சிறுகதை

நான்காம் விதி

10 நிமிட வாசிப்பு

“இந்தப் போராட்டங்கள் தேவையா? நாம் தோற்றுப்போய்விட்டோம் அல்லவா? கால் கடுக்க நிற்பதில் என்ன பிரயோஜனம்? தண்ணீர் வேண்டும், தொண்டை வறண்டுவிட்டது. மாலிக் இதைப் பற்றி என்ன சிந்தித்துக்கொண்டு இருக்கிறாய்? பேசு, நான்கு மணிநேரம் ஆகியிருக்கும் உன்னுடைய வார்த்தைகளைக் கடைசியாக என் செவிகள் உள்வாங்கி. உனக்குப் பிரமை பிடித்துவிட்டது. நீயும் என்னுடன் வா, நான் உன்னை அழைத்துச்செல்கிறேன். தலைவரிடம் அனுமதி வாங்கிக்கொள்ளலாம். பேசு மாலிக். அய்யோ என்ன கொடுமை இது? பசி வேறு வாட்டுகிறது. காட்டமான இவ்வெயில் உன்னைப் பொசுக்கவில்லையா? மறுபேச்சும் வரவில்லை. மாலிக் என்னவாயிற்று?”

மாலிக் நினைவிழந்தவனைப் போலக் கீழே விழப்போனான். தம்போ அவனைத் தாங்கிப்பிடித்திக்கொள்ள, கூட்டத்தினர் இருவரையும் முன்னே நகர வைத்துத் தூரமாய் இருந்த ஒற்றைப் பனைமரத்தின் கீழே அமர வைத்தனர். தம்போ இந்தப் பெரிய தீவிற்கு வந்த நாள் முதல் இன்றைக்கு வரை அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் மாலிக் மட்டுமே. சூழ்ந்து நின்றுகொண்டிருந்த கூட்டம் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒருவருக்கொருவர் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே சென்றனர். தம்போ சென்றவர்களை நோக்கிப் புலம்பிக்கொண்டிருந்தான்.

“நான் அடுத்து என்ன செய்ய வேண்டும் கூறுங்கள். இவன் என் நண்பன். அசைவின்றிக் கிடைக்கிறான். இதோ பாருங்கள், எப்படி இவனை எழச்செய்வேன். என்னுடன் இருக்கும் பனைமரத்தாயே, நீ எனக்கு உதவு. இவனைக் குணப்படுத்து.”

தம்போவின் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவனுக்கு இயற்கையின் ஒவ்வொரு படைப்புமே இறைவன். தம்போ குழந்தையாய் இருக்கும்போது வலுவில்லாதவன் போல இருந்தான். அவனுடைய தாய் அவர்களுடைய மொழியில் பலமானவன் என்ற அர்த்தத்தில் தம்போ எனும் பெயரிட்டார். ஆனால் இன்னும் அவன் பலமில்லாதவன் போலத்தான் இருந்தான். ஒல்லியான தேகமும் கருமை படர்ந்த தோலும் நெடுநெடு உயரமும் சுருள் முடியும் எங்கிருந்தாலும் அவனைத் தனியாய் அடையாளப்படுத்திக் காட்டும்.

தம்போ நம்பிக்கையுடன் அவர்கள் குலமொழியில் பாட ஆரம்பித்தான். கைகளை மேலே உயர்த்தி, முழங்காலிட்டு, மெதுவான குரலில் பாட ஆரம்பித்தான். அவனின் வெளிறிய உதடுகள் வழியே மொழி வளைந்து திரிந்து எழுந்தது. அது கேட்பதற்குக் காற்றுடன் ஊடுருவி உயிர்க்கொண்டு குழைவது போல இருந்தது. ஆன்மாவை நெருக்கி முத்தமிடுவது போல மென்மையாய் அவ்விடத்தின் சூழலை அழகாய் மாற்றிக்கொண்டிருந்தது. மாலிக் மெதுவாய்த் தலையைத் தூக்கி, “எல்லோரும் சென்றுவிட்டார்கள் அல்லவா?” என்று கேட்டான்.

“கடவுளே நன்றி, மாலிக் நீ அமைதியாகப் படுத்துக்கொள். தலைவரே சமிக்ஞை கொடுத்துவிட்டார். நான் உன்னோடு இருப்பேன். கடவுளுக்கு நன்றி.”

“அய்யோ முட்டாளே! நீயும் நம்பிவிட்டாயே. இது எல்லாமே என்னுடைய திட்டம். வெயிலில் எவ்வளவு நேரம் கால் வலிக்க நின்றிருப்போம். உணவுகூடச் சரியான அளவு கிடைக்கவில்லை. முதியவர்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பெருமளவு சென்றுவிட, இளைய வயதில் இருக்கிறோம் எனும் காரணத்தால் குறைவான அளவே கடந்த இரண்டு வாரமாக நமக்குக் கிடைத்திருக்கிறது. வயிறு எல்லோருக்கும் பொதுவானதுதானே.”

தம்போ இன்னும் தெளிவில்லாதவன் போல, “நண்பா, நாம் தலைவரிடம் அனுமதி பெற்றே வந்திருக்கலாம். இது ஏமாற்று வேலை. அவர் நல்லவர். அனுமதித்து இருப்பார்.”

மாலிக் தலை சாய்ந்தபடியே, “அதற்காக நாம் கடவுளிடம் மன்னிப்பைக் கேட்கலாம். அவர் மன்னிப்பார். இரக்கமானவர் அல்லவா இலாஹ்.” இருவரும் சிலநொடி கண்களை மூடி இறைவனிடம் மன்னிப்பைக் கோரினர்.

வெயிலில் களைப்படைந்த இருவருக்கும் பனைமர நிழல் ஆசுவாசமாக இருந்தது. ஓலைகள் உரசி வீசிய காற்று இதமாய் இருந்தது. இருவருக்கும் மற்றொருவர் துணையாய் இருப்பது நிம்மதியைக் கொடுத்தது. மாலிக் தம்போவை நோக்கி, “நீ பேசும் மொழிக்கும் பாடிய பாடலின் மொழிக்கும் எவ்வித ஒற்றுமையும் இல்லையே. அப்படி நீ என்ன வேண்டினாய்?”

தம்போ வழக்கமான புன்னகையுடன், “அது எங்கள் மூதாதையரின் மொழி, அதற்குப் பெயர் இல்லை. வாய்ப்பாட்டு வழியாகவே என் அன்னையிடம் இருந்து கற்றுக்கொண்டேன். இறைவனிடம் நேரடியாக உரையாடும் மொழி. நான் பாடியது கடவுளை நம்முடன் அழைக்கும் பாடல். அதன் அர்த்தம் ‘இறைவனே, நீயே முதலானவன், நீ பாறையைப் போலக் கடினமானவன், நீ மழையைப் போல இரக்கமானவன். நீ காற்றைப் போல நிறைந்திருப்பவன், நீ நெருப்பைப் போலத் தூய்மையானவன். நீ ஆகாயத்தைப் போலப் பரந்திருப்பவன். என் துக்கத்திலும் மகிழ்ச்சியிலும் என்னுடன் இருப்பவன். உன்னை அழைக்கிறேன், என்னிடம் வா. என் தோள்களை உன் கைகளால் வருடு. என் காயங்கள் ஆறி, என் வலிகள் குறையும்’.” கூறிவிட்டு மெலிந்த கைகளால் தாடையைத் தடவினான்.

மாலிக் தம்போவை நோக்கி, “ஆம், இறைவன் நம்மோடு இருப்பார். நம்முடைய இறைவன்தானே அப்பெரிய வாயில் கதவின் மறுபுறம் இருப்பவர்களுக்கும்? எந்த மொழியிலும், எந்த இனத்தவருக்கும் இறைவன் பொதுவானவனாகத்தானே இருக்க வேண்டும்? இந்தப் பிரபஞ்சம் ஒன்றுதான் எனில், இது ஒருவழியில்தான் உருவாக்கப்பட்டிருக்கும் எனும் பட்சத்தில், அதனை உருவாக்கியவனும் ஒருவனாகத்தானே இருக்க முடியும்? நம்மை ஏன் அவர்களுடன் வாழ அனுமதிக்க மறுக்கிறார்கள்? நாம் என்ன சபிக்கப்பட்டவர்களா?”

தம்போ பதிலேதும் சொல்லாமல் தலையை வானை நோக்கி வெறித்தபடி இருந்தான். நீலவண்ணம் வியாபித்து விரிந்திருந்தது. சிறுவனாய் இருந்தபொழுது கதைகள் இல்லாத இரவே அவனுக்கில்லை. பாய்ந்தோடும் விலங்குகளும் உயரப் பறக்கும் பறவைகளும் அவனுள் நிறைந்திருந்தன. அவனுடைய அம்மா பெரும்கதைகளின் ஊற்றாகவே அவனுக்குத் தெரிந்தாள். எப்போது கேட்டாலும் கைகளைக் காற்றில் ஆட்டியபடி கதைகளைச் சொல்வாள். அற்புதமான கதைச்சொல்லி. அவன் பிறந்தபொழுது வானத்தில் வெண்ணொளி வீசி, பறவைகளும் விலங்குகளும் அவனின் வீட்டு முன் வந்து பாடியபடி வாழ்த்தியதாம். சிறுத்தைப்புலி ஒன்று அவன் கால்களை நாவைக்கொண்டு வருடி ‘உனக்கு என்னைப் போன்ற வேகமான கால்கள் கிடைக்கும்’ என்றும், யானை ஒன்று ‘நீ என்னைப்போல வலுவானவனாக வருவாய்’ என்றும், நீண்ட அலகுடைய நாரை ‘காற்றைக் கிழித்துக்கொண்டு நீ பறப்பாய்’ என்றும் வாழ்த்தியதாம். இவை அனைத்தையுமே நேரில் அவன் கண்டதில்லை. அவற்றின் உருவங்களையும் கதைகள் வழியாகவே அவன் உருவகப்படுத்திக்கொண்டான்.

நீண்ட நேரம் அமைதியாகவே இருந்த தம்போவை மாலிக் படுத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான். இதுபோன்ற சமயங்களில் அவனிடம் பேசிப் பலனேதுமில்லை. வழக்கமான ஒன்றுதான் இது. மாலிக் கண்களை மூடிக்கொண்டான். வானில் எங்கிருந்தோ வீசிய குண்டுகள் அவன் மேல் விழுவதைப் போல உணர்ந்தான். மாலிக், சிவந்த தேகம் உடையவன். பழுப்பு நிற முடியும் நீலக்கண்களும் நீண்ட கூரிய மூக்கும் எந்நிலையிலும் அவனை அழகான தோற்றத்தில் காட்டும். குண்டுமழை பொழியும் பிரதேசத்தில் பிறந்தவன். பிறந்தது முதலே ஓரிடத்தில் நிலையாய் வாழாதவன், ஓடிக்கொண்டே இருந்தான். அவன் பிறந்த பிரதேசத்தில் இயல்பாகவே குண்டுகள், துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கும். சிறுவனாய் இருக்கும்போது ஒரு கொடிய இரவில் தந்தையையும் தாயையும் இழந்தவன். இவனுக்கும் சொல்லிக்கொள்ள உறவு என்று யாருமில்லை. அன்றில் இருந்து நகருதலையே நிலையாய்க் கொண்டவன்.

தம்போ மத்தியகிழக்கு நாடுகளின் மையமான பிரதேசத்தில் ஒரு உணவகத்தில் உதவியாளனாகப் பணிப்புரிந்து கொண்டிருந்த சமயம் அஜிதனைச் சந்தித்தான். அவன் இந்தியத் துணைக்கண்டத்தைச் சார்ந்தவன். எப்போதும் புன்னகைப்பது போலவே காட்சியளிக்கும் ஒரு முகம் அவனுக்கு. மெலிந்த உடலை கொண்டிருந்தாலும் வலுவானவனாக இருந்தான். அவ்வூரில் வெப்பம் படரும் முன்னே விழிப்பான். பிறகு உடலை வளைத்து சிலமணி நேரம் பலவித நிலைகளில் நிற்பான். அவனின் கடவுள்கள் தம்போவிற்கு ஆச்சரியத்தை அளித்தன. அஜிதன் சொல்வான், “எங்களுக்குப் பலகோடி தெய்வங்கள் உண்டு, அழிவையும் பிறத்தலையும் இருத்தலையும் அவர்களே கொடுக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் முதன்மையானது பிரம்மம். அதுவே எல்லாம், எல்லாமும் அது.”

அக்காலகட்டம், எங்கும் நோய்கள் மனிதர்களைக் காவு வாங்க ஆரம்பித்திருந்தது. புவி வெப்பமாகி, என்றிலிருந்தோ அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்த வைரஸ்கள் மீண்டும் உயிர்த்தெழ, பிணந்தின்னிக் கழுகுகள் எங்கும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. உலகநாடுகள் அவசர அவசரமாய்ப் பிரகடனங்கள் பிறப்பித்து நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்க, இருப்பினும் புதிய நோய்கள் பிறந்துகொண்டே இருந்தன. இப்போதைக்கு உலக மருத்துவக் குழுமத்திற்கு இருக்கும் பெரும் சவால் சார்சின் புதிய பரிணாமம். மனிதர்கள் ஒவ்வொரு வைரஸுக்கு மாற்று மருந்தைக் கண்டறிய அவை அதற்கு எதிராய் வேறொரு பரிணாமத்தில் தன்னை மீள்உருவாக்கம் செய்கின்றன. தம்போ எவ்வித நோயாலும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் அச்சம் அவனைச் சூழ்ந்துகொண்டிருந்தது. அந்நாட்களிலும் அஜிதன் இயல்பாகவே இருந்தான். சிலநாட்களில் அஜிதன் லாசா செல்லப் போவதாகக் கூறினான். அவர்களின் இறுதிச் சந்திப்பில் அஜிதன் தம்போவிடம், “இதனை எதன்கணக்கில் எடுத்துக்கொள்ள? நடப்பவை எல்லாமே வினையின் பயன். நம்முடைய எல்லா செயலும் அதன் வினைப்பயனும் எப்போதுமே நம்மைப் பின்தொடரும். நியூட்டனின் மூன்றாம் விதியைப் போன்றது. எந்த ஒரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு. இன்னொரு விதி உண்டு, பலர் அறியாதது. ஒன்றின் இயல்பை, அமைப்பை, தன்மையைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டே இருந்தால், ஒரு நிலையில் அது தன்னைத் தானே மீண்டும் அழித்து, உரித்து மீளுருவாக்கம் அடையும். அந்நிலையில் பழைய தன்மையும் இயல்பும் அமைப்பும் மீண்டும் வந்தடையும். அதுதான் நிகழ்கிறது நம் பிரபஞ்சத்திற்கு. நடக்கும், அதுதான் இயங்குதல். வட்டம் போலச் சுற்றிக்கொண்டே இருக்கும். நின்றுவிடுவது அபத்தம். இயங்கு! தம்போ நீ எங்கிருந்து வந்தாய்? இப்போது எங்கேயிருக்கிறாய்? நீயும் செல், நீயும் பயணி. வாழ்வை ருசிக்கத் தெரிந்தவன் பயணி.”

தம்போ தயக்கத்துடன், “ஒவ்வொரு இரவும் என்னை ஏங்க வைக்கிறது. நிஜத்தில் நான் மிகவும் முன்னெச்சரிக்கை நிறைந்தவனாய், எதிலும் நுண்ணுணர்வைப் படரவிடுகிறேன். விளைவு என் கற்பனை வற்றிவிட்டது. இரவு ஏனோ என்னிலை கொஞ்சம் மாறுதலாகச் செயல்படுகிறது, அங்கே இந்த தம்போ இல்லை. அவனுக்குப் படர்ந்த பார்வை இல்லை. ஒரே தீர்க்கமான பார்வை, ஒருத்தியை நோக்கி. அவளின் மொழியில் ஒரு உலகம் வாழ்கிறது. எல்லாமுமே நிறைந்த உலகம். அது ஒரு ஏகாந்தவெளி. அதனை ஆளுபவள் என் அம்மா. எங்கோ ஒரு மூலையில் அவள் வாழ்கிறாள் என்பதை என் உள்மனம் நிச்சயப்படுத்துகிறது. அவளின் கதைகள் இன்னொருமுறை என் முன்னே விரியும். அவள் மட்டுமே என் பயணம். எங்கே செல்வேன்? பயணிக்க வேண்டும், ஆனால் திசை எது?” என்றான்.

அஜிதன் மென்புன்னகையுடன், “ஒன்றை நீ தேட விழைகிறாய், தேடலே இல்லாமல்,” என்றபடி நகர்ந்தான். தம்போ அச்சந்திப்பின் பின், பல பிரதேசங்களுக்கு சென்றிருப்பான். இறுதியில் இத்தீவில் இப்பனையின் அடியிலே கதைச்சொல்லிக்காகக் காத்திருக்கிறான்.

தம்போ கண்களை மூடியிருந்தான். பின் விழிக்கையில் பனைமரம் தலைசிலுப்பிக் கைகளை விரித்து, தாழ்ந்து அவனை அள்ளிக்கொண்டது. அதன் கிளைகள் சுருள்சுருளாய் நீண்ட முடியாய்க் காற்றில் பறந்தன. தம்போவின் கைகள், கால்கள், உடல் சிறுத்து அவனைக் குழந்தையாய் ஆக்கின. பனைமரம் சுருங்கி ஒரு கதைச்சொல்லியாய் மடியில் அவனை கிடத்தி, விரல்களால் கன்னத்தை வருடி, உதடுகளால் நெற்றியில் முத்தமிட்டது. கண்கள் கூச விரல்களால் கண்களைக் கசக்கி மறுமுறை விழித்துப் பார்த்தான். சுற்றிலும் தகரக்கோட்டைகள், வெக்கையான புழுங்கல் வாடை வீசும் தெருக்கள். அவனின் சிறிய கண்கள் அவளை நோக்க, உதடுகள் மெலிதாய் விரிய அவள் சிரித்தாள். எழுந்து தன்னைப் போர்த்திய துணியை அவள் விரிக்க, எல்லையெங்கும் பசுமை தெறிக்கும் புல்வெளி பிறந்தது. ஆளுயர மரங்கள் மஞ்சள் வண்ணப் பூக்களை அவன்மேல் உதிரச் செய்தன. பூனை முனங்கும் ஓசை கேட்டு அவன் தலையைத் திருப்பினான். சிறுத்தைக்குட்டி ஒன்று ஓடிவந்து அவளின் பாதங்களைச் சுற்றிச் சுற்றி ஓடியது. அவன் கண்களில் ஒளி மறைய, பெரும்நிழல் விழ, அவன் கைகளை மேலே தூக்க நீண்ட அலகுடைய நாரை இவன் பக்கமாய் வந்திறங்கியது. நிலம் அதிர பயம் கொண்டு நடுங்கினான். மலை ஒன்று பெரும் சாளரம் போலக் காதுகளை வீசி, அதன் தும்பிக்கையால் அவனின் தேகம் பட வருடியது. அவனின் கதைச்சொல்லி அவனருகே அமர்ந்தாள், கண்களில் நீர் கசிந்துகொண்டிருந்தது. தம்போவின் கை, கால்கள், உடல் நீண்டு தற்போதைய நிலையை அடைந்தான். அவளின் பாதங்களைத் தொட்டான், ஈரமான நிலத்தைபோலக் குளிர்ச்சியாய் இருந்தன. மாலிக்கின் குரல் கேட்டுப் பட்டென விழித்தான். பனைமரம் காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது.

மாலிக் மெலிதான குரலில் கூறினான், “தீவின் புதிய அதிபர் ருக்லா, கடும் சர்வாதிகாரி. அமைதியான பிரதேசம் எனப் பல நூற்றாண்டுகள் முன் பெயரெடுத்த நார்வேஜிய இனத்தைச் சார்ந்தவர். இப்பெரும் சுவர் எழுப்பும் திட்டம் வடிவமைத்தது அவரே. மருந்துகள் இல்லை என்று நம்பும் நோய் பிடித்த மனிதர்களைச் சுவருக்கு வெளியே வலுக்கட்டாயமாக அனுப்பிவிடுவதைச் சட்டமாக இயற்றியவர்.”

உண்மையில் அன்றைக்கும் அத்தீவைத் தவிர வேறு பிரதேசங்களில் மனிதர்கள் வாழ்ந்தார்கள். எப்படியோ அவர்கள் இத்தீவைக் கண்டுபிடிக்க, பெரும் கப்பல்களில் அகதிகளைப் போலக் கூட்டம் கூட்டமாய் மக்கள் இங்கே வந்துகொண்டு இருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கமே மனிதகுலம் அச்சுறும்படி அமைந்தது. இந்தியத் துணைக்கண்டமும் சீனா பிரதேசமும் புதிய நோய்க்கொல்லி நுண்கிருமிகளால் தாக்கப்பட்டு நிலைகுலைந்து போயிருந்தன. மனிதர்கள் நம்பிக்கையிழந்துவிட்டார்கள். அந்நம்பிக்கையை இன்றும் மீட்டெடுக்க இயலவில்லை. இந்நூற்றாண்டின் இப்பாதி கொஞ்சம் இரக்கம் காட்டியது. கண்டங்கள் அறியா இத்தூரப்பிரதேசம் பசிபிக் பெருங்கடலின் ஒரு முனையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிய, பணம் படைத்தோர் உரிய முறையில் கடவுச்சீட்டு பெற்று இங்கே தஞ்சம் புகுந்தார்கள். பெரும்பாலான உயிரினங்களின், தாவரங்களின் டிஎன்ஏ அவர்களிடம் இருந்தன. முடிந்தவரையில் எல்லாமே மறுஉருவாக்கம் செய்யப்பட்டன. மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டியவை எனக் கருதினார்கள். அவையனைத்தும் கணினிகளில் சேமிக்கப்பட்டன. விடுபட்டுப்போன மொழிகள் மக்களிடம் தேடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. நிம்மதியான இரவுகள் அவர்களைக் கடந்துபோயின. எல்லாமே நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்த வேளையில், புதிய நோய் எல்லாவற்றையும் பாழாய் ஆக்கிவிட்டது. இந்தத் தீவே பெரிய மருத்துவமனை போலக் காட்சியளித்தது.

அதேவேளை, எப்படியோ தம்போவும் மாலிக்கும் இத்தீவை கண்டறிய, ஏற்கனவே அகதிகளாய் வந்தவர்கள் உள்நுழைவதற்குப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டனர். தம்போ இங்கே வருவதற்கு வாழ வேண்டும் என்ற பிடிப்பு மாத்திரமே காரணமில்லை. ஒரு கனவு போல, அவனின் அம்மா இங்கே வாழ்வதை ஆழ்மனம் நிச்சயப்படுத்தியது. காரணத்தோடு கூடிய நம்பிக்கை இறுக்கமானது. எல்லாமே நடந்தாக வேண்டும். தம்போவின் பதின்வயதில் எங்கோ நகர்ந்து போய்க்கொண்டிருந்த அவர்களின் ஓடம் இறுதியாய் ஒரு பெரிய கப்பலை அடைந்தது. பெண்களையும் குழந்தைகளையும் ஏற்றுக்கொண்ட அக்கப்பல், வாலிபனாய்க் காட்சியளித்த தம்போவை அனுமதிக்கவில்லை. அவனோடு சேர்த்து எத்தனையோ அப்பாக்களுக்கு அண்ணன்களுக்கு அது அவர்களின் வேர்களோடு இறுதிச்சந்திப்பாய் அமைந்தது. தம்போவின் அம்மா அக்கப்பலின் மேல் நின்றபடி கைகளால் ஒரு கதையை வரைய ஆரம்பித்தாள். அது ஒரு ஊர்ச்சுற்றிக் குருவியின் கதை. அவள் கைகளின் அசைவில் தோன்றிய மொழி தம்போவின் விழிகளுக்கு மாத்திரம் புரியும்படி இருந்தது. அது வீட்டை விட்டுத் தனியே செல்லும் குருவியின் பயணம். அதில் கழுகுகள் நிறைய. வெயில் தகிக்கும் நீர் வற்றிப்போன நிலம் அது. எங்கெங்கோ பறந்து திரிந்து தனக்கான துணையைத் தேடியபின் அக்குருவி கூடு திரும்பும்.

தம்போ அடிக்கடி அக்குருவிக்கதையை நினைவில் காண்பான். பின், எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் அவனும் இத்தீவில் நுழைந்துவிட்டான். கூடவே மாலிக்கும் இருக்கிறான். இவர்கள் தீவிற்கு வந்தடைந்த கப்பலில் தினம் இருமுறை மாத்திரமே உணவு கிட்டும். அதிலும் சிலசமயம் இளைஞர்களுக்கு ஒருமுறை மாத்திரமே உண்ண உணவு மிச்சம் இருக்கும். உணவில்லாத நிலையில் ஒருநாள் தன்னிடம் இருந்த மிச்சம் பிடித்த ரொட்டிகளை மாலிக்கிற்கு அளித்தான். ஒருநாள் பழக்கம் தினமும் தொடர்ந்தது. தம்போ எதையும் உண்டு வாழப் பழகியவன். நாள் முழுவதும் தண்ணீர் போதும். முற்பிறவியில் ஒட்டகமாய்ப் பிறந்திருப்பான் போல. ஆனால் மாலிக் பசியால் தினமும் துடித்தான். பசியால் பிணைத்த உறவு இருவருக்கும். அவர்கள் வந்திறங்கிய வேளை, நோய் இங்கே கப்பலில் உள்ள எவருக்கும் பீடிக்கவில்லை. ஆயினும் மரணத்தின் பெயரால் அச்சப்பட்ட மனித இனம் அப்பெரும்சுவரைத் தாண்டி இவர்களை அனுமதிக்கவில்லை.

மாலிக் மல்லாந்து படுத்தவாறு, “உன்னைச் சந்திக்கும் முன் சாவுக்காகக் காத்திருந்தேன். இப்போது அதனைத் தள்ளிப்போடுகிறேன். உன் அம்மாவைக் காண வேண்டும். ஒருகதை அவளின் கைகள் அசையக் கேட்க வேண்டும், பின் இறக்க வேண்டும்.”

“ஏன் சாவைப் பற்றியே சிந்திக்கிறாய்? உன்னை மகனாகவே அவள் பாவிப்பாள். நாம் இணைந்து மகிழ்ச்சியான நாட்களை வரவேற்போம்,” என்றான் தம்போ. “அவள் கூறிய கதை ஏதும் நினைவில் உண்டா?”

“நிச்சயமாக, பெரும்தீ நெருப்பைப் பற்களாய்க் கொண்ட அரக்கன் போல ஜுவாலைகளைப் பசுமையான காடு எங்கும் வீசி எரித்துக்கொண்டிருந்தது. விலங்குகள் எல்லாம் ஓடி ஒளிந்து பயத்தால் நடுங்கி வேறுபக்கமாய் நகர ஆரம்பித்தன. ஒரு கழுகு மாத்திரமே உயரப் பறந்து அந்தக் காட்டையே சுற்றிச் சுற்றி வந்தது. வானை அவ்வப்போது நோக்கியது, விசாலமான வெளியில் மேகங்களே இல்லை. இரண்டு நாள் ஆனது, தூரப்போயிருந்தால் வாழ இடம் உண்டு. உணவும் இல்லை. களைப்பில் பறந்தது. நம்பிக்கையில் மாத்திரமே பறந்தது. தீடீரென வானம் இருண்டது, மழைமேகங்கள் பொழிய ஆரம்பிக்க சிலமணி நேரங்களில் நெருப்பு அமிழ்ந்து காடு அமைதியானது. கழுகு கீழிறங்கியதும், சாம்பலில் இருந்து புழுக்கள் வெளியே வர, அதை உண்டது. எல்லாமே நம்பிக்கையால் நடந்தன. அழிவு என்பது இன்னொன்றின் பிறப்பே.” என்றவாறு அமைதியானான் கண்களை மூடியபடி.

மாலிக் அவன் தோள்களை அழுத்தி, “நாமும் நம்புவோம், உன் அம்மா ஒருவேளை சுவையான உணவுகளோடு நமக்காகக் காத்திருக்கலாம்,” என்றான் புன்னகைத்தபடி.

தம்போவுக்கு உள்நுழைய இப்போராட்டம் தடையாய் இருந்தாலும் சுவரின் அப்பக்கத்தில் அவனின் அம்மா இருப்பதாகவே நம்பினான். அதனாலே, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு இங்கே இப்போது காத்திருக்கிறான். பெரும்கதைகளுடன் அக்கதைச்சொல்லி இன்னும் உயிர் வாழ்கிறாள். அவள் கதைகளில் அப்பெரும் கண்டத்தின் ஓடும் கொலைமிருகங்களும் பெரிய சாந்தப்பிராணிகளும் உயரப் பறக்கும் பறவைகளும் அவளோடு காத்திருக்கின்றன. அதனை அவளின் மகனிடம் சொல்லியாக வேண்டும். இது போதாதா தம்போ உயிர் வாழ்வதற்கு? மாறாக, மாலிக் எல்லாவற்றையும் இழந்துவிட்டான். அவன் வயிற்றையும் இழந்துவிடவே துடித்தான். எப்போதும் பசியால் வாடும், கொடும் வலியில் துடிக்கும் அவனின் சிறிய வயிற்றைத் தூக்கிச் சுமக்கவே அருவருப்பில் அலைந்தான். கப்பலில் அவனுக்கு அறிமுகமான தம்போ, நம்பிக்கையில் சுழன்று திரிந்த ஒரு ஈயாகவே மாலிக் கண்களுக்கு அகப்பட்டான். இருவருக்குமே நிச்சயமற்ற எதிர்காலம் இருந்தாலும், தம்போ அங்கே நம்பிக்கையுடனும் மாலிக் நம்பிக்கையற்றவனாகவும் திரிந்தார்கள்.

போராட்டம் உச்சநிலையை அடைந்தது. தலைவர் இன்னும் அதே கூரிய பார்வையுடன் அப்பெரிய வாயில் கதவை வெறித்தபடி நின்றுகொண்டிருந்தார். இளம்தாய்மார்கள் இடுப்பில் ஏந்திய குழந்தைகளின் வாயின் ஓரமாய் எச்சில் வழிய நின்றுகொண்டிருந்தார்கள். வயதானவர்கள் ஒருவரை ஒருவர் தாங்கியபடி, தலை கவிழ்த்து விழி மாத்திரம் அப்பெரும் வாயில் கதவை உதவி கிட்டாதா எனும் வெறுமையுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.

வெகுநேரம் ஆகியிருக்க வேண்டும். சுவரின் ஒருபக்கக் கதவு திறந்து, வெண்ணுடை தரித்த சிலர் வருவது போலிருந்தது. தம்போவும் மாலிக்கும் பனைமரத்தின் அடியில் இருந்தபடி எல்லாவற்றையும் கவனமாகக் கண்காணித்துக் கொண்டிருந்தனர். உண்மைதான் சிலர் வந்தது. சில நிமிட இடைவேளையில் கதவுக்கு வெளியே காத்திருக்கும் கூட்டத்திலிருந்து இரண்டுபேர் இவர்களை நோக்கி வருவது போலிருந்தது. வந்தவர்கள், இருவரில் யாருக்காவது ஆங்கிலமும் அரபியும் தெரியுமா எனக் கேட்டார்கள். மாலிக் ஆமாம் என்பது போலத் தலையசைத்தான். மாலிக்கைத் தலைவரோடு உள்நுழைய அனுமதித்தது கூட்டம். தம்போ மாலிக்கை நோக்கி, “அருமையான சந்தர்ப்பம், என் அம்மா நிச்சயமாக எனக்காக உள்ளே காத்திருக்கக்கூடும். நீ அவளிடம் கூறு நான் வெளியே காத்திருக்கிறேன் என்பதை. சிலநிமிடங்கள்தான் இடையே இருக்கின்றன எனக்கும் அம்மாவுக்கும். சொல் அவள் கதைகளைக் கேட்க நான் வந்துவிட்டேன்” என்றான்.

இருவருக்கும் பெரிய பேச்சுவார்த்தைகள் எதுவும் ஏற்கனவே நிகழாமல் போயிருந்தாலும், தம்போ பலமுறை அவனின் அம்மா பற்றி மாலிக்கிடம் பேசியிருந்தான். மாலிக் சரி என்பது போலத் தலையை அங்கும் இங்கும் ஆட்டினான்.

தலைவரும் மாலிக்கும் வந்தவர்களோடு உள்நுழைந்தார்கள். கதவு மூடும் இடுக்கு வழியே மாலிக் தம்போவைப் பார்த்துக் கையசைத்தான். சுவரின் வெளியே காத்திருந்த எல்லாருக்கும் இது ஒருவகையில் வெற்றியாகவே பட்டது. தம்போவிற்கு எண்ண எண்ணப் பலமணி நேரம் ஆகியிருந்த மாதிரி தோன்றியது. தீடிரெனப் பெரும் சத்தம் கேட்க, வானில் வலசை போகும் பெரும்பறவைக் கூட்டம் போலப் புள்ளிகள் தோன்றின. அவை கூட்டத்தை நோக்கி வந்தன. எல்லாமே கொத்துக்குண்டுகள். இருந்தவர்கள் மேலே தெறிக்க, தம்போவின் தலை மட்டும் தனியாய் அவ்வொற்றைப் பனைமரத்தின் மேல் எழும்பி நின்ற ஓலையில் விழுந்து நின்றது. அதன் கண்கள் சுவரின் உள்பக்கம் தெரியும் வண்ணம் இருந்தன. அதில் மாலிக் தம்போவின் அன்னையின் அருகில் செல்வது போல மங்கலாய்த் தெரிய, கண்கள் மூடின.

வைரவன் லெ ரா.

சிறிய நிலப்பரப்பில், அடர்த்தியான மனித நெருக்கமும், எந்நேரமும் மழை பொழிய தயாரான காலநிலையும், தணுத்த காற்றும், முச்சூழ் மலையும், விழி நோக்கும் எல்லை வரை பசுமையும் நிறைந்த நாஞ்சில் நாட்டுக்காரன். ஜெமோவின் 'புறப்பாடு', நாஞ்சிலாரின் 'மிதவை' இரண்டையும் எதேச்சையாக வாசிக்க, புத்தக வாசிப்பு ஆரம்பமானது. அதிபுனைவு, எதார்த்த வாதம், இருத்தலியல், இறையியல், தொன்மங்கள் நோக்கிய பயணி நான்.

காஃகாவின் 'உருமாற்றம்', ஜெமோவின் 'நூறு நாற்காலிகள்' இரண்டுமே என்னுள் பெரும் அதிர்வுகளை படரச்செய்த சிறுகதைகள். அ.முத்துலிங்கம், மண்டோ, இஸ்மத் சுக்தாய் கட்டமைக்கும் சிறுகதையின் வடிவம் கச்சிதமாகச் செதுக்கப்பட்ட சிற்பம் அல்லது அருமையாகத் தொகுக்கப்பட்ட சிம்பொனி போன்றது. ஜெமோவின் இந்தியப் படிமங்கள், தொன்மங்கள், நாஞ்சிலாரின் பகடியோடு கூடிய எதார்த்தம் எனக்கு விருப்பமானவை. மரபிலக்கிய வாசிப்பைத் தொடங்க வேண்டும். வாசிப்பைத் தவிர எழுதுவது பிடிக்கும்.

Share
Published by
வைரவன் லெ ரா.

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago