கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…

8 நிமிட வாசிப்பு

அகநிலைச்சொற்கள்

எழுதி முடித்து அதைப் பற்றிய நினைவுகள் அறும் முன்னேயே எதிர்பாரா ஓர் வியப்பைப்போல… தற்செயலாய் அன்பர் பிரம்மராஜன் தன் இதழ் ஒன்றில் பால்வெலரியைப் பற்றி எழுதிய கட்டுரை என் பார்வையை இடறியது. உரைநடையை நடப்பது எனும் ஒரு மனிதச்செயலுக்கும், கவிதையை நாட்டியத்திற்கும் ஒப்பிடலாம் எனத் தனது பிரபலமான உவமையை வெளியிட்டிருக்கிறார் பால்வெலரி. தேவதேவன் உரைநடையைக் கவிதைக்கும் கவிதையை நடப்பது எனும் மானுடச் செயலுக்கும் ஒப்பிடுவது போலல்லவா தெரிகிறது எனச் சொற்களுக்குள் மாட்டிக்கொண்டு தங்கள் வாழ்நாள் முழுக்க அறிஞர்களாகவும், புலவர்களாகவும் ஓர் உள்ளொளியையும் கண்டுணராது மொன்னையாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களைப் பற்றித்தான் நமக்குக் கவலை. வெலரி கவிதையை நாட்டியத்தோடு ஒப்பிடும்போது நாட்டியத்தைப் பற்றிய அவர் புரிதலோடுதான் அதை வெளிப்படுத்தியிருக்க முடியும். நாட்டியக்கலை, தான் சொல்ல வந்த உச்சத்தை அதிகபட்சத் தன் திறன்கள், ஆற்றல்கள், வெளிப்பாடுகளால் சொல்லி முடித்துச் சுட்டிக்காட்டியிருக்கிறது என்று அவர் கருதுகிறார். அதனால்தான் அவர் கவிதையோடு அதை ஒப்பிடுகிறார். தேவதேவன் நாட்டியத்தை வரையறைக்குட்படுத்திவிட்டு அதை ஓர் எளிய கலையாகவே காண்கிறார். உரைநடையையே அவர் ஒரு நாட்டியம் எனக் காண்கிறார். அவர் பார்வையில் வாழ்வும் அதன் கண்டடைதலும்தான் முதன்மையான கவிதை. சரி, கவிதை எனும் துறைவடிவத்திற்கு வந்த பிறகு அதில் கலக்கும் புனைவுகள் தாதுக்கள் குறித்து நாம் இதன்பின்னரே ஆலோசிக்க வேண்டும்.

சும்மாவே, சொற்கள் ஒருக்காலும் பொருளாக முடியாது. இங்கே நாம் சொல்ல விரும்பியதெல்லாம் அகநிலைச்சொற்களின் நிலைபாட்டைக் குறித்து மட்டும்தான். இந்தச் சொற்கள் சுட்டும் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்பவர்களால் மட்டுமே உண்மையைக் கண்டடைய முடியும். மெய்யுணர்வாளர்களாக முடியும். பிறர் எல்லோருமே அவசர அவசியங்களுக்கு உதவும் மதிப்பிற்குரிய அகராதிகளாய் மட்டுமே முடிந்துவிடுகிறார்கள்.

தீவிரம்

கவிதை பற்றிக்கொண்டிருக்கும் ஒரு தீவிரத்தன்மையை நாம் அறிவோம். அதை நாம் ஆய்ந்து பார்க்கப்போகிறோம் இப்போது. மேலான ஒரு நிலையைத்தான் கவிதை எனப் பெயரிட்டிருக்கிறோம். அதன் வழியேதான் கலைகளின் உச்சநிலையில் கவிதை இருக்கிறது. தன்னந்தனியான நிகரில்லா ஓர் உயர்வுடனும், தனிமையற்று எல்லாக் கலைகளிலும் இடங்களிலும் அவ்வவற்றை மேம்படுத்தவே வந்து அமர்ந்திருப்பதன் மூலம் எல்லையில்லா விரிவுடனும் இருக்கிறது. இந்த ஆழமும் விரிவும் மேலே நாம் கூறிய தீவிரத்தன்மையும் ஒரே பொருள்தரும் வேறு வேறு சொற்கள்தாம். மிகைபோல் தோன்றும் கவிதையிலுள்ள மென்மையான சொற்களும் தீவிரத்தன்மையுடையதுதான். “ஒரு புல்லின் உதவிகொண்டு பூமியிலொரு பச்சைக்கம்பளம் விரித்தேன்,” எனும்போது அதைக் கூறுபவனும் உணர்பவனும் அடைகிற இடமும் பொருளும் எத்தகைய தீவிரத்தன்மை கொண்டதாயிருக்கிறது! இன்னும் சொல்லலாம். மெய்மை, அறம், அறச்சீற்றம், பேரறிவு, பேரன்பு, பேரழகு – இந்த எல்லாச் சொற்களும் ஒன்றுதான் என்று. இன்னொரு மிகமுக்கியமான பண்பு, இவைகள் தங்கள் மனம் அற்ற தன்மையாலேயே காலமின்மையோடும் காலாதீதத்தோடும் தொடர்புடையதாயிருப்பது.

இவற்றோடு வாழ்ந்தும் வெளிப்படுத்தியும் இருப்பவர்களைப் பெருங்கவிஞர்கள், மாமனிதர்கள் என்கிறோம். நாம் இங்கே குறிப்பிடுவதுவோ, எல்லா மனிதர்களும் அடைய வேண்டிய நிலை இது ஆதலால், மேலே குறிப்பிட்ட மனிதர்கள் நிறைவுறா உலகின் அவமானச்சின்னங்கள் என்பதுதான்.

கவிஞர்கள் சிருஷ்டியின் அற்புதப்படைப்பு என்று ஷெல்லி விதந்து கூறிச்சென்றதும் இப்போது நம் நினைவுக்கு வந்து போகிறது.

தீவிரமின்மையே அதாவது மந்தத்தனம்தான் நாம் படைத்த இந்த உலகை அறிவற்று ஆய்வற்று அப்படியே ஏற்றுக்கொள்கிறது. இரண்டுக்குமான இரண்டு எடுத்துக்காட்டுகளைச் சொல்கிறேன். “செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்,” என்ற புகழ்பெற்ற வரியைப் படித்திருப்பீர்கள். அதேபோலவே, “ஊசியின் காதில் ஒட்டகம் நுழைந்தாலும் நுழையக்கூடும், செல்வந்தன் சொர்க்கத்தில் நுழைய முடியாது,” என்ற இயேசுவின் வரியையும் ஞாபகத்தில் வைத்திருப்பீர்கள்.

பெரியார் ஈ.வெ.ரா ஒரு சந்தர்ப்பத்தில் நமது திருமணத்தையே ஒரு விபச்சாரம்தானே என்று கூறியதையும் நாம் இவ்விடத்தில் நினைத்துப்பார்க்கலாம்.

கவிதைக்கும் மகாகவிஞர்களுக்கும்தான் மனிதகுலத்தில் நிகழவேண்டிய மிகப்பெரிய சமன்நிலை குறித்த வேட்கையும், பார்வையும், துயரும், கண்டடைதல்களும் கிட்டுகின்றன.

தீவிரமற்ற நிலையிலிருந்தும் கவிதைகள் பிறக்கின்றன. நாம் ஏற்றுக்கொண்ட வாழ்க்கையிலிருந்தும் கவிதைகள் என்று சொல்லப்படும் கவிதைகள் பிறக்கின்றன. “நாங்களும்தான் இருந்துவிட்டுப் போகிறோமே” என்று அவைகள் கேட்கின்றன. நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறோம். விலக்குவதற்குரிய கூர்அறிவு நம்மிடம் இல்லாமையால்தானே?

இந்த முந்நூறு ஆண்டுகளில் நாம் கண்டடைந்த ‘உயரங்கள்’ தவறு என்பதையே அது சுட்டிக்காட்டுகிறது என நினைக்கிறேன். கவிஞர்கள் சிருஷ்டியின் அற்புதப் படைப்புகள் என்று ஷெல்லி கூறியது மீண்டும் நினைவுக்கு வருகிறது. இந்த மதிப்பீட்டையும் அளவுகோலையும் நாம் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறோம், பதிலையும் கண்டடைந்துவிட்டோம். நாம் முதன்மைப்படுத்தும் தீவிரத்திற்கும் தீவிரமின்மைக்கும் எடுத்துக்காட்டான கவிதைகளைப் பேர்பெற்ற பல கவிஞர்களிடமும் கவிதைகளிடமும் காணலாம். உடன் நினைவுக்கு வந்த இந்தச் சிறுமாதிரிகளே போதும் என நினைக்கிறேன். அரசியல் கவிதைகள் இந்த இரண்டுமாதிரிகளிலும் அடங்கும் என்று அவதானிக்கிறீர்கள். நன்று. ஆனால் ஆழமற்றவையினின்றும், பொய்யானவற்றிலிருந்தும் அவற்றைக் கண்டுபிடிக்க, உள்ளுணர்வே போன்ற நம் கூர்அறிவுதான் நமக்கு வழிகாட்டும்.

ஒரு கவிதையின் நம்பகத்தன்மை அதை எழுதியவன் தன் எழுத்துகள் மூலம் சம்பாதித்து வைத்திருக்கும் புற ஆளுமையிலிருந்து அல்ல. அவனது மற்ற கவிதைகளிலெல்லாம் கனன்றபடி விரிந்துகிடக்கும் அந்த ஆளுமையிலிருந்தே ஏற்படக்கூடியது. இதுவே மனிதனைவிட அவனது கவிதை முக்கியமானது என்பதை நாம் காணும் இடம்.

‘வாழ்வு சிறியது’ ‘கலை(கவிதை) பெரியது’ என்று ஷேக்ஸ்பியர் இந்த இடத்திலிருந்துதான் கூறியிருக்க வேண்டும். இந்த இடத்தில் அகநிலைச் சொற்களைக் குறித்து மீண்டுமொருமுறை பார்க்கலாம். இப்போது இங்கே ஒரு சந்தர்ப்பத்தில் நாம் அல்லது யாரோ ஒருவர் கவிதை சிறியது வாழ்வோ பெரியது என்று சொன்னால்-? – பொருள் புரிந்துகொள்வதில்தான் உண்மை ஒளிர்கிறதே ஒழிய தர்க்கத்தில் அல்ல; கவிதையும் வாழ்வும் வேறு வேறு அல்ல என்பதனாலேயே சொற்கள் மாறிக்கொண்டிருக்கிற நிலையை உணராததன் வேலையே விவாதங்களிலும் குழப்பங்களிலும் வீழ்கிறது. தேவை மிகக் கூர்மையான ஒரு புரிதல்மட்டுமே. ஆழமான இந்தப் புரிதல் ஏற்படுவது காலத்தையும் இடத்தையும் கடந்த ஒரு நிலையில்தான்.

கருணை

தீவிரம், வீர்யம், உணர்ச்சிவேகம், உள்எழுச்சி என்பதெல்லாமே கவிதையோடு எந்த நிலையில் உறவுகொண்டுள்ளதோ அதே நிலையில் வாழ்வோடும் உறவுகொண்டிருந்தால் மட்டுமே அன்பையும் அழகையும் மாண்பையும் நாம் இந்த உலகில் நிலைநாட்ட முடியும். நம் வாழ்வில் எப்போதாவதுதான் நிகழும் அபூர்வங்களாகிவிட்ட விஷயங்கள் இவை. கவிதைகளும் கவிஞர்களும், கவிதை வாசகர்களும் தாம் பெற்ற இன்பமே போதும் என்று அடங்கிவிட்டிருக்கும் நிலையே நம்மிடையே நிலவுவது. காரணம், அவைகளே அவர்களின் தன்மய்ய ஊற்றின் பெருமைகளையும், பேர், புகழ், செல்வாக்குகளையும் நிலைநாட்டுவதாய் இருப்பதுதான். இது ஒருவகைத் தீவிரமின்மை, பொறுப்பின்மை, துவங்கி இளைப்பாறிவிட்டதன்மை, புறஉலக, பருஉலக, உலகியலில் சுகமே இந்தத் தன்னல உடலுக்குப் போதும் என அடங்கிவிட்டதன்மை, இவ்வாறே அமைந்துவிட்ட உலகுடனான இணக்கம். இதுவும் புதிய ஒரு பரிமாணத்துடன் சராசரி மனிதர்கள் என்போர் வாழும் அதே வாழ்வுதான்.

இடைவெட்டாக இவ்விடத்தில் வந்துபோன ஒரு வாழ்க்கை நினைவினை வெளிப்படுத்தலாம் என நினைக்கிறேன். கவிதை பற்றிய ஒரு தொடர்க்கட்டுரையை நான் எழுதிக்கொண்டிருந்த காலம். மொட்டைமாடியில் இன்றைய பிரபலமான ஒரு அன்பருடன் உரையாடிக்கொண்டிருந்தவேளை, “கவிதை என்பது நாம் மனம் திறந்திருந்த அல்லது மனம் மூடியிருந்த அல்லது மனம் அற்றிருந்த ஒரு வேளையில் (கவனிக்கவும், இம்மூன்று சொற்களையும் நான் ஒரேநிலையைக் குறிக்கிறதாக எழுதியிருப்பதை.) கருணையினால் ஓர் அபூர்வ நிகழ்வாக நம் கவிஞர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதன் அருமையின் முழுமை அறியாது அது சுட்டும் பேருண்மையும் வழியும் தெரியாது அவர்கள் எந்த மாற்றமுமின்றி, முன்னர் தாங்கள் இருந்த அதே குட்டையில்தான் தேங்கிவிடுகிறார்கள். அவ்வப்போது கருணையினால் இயற்கை இடும் பிச்சையே போதும் என்பதுபோல்கூட அல்ல, அதை நாமும் இனி செயற்கையாகவே, அதற்கான அறிவுடன் சமைத்துக்கொள்ளலாம் என்ற தைரியத்துடனும் இயலாமையுடனும். இதற்கு உதாரணமாக மூன்று கவிஞர்களையும் கவிதைகளையும் நான் சொல்லிமுடிக்க, “சார், அப்படியெல்லாம் எழுதிவிடாதீர்கள் எழுதிவிடாதீர்கள். அவர்களுடைய அந்த நல்ல கவிதைகளைமட்டும் கூறி அவர்களை அந்தக் கவிதைகளால் உயர்த்துங்கள் என்றார் அவர். வெளியே புலர்ந்த புன்னகையுடன் உள்ளே சிரித்துக்கொண்டேன்.

இந்தத் தீவிரத்தை, வீர்யத்தை, ஒரு பொறியைச் சுடராக்கும் ஏக்கத்தை நாம் எப்படித் தக்கவைப்பது? மந்தத்தனத்தின் அனைத்து ஊற்றுக்கண்களையும், அடைப்பதுதான் அதன் வழி. விடுதலை மீது வேட்கை கொண்டிருக்கும் உள்ளம் சிந்தித்தல் மூலம் அதை அடைந்துவிடும். இதை இன்னும் நன்றாக அழுத்தமாக, தெளிவாகச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன். அதாவது, “விடுதலை மீது வேட்கை கொண்டிருக்கும் உள்ளம்மட்டுமே சிந்தித்தல் எனும் செயற்பாட்டின்மூலம் அதை அடையும்.”

வெளிப்பாடுகள்

சிந்தனை வெளிப்பாடுகளான சொற்கள் பெரும்பாலும் தோற்றுவிடுவதற்கான காரணம் ஒன்று உண்டு. சிந்தனையின் பின்உந்தமான உள்எழுச்சி என்பது முந்தைய சிந்தனைதான் என்றில்லாமல் எல்லையற்றதோர் இரகசிய ஆற்றலாகப் பரிணமித்திருக்க வேண்டும். கவிதையில் சிந்தனை வெளிப்பாடுகள் முதன்மையற்றுப்போய் உணர்வுகளும் அனுபவங்களுமே முதன்மையாக இருப்பதன் காரணம் இதுதான்.

இதன்கீழே ‘கவிதையின் மதம்’, ‘கவிதையினாலாய…’, ‘எப்போதாவது’ ஆகிய மூன்று கவிதைகளை இணைத்துள்ளேன். கட்டுரையின் தொடக்கத்தில் நாம் உரையாடியுள்ள உரைநடையும் கவிதையும் பற்றி நாம் நேரடியாகவே இங்கே ஆயும்வண்ணம் அமைத்துள்ளோம். இவை குறித்து நான் எழுதிய ஓர் அரைப்பக்க அளவிலான விரிவுரைகளை அடித்து நீக்கிவிட்டேன், வாசகர்கள் தாங்களே அதை ஆய்ந்து கண்டுகொள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன், மிக உச்சமான இந்தக் கவிதைக்கலையின் வாசகர்களாகிய நீங்களே கவிதை மாணவர்களும் ஆசான்களுமாகிய பெருங்கல்விமான்கள் என்ற எண்ணத்துடனும் வேட்கையுடனும்.

கவிதையின் மதம்

அதற்குக் கடவுள்கள் இல்லை
கோயில்கள் இல்லை.
பூஜைகள் இல்லை
புனித நூல்கள் இல்லை.
சடங்குகள் இல்லை
தனித்து நிற்கும் ஆசாரங்கள் இல்லை.
பரப்புவதற்கும் விரிப்பதற்குமான
தத்துவங்கள் இல்லை.
 
அது தன்னைத்தானே விளக்குவதால்
அறிஞர்களும் புலவர்களும்
அதற்குத் தேவையில்லை
 
கவிஞர்கள்கூடத் தேவையில்லை
ஆனால் அதன் இலட்சியமோ
மனிதர்கள் எல்லோரையுமே
கவிஞர்களாக்கிவிடுவதாயிருப்பதுதான்
விந்தை.
 
இலட்சியம் கொண்டிருக்காத
வேளையிலெல்லாம்
அது தன்னை மறைத்துக்கொண்டு
சுதந்திரமாக வாழ்கிறது
இலட்சியம் கொண்டிருக்கும்போதெல்லாம்
அச்சத்தால் நாம் உருவாக்கியிருக்கும்
அனைத்துக் கட்டுமானங்களையும் உடைத்து-
தன் இலட்சியத்தையும்கூட-
நொறுக்கியபடிதான்
தன்னை வெளிப்படுத்துகிறது அது.
0

கவிதையினாலாய…

கவிதையினாலாய பயனென்கொல்
தன் பொன்னுலகிற்கு அது நம்மைக்
கூட்டிச் சென்றுவிடாதெனில்?

ஒரே ஒரு உதவிதான்
செய்கிறாயா எனக்கு
உனக்கு இந்த உலகைச்
சொர்க்கமாக்கித் தருகிறேன்
என்றது கவிதை.

அழகு உன்னை ஈர்த்துவைத்துக்
கொண்டுபின் வெளியே அனுமதித்தவேளை
ஒன்றுமற்ற உன்னையும் உன்செயல்களையும்
நீயே பருகிப்பார்
அது அமிழ்தமாக இருந்தால் சொல்.
காலம் எப்போதும் ஓர் வெற்றுக்குவளையாக
நீதான் ஓர் அமிழ்தாக
அதில்போய் விழ வேண்டிக்
காத்திருப்பதைப்பார்.

உன்னை ஈர்த்துத் தனக்குள்ளாக்கிக் கொண்ட
அந்த அழகிடம் கேட்டுப் பார்த்தாயா
உன்னைப்பற்றி?
இந்த நீ நான் என்பதெல்லாம்
ஒரு பொய் என்கும் அது.
எப்படியோ நீயும்
இதை உணர்ந்தபோதுதானே
நிகழ்ந்தது இந்தக்காதல்?

அழகையும் உண்மையையும் காதலையும்கொண்டு
கவிதை உருவாக்கும் உலகமே தனி, இல்லையா?
0

எப்போதாவது

எப்போதாவது நிகழும்
நன்மைகள் குறித்து
மகிழ்ச்சியடைகிறோம்.
எப்போதாவது நிகழும் நன்மைகளால்தானே
உலகம் வாழும்படியான இடமாயிருக்கிறது?

எப்போதாவது நிகழும் நன்மைகள்
யாரால் இயற்றப்படுகின்றன?
நிச்சயமாக மனிதர்களால் இல்லை.
மனிதர்களால் எனில்
நடக்கும் தன் உலகத் தீமைகளுக்கெல்லாம்
தானே காரணமாயிருப்பதைத்தான்
அறிந்திருப்பார்களே?
சரி; அது போகட்டும்.
எப்போதாவது நிகழும் நன்மைகளில்தானே
ஒளிந்திருக்கிறது
எப்போதும் நிகழ வேண்டிய நன்மைகள்?

எப்போதாவது நிகழும்
இந்த அழகினையும் காதலையும்
நன்மைகளையும் கண்டுகொண்ட
கவிதைகளும் கவிஞர்களும் வாசகர்களும்தான்
எவ்வளவு குறைவானவர்களாய் இருக்கிறார்கள்,
அவர்கள் அதிலேயே நிறைவு பெற்றவர்களாய்
பிறர்மீதும் தன்மீதுமே அக்கறையற்றவர்களாய்?

கவிதையின் மதத்தை
நாம் ஏன் கண்டுகொள்வதேயில்லை?
0

ஒரு முன்னூறு ஆண்டுகளாகவேனும் நாம் கண்டடையாத உண்மைகள் மீதே நவீன கவிதை தோன்றி நவீன பெருங்கவிஞர்கள் தோன்றிக் கண்டடைந்ததும் சொல்லியிருப்பதும் என்ன? ‘நானே வரலாறு’ என்ற புரிதலா? குப்பைகளால் சருகுகளால் நிறைந்த தனது அனுபவங்களுக்கப்பால் தன்னை அறிதலுக்கும் அப்பால் இன்னும் நீடித்துக்கொண்டேயிருக்கும் துயர்களிலிருந்தும் போர்களிலிருந்தும் பெற்றும் பெறவேண்டியதுமாய்த் தான் கண்டடைந்த வழியில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா, நம் கவிஞர்கள்? இல்லை பரிசுகளுக்கும் பாராட்டுகளுக்கும் அச்சாரமான வாழ்க்கையில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா?

தமிழ்க்கவிதைக்கு இரண்டாயிரத்து அய்நூறு ஆண்டுகள். இப்பூமியெங்கும் மனிதன் தோன்றிய காலத்திலிருந்து அழியாது தொடர்ந்துவரும் பேருணர்வு ஒன்றுண்டு. அதுதானே கவிதையின் வயது. அந்த மூதாட்டிக்கு வழி தெரியும். வழிகாட்டவும் தெரியும். நாம்தான் வழிநடக்கும் பக்குவம் அடையாதவர்களாய் இருக்கிறோம்.

பேருணர்வோடே பிரிவிலாது ஒத்து வாழ்ந்துவந்தவன் தன் வெளிப்பாட்டை அமைத்துக்கொண்டதிலிருந்துதான் வழி தெரியாது சரிந்துபோனான்; வழிதெரிகையிலும் எழுந்து நடக்கத் திராணியற்று முடங்கிப்போனான். தன்னை முடமாக்கி இருப்பது எது என்று காணவும் ஏற்கவுமே அஞ்சி, விலகி, பதுங்கி ஊன்றுகோல்களுடன் வாழ்கிறவனாகிப் போனான்.

நாங்கள் பாட்டும் சிரிப்புமாய்க் கூடிக் களித்துக்கொண்டிருக்கும் இலக்கிய முகாம்களின் இரவுவேளை ஒன்றில் நான் பலமுறையும் தவறாது கேட்பது போலவே அன்பர் யுவன்சந்திரசேகரிடம் அன்றும் கேட்டேன். “யுவன், திக்குத் தெரியாத காட்டில், பாடுங்கள்” என்று. செவ்வியல் சங்கீதம் அது கொஞ்சம் சிரமம்தான் என்று முன்மொழிந்து தொண்டையைச் சற்றுத் தீட்டிக்கொண்டவராய்ப் பாடுகிறார். “திக்குத் தெரியாத காட்டில்…”

இந்தப் பாட்டில் ஒரு துக்கமும், துக்கத்திலேயே ஒரு மகிழ்ச்சி இன்பமடையும் மனோபாவமும் கலந்திருப்பதைப் பாருங்கள்.

பழந்தமிழ்க் கவிதையின் இயற்கையும் இந்தியக் கவிமரபு வெளிப்படுத்திய பக்தியும், பக்தித் தத்துவமும் நம் கவிதையுணர்வைக் கூர் தீட்டியிருக்கவும் கூடும், மழுங்கடித்திருக்கவும் செய்திருக்கின்றன என்றே நான் சொல்வேன்.

நமது மூளை பார்வை மட்டுமேயான முழு ஓய்வுச் செயல்பாட்டிலிருக்கையில் அற்புதமான காட்சிகளாகவும், வரலாற்றிலிருந்து தனித்ததோர் ஆளுமையாய்க் காலத்தை நோக்கும் வேளையில் அடுக்கடுக்காய்த் தரிசனங்களை அள்ளித்தரும் காட்சிகளாகவும் இருக்கின்றது இப்பூமி. இந்த வாழ்வை நாம் கண்டடையும்போது கவிதையின் மதத்தையும் நாம் கண்டடைந்தவர்களாக இருக்கிறோம். அப்போது இப்பூமியின் எல்லாப் பொருட்களும் எல்லா வினைகளுமே குறியீடுகளாகவும் படிமங்களாகவும் காட்சியளிக்கின்றன.

இருவேளைகளிலும் நமது மூளை ஒரு பேருணர்வையும் பெருவியப்பையுமே கொண்டதாயிருக்கிறது.

கருணையினால், நம் உள்ளுணர்வின் பெறுவாய்ப்பால் நுண்ணுணர்வும், உள் ஆற்றலுமிக்க ஒன்றின் தரிசனமாக வெளிப்படும் கவிதையை அதன் அருமை அறிந்த ஒரு மனிதஇனம் தங்கள் வாழ்வாகவே வரித்துக்கொள்ள இயலாதா? ஏன் இயலவில்லை?

அதைக் கட்டமைத்துக்கொள்வதற்கு நாம் செய்ய வேண்டியது அந்தக் கவிதையின் உட்பரிமாணங்களை நன்கு ஆராய்ந்து கண்டடைந்து வைத்துக்கொள்வதுதான் என்பேன். அதற்குத் தயாராகவே ஒவ்வொரு கவிதைகளும் இருக்கின்றன. திரும்பத் திரும்ப நாம் சொல்லிக்கொண்டே இருப்பது இதுதான். ஒரு மின்னலையோ, ஒரு பொறியையோ பற்றிப்பிடித்து ஒரு சுடராக்கிவிடுவதுதான் அது. இது எளிமையாகவோ கடுமையாகவோ இருப்பது புறவாழ்வில் உழலும் நமது அகத்தின் ஆளுமையைப் பொறுத்திருக்கிறது. சூடு, சுரணை, நீதியின்மேல் பசிதாகம் உள்ள அகத்தினால் மட்டுமே ஆகக்கூடிய விடுதலைப் பெருவாழ்வு அது. அந்த அகத்தை அடைந்திருப்பவர்களுக்கு மின்னற்பொழுதே தூரம் அது.

தூய்மைப் பணியினையும் உயிர் விளைச்சலையும் ஒரே செயலாகவே செய்துமுடிக்கும் மாமழை போன்ற அந்தப் பேருணர்ச்சியை, ஒரு கவிதையை, எழுப்பியாக வேண்டும் என்பது நமது தலையாய முதற்கடன் இல்லையா? அதற்கான நம் அகக்கனலை, ஆற்றலை, மூடியிருக்கும் குப்பைகளை அகற்றுவதற்கான ஒரே வழி அந்தக் குப்பைகளைக் குப்பைகளென அறிவதுதான் என்பதுதான் இயற்கையின் மாற்ற முடியாத ஒருவிதியாக நம் முன்வந்து நிற்கிறது இல்லையா?

“எப்படியானாலும் மனிதஇனம் தனக்கான இலட்சிய ஆட்சியை அமைத்துக்கொள்ளவே முடியாது. இந்த அமைப்பு, உருவாக்கம் இவையெல்லாம் தன்மய்யம், பாதுகாப்பு, மேலாண்மை, வரையறுக்கப்பட்ட முன்னறிவுகள் இவற்றில் சிக்குண்டு சிதறுண்டு குழம்பித் துயர்தரு தீமைகளின் விளைச்சல்களாகவே மனிதவரலாறு இன்றளவும் நிகழ்ந்துவந்து கொண்டிருப்பதைக் காண்கிறோம்,” என்று ஓர் உண்மையை அறிந்தவர்களாய் அவநம்பிக்கை கொள்வோர்க்குத்தான் கவிதையின் மதம் ஒன்றைச் சுட்டுகிறோம் – அதற்கு அவநம்பிக்கை கிடையாதது மட்டுமின்றி நம்பிக்கை என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்றாய் அது இருக்கிறது. சமையலறையின் மண்டும் புகையை, கணமும் நிலவவிடாது சதா அகற்றிக்கொண்டேயிருக்கும் பேரறிவுச் சூரிய மின்விசிறி அது. நுண்ணறிவு எனும் இதயத்துடிப்பு அது. தன்னை அறிந்து கொண்ட மூளை அது. ஓட்டைப்படகினுள் புகுந்துவிடும் நீரை இடையறாது அகற்றிக்கொண்டிருக்கத் தெரிந்த செயல் அது.

0


நன்றி: சுடலைமுத்து
புகைப்படம்: விஸ்வநாதன்

தேவதேவன் எழுதும் ‘கவிதையின் மதம்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்