நீளும் எல்லைகள் – 3: முரண்களை விவாதித்தல் – டெட் சியாங்கின் கதைகள்

8 நிமிட வாசிப்பு

அறிபுனைவு சார்ந்த எந்தவொரு விவாதமும் விவாதிக்கப்படும் படைப்பை எவ்வளவு தூரத்துக்கு அறிபுனைவாகக் கருதலாம் என்ற புள்ளியைத் தொட்டுச் செல்வதைக் கவனிக்கலாம். ஒரு அறிபுனைவில் எவ்வளவு அறிவியலும் எவ்வளவு புனைவும் இருக்கலாம் என்பது இன்றும் தொடரும் ஒரு விவாதமாகவே உள்ளது. வன்-அறிபுனைவுகள் (Hard SF) என்றொரு வகைமை அறிபுனைவுக்குள்ளாகவே தற்போது பிரபலமாகத் தொடங்கி இருக்கிறது. அறிவியலின் அற்புதத் தன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு புனையப்படும் கதைகளைக் கடந்து அறிவியலின் அடிப்படை தர்க்கத்தில் உள்ள சிக்கல்களைச் சுட்ட முயலும் கதைகளை வன்-அறிபுனைவுகள் என்று வகுத்துக் கொள்ளலாம்.

இந்த வன்-அறிபுனைவு என்ற வகைமைக்குள் அடங்கும் பெரும்பாலான கதைகள் ஒரு தீவிரமான தர்க்கத் தளத்தைக் கொண்டிருக்கும். கதைச்சூழலில் நடைபெறும் இயல்புக்கு மாறான எந்தவொரு செயலுக்கும் மிகத்தெளிவான அறிவியல் வரையறை சொல்லப்படும். ஒரு வகையில் இதனை அறிபுனைவின் நவீனத்துவப் பண்பு என்று சொல்லலாம். நவீனத்துவம் கூர்மையான மொழிவெளிப்பாட்டினை இலக்காக்கும் முறை. ஆனால் அறிபுனைவுக் கதைகளில் உள்ள ‘அறிவியலை’ விளக்க சில சமயம் புனைவுகள் ஒரு வகையான கட்டுரைத்தன்மையை அடைந்துவிடுகின்றன. உரையாடல், செய்தி அறிக்கை, பாடமெடுத்தல், உரை என்று பல்வேறு உத்திகளில் கதைகளில் பயின்று வரும் அறிவியல் விளக்கப்படும். ஆனால் எந்தவொரு முறையினைக் கைக்கொள்ளும்போதும் இந்தப் ‘பாடமெடுக்கும்’ தன்மை பெரும்பாலும் ஓர் அழகியல் குறைபாடாகவே அறிபுனைவுகளில் தோற்றம் கொள்கிறது. அறிவியல் தேற்றம் ஒன்றைப் புனைவுத் தருக்கத்துக்குள் மிகச் சரியாகப் பொருத்துவது என்பது அறிபுனைவு எழுத்தின் முதன்மையான சவால்.

அடுத்ததாக ‘தர்க்கம்’ என்பதை அறிபுனைவுகள் இறுகப் பற்றத் தொடங்கும்போது கதைகள் ஒரு வகையான ‘அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள்’ இருப்பதான தோற்றத்தைப் பெற்றுவிடுகின்றன. தர்க்கம் கடந்த நிகழ்வுகளைத் தர்க்கத்துக்குள் வைத்து விளக்கிவிடுவது என்பது மாறாத விதிபோலவே இத்தகைய கதைகளில் கடைபிடிக்கப்படுவதை அவதானிக்க முடியும். ஆனால் புனைவு என்பது ஒரு ஆய்வாளரோ பத்திரிக்கையாளரோ பேராசிரியரோ சொல்ல முடியாத ஒன்றைச் சொல்லிவிடுவதுதான். அப்படியிருக்க ஓர் அறிவியல் விதியை அல்லது சாத்தியத்தை மேற்சொன்னவர்களால் இயலாத அளவு கற்பனையின் எல்லை வரை நகர்த்திச் செல்வது அறிபுனைவுகளின் ஒரு முக்கிய தேவையாகிறது. இந்தப் புள்ளியில் அறிபுனைவுகள் தங்களுடைய தர்க்கத் தளத்தைக் கைவிட்டு மேலெழ வேண்டியிருக்கிறது. இந்த ‘மேலெழுதல்’ ஓர் எளிய சாத்தியத்தையோ கற்பனையையோ சார்ந்து நிற்காமல் ஆழமான தத்துவச் சிக்கல் ஒன்றைச் சுட்டும்போது ஒரு அறிபுனைவு தனது எல்லையைக் கண்டுவிடுகிறது என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நினைவில் நிற்கும் புனைக்கதைகள் இத்தகைய முரண்களின் உரையாடலாக இருப்பதைக் காணலாம். டெட் சியாங்கின் ‘Stories of your Life and Others’ என்ற இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் அறிவியல் சார்ந்த அறிதல்களைப் புனைவில் சோதித்துப் பார்த்தல் என்ற எல்லையைத் தாண்டி அறிவியலின் எல்லை மற்றும் அதன் தத்துவச் சிக்கல்களை பேசுவதாலேயே முக்கியமானவை.

Stories of your Life Ted Chiang

***

முதல் வாசிப்பில் இத்தொகுப்பில் உள்ள Understand மற்றும் Liking What You See: A Documentary என்ற இரண்டு கதைகளைத் தவிர்த்து மற்ற ஆறு கதைகளும் அறிபுனைவு வகைமைக்குள் அடங்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவிக்கச் சாத்தியமிருக்கிறது. ஏனெனில் இத்தொகுப்பில் உள்ள மற்ற கதைகள் எதுவும் வழக்கமாக அறிவியல் புனைக்கதை எழுதுகிறவர்கள் கையாளும் விண்வெளி ஆய்வு, காலப்பயணம், உடலியல் மாற்றங்கள் என்ற எல்லையில் பயணிப்பதில்லை. மேலும் இக்கதைகள் எதுவும் ‘எதிர்காலத்தில்’ நடப்பதில்லை. மாறாக இரண்டு கதைகள் கடந்தகாலத்தில் நிகழ்கின்றன.

Tower of Babylon ஒரு தொன்மத்தை மறு உருவாக்கம் செய்கிறது. பூமியில் இருந்து ஓர் உயரமான கோபுரத்தை எழுப்பி வானத்தில் உள்ள பேராற்றல்களைத் தொடர்பு கொள்ளுதல் என்ற தொன்மத்தை முழுமையாகத் தொன்மக்கூறுகளைக் கழித்துவிட்டு இந்தக் கதை மறு ஆக்கம் செய்கிறது. அப்படி ஒரு கோபுரம் பாபிலோனில் எழுப்பப்படுவதையும் அந்தக் கோபுரத்தின் உச்சியில் இருந்து வானத்தில் திறக்கும் சொர்க்கத்தின் அடிப்பகுதி ஹிலாலம் என்ற சுரங்கப் பணியாளனால் தோண்டப்படுவதையும் இக்கதை சித்தரிக்கிறது. ஒரு எல்லையில் இருந்து மறு எல்லைக்குச் செல்ல இரண்டு நாட்களும் பூமியில் இருந்து உச்சிக்குச் செல்ல நாற்பத்தைந்து நாட்களும் எடுக்கும் ஒரு பிரம்மாண்டமான கோபுரத்தின் அடியில் கதையின் தொடக்க வரியே கொண்டு சென்று நிறுத்திவிடுகிறது. அத்தகைய கட்டுமானத்தில் நடைபெறும் பணிகளையும் இடர்களையும் பேசுகிறது. ஆண்டுக்கணக்கான கட்டுமான வேலைகள் எடுக்கும் கோபுரத்தின் உயர் தளங்களில் பலர் குடும்பத்துடன் வசிக்கின்றனர். கட்டுமானத்தின் உச்சிப்புள்ளியில் இருந்து ஒரு கல் விழுந்தால் அது தரையை அடைய ஒரு மாதம் ஆகிறது. ஹிலாலம் மற்றும் அவனுடைய சக சுரங்கப் பணியாளர்கள் கோபுரத்தின் உச்சியை அடைவதற்காக மேற்கொள்ளும் பயணத்தின் வழியே கதை நகர்கிறது. கோபுரத்தின் தளங்களில் உணவு உற்பத்தியும் நடைபெறுகிறது. ஒரு புள்ளியில் கோபுரம் சூரியனையும் தாண்டிச் செல்கிறது. சொர்க்கத்தின் அடிப்பகுதியைத் திறந்தால் உலகை முன்பு மூழ்கடித்த வெள்ளத்தில் மீண்டும் சிக்க வேண்டி இருக்கும் என்ற குழப்பம் ஹிலாலமை ஆட்கொள்கிறது. இக்கதையின் தத்துவச் சிக்கல் இந்தப் புள்ளிதான். தன்னுடைய முழு சாத்தியத்தையும் பயன்படுத்திக் கடவுளை நெருங்கிய மனிதன் இன்னும் மேலே செல்வதா வேண்டாமா என்று குழம்பி நிற்கிறான். ஹிலாலம் சொர்க்கத்தின் அடிப்பகுதியின் நீரோடை திறந்து கொள்ளாதவாறு சொர்க்கத்தைத் தோண்டுகிறான். ஒரு சமயம் நீரோடை திறந்துகொள்ள நேர்கிறது. அச்சமயம் அவன் அடையும் தரிசனமே கதையை முடித்து வைக்கிறது.

Hell is the Absence of God என்ற கதையை மேற்சொன்ன கதையுடன் இணைத்து வாசிக்கலாம். விண்தேவர்கள் மின்னலும் இடியுமாக மண்ணில் இறங்குவதைக் கதைகளாகக் கேட்டிருப்போம். சினிமாக்களில் பார்த்தும் இருப்போம். ஆனால் அவர்கள் அப்படி மண்ணில் இறங்கும்போது வெளிப்படும் ஆற்றல்களால் மனிதர்கள் என்ன ஆகிறார்கள் என்பதை இக்கதை பேசுகிறது. நதானியேல் என்ற விண்தேவன் மண்ணில் இறங்கும்போது நீல் ஃபிஸ்கின் மனைவி சாரா உயிரிழக்கிறாள். அவளுடன் இன்னும் ஏழு பேர் உயிரிழக்கின்றனர். சாரா உட்பட அதில் மூவர் சொர்கத்துக்கும் பிறர் நரகத்துக்கும் செல்கின்றனர்.

தொடையில் தசைச்சிதைவு கொண்டு பிறக்கும் அதனாலேயே கடவுள் நம்பிக்கை இல்லாதுபோன நீல் ஃபிஸ்க் சொர்க்கத்துக்குச் சென்ற தன் மனைவியைப் பின்தொடர விரும்புகிறான். ஆனால் கடவுளை உள்ளார்ந்து விரும்ப முடியாத அவன் இறந்தால் சொர்க்கத்துக்குச் செல்ல வாய்ப்பில்லை. இதேபோன்ற ஒரு தருணத்தை ஆர்வெல்லின் 1984 நாவலில் வின்ஸ்டன் ஸ்மித் எதிர்கொள்வது நினைவுக்கு வரலாம். ஸ்மித் இறக்க விழைகிறான். ஆனால் ஓஷோனியாவின் அதிபரான பிக்பிரதரை உள்ளார்ந்து விரும்பும்வரை அவனால் இறக்க இயலாது. மிகக் கடுமையானதொரு துரோகத்தை இயற்றி அவனுக்குத் தன்மீதே அன்பில்லாது போகும் தருணத்தில் அவன் பிக்பிரதரை விரும்பத் தொடங்கிறான். அவன் பின் மண்டையில் தோட்டா வந்துபடுகிறது.

சியாங் இந்தத் தருணத்தை வேறு விதமாக எதிர்கொள்கிறார். நீல் ஃபிஸ்கின் முடிவு எந்த விதத்திலும் வின்ஸ்டன் ஸ்மித்தின் முடிவில் இருந்து மாறுபட்டதாக இல்லை. ஆனால் சியாங்கின் ‘கடவுள்’ ஆர்வெல்லின் ‘பிக் பிரதரை’ விட சமநிலை கொண்டவராக இருக்கிறார். ‘பிக் பிரதர்’ மக்களைக் கட்டுப்படுத்த மட்டுமே செய்யும் ஓர் உருவகம் என்றால் இக்கதையில் வரும் ‘கடவுள்’ அவர்களைக் காக்கவும் அழிக்கவும் செய்கிறார். அந்தக் குணம் சொர்க்கம் நரகம் என்ற இருமைகள் வழியே சுட்டப்படுகிறது. நீல் ஃபிஸ்க் இறுதியில் அடையும் தரிசனமும் ஏறக்குறைய ஹிலாலம் அடைவதைப் போன்ற ஒன்றே.

Seventy Two Letters என்ற கதையையும் மேற்சொன்ன இரண்டு கதைகளின் தொடர்ச்சியாக வாசிக்கலாம். எழுத்துகள் வழியாக மண்சிலைகளை உயிர்பெறச் செய்யும் ஒரு பழைய மந்திரவாதம் சார்ந்த தொன்மத்தையும் விந்தணுவைக் கருப்பைக்கு வெளியே வளர்க்கும் ஒரு முறையையும் இக்கதை இணைக்கிறது. கருப்பைக்கு வெளியே மிக விரைவாக விந்தணுக்களை வளரச்செய்ய முடிகிறது. ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே ஐந்து தலைமுறையை ஓர் ஆணின் விந்தில் இருந்து உருவாக்குகிறார்கள். ஆனால் ஐந்தாவது தலைமுறைக்கு மேல் புதிய சந்ததிகளை உருவாக்க முடிவதில்லை. மனித இனம் இன்னும் ஐந்து தலைமுறைகளில் அழிவதற்கான சாத்தியம் இருப்பதை உணர்ந்து ஸ்ட்ராட்டன் என்ற மண்சிலைகளை உயிர்ப்பிக்கும் கலைஞனின் உதவியுடன் சிலைகள் வழியாக மனிதர்களை நீடிக்கச் செய்ய முயல்கின்றனர். செயற்கை கருத்தரித்தல் என்கிற கருத்தை இக்கதை வேறுவிதமாக அணுகுகிறது. இக்கதையில் பெண்ணின் கருமுட்டைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் அதன் அறிவியல் விளக்கத்தையும் கடந்து அபாரமான கவித்துவ தன்மை கொண்டதாக வெளிப்படுகிறது.

Story of your Life என்ற கதை காலம் சார்ந்தது என்று சொல்லலாம். லூயிஸ் என்ற மொழியியலாளருக்கும் அவர் மகளுக்குமான உணர்ச்சிகரமான அன்பும் விலக்கமும் நிறைந்த அன்னை-மகள் உறவு oஒர் இழையாகவும் லூயிஸ் ஹெப்டாபாட்ஸ் என்ற வேற்றுலகவாசிகளின் மொழியை அறிந்து அவர்களுடன் உரையாடுவது மற்றோர் இழையாகவும் சொல்லப்படுகிறது. மொழியியலின் பல நுண்கூறுகள் பயின்று வரும் இக்கதையில் காலத்தை மனிதர்களும் வேற்றுலகவாசிகளும் எப்படி உருவகிக்கின்றனர் என்பதும் வேற்றுலகவாசிகளின் ஞானத்தை லூயிஸ் பெறுவதால் அவருக்கும் அவர் மகளுக்குமான உறவு குறித்த அவர் பார்வை எவ்வாறு வேறுபடுகிறது என்பதும் நுணுக்கமாகப் பேசப்படுகின்றன. இத்தொகுப்பின் அனைத்துக் கதைகளிலும் அறிவியல் வழியாக மனித அகத்தின் தடுமாற்றங்களும் அலைகழிப்புகளுமே சொல்லப்பட்டாலும் இக்கதையில் லூயிஸுக்கு ஏற்படும் அலைகழிப்பு ஓர் உச்சம். மேலும் இக்கதை எழுதப்பட்டுள்ள விதமே கதை சித்தரிக்க முயலும் ‘கால உருவகம்’ என்ற கோட்பாட்டுடன் இசைவு கொண்டுள்ளது.

Division by Zero உயர் கணிதம் சார்ந்த ஒரு சிக்கலை விவாதிக்கிறது. கணிதம் தன்னுடைய விதிகளின்படியே தன்னைப் பொய்பித்துக்கொள்ளும் தன்மையை உயர்கணிதத்தில் மேதாவியான ரெனீ கண்டறிகிறாள். அது அவளுக்குள் உருவாக்கும் பிறழ்வுகளும் கணிதத்தின் தன்னைத்தானே பொய்ப்பிக்கும் தன்மைக்குமான நிரூபணமுமாக இக்கதை அமைகிறது.

Understand என்ற கதையின் தொடக்கம் ஏறத்தாழ வழக்கமான அறிவியல்புனைவு + துப்பறிதல் என்ற தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. கதைப்போக்கில் இந்தத் தோற்றம் மாறிவிடுகிறது. கோமா நிலைக்குத் தள்ளப்பட்ட லியோனுக்கு அளிக்கப்படும் ஒரு ஹார்மோன் சிகிச்சை வழக்கமான மனிதர்களைவிடப் பலமடங்கு ஆற்றலுடன் சிந்திக்கும் ஒருவனாக அவனை மாற்றுகிறது. அரசாங்கம் உளவுத்துறை என அனைத்திலிருந்தும் தப்பிச்செல்லும் அளவு அவனுடைய மூளைச்செயல்பாடு அதிகரிக்கிறது. லியோனின் சிந்தனையை முன்னெடுத்துச் செல்வதற்கான கருவிகள் பூமியின் மொழிகள் எதற்கும் இல்லாமலாக லியோன் தனக்கென ஒரு சொந்த மொழியை உருவாக்கிக் கொள்கிறான். லியோன் தனக்குக் கிடைத்த ஆற்றலனைத்தையும் தன்னை அறிவதில் செலவிடுகிறான். உலகின் ஒவ்வொரு செயலிலும் பொருளிலும் உள்ள வடிவத்தை அறிவதன் வழியாகப் பிரபஞ்சத்தை அறியும் முனைப்பில் இருக்கிறான். ஆனால் அவனுடைய வருவாய்கள் அவனளவுக்கே ஆற்றல் கொண்ட ரேனால்ட்ஸ் என்பவனால் தடுக்கப்படுகிறது. ரேனால்ட்ஸ் லியோனின் ஆர்வங்களுக்கு எதிர்மறையானவன். அவனுடைய தேடல்கள் உலகை அழிவிலிருந்து மீட்பது சார்ந்ததாக இருக்கிறது. லியோனுக்கும் ரேனால்ட்ஸுக்கும் ஏற்படும் மோதல் இரண்டு தத்துவப்புலங்களின் மோதலேதான். சுயத்தை அறிவதன் வழியாக விடுதலை நோக்கி பயணிப்பவனுக்கும் உலகின் துயரைப் போக்கி உலகை வாழ்வதற்கு மேலும் தகுதி கொண்டதாக மாற்ற நினைக்கும் ஒருவனுக்குமான நிரந்தர மோதலாக இக்கதையை வாசிக்கலாம்.

The Evolution of Human Science மனித இனம் அதிமனிதனால் வெற்றிகொள்ளப்பட்டால் என்ன நிகழும் என்ற கற்பனையைs சற்று நேர்மறையான விதத்தில் சொல்லும் கதை. இக்கதை Nature என்ற பிரபல அறிவியல் இதழுக்காக டெட் சியாங்கால் எழுதப்பட்டது.

Liking What You See: A Documentary இத்தொகுப்பின் மிகுந்த சுவாரஸ்யம் நிறைந்த கதை. மற்ற கதைகள் ஒரு நிரந்தரமான தத்துவச் சிக்கலை அடையாளப்படுத்த முனைகின்றன என்றால் இக்கதை காட்சி ஊடகங்கள் பெருகிய பிறகு மனித உறவுகளில் ஏற்பட்டிருக்கும் பிரதானமான சிக்கலை பேசுகிறது. Racism போல Lookism என்றொரு பிரிவினைக் கோட்பாடு இக்கதையில் சொல்லப்படுகிறது. நாம் அழகானவர்களையே பார்க்கிறோம். பொருட்படுத்துகிறோம். அதற்கு எதிராக ஓர் அறிவியல் கண்டுபிடிப்பு நிகழ்கிறது. மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு உதவுவதும் அவர்கள் மேல் அன்பாக இருப்பதும் அவர்களுடைய புறத்தோற்றத்தின் கவர்ச்சியின் அடிப்படையிலேயே என்ற வெளிப்படையான ஆனால் பலர் ஒத்துக்கொள்ள மறுக்கும் உண்மையை இக்கதை அடிப்படையாகக் கொள்கிறது. புற அழகை தோள் பளபளப்பு உடல் சீர்மை என்று வரையறுத்துக் கொண்டு ஒருவரின் புற அழகால் இன்னொருவரின் உடலில் தூண்டப்படும் ஹார்மோன்களை மூளையில் கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் தடை செய்யும் முறையைக் கண்டடைகின்றனர். இந்தத் தடை சிகிச்சையை மேற்கொண்டவர்களுக்கு மனிதர்களுள் அழகானவர் அழகற்றவர் என்ற வேறுபாடு தெரியாது. பார்வையின் வேறெந்தக் கூறையும் இந்த சிகிச்சை பாதிப்பதில்லை. இதை அனைவரும் செய்துகொள்ள வேண்டும் என்று ஒரு கல்லூரியின் மாணவர் அமைப்பு ஓட்டெடுப்பு நடத்துகிறது. அழகுசாதனப் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இதனை எதிர்க்கின்றன. இக்கதையின் பலம் இதன் வடிவம்தான். ஆவணப்படம் என்ற பாவனையை மேற்கொள்வதால் பலர் தரப்புகள் கதைக்குள் பேசப்படுகின்றன. இந்த சிகிச்சையின் ஆன்மீகத் தாக்கங்கள் தொடங்கி நீதியுணர்ச்சி வரை பேசப்படுகின்றன. காதல் தொடங்கி நிறவெறி வரை விவாதங்கள் நீள்கின்றன.

***

டெட் சியாங்கின் கதைகள் பிற அறிபுனைவு எழுத்தாளர்களின் கதைகளில் இருந்து பல வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. மூன்று முதன்மையான வேறுபாடுகளைக் குறிப்பிடலாம்.

முதலில், டெட் சியாங் கதையாக்குவதற்கு தேர்ந்தெடுக்கும் களங்கள். இக்களங்களை அறிபுனைவு என்ற தளத்துக்குள் பொருத்த முடியுமா என்று சந்தேகங்கொள்ள வைக்கும் அளவு வித்தியாசமான களங்களை டெட் சியாங் தேர்வு செய்கிறார். இந்தத் தன்மையை அறிபுனைவுகளில் நிகழ்ந்த ஒரு முன்னகர்வாகக் காணலாம். புனைக்கதைகளைப் பொறுத்தவரை அவை வரலாற்றை, நிகர்வாழ்வை அல்லது ஒரு காலகட்டத்தை நடிக்கவே செய்கின்றன. காவல்கோட்டம் வாசிக்கும்போது நாம் மதுரை வரலாற்றை வாசிப்பதாக உணர்வதும் ஆழிசூல் உலகு நம்மை நடுக்கடலில் கொண்டு சென்று நிறுத்துவதும் அவை தேர்ந்து கொண்ட வரலாற்றுப்புனைவு, யதார்த்தவாதம் என்ற கூறுமுறைகளின் தர்க்கத்தால்தான். அதுபோலவே அறிபுனைவுகளுக்கு ஒரு தர்க்கமுறை உருவாகி வந்துள்ளது. அதன் புறவடிவத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சியாங் தன் கதைகளை உருவாக்குகிறார்.

இரண்டாவதாக, சியாங்கின் கதைகளில் இயல்பாக நிகழும் தத்துவ மோதல்கள். செவ்வியல் தன்மை கொண்ட கதைகளின் பண்பான இந்த முரண்படும் தரப்புகளின் மோதலை சியாங் தன் கதைகளில் எளிதாகச் சாதிக்கிறார். சியாங் தன் கதைகளில் அறிவியல் சார்ந்த ஒரு வலுவான கோட்டுருவத்தை மட்டும் உருவாக்கியபின் கதை விவாதத்திக்கும் புள்ளியைத் தத்துவத் தளத்துக்கு மாற்றிக்கொள்கிறார்.

மூன்றாவதாக, இந்தக் கதைகளில் அனைத்திலும் வெளிப்படும் ஒரு ‘நேர்மறைத்தன்மை’. நேர்மறைத்தன்மை என்பதை ‘நல்ல முடிவு’ கொண்ட கதைகள் என்று சுருக்கிக்கொள்ளக் கூடாது. Hell is the Absence of God, Story of your Life போன்றவை அடிப்படையில் எதிர்மறையான புற முடிவினைக் கொண்ட கதைகள். ஆனால் அக்கதைகளின் முக்கிய பாத்திரங்களான நீல் ஃபிஸ்க், லூயிஸ் போன்றவர்கள் அடையும் தரிசனம் நேர்நிலையானது. பெரும்பாலான அறிபுனைவுகள் Dystopian சமூகத்தையே கற்பனை செய்யும் இந்த நாளில் சியாங்கின் குரல் வேறு மாதிரியானதாக இருக்கிறது. நானூறு ஐநூறு வருடங்கள் முன்னோக்கிப் பாயாமல் அது நிகழ்காலத்தை ஆராய்கிறது. கூடவே இன்றில் நின்று கொண்டு கடந்துபோன காலத்தையும் வேறு கண்களின் வழியாகத் திரும்பிப் பார்க்கிறது.


மேலும் வாசிக்க

  1. நண்பர் பாரி ‘பிரபஞ்ச மௌனம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த டெட் சியாங்கின் Great Silence கதையின் சுட்டி – https://m.jeyamohan.in/121561/
  2. மனித விஞ்ஞானத்தின் பரிணாமம் (The Evolution of Human Science கதையின் தமிழாக்கம், சொல்வனம்)
  3. புரிந்து கொள் (Understand கதையின் தமிழாக்கம், சொல்வனம்)

சுரேஷ் பிரதீப் எழுதும் ‘நீளும் எல்லைகள்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்