சங்க இலக்கியமும் நீல் ஹார்பிஸனும்

6 நிமிட வாசிப்பு

இயற்கை, விஞ்ஞானம், கலை — இப்படித் தனித்தனிச் சொற்கள் இருப்பதாலோ என்னவோ, நாம் இவற்றைத் தனித்தனித் துறைகளாகவே பார்க்கிறோம். இவை மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டு, நீல் ஹார்பிஸன் (Neil Harbisson) — உலகிலேயே அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட முதல் Cyborg.

பிறவியிலிருந்தே நீலின் கண்கள் நிறங்களை அடையாளம் காண இயலாதவை. கருப்பு வெள்ளை பார்வைதான் இவருக்குண்டு. அறுவைசிகிச்சை மூலம் தனது தலையில் ஆண்டெனா ஒன்றைப் பொருத்தி, அதை வைத்து நிறங்களை ஒலியாகக் கேட்கிறார். நமக்கு எது பச்சையோ, அவருக்கு அது குறிப்பிட்ட அலைவரிசையில் கேட்கும் சப்தம். சிகப்பு வண்ணத்துக்கு வேறொரு சப்தம். இப்படி எல்லா வண்ணங்களும் அவருக்கு வெவ்வேறு சப்தங்களாகக் கேட்கும்.

image

இவருக்கும் சங்கக் கவிஞர்களுக்கும் என்ன சம்பந்தம்? இயற்கையைக் கூர்ந்து கவனித்து, புரிதல்களை எழுப்பி, அவற்றைக் கலை வடிவங்களாகப் படைத்தனர் சங்கக் கவிஞர்கள். நீல் ஹார்பிஸன் தலையில் பொருத்தப்பட்டிருக்கும் ஆண்டெனாவிற்கு இயற்கையிலிருந்துதான் உந்துதல் பெற்றார். முதலில் நெற்றியில் வட்டப் பொட்டாகக் கருவியைப் பொருத்த நினைத்தவர், தன்னைச் சுற்றி உள்ள எல்லாத் திசைகளிலிருந்தும் வண்ணங்களைக் காண, பூச்சிகளின் ஆண்டெனாவிலிருந்து உத்வேகம் பெற்று, தனது ஆண்டெனாவை வடிவமைத்தார். ஆரம்பத்தில் வண்ணங்களை ஒலியாகக் கேட்க நினைத்தவர், மனிதர்களின் குரல்களில் வண்ணங்களைக் காண ஆரம்பித்தார். உடனே அவர் சந்திக்கும் மக்களின் குரல்களை வண்ணப் படங்களாக வரைந்து, voice portrait (குரல்படம்) உருவாக்கத் துவங்கினார்.

வானவில்லின் வண்ணங்களை ஒன்று சேர்த்தால் வெள்ளை வண்ணம் உருவாகிறது என்று நியூட்டன் கண்டுபிடித்தபோது, ஒரு சாரார், “வானவில் அழகாக இருக்கிறதே. அதை ரசிக்காமல் ஏன் நோண்டுகிறாய்? இயற்கையின் அழகைக் குடைந்து கெடுப்பதே அறிவியலின் வேலையாக இருக்கிறது!” என்று குறை சொன்னார்கள். ஆனால் ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற விஞ்ஞானிகள் முன்வைக்கும் கருத்து, “விஞ்ஞானம் இயற்கைக்கு எதிரி அல்ல. இயற்கைக்குள் ஒளிந்திருக்கும் கவித்துவத்தைக் கண்டறிவதே அறிவியல்!”

நீல் ஹார்பிஸன் ஓர் எடுத்துக்காட்டு சொல்கிறார். அவர் சந்திக்கும் மனிதர்களின் முகங்களில் இருக்கும் வண்ணங்களை, ஒலியாய் மாற்றி, “உங்களின் முகம் கேட்பதற்கு இப்படித்தான் இருக்கிறது,” என்று சொல்லி அவர்களுக்கே அன்பளிப்பாகத் தருகிறாராம். தனது முகத்தின் ஒலி மிகவும் பிடித்துப் போக, அதைத் தனது கைப்பேசியின் ரிங்டோனாக ஒருவர் வைத்துக்கொண்டாராம்.

image

நீல் ஹார்பிஸன் எனக்கொரு தற்காலச் சங்கக் கவிஞராகக் காட்சியளித்தார். அந்தக் காலத்தில் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்றுக் கவிதை எழுதினார்கள். இவர் இயற்கையிலிருந்து உத்வேகம் பெற்று விஞ்ஞானக் கண்டுபிடிப்பு மூலமாகக் கலை உருவாக்குகிறார்.

சங்கக் கவிஞர்கள் இப்போது இருந்திருந்தால், எதைப் பற்றி எழுதியிருப்பார்கள் என யோசித்துப் பார்த்தேன். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்கிற திணைகளைப் போல, இணையதளத்தைப் பல திணைகளாக வகுத்து அதிலிருக்கும் தலைவன் தலைவிகளைப் பற்றி எழுதியிருப்பார்களோ என்றொரு சிந்தனை தோன்றியது. ஓர் இடத்தின் தன்மை அவ்விடத்தில் வாழும் மக்களின் சுபாவத்தோடு ஒத்துப்போனால், அதைத் திணையாக வகுத்தார்கள். Twitter, Facebook, Youtube, Instagram, Snapchat இவை ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்தால், இவற்றில் மக்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் முறைகள் வெவ்வேறாக இருப்பது தெரியவரும். இவற்றைத் திணைகளாக வகுத்துக் கவிதைகள் எழுதியிருப்பார்களோ?

அது மட்டும் இல்லாமல், சங்கக் கவிஞர்கள் உச்சக்கட்ட பரவசமடையக் கூடிய தருணமும் இந்த நூற்றாண்டுதான் என்றே நினைக்கிறேன். ஏனெனில், Virtual Reality என்கிற மெய்நிகர் தொழில்நுட்பத் தாவலின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறோம். டைம் இதழின் இந்த அட்டைப்படமும் இதையே குறிக்கிறது.

Time Magazine cover

மெய்நிகர்த் தொழில்நுட்பத்தின் அடிப்படை — கற்பனை உலகம். நமக்கு விருப்பமிருக்கும் வகையில், உலகங்களை அமைத்து, ஒரேயொரு கருவியைத் தலையில் பொருத்திக்கொண்டு அவ்வுலகினுள் சென்றுவிடலாம். யோசித்துப் பாருங்கள், சங்கக் கவிஞர்களிடம், “உங்களுக்கு விருப்பமான திணைகளை நீங்களே உருவாக்கி, அதில் சஞ்சரித்து, அத்திணையைப் பற்றிக் கவிதைகள் எழுதலாம்!” என்று சொன்னால் எவ்வளவு பேரானந்தம் கொள்வார்கள்?

இன்னொரு விதத்தில், Virtual Reality வரப்பிரசாதமாகவே எனக்குத் தோன்றுகிறது. தற்காலத்தை விமர்சித்துக்கொண்டு, மனதளவில் கடந்தகால வீரப் பராக்கிரமங்களில் திளைத்து வாழும் மனிதர்களுக்கு, கடந்த காலத்தை மெய்நிகர் உலகாக வடிவமைத்து, தலையில் கருவியைக் கவிழ்த்துவிடலாம். அவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள், மற்றவர்களையும் நிம்மதியாக விடுவார்கள்.

“ச்சே! கற்பனையில வாழறதெல்லாம் ஒரு வாழ்க்கையா?” என்று உங்கள் மனம் கேள்வி எழுப்பலாம். ஆனால் எது கற்பனை, எது நிஜம் என்கிற ஆதாரக் கேள்வி இந்நூற்றாண்டில் நம் ஒட்டுமொத்த மனிதச் சமூகத்தை உலுக்கப் போகிறது. மெய்நிகர்க் கருவிகளைப் பரிசோதித்துப் பார்ப்பவர்கள் நின்றுகொண்டே தள்ளாடும் வீடியோவைப் பாருங்கள்.

மெய்நிகர்க் கருவிகளின் வியப்பூட்டும் விஷயமே, அவற்றைப் பொருத்திக்கொண்டபின், உங்களின் மூளைக்கு அக்கருவி காட்டும் காட்சி நிஜம் என்று தோன்றும். மூளைக்கு அவ்வாறு தோன்றுவதால் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தோன்றும். ஆக, மூளைக்கும் உடலுக்கும் ஒரு விஷயம் நிஜமென்று தோன்றினால், அது கற்பனையா நிஜமா?

இந்தக் கேள்வி மனிதக் குலத்தையே தள்ளாடச் செய்யப்போகிறது. நாம் இதுவரை சுமந்துவந்த பல கற்பிதங்கள், நம்பிக்கைகள் கேள்விக்கு உட்படப்போகின்றன. கற்பனை உலகங்கள் உருவாக்க முடியும் என்றால், ஒவ்வொரு கற்பனை உலகத்திலும் உங்களுக்கு ஓர் ஆளுமையை உண்டாக்கிக்கொள்ளலாம். பூமியில் ஆணாகவும், வேறொரு மெய்நிகர் உலகில் பெண்ணாகவும், இன்னொரு உலகில் இயந்திரமாகவும்கூட ஒரு மனிதன் வாழக்கூடும். ஏன் புதுப்புதுப் பாலினங்களும் உருவாகலாம்.

Ursula Le Guin ‘The Left Hand of Darkness’ புத்தகத்தில் கற்பனை உலகொன்றை உருவாக்குகிறார். அவ்வுலகில் உள்ள மனிதர்களுக்குப் பாலினம் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு மாதமும் மாறிக்கொண்டே இருக்கும். ஐசாக் அசிமோவின் ‘The Gods Themselves‘ புத்தகம், வேற்றுக்கிரகத்தில் மூன்று பாலினம் கொண்ட ஜீவராசிகளுக்குள் ஊடல் எவ்வாறு இருக்கிறது எனும் ஒரு கற்பனை விளையாட்டு. அப்போது கவிதை எழுதப்போகும் சங்கக் கவிஞர்கள் ‘தலைவன்’, ‘தலைவி’ என்ற இரு சொற்கள் போதாமல், புதுச் சொற்களை உற்சாகமாக உருவாக்கி எழுதுவார்கள். அப்போது “எது சுயம்?” என்ற அடிப்படைக் கேள்வி எழப் போகிறது.

நீல் ஹார்பிஸன் போன்றவர்கள் “மனிதன் என்பவன் யார்?” என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறார்கள். தன்னை ‘Cyborg’ ஆகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார் நீல். உடலில் இயந்திரங்களைப் பொருத்திக்கொண்டு புலன்களை விரித்துக்கொண்ட மனிதன். நம்மால் வானவில்லில் உள்ள வண்ணங்களைத்தான் பார்க்க முடியும். ஆனால் நீல் வைத்திருக்கும் ஆண்டெனா மூலம் அவர் புற ஊதாக் கதிர்களையும், அகச்சிவப்புக் கதிர்களையும் உணரலாம். அவரின் ஆண்டெனாவிற்கு இணைய இணைப்புள்ளது. உலகின் எந்த மூலையிலிருந்தும், இணையம் மூலம் அவருக்குப் புகைப்படங்களையோ வீடியோக்களையோ அனுப்பலாம். அவை சப்தங்களாக அவரின் மூளைக்குள் ஒலிக்கும்.

Cyborg Foundation என்றொரு அமைப்பு உருவாக்கி Cyborg ஆக விரும்புபவர்களுக்கு உதவி செய்கிறார் நீல். தொழில்நுட்பத்தைத் தனது உடலுக்குள் பொருத்திக்கொள்வதன் மூலம் சூப்பர்மனிதனாக ஆவது அவரின் நோக்கம் அல்ல. மாறாக, ஒரு மனிதன் தனக்கு வேண்டும் என ஏங்கும் புலன்களைப் பெற்றுக்கொள்ளும் சுதந்திரச் சூழல் உருவாக வேண்டும், இயற்கையுடன் ஒன்றிப்போவதற்கான பாலமாகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே லட்சியம். உதாரணமாக, Moon Ribas என்பவர் பூமியின் அதிர்வுகளை உணரும் கருவியைத் தனது கைக்குள் பொருத்திக்கொண்டுள்ளார். ஒவ்வொருமுறை பூமியின் ஏதோவொரு மூலையில் நிலநடுக்கம் ஏற்படும்போதும் இவரின் கை அதிரும். பூமிக்கும் தன் உடலுக்கும் ஏற்பட்டிருக்கும் நிரந்தரமான இவ்விணைப்பின் மூலம் உணரும் அதிர்வுகளை நடனம், இசை மற்றும் காண்பியல் கலைகளின் வாயிலாக வெளிப்படுத்தும் cyborg கலைஞர் இவர்.

Neil Harbissonஇன் ஆண்டெனா, Moon Ribbasஇன் அதிர்வுணரும் கை — இவை புதிய புலன்களுக்கான சில உதாரணங்கள் மட்டுமே. இவ்வாறு பல புலன்களை உருவாக்கும் வேலையில் இவ்விருவரும் நிறுவிய Cyborg Foundation ஈடுபட்டுள்ளது. தனக்கு விருப்பமுள்ள புலன்களைச் சேர்த்துக்கொண்டு கலைஞர்கள் கலை உருவாக்கலாம் என்பதே Cyborg Foundationஇன் கனவு.

சங்கப் பாடல்களில் காட்சி, சப்தம், சுவை போன்ற உணர்வுகள்தான் வெளிப்படுகின்றன. ஏனென்றால் அக்கவிஞர்களுக்கு அப்புலன்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இப்போது புதுப் புலன்களைக் கொடுத்துக் கவிதை எழுதச் சொன்னால்?

அடுத்து செயற்கை நுண்ணறிவு (artificial intelligence). நமது கைப்பேசியில் இருக்கும் ‘சிரி’ (Siri) ஒரு குழந்தை, செயற்கை நுண்ணறிவின் முதல் படி. செயற்கை நுண்ணறிவின் பலம் — எதையும் அதனால் உருவாக்க முடியும், தேவைப்படும் தகவல் இருக்கும்பட்சத்தில். உதாரணத்திற்கு Luka என்கிற செயலி. Eugenia Kuyda என்கிற பெண் தனது நண்பன் Roman Mazurenko இறந்தவுடன் உடைந்து போகிறார். அது வரையில் ரோமன் தனக்கு அனுப்பியிருந்த குறுஞ்செய்திகளைத் திரட்டுகிறார். அவற்றைச் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் ஒரு chat bot ஆக உருவாக்குகிறார். இப்போது உங்களின் கைப்பேசியில் இந்த Luka செயலியை டவுன்லோட் செய்து, ரோமன் என்கிற நண்பருடன் உரையாடலாம்.

image

ரோமன் உயிருடன் இல்லை. ஆனால் உயிருடன் இருந்தபோது எழுதிய குறுஞ்செய்திகளை ஆராய்ந்து கணினியே அவரைப் போலப் பேசும். இதுதான் செயற்கை நுண்ணறிவு. ஆக, இப்போது ரோமன் இறந்துவிட்டாரா அல்லது உயிருடன் இருக்கிறாரா? இந்தச் செயலி மூலமாக உரையாடுவது ரோமன் என்கிற மனிதனா அல்லது இயந்திரமா? ரோமனின் தாய் இந்தச் செயலியைப் பயன்படுத்திய பிறகு, தனது மகனை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்வதாகச் சொல்கிறார். Virtual உலகங்கள் வந்தபின், பூமியில் உங்கள் உடல் அழிந்தாலும், virtual உலகில் இருக்கும் உங்களின் ஆளுமைகள், ரோமன் போலவே அழியாமல் செயல்பட்டுக்கொண்டே இருக்கக்கூடும். Black Mirror என்கிற Netflix தொடரின் Be Right Back எபிசோடில் இதையே கதைக்களமாக அமைத்துள்ளனர்.

ஒரு எழுத்தாளரோ படைப்பாளியோ மறைந்தபின்னும் அவரின் படைப்புகள் செயற்கை நுண்ணறிவு மூலம் தொடரலாம். அசோகமித்திரன் எழுதிய அனைத்து எழுத்துகளையும் கணினிக்குள் செலுத்தி, அவற்றை ஆராய வைத்து, தற்கால நிகழ்வுகளையும் அதற்கு அளித்து, அவர் இன்று உயிருடன் இருந்திருந்தால் என்ன கதை எழுதியிருப்பார் என்று பார்க்கலாம். இதற்கான தொழில்நுட்பம் இன்னும் வளரவேண்டும். ஆனால் சில ஆண்டுகளில் இது சாத்தியமே.

ஆக, இந்த நூற்றாண்டில் திணைகள் மாறி மெய்நிகர்த் திணைகள் உருவாகப் போகின்றன, அவற்றை அவதானிக்கும் நமது புலன்களும் விரிவடைய இருக்கின்றன, இவற்றையெல்லாம் உள்வாங்கிச் செரித்து செயற்கை நுண்ணறிவும் நம்முடன் சேர்ந்து வளரப்போகிறது. மனிதன், மரணம், சுயம், நிஜம். விஞ்ஞானம், கலை, இயற்கை. இவ்வார்த்தைகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று உரசிக்கொண்டு, எல்லைகள் தகர்ந்து, DNA சுருள்களைப் போல ஒன்றுடன் ஒன்று பிணையப்போகின்றன. அச்சுருள்கள் உருவாகும் அழகை, அவை நிகழ்த்தப் போகும் நடனத்தை, நமக்குக் கிடைக்கப் போகும் புதுப் புலன்களுடன் உணரத் தயாராவோம்.


கே.பாலமுருகனின் களம் இணைய இதழுக்கு நன்றி.

மேலும் பார்க்க

Cyborg Foundationஇன் நோக்கத்தை விளக்கும் வீடியோ

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்