கவிதையின் மதம்: ஒரு வாசிப்பனுபவம்

< 1 நிமிட வாசிப்பு

கவிதை குறித்த பல திறப்புகளை அளிக்கும் கட்டுரை. உண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண் புன்னகையை வரவழைக்கிறது. கவிதை அனுபவம் என்பது கிட்டத்தட்ட ஒரு சிற்பத்தை அணுஅணுவாகப் பார்த்து ரசிக்கும் அனுபவம்தான். காலத்தின் இருண்ட ஆழங்களிலிருந்து, காலாதீதம் நோக்கிய அந்த சிற்பத்தின் பயணத்தில் இடையில் வரும் சிறு புள்ளிதான் அதன் பார்வையாளன். இதே மனநிலைதான் கவிதை வாசிக்கும்போதும் தோன்றுகிறது. வாசகன் எனும் சிறு குமிழியின்முன் கவிதையெனும் பிரம்மாண்டம் தன்னை நிகழ்த்திவிட்டுச் சென்று விடுகிறது. நல்லகவிதை என்பது மூளையை எட்டும்முன் இதயத்தை எட்டிவிடும் என்று தேவதேவன் சொல்வது, ஒருவகையில் கவிதையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள், உணரத் துவங்குங்கள் என்பதைத்தான். கவிதை வாசகர்கள் செய்யும் பிழை என்பது, பெரும்பாலான சமயங்களில் ஒரு கவிதையை மூளையின் துணைகொண்டு வாசித்து அலசிப்பார்த்து அதைப் புரிந்து கொள்ள முயல்வதுதான். இப்படிச் செய்வது அந்தக் கவிதையின் நேரெதிர் திசைக்கு பயணிப்பது போன்றதுதான். “கவிதை என்பது ஆன்மிகமான கண்டதைதல்” என்ற வரி மிக முக்கியமானது.

“ஒரே வழிமுறைதான் உள்ளது. கவிதை என நம்மைத் தீண்டிவிட்ட ஒவ்வொரு கவிதை கொண்டும் கவிதையை நாம் வரையறுத்துக்கொண்டே செல்வதுதான் அது.” கவிதையை அணுகுவதற்கான முக்கியமான வழிமுறையை இவ்வரி நினைவுறுத்துகிறது. ஒரு கவிதையை அறிந்துகொள்வதற்கு ஒரே வழி அதே தீண்டலை நமக்கு அளித்த இன்னொரு கவிதைதான். சாணைப் பிடிப்பதும் கவிதை, சாணை பிடிக்கப்படுவதும் கவிதை.

“கவிதையில் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் கிடையாது. குறிப்பாக எனது கவிதையில். அதன் புறத்தோற்ற மாறுபாடுகளை வேண்டுமானால் ஏதாவது சொல்லலாம். கவிதையின் அகம் மாறாததும் மாற்ற முடியாததுமான ஓர் இயக்கம். வாழ்வின்பாற்பட்டது. அதைத்தான் நாம் கண்டடைய வேண்டும்.” இந்த வரி கலைக்கும் பொருந்தும். டி.எஸ்.எலியட்டின் இவ்வரிகளை நினைவுபடுத்தியது கட்டுரையின் இந்தப் பகுதி: “கலை மாறுவதில்லை. அதற்கான பேசுபொருட்கள்தான் மாறிக்கொண்டேயிருக்கின்றன.”

மிக முக்கியமான கட்டுரை.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்