ஒன்றுக்கு
மூத்திரம் பெய்யும் கோப்பையில் கிடக்கும் மயிர்
நிச்சயமாக எனது மயிரல்ல யாரோ ஒருவரது மயிர்
அது எனது மயிரல்ல என்பது அசட்டைத் தன்மைதான்
ஒப்புக்கொள்கிறேன்
எனது மயிரென்றாலும் அதுவும் ஒருவித அசட்டைத் தன்மையாகவே
முடிந்திருக்கும்
எதிலும் மயிர்களுக்கு ஆவதொன்றும் கிடையாது
மயிர் அங்கேயேதான் கிடக்கப் போகிறது
*
எனக்கு எவ்வளவு மடத்தனம்
அன்றைக்கு ஒன்றுக்கு இருக்கும்போது தோன்றியது
எலும்பில் ஹேர் லைன் க்ராக் என்கிறார்கள்
இப்படித்தான் விழும் போல
அது உண்மையிலேயே ஹேர் லைன்
ஒன்றுக்கு இருக்கும்போது இன்றைக்குத் தோன்றுகிறது
*
மூத்திரக் கோப்பையின் நடுவே மூத்திரம் இறங்குவதற்காக
அழகாக பூ டிசைனில் துளைகள் செய்யப்பட்டிருக்கும்
நடுவிலுள்ளதையும் சேர்த்து எண்ணினால் ஒன்பது என வரும் துளைகளை
இன்றைக்கு வலது கீழிருந்து ஆரம்பித்தேன்
*
மூத்திரத்தின் ஃபோர்ஸ் கோப்பையில் பட்டு எனது முகத்திலும்
இரண்டு மூன்று தெறித்தது
யாரும் பார்த்தால் வியர்வை துடைப்பது போல இருக்கட்டுமே என
கைகுட்டை வைத்து அப்படிச் செய்துகொண்டிருந்தேன்
பக்கத்துக் கோப்பைக்காரர் எனது பக்கம் திரும்பிச் சிரித்தார்
இடையிலுள்ள கடப்பா கல் தடுக்குகளைப் பார்த்தேன்
அது நான்கு பக்கமும் எழுப்பிக் கட்டப்பட்ட அறையென
தன்னை நினைத்துக் கொண்டு விடைப்பாக நின்று கொண்டிருந்தது
*
பொதுக் கழிவறையிலுள்ள மூத்திரக் கோப்பையைக் கைகளால் துடைத்து
சுத்தப்படுத்த வேண்டுமென்று வந்த அசூயையை
என்ன செய்வதெனத் தெரியவில்லை
நாக்கால் சுத்தப்படுத்த வேண்டும் என்பதால்
அடித்துத் துவம்சம் செய்தேன்
*
மூத்திரக் கோப்பையில் தெரியாமல் எனது குறி லேசாக உரசிற்று
எல்லாருக்குமே இப்படி உரசுகிற மாதிரியா கோப்பையின்
வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது என
பக்கத்துக் கோப்பையை குனிந்து பார்க்க
எனது கண்களிலிருந்து குதித்தோடிய
என்னுடைய முகச்சாயல் போலில்லாத ஒரு முயல் குட்டியை
பக்கத்துக் கோப்பைக்காரர்
வெளியே வந்த பிறகும் விடாது துரத்திக் கொண்டிருந்தார்
*
பொதுக் கழிவறையில் எனக்குச் சீக்கிரத்தில் ஒன்றுக்கு வராது
கண்ணை மூடிக் கொள்கிறேன்
பொது என்பதை மட்டும் எனக்கு வலிக்காமல் உருவ முடியுமா
ப்ளீஷ்
நான் பேரின்பம் ஏக வேண்டும்
*
திரையிசைக் கலைஞனொருவனின் இசைக் கூடத்தில்
அடுத்த படத்தின் பின்னணிக் கோர்ப்புக்காக
வெவ்வேறு வாத்தியக் கருவிகளை வெவ்வேறு வாத்தியக் கலைஞர்கள்
மும்முரமாக இசைத்துப் பார்த்தனர்
பொதுக் கழிவறையின் அனைத்துக் கோப்பைகளிலும் நின்று
ஒன்றுக்கு அடித்துக் கொண்டிருந்தனர்
கண்ணாடித் துண்டு
எலந்தப்பழம் பறிக்க அன்றைக்கு கூப்பிட்ட மாதிரியே
இன்றைக்கும் வந்து கூப்பிட்டான்
அன்றைக்கு மாதிரியே இன்றைக்கும் பை நிறைய அள்ளினோம்
அப்படியே பயோனியர் ஸ்டாப் குளத்தில் மீன் பிடிக்கலாமென்றான்
அதுவொரு சகதிக் குளம்
கணுக்காலளவு சகதியில் இறங்கிவிட்டால் கைகளாலே மீன் பிடிக்கலாம்
அப்படிப் பிடிப்பது தான் கஷ்டம்
அதே குளம் அதே மாதிரி பச்சை அதே மாதிரி பாசி படிந்திருந்தது
பேசிக்கொண்டே இறங்கினோம்
சகதிக்குள் அன்றைக்கு எனது இடது பாதத்தை ஒரு கண்ணாடி கிழித்தது
அந்தக் கண்ணாடி இன்றைக்குக் குத்தவில்லையா என்றான்
ஒரு ஸ்டெப் தள்ளி காலை வைத்தேன் என்று கண்ணடித்தேன்
இந்த முப்பது ஆண்டுகளில் இது ஒன்றுதான் புதிது
முப்பது ஆண்டு கால பழைய குளத்தில் முப்பது ஆண்டு கால
பழைய மீன்களை முப்பது ஆண்டுகளுக்கு முன் பிடித்த மாதிரியே பிடித்து
அந்தக் குளத்திலிருந்து வெளியேறினோம்
அப்பொழுது
எனது காலிலிருந்து வழியாத ரத்தத்தை நான் துடைத்துக்கொண்டேன்
நன்றாக நடந்து வரும் என்னை அவன் கைத் தாங்கலாகப் பிடித்து வந்தான்
அலைக்கழிப்பு
மலையில் சிரமப்பட்டு ஏறி அங்கிருந்து குதித்து
உயிரைப் போக்கிக்கொள்கிறார்கள்
வாகனங்களில் சென்று நிப்பாட்டிக் குதிப்பவர்களும் உள்ளார்கள்
மலை நினைத்தால் எல்லாரையும் காப்பாற்றலாம்
மலை ஒரு சிறிய மலையாகிவிட்டால் அங்கிருந்து விழும்போது
மலையளவிற்குப் பெரிய ஆபத்து இருக்காது
சிறிய மலையென்றாலுமே விழுந்து சிதறத்தான் செய்யும்
அதிக தூரத்திற்குச் சிதறுகின்ற உடல் கொஞ்ச தூரத்திற்குச் சிதறும்
ஒரு சிறிய பாறாங்கல்லாகிவிட்டால்
அதிலிருந்து குதிக்கும்போது அடியே படாது
இல்லை தரையோடு தரையாகத் தூங்குவது மாதிரி படுத்துவிட வேண்டும்
சிறிய சிராய்ப்புகளோடு தப்பிக்கலாம்
இல்லையென்றால் தரையை அப்படியே கீழே போகச் சொல்ல வேண்டும்
எல்லா நேரமும் வானத்தை மலையே முதலில் பார்ப்பதால்
மலை சொன்னால் கேட்கும் தரை
குதித்தவர் கீழே போய்க்கொண்டிருக்க
தரையும் கீழே போய்க்கொண்டிருக்கும்
இருக்கிற காலத்தை அந்தரத்திலாவது சந்தோசமாகக் கழிப்பர்
இவ்வளவு சிரமங்கள் ஏன்
மிக எளிதாக என்னால் காப்பாற்ற முடியும் என்றது மலை
குதிக்கத் தயாராக இருந்தவர்களிடம் நான் மலையே கிடையாது
யாரோ உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள்
நீங்களும் இவ்வளவு தூரம் வந்து இப்படி ஏமாந்துவிட்டீர்களே
என்றது
ரோசப்பட்டு எல்லாரும் மலையிலிருந்து கீழே இறங்கினர்
கிறுக்கன்களின் மீன் குஞ்சுகள்
கிச்சு கிச்சு காட்டி சிரிப்பு மூட்டிய எனது விரல்களைப் பிடித்து
செல்ல மீன் குஞ்சுகள் எனக் கொஞ்சியவனோடு
இன்னும் விளையாடலாமென உதடுகளை மீன் மாதிரி குவித்து
ஒரு மீன் முத்தம் தந்தேன்
மீன் குஞ்சு முத்தம்தான் வேண்டுமென்றான்
சரியென விரல்களால் அவனது கன்னங்களைக் கவ்வி
ம்மாயென வாயில் வைத்துக் கொண்டதற்கு
ஐந்து மீன்களது சேஷ்டைகளைத் தாங்கமுடியாது நெளிந்தான்
அவன் நெளிகிற நெளிவைப் பார்த்தால்
மீன் குஞ்சுகளாகவே மாறிவிட்டதா என்ற சந்தேகத்தோடு
மண் பானைக்குள் எனது கைகளை அமிழ்த்தி
விரல்கள் ஒவ்வொன்றையும் மேலும் கீழுமாக ஆட்டிய போது
விரல்கள் கைகளுக்குள்ளாகவே நீந்தி நீந்தி வந்து கொண்டிருந்தன
அது எனது மீன் குஞ்சுகளெனப் பானையை வெடுக்கெனப் பிடுங்கியவன்
விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்
எவ்வளவு தூரம் போய்விடுவானென அவன் பின்னாடியே போன அன்று
அவனுடைய மீன் குஞ்சுகளை அவன் எடுத்துச் சென்றான்
என்னுடைய மீன்குஞ்சுகளை நான் எடுத்துச் சென்றேன்