கட்டுரை

அறிவிலுமேறி அறிதல் – 5: கவிதை நிகழும் வெளி

2 நிமிட வாசிப்பு

மனம் கால வெளியில் ஒரு நிரந்தரத் தன்மையைக் கொண்டுள்ளது.

புலன் மற்றும் அக அநுபவங்களை மனம் கால வெளியில் மென்இழைகளென நெய்துகொள்கிறது.

பொதுமையான யதார்த்த (consensus reality) தளத்தில் நிகழும் இயல்பான அநுபவம் முதல், பித்து நிலையில் நிகழும் அநுபவம் வரை ஒரு மீள்தொடரெனக் (continuum) கொள்ளலாம்.

இயல்பில் மனம் தான் எதிர்கொள்ளும் புலன், அகஅநுபவங்களைக் கால வெளியில் தனக்கே உரிய முறையில் பொதிந்துகொள்கிறது. பித்துநிலையில் அது கால வெளியிலிருந்து ஒரு விடுபடலை, பறத்தலை நிகழ்த்துகிறது. அந்நிலையில் பிறிதொன்றிலாத முதல் அறிதல் கணங்கள் அதற்கு வாய்க்கின்றன, மலர்ந்து சொரியும் பொன்கொன்றைச் சரமனெப் பூத்து மனதின் பரப்பில் உதிர்கின்றன அறிதல் கணங்கள். தன்னுணர்வு நீங்கிய நிலையிலிருந்து மெல்லத் தன்னுணர்வு மீள்வதும் நிகழ்கிறது.

”பொங்குபல சமயமெனும் நதிகளெல்லாம்
⁠புகுந்து கலந்திட நிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
⁠கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல் சோடை யெல்லாந்
⁠தணிக்கின்ற தருவே பூந்தடமே ஞானச்
செங்குமுத மலரவரு மதியே எல்லாம்
⁠செய்யவல்ல கடவுளே தேவதேவே”
(திருவருட்பா)
எனும் பாடல் நினைவில் எழுகிறது.

தன்னுணர்வு நீங்கிப் பின் தன்னுணர்வு மீளும் கணம் வரை வைகறையும் அந்தியும் என, ஆரோசை அமரோசை என மனம் தன்னிலிருந்து விடுபட்டு வெளியில் சஞ்சரித்துத் தன்னிலைக்கு மீள்கிறது.

தன்னைத்தான் நோக்கி நிற்கும் கணங்களில் பிரக்ஞை செறிந்து படைப்பு நிகழ்கிறது. தானற்ற நிலையில் பிரக்ஞையழிந்து ‘அதுமாத்ரமாதல்’ நிகழ்கிறது.

இதுபோன்ற ‘பொங்கி ஓங்கும் கங்குகரை காணாத’ கணங்களில் அரவிந்தர் குறிப்பிடும் உயர்கவித்துவ நவிழ்தல் (supreme poetic utterences) நிகழ்கிறது.

“பைங்காற் கொக்கின் புன்புறத் தன்ன
குண்டுநீர் ஆம்பலும் கூம்பின இனியே
வந்தன்று வாழியோ மாலை
ஒருதான் அன்றே கங்குலும் உடைத்தே”
(ஓரம் போகியார்)

கொக்கின் புன்புறத்தன்ன கூம்பின ஆம்பல் யதார்த்தத்தளத்தில் அதனதன் வண்ணத்திலும் வடிவத்திலும் இயைந்து புலனநுபவம் கவியநுபவம் ஆகிறது.

“பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப் பூச்சி…
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல்நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஓய்ந்து அமர்ந்தது.
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது”
(பிரமிள்)

நாளிரவு பாராமல் ஓயாது மலர்கின்ற எல்லையற்ற பூ ஒன்றில் ஓய்ந்து அமர்தல் எனும் கவியநுபவம் யதார்த்தத் தளத்தில் அன்றி வேறு தளத்தில் நிகழ்கிறது.


புகைப்படம்: விஸ்வநாதன்

வேணு வேட்ராயன் எழுதும் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத்தொடர்:
வேணு வேட்ராயன்

இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'அலகில் அலகு' விஷ்ணுபுரம்- குமரகுருபரன் நினைவு இலக்கியவிருதை 2020இல் பெற்றார். தொழில்முறை மருத்துவர், சென்னையில் வசிக்கிறார்.

Share
Published by
வேணு வேட்ராயன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago