அனைவரையும் உள்ளடக்கிய குழந்தைகளுக்கான கலை இலக்கியக் கொண்டாட்ட நிகழ்வு பெரிய முன்னெடுப்பு. மிகுந்த உழைப்பும், காலமும் கோருகிற அத்தகைய பணிகளை இன்னும் பரவலாக்க என்ன மாதிரியான திட்டங்கள் உள்ளன?
திட்டங்கள் என்றால் அதிகளவிலான பயணங்கள் கூடுதல் உழைப்பு பல்வேறு நிலப்பரப்பு போன்றவற்றில் நிகழ்வுகள் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும். நாம் அல்லாது பலரும் அம்மாதிரியான நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் பணிகளைச் செய்திடும் அளவிலான நட்புறவுகளைப் பெற்றிட வேண்டும்.
விளையாட்டு, கலைகளின் மூலம் கல்வி என்கிற திட்டத்தின் ஒரு பகுதியாக ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் நீங்கள் இணைந்து நடத்திய பட்டறைகள் குறித்துச் சொல்லுங்கள்.
ஓவியம் பற்றிக் குழந்தைகளிடம் உரையாடித் தனது கோட்டோவியம் ஒன்றை அவர்களுக்கு வரைந்து காட்டினார். இரண்டு மணிநேரத்தில் அவர்களை காமிக்ஸ் வடிவத்தில் ஓவியங்கள் வரையவும் வைத்தார். சொல்லப்போனால், என்னிடம் குழந்தைகளை ஒன்றரை மணி நேரத்தில் நான்கு படங்களைக் கொண்ட காமிக்ஸ் வரைய வைக்கிறேன் என சேலஞ்ச் செய்துவிட்டுத்தான் இதனைச் செய்தும் முடித்தார்.
பிறகு நிகழ்வுக்கு வந்திருந்த பெற்றோர்கள் ஆசிரியர்கள் அனைவரிடமும் குழந்தைகளுக்குக் கலைகள் ஏன் அவசியம், கலை வழிக் கற்றலின் முக்கியத்துவம், கலைகளின் அரசியல், குழந்தை வளர்ப்பில் கலையின் பங்கு என அனைத்தையும் தொட்டு அருமையான உரையாடல் ஒன்றையும் நிகழ்த்தினார்.
நிகழ்வு முடிந்து ஒன்றரை வருடங்களுக்கு மேல் கடந்தும், இன்று வரை அவரது உரையின் தாக்கம் இருப்பதாகச் சமீபத்தில்கூட ஆசிரியர் ஒருவர் தெரிவித்திருந்தார். ஓவியர் டிராட்ஸ்கி மருது அப்பாவுடன் இதுவரை ஒரேயொரு நிகழ்வுதான் நடத்தப்பட்டுள்ளது. பல நிகழ்வுகள் திட்டமிட்டாலும் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்க்கொண்டும் இருக்கிறது. தொடர் செயல்பாடுகளுக்குக் காலம் நிச்சயம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை இருக்கிறது.
பல்லாங்குழி அமைப்பின் செயல்பாடுகளில் உங்களுக்கு அதிக மனநிறைவைத் தந்ததாக எதைச் சொல்வீர்கள்?
அப்படியாகப் பட்டியலிட்டுச் சொல்லிவிட முடியுமா எனத் தெரியவில்லை. ஒவ்வொரு நிகழ்வுமே ஒருசில மனநிறைவையும், பல கற்பிதங்களையும், தாக்கங்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் அனைத்துச் செயல்பாடுகளுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகிறேன். ஏனென்றால் இன்னும் கற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்.
குழந்தைகளிடமிருந்து உங்களுக்கு வரும் கடிதங்கள் பற்றிச் சொல்லுங்கள்.
அன்புள்ள இனியன் அப்பா, மொட்டை மாமா, மொட்டை அண்ணா என்றெல்லாம் துவங்கிப் பல கடிதங்கள் இருக்கின்றன. அவர்களது தேவைகள், அவர்கள் எழுதிய கதைகள், பிடித்த மற்றும் பிடிக்காத விசயங்கள் குடும்பம் பற்றிய தகவல்கள் என்றெல்லாம் நிறைய எழுதி இருக்கின்றனர். அதில் சமீபத்தில் வந்திருந்த கடிதம் இரண்டு மிகவும் ஆச்சரியம் தந்ததாக இருந்தன. தோழிகள் இருவர் கடிதம் எழுதி இருந்தனர். இருவரும் தத்தம் கடிதங்களில் ஒருவர் மற்றொருவரைப் பற்றி எழுதி எந்தளவிற்கு நாங்கள் நட்பாக இருக்கிறோம் என்றெல்லாம் விவரித்து இருந்தனர். இதுமாதிரியான கடிதம் முதல் முறை என்பதால் மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
குழந்தைகளுடன் இருப்பது இனியனுக்கு ஏன் அவ்வளவு பிடித்துள்ளது?
அவர்கள்தானே மிக இயல்பாய் அனைத்தையும் கடந்து எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து பயணிக்க கற்றுக் கொடுக்கிறார்கள். குழந்தைகளைவிட வாழ்வியலுக்கான ஆசான்கள் வேறு யாரும் இல்லையே. இது போதாதா அவர்களுடன் இருந்துகொண்டே இருப்பதற்கு.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…