கட்டுரை

ஜான் பால் சாரு

4 நிமிட வாசிப்பு

11ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘தி சாங் ஆஃப் ரோலண்ட்’ தான் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தின் தொன்மையான காப்பியம். 18ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த வால்டேரின் சுதந்திர மனிதன் கருத்தாக்கமும், ரூஸோவின் இயற்பண்பு வாத சிந்தனைகளும் ஃப்ரெஞ்சுப் புரட்சியும் ஐரோப்பிய அரசியலிலும், தத்துவத்திலும் இலக்கியத்திலும் பண்பாட்டிலும் பெரும் மாற்றங்களை உருவாக்கின. அமைப்புகளைவிடத் தனிமனிதனின் சுதந்திரமும் தேர்வும் முக்கியமானவை எனும் கருத்தாக்கம் உலகெங்கும் பரவத் துவங்கியது. 18ஆம் நூற்றாண்டின் அரசியல் சிந்தனைகளில் ஆதிக்கம் செலுத்திய மொழி என அரசியல் அறிவியலாளர்கள் ஃப்ரெஞ்ச் மொழியைக் குறிப்பிடுவதுண்டு.

உலகம் முழுக்க ஜனநாயகம் மலர்ந்து வந்த காலகட்டத்தில் உலகப்போர்கள் மூண்டன. போர்களின் தாக்கம் இலக்கியத்தில் பிரதிபலிக்கத் துவங்கின. இருத்தலியல், நவீனத்துவம், பின் நவீனத்துவம் போன்ற இலக்கியப் போக்குகள் உருவாகின. இவற்றின் தாயகமாக பிரான்ஸ் விளங்கியது. ஃப்ரெஞ்ச் படைப்புகள் ஐரோப்பிய இலக்கியத்தில் மீப்பெரும் ஆளுமையும் செலுத்தி வந்தன. பிரான்சு மக்கள் தங்களது வளமான இலக்கியச் செழுமையின் மீது பெருமிதம் கொண்டவர்கள். அரசும் பல்வேறு அமைப்புகளை உருவாக்கிப் பெரும் நிதி ஒதுக்கி ஒரு பண்பாட்டுச் செயல்பாடாக இலக்கியத்தைப் பேணி வருகிறது. அதன் விளைவுகளை நாம் ஃப்ரெஞ்சு கலாச்சாரத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் கண்கூடாகப் பார்க்கலாம்.

இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினைப் பெற்றதும் நாளது தேதி வரை மிக அதிகமான நோபல் பரிசுகளை வென்றதும் ஃப்ரெஞ்சு இலக்கியங்களே. நிறுவனமயமாவதில் உடன்பாடில்லை என நோபல் பரிசினை ஏற்க மறுத்த சார்த்தர் உள்பட 17 ஆசிரியர்கள் இதுகாறும் நோபல் வென்றுள்ளனர். வாழ்வின் அடிப்படையான ஆன்மிகமான வினாக்களுக்கு விடை தேடுவதை ரஷ்ய இலக்கியங்களின் சாரம் என்றால் ஃப்ரெஞ்சு இலக்கியங்கள் அரசியல் பண்பாட்டுச் சிக்கல்களையும் தனிமனித உறவுச் சிக்கல்களையும் அதிகம் பேசுகிறது எனலாம்.

ஹொனாரே த பால்சாக், விக்டர் ஹ்யூகோ, ஆல்பெர் காம்யூ, சார்த்தர், ரொமன் ரோலான் ஆகியோர் படைப்புகள் தமிழ் புனைவிலக்கியத்தில் தாக்கத்தை உருவாக்கின. கவிதையில் பர்ரொக், ஆர்தர் ரேம்போ ஆகியோரும், கோட்பாட்டு விவாதங்களில் ஃபூக்கோ, லக்கான், ரோலண்ட் பார்த், தெரிதா ஆகியோரின் ஆதிக்கம் இன்றளவும் நீடிக்கிறது.

ஆனால் இந்த வெகுவாக அறியப்பட்ட பட்டியலிருந்து விலகிய கொடிமரபு ஒன்றிருக்கிறது. தீண்டத்தகாதவை என பெருஞ்சமூகம் ஒதுக்கி வைத்தவற்றை நோக்கி ஒளிபாய்ச்சுவது அம்மரபின் முதன்மைச் செயல்பாடு. அதன் முன்னத்தி ஏர் என்று மார்க்கி தெ சாத்தைச் சொல்லலாம். ஜான் ஜெனேவும், லூயி பெர்டினாண்ட் செலினும் இம்மரபின் இரட்டைக் கதாநாயகர்கள். சேரிகள், கொச்சைச் சொல்லாடல்கள், வன்முறை, பிறழ் உறவுகள், ஓரினச்சேர்க்கை, அதிகார எதிர்ப்பு, மதங்களின் ஆதிக்கத்தை எதிர்ப்பது, குறுகிய தேசியத்திற்கு எதிரான நோக்கு, பரத்தமை, தடுப்புக் காவல், நாடு கடத்தல், திருட்டு, போதை, வதை, பெண்ணியம், உளச்சிக்கல்கள் என இலக்கியத்தின் கரங்கள் தீண்டாத திசைகளிலெல்லாம் விசையோடு சென்று துழாவின. ஒழுங்கு ஃபாஸிஸத்துக்கு இட்டுச் செல்லும் பாதை என்பது இப்படைப்புகளின் சாராம்சம். தலைகீழாக்கங்கள், மறுவிசாரணைகள், கலகம், மீறல், பொதுப்போக்கின் மீதான புறக்கணிப்பு, மலினத்திற்கு எதிரான ஒவ்வாமை இவற்றின் அடையாளங்களாகின. டிரான்ஸ்கிரஸ்ஸிவ் எனும் பெயரால் இவ்வகைமை அழைக்கப்பட்டது.

ஏறக்குறைய நாற்பதாண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் டிரான்ஸ்கிரஸ்ஸிவ் இலக்கிய வகைமையில் தனித்து நடந்து கொண்டிருப்பவர் என்று சாருநிவேதிதாவைச் சொல்லலாம். அவருடையை சிந்தனையையும் இயல்பையும் கொண்ட ஃப்ரெஞ்சு கலையுலகின் மீது அவர் ஆர்வம் கொள்வது இயல்பான ஒன்று. ஒரு காலகட்டத்தில் அவர் தன்னுடைய சிந்தனை மரபிற்கும் ஃப்ரெஞ்சுப் படைப்புலகிற்கும் இருந்த ஒப்புமைகளை வலியுறுத்தத் தொடர்ச்சியாக ஃப்ரெஞ்ச் இலக்கியங்களை, தத்துவங்களை, சினிமாக்களைப் பற்றி எழுதினார். அப்படியாக வந்த நூல்களில் மிக முக்கியமான ஆக்கம் ‘தாந்தேயின் சிறுத்தை’. பிற்பாடு ஃப்ரெஞ்ச் சிந்தனை உலகைப் பற்றிய அவரது தொகை நூல் மெதுஸாவின் மதுக்கோப்பை வெளியானது. பல வகைகளில் தமிழுக்கு மிக முக்கியமான ஆக்கம் இந்நூல்.

மார்க்கி தெ சாத், ஆர்தர் ரேம்போ, ஜான் ஜேனே, செலின், கத்ரீன் ப்ரையா, மாலிகா ஒளஃப்கிர், எஸ்தாஸ் தோனே, ஹெலன் சிஸூ, ஜார்ஜ் பத்தாய், ஃப்ரான்ஸ்வா ஃத்ரூபோ, காலத் எனப் பொதுப்போக்கு அதிகம் அறியாத கலைஞர்களின் உலகத்தைப் பற்றி சாருவிற்கேயுரிய பரவச நடையில் மிக முக்கியமான பல கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. கத்தோகோம்ப் எனும் பிண நிலவறைச் சித்தரிப்புகள், கிங் லியர் நாடகத்தை முன்வைத்து ஃபூக்கோவின் சிந்தனையையும் ஆதிசங்கரரின் பஜகோவிந்தத்தையும் பிணைக்கும் தரிசனம், ஹெலன் சிஸூவின் ‘இந்தியா’ நாடகத்தை முன் வைத்துச் செறிவான அலசல் என விரிகிறது இந்நூல். ஒவ்வொருவரின் படைப்புகளைப் பற்றிப் பேசுகையிலும் அதற்கு இணையான நூல்களையும் தமிழ்ச்சூழலையும் ஒப்புநோக்கி மிக விரிவான சித்திரத்தை அளிக்கிறார். ஃப்ரான்ஸின் மீதான அவரது கட்டற்ற நேசத்திற்குரிய நியாயங்கள் நூல் நெடுகிலும் தொடர்கின்றன.

பிரான்ஸ் குடிமகன் அல்லாத ஆனால் பிரெஞ்சு மொழியில் இலக்கியம் படைத்த டூனிசியா, அல்ஜீரியா, மொராக்கா தேசத்தவர்களின் படைப்புகளை ‘ஃப்ராங்கோபோன் இலக்கியங்கள்’ என்று வகைப்படுத்துவர். ஃப்ராங்கோபோன் இலக்கிய வகைமைகளைப் பற்றியும் சாரு தொடர்ச்சியாக எழுதியும் கவனப்படுத்தியும் வந்துள்ளார். அப்தல்லத்தீஃப் லாபியின் Rue du Retour குறித்து மிக விரிவான இரு கட்டுரைகள் இந்நூலின் உள்ளன. சூரியன் மறையும் பிரதேசங்கள் என அழைக்கப்படும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்த அரபி எழுத்தாளர்களின் ஆக்கங்களுக்கு மக்ரிப் (Maghreb) எழுத்தாளர்கள் என்றும் பெயர். சர்வாதிகாரத்திற்கு எதிராக மனித உரிமை அமைப்புகளோடு இணைந்து போராடிய பல மக்ரிப் எழுத்தாளர்கள் கொடுஞ்சிறையில் தள்ளப்பட்டார்கள். காணாமல் அடிக்கப்பட்டார்கள். அப்படிப்பட்ட எழுத்தாளர்களுள் ஒருவர் மொராக்காவைச் சேர்ந்த தாஹர் பென் ஜெலோன். பாலைவனச் சிறையில் இருட்டறையில் அடைக்கப்பட்ட ஜெலோனின் சகசிறைவாசிகள் சித்திரவதை தாளாமல் ஒவ்வொருவராக மரணமடைகின்றனர். நிமிடத்திற்கு நிமிடம் கொடுமைகள் அதிகரிக்கும் சிறைச்சுழலினால் உருவான உளநிலையைச் சித்தரிக்கும் நாவல் The Blinding Absence of Light. இந்நாவலின் சில முக்கியமான அத்தியாயங்களை சாரு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உள்ளம் நடுங்காமல் அவற்றை ஒருவனால் வாசிக்கவே முடியாது. மொழிபெயர்ப்பு முயற்சிகளில் இருக்கும் ஒவ்வொருவரும் ‘தொழுகை – தவம் – துறவு’ அத்தியாயத்தை அவசியம் வாசிக்க வேண்டும்.

சாருவின் புனைவுகளுக்கும் அபுனைவுகளுக்குமான வேறுபாடு மிக மிக மெல்லியது. அவரது வாசகர்களில் பெருவாரி இளைஞர்கள். தமிழின் கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல், சினிமா உள்ளிட்ட தளங்களில் நிகழ்ந்துவிட்ட தரவீழ்ச்சியோடு தொடர்ச்சியாக மோதிக்கொண்டிருப்பவர். சராசரித்தனத்தின் மீதான அவரது ஒவ்வாமை, நேர்ந்துகொண்ட பாதையின் சமரசமின்மை, இலக்கியத்திற்கான தீவிர ஒப்புக்கொடுப்பு, நெடிய புறக்கணிப்பை மீறிய போராட்டம், ஒழுங்கிற்கு எதிரான அவரது படைப்புலகம், ரசனையை முன்வைக்கும் வாழ்க்கை முறை ஆகியவை மேற்சொன்ன எந்த ஃப்ரெஞ்ச் படைப்பாளிக்கும் இணைவைக்கக் கூடியவை. அவரது எழுத்துக்களின் வழியாக இலக்கிய, சினிமா, இசை ரசனைகளை மேம்படுத்திக்கொண்டவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். இக்கட்டுரையாளர் அதில் ஒருவர். என் சுரணை மீது தொடர்ச்சியாக சாரு தொடுக்கும் போர்தான் அவரை என் ஆசிரியர்களுள் ஒருவராக்குகிறது. ஆசிரியருக்கு வணக்கங்கள்.

செல்வேந்திரன்

22-08-1982-ல் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளத்தில் பிறந்தார். குடும்பச் சூழலால் பள்ளிப் படிப்பு பாதியில் தடைபட்டது. அப்பா நடத்திய தீப்பெட்டி ஆபீஸ்ஸில் வேலை பார்த்தார். தொலைதூரக் கல்வித் திட்டத்தில் அரசியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றார். 2004 முதல் 2008 வரை ஆனந்தவிகடன் குழுமத்தின் சர்க்குலேசன் பிரிவில் பணியாற்றினார். 2009-லிருந்து தி ஹிண்டு குழுமத்தின் விற்பனை மற்றும் வினியோகப் பிரிவில் பணி.

தமிழில் வலைப்பூ எழுத்து ஓர் அலையாகக் கிளம்பியபோது தீவிரமாக இயங்கியவர்களுள் இவரும் ஒருவர். ஆனந்த விகடனில் இவர் எழுதிய ‘முடியலத்துவம்’ தொடர் பெருவாரியான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து தமிழின் முன்னணி அச்சு ஊடகங்களில் கட்டுரைகள், கதைகள் எழுதி வருகிறார். வாசிப்பின் அவசியம், தற்காலத் தமிழிலக்கியம் குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார்.

முடியலத்துவம், பாலை நிலப் பயணம், வாசிப்பது எப்படி?, நகுமோ லேய் பயலே, உறைப்புளி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். வாசிப்பது எப்படி நூல் ஆங்கிலத்தில் 'How to Read?' எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மனைவி திருக்குறளரசி. மகள்கள் இளவெயினி, இளம்பிறையுடன் கோவையில் வசித்து வருகிறார்.

View Comments

  • ஊரில் எல்லாரும் ஏதோ ஒரு விதிக்கு உட்பட்டு –சட்டமோ, தார்மீகமோ, நாகரிகமோ –ஏதோ ஒரு அறத்துக்கு உட்பட்டு சாலையில் ஆடையுடன் காலில் செருப்புடன் போகும்போது ஒருத்தன் நடு ரோட்டில் நின்றுகொண்டு சிறுநீர் கழித்தால், அவனை ‘ட்ரான்ஸ்க்ரெஸ்ஸிவ் இலக்கியவாதி’ என்று புகழ்வார்களா? 40 ஆண்டுகளாக இடைவிடாது சமூக ஒழுக்க விதிகளை மீறிய புண்ணியவான்' என்று விருது கொடுத்து புல்லரிப்பார்களா? பூனா, சூனா போட்டு எழுதுவதுதான் பின் நவீனத்துவமா? புனைவு, அ-புனைவு transgressive என்று ஏதாவது ஒரு பெயரில் சுயதம்பட்டம் மட்டுமே அடிக்கும் பீலா மாஸ்டர்களை யார் தோலுரித்துக் காட்டுவது? நல்லவேளை, தமிழ்கூறும் நல்லுலகம் அந்த மாதிரி எழுத்துலக மோடி மஸ்தாங்களை ‘வைக்க வேண்டிய’ இடத்தில்தான் வைத்திருக்கிறது.

    சுஜாதா ‘மலம்’ என்று ஒதுக்கிய ஒரே ஆசாமியின் எழுத்தை ஜெமோ விருது கொடுத்து மகிழ்வது, ஒருவித ‘தன் முதுகை தானே சொறியும் வேலையே. “என்னைப் பார்; என்னை ஒருவன் “ரூ.5 லட்சம் கொடுத்தால் ப்ளோ ஜாப் செய்வான்” என்று தன் வலைதளத்தில் எழுதினான்; அகனுக்கும் விருது கொடுக்கிறேன்; நான் எவ்வளவு சான்றோன் என்று தெரிகிறதா…?” என்ற சுயவிளம்பர ஆசை.

    மலம் மணப்பதாக ஒரு சிலர் ரசிப்பது, தமிழனுக்கே உரிய பண்பு!

Share
Published by
செல்வேந்திரன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

1 year ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

1 year ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

1 year ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

1 year ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

1 year ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

1 year ago