கட்டுரை பற்றி
சென்ற பகுதியை எழுதி முடித்திருந்தபோது இனி சுணக்கமில்லாது கொஞ்சம் எழுதி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒரு மூன்று பக்கம்தான் எழுதியிருப்பேன். கவிதைகளை எழுதத் தொடங்கி ஆழ்ந்துவிட்டேன். தொடர்ந்து அத்தகைய ஒரு வாழ்வை வாழ்வதுதான் கவிதையின் மதம் என்று சொல்வேன். இந்த ஒன்றரை மாதத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கவிதைகள்! கட்டுரையைத் தொடரவே மனமில்லை.
எனது பதிப்பாள நண்பர் ஒருவர் எனது கட்டுரைத்தொகுப்பு ஒன்று கொண்டுவரும் முயற்சியில் அனைத்துவகைக் கட்டுரைகளையும் திரட்டி அனுப்பிவைக்கச் சொன்னார். அனுப்பிவைத்தேன். அந்தக் காலத்தில் ஒரு நிழற்பட நகல்கூட எடுத்துவைத்துக்கொள்ளாத நிலையில் பதிப்பாளரிடமும் கிடந்து அவைகள் தொலைந்து போயின. இருவருக்குமே எதிர்பாராதது அது. தொகுப்பாக ஒரு ஐநூறு பக்க அளவு வந்திருக்கக்கூடிய அந்த எழுத்துகளின் இழப்பு எதுவாக இருக்கும் என யோசிக்கிறேன். அன்று என்னிடமிருந்த ஊக்கமும் உணர்ச்சிகளும் எண்ணங்களோடும் கருத்துக்களோடும் ஊடாடிய வகையில் நிகழ்ந்த ஒரு நாட்டியத்தைத்தான் நாம் அதில் பார்த்திருக்க முடியும். அந்த எழுத்திற்காக நான் இப்போது வருத்தப்படவே இல்லை.
ஒருமுறை சுந்தரராமசாமி சொன்னார். எழுத்திலும் இது பதிவாகியிருக்கிறது என்று நினைக்கிறேன்: “நடக்கத் தெரியாதவன் தனக்கு நாட்டியமாடத் தெரியும் என்பது போன்றது, ஆர்வக்கோளாறுகளால் தங்களைக் கவிஞர்களாக எண்ணிக் கவிதை எழுதுவது.”
தான் அறிந்த ஒரு விஷயத்தை அழகிய ஒரு மொழியில் சொல்லியிருக்கிறார் சு.ரா. அவர் இவ்வாறு உரைநடையையும் கவிதையையும் விவரிக்கும்போதே கவிதை பற்றிய அவரது பார்வையும் வெளிப்பட்டிருப்பதையே நான் கவனித்தேன். நான் அதனை உரைநடைக்கே ஏற்றுகிறேன். மேலும் கவிதை முதன்மையாக ஒரு கலை அல்ல என்பதே இன்று நமது பார்வை. கவிதையை அடைந்துவிட்டவனுக்கு, ஒரு காவியத்தைக் கண்டடையாத நிலையில், உரைநடையின் ஒரு சொற்பெருக்கு ஓர் ஆற்றலிழப்பாக மட்டுமே முடிந்துவிடும் ஆபத்து உண்டு. காவியங்களோ அபூர்வம். அபூர்வமான காவியங்கள் கவிஞனின் முதிர்ந்த ஆளுமையினின்று பிறப்பவை. அவனும்கூட விரிவான ஒரு வெளிப்பாட்டுமுறையை மேற்கொள்ளும் நிலையில் தனது கவிதை வாழ்வையும் கவிதைக் கணங்களையும் பெருவாரியாக இழந்துவந்தே செயல்படுகிறான். நான் ஒரு கட்டுரை எழுதத் தொடங்கிய நிலையில் கண்டதும்கூட இதுதான்.
எத்துணை பெரிய ஞானியானாலும் மேதையானாலும் அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் எதிரே அமர்ந்து கூர்ந்து கேட்கும் எந்த மனிதனையும்விட அப்போது உயர்நிலையில் இருப்பதில்லை.
இரண்டும் (உரையும் கேட்டலும்) முடிந்தபிறகே பதிந்துபோன அவர் உரையும் பல்லாயிரம்பேர் பல்லாயிரம்முறை, பல காலமும் கேட்க இயலும் வாய்ப்பினாலேயே சிறந்து நிற்கிறதே ஒழிய அவரால் அல்ல. அவர் கனன்ற அந்த உரைக்குப் பிறகும் எப்படி எப்படி இருக்கிறாரோ அதைப் பற்றியிருப்பதுவே அவர் சிறப்பு. அதன் பெருமைகள் எந்த மனிதனையும் சாராது. அந்தப் பொருளின் மெய்மையினாலேயே கனன்று கொண்டிருக்கக் கூடியதே ஒழிய அதில் ஒரு மனிதன் இல்லை. எந்த ஒரு மனிதனும் இல்லை. இந்தப் போக்கிலான ஒரு கலை/வெளிப்பாடுதான் மனித வாழ்வைவிட மேம்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. அவ்வளவுதான்.
கவிதையின் மதம் சுட்டும் கவித்துவ மனநிலை ஒவ்வொரு கணமும் தன் மவுனத்தையே ஒரு வெற்றுப்பாத்திரமாகத் தாகத்துடனும் விழிப்புடனும் ஏந்திக்கொண்டிருப்பது. மய்யமான கருத்துகளையும் சிந்தனைகளையும் வைத்துக்கொண்டிருக்கும் மனிதன் ஒன்றைத் தொட்டவுடன் அங்கிருந்தும் தன் எண்ணங்களையே பல்வேறு அனுபவங்களோடும் விரித்துவிரித்துப் பெரும்பெரும் நூல்களை எழுதிக்கொண்டே போகலாம். கட்டுரைகளாகவும், நாவல்களாகவும், ஆய்வுகளாகவும். கவிதையின் முன் இவைகள் இரங்கத்தக்கவைகளாகவே இருப்பதையும் நாம் காணலாம். கவிதை தவிர்த்த எல்லா இயல்களுமே தம் இயல்பிலேயே மீட்பு அறியாச் சுழல்களாகவே இருக்கின்றன.
‘சூர்ய ஒளியில் மிதந்துகொண்டிருக்கும் அசைவிலாத மிகப்பெரியதான ஓர் ஏரியில் ஊர்ந்துகொண்டிருக்கும் ஒரு படகு போன்றது ஒரு கவிதை’
எழுதிக்கொண்டிருக்கும்போதே மேலே உள்ள ஒரு வரியை ஒட்டிய மற்றொரு வரியாக எழுதப்பட்டுள்ளது இது. இந்த இயக்கத்தில் எதுவும் மறைந்துகொண்டிருக்கலாம். சவால் என்னவெனில் ஒன்று மெய்மையாக இருக்கும்பட்சத்தில் அதை நாம் வாழ்ந்து வளர்ந்தாக வேண்டும். நிரூபித்தாக வேண்டும். கவிதைக்குக்கூட இந்த அழகுக்காட்சி போதாது. வாழ்வோ ஒவ்வொரு கணமும் புதிதுபுதிதாய்க் கேட்கும். அடங்காது. கொடுக்கத் தெரிந்தவனுக்கே அதுவும் கொடுக்கும், கவிதையும் மேன்மைமிக்கதொரு வாழ்வும் வேறுவேறல்லாதே இந்த நெருக்கம், அண்மை. கலை என்ற சொல்லை ஒருக்காலும் ஏற்காது மட்டுமல்ல; பெயர் எதையும்கூட ஏற்காது என்பதே மெய்மை. இதனால்தான் திணறுகிறார்கள் நம் அறிஞர்கள்.
நமது புரிதல்கள்
நாம் வாழ்வை எப்படிப் புரிந்துகொண்டுள்ளோமோ அதன்படியேதான் கவிதையையும் வரையறுக்கிறோம். முதலாவதாக நமது உயிரின் அசைவுகளைக்(காண்பதும் காண்பிப்பதுமே) கவிதை என்கிறோம். குப்பைத் தொட்டியாகிவிட்ட நமது அகத்தின் அசைவுகளைக் கவிதை என்கிறோம். காட்சியாகவும் படிமமாகவும், உருவகமாகவும், குறியீடாகவும், புதிர்களாகவும், புகைமூட்டங்களாகவும் தென்படும் இயற்றப்படும் எல்லாமே நம் எண்ணங்கள்தாம் என்பதையே அறியாத பேதமையுடன்தான் தான் எனும் தன் அகத்திலிருந்தே சற்றும் விடுபடமுடியாமல் தன் துயர்வலியையும் கவிதைகளாகப் புனைகிறோம். இவற்றில் முதன்மையாகச் செயல்படுவது வாழ்வுபற்றிய நமது புரிதல்கள்தாம். நமது முதிர்ச்சியற்ற தன்மையை நாமே அறியாத நிலையில் நமக்கு ஏற்பட்ட போர்களை, சச்சரவுகளை, துயரங்களை, வலிகளை, கவிதை என்கிறோம். உயிரின் இயற்கையான அசைவுகளுக்கு இணையானதாக்கப் பார்க்கிறோம். விடுதலையையும் கண்டடைதலையும் தேடும் ஏக்கத்தையும் தவிப்பையும் ‘காதலை’யும் பக்தியையும் கவிதையெனக் கொண்டாடி மகிழத் தொடங்கிவிடுகிறோம். பசியாறாத, தாகம் தணியாத இந்த வறுமை, அறத்தையும் சமன்நிலையும் உலகில் இயற்ற முடியாத கையறுநிலையை உடையதே என்பதையறியாத கொடுமை உதறப்படும்போதே விடுதலையையும் கண்டடைதலையும் கொள்ளும் இதயத்தின் வெளிப்பாட்டைத் தவறவிட்டுவிடுகிறோம். நமது துயரக் கலைகளுக்கெல்லாம் அப்பால்வெளியில் மவுனமாகக் காத்திருக்கும் மெய்மையையும் கவிதையையும் வெகுசிலரே காண்பவர்களாயிருக்கிறார்கள்.
நிச்சயமாக ஒரு கவிஞனோ, கவிதை வாசகனோ, தீவிரமான தேட்டமுடைய ஒரு மனிதனோ வேறுவேறானவர்களல்லர். வந்தடையவேண்டிய சீரியதோர் இடம் என ஒன்றுண்டு. அதுவே கவிதையினதும் வாழ்வினதும் முதன்மைக் குறிக்கோளாக இருக்க வேண்டும். நிச்சயமாக அது ஒரு கலையையோ பொழுதுபோக்கையோ, புலனனுபவச் சுவையூட்டலையோ முதன்மையாகக் கொண்டிருக்காது. அதேசமயம் என்னவானாலும் வாழ்வு என நாம் கண்கூடாகக் காண்பது இந்தக் குப்பைகளும் இதன் சச்சரவுகளும்தானே என்பதால் இவற்றின்மீது நாம் வீசும் வாள் போன்ற கூரான பார்வை அவசியம். இத்தகைய பார்வையுடையவனே கவிஞன் என வேண்டும். மனிதன் என வேண்டும்.
தான் தொட்டதையெல்லாம் மலர வைக்கவேண்டிய மனிதன் தொட்டதையெல்லாம் பிரச்னையாக்கிவிடுகிறான். இதுவரை மனிதகுலவரலாற்றில் மலர்ந்திருக்கும் எந்த இயற்கையையும் அறியத் தவறியவனாய் வழிநடப்பவன், மலரும் எந்தச் செயல்பாட்டையும் தன்னலத்தால் பிரச்னையாக்கிக் காலமெல்லாம் போரிலும் துயரிலும் வாழக்கற்றவன். அதன் ஊற்றுக்கண்ணை அறியாது, அறிய விரும்பாத, முனையாத ஒரு தடித்தனத்தில் வாழவும் கற்றவன். பெருஞ்செல்வந்தன் போலவும், அதிகாரி போலவும், அறிஞர்கள், கலைஞர்கள், தத்துவஞானிகள், மாமனிதர்கள் எனும் பெயரில் உதடுபிதுக்கும் பெருமிதத்தில் திரிகிறவர்களையெல்லாம் நம்மைச் சுற்றித் தாராளமாகக் கண்டுகொண்டுதானே இருக்கிறோம்?
நாம் எத்தகைய சமுதாயத்தைப் படைக்க விரும்புகிறோம் என்பது நாம் எத்தகைய மனிதனாக இருந்துகொண்டு விரும்புகிறோம், முயன்றுகொண்டிருக்கிறோம் என்பதில்தானிருக்கிறது. இதற்கெல்லாம் முன்பாக இந்த உலகம் சரியில்லை. அறமின்மையும், சமமின்மையும், வறுமையும், போரும், வலியும் துயர்களுமான இது மாற்றப்பட்டே ஆகவேண்டிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை மிகத்தீவிரமாக நாம் உணர்ந்திருக்கிறோமா என்பதைப் பொறுத்திருக்கிறது.
இதுவும் காலம்காலமாகவே மேம்போக்கான ஓர் அரசியல் மற்றும் கொள்கைகளால் தோற்றுப்போனதையும் நாம் அறிவோம். வாழ்வுமுழுமை நாம் இதுவரையும் கண்டடையாதது. இவற்றிற்கெல்லாம் மேலாக, தீமையின் ஊற்றுக்கண்கள் நாம் அறியாதவையாக இருப்பது. எந்தக் கருத்துகளோடும், கொள்கை கோட்பாடுகளோடும் நம்பிக்கைகளோடும் நமக்குள்ள உறவு ஆபத்தானவையே என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா? மனிதர்களோடு நமக்குள்ள உறவு என்ன? இயற்கையோடு? ஆழம்காண அழைக்கும் அதன் பார்வைக்குள் செல்லாது நுண்ணுணர்வுகள் எனப்படும் மெல்லிய அசைவுகளோடும் நெகிழ்ச்சிகளோடும் மட்டுமே நின்றுவிட்ட நம் குறைவாழ்வின் அபூர்வ தருணங்களையும், அபூர்வ தருணங்களின் தோற்றத்தையும், ‘அபூர்வ’ எனும் அந்த வார்த்தையிலேயே உள்ள கொடுமையையும்கூட மறைக்கும்படியான நம் மூடத்தனத்தின் மந்தத்தனத்தையும்கூட அறியாதவர்களாய் நாம் கவிதையையும் வாழ்வையும் இங்கே இயற்றிக்கொண்டிருக்கிறோம்.
வெட்கமில்லாமல், சூடு சுரணையில்லாமல் காலம்காலமாகவே கவிஞர்கள் அபூர்வ மனிதர்கள், நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே தோன்றும் அற்புதம் என்கிறோம். இன்னும் இன்னும் எத்தனை எத்தனை பெரிய மனிதர்களை, தத்துவங்களை, வழிகாட்டிகளை நாமே நம் வறிய மடத்தனங்களால் உருவாக்கிக்கொண்டு வருகிறோம்?
ரிஷிமூலம்
ரிஷிமூலம் என்று நம் முன்னோர்கள் தப்பிக்கப் பார்த்ததெல்லாம் சொன்னால் நம்பவே முடியாத அதன் அளவினாலும், பண்பினாலும் எளிமையாலுமான அசைவுகள்தாம் என்பதாலும், அவை எவையுமே பிறருக்கு எந்தவகையிலும் பயன்படாது என்பதாலும்தான்.
எனது ஆங்கில வாசிப்பின் குழந்தைப்பருவத் தொடக்ககாலம். ஆங்கில மொழியின் சொற்றொடர் அமைப்பின் விசித்திர நிலைகளை நன்கு அறிந்துகொண்டேன். எனினும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால் பொருள் அறியப்படாத சொற்கள் அதில் அதிகமாகவே இருக்கக் கண்டேன். அகராதியைப் புரட்டிப்புரட்டியே முதன்மையான சொற்களின் பொருளைப் புரிந்துகொள்வேன் என்றாலும் அநேகச் சொற்களை ஊகத்தின் அடிப்படையிலேயே தாண்டிச் சென்றுவிடுவதுண்டு. ஆனால் கவிதையை அப்படிச் செய்வதில்லை. பொருள்புரியாத எல்லாச் சொற்களையும் அடிக்கோடிட்டுவிட்டு காகிதத்தில் குறித்துக்கொண்டு அப்புறம் அகராதியைத் திறந்து அத்தனை சொற்களின் பொருளையும் பார்த்து எழுதிக்கொள்வேன். அதன்பிறகே நான் கவிதையை வாசித்துப் புரிந்துகொள்வேன். கிட்டத்தட்ட அநேகக் கவிதைகளையும் நானே மொழிபெயர்த்துப் படித்தேன் என்று சொல்ல வேண்டும். கவிதையைத் தவிர்த்த – முக்கியமாக – நாவல்களை வாசிக்கையில் பொருள் புரியாத சொற்களை ஊகித்தபடித் தாண்டிச் சென்றதைப் பின் எப்போதாவது பார்க்க நேர்கையில் என் ஊகம் சரியாக, ஏறத்தாழ, இருந்ததையும் சரிந்ததையும் பார்த்திருக்கிறேன்.
எத்தனை முறைதான் அகராதியைப் புரட்டிக்கொண்டேயிருப்பது. தாகூரின் Stray Birds வாசிக்கையில் – அவரே அந்தக் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார் – எளிமையான சின்னச்சின்ன அந்தக் கவிதைகளை மற்ற கவிதைகளைப் போலில்லாமல் – அறவே அகராதியைப் பயன்படுத்தாமலேயே புரட்டி வாசித்தேன். இடையில் ஆங்காங்கே அபூர்வமாய்த் தென்பட்ட சொற்களை நானே உரைநடையில் செய்ததைப்போலத் தாண்டித்தான் சென்றேன். அப்படித் தாண்டிச் சென்ற சொற்கள்தாம் ’Timid thoughts’. அதை நான் ஊகித்துக் கடந்த பொருள் ’மிக மெல்லிய எண்ணங்கள்’ பிற்காலம் ஒரு நாள் Timid என்ற சொல்லின் உண்மையான பொருளை நான் அறிந்துகொண்டபோது உண்டானது எனக்குள் ஒரு புதிய வெளிச்சம்தான். இப்போது எனது கையிலிருக்கும் அந்த நூலின் (பழைய புத்தகக்கடையில் கண்டுபிடித்து வாங்கியது. கெட்டி அட்டைபோட்ட macmillan பதிப்பு) அந்தக் கவிதை:
Timid thoughts, do not afraid of me
I am a poet.
பயங்கொள்ளி எண்ணங்களே
பயப்படாதீர்கள் என்னைக் கண்டு
யான் ஒரு கவி.
அன்று நான் ஊகித்திருந்த பொருள்:
“மிக மெல்லிய எண்ணங்களே
அஞ்சாதீர்கள் என்னைக் கண்டு
நான் ஒரு கவிஞன்.”
தாகூர் அரவணைக்கும் ஒரு தாயன்பைக் கவிதையாகக் காட்டுகிறார். தேவதேவனோ மனிதனைக் கண்டே அஞ்சி இந்த உலகைவிட்டே ஓடி ஒளிந்துகொள்ளத் துடிக்கும் மிக மெல்லிய எண்ணங்களை அறிந்தவராயிருக்கிறார். இதிலுள்ள பயங்கொள்ளித்தனம் இன்னொரு புதிய வியப்புதான் அல்லவா? மேலும் எண்ணங்களின் இயற்கையைத்தான் அவர் அறிந்துகொண்டாரோ?
நான் எனது எண்ணங்களுக்குள் ஆழ்ந்தவனாய்ச் சிந்திக்கத் தொடங்கினேன். அது எதைப்பற்றிய ஒரு கண்டடைதல் என்றே தெரியவில்லை. கோழையான பயங்கொள்ளி எண்ணங்கள் மெல்லியதானதோ மென்மையானதோ அல்ல, மாறாக பேரளவான தீமைகளையும்கூட விளைவிக்கக்கூடிய, நம் அகக்கண்ணுக்கும் நன்றாகத் தெரியக்கூடிய அருவுரு உடையவையே என்றிருந்தது. நான் அப்போது கண்ட மெல்லிய எண்ண அசைவுகளோ அந்த அகக்கண்ணுக்கும்கூடத் தென்பட மறுக்கும் மிக மெல்லிய உருஉடையவை. இங்கே வாழும் உயிர்களோடு தாமும் ஓர் உயிராய் வாழமுடியாத அளவுக்கு மெல்லியவை. காட்டின் புதர்களுக்குள் மறைந்துவாழும் குட்டிமுயல் என்றால் அது மிகச்சாதாரணமான ஒரு உவமையே. எண்ணங்களால் நெருங்கவே முடியாத ஒரு உண்மை அது. பயம் என்ற சொல்தான் சரியான சொல்லா? இதை வெளிப்படுத்துவதற்குரிய பருவடிவான ஒரு பொருளும் பூமியில் இல்லையாயிருக்க எப்படி அதனை ஒரு மனிதனால் வெளிப்படுத்த முடியும். இன்னும் துல்லியமாகவும் உண்மையாகவும் சொல்வோமானால் உயிர்வாழ அஞ்சுவதற்குக்கூட அவசியமில்லாமலேயே அழிந்துவிடக்கூடிய மிக மெல்லிய உயிர் அது. கூர்ந்து கவனித்தால் எக்கணமும் அழிந்துவிடத் தயாராயிருக்கும் நொய்மையையே வடிவமாகக் கொண்டது. அதனாலேயே அற்புதமான ஒரு குணபாவத்தைக் கொண்டதாயிருக்கிறது. எதையும் தன் உள்ஏற்கும் விரிவு, பார்வை, கவனம். எல்லாவற்றிற்கும் ஒரு கணம் முன்புதான் மெல்லிய ஓர் அசைவாய் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் எண்ணங்கள்தாம் அவை. பயம் என்ற சொல்லாகப் பிறந்துவிடுவதும் இதுதானா? சம்பிரதாயமாகவேதான் தற்கால, தற்காலிக ஒரு மொழியில் ஒரு கவிஞனுடைய எண்ணங்கள் இவை என்று நான் சொல்வேன். மவுனம் என்றோ, மவுனத்தை நெருங்கிவிட்ட ஒன்று என்றோ, எந்தச் சொற்களாலும் சொல்ல முடியாத ஓர் உணர்வுநிலையை நாம் ஏதோ ஒருசில சொற்களில் சொல்கிறோம் அவ்வளவே. ஒரே சமயம் மிக எளிதில் சிதைந்துவிடக்கூடியதாகவும், எத்தகைய ஆற்றலாலும் சிதைக்கமுடியாப் பேராற்றலுடையதாகவும் இருக்கும் ஒன்று அது. இவற்றைக் குறித்து நான் மிக ஆழமாக யோசித்தவைகளையே இன்னும் இன்னும் எனச் சற்று விரித்துவிரித்துச் சொல்லிவிட்டேன். ஆனால் வாசகர்களாகிய உங்களுக்கு நான் என் வாழ்க்கையின் ஒரு காலத்தருணத்தைச் சொல்லவே இங்கே விழைந்துள்ளேன்.
நன்றி: சுடலைமுத்து
தேவதேவன் எழுதும் ‘கவிதையின் மதம்’ கட்டுரைத்தொடர்:- கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்
- கவிதையின் மதம் 11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு
- கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்
- கவிதையின் மதம் – 9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்
- கவிதையின் மதம் – 8: காதலும் எண்ணங்களும்
- கவிதையின் மதம் – 7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்
- கவிதையின் மதம் – 6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்
- கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…
- கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்
- கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்