நான் கடந்த காலத்திலிருந்து நடந்தே வந்து கொண்டிருந்தேன். அவன் எனக்காக எதிர்காலத்தில் காத்திருப்பதாகச் சொன்னான். இன்னும் எத்தனை நேரம்தான் இப்படியே நடப்பது? பாதங்கள் கனக்கின்றன.
எத்தனையோ முறை என்னைச் சந்திக்க வேண்டும் என்று எதிர்காலத்தில் இருந்து கடிதம் எழுதியிருக்கிறான். ஒவ்வொரு முறையும் என்னுடைய முந்தைய கடிதம் கிடைத்ததா…? என்று அதில் கேட்டிருப்பான்.
எந்தக் கடிதத்திற்கும் இதுவரை பதில் எழுதியதில்லை. நிகழ்காலத்தைக் கடந்து எதிர்காலத்திற்குப் பதில்கடிதம் அனுப்புவதில் எனக்கு உடன்பாடில்லை. ஒவ்வொரு முறையும் அவன் அனுப்பும் கடிதத்தைப் படித்துவிட்டுக் கிழித்துப் போட்டுவிடுவேன்.
ஆனால் இந்தமுறை நானேதான் கேட்டேன். “சந்திப்போமா…?”
இத்தனை வேகமாய் எதிர்காலத்தில் இருந்து பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. உடனே சரி என்றான்.
எதிர்காலத்தில் அவன் சொன்ன இடத்திற்கு வந்துவிட்டேன். கதவு திறந்தே இருக்கிறது. நடுவீட்டில் இரண்டு நாற்காலிகள் எதிரெதிரே காலியாக இருக்கின்றன… வீட்டில் எங்கு தேடியும் அவனை மட்டும் காணவில்லை.
எனக்கான கடிதங்களை இவ்விரு நாற்காலிகளில் ஏதோ ஒன்றில் அமர்ந்துதான் அவன் எழுதியிருக்க வேண்டும். அதன்மேல் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் எழுத்துப் பலகையைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. நாற்காலியின் அருகே இருக்கும் ஜன்னலின் வழியே வெளியே வேப்பமரத்தைப் பார்க்கிறேன். ஏன் எதிர்காலத்தில் மரங்கள் எதுவும் அசைவதில்லை…?
“எங்கே இருக்கிறாய்…?”
“இவ்வளவு நேரம் அங்குதான் இருந்தேன்… இந்த ஜன்னலினோரம்தான் அமர்ந்திருந்தேன். உனக்காகத்தான் காத்திருந்தேன்… ஆனால் நான் என்ன செய்யட்டும்? இப்படியே ரொம்ப நாட்கள் தனியாகவே இருந்து எனக்கு அலுப்பு தட்டிவிட்டது.. பேச்சுத் துணைக்கு எத்தனை முறை கூப்பிட்டும் நீயும் வரவில்லை. உனக்கான நாற்காலி எப்போதும் காலியாகவே வைத்திருந்தேன்… நான்கூட அதில் ஒருநாளும் அமர்ந்ததில்லை…” குரல் மட்டுமே பதிலாய் வந்தது.
“சரி, எங்கு இருக்கிறாய்? நான்தான் வந்துவிட்டேனே. இப்போது சந்திப்போம்…”
“இல்லை இனி முடியாது…”
“ஏன்?”
“நீ வரமாட்டாய் என்று நினைத்துக் கிளம்பிவிட்டேன்”
“எங்கே?”
“நிகழ்காலத்துக்கு… நீயும் வருகிறாயா…?”
நான் என்றுமே நிகழ்காலத்தை நம்பியதில்லை. “முடியாது…” என்று மறுத்துவிட்டேன். என் குரல் உடைந்திருந்தது. மீண்டும் கடந்தகாலத்தின் தொட்டிலில் குப்புறக் கிடந்து அழவேண்டும்போல் தோன்றுகிறது…