நேர்காணல்

நேர்காணல்: சாரு நிவேதிதா

46 நிமிட வாசிப்பு

முப்பது வருடங்களுக்கும் மேலாக இலக்கியம் மட்டுமன்றி சினிமா, இசை, அரசியல், சமூகம் எனப் பலதரப்பட்ட துறைகளைப் பற்றித் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருபவர் சாரு நிவேதிதா. அறிவியல் புனைவு, பரீட்சார்த்த முயற்சிகள், வேற்றுமொழி இலக்கியங்கள் மற்றும் பிற கலைகளைக் குறித்த அவரின் பார்வையை அறியும் விருப்பத்தில், சில இலக்கிய நண்பர்களின் கேள்விகள் மற்றும் அரூ குழுவின் கேள்விகளுடன் சாருவை அணுகினோம்.

புகைப்படம்: மது

தமிழ் எழுத்துலக முன்னோடிகள், Francaphone literature, அரபி இலக்கியம், தரத்தின் வீழ்ச்சி, Lucian, தனது இலக்கிய அனுமானங்கள் எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கிய படைப்பு, Helene Cixous, உலக இலக்கியத்தில் பெண்களின் பங்களிப்பு எனப் பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் செல்கின்றன சாருவின் பதில்கள்.

கணேஷ் பாபு: நவீன இலக்கியம் என்றாலே சிக்கலும் சிடுக்கும் நிரம்பிய மொழியில்தான் சொல்லப்பட வேண்டும் என்ற எழுதப்படாத விதி இருந்த காலத்தில் எளிமையான நேரடியான மொழியில் எழுதத் தொடங்கியவர் நீங்கள். இப்போது நிறைய பேர் இப்படி எளிய மொழியில் இலக்கியம் படைக்கத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால் நீங்கள் எழுத வந்த காலத்தில் உங்கள் மொழி குறித்து என்ன விதமான விமர்சனம் இருந்தது? அதை எப்படிக் கடந்து வந்தீர்கள்?

சாரு: கொஞ்சம் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். வாஸ்தவத்தில் தமிழ் இலக்கிய முன்னோடிகள் யாருமே கடின மொழியில் எழுதவில்லை. ஒரே ஒரு விதிவிலக்காக மௌனியைச் சொல்லலாம். அதற்குக் காரணம், அவர் இலக்கியத்தை விடவும் தத்துவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரோடு பல மணி நேரங்கள் உரையாடிய, பழகிய இலக்கியவாதிகளோடெல்லாம் பேசியபோது அந்த முடிவுக்கே என்னால் வர முடிந்தது. மற்றபடி யாரை எடுத்துக் கொண்டாலும் அவர்கள் எளிமையாகவும் நேரடியாகவும்தான் எழுதினார்கள். மணிக்கொடி மற்றும் எழுத்து கால எழுத்தாளர்கள் அனைவருமே அப்படித்தான். சி.சு. செல்லப்பா, க.நா.சு., கு.ப. ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி, ந. சிதம்பர சுப்ரமணியன், கு. அழகிரிசாமி, தி.ஜ. ரங்கநாதன், சார்வாகன், கரிச்சான் குஞ்சு, எம்.வி. வெங்கட்ராம், புதுமைப்பித்தன் தொடங்கி தி. ஜானகிராமன் வரை எல்லோருமே எளிமையாகத்தான் எழுதினார்கள். நகுலனும் எளிமையாகவே எழுதினார் என்றாலும் அந்த எளிமை நம்மை ஏமாற்றக் கூடியது. வெறும் எளிமை என்று எண்ணித் தாண்டிவிட முடியாதது. அதனால்தான் அவர் எழுதிய ராமச்சந்திரன் கவிதை எழுதி ஐம்பது ஆண்டுகள் சென்ற பிறகும் இன்றும் நிற்கிறது.

சிடுக்கு மொழி என்ற மோஸ்தர் சுந்தர ராமசாமியிடமிருந்தே ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். இதை வெறுமனே எழுத்தாளர்களை வைத்து மட்டுமே பார்த்துவிட முடியாது, கூடாது. ஏனென்றால், செல்லப்பா போன்ற முன்னோடிகளின் காலத்தில் வெகுஜனப் பத்திரிகைகளிலும் தீவிர இலக்கியப் படைப்புகள் வந்து கொண்டிருந்தன. உதாரணமாக, விகடனில்தான் உ.வே.சா.வின் என் சரித்திரம் தொடராக வந்தது. ஆனால் சு.ரா.வின் காலத்தில் வெகுஜனப் பத்திரிகை, சிறுபத்திரிகை இரண்டுக்குமான இடைவெளி மிகப் பெரிதாக அதிகரித்து இரண்டுக்கும் எந்தச் சம்பந்தமுமே இல்லை என்ற நிலையை எட்டிவிட்டது. அசோகமித்திரன், தி. ஜானகிராமன், ஆதவன் போன்றவர்களது படைப்புகள் கணையாழி போன்ற இடைநிலைப் பத்திரிகைகளிலேதான் வர முடிந்தது. இதன் காரணமாக, சுந்தர ராமசாமிக்கும் அவரை வழிகாட்டியாகக் கொண்டவர்களுக்கும் தாங்கள் எந்தவிதத்திலும் வெகுஜனப் பத்திரிகையோடு தொடர்புடையவர்கள் அல்ல என்று எல்லா வகையிலும் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. நிரூபிக்க வேண்டியிருந்தது. சிறுபத்திரிகைகளின் பெயர்களைக்கூட சாமான்யரால் படிக்க முடியாதபடி அவர்கள் வடிவமைத்துக்கொண்டார்கள்.

ஒரு பக்கம் இலக்கியத்தின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இலக்கியத்துக்கே எதிராக இருந்தார்கள். இன்னொரு பக்கம் முற்போக்குவாதிகள் ஏழ்மையையும் பசி பட்டினியையும் மூலதனமாக்கிக் கதைத் தொழிற்சாலையிலிருந்து கதைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தார்கள். இது தவிர, பேராசிரியர் என்ற பண்டிதக் கூட்டம் வேறு சமகால இலக்கியத்துக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இலக்கியவாதிகள் இந்த மூன்று சாராரையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இந்த மூன்று சாராரிடமிருந்தும் தங்களைத் தனித்தவர்களாகவும் புத்திஜீவிகளாகவும் காட்டிக்கொள்ள வேண்டியிருந்தது. இந்த மேட்டிமைத்தனத்துக்கு (elitism) அடையாளமாகவே பிரக்ஞை, கசடதபற, , அஃக் போன்ற சிற்றிதழ்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.

ஆனாலும் தி. ஜானகிராமனும், அசோகமித்திரனும், ஆதவனும் தொடர்ந்து எளிமையாகவே எழுதிக்கொண்டு வந்தனர். ஆக, நகுலன், அசோகமித்திரன், ஆதவன் ஆகிய மூவருக்கும் தொடர்ச்சியாக, இவர்களையே முன்னோடிகளாகக் கொண்ட எனக்கு எளிமையாக எழுதுவதில் எந்தவித மனத்தடையோ தயக்கமோ ஏற்படவில்லை. ஆனால் இப்படி எழுதிய அசோகமித்திரனுக்கோ ஆதவனுக்கோ சிறுபத்திரிகை வட்டாரத்தில் பெரிதாக இலக்கிய அங்கீகாரம் இருக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அசோகமித்திரன் ஒரு போலி எழுத்தாளர் என்று தன் வாழ்நாள் பூராவும் சொல்லிப் போராடிக் கொண்டிருந்தார் வெங்கட் சாமிநாதன். சு.ரா. கோஷ்டியும் அசோகமித்திரனை அங்கீகரிக்கவில்லை.

கொண்டாடுபவர்களுக்குத் தேவையானது ஒரு பிம்பம். ஆள் உயிரோடு இருக்கக் கூடாது. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தார் தி. ஜானகிராமன். நீண்ட காலம் வாழவில்லை. படத்தை மாட்டி மாலையைப் போட்டார்கள்.

ஆக, இலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான். ஆனால் அந்த பிம்பம்தான் இன்றைய காலகட்டத்தின் மோஸ்தராக மாறிவிட்டது துரதிர்ஷ்டவசமானதுதான்.

இலக்கியம் என்றால் சிடுக்கு மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்பதே எதார்த்தத்துக்கு விரோதமாக, பொய்யாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு பிம்பம்தான்.

ஏனென்றால், இந்தச் சிடுக்கு மொழி மோஸ்தரில் எழுதுபவர்கள் முன்னோடிகளைக் கற்கவில்லை என்பது என் பிரதானக் குற்றச்சாட்டு. நான் மேலே குறிப்பிட்ட முன்னோடிகளைப் படித்த பிறகு இந்த எழுத்தாளர்கள் சிடுக்கு மொழியைத் தேர்ந்தெடுத்தார்கள் என்றால் வரவேற்பேன். ஆனால், எழுத வரும் எந்த ஒரு இளைஞரைக் கேட்டாலும் அவர் செல்லப்பா மற்றும் க.நா.சு.வின் புனைவிலக்கியத்தைப் படிக்காதவர்களாகவே இருக்கிறார்கள். செல்லப்பாவின் ஜீவனாம்சமும், க.நா.சு.வின் அசுர கணம், பித்தப்பூ, ஒருநாள், பொய்த்தேவு போன்ற நாவல்களும் புதிதாக எழுத வருபவர்களுக்குச் சவாலாக விளங்கக் கூடியவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவர்கள் ஜே.ஜே. சில குறிப்புகளிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். அதனால்தான் சிடுக்காக எழுதுவது வெறும் மோஸ்தராக எஞ்சிவிடுகிறது.

அய்யனார் விஸ்வநாத்: தமிழ் வாசகர்களுக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுத் தளம் போன்றவை குறித்தான அறிதல் உங்கள் வழியாகத்தான் சாத்தியமானது. இந்த தேசங்களின் நிலக்காட்சிகள், வரலாறு, தொன்மம் ஆகியவற்றிலிருந்து மொழி உச்சரிப்பு வரை கூர்மையாகக் கவனித்து அந்தந்தப் பிரதேசங்களில் கோலோச்சிய மற்றும் வாழ்ந்து வரும் ஆளுமைகளின் படைப்புகள், அவற்றின் உயரங்கள் குறித்தான விரிவான பார்வையை இன்று வரை தொடர்ந்து தமிழ் வாசகர்களுக்கு அறியத் தருகிறீர்கள். இதன் பின்னர் உள்ள உழைப்பு அசாத்தியமானது. எப்போதாவது உங்களுக்கு சலிப்பு தோன்றுவதுண்டா? ஏன் இவற்றையெல்லாம் இவ்வளவு ஆழமாக வாசித்து எழுத வேண்டும் என்கிற அலுப்பு ஏற்படுவதுண்டா?

சாரு: எப்போதும் கலைஞன் ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நிற்க வேண்டியவனாகிறான். அதுதான் அவனுடைய விதி. ஐரோப்பியர்களால் ஒரு முழு கண்டமே அழிந்ததை நாம் வரலாற்றில் பார்த்தோம். இன்றைய கொரோனா காலகட்டத்தில் அதைப் புரிந்துகொள்வதும் சுலபம். கொலம்பஸின் மூலமாகத் தொடங்கிய அந்தக் கொடூரமான இன அழித்தொழிப்பு எப்படி நடந்தது? ஐரோப்பியர் கொண்டு சென்ற கொடிய நுண்கிருமிகள் அங்கே வாழ்ந்த பூர்வகுடிகளை அழித்தன. எஞ்சியவர்கள் ஆயுதம் கொண்டு அழிக்கப்பட்டார்கள். பிறகு அந்த ஐரோப்பியர் தங்களுக்கு அடிமை வேலை செய்வதற்காக ஆஃப்ரிக்காவிலிருந்து கறுப்பின மனிதர்களைச் சங்கிலி போட்டுத் தூக்கிக்கொண்டு வந்தார்கள். அதன் கடைசி அத்தியாயத்தின் ஒரு பக்கத்தைத்தான் ஜார்ஜ் ஃப்ளாய்ட் படுகொலையில் கண்டோம். அதனால்தான் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திலும் அரசியலிலும் இசையிலும் மானுடவியலிலும் என் கவனம் சென்றது.

பெரூவின் மாச்சுபிச்சுவில் கால் வைத்தபோது அங்கே இருந்த மகோன்னதமான நாகரீகத்தை அழித்தொழித்த ஐரோப்பியரின் ஞாபகமே எனக்கு வந்தது. 1450-இல் மாச்சுபிச்சுவில் நிர்மாணிக்கப்பட்ட இன்கா நாகரீகம் நூறு ஆண்டுகளில் அழிந்து போனது ஐரோப்பியரின் வெடிமருந்துகளால் அல்ல. அவர்கள் கொண்டு சென்ற பிளேக் கிருமியினால். ஆனால் ஐரோப்பியர் பதிலுக்குச் சிவப்பிந்தியப் பூர்வகுடிகள் மனிதக் கறி உண்பவர்கள், காட்டுமிராண்டிகள் என்று பொய்க்கதை கட்டிவிட்டார்கள். இந்த வரலாற்று ஒடுக்குமுறைதான் திரும்பத் திரும்ப என்னை லத்தீன் அமெரிக்க நாடுகளின் பக்கம் ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.

சீலேயின் சாந்த்தியாகோ நகரின் ஒரு தெருவில் உள்ள ஒரு காஃபி பாரில் என் பயண வழிகாட்டி ரொபர்த்தோவுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறேன். சாந்த்தியாகோ தெருக்களில் எய்த்திய (Haiti) ஆண்களும் பெண்களும் இமிடேஷன் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். போலீஸ் வந்தவுடன் சாமான்களை அள்ளிக்கொண்டு ஓடுகிறார்கள். வெனிசுவலா மற்றும் அர்ஜெண்டீனியப் பெண்கள் அரைகுறை ஆடையுடன் எங்களை உரசியபடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண் குளிர்கிறது என்கிறாள். வெளியே பூஜ்யம் டிகிரி குளிர். உள்ளே இருபது டிகிரி. அவளுடைய வெற்று உடம்பில் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதைப் பார்க்க முடிகிறது. என்ன கொடுமையான வேலை இது என்று சலித்துக்கொள்கிறாள். எல்லோரிடமும் இந்தத் துயரைச் சொல்ல மாட்டாள். எழுத்தாளன் என்பதால் பகிர்ந்துகொள்ள விரும்புகிறாள். ஏனென்றால், மற்றவர்களுக்கு அவள் ஒரு போகப்பொருள். அங்கே அவள் சிரித்துத்தான் ஆக வேண்டும். எழுத்தாளன் அப்படி அல்ல. பசிக்கிறது என்கிறாள். கேக் வாங்கிக் கொடுத்தபோது பத்து நாள் பட்டினி கிடந்தது போல் முழுங்கினாள். இப்படிப்பட்ட உல்லாச விடுதிகள் வட அமெரிக்காவிலும் இருக்கலாம். ஆனால் தென்னமெரிக்கக் கண்டம் முழுக்கவுமே இப்படித்தான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது. தேவலோகத்து ரம்பை போன்றிருந்த ஒரு பெண் பசிக்கிறது என்று சொல்லக் கேட்டது எனக்கு முதல் முறை.

சமயங்களில் குளிர் பூஜ்யத்தையும் தாண்டிக் கீழே போனது. குளிக்கும்போதுகூட வெந்நீர் வரவில்லை. இத்தனைக்கும் உயர்தர ஓட்டல். எப்படி நீங்கள் வீட்டில் சமாளிக்கிறீர்கள் என்று ரொபர்த்தோவிடம் கேட்டேன். வீட்டைச் சூடாக்கிக்கொள்ள ஹீட்டர்கூடக் கிடையாது என்றார். போர்வையும் ஒயினும்தான்.

இதைப் போலவேதான் அரபி மக்களின் மீதும் வட அமெரிக்க ஊடகங்களும் ஒட்டு மொத்த சர்வதேச ஊடகங்களும் சமூகங்களும் வெறுப்பை வீசிக் கொண்டிருக்கும்போது, அந்த மக்களின் குரலை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு எளிய பணியைச் செய்பவன் ஆகிறேன். மொராக்கோவிலும் அல்ஜீரியாவிலும் துனீஷியாவிலும் உள்ள மக்களின் குரலை உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு தமிழனிடம் எடுத்துச் செல்லும் அஞ்சல் ஊழியனாகப் பணி புரிவதில் எப்போதுமே உங்களுக்கு அலுப்பு ஏற்படாது. ஏனென்றால், உங்களின் முகம் தெரியாமல் உங்களுக்காக சவூதி அரேபியாவின் அப்துர்ரஹ்மான் முனிஃப் என்ற எழுத்தாளன் உருவாக்கி வைத்த உலகம் இருக்கிறது. அந்த உலக மாந்தருக்கு நீங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்கிறீர்கள். அவர்கள் உங்களுக்கு நன்றி செலுத்துகிறார்கள்.

இஸ்தாம்பூல் நகரில் கலாட்டா டவரின் மீது ஏறி நின்றுகொண்டு ஓர்ஹான் பாமுக்குக்கு நீங்கள் நன்றி சொல்வதைப் போல. அய்யனார் என்ற தமிழ் எழுத்தாளனை ஓர்ஹான் பாமுக் அறிந்திருக்க மாட்டான். அது பற்றி நமக்குக் கவலையும் இல்லை. ஆனால் நாம் தனியாக இல்லை. வரலாறு முழுக்கவும் தொடர்ந்து வரும் ஒரு நீண்ட தொடர் ஓட்டத்தில் நீங்களும் நானும் எப்படித் தனியாக இருக்க முடியும்?

கணேஷ் பாபு: நவீனத் தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றிப் பல எழுத்தாளர்களும் விமர்சகர்களும் அறியப்பட்ட பெயர்களையே சொல்லிக்கொண்டிருந்தபோது ந. சிதம்பர சுப்பிரமணியன் குறித்தும் அவரது மண்ணில் தெரியுது வானம் நூலைக் குறித்தும் இன்றைய வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய முதல் எழுத்தாளர் நீங்களாகத்தான் இருப்பீர்கள் என்று நினைக்கிறோம். இன்று அதிகம் அறியப்படாத படைப்பாளிகளான சார்வாகன், ஜெயந்தன், கோபி கிருஷ்ணன் போன்றவர்களைக் குறித்தும் நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். அறியப்படாமல் போன இத்தகைய எழுத்தாளர்களை மீண்டும் வாசக கவனத்துக்குக் கொண்டுவந்த உங்களின் முயற்சிக்குப் போதிய வரவேற்பு இருக்கிறதா? அதற்கான எதிர்வினை எப்படியிருந்தது என்பதைக் குறித்துச் சொல்ல முடியுமா?

சாரு: ஜெயந்தன் பற்றி எழுதவில்லை. ஏனென்றால் அவரை நான் படித்ததில்லை. அதேபோல் அஸ்வகோஷ் பற்றியும் எழுதவில்லை. இப்படி எழுதாதவர்களே பலர் இருக்கிறார்கள். பழுப்பு நிறப் பக்கங்கள் மூன்று தொகுதிகள் வந்தன. ஆனால் கவனம் பெற வேண்டிய அளவுக்கு அவை கவனிக்கப்படவில்லை. அதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்துகொள்ள விரும்புவோருக்கு அந்த மூன்று தொகுதிகளும் அடிப்படையான அறிமுகத்தைக் கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அய்யனார் விஸ்வநாத்: நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் என்கிற உங்கள் சிறுகதை அறிவியல் புனைவுகளை எழுதிப் பார்க்க விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்க வேண்டிய ஒன்று. 1993ஆம் வருடம் முன்றில் இதழில் இந்தக் கதை பிரசுரமாகி இருக்கிறது. இப்போது வாசித்தாலும் சவாலாக இருக்கும் இந்தக் கதையை எப்படிப்பட்ட மனநிலையில் எழுதினீர்கள்? அப்போது எம்மாதிரியான எதிர்வினைகளை இந்தக் கதை உருவாக்கியது என்பதையும் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. மேலும், தமிழில் எழுதப்பட்ட மரபான கதை வடிவத்தை உடைக்கும்போது எழுதுபவர் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன என்பதைக் குறித்துப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

சாரு: பொதுவாகத் தமிழ் இலக்கியச் சூழல் பற்றிய எதிர்மறையான எண்ணங்களையே கொண்டிருக்கும் எனக்கு உங்கள் கேள்விக்கு மகிழ்ச்சியான பதிலையே கொடுக்கும்படியான எதிர்வினைகள்தான் அந்தக் கதைக்கு நேர்ந்தன. ஆச்சரியகரமாகப் பலருக்கும் அந்தக் கதை பிடித்துப் போயிற்று. பலரும் அதை ஒரு உண்மையான புத்தகத்தைப் பற்றிய ஒரு உண்மையான மதிப்புரை என்றே நினைத்தார்கள். ஒரு எழுத்தாளர் என் அலுவலகத்துக்கே வந்து அந்தக் குறிப்பிட்ட புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டார். ஒருத்தருக்குக்கூட அது புனைவு என்றே தெரியவில்லை. என் கதைகளிலேயே மாபெரும் வெற்றி அடைந்த படைப்பு என்று அந்தக் கதையையே குறிப்பிடுவேன்.

அந்தக் கதையை எழுதும்போது நான் குடும்பச் சூழலில் இல்லை. தனியாக இருந்தேன். இப்போதும் எனக்குப் பூரணமான தனிமை கிடைத்தால் அது போன்ற இருபது கதைகளை எழுத முடியும். குடும்பச் சுவர்களுக்குள் உட்கார்ந்து கொண்டு அப்படிப்பட்ட கதைகளை எழுத இயலாது. அதாவது, அந்தக் கதையை எழுதும்போது – சுருக்கமாகச் சொன்னால் – ஒரு ட்ரக் அடிக்டின் மனநிலையில் இருந்தேன். நான் ட்ரக்கைத் தொட்டதுகூட இல்லை. பார்த்ததுகூட இல்லை. நான் மனநிலையைச் சொல்கிறேன். அந்த மனநிலை குடும்பத்துக்குள் சாத்தியம் இல்லை. நம்மை கவனித்துக்கொள்ள ஒருவர் அன்பைக் குடம் குடமாக வைத்துக்கொண்டு நம்மைச் சுற்றி வளைய வரும்போது இம்மாதிரி கதைகள் சாத்தியம் இல்லை.

ஆனால் மரபான கதை வடிவங்களை உடைக்கும்போது – என் அனுபவத்தைச் சொல்கிறேன் – நான் நான்–லீனியர் கதைகளை எழுதியபோது அத்தனை பேரும் அதைப் படித்தார்கள். விவாதித்தார்கள். ஆனால் ஒரு வார்த்தைகூட என் பெயரைச் சொல்லவில்லை. பொதுவாகப் பேசுவார்கள். பொதுவாக எதிர்ப்பார்கள். எழுதியவனுக்கு அங்கீகாரமே கிடைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். நேரடியாகத் தாக்க மாட்டார்கள். தாக்கினால் பெரிய ஆள் ஆகி விடுவேன் என்பதால் Ignore செய்வார்கள். பெயரைக் குறிப்பிட மாட்டார்கள். அப்படியாகத்தான் எதிர்கொள்வார்கள். உங்கள் இருப்பையே புறக்கணிப்பின் மூலம் காலி செய்வார்கள். உங்களுக்கும் இது அனுபவமாகி இருக்கும். அதனாலேயே நான் மூர்க்கமாக என்னைப் பற்றி நானே பிரஸ்தாபித்துக்கொண்டேன். என்னை நானே பிரபலப்படுத்திக்கொண்டேன். நீ என் பெயரை எழுதாவிட்டால் நான் பத்து முறை எழுதுவேன் என்றேன். இப்படித்தான் நம்மை நாம் நிலைநிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. பிறகு வரலாறு நம்மை நோக்கி ஓடி வரும்.

அரூ: மேற்கில் அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே பல மோதல்கள் நிகழ்ந்துள்ளன. ஒப்பீட்டளவில், கிழக்கில் இவ்விரண்டிற்கும் இடையே பெரிய சச்சரவுகள் இல்லை. மத நம்பிக்கைகளுக்கு எதிரான மறைமுகப் புரட்சியே மேற்கின் அறிவியல் புனைவா?

சாரு: மேற்கின் மதம் எப்போதுமே அறிவியலுக்கு எதிராக இருந்திருக்கிறது. கலிலியோ ஒரு மகத்தான உதாரணம். அதனால்தான் கலிலியோ பற்றி சற்று விஸ்தாரமாகவே நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும் கதையில் பேசியிருப்பேன். இந்திய மரபு அவ்வளவு இறுகிப் போனதாக இல்லை. இங்கே விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒன்றுக்கொன்று விரோதமாக இல்லை. இந்தியா மட்டும் அல்லாமல் ஆசிய மதங்கள் எல்லாமே அப்படித்தான் இருந்தன.

ஆனால் மேற்கில் எல்லாவற்றையும் பதிவு செய்யும் பழக்கம் இருந்தது. இந்தியாவில் மறைத்து மறைத்து வைத்தார்கள். கிரேக்கத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிலேயே ஒருவர் அறிவியல் புனைவில் இன்றளவும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நாவலை எழுதிவிட்டார். அறிவியல் புனைவில் ஆர்வம் உள்ள அத்தனை பேரும் படிக்க வேண்டிய ஒரு நாவல் அது. தலைப்பு: ஒரு உண்மைக் கதை. எழுதியவர் Lucian. கி.பி. 125 – 180. இவர் எழுதிய சுமார் 80 புத்தகங்கள் இப்போதும் கிடைக்கின்றன என்றாலும் ஒரு உண்மைக் கதையைத்தான் முதல் அறிவியல் புனைவு நாவல் என்கிறார்கள். இதில் வரும் நாயகன் நிலவுக்கெல்லாம் செல்கிறான்.

ஒரு உண்மைக் கதை | ஓவியம்: William Strang

நாம் லூசியனிடம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், லூசியனின் நாவலில் அகப்பட்டுக்கொள்ளாத அந்தக் காலத்துப் பிரமுகரே இல்லை – ஹோமர் உட்பட. எல்லோரையும் கிண்டல் செய்து தீர்த்திருக்கிறார் லூசியன். ஆனால் இந்தியப் பாரம்பரியத்தில் ஆன்மீகமும் விஞ்ஞானமும் ஒன்றாகப் பயணித்தன. அகத்தியர், போகர், கோரக்கர் என்று பல சித்தர்கள் இருந்திருக்கிறார்கள். இன்றைய அர்த்தத்தில் இவர்களெல்லாம் விஞ்ஞானிகளே ஆவர். ஆனால் இந்திய மதம் இவர்களை வணக்கத்துக்கு உரியவர்களாக மதித்தது. கோவில்களில் சிலையாக்கி வணங்கியது. சமீப காலம் வரை பண்டிதர் என்று சொல்லப்பட்டவர்கள் உடல்கூறு வல்லுனர்களாக இருந்தது நமக்குத் தெரியும். இங்கே விஞ்ஞானமும் தாந்த்ரீகமும், Mythologies-உம் வரலாறும், ஃபாண்டஸியும் இலக்கியமும் எல்லாமே ஒன்றுக்குள் ஒன்றாகப் பிணைந்திருந்தது. ஆனால் மேற்கைப் போல அறிவியல் இலக்கியப் புனைவாக இங்கே மாறவில்லை. உதாரணமாக, கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை எடுத்துக்கொள்வோம். ஆதி சங்கரர், அருணகிரிநாதர் எல்லாம் இதைச் செய்திருக்கிறார்கள். இது விஞ்ஞானம் என்கிறார் பதஞ்சலி. நாம் இதை ஃபாண்டஸி என்கிறோம். எல்லாம் மேஜிகல் ரியலிஸக் கதைகளாக நம்மிடம் உள்ளனவே தவிர அறிவியல் புனைவாக மாறவில்லை. இதேதான் ரஸவாதம் என்னும் கலையும். இரும்பைப் பொன்னாக்கும் விஞ்ஞானம். எல்லாமே குறியீட்டு மொழிகளால் எழுதப்பட்டு இன்று யாராலும் decode செய்யப்பட இயலாமல் போய்விட்டன.

ஒரு நல்ல ஆய்வாளனுக்குக் கிழக்கின் தொன்மங்களிலிருந்து அள்ள அள்ளக் குறையாத அறிவியல் புனைவுகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

அரூ: மேற்கில், அறிவியல் புனைவு எட்டிய தரத்தைத் தற்போது இந்திய மொழி இலக்கியங்களில் காண முடிகிறதா? இல்லையெனில் இதற்கான காரணங்களென எவற்றை நினைக்கிறீர்கள்?

ஒரு நல்ல ஆய்வாளனுக்குக் கிழக்கின் தொன்மங்களிலிருந்து அள்ள அள்ளக் குறையாத அறிவியல் புனைவுகள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

சாரு: ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி இலக்கியத்தைப் போல் இந்திய மொழி இலக்கியத்தில் எனக்குப் பரிச்சயம் இல்லை. படித்த அளவில் இந்திய மொழி இலக்கியம் என்னைப் பெரிதாக ஈர்ப்பதாகவும் இல்லை. இதற்குப் பொருள் இங்கே எதுவும் இல்லை என்று சொல்வதாகாது. எனக்குப் பரிச்சயம் இல்லை; அது பற்றிய குற்ற உணர்வுடன் கொஞ்சம் நெருங்கினால் மிகப் பிரபலமான நூல்கள் என் ரசனைக்கு ஏற்புடையதாக இல்லை. இந்தியாவில் எழுதப்படும் ஆங்கில இலக்கியம் உட்பட இதுதான் என் அனுபவம். மற்றவர்கள் இதற்கு மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கலாம். அதை நான் மதிக்கிறேன் ஆனால் என்னுடைய கருத்து இதுதான். உலகம் முழுவதும் பிரபலம் ஆன சாதத் ஹஸன் மாண்ட்டோ கூட என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. அவரைவிட மிகப் பிரமாதமான கதைகளை அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். நமக்கு நெருக்கமாக உள்ள மலையாளத்தில் ஸக்கரியா எனக்குப் பிரியமானவர். அதனால் அறிவியல் புனைவு ஏன் இந்தியாவில் உருவாகவில்லை; எழுதப்படவில்லை என்று சொல்ல எனக்குத் தகுதி இல்லை என்றே நினைக்கிறேன். இந்திய மொழி இலக்கியத்தில் நன்கு பரிச்சயம் உள்ளவர்கள் இதற்குப் பதில் சொல்லலாம். எனக்குத் தெரிந்தவரை இந்திய எழுத்தாளர்கள் இன்னும் தமது பாரம்பரியப் பார்வையிலிருந்தே வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன். இந்திய எழுத்தாளர்கள் ஒரு நூற்றாண்டு பின்னே இருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. நேரில் சந்தித்தால்கூட, சென்ற நூற்றாண்டு ஆசாமிகளிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தை அவர்கள் சந்தித்ததே இல்லை போல் தெரிகிறது. நம் வீடுகளில் தொண்ணூறு வயதைக் கடந்த ஒரு தாத்தா இருப்பார் இல்லையா? அந்தத் தாத்தாவைப் போல் இருக்கிறார் இந்திய எழுத்தாளர். ஒரு பத்தொன்பது வயது கல்லூரி மாணவ மாணவியிடம் அவரால் பேச முடியுமா என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அந்த இளம் தலைமுறையை அவர் சந்தித்திருக்கவே வாய்ப்பு இல்லை. நான் பங்கேற்கும் இலக்கியச் சந்திப்புகளில் நாற்பது வயதுக்கு மேற்பட்ட இந்திய எழுத்தாளர்கள் பேசும் பேச்சை சகிக்க முடிவதில்லை. கேரளத்தின் சச்சிதானந்தன் மட்டுமே விதிவிலக்கு.

சுருக்கமாகச் சொன்னால், இந்திய எழுத்தாளர் பாரம்பரியத்தின் தளையில் சிக்குண்டு கிடக்கிறார். நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்று கேட்டால், என்னிடம் தெளிவான பதில் உண்டு. எனக்குத் துப்பறியும் கதை எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டு. அதேபோல் குழந்தைகள் கதை, Roald Dahl போல soft porn கதைகள், ஜார்ஜ் பத்தாய் (Georges Bataille) போல hard porn கதைகள், மாயாஜாலக் கதைகள், வரலாற்று நாவல், கிராஃபிக் நாவல் என்று பலவிதமாக எழுதிப் பார்க்கும் ஆசை உண்டு. ஒவ்வொன்றாகத்தான் செய்ய வேண்டும்.

செல்வேந்திரன்: தொன்மங்களை மீட்புருவாக்கம் செய்யும் படைப்புகள் — அது தீவிர இலக்கியமாகட்டும் அல்லது பல்ப் சீரிஸாகட்டும் — இந்தியாவில் பெருவரவேற்பு அடைகிறது. நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சாரு: இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் இந்திய மனம் தொன்மங்களில்தான் ஊறிக் கிடக்கும். சமீபத்தில் ஆதித்ய ஹ்ருதயம் என்ற அருமையான சம்ஸ்கிருத ஸ்லோகங்களைக் கேட்க நேர்ந்தது. அற்புதமான மந்திரங்கள். சூரியனை நமஸ்கரிக்கும் 31 பாடல்கள். இது எதில் வருகிறது என்று கேட்டேன். வால்மீகி ராமாயணம். இந்த ஆதித்ய ஹ்ருதயத்தை தினந்தோறும் ஜெபித்தால் கொரோனாவை விரட்டிவிடலாம் என்றார் என் ஆசிரியர். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. மந்திரங்களுக்கு அந்த சக்தி இருக்கிறது என்று தாந்திரீகம் பயின்ற நான் நம்புகிறேன்.

மஹாபாரதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப எழுதலாம். அப்படி எழுதுபவன் வியாஸன். வியாஸனின் ஆன்ம நிழல் படிந்தவன் அவன்.

இப்படியாக இந்திய வாழ்க்கை முற்று முழுதாகப் பாரம்பரியத்தில் ஊறிக் கிடக்கிறது. தொன்மங்களை நீக்கிவிட்டால் இந்தியா இல்லை. அதனால் தொன்மங்களைத் திரும்ப எழுதினால் அதைவிட வரவேற்பு வேறு யாருக்கும் இல்லை. மஹாபாரதத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்ப எழுதலாம். அப்படி எழுதுபவன் வியாஸன். வியாஸனின் ஆன்ம நிழல் படிந்தவன் அவன். இது இந்துத்துவ மீட்டுருவாக்கமும்தான். அதை நான் மறுக்க மாட்டேன். அது அப்படித்தான். ஆனால் அதை நான் தேர்வு செய்ய மாட்டேன். ஆனால் அதற்குக் கிடைக்கும் வரவேற்பு வேறு எந்தப் புனைவுக்கும் கிடைக்காது. ஏனென்றால், தொன்மங்கள் இந்தியனின் மரபணுவில் கலந்து கிடக்கிறது. அதை இன்னும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மாற்ற முடியாது. இன்னும் பாகவதம் இருக்கிறது. அதை வைத்துக்கொண்டு ஒருவர் ஆயிரக்கணக்கான பக்கங்களை எழுதலாம். என் புத்திரனைக் கொன்ற நீ புத்திர சோகத்தினால் வருந்துவாய் என்று அந்தக முனி தசரதனுக்குக் கொடுத்த சாபம் உண்மையில் வரமா சாபமா? இப்படி லட்சக்கணக்கான கதைகள் கிடக்கின்றன. இதை இந்திய எழுத்தாளன் தவிர்க்க முடியாது. இது அவனுக்கு வரமா சாபமா? எனக்குத் தெரியவில்லை.

செல்வேந்திரன்: எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி யதார்த்தக் கதைகளையே எழுதி வாசித்துக்கொண்டிருப்பது எனும் அங்கலாய்ப்பு இருந்துகொண்டே இருக்கிறது. நியூயார்க்கர் போன்ற இதழ்களில் சமகாலத்தில் எழுதப்படும் படைப்புகளை வாசிக்கிறேன். திரைப்பட விழாக்களுக்குச் செல்கிறேன். டிவைஸ்களின் வழியாக வெப் சீரிஸூகள் பார்க்கிறேன். சிறுகதைகளாகட்டும், சினிமாவாகட்டும் நவீன நோக்கில் வாழ்க்கையையும் விழுமியங்களையும் மறுவரையறை செய்யும் படைப்புகள்தான் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அவை யதார்த்தத்தின் தளத்தில் கட்டப்பட்டுள்ளன. யதார்த்தவாதம்தான் எந்த இலக்கிய அலைக்கும் ஒடிந்துவிடாமல் நிற்கிறது போலத் தோன்றுகிறதே?

சாரு: என்னுடைய வாசிப்பும் வெப்சீரீஸ் அனுபவமும் வேறு மாதிரி சொல்கிறது செல்வேந்திரன். ஒருவேளை உங்களுடைய தேர்வு அப்படி இருக்கலாம். Game of Thrones, Gotham, Stranger Things, Mind Hunter, Marvel’s Daredevil, Sense8, Lucifer என்று நான் பார்க்கும் பெரும்பாலான வெப்சீரீஸ் எதார்த்தவாதக் கதைகளாக இல்லை. அப்படியே எதார்த்தவாதக் கதையாக இருந்தாலும் அதில் வரும் ஒன்றிரண்டு பாத்திரங்கள் பறவையைப் போல் பறக்கின்றன. அதுபோல் இன்னும் பல வேலைகளைச் செய்கின்றன.

வாசிப்பிலும் அதிகம் எதார்த்தவாதக் கதைகள் இல்லை போல்தான் தெரிகின்றன. சென்ற ஆண்டு சீலே சென்றிருந்தபோது ஒரு இளைய தலைமுறை சீலே எழுத்தாளரின் நாவலைப் பார்த்தேன். Alejandro Zambra. இப்போது ஸாம்ப்ராதான் அங்கே பிரபலம். Multiple Choice என்ற அந்த நாவல் முழுவதும் எப்படி இருந்தது என்றால், ஒரு கேள்வி, அதற்கு எட்டு ஒன்பது பதில்கள். வாசகர் ஒரு பதிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து ஒரு கேள்வி. எட்டு ஒன்பது பதில்கள். ஸீரோ டிகிரியில் ஒரு அத்தியாயம் அப்படி வரும். மல்ட்டிபிள் சாய்ஸ் நாவல் முழுவதுமே அப்படித்தான். இப்படி என்னென்ன விதமாகவோ வருகின்றன. எதார்த்தவாத எழுத்தைத் தமிழில்தான் அதிகம் பார்க்கிறேன்.

எனக்கு எதார்த்தவாதத்தின் மேல் எந்தப் புகாரும் கிடையாது. ஆனால் இங்கே அதில் சிகரம் தொட்டவர்கள் ஏராளம். சி.சு. செல்லப்பா, க.நா.சு., ந. சிதம்பர சுப்ரமணியன், கு.ப.ரா., தி. ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம், எஸ். சம்பத், அசோகமித்திரன், லா.ச.ரா. இவர்களைத் தாண்டி இவர்களால் கதை சொல்ல முடியுமா? ஜனனியையும், பாற்கடலையும் தாண்ட முடியுமா? முடிந்தால் நிச்சயம் படிப்பேன். பாராட்டுவேன்.

வாஸ்தவத்தில் எனக்கு ஒரு நல்ல இலக்கியத் தரமான சரித்திர நாவல், துப்பறியும் நாவல், அறிவியல் நாவல் படிக்க ஆர்வமாக இருக்கிறது. ஆனால் என்ன பிரச்சினை என்றால், அறிவியல் புனைவையும் வெண்முரசு மொழியில் எழுதுகிறார்கள். எங்கே போய் முட்டிக்கொள்வது என்று தெரியவில்லை. ஒவ்வொரு genreக்கு ஒவ்வொரு மொழி இல்லையா? அறம் கதையையும் வெண்முரசுவையும் அவர் ஒரே மொழியிலா எழுதியிருக்கிறார்? அந்த வித்தியாசம் தெரிய வேண்டாமா?

அரூ: இலக்கியம் பற்றிய உங்களின் சகல அனுமானங்களையும் உடைத்தெறிந்த படைப்பு எது?

சாரு: சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம்தான் என் இலக்கிய அனுமானங்கள் எல்லாவற்றையும் உடைத்து நொறுக்கிய படைப்பு. அப்படி ஒரு நாவலை என்னால் எழுதுவது பற்றிக் கனவுகூடக் காண முடியாது. அது எப்படி ஒரு மனிதனால் சாத்தியம் என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு பத்து கணினிகளை ஒருத்தன் தன் தலையில் கொண்டிருந்தால் மட்டுமே அப்படி ஒரு நாவல் சாத்தியம். அப்படி ஒரு மொழியை உலக மொழிகளிலேயே எந்த ஒரு நாவலிலும் எழுதிப் பார்த்திருப்பார்களா என்றே தெரியவில்லை. கடினமான எழுத்தாளர்கள் என தாமஸ் பிஞ்சனையும் ரொனால்ட் சுகேனிக்கையும் சொல்வேன். ஆனால் அவர்கள்கூட வெங்கடேசனின் அருகில் வர முடியாது. கடினமாக இருக்கும் அதே நேரத்தில் வாசிக்க சுவாரசியமாகவும் இருக்கிறது. ஆங்கிலத்திலோ வேறு எந்த ஐரோப்பிய மொழியிலோ இந்த நாவலை மொழிபெயர்ப்பது ஒரு சவாலாகவே இருக்கும். சில பக்கங்களில் இரண்டு பக்கங்களுக்குக்கூட முற்றுப்புள்ளி இல்லாமல் வாக்கியம் சர்ப்பத்தைப் போல் நீளும், இடையில் ஒரு அடைப்புக்குறி வரும், அது ஒன்றரைப் பக்கம் நீளும், பிறகு அடைப்புக்குறி முடிந்ததும் முன்பு விட்ட இடத்திலிருந்து பழைய வாக்கியமே தொடர்ந்து வரும். ஒரு சோதனை முயற்சியாக ஒரு மூன்று பக்கங்களை எடுத்துக்கொண்டு என் பாணியில் இதை எப்படிச் சொல்லலாம் என்று முயன்றேன். முடியவில்லை. அந்தக் கதையை அந்தப் பாணியில்தான் ஆசிரியர் யோசித்திருக்கிறார். அந்தப் பாணியில் மட்டும்தான் எழுத முடியும். வேறு சாத்தியமே இல்லை.

அந்த நாவலை வாசிப்பதே ஒரு தேர்ந்த இலக்கிய வாசகருக்கு சுவாரசியமான சவாலாக இருக்கும். அந்த நாவலைப் படிப்பது ஒரு அனுபவம். என் வாசிப்பு அனுபவத்திலேயே இப்படி ஒரு நாவல் இல்லை. அது என் சொந்த மொழியிலேயே அமைந்தது என் பாக்கியம்.

அரூ: தற்கால உலக இலக்கியத்தில் எம்மாதிரியான பரீட்சார்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன? அவற்றில் எவை தமிழிலும் நிகழ வேண்டும் என நினைக்கிறீர்கள்?

சாரு: உலக இலக்கியம் என்பது ஒரு கடல். அது பற்றியெல்லாம் கருத்து சொல்வது ஆகாத காரியம். ஆனால் இலக்கியம் பிரதானமாக உருவாகி வரும் உலக மொழிகளில் என்ன நடக்கிறது என்று சொல்லலாம். என்னுடைய மிக முக்கியமான முதல் அவதானம்: வெள்ளைக்காரர்களின் இலக்கியம் சல்லிக்காசு பெறாமல் போய்விட்டது. உலகின் அதிகார ஏணியில் அவர்கள் மேலே இருப்பதால் அவர்கள் சொல்வது செல்லுபடி ஆகிறது. நோபல் பரிசு ஏன் உலகப் புகழ் பெற்றதாக இருக்கிறது? அதன் பரிசுத் தொகை. இதைத் தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. ஐரோப்பாவில் இன்று உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான இலக்கியப் படைப்புகளைக் குப்பை என்றே சொல்லுவேன். அப்படி ஒரு குப்பைதான் 2014-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற பத்ரிக் மோதியானோ என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர். தமிழில் எழுதுகின்ற ஒரு மூன்றாம்தர எழுத்தாளனைவிட மட்டமான எழுத்தாளர். என் வாழ்நாளில் படித்த படு மட்டமான எழுத்தாளர் என்றால் அவர்தான். அவருக்கு எப்படி நோபல் கொடுத்தார்கள் என்றே எனக்குத் தெரியவில்லை. ஒரு நாவல்தான் இப்படி இருக்குமோ என்று வெவ்வேறு நாவல்களையும் படித்தேன். எல்லாவற்றிலுமே ஒரே பாணிதான். ஒருவன் தெரு முனையிலிருந்து சிகரெட் வாங்க ஒரு கடைக்குப் போகிறான் என்றால், அதற்கு ஒரு இருபது பக்கம். நனவோடை உத்தியெல்லாம் இல்லை. வெறுமனே நடந்து போகிறான். எதையும் யோசிப்பதும் இல்லை. அப்புறம் எப்படி இருபது பக்கம்? மொத்த நாவலே நூறு பக்கம்தான். உதாரணம் சொன்னால் இதைப் படிப்பதை நிறுத்திவிடுவீர்கள். இங்கிலாந்திலும் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. உம்பர்த்தோ எக்கோ ஒரு நல்ல சிந்தனையாளர். ஆனால் அவருடைய நாவல்களும் கொடூர சித்ரவதைதான். ஒரு தேவாலயத்தின் கதவை பத்து பக்கத்துக்கு வர்ணிக்கிறார். அதற்கு அந்த நாவலில் ஏதாவது அர்த்த முக்கியத்துவம் இருக்கிறதா என்றாலும் இல்லை.

ஆனால் ஃப்ரெஞ்சில் எழுதுகின்ற மெக்ரீப் எழுத்தாளர்கள் சிகர சாதனை செய்து கொண்டிருக்கிறார்கள். ஃப்ரான்ஸில் அகதியாய் வாழ்கின்ற, ஃப்ரெஞ்சை இரண்டாவது மொழியாகக் கொண்டிருக்கும் அல்ஜீரிய, மொராக்கோ, துனீஷிய எழுத்தாளர்களே அவர்கள். அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட அவர்கள் அரபியிலோ ஃப்ரெஞ்சிலோ எழுதுகிறார்கள். அரபியில் எழுதினாலும் ஆறே மாதத்தில் ஃப்ரெஞ்சில் வந்துவிடுகிறது. இப்படி நூறு மெக்ரிப் எழுத்தாளர்கள் பாரிஸில் இருக்கிறார்கள். எல்லாம் ஃப்ரெஞ்ச் காலனி ஆதிக்க நாடுகள். ஆனால் இங்கிலாந்தில் வாழும் நம் தமிழ் எழுத்தாளர்கள் இப்படி எதுவும் எழுதுவதாகத் தெரியவில்லை. ஃப்ரான்ஸின் புலம் பெயர்ந்த எழுத்தாளர்களும் அவர்கள் வாழும் ஃப்ரான்ஸ் தேசத்தில் தங்கள் அடையாளத்தைப் பதித்ததாகத் தெரியவில்லை. அல்ஜீரியாவைச் சேர்ந்த அஸியா ஜெப்பார் என்ற பெண் எழுத்தாளர் ஃப்ரான்ஸின் மிக உயர்ந்த இலக்கிய அமைப்பின் தலைவராக இருந்தார். லெபனானில் மட்டும் ஐம்பது உலகத் தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதில் நாற்பது பேர் பெண்கள். ஏன் இப்படி என்று லெபனானை நேரில் பார்த்த போதுதான் தெரிந்தது. லெபனானில் பெண்களின் சமூகப் பங்களிப்பே அதிகம். ஆண்கள் அங்கே குழந்தையைத் தூக்கிச் செல்பவர்களாகவும் டாக்ஸி டிரைவர்களாகவும் இருக்கிறார்கள்.

நாம் செய்ய வேண்டியது இப்போதைய அரபி இலக்கியத்தை வாசித்து அது நமக்குத் தரும் சவால்களை எதிர்கொள்வதுதான்.

அரூ: உங்கள் வாசிப்பில் அரபி இலக்கியத்தில் அறிவியல் புனைவு படைப்புகள் எவ்வாறு இருக்கின்றன? அவற்றிலிருந்து நீங்கள் பரிந்துரைக்கும் அறிவியல் புனைவு அல்லது பரீட்சார்த்த முயற்சி ஏதேனும்?

சாரு: அரபி இலக்கியத்தில் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் அறிவியல் புனைவு எதுவும் இல்லை என்பதோடு மட்டும் அல்லாமல் அது வெகுவிரைவில் சாத்தியப்படுவதற்கான சூழலும் அங்கே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்களின் கதைகள் ரத்தத்திலும் போரின் சிதைவுகளிலும் எழுதப்படுகின்றன. ஈரானில் ஒரு பெண் சொல்கிறாள், எங்கள் உடலைப் போர்த்தியிருக்கும் திரைகளை விலக்கினால் தீக்காயத்தினால் தீய்ந்திராத தோலைக்கொண்ட பெண்ணையே நீங்கள் பார்ப்பதரிது என்று. இத்தனைக்கும் உடல்களை அப்புறப்படுத்துவதில் தீயை விலக்குகின்ற மதம் இஸ்லாம். தீயினால் உடலைக் கருக்குவதோ மரணிக்கச் செய்வதோ இஸ்லாமில் தடுக்கப்பட்டது. ஆனாலும் ஈரானில் பல நூறு பெண்கள் தங்களை எரியூட்டிக்கொண்டு இறக்கிறார்கள். பலர் பிழைத்துக்கொள்கிறார்கள். அதனால்தான் அந்தப் பெண் அப்படிச் சொல்கிறாள்.

Abdellatif Laabi என்ற ஒரு மொராக்கோ எழுத்தாளர். பாரிஸில் வசிக்கிறார். அவருடைய நாவல் ஒன்று, Rue de Retour (திரும்பும் வழி என்று பொருள்). இது லாபியின் மொராக்கோ சிறை அனுபவங்களை வைத்து எழுதப்பட்ட சுயசரித நாவல். சிறையில் இவரை அரசருக்கு எதிரான புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்ட இவரது சகாக்களின் பெயர்களைக் கேட்டுச் சித்ரவதை செய்கிறார்கள். இத்தனைக்கும் லாபி ஒரு கல்லூரிப் பேராசிரியர். நேரடியாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவரும் அல்ல. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவர். இருந்தாலும் அத்தனை சித்ரவதைகளையும் பொறுத்துக்கொள்கிறார். அந்தச் சித்ரவதைகளை பதினைந்து இருபது பக்கங்களில் வர்ணிக்கிறார். அப்படி ஒரு நாவலை என் வாழ்நாளில் படித்ததில்லை என்றே சொல்வேன்.

இப்போது சொல்லுங்கள், இப்படி ஒரு சூழலில் அறிவியல் புனைவு சாத்தியமா? அறிவியல் புனைவு ஒரு லக்‌ஷுரி. அதற்குக் குறைந்த பட்சம், மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையான உயிர் தரித்திருக்க வேண்டும். உயிருக்கே உத்தரவாதம் இல்லாத சூழலில் அறிவியல் புனைவுக்கு எங்கே போவது?

அரூ: உங்களின் transgressive படைப்புகளை எவ்வாறு எடிட் செய்கிறீர்கள்? Second draft உருவாக்கும்போது, எதை வைக்கலாம் எதை நீக்கலாம் என எவ்வாறு முடிவு செய்கிறீர்கள்?

சாரு: ட்ரான்ஸ்கிரஸிவ் எழுத்து என்றெல்லாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. எழுதின பிறகு மற்றவர்கள் கொடுக்கும் அடைமொழி அது. ஒரு எழுத்து பற்றிய விவரணம். அவ்வளவுதான். இரண்டாம் படிவத்தை அல்லது மூன்றாம் படிவத்தை உருவாக்குவது எப்படியென்றால், நண்பர்களிடம் முதல் படிவத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கருத்து கேட்பேன். அவர்கள் எதையெல்லாம் நீக்கச் சொல்கிறார்களோ அதை இன்னும் விவரித்து எழுதுவேன். எதெல்லாம் நன்றாக இருக்கிறது என்கிறார்களோ அதையெல்லாம் சுருக்கிவிடுவேன். இப்படித்தான் இறுதிப் படிவம் உருவாகிறது.

அரூ: நீங்கள் எழுதியவற்றைத் தவிர, உங்கள் பார்வையில், தமிழில் வெளியான சிறந்த பரீட்சார்த்தப் புனைவுகள் பற்றிச் சொல்ல முடியுமா?

நண்பர்களிடம் முதல் படிவத்தைக் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கருத்து கேட்பேன். அவர்கள் எதையெல்லாம் நீக்கச் சொல்கிறார்களோ அதை இன்னும் விவரித்து எழுதுவேன்.

சாரு: நிறைய பேர் எழுதுகிறார்கள். ஆனால் இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லும் அளவுக்கு என்னை நான் தகுதியானவனாக ஆக்கிக் கொள்ளவில்லை. அதற்குத் தமிழில் சமகால எழுத்தைப் படிக்க வேண்டும். அதை நான் செய்வதில்லை. சில சமயங்களில் முயற்சி செய்வேன். அந்தப் பிரதி என்னை உள்ளே இழுக்காது. சென்ற ஆண்டு சென்னைப் புத்தக விழாவில் மூவாயிரம் ரூபாய்க்கு சமீபமாக வந்த சிறுகதைத் தொகுப்புகளையும் நாவல்களையும் வாங்கி வந்தேன். என்ன சொல்வது? சமர்ப்பணம் செய்யும் நிலையிலேயே அச்சுப் பிழை. ஒரு ஐரோப்பிய இயக்குநரின் பெயர் படு கோளாறாக வந்திருந்தது. வெறும் எழுத்துப் பிழையாக இருந்தால்கூட விட்டுவிடலாம். காந்தியை சாந்தி என்று எழுதலாமா? பின்னர், பின்னட்டையிலும் ஒரே அச்சுப் பிழை. தூக்கிக் கடாசிவிட்டேன். இந்த அச்சுப் பிழைகளையும் மீறி சில புத்தகங்களின் உள்ளே போனேன். வாக்கியங்களில் இலக்கணப் பிழை. சகிக்க முடியவில்லை. கமல்ஹாசன் அவருடைய ட்விட்டரில் போட்டுள்ள பாரதியார் வேஷம்தான் ஞாபகம் வந்தது. ஓடி வந்துவிட்டேன். எழுத்து என்றால், பா. வெங்கடேசன் மாதிரி சவாலாக இருக்க வேண்டும். சமீபத்தில் படித்துக் கொண்டிருப்பதில் குட்டி ரேவதி, எஸ். சண்முகம், பெருந்தேவி, அராத்து, பாலசுப்ரமணியன் பொன்ராஜ் ஆகியோர் என்னை மிகவும் ஈர்க்கிறார்கள்.

கணேஷ் பாபு: நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், பயணம், வாசிப்பு, இசை என்று பரந்துபட்ட தளங்களில் தங்களின் ரசனை விரிந்திருந்தாலும் ஒப்புநோக்க நவீன கவிதை குறித்துக் குறைவாகவே தாங்கள் எழுதியிருக்கிறீர்கள். நவீன கவிதை குறித்து உங்கள் பார்வையைப் பகிர முடியுமா?

சாரு: உண்மைதான். கவிதை பற்றி அதிகம் எழுதவில்லை. என்னவோ அது நிகழவில்லை. நான் ஒரு விமர்சகன் அல்ல என்பதால் இருக்கலாம். ஆனால் எனக்குப் பிடித்த பல கவிஞர்கள் இருக்கிறார்கள்.

கணேஷ் பாபு: நவீன இலக்கியத்தின் அழகியல் ரசனையைப் பற்றி எழுதும்போதெல்லாம் சுந்தர ராமசாமியின் பள்ளியைக் கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கிறீர்கள். எதனால் சு.ரா பள்ளியை (ஜெயமோகன் தவிர்த்து) நீங்கள் விமர்சிக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா?

சாரு: நான் அவர்களை விமர்சிப்பதே இல்லை. எனக்கு ஒத்து வராது என்றே சொல்கிறேன். தொனி விமர்சிப்பது போல் இருக்கலாம். ஆனால் நான் சொல்ல வருவது எனக்குத் தேநீர் பிடிக்காது, காப்பிதான் பிடிக்கும் என்று சொல்வதைப் போலத்தான். ஆனால் சு.ரா. பள்ளியின் இன்றைய மகத்தான ஆளுமை ஜெயமோகன் மட்டுமே. அவரது பள்ளி இந்து மரபு சார்ந்ததாக இருக்கிறது என்பது என் அவதானம், அவ்வளவுதான். என் கடவுள்தான் சிறந்த கடவுள், மாற்றான் கடவுள் மட்டம் என்று நான் சொல்ல மாட்டேன். மேலும், வாசிப்பு என்பதே மிகக் குறைந்து போன இன்றைய காலகட்டத்தில் எதிர்மறையான கருத்துகளைப் பகிர்வதே தவறு என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

அரூ: பழுப்பு நிறப் பக்கங்களில் பெண் படைப்பாளிகள் யாரும் இடம்பெறவில்லை. நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட காலகட்டத்தில் பெண் எழுத்தாளர்களின் படைப்புகளில் குறிப்பிடத்தகுந்தவையாக எதுவுமே இல்லையா?

சாரு: அப்படியெல்லாம் நான் ஆண் பெண் என்று பிரித்துப் பார்ப்பதில்லை. லா.ச.ரா.வும் அசோகமித்திரனும் தி.ஜானகிராமனும் திரும்பத் திரும்ப பெண்களைப் பற்றித்தானே எழுதினார்கள்? ஆனால் பெண்ணின் வாழ்வை பெண் எழுதுவது வேறுதான். தமிழில் அப்போது பெண் எழுத்தாளர்கள் எனக்குத் தெரிந்து அதிகம் பேர் இல்லை. அப்போது இலக்கிய வட்டாரத்தில் பிரபலமாக இருந்த அம்பையின் எழுத்தில் எனக்கு அவ்வளவாக ஈர்ப்பு இல்லை.

இது பற்றிக் கொஞ்சம் சொல்ல வேண்டும். எழுத்தாளர்களின் கருத்து முரண்பாடுகளை, பல்வேறு சிந்தனைப் பள்ளிகளை ’எழுத்தாளர்கள் அடித்துக்கொள்கிறார்கள்’ என்பதாகப் பாமரர்கள் புரிந்துகொள்கிறார்கள். பாமரர் என்றால் பொருளாதார, அதிகார மட்டத்தில் அல்ல; பெரும் விஞ்ஞானிகள், வேறு துறையில் வல்லுநர்கள், சாதனையாளர்கள் உட்பட. இலக்கியப் பரிச்சயம் சிறிதும் இல்லாததால் வெளியிலிருந்து எட்டிப் பார்த்து அப்படி நினைக்கிறார்கள்.

அம்பை கல்லூரி மாணவியாக இருந்தபோது கல்கியிலோ கலைமகளிலோ எழுதிய அந்திமாலை என்ற நாவல்கூட என்னிடம் இருக்கிறது. அந்த நாவலைப் பிறகு அம்பை disown பண்ணிவிட்டார். என்னைவிட அவர் வயதில் மூத்தவர் என்ற போதிலும் என் கல்லூரிப் பருவத்தில் அந்த நாவல் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. பிறகு அவர் பிரக்ஞை பத்திரிகையில் இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் வந்தபோது, அதில் உள்ள ஃப்ராய்டிய அடியோட்டத்தை விமர்சித்து, “அப்படியானால் கோபாலகிருஷ்ண நாயுடுவின் சாமான் சரியாக வேலை செய்திருந்தால் அவர் அத்தனை தலித்துகளையும் உயிரோடு எரித்திருக்க மாட்டார் என்று சொல்கிறாரா இ.பா.?” என்ற கேள்வியோடு எழுதிய கட்டுரையும் எனக்கு ஞாபகம் உண்டு. அப்போது நான் கல்லூரி மாணவன். சாமான் என்ற வார்த்தையையே சரோஜாதேவி புத்தகங்களை விடுத்து வெளியே – அதுவும் ஒரு தீவிர இலக்கியப் பத்திரிகையில் – அதுவும் ஒரு பெண் எழுதிப் பார்த்தபோது எனக்குக் கை காலெல்லாம் நடுங்கிவிட்டது. எதற்குச் சொல்கிறேன் என்றால், அம்பையை அவ்வளவு காலமாகப் பின் தொடர்கிறேன் என்பதற்காக. பிரக்ஞையில் பிரஸ்தாபக் கட்டுரை வந்தது 1970களின் இறுதியில் அல்லது 1980களின் துவக்கத்தில் என்று நினைக்கிறேன். கிராமத்தில் வளர்ந்து நகரத்துக்கு வந்த ஒரு 25 வயது இளைஞனுக்கு அந்தக் காலத்தில் சாமான் என்ற வார்த்தை ஒரு தீவிர இலக்கியப் பத்திரிகையில் ஒரு பெண் எழுதிப் படிப்பதை உங்களால் கற்பனை செய்ய முடிந்தால் அந்த மனநிலையைப் புரிந்துகொள்ளலாம். புரிகிறாற்போல் சொல்வதானால், இன்றைய தினம் மதுரையிலிருந்து சென்னைக்கு டாக்ஸி டிரைவராக வரும் ஒரு இளைஞனின் மனநிலைதான் அது. அதற்கப்புறம்தான் சிமோன் தெ பூவாவையும், Anais Ninஐயும் படித்தது. பெண்ணியம் பற்றிய மிகப் பெரிய திறப்பை அந்தக் காலத்தில் எனக்கு அளித்தது Germaine Greer என்ற ஒற்றைப் பெயர்தான். அவருடைய The Madwoman’s Underclothes என்ற தடித்த புத்தகத்தை அப்போதெல்லாம் பைபிளைப் போல் எப்போதும் கையிலேயே வைத்திருப்பேன்.

இப்படியாக ஆரம்பித்த அம்பையின் கதைகள் மீதான ஒவ்வாமை அதற்குப் பிறகு குறையவே இல்லாமல் போய்விட்டது. காரணம், ஆண்களின் மீதான வெறுப்பே அவர் கதைகளில் மையச்சரடாக ஓடுகிறது என்பதுதான். ஒரு கதையில் ஒரு பெண் தான் தன்னுடைய வாழ்நாளில் சுட்ட சப்பாத்தி எத்தனை இருக்கும் என்று எண்ணி மாய்கிறாள். அதைப் படித்தபோது எனக்கு அது ஒரு போலிப் பெண்ணியமாகத் தோன்றியது. என் அம்மா எத்தனை ஆயிரம் இட்லி சுட்டிருப்பார்கள்? ஆனால் என் நைனா எத்தனை ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிளை மிதித்திருக்க வேண்டும்? காலை ஆறு மணிக்கு ஒவ்வொரு மாணவ மாணவி வீட்டுக்கும் சென்று ட்யூஷன் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிறகு வீட்டுக்கு வந்து இட்லி. பிறகு ஸ்கூல். ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார். தனியார் பள்ளி. முஸ்லீம்கள் வாழும் ஊர். முஸ்லீம் பள்ளி. ஐந்து மணிக்கு ஸ்கூல் முடிந்து மறுபடியும் வீடு வீடாக ஒவ்வொரு மாணவ மாணவி வீட்டுக்கும் போய் ட்யூஷன். ஒருசேரப் படிப்பிக்க முடியாது. ஒரு மணி நேரத்தில் ஒரே ஒரு மாணவன் அல்லது மாணவிதான். ஏழு மணிக்கு நாகூரிலிருந்து நாகப்பட்டிணத்துக்கு ஐந்து கிலோமீட்டர் தூரம் ஒரு ஓட்டை சைக்கிளை மிதித்துக் கொண்டு போய் அவர்கள் ட்யூஷன் படிக்க வேண்டும். அந்தக் காலத்தில் ஈ.எஸ்.எல்.சி. என்கிற எலிமெண்டரி ஸ்கூல் லீவிங் சர்ட்டிஃபிகேட்டோடு – அப்போது எட்டாங்கிளாஸுக்கு ஈ.எஸ்.எல்.சி. என்று பெயர் – வெளியே வந்து ஒரு சாதா லெவல் டீச்சர் டிரெய்னிங் முடித்துவிட்டு ஒண்ணாங்கிளாஸில் வாத்தியாராகச் சேர்ந்ததால் எஸ்.எஸ்.எல்.சி.யையும் பிறகு அதற்குத் தோதான டீச்சர் ட்ரெய்னிங்கையும் முடிக்க வேண்டியிருந்தது. அதற்காக ஒரு ஏழெட்டு ஆண்டுகள் நாகப்பட்டிணத்துக்குப் போய் ட்யூஷன் படிக்க வேண்டியிருந்தது. ஏன் ஏழெட்டு வருடம் என்றால், அவ்வளவுதான் மூளை என்று நினைக்கிறேன். நைனாவை நான் சிறு வயதில் பார்த்ததே இல்லை. வீட்டுக்குத் திரும்ப நள்ளிரவு ஆகிவிடும். இதைவிட என் அம்மா ராணி போல் வாழ்ந்தார்கள் என்றே சொல்ல வேண்டும். எனக்கு என்னவோ என் அம்மாவுக்கு இருந்த சுதந்திரம் என் தங்கைகளுக்கு இல்லை என்று தோன்றுகிறது. இத்தனைக்கும் படித்து நல்ல வேலையில் இருந்து சம்பாதித்தவர்கள். அவர்களுக்கு இருந்த சுதந்திரம் அவர்களின் பெண்களுக்கு இல்லை என்பதையும் அவதானிக்கிறேன்.

திரும்பவும் அம்பைக்கு வருவோம். பெண்ணடிமைத்தனம் பற்றிய அவரது புரிதல் மிகவும் மேலோட்டமானது. ஆண்கள் மீது வன்மமும் வெறுப்பும் கொண்டது. இந்த வன்மமும் வெறுப்பும் சி.சு. செல்லப்பா, க.நா.சு., கு. அழகிரிசாமி, புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், லா.ச.ரா., தி.ஜ.ரங்கநாதன், கு.ப.ராஜகோபாலன், ந. முத்துசாமி, அசோகமித்திரன் என்று யாருடைய எழுத்திலும் காண முடியாது. இத்தனைக்கும் இவர்களில் பலர் பெண்களின் கதைகளை எழுதியவர்கள். இவர்களெல்லாம் ஆண்கள் என்று சொல்லி ஒதுக்கிவிட முடியாது. பெண்கள் எழுதவே இல்லை என்கிறபோது இவர்களாவது எழுதினார்களே?

அம்பையின் ஒரு கதையில் சாலையில் சிறுநீர் கழித்துக் கொண்டிருப்பவனைப் பார்த்து ஒரு பெண், “இவனுடைய ஆண்குறியை அறுத்து எறிய வேண்டும்” என்று சொல்லுவாள். ஆங்கில பயின்ற, நகர்ப்புறத்து, மேட்டுக்குடி, பிராமணப் பெண்ணின் மனநிலை இது. இதைத்தான் வன்மம், வெறுப்பு என்று குறிப்பிட்டேன். மாறாக, ஒரு பெண் எழுத்தாளர் இருக்கிறார். அவர் பெயரை இலக்கியச் சூழலில் யாரும் குறிப்பிடுவதில்லை. Most underrated எழுத்தாளர். காரணம், அவர் சிறுபத்திரிகைகளில் எழுதவில்லை. இந்திரா பார்த்தசாரதி, அசோகமித்திரன், ஆதவன் போல் இடைநிலைப் பத்திரிகைகளில் மட்டுமே எழுதியவர். இப்படி இருந்தால் இலக்கிய உலகில் உருப்படாத ஜாதகம் என்று பெயர். எப்போதும் சிறுபத்திரிகை உலகோடு தொடர்பில் இருந்தால்தான் உங்கள் பெயர் நினைவில் கொள்ளப்படும். அவர் எழுதிய பல கதைகள், குறுநாவல்கள் பெண்களின் கதை சொல்பவை. அவர்களின் தனிமையைச் சொல்பவை. யார் மீதான வன்மமும் வெறுப்பும் அவர் கதைகளில் பார்க்க முடியாது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதிய கதை ஒன்று இன்னமும் எனக்குப் பசுமையாக ஞாபகம் இருக்கிறது. ஒரு நகர்ப்புறத்துப் பெண் கிராமத்துக்குப் போகிறாள். ஒரு பெண் இசைக் கலைஞரைப் பேட்டி காண்பதற்காக. அந்தக் கதையிலிருந்து எனக்குக் கிடைத்த மனப்பதிவுகள் என்றும் மறக்க முடியாதவை. அந்தப் பெண் எழுத்தாளர் வாஸந்தி.

அம்பை, வாஸந்தி பற்றிச் சொல்லியிருப்பதால் சிவகாமி பற்றியும் குறிப்பிட வேண்டும். சிவகாமி ஏராளமாக எழுதியிருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன் கோயம்பத்தூரில் சிவகாமியின் நாவல் பற்றிப் பேசியிருக்கிறேன். சிவகாமியும் அப்போது அங்கே இருந்தார். அவருடைய முக்கியமான நாவல் பழையன கழிதலும். இதையும் இது எழுதப்பட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த நூறு நாற்காலிகள் குறுநாவலையும் (ஜெயமோகன்) நாம் ஒப்பிடலாம். பழையன கழிதலும் நாவலின் மற்றொரு manifestationதான் இந்தக் குறுநாவல். தலித் வாழ்க்கையில் எதுவும் இல்லை; தலித் வாழ்க்கை கேவலமானது, அருவருப்பானது. அதில் கொண்டாட்டங்கள் எதுவும் இல்லை. மிருகம் மாதிரி வாழ்கிறார்கள் என்று ஒரு தலித்தே சொல்வதாக நூறு நாற்காலிகளில் வரும். இதே வார்த்தையைத்தான் – ஆம், இதே வார்த்தையை – பழையன கழிதலும் நாவலின் நாயகியும் சொல்கிறாள். அவள் சிவில் சர்விஸ் பரீட்சைக்குப் படிப்பவள். வீட்டில் தந்தையும் தாயும் பகலிலேயே உறவு வைத்துக்கொள்வதை அவள் அறிய நேர்கிறது. சே மிருகங்கள் மிருகங்கள் என்று காறி உமிழ்கிறாள். இவ்வகையான பிராமண அணுகுமுறையே சிவகாமி எழுத்தின் அடிப்படையாக இருக்கிறது.

இப்போது குட்டி ரேவதியும் பெருந்தேவியும் நாவல்கள் எழுதினால் அடுத்த பழுப்பு நிறப் பக்கங்களில் அவர்கள் இருவர் பற்றியும் எழுதலாம்.

அரூ: உங்கள் பார்வையில் உலக இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் பெண்களின் பங்களிப்பு என்ன?

சாரு: இந்தக் கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாது. ஆறு மாதங்களுக்கு முன் சென்னையில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது நான் கண்ட ஒரு விஷயத்தை வாழ்நாளில் மறக்க இயலாது. ஆயிரம் பேர் குழுமியிருந்த ஒரு திரையரங்கில் இரண்டு மூன்று பெண்களை மட்டுமே பார்க்க முடிந்தது. அதிலும் பத்து மணிக் காட்சிகளில் ஒரு பெண்கூட இல்லை. வீட்டை விட்டு வெளியே வந்தால் உடம்புக்குப் பத்திரம் இல்லை என்ற சூழல். பகலில் வரலாமே என்றால், பகலிலும் வர முடியாத அளவுக்குக் குடும்பத்தில் நெருக்கடி. ஒரு பெண்ணுக்கான சுதந்திரமான வாழ்க்கையே எந்த இடத்திலும் இல்லை. கணவனோ தகப்பனோ சகோதரனோ உனக்கு எதுக்கு சினிமா என்றுதான் கேட்பான். சர்வதேசத் திரைப்பட விழா என்று சொன்னால், எது, இந்த சென்ஸார் பண்ணாம போடுவாங்களே, அந்த மாதிரி படமா என்பார்கள். இதுதான் புரிதல்.

சினிமாவை விடுவோம். இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், ஐம்பது பார்வையாளர் என்றால், இரண்டு பேர்தான் பெண். சமூக வெளியில் பெண்களே இல்லை. இதுதானே இலக்கியத்திலும் பிரதிபலிக்கும்? கவிதையில் மட்டுமே ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த பெண்கள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உரைநடைக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்.

பெண்கள் தங்களைப் பற்றி எழுத வேண்டும். அவர்களின் உடல் அவர்களிடமிருந்து எப்படிப் பறிக்கப்பட்டதோ அதை அவர்கள் மீட்டெடுக்க வேண்டும். பௌதீகரீதியாகவும், பிரதியிலும். அவர்களின் உடலே பிரதியாக மாற வேண்டும். இதை எந்தவொரு வெளி சக்தியும், அறமும், அறக் கோட்பாடுகளும், மதமும், ஸ்தாபனமும், கடந்த காலமும், இடமும், கலாச்சாரமும், மொழியும் நிர்ணயிப்பதாக இருக்கக் கூடாது. இதற்கு அடிப்படையான ஆரம்ப வேலை கடந்த காலத்தை நிர்மூலம் ஆக்குவது. கடந்த காலத்தை அழித்தொழிப்பது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் பதினாறாம், பதினேழாம், பதினெட்டாம் நூற்றாண்டின் வெள்ளையின அடிமை வியாபாரிகளின் சிலைகளைக் கடந்த வாரம் (ஜூன் முதல் இரண்டு வாரங்கள், 2020) அடித்து நொறுக்கிக் கடலில் தூக்கி எறிந்தார்கள் அல்லவா, அதேபோல் பெண்கள் தங்கள் பழமையைத் தீ வைத்துக் கொளுத்த வேண்டும். ஏனென்றால், The Laugh of the Medusa என்ற நீண்ட கட்டுரையில் ஹெலன் சிஸூ (Helene Cixous) சொல்கிறார் – இந்தக் கட்டுரையைப் பெண் சுதந்திரத்தின் வரலாற்று அறிக்கை என்று சொல்லலாம் –

Men have committed the greatest crime against women. Insidiously, violently, they have led them to hate women, to be their own enemies, to mobilize their immense strength against themselves, to be the executants of their virile needs. They have made for women an antinarcissism! A narcissism which loves itself only to be loved for what women haven’t got! They have constructed the infamous logic of antilove.

I, too, overflow; my desires have invented new desires, my body knows unheard-of songs. Time and again I, too, have felt so full of luminous torrents that I could burst-burst with forms much more beautiful than those which are put up in frames and sold for a stinking fortune. And I, too, said nothing, showed nothing; I didn’t open my mouth, I didn’t repaint my half of the world. I was ashamed. I was afraid, and I swallowed my shame and my fear. I said to myself: You are mad! What’s the meaning of these waves, these floods, these outbursts? Where is the ebullient, infinite woman who, immersed as she was in her naivete, kept in the dark about herself, led into self-disdain by the great arm of parental-conjugal phallocentrism, hasn’t been ashamed of her strength? Who, surprised and horrified by the fantastic tumult of her drives (for she was made to believe that a well-adjusted normal woman has a… divine composure), hasn’t accused herself of being a monster? Who, feeling a funny desire stirring inside her (to sing, to write, to dare to speak, in short, to bring out something new), hasn’t thought she was sick? Well, her shameful sickness is that she resists death, that she makes trouble.

And why don’t you write? Write! Writing is for you, you are for you; your body is yours, take it. I know why you haven’t written. (And why I didn’t write before the age of twenty-seven.) Because writing is at once too high, too great for you, it’s reserved for the great-that is, for “great men”; and it’s “silly.” Besides, you’ve written a little, but in secret. And it wasn’t good, because it was in secret, and because you punished yourself for writing, because you didn’t go all the way; or because you wrote, irresistibly, as when we would masturbate in secret, not to go further, but to attenuate the tension a bit, just enough to take the edge off. And then as soon as we come, we go and make ourselves feel guilty-so as to be forgiven; or to forget, to bury it until the next time.

Write, let no one hold you back, let nothing stop you.

Now women return from afar, from always: from “without,” from the heath where witches are kept alive; from below, from beyond “cul- ture”; from their childhood which men have been trying desperately to make them forget, condemning it to “eternal rest.” The little girls and their “ill-mannered” bodies immured, well-preserved, intact unto them- selves, in the mirror. Frigidified. But are they ever seething underneath! What an effort it takes-there’s no end to it-for the sex cops to bar their threatening return. Such a display of forces on both sides that the strug- gle has for centuries been immobilized in the trembling equilibrium of a deadlock.

Here they are, returning, arriving over and again, because the un- conscious is impregnable. They have wandered around in circles, confined to the narrow room in which they’ve been given a deadly brainwashing. You can incarcerate them, slow them down, get away with the old Apartheid routine, but for a time only. As soon as they begin to speak, at the same time as they’re taught their name, they can be taught that their territory is black: because you are Africa, you are black. Your continent is dark. Dark is dangerous. You can’t see anything in the dark, you’re afraid. Don’t move, you might fall. Most of all, don’t go into the forest. And so we have internalized this horror of the dark.

She must write her self, because this is the invention of a new insurgent writing which, when the moment of her liberation has come, will allow her to carry out the indispensable ruptures and transformations in her history, first at two levels that cannot be separated.

a)Individually. By writing her self, woman will return to the body which has been more than confiscated from her, which has been turned into the uncanny stranger on display-the ailing or dead figure, which so often turns out to be the nasty companion, the cause and location of inhibitions. Censor the body and you censor breath and speech at the same time.

Write your self. Your body must be heard. Only then will the immense resources of the unconscious spring forth. Our naphtha will spread, throughout the world, without dollars-black or gold -nonassessed values that will change the rules of the old game.

To write. An act which will not only “realize” the decensored relation of woman to her sexuality, to her womanly being, giving her access to her native strength; it will give her back her goods, her pleasures, her organs, her immense bodily territories which have been kept under seal; it will tear her away from the superegoized structure in which she has always occupied the place reserved for the guilty (guilty of everything, guilty at every turn: for having desires, for not having any; for being frigid, for being “too hot”; for not being both at once; for being too motherly and not enough; for having children and for not having any; for nursing and for not nursing…) tear her away by means of this research, this job of analysis and illumination, this emancipation of the marvelous text of her self that she must urgently learn to speak. A woman without a body, dumb, blind, can’t possibly be a good fighter. She is reduced to being the servant of the militant male, his shadow. We must kill the false woman who is preventing the live one from breathing. Inscribe the breath of the whole woman.

b)An act that will also be marked by woman’s seizing the occasion to speak, hence her shattering entry into history, which has always been based on her suppression. To write and thus to forge for herself the antilogos weapon. To become at will the taker and initiator, for her own right, in every symbolic system, in every political process.

It is time for women to start scoring their feats in written and oral language.

ஒரு பெண் பொதுவெளியில் பேசுவது பற்றி சிஸு சொல்வதைப் பாருங்கள்.

Listen to a woman speak at a public gathering (if she hasn’t painfully lost her wind). She doesn’t “speak,” she throws her trembling body forward; she lets go of herself, she flies; all of her passes into her voice, and it’s with her body that she vitally supports the “logic” of her speech. Her flesh speaks true. She lays herself bare. In fact, she physically materializes what she’s thinking; she signifies it with her body. In a certain way she inscribes what she’s saying, because she doesn’t deny her drives the intractable and impassioned part they have in speaking. Her speech, even when “theoretical” or political, is never simple or linear or “objectified,” generalized: she draws her story into history.

மேலே கவனியுங்கள், ஒரு பெண் பொதுவெளியில் பேசும்போது அவள் பேசவில்லை. அவளுடைய நடுங்கும் உடலை முன்னே தூக்கிப் போடுகிறாள் என்கிறார் சிஸூ. அதைப் படிக்கும்போது எனக்கு அசோகமித்திரனின் இருவர் கதையும் சி.சு. செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலும் ஞாபகம் வருகின்றன. இருவரில் வரும் விதவைப் பெண் வாலா தமையன் வீட்டுக்கு வந்து வாயே பேசாமல் தமையனிடம் அடி வாங்கியே சாகிறாள். ஜீவனாம்சம் சுசீலா இன்னும் கொடுமை. கல்யாணம் ஆன நாலு மாதத்தில் பிறந்த வீடு வர வேண்டிய சம்பிரதாயப்படி கணவன் வீட்டிலிருந்து கிளம்பி வருகிறாள். அதுவரை அவள் தன் கணவனை சரியாகப் பார்த்ததுகூட இல்லை. ஒரு வார்த்தை பேசியது இல்லை. பிறந்த வீட்டுக்கு வந்திருக்கும்போது கணவன் இறந்துவிடுகிறான். கணவனுக்குக் கொள்ளி வைத்த பிறகுதான் தந்தியே வருகிறது. பிறந்த வீட்டிலேயேதான் இருக்க வேண்டியிருக்கிறது. மாமனாரும் மாமியாரும் அவளைத் தன் மகளைப் போல் பேணியவர்கள். அவர்களுக்கு ஜீவனாம்சம் பணம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறான் தமையன். நாவல் முழுவதும் சுசீலாவுக்குப் பேச்சே இல்லை. ஆண்டுகள் கழித்து மாமனாரும் இறந்த பிறகுதான் வாயைத் திறக்கிறாள் சுசீலா. இரண்டே வார்த்தைகள். நான் கிளம்புகிறேன். நாவல் முழுவதும் அவளுக்கு வார்த்தை இல்லை. பல நூற்றாண்டுகளாகத் தொடரும் மௌனம் அது.

இப்போதும் இந்தக் கொரோனா காலகட்டத்திலும் அதே மௌனம்தான். பெண் தன் கணவனோடும் குழந்தைகளோடும் இருபத்து நான்கு மணி நேரமும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் அனுபவம் அவளுக்கு மிகவும் புதியது. கிட்டத்தட்ட பங்கருக்குள் பதுங்கிக் கிடப்பது போல் உணரும் அப்படிப்பட்ட பெண்களின் கடிதங்கள் தினந்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த இறுக்கத்தை வெளியே சொல்லக்கூட முடியவில்லை. சொர்க்கத்தில் இருப்பதைப் போல நடிக்க வேறு வேண்டியிருக்கிறது. குரல்வளையை நெறிப்பது போல் உணர்கிறேன். நீ கொடுத்து வைத்தவள், இப்படி ஒரு கணவனா என்று உற்றமும் சுற்றமும் ஆச்சரியப்படுகிறது. நான் என்ன நினைக்கிறேன் என்பதைச் சொன்னால் அதைப் புரிந்துகொள்ளக்கூட இங்கே ஒரு ஆத்மா இல்லை. உனக்கு இங்கே என்ன குறை என்ற கேள்விதான் திரும்பத் திரும்பக் கேட்கப்படுகிறது. அந்த மௌனத்தைத்தான் சுட்டுகிறார் ஹெலன் சிஸூ.

எனக்கு இங்கே மெதூஸாவின் சிரிப்பு என்ற கட்டுரை முழுவதையுமே மேற்கோள் காட்டிவிட வேண்டும் என்று கை பரபரக்கிறது. ஃப்ரெஞ்ச் தெரிந்தவர்கள் தமிழ்நாட்டில் அநேகம் பேர் உண்டு. அதில் முக்கால்வாசிப் பேர் பெண்கள்தான். ஆனால் அவர்கள் எல்லோருமே இன்னமும் விக்தர் யூகோ, ஃப்ளெபர், பல்ஸாக் என்றே பஜனை பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்கும் கொஞ்சம் தள்ளி வந்து ஆல்பெர் கம்யு, சார்த்தர் என்ற பஜனை. ஹெலன் சிஸூ (Helene Cixous) (வயது 83), ஜூலியா க்றிஸ்தவா (Julia Kristeva) (வயது 78), லூய்ஸ் இரிகாரே (Luce Irigaray) (வயது 90) மூவரும் இவ்வளவு தளர்ந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தமிழ்நாட்டு ஃப்ரெஞ்ச் சூழலில் ஒரு பேச்சு இல்லை. உண்மையில் ஹெலன் சிஸூவின் மெதூஸாவின் சிரிப்பு தமிழில் மொழிபெயர்த்து வாசிக்க வேண்டிய ஒரு பெண்ணிய அறிக்கை.

ஹெலன் சிஸூ

மேலே குறிப்பிட்ட மூன்று பெண்ணியவாதிகளின் மற்றொரு விசேஷம், இவர்களது பெண்ணியம் வறட்டுத்தனமானதல்ல. ஃபூக்கோ, தெரிதா இருவரது தத்துவத்தில் இல்லாமல் போய்விட்ட “பெண் தன்மை”யைச் சேர்த்தவர்கள் இந்த மூவரும். உதாரணமாக, சிஸூ பெண்ணின் கருவுறுதல் என்ற தாய்மைக் கூறு பற்றி மிகவும் ஆச்சரியகரமான சிந்தனைகளை முன்வைத்திருக்கிறார். அமெரிக்கப் பெண்ணியவாதிகளைப் போல – உதாரணமாக கேத்தி ஆக்கர் (Kathy Acker), பெண் கருத்தரிக்க வேண்டியதில்லை, பெண்ணுக்கு ஆணே தேவையில்லை, ஒரு வைப்ரேட்டரே போதும் என்றெல்லாம் மட்டை அடி அடிக்கக் கூடியவர் கேத்தி ஆக்கர் – சிஸூ அப்படிப்பட்டவர் அல்ல. பழமையை வெடி வைத்துத் தகர்க்க வேண்டும் என்று சொல்லக்கூடிய சிஸூ, பெண்ணுக்கே உரிய தனிப்பட்ட குணாம்சங்களையும் சிலாகிக்கிறார். இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றிய அவரது ஆறு மணி நேர நாடகத்தில் காந்தியைத் தாய் என்று உருவகப்படுத்துகிறார். பெண்ணுக்கு மட்டுமே கிடைத்திருக்கக் கூடிய சிருஷ்டி தத்துவத்தை காந்தியிடம் பிரயோகப்படுத்துகிறார். எனக்குத் தெரிந்து காந்தி பற்றிய ஆய்வுகளில் உலக அளவில் தலைசிறந்த புரிதல் ஹெலன் சிஸூவினுடையதுதான். துரதிர்ஷ்டவசமாக சிஸூவின் காந்தி பற்றி காந்தி பிறந்த மண்ணில் யாருக்குமே தெரியவில்லை.

ஹெலன் சிஸூ, ஜூலியா க்றிஸ்தவா, லூய்ஸ் இரிகாரே மூவரும் பெண்கள் என்பதால்தான் ஃபூக்கோ ட்ரையோ (ஃபூக்கோ, தெரிதா, ரொலான் பார்த்) அளவுக்கு அவர்கள் விவாதிக்கப்படவில்லை. மிஷல் ஃபூக்கோ (Michel Foucault), ஜாக் தெரிதா (Jacques Derrida), ரொலான் பார்த் (Roland Barthes) மூவரும் மனித சிந்தனையில், புரிதலில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள். அந்த மூவரையும் படித்திராவிட்டால் நீங்கள் இப்போது பார்க்கும் சாருவே இல்லை. அப்படிப்பட்ட ஃபூக்கோவும் தெரிதாவும் பல்கலைக்கழகங்களில் அவர்களோடு பணி புரிந்த ஹெலன் சிஸூவையும் க்றிஸ்தவாவையும் அவர்கள் பெண்கள் என்பதால் அவர்களின் பணிகளில் எப்படியெல்லாம் இடையூறு செய்தார்கள், வேலையிலிருந்தே வெளியேற்றினார்கள் என்பதை சிஸூ எழுதியிருக்கிறார்.

மனித சிந்தனை வரலாற்றில் ஹெலன் சிஸூ, ஜுலியா கிறிஸ்தவா, லூய்ஸ் இரிகாரே ஆகிய மூவரும் செய்திருக்கும் பங்களிப்பு ஈடு இணை இல்லாதது. அது பற்றி என்னுடைய மெதூஸாவின் மதுக்கோப்பை என்ற நூலில் சற்றே விரிவாக எழுதியிருக்கிறேன். இது மட்டும் அல்ல; நமக்குக் கிடைத்திருக்கும் மேற்கத்திய இலக்கியப் பரப்பில் முன்னோடிகளாக வரும் பெயர்களில் முக்கியமானது Sappho என்ற கிரேக்க லெஸ்பியன் கவி. இவர் வாழ்ந்த காலம் கி.மு. 630 – கி.மு. 570. இவரது கவிதைகள் இப்போதும் கிடைக்கின்றன.

உலக இலக்கியப் பரப்பில் இப்படி ஏராளமாகச் சொல்லிக்கொண்டே போகலாம். தென்னமெரிக்காவில் ஏராளமான பெண் எழுத்தாளர்கள் உண்டு. அவர்களில் ஆகச் சிறந்தவர்கள் உருகுவாயைச் சேர்ந்த Cristina Peri Rossi, சீலேவைச் சேர்ந்த Maria Louisa Bombal. போம்பாலின் கதை ஒன்றை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனால் தென்னமெரிக்கப் பெண் எழுத்தாளர்கள் பற்றி அதிகம் வெளியே தெரியாததற்குக் காரணம், நம்ப முடியாத அளவுக்குத் தென்னமெரிக்கா ஆணாதிக்க சமூகமாக இருக்கிறது. பெண்கள் மீதான வன்கொடுமை எதுவும் இல்லை என்றாலும் பெண்கள் வெறும் பாலியல் கவர்ச்சிக்கானவர்கள், அவர்கள் வீட்டைப் பராமரிக்க வேண்டியவர்கள், ஆணுக்குக் கீழானவர்கள் என்ற மனோபாவம் மிகப் பெரும்பான்மையான ஆண்களிடம் அங்கே இருப்பதைக் கவனித்தேன்.

ஒருநாள் சீலேயின் சாந்த்தியாகோ நகரிலிருந்து 140 கி.மீ. தூரத்தில் உள்ள பாப்லோ நெரூதாவின் வீடு இருக்கும் வால்பராய்ஸோ நகருக்குச் சென்றுவிட்டு சாந்த்தியாகோ திரும்பும் வழியில் ஒரு கிராமத்து உணவு விடுதியில் உணவு உண்டோம். அங்கே ஒரு இளம் பெண் விக்தர் ஹாராவின் (Victor Jara) பாடலைப் பாடி கிதார் வாசித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஹாராவின் பாடலும் பெயரும் மட்டுமே தெரிந்திருந்தது. நான் ஹாராவின் கதையைச் சொன்னேன். அவள் உடனே எங்களோடு கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று சொல்லி அவள் வீட்டுக்கு அழைத்தாள். நானும் ரொபர்த்தோவும் அவள் வீட்டுக்குக் கிளம்பினோம். டிரைவர் காரைச் செலுத்துக் கொண்டிருந்தபோது ரொபர்த்தோ அவளிடம் “உனக்குப் பயமாக இல்லையா?” என்றார். அவர் வயதும் என்னைப் போலவே 66 என்பது இங்கே முக்கியம். ஏன் என்றாள் அவள். எந்தத் தயக்கமும் இல்லாமல் ரொபர்த்தோ “இந்தக் காரில் நாங்கள் மூன்று ஆண்கள் இருக்கிறோம். நீயோ ஒரு அழகான இளம் பெண். பயமாக இல்லையா?” என்றார். அவள் ரொம்ப கெட்டிக்காரி போல. உடனே பதில் சொன்னாள். ஒரு ஆள் என்றால்தான் பயம்; மூன்று பேர் என்றால் பயமே இல்லை. ஒருவரிடமிருந்து ஒருவர் காப்பாற்றிவிடுவீர்கள். விளையாட்டு சரி, ஆனாலும் எனக்கு அந்தச் சம்பவம் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் மிக மிக அரிதாக இருக்கும் சீலேவில் – நள்ளிரவில்கூடப் பெண்கள் தனியாக நடந்து போய்க் கொண்டிருப்பதைக் காணக்கூடிய ஒரு தேசத்தில் ஒரு ஆண் இப்படி நினைக்கிறான். இத்தகைய சூழலில் பெண் எழுத்தாளர்கள் எப்படி வெளியே அறியப்பட முடியும்?

ஆனால் உலகில் நிலவும் பொதுக்கருத்துக்கு எதிராக இஸ்லாம் பெண்களுக்கு ஆணைப் போலவே சம உரிமை வழங்கியிருப்பதால் அரபியில் பல பெண் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்தான் இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கியிருக்கிறது.

அரூ: இலக்கியத்தை சினிமாவாக எடுக்கும்போது அது ஒரு போதும் இலக்கியப் படைப்பை மிஞ்சிவிட முடியாது என ஒரு கருத்து நிலவுகிறது. (தாகூரின் நஸ்தநீரா இல்லை சத்யஜித் ரேயின் சாருலதாவா, எது சிறந்தது என்கிற வாய்க்கால் தகராறு அரூ குழுவுக்குள்ளே வெகுகாலமாய் நடந்து வருகிறது.) உங்கள் கருத்து என்ன?

சாரு: சத்யஜித் ரேயின் படங்களில் எனக்குப் பரிச்சயம் அதிகம் இல்லை. தாகூரின் கதைகளையும் படித்ததில்லை. ஆனால் எனக்குத் தெரிந்த வேறு உதாரணங்களை வைத்துப் பேச முடியும். அநேகமாக எல்லா ரஷ்யப் பேரிலக்கியங்களும் சினிமாவாக எடுக்கப்பட்டுவிட்டன. என்னைப் பொறுத்தவரை நாவல்களைவிட சினிமாவே சுவாரசியமாக இருந்தன. உதாரணமாக, போரிஸ் பாஸ்டர்நாக் எழுதிய டாக்டர் ஷிவாகோ. டேவிட் லீன் இயக்கி 1965-இல் வெளிவந்த டாக்டர் ஷிவாகோ நாவலைவிட சினிமாவாக எனக்குப் பிடித்திருந்தது. அதேபோல் அகிரா குரஸவாவின் ரான். அதன் மூலம் ஷேக்ஸ்பியரின் கிங் லியர். குரஸவா, ரான் படத்தில் மகாமேதையான ஷேக்ஸ்பியரையே மிஞ்சிவிட்டார் என்று சொல்லலாம். கண்கள் குருடான சுருமாரு காட்டில் வசிக்கிறான். அப்போது (முன்னாள்) அரசன் ஹிததோரா அவனைச் சந்திக்க நேர்கிறது. சுருமாருவுக்கு வந்திருப்பது ஹிததோரா என்று தெரிந்துவிடுகிறது. சுருமாரு இளவரசனாக இருக்கும்போது அவன் தகப்பனைக் கொன்று, சுருமாருவையும் குருடாக்குகிறான் ஹிததோரா. ஆனால் காலப்போக்கில் ஹிததோராவே அரசை இழந்து பைத்தியக்காரனாக அலையும்போதுதான் காட்டில் சுருமாருவை சந்திக்கிறான். அப்போது சுருமாரு அவனுக்காகத் தன்னுடைய புல்லாங்குழலை இசைத்து “வேறு விதமாகத் தன் விருந்தினரை, ஒரு பேரரசரை உபசரிக்க முடியவில்லை” என்கிறான். இது ஷேக்ஸ்பியரையும் விஞ்சிய இடமாக எனக்குத் தெரிந்தது.

ஆனால் பொதுவாக இலக்கியப் படைப்பு சினிமாவாக மாறும்போது இலக்கியத்தில் இருந்த நுணுக்கங்கள் சினிமாவில் இல்லாமல் போய்விடுகின்றன என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. உதாரணமாக, எல்ஃப்ரீட் ஜெலினெக்கின் (Elfriede Gelinek) பியானோ டீச்சர் சினிமாவாக வந்தபோது படு மொக்கையாக இருந்தது. அதேபோல் மரியோ பர்கஸ் யோசாவின் (Mario Vargas Llosa) The Feast of the Goat சினிமாவாக மாறியபோதும் அதேதான் நடந்தது. இப்படி ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம். அதற்கான காரணம் என்னவென்றால், எழுத்தாளன் ஒரு மாஸ்டராக இருந்தால் அந்த மாஸ்டரின் படைப்பை சினிமாவாக எடுப்பவர் கத்துக்குட்டியாக இருக்கிறார். மாஸ்டரோடு கத்துக்குட்டி எப்படிப் போட்டி போட முடியும்? குரஸவாவைப் போன்ற ஒரு மேதையால் ஒரு இலக்கியப் பிரதியை வைத்து சினிமாவை அந்தப் பிரதியைவிட மகத்தான கலைப் படைப்பாக உருவாக்க முடியும்.

இது பற்றி என்னுடைய இன்னொரு கருத்தையும் சொல்ல நினைக்கிறேன். இலக்கியமும் சினிமாவும் இரண்டு வெவ்வேறு கலைச் சாதனங்கள். ஒரு நாவலை சினிமாவாக எடுத்தாலும் அந்த இரண்டையும் ஒப்பிட்டு எது சிறப்பாக வந்துள்ளது என்று பேச முடியாது என்றே நினைக்கிறேன். உதாரணமாக, குந்தர் கிராஸ் எழுதிய டின் ட்ரம் நாவலை இயக்குநர் Volker Schlöndorff திரைப்படமாக எடுத்தார். நாவல் அளவுக்குத் திரைப்படமும் மகத்தான கலைப் படைப்பாக வந்தது. பொதுவாக ஐரோப்பாவில் இலக்கியம் சினிமாவாக மாறும்போது நீங்கள் கேட்டது போல் நடப்பதில்லை. ஏனென்றால், ஐரோப்பிய சினிமாவில் கத்துக்குட்டிகள் இல்லை. வாக்கர் ஷ்லாண்டார்ஃபுமே குந்தர் கிராஸுக்கு நிகரான ஒரு கலைஞன் என்பதால் அது சாத்தியமாயிற்று. இன்னும், பெர்க்மன், ஃபெலினி, அந்த்தோனியோனி, ஸொல்த்தான் ஃபாப்ரி (Zoltan Fabri), Bela Tarr, வெர்னர் ஹெர்ஸாக், ஃபாஸ்பைண்டர் (Werner Fassbinder), டர்க்காவ்ஸ்கி போன்ற மேதைகள் ஒருபோதும் தாங்கள் எடுத்த இலக்கியப் பிரதிகளிலிருந்து தரம் குன்றியதான சினிமாவைக் கொடுத்ததில்லை.

அரூ: பல ஆண்டுகளாக இலக்கியத்தில் செயல்பட்டு வருகிறீர்கள். நீங்கள் எழுதத் துவங்கிய காலத்துக்கும் தற்போதைய இலக்கியச் சூழலுக்கும் முக்கியமான வித்தியாசமாக எதைக் கருதுகிறீர்கள்?

சாரு: பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடிய கேள்வி. ஆனாலும் அது போன்ற சங்கடங்களைப் பற்றி எப்போதுமே கவலைப்படாதவன் என்பதால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லிவிடுகிறேன்.

தரத்தின் வீழ்ச்சி. பொதுவாக எல்லா மட்டத்திலும் தரம் தாழ்ந்துவிட்டதைப் பார்க்கிறோம். வாழ்க்கையை அனுபவிக்கும் விஷயங்களில் – உ-ம், தொழில்நுட்பம் – தரம் உயர்ந்திருந்தாலும் ரசனையில் தரம் தாழ்ந்துவிட்டதைப் பார்க்கலாம். உ-ம். உணவு.

அதேபோல் மதிப்பீடுகளின் வீழ்ச்சி. அப்போது பார்த்த அரசியல்வாதிக்கும் இப்போதைய அரசியல்வாதிக்குமான வேறுபாடு. அப்போது கவுன்சிலர் என்றால் ஒரு பழைய சைக்கிளில் போவார். இப்போது கவுன்சிலர் ஒரு கோடி ரூபாய் காரில் தொண்டர்கள் புடை சூழ வருகிறார். முன்பு கொள்கையும் கோட்பாடும் இருந்த இடத்தில் இப்போது பணம் இருக்கிறது. கல்வியிலும் அப்படியே. ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டு போக வேண்டியதில்லை. சமூகத்தின் எல்லா மட்டத்திலும் மதிப்பீடுகள் வீழ்ச்சி அடைந்துவிட்டன.

இது இலக்கியத்திலும் பிரதிபலிக்காதா என்ன? சி.சு. செல்லப்பா எப்படி இருந்தார்? எப்படி வாழ்ந்தார்? இப்போது நான் ஒரு அரை வேக்காட்டு சினிமா நடிகனை சார் என்று அழைக்க வேண்டியிருக்கிறது. கூழைக் கும்பிடு போட வேண்டியிருக்கிறது. காந்தியின் முன்னே, காந்தி அமர்ந்திருந்த கட்டிலில் அவர் அருகே அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு மிஸ்டர் காந்தி என்று அழைத்த பாரதி எங்கே? இப்போது சினிமா நடிகனுக்கு முன்னே கூழைக் கும்பிடு போட வேண்டியிருக்கின்ற தமிழ் எழுத்தாளன் எங்கே? என்னுடைய புத்தக வெளியீட்டுக்கு ரஜினிகாந்த் வந்தால் முன்வரிசையில் அமர வைப்பேனே ஒழிய மேடையில் இடம் கொடுத்து எனக்குப் பின்னே, அதாவது கூட்டத்தின் இறுதியில் பேசுங்கள் என்று சொல்ல மாட்டேன். அது ஒருபோதும் நடக்காது. எழுத்தாளன் ஒரு தேசத்தின் மனசாட்சி. ஒரு மொழியின் பாதுகாவலன். ஒரு கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்குபவன். அவன் ஒருபோதும் ஒரு நடிகனின் முன்னே கைகட்ட மாட்டான்.

வாசகர்கள் குறைந்துவிட்டனர். முன்பு ஒரு புத்தகம் 1200 பிரதிகள் அச்சடிக்கப்படும். இப்போது நூறு பிரதிகள். அல்லது ஐம்பது. Print on demand. அப்படியென்றால், இலக்கியத்துக்கு சமாதி என்று பொருள்.

இப்படிப்பட்ட நிலைமையிலும் பதிப்பகங்கள் பெருகிவிட்டன. அதற்கான காரணம்தான் எனக்குப் புதிராகவே இருக்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் அச்சுப் பிழைகள் ஏராளம். சகிக்க முடியவில்லை. பதிப்பகத் துறையே அதல பாதாளத்தில் விழுந்துவிட்டது போல் தோன்றுகிறது. பதிப்பகத்தார் யாரும் இதைப் பற்றிப் பேசவே தயங்குகிறார்கள். சமீபத்தில் நகுலனின் புத்தகங்களை வாங்கினேன். ஒரு பக்கத்துக்குப் பதினைந்து பிழைகள். இத்தனைக்கும் நான் மிகவும் மதிக்கும் ஒரு பதிப்பகம் அது. ஏராளமான பொருட்செலவில் அச்சடித்திருக்கிறார்கள். இருந்தும் இந்த நிலை.

இலக்கியத் தரம் என்று பார்த்தாலும் திரும்பத் திரும்ப ஒரு சிலரே நல்ல தரமான எழுத்தை உருவாக்குகிறார்கள். புதிதாக எழுத வருபவர்களுக்கு அடிப்படைத் தேவையான ஒரு விஷயமே இல்லை. பிழையில்லாமல் எழுதத் தெரியவில்லை. அதற்கப்புறம் அல்லவா இலக்கியத் தரம் பற்றிப் பேச முடியும்?

நல்ல விஷயம் என்று பார்த்தால், இணைய தளம் மூலம் ஏராளமான பேர் வாசிக்கிறார்கள். அச்சுப் பத்திரிகைகளின் தேவை குறைந்துவிட்டது. எழுதியதை ஒரே நிமிடத்தில் வெளியிட்டு அதற்கான எதிர்வினையையும் பெற்றுவிடலாம். எழுத்து, உலக நாடுகள் பூராவும் கண்ணிமைக்கும் நேரத்தில் சென்றுவிடுகிறது. ஆனால் எழுத்தாளர்களுக்கு இடையேகூட வாசிப்பு கம்மியாகிவிட்டது கவலை அளிக்கிறது.

அரூ: ஓர் இலக்கிய இதழ் முதியோர் இல்லம் போல இல்லாமல் பப் (pub) போல இருக்கவேண்டும் எனச் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வாசிப்பில் அந்த உணர்வு கொடுத்த இலக்கிய இதழ் எது? பிற மொழி இதழாகவும் இருக்கலாம்.

சாரு: எண்பதுகளின் முற்பகுதியில் பெங்களூரில் இருந்து ஒரு ஆண்டு வெளிவந்த இங்கே இன்று என்ற இடைநிலைப் பத்திரிகை அப்படி இருந்தது என்று சொல்லலாம். மாதம் ஒருமுறை இதழ். படிகள் என்ற மிக முக்கியமான சிறுபத்திரிகையை நடத்திக் கொண்டிருந்த நண்பர்கள் படிகள் நின்ற பிறகு இங்கே இன்றுவைக் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு வந்த நிறப்பிரிகை, மீட்சி ஆகிய பத்திரிகைகளையும் அப்படிச் சொல்லலாம். இதில் நிறப்பிரிகை புனைவிலக்கியப் பத்திரிகை அல்ல. தத்துவம் சார்ந்த கனமான இதழ்தான். இருந்தாலும் ஒரு மாபெரும் மாற்றுக் கலாச்சாரச் செயல்திட்டங்களைக் கோட்பாட்டளவிலும் செயல்பூர்வமாகவும் நிகழ்த்திக் காட்டிய பத்திரிகை என்பதால் அதை உதாரணமாகச் சொல்கிறேன். அதை நடத்தியவர்கள் பெரும்பாலும் முன்னாள் தீவிர கம்யூனிஸ்டுகள். நக்ஸல்களோடு தொடர்பு வைத்திருந்து பின்னால் அந்தப் பாதை வேண்டாம் என்று மறுதலித்து வெளியே வந்தவர்கள். அந்தக் காலகட்டம் பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். இருந்தாலும் அது பற்றிச் சுருக்கமாக ஓரிரண்டு வார்த்தைகளில் சொல்லப் பார்க்கிறேன்.

மீட்சி இதழ் 1 அட்டைப்படம்

நூறு ஆண்டுகளுக்கு முன்பான சமூகச் சூழலில் படிப்பு என்பது பிராமணர்களிடமும் மற்ற உயர்சாதியினரான சைவப் பிள்ளைமார் போன்றவர்களிடமும் மட்டுமே இருந்ததால் அப்போதைய எழுத்தாளர்களும் பிராமணர்களாகவே இருந்தனர். புதுமைப்பித்தன் மட்டுமே அ-பிராமணர். ஆனால் அவரும்கூடப் படிப்பில் பிராமணருக்குச் சமதையாக இருந்த சைவப்பிள்ளைமார். ஆதலால், கலாச்சார ரீதியாக அக்கால எழுத்தாளர்களின் சந்திப்புகளும் உரையாடல்களும் எழுத்தும் எப்படி இருந்திருக்குமோ அப்படியே இருந்தன. க.நா.சு. எப்பேர்ப்பட்ட காஃபி பிரியர் என்பதுதான் அப்போதைய மிகப் பிரபலமான இலக்கியச் செய்தி. ஆனால் க.நா.சு. காஃபி பிரியர் என்று சொல்வது காஃபிக்கே அவமானம்; ஏனென்றால், அவர் காஃபியில் நிறைய இனிப்பு சேர்த்தும், ‘லைட்’டாகவும் குடிக்கிறார்; அதனால் அவரை காஃபி பிரியர்களில் சேர்க்கக் கூடாது என்று சுந்தர ராமசாமி எழுதுகிறார். தி.ஜானகிராமனும் கு.ப.ராஜகோபாலனும் இரவெல்லாம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாகப் படித்திருக்கிறேன். வெற்றிலைப் பாக்கும் புகையிலையும்தான் அவர்களின் அதிகபட்ச லாகிரி வஸ்துவாக இருந்திருக்கும். இரவில் கடை மூடும் வரை காஃபியும் செல்லும். கும்பகோணத்தில் கு.ப.ரா.வும் ந.பிச்சமூர்த்தியும் பக்கத்துப் பக்கத்து வீடு. அதிக பட்சம் வெற்றிலைப் பாக்கும் காஃபியும்தான். அதிலும் ந. பிச்சமூர்த்திக்கு வெற்றிலைப் பழக்கம் உண்டா என்று தெரியவில்லை. அவர் ஒரு ஞானி போல் வாழ்ந்தவர். இப்படி அந்தக் காலத்து எழுத்தாளர்களின் அதிக பட்ச லாகிரியாக காஃபியும் வெற்றிலைப் பாக்குமே இருந்துள்ளன. ஒருவர் பாக்கியில்லாமல் இவர்கள் அத்தனை பேரும் பிராமணர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இவர்களின் தலைமையகம் பிராமணர்களின் தலைமையகமாக விளங்கிய கும்பகோணம். அந்தக் காலகட்டத்தின் முன்னோடி சிறு பத்திரிகைகளாக இருந்தவை சி.சு. செல்லப்பாவின் எழுத்து, க.நா.சு.வின் இலக்கிய வட்டம். இரு துருவமாக இருந்த அந்த இருவருமே பிராமணர்கள்.

இங்கே ஒரு விஷயத்தை நீங்கள் கவனம் கொள்ள வேண்டும். பிராமண எதிர்ப்பை அடிப்படையாகக்கொண்ட திராவிட இயக்கப் பின்னணியில் இருந்து இதை நான் எழுதவில்லை. சாதியற்ற சமூகத்தை உருவாக்குவது ஒரு குறிப்பிட்ட சாதியை மட்டும் எதிர்ப்பதாலோ வெறுப்பதாலோ அடையக் கூடியதல்ல என்பது என் நிலைப்பாடு. எப்போது நம் மனதில் தங்கியிருக்கும் சாதி உணர்வு ஒழிகிறதோ அப்போதே நாம் சாதியற்ற சமூகத்தை நோக்கிய முதல் அடியை எடுத்து வைக்க முடியும். மேலே உள்ள அவதானம் எல்லாம் சமூகவியல் சார்ந்தது. அது ஒரு எதார்த்த நிலை. அவ்வளவுதான். மேலே கேள்வியை மீண்டும் ஒருமுறை வாசித்துவிட்டுத் தொடரவும்.

அடுத்த கட்டமாக சிறுபத்திரிகை இலக்கிய இயக்கம் கும்பகோணத்திலிருந்து சென்னை மாம்பலத்துக்கு இடம் பெயர்ந்தது. மேலும், அதுவரை இலக்கியத்தில் மட்டுமே கால் ஊன்றியிருந்த சிறுபத்திரிகை இயக்கம் எழுபதுகளின் இறுதியில் சமூகவியல், மார்க்சியம், இடதுசாரிச் சிந்தனை, ஓவியம் எனப் பாய்ச்சல் கொடுத்தது. பிரக்ஞை என்ற பத்திரிகை மூலம் அது நடந்தது. சொல்லி வைத்தாற்போல் இதனுடைய ஆசிரியர் குழுவும் பிராமண இளைஞர்களே. எழுபதுகளின் இறுதி என்பதால் வெற்றிலைப் பாக்கு அகன்று அந்த இடத்தை சிகரெட் பிடித்துக்கொண்டது. சிகரெட் பிடிக்கும் பிராமண இளைஞர்கள். தீவிர இடதுசாரிகள். ஆனால் கட்சி சார்ந்தவர்கள் அல்ல. இந்த இளைஞர்களில் ஒருவர் பிரக்ஞையிலிருந்து விலகி ஒரு தீவிர இடதுசாரி இயக்கத்தை நிறுவினார்.

பிறகு சிறுபத்திரிகை இலக்கிய இயக்கம் மாம்பலத்திலிருந்து திருவல்லிக்கேணி பக்கம் நகர்ந்தது. திருவல்லிக்கேணி இலக்கியகர்த்தாக்களும் – அநேகமாக இவர்கள் யாவரும் கவிஞர்கள் – பிராமணர்களாகவே இருந்தனர். காலம்: எழுபதுகளின் இறுதி. திருவல்லிக்கேணியில் முஸ்லீம்களும் சம அளவில் இருந்தாலும் அவர்கள் இம்மாதிரி இலக்கியச் சமாச்சாரங்களில் ஈடுபாடு காட்டவில்லை. அவர்களுக்கு வெகுஜன வாசிப்பே இன்னும் கைவரப் பெற்றிருக்கவில்லை என்பதால் அதை மறந்துவிடுவோம். ஆக, திருவல்லிக்கேணியும் ஒரு பிராமணர்ப் பகுதி. திருவல்லிக்கேணிக்காரர்கள் நடத்திய பத்திரிகைகள் கவனம், ழ போன்றவை. ஆரம்ப காலத்தில் இருந்த வெற்றிலைப் பாக்கு தமிழ்நாட்டிலிருந்து அறவே போய்விட்டது. திருவல்லிக்கேணிக்காரர்கள் கொஞ்சம் சனாதனிகள் என்பதால் சிகரெட்கூட அவர்களை எட்டிப் பார்க்கவில்லை. காஃபி ஒன்றுதான் அவர்களின் அதிகபட்ச லாகிரியாக இருந்தது.

அப்போதுதான் – எழுபதுகளின் இறுதியில் – முதல் முறையாக இலக்கியத்தில் பிராமண ஆதிக்கம் குறைந்து அ-பிராமணர் வரத்து அதிகமானது. நான்காவது கட்டம். நடந்த இடம் பெங்களூர். ஆசிரியர் குழுவில் இருந்த தமிழவனின் இயற்பெயர் கார்லோஸ். நாகர்கோவில் கிறிஸ்தவர். அடுத்தவர், கிருஷ்ணசாமி. மற்றொருவர், சிவராம கிருஷ்ணன். (இவர் பிராமணர் என்றாலும் வாழ்க்கைமுறையில் அ-பிராமணர்) இவர்கள்தான் படிகள் குழு. பிறகு சிவராம கிருஷ்ணன் இதிலிருந்து பிரிந்தார். இங்கே இன்று தொடங்கப்பட்டது. தமிழவன் ஒரு டீடோட்டலர் என்றாலும் முதல்முதலாக சிறுபத்திரிகை வட்டாரத்தில் கவுச்சி எட்டிப் பார்த்தது அப்போதுதான். இதைப் படிப்பதும் எழுதுவதும் இன்று உங்களுக்குச் சிரிப்பை வரவழைக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் நூறு ஆண்டுக் காலம் அசைவமே எட்டிப் பார்க்காத இலக்கிய உலகில் கருவாட்டுக் குழம்பும் பிரியாணியும் பிராந்தியும் நுழைகிறது என்றால் அது சாதாரண விஷயமா என்ன?

இங்கே இரண்டே இரண்டு விதிவிலக்குகளைக் குறிப்பிட வேண்டும். மௌனி, நகுலன். இரண்டு பேருமே மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். மது தவிர இருவரிடமும் வேசிகளிடம் போகும் பழக்கமும் இருந்துள்ளது. இந்த இரண்டோடு கூட நகுலன் பீடி சிகரெட்டும் குடிப்பார்.

யோசித்துப் பாருங்கள். சிதம்பரத்தில் மௌனியின் இல்லத்தில் பத்து இலக்கியவாதிகள் கூடுவார்கள். மூன்று தினங்கள் இடைவெளி இல்லாமல் இரவு பகலாகப் பேசுவார்கள். வெறுமனே சைவ உணவும் காஃபியும் மட்டும்தான். மௌனி மட்டும்தான் அவ்வப்போது சேரிப் பகுதிக்குச் சென்று சாராயத்தை அடித்துவிட்டு வருவாராம்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் முதல்முதலாக பெங்களூரில் இலக்கியச் சிறுபத்திரிகை இயக்கத்தில் கவுச்சியும் மதுவும் நுழைந்தது என்பதை இந்தப் பின்னணியில்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உணவு சார்ந்த இந்தக் கலாச்சார மாற்றத்தைப் படிகள் மற்றும் இங்கே இன்று பத்திரிகைகளின் உள்ளடக்கத்திலேயும் ஒருவர் புரிந்துகொள்ளலாம்.

அதற்குப் பிறகு என்னுடைய வாசகர் வட்டச் செயல்பாடுகளையும் என் நூல் வெளியீட்டு விழாக்களையும்தான் அப்படிக் குறிப்பிடுவேன். சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தின் கொள்ளளவு 2000. அதில்தான் என் புத்தக வெளியீடு மூன்று முறை நடந்தது. அரங்கம் முக்கால்வாசி நிரம்பியது. இத்தனைக்கும் அந்த அரங்கை ஆறு மாதம் முன்பே 50000 ரூ கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும். டிசம்பர் இசை விழாக்கள் காலம் என்பதால் தேதி கிடைக்காது. ஒருமுறை நீண்ட கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து திங்கள் கிழமை மாலைதான் கிடைத்தது. பத்து நாள் விடுமுறைக்குப் பிறகு எல்லோரும் அலுவலகத்தில் ஆஜராக வேண்டிய நாள். வெளியூர் நண்பர்களால் வர முடியுமா என்று எனக்குச் சந்தேகம். அத்தனை நண்பர்களும் வந்துவிட்டார்கள். அதில் ஒருவர் ஆசிரியை. தனியார்ப் பள்ளி. விடுப்பு கேட்டிருக்கிறார். பத்து நாள் விடுமுறைக்குப் பிறகு பள்ளி திறப்பதால் விடுப்பு கிடைக்கவில்லை. ராஜினாமா எழுதிக் கொடுத்திருக்கிறார். அதைப் பார்த்துவிட்டு பிரின்ஸிபால் விடுப்பு கொடுத்தாராம். கூட்டம் முடிவதற்குள்ளாகவே அடித்துப் பிடித்துக்கொண்டு கோவை ரயிலைப் பிடிக்க ஓடினார். செவ்வாய்க்கிழமை காலை எட்டு மணிக்குப் பள்ளியில் நிற்க வேண்டுமே?

இதெல்லாம்தான் கொண்டாட்டம். ஆனால் இப்போது இத்தகைய கொண்டாட்டங்களை நிறுத்திவிட்டேன். செய்ய வேண்டிய பணிகள் ஏராளமாகக் கிடக்கின்றன. கொண்டாட்டத்துக்கு நேரமில்லை. இப்போதைக்கு எழுத்துதான் கொண்டாட்டம்.

அரூ: இங்கே இன்று மற்றும் மீட்சி இதழ்களைக் குறிப்பிட்டீர்கள். அவற்றின் எந்த அம்சம் பப் (pub) போல உணர வைத்தது எனச் சொல்லமுடியுமா?

சாரு: இங்கே இன்று இப்போது கிடைக்காது. ஆனால் மீட்சி இதழ்கள் இணையத்தில் முழுதாகக் கிடைக்கின்றன. அதைப் பார்த்தால் நீங்களே புரிந்து கொண்டுவிடலாம்.

நான் எதைக் குறிப்பிட்டேன் என்றால், மற்ற பத்திரிகைகள் என்னதான் இலக்கியரீதியாக வலுவாக இருந்தாலும் கிழட்டுத்தனத்தோடுதான் இருந்தன. நடத்துபவர்கள் இளைஞர்களே ஆயினும் பத்திரிகை கிழடு தட்டிப் போயிருக்கும். இளமைக்கு உரிய ஒரு ஆரவாரமோ பகட்டோ சத்தமோ உற்சாகமோ துள்ளலோ இருக்காது. ஒரு பிரம்மாண்டமான புராதன நூலகத்தின் ஏதோ ஒரு மூலைக்குள் நின்று கொண்டிருப்பதைப் போன்ற உணர்வு வரும். இது வெறும் தோற்றம் மட்டுமே அல்ல. மனோதர்மம். பார்வை. உதாரணமாக, மூத்தவர்களின் பத்திரிகைகளில் எம்ஜியார் சிவாஜி படம் பற்றி ஒரு வரி இருக்காது. அதெல்லாம் தீட்டு. கலைக்கு எதிரானது. பாமர ரசனை. வெகுஜன ரசனை எல்லாமே பாமரத்தனமானது.

ஆனால் இங்கே இன்றுவும் மீட்சியும் அப்படி அல்ல. காரணம், இங்கே இன்று நடத்தியவர்கள் படிகள் நடத்தியவர்கள். படிகள் நடத்தியவர்கள் அனைவரும் சமூகவியலை முறையாகப் பயின்றவர்கள். Émile Durkheim இலிருந்து Claude Levi-Strauss வரை சமூகவியலும் மானுடவியலும் அதற்குப் பிறகு அமைப்பியல்வாதத்தில் Roland Barthes போன்றவர்களையெல்லாம் கரைத்துக் குடித்தவர்கள். இவர்கள் சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றியும் எழுதினார்கள்; எம்ஜியார் படம் பற்றியும் எழுதினார்கள். அதுவரை ஐம்பது ஆண்டுகளாக வெகுஜன ரசனை என்ற தீட்டு சமாச்சாரத்தைச் சிறுபத்திரிகையில் தொடுவதையும் அதை ஒரு 25 வயது இளைஞன் படிப்பதையும் யோசித்துப் பாருங்கள். பூமிக்கும் ஆகாயத்துக்குமாகக் குதிக்க வேண்டும் போல் தோன்றும். இங்கே இன்று அட்டையிலேயே எம்ஜியார் படம் வரும். உள்ளே எம்ஜியார் பற்றிய ஒரு நீண்ட ஆய்வுக் கட்டுரை இருக்கும். இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது. கோணல் அகராதி என்று ஒரு பத்தி. க்றைஸ்ட் காலேஜில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த கிருஷ்ணசாமி அந்தப் பத்தியை எழுதினார். அப்போதெல்லாம் மிலோராத் பாவிச்சின் டிக்‌ஷனரி ஆஃப் கஸார்ஸ் எல்லாம் புழக்கத்துக்கே வரவில்லை. அந்தக் கோணல் அகராதி எப்படி இருக்கும் என்றால், ஒரு வார்த்தை – அதற்கு ஒரு நீண்ட பத்தியில் அர்த்தம். உதாரணமாக, ங்கோத்தா என்ற வார்த்தை. அதன் அர்த்தம்: சென்னை மாநகரில் புழங்கும் இந்த வார்த்தை இல்லாமல் விளிம்பு நிலை மக்கள் பேசுவதே இல்லை. வசையாகச் சொல்லப்படும் இடங்களைத் தவிர இது வேறு பல சந்தர்ப்பங்களிலும் பயன்பாடு பெறுகிறது. அதாவது, காதலன் தன் காதலியை வர்ணிக்கும்போது ங்கோத்தா என்னமா தக்காளி கணக்கா இருக்கேடி நீ என்று சொல்லப்படும்.

இப்படிப் போகும் அந்தக் கோணல் அகராதி. இதை என் கற்பனையில் எழுதியிருக்கிறேன். ஆனால் இப்படி ஒருவர் 1980-இல் எழுதியிருக்கிறார். கற்பனை செய்து பாருங்கள். இதையெல்லாம்தான் பப் கலாச்சாரம் என்று குறிப்பிட்டேன். பப் என்பது ஒரு குறியீடு எனக் கொள்க. மீட்சி பற்றி ஒரு புத்தகமே எழுதலாம். அது பிறகு.

இவர்கள் சி.சு. செல்லப்பாவின் எழுத்து பற்றியும் எழுதினார்கள்; எம்ஜியார் படம் பற்றியும் எழுதினார்கள்.

இங்கே நிறப்பிரிகை செய்த கலாச்சார மாற்றம் பற்றி ஓரிரு வார்த்தை சொல்ல வேண்டும். காஃபி வெற்றிலைப் பாக்கிலிருந்து இலக்கியம் சிகரெட்டுக்கும் அதன் பிறகு மது, கவுச்சி என்றும் மாறியதை மேலே ஒரு இடத்தில் குறிப்பிட்டேன். படிகளில் மட்டன் பிரியாணி வரை வந்த மாற்றத்தை நிறப்பிரிகை பீஃப் பிரியாணிக்கு இழுத்து வந்தது. நிறப்பிரிகையின் சார்பாக நடக்கும் கருத்தரங்குகளின் முடிவில் பீஃப் பிரியாணி பரிமாறப்படும் என்ற வாக்கியம் அழைப்பிதழிலேயே தவறாமல் இடம் பெற ஆரம்பித்தன. தலித் அரசியல், தலித் அழகியல் தமிழ்ச் சூழலில் முதன் முதலில் பேசப்பட்ட இடம் நிறப்பிரிகைதான். அதைத் தொடர்ந்துதான் வெ.மு. பொதியவெற்பன் பறை என்ற பெயரில் ஒரு பத்திரிகை கொண்டு வந்தார். நிறப்பிரிகை கருத்தரங்கின் மதிய உணவுக்கு பீஃப் பிரியாணியும், இரவில் பிரியாணிக்குப் பிறகு மிகப் பெரிய மதுபான இரவுகளும் விவாதங்களும் தொடர்ந்தன. இதெல்லாம் அப்போது நடந்த மாபெரும் மாற்றுக் கலாச்சார நிகழ்வுகளின் புற அடையாளங்கள்.

மீட்சியைக் கவிஞராக பிரபலமான முறையில் அறியப்பட்டிருந்த பிரம்மராஜன் என்ற ஒரே ஒருவர்தான் நடத்திக் கொண்டிருந்தார். வருடத்துக்கு ஒருமுறை தில்லியிலிருந்து பிரம்மராஜன் வீட்டுக்குச் செல்வேன். ஒரு வாரம் ஊட்டியில் அவர் வீட்டில் தங்கியிருப்பேன். அங்கே அவர் அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலத் துறைப் பேராசிரியராக இருந்தார். ஊட்டியின் நடுங்கும் குளிரில் முன்னூறு கவர்களில் ஒற்றை ஆளாக முன்னூறு விலாசங்களைப் பேனாவினால் எழுதிக் கொண்டிருப்பார்.

பிறகு மேற்கத்திய சாஸ்த்ரீய சங்கீத இசைத்தட்டுகளைப் போட்டுவிட்டு விஸ்கி அருந்தியபடியே இரவு முழுவதும் பேசிக் கொண்டிருப்போம். பிரம்மராஜனின் அழகிய மனைவி மீனா எங்களோடு பேச்சில் கலந்துகொள்வார். அவர் ஒரு தீவிர வாசகி. பிரம்மராஜனின் மாணவியாக இருந்து அவரைக் காதலித்து மணந்தவர். அவரை அப்போதும் சார் என்றே அழைப்பார். நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுந்து போய் சுடச்சுட இட்லியும் நாட்டுக்கோழிக் கறிக்குழம்பும் வைத்துக் கொடுப்பார்.

நான் இப்போது ஒரு transgressive எழுத்தாளனாக அறியப்படுகிறேன் எனில் அதற்குக் காரணமாக இருந்தவர்கள் எனப் படிகள் குழுவின் தமிழவனையும் கிருஷ்ணசாமியையும் மீட்சி பிரம்மராஜனையும்தான் குறிப்பிடுவேன்.

அரூ: உலக இலக்கியப் போக்கைத் தொடர்ந்து கவனித்து வருகிறீர்கள். அரசியல், பொருளாதாரத் தளங்களில் அதிவேகமாக மாறி வருகிற உலகில், இலக்கியம் அடுத்த இருபது வருடங்களில் எப்படியிருக்குமென அவதானிக்கிறீர்கள்? எம்மாதிரியான புதிய எழுத்து வடிவங்கள் தோன்றும் என நினைக்கிறீர்கள்?

சாரு: கிராஃபிக் நாவல்கள் எழுதப்படலாம் என்று உடனடியாகத் தோன்றுகிறது. ஆனாலும் நிதானமாக யோசித்தால் எந்த உடனடி மாற்றமும் இருபது ஆண்டுகளில் ஏற்பட முகாந்திரம் இல்லை என்றே நினைக்கிறேன். காரணம், பின்னோக்கிப் பார்த்தால் கடந்த இருபது ஆண்டுகளில், ஏன், ஐம்பது ஆண்டுகளையே எடுத்துக்கொள்வோமே, என்ன பெரிதாக மாற்றங்கள் நடந்துவிட்டன? ஒரு பக்கம் தீவிர இலக்கியம் உருவாகிக்கொண்டே இருந்தது. இன்னொரு பக்கம், இடைநிலை இலக்கியம் பிரும்மாண்டமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தீவிர இலக்கியத்துக்கு உதாரணமாக, செர்பியாவின் மிலோராத் பாவிச்சையும் ஃப்ரான்ஸிலிருந்து எழுதும் Francaphone எழுத்தாளர்களையும் சொல்லலாம். இடைநிலை இலக்கியத்துக்கு ஜப்பானின் முராகாமியைச் சொல்லலாம். முராகாமி ஒரு sophisticated சுஜாதா. அவ்வளவுதான். அதேபோல் சர்வதேச அளவில் இலக்கிய பிம்பங்கள் தேவைப்படுகின்றன. அதற்காகப் பல பெருமாள் முருகன்கள் உருவாக்கப்படுகிறார்கள். அதையெல்லாம் demand தான் நிர்ணயிக்கிறது என்பதால் அது பற்றியெல்லாம் அதிகம் கவனம் செலுத்தத் தேவையில்லை.

அய்யனார் விஸ்வநாத்: உங்கள் மொழிபெயர்ப்பில் வெளியான ஊரின் மிக அழகான பெண் தொகுப்பில் இடம்பெற்ற கதைகள் அனைத்துமே அரசியல் ரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை. குறிப்பாக அவ்குஸ்தோ ரோவா பாஸ்தாஸ் எழுதிய கைதி கதையும் ஆஸ்கார் லூயிஸின் வாழ்க்கை என்ற நாவலில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட என் அம்மா ஒரு விபச்சாரி எனத் தலைப்பிடப்பட்ட அத்தியாயமும் எப்போதும் மறக்கமுடியாதவை. தமிழில் மொழிபெயர்ப்பு குறித்து யார் பேசினாலும் உங்களின் ஊரின் மிக அழகான பெண் நூலைத்தான் அளவுகோலாக வைக்க வேண்டும் என்று சொல்வேன். ஒரு மொழிபெயர்ப்பில் கதைகளின் ஆன்மாவையும் மொழிச் சரளத்தையும் கொண்டு வர வேண்டுமெனில் அந்தந்த தேசங்களின் மீதான காதலும் கலை மீதான வேட்கையும் இருந்தால் ஒழிய சாத்தியமில்லை என்பதும் உண்மை. இப்போது நீங்கள் மொழிபெயர்க்க விரும்பினால் எந்த தேசத்தின் படைப்புகளை எடுத்துக்கொள்வீர்கள்? அல்லது எந்த எழுத்தாளரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?

சாரு: நன்றி அய்யனார். என்னுடைய கருத்தும் அதுவே. அப்படியெல்லாம் இல்லை என்று போலியான தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்ள மாட்டேன். மொழிபெயர்ப்புக்கு அது ஒரு முன்மாதிரி நூல்தான். மொழிபெயர்ப்புக்கு மட்டும் அல்லாமல் அதில் உள்ள கதைத் தேர்வின் பின்னால் உள்ள அரசியல் மிக முக்கியமானது. அதுதான் உங்கள் கேள்வியும் என்பதால் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நாம் எப்போதோ செய்த ஒரு காரியம் எங்கோ ஒரு மூலையில் கவனிக்கப்படுகிறது என்பது ஒரு எழுத்தாளனுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம்.

இப்போது ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், அரபி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலிருந்து தமிழுக்கு இறக்குமதி ஆவதைவிட நம்முடைய படைப்புகள் அவ்விடம் செல்வதுதான் நியாயம். இருந்தாலும் கேள்வி என்று வந்திருப்பதால் என் பதில்:

இன்றைய நிலையில் முஸ்லீம்களைப் பற்றி உலக அளவில் மிகப் பெரிய தப்பெண்ணங்கள் எழுந்துள்ளன. அது எல்லாவற்றையும் சில மொழிபெயர்ப்புகள் அடித்து உடைத்து விடும். பாரிஸில் புலம் பெயர்ந்து வாழும் மொராக்கோ, துனீஷியா, அல்ஜீரியா என்ற மெக்ரீப் நாட்டு இலக்கியம் இப்போது அரபி மொழியிலும் அதைவிட அதிகமாக ஃப்ரெஞ்சிலும் எழுதப்பட்டு வருகிறது. அந்த Francaphone இலக்கியம் உடனடியாகத் தமிழில் வந்தால் நல்லது.

அடுத்து சமகால அரபி இலக்கியம் தமிழுக்கு வர வேண்டும். குறிப்பாக, சவூதி அரேபியாவின் Abderrahman Munif போன்றவர்கள். அவரை நான் எந்த ஒரு லத்தீன் அமெரிக்க ஜாம்பவானுக்கும் – உதாரணமாக, கார்லோஸ் ஃபுவெந்தெஸ் – இணையாக வைப்பேன். இவரைப் போல் ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதில் பாதிப் பேர் பெண்கள் என்பதுதான் ஆச்சரியம்.

ஆனால் தமிழில் வரும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் படு மோசமாக இருக்கின்றன. அதில் கவனம் தேவை.

அரூ: பெருவாரியான மக்களை சினிமா, Youtube, Netflix சென்றடைவைதன் மூலம், இந்த நூற்றாண்டு VISUAL நூற்றாண்டு எனத் தோன்றுகிறதா? நாவல், குறுநாவல், கவிதையைத் தாண்டி VISUAL கலைஞர்களுடன் கைகோர்த்துக் கலை உருவாகும் அவசியம் தற்கால எழுத்தாளர்களுக்கு உள்ளதா?

சாரு: நிச்சயமாக உள்ளது. இனிமேல் அதிகமாக புத்தகங்கள் வாசிக்கப்பட்டுக் கேட்கப்படும். கிராஃபிக் நாவல்கள் வரும். இன்னும் என்னால் இப்போது அனுமானிக்க முடியாதபடியெல்லாம் புனைவெழுத்து மாற்றம் காணக் கூடிய நிலை வரும்.

சித்ரா ரமேஷ்: சாரு என்றாலே வாழ்க்கையைக் கொண்டாட்டமாகக் குதூகலிக்கும் ஒரு பிம்பம் இருந்தது. இப்போது அந்த பிம்பம் எப்படி மாறியிருக்கிறது என நினைக்கிறீர்கள்?

சாரு: இப்போதும் அப்படியேதான் இருக்கிறது. இந்தக் கொரோனா காலத்துக்கு முன்பு வரை நண்பர்களைச் சந்தித்துக்கொண்டுதான் இருந்தேன். மாதம் ஒருமுறை அவர்களோடு இரவு முழுவதும் அளவளாவுவேன். ஆனால் கொண்டாட்டம் என்பது மனம் சம்பந்தப்பட்டது. அச்சத்தையும் ஆசையையும் பற்றையும் தாண்டியவனுக்கு வாழ்க்கை எப்போதுமே கொண்டாட்டம்தான். நேற்று ஒரு நண்பர் போன் செய்தார். அவர் வயது அறுபது இருக்கும். தன் முப்பது வயது மகனுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது என்று வருத்தத்துடன் சொன்னார். இன்று பூராவும் அழுதேன் என்றார். எனக்கு வேடிக்கையாக இருந்தது. முப்பது வயது மகனுக்கு வந்தால் இவருக்கு என்ன என்று தோன்றியது. மகன் மீது கொண்ட பற்றுதான் இவரின் துக்கத்துக்குக் காரணம். இது போன்ற பெரும் பெரும் துக்கக் காரணிகளை என் வாழ்விலிருந்து அறுத்து எறிந்துவிட்டேன். துக்கமே இல்லாத வாழ்வுதான் கொண்டாட்டம். சரி, உங்களைத் தூக்கி ஜெயிலில் போட்டால் அதைக் கொண்டாட்டம் என்பீர்களா? ஆமாம். அங்கே போய் அதிகாரியிடம் கேட்டுக் காகிதங்களை வாங்கி ஒரு நாவல் எழுதுவேன். இங்கே குடும்பத்தில் இருந்துகொண்டு இருபத்து நான்கு மணி நேரத்தில் ஐந்து மணி நேரம்தான் எழுதக் கிடைக்கிறது. சிறையில் பத்து மணி நேரத்துக்கு மேல் கிடைக்குமே? அது கொண்டாட்டம் இல்லையா? இதோ இப்போது கொரோனா மரணச் செய்திகளாக வந்துகொண்டே இருக்கிறது. தினம் தினம் செய்தி. மிகவும் நெருக்கமானவர்கள். அவர்கள் அடுத்த உடலைப் பெற்று மீண்டும் உலகை நோக்கி வருவார்கள் என்றுதான் தோன்றுகிறது.

மனிதன் இயற்கையை அவமதித்தான். வெட்டிச் சாய்த்தான். ரணகளம் பண்ணினான். இயற்கை அவனைத் தண்டிக்கிறது. இப்போதைய நிலைமையை இப்படித்தான் பார்க்கிறேன்.

எது பற்றியும் வருத்தம் இல்லை. பற்றை அறுத்துவிட்டேன்.

அரூ குழுவினர் and சாரு நிவேதிதா

View Comments

  • மிக முக்கியமான நேர்காணல். இதுவரை பாடிக்காத சாருவின் வேறொரு perception இதன் மூலம் வெளிவந்திருக்கிறது. அற்புதம்.

  • பல்வேறு எழுத்தாளர்களையும், பல நாடுகளின் கலாச்சாரங்களையும், சிறுபத்திரிகை வரலாற்றையும் பற்றி தெரிந்துகொள்ள உதவியது. இந்த நேர்காணல் மூலம் சாருவின் ஆளுமையைப் பற்றி மேலும் பல விஷயங்களை தெரிந்துகொண்டேன்.

  • சாருவின் பேட்டியில் இருந்து கூட உலக இலக்கியம் முதல் உள்ளூர் இலக்கியம் வரை தெரிந்து கொள்ள முடியும் என்பது வாசகர்களின் வரம் என்றே எண்ணுகிறேன்

Share
Published by
அரூ குழுவினர் and சாரு நிவேதிதா

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago