கட்டுரை

கலைஞனுக்குள் ஊடுருவும் சாரு நிவேதிதா

12 நிமிட வாசிப்பு
புகைப்படம்: மது

சாரு, விக்டர் ஹாரா என்ற பெயரை உச்சரிக்க ஆரம்பித்தால் நான் கூட்டத்தில் இருந்து கிளம்பி ஓட எத்தனிப்பேன். மனதளவில்தான்! உடல்மொழியில் வெளிப்படாதவாறு அடக்கிக்கொண்டு அமர்ந்திருப்பேன். இருந்தாலும் என்னையும் மீறி ஏதோ சலனம் என் உடல் மூலமாகவோ அல்லது முகக்குறிப்பாலோ வெளிப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன். சாரு கவனித்துவிடுவார்.

“சாரி சீனி… ஏற்கனவே சொல்லிட்டேனா?”

“ஏற்கனவே சொல்லியிருந்தா பரவால்ல சாரு… அநேகமா இது 19வது தடவையா இருக்கலாம்.”

“ஓஹ், அப்பிடியா?” லேசாக சிரித்துக்கொண்டு இவங்களுக்கும் தெரியுமா என்று குழுவில் இருக்கும் மற்றவர்களைப் பார்த்துக் கேட்பார். ஆறு பேர் இருக்கிறோம் என்றால் ஐந்து நண்பர்கள் அந்த விக்டர் ஹாரா கதையை ஏற்கனவே கேட்டிருப்பார்கள். ஒருவர் மட்டும் “இல்ல சாரு கேட்டதில்லை” என்று சொன்னால் போதும்… சாரு மூன்றாம் அம்பையர் அவுட் இல்லை என்று சொன்னதும் எப்படி சச்சின் அடுத்த பந்தை எதிர்கொள்ளத் தயாராவாரோ அதே போன்ற உற்சாகத்துடன்,

“சரி… சுருக்கமா சொல்லிடறேன்” என்று ஆரம்பிப்பார்.

சச்சின் அவுட்டில் இருந்து தப்பித்தால் மேலும் வெறும் 5 ரன்களை மட்டும் அடித்துவிட்டா அவுட் ஆவார்? சதம் வெளுப்பார் இல்லையா? அதே போல சாருவும் முழு சக்தியையும் திரட்டி விக்டர் ஹாராவைப் பற்றிச் சொல்ல ஆரம்பிப்பார்.

நிறைய கிளைக்கதைகள் வந்து விழும். பல வரலாற்று நாயகர்கள் வந்து போவார்கள். ஆனால் சாருவின் கவனக் குவிப்பு விக்டர் ஹாராவை விட்டு விலகாது.

கதை சொல்லி முடிக்கும்போது ஒரு மணி நேரம் கடந்து இருக்கும். நடுவில் சிரிப்பு, ஏளனம், கோபம் எல்லாம் வந்து போய் இருக்கும். கதை முடியும் நேரம் விக்டர் ஹாரா கொல்லப்படும் கணம் வரும். அதை நா தழுதழுத்தபடி சொல்லி முடிக்கும்போது அழுது கொண்டிருப்பார். உண்மையில் சாரு கதை முடிவதற்கு 10 நிமிடம் முன்னாலேயே அழ ஆரம்பித்திருப்பார்! ஆனால் கதை சொல்லி முடிக்க வேண்டும் என்ற கடமையினால் கண்களில் தண்ணீரை அடக்கிக்கொண்டு இருந்திருப்பார். கதை முடிந்ததும் கண்களில் தண்ணீர் ஊற்ற ஆரம்பிக்கும்.

இப்போது விக்டர் ஹாரா உயிரோடு வந்தால் அந்த ஆளை இன்னொரு முறை அடிச்சே கொன்னுடுவேன் என்று நான் ஒரு நகைச்சுவைக்காகச் சொன்னாலும்,

ஒவ்வொரு முறை அதே கதையைச் சொல்லும் போதும் சம்மந்தப்பட்ட வெவ்வேறு சின்னச் சின்ன விஷயங்களையும் சேர்த்துச் சொல்வதால் கேட்ட கதையாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் சுவாரசியமாக இருக்கும். கதையைத் தாண்டி இலக்கிய நயம், சாருவின் பார்வைகள், சாருவின் அனுபவங்கள் மற்றும் மற்ற இலக்கிய ஆளுமைகள் அவ்வப்போது சொன்னவைகள் எனத் தூவிக்கொண்டே செல்வதால் ஒவ்வொரு முறையும் கவனம் செலுத்தாமல் இருக்கவே முடியாது.

நவாகம் – ராமாயணம் கதை சொல்வது, சப்தாகம் – பாகவதம் பாடுவது, பாரதம் படிப்பது, மேடைப் பேச்சில் கதை சொல்வது, வில்லுப்பாட்டு, நவீன இலக்கியத்தைக் கதைகள் போலச் சொல்வது என்று கதை சொல்வதில் பல வடிவங்கள் உள்ளன. சாரு சொல்வது முற்றிலும் புது வடிவம். ஓர் இலக்கிய ஆளுமையை எடுத்துக்கொண்டு அவருடைய படைப்புகள், அவருடைய பார்வை, அவர் உருவாக்கிய தாக்கம், அவருடைய வாழ்க்கை, அந்த ஆளுமையின் வரலாறு, அவர் வாழ்ந்த காலத்தில் மற்ற கலைஞர்கள் அவரைப்பற்றிச் சொல்லியவைகள், மற்ற கலைஞர்களுடனான அவருடைய சந்திப்புகள், அவருக்கும் அரசுக்கும் இருந்த உறவு அல்லது தொடர்பு, அந்தக் காலத்தில் மக்கள் அந்தக் கலைஞரை எப்படிக் கொண்டாடினார்கள் அல்லது எதிர்கொண்டார்கள் என ஒரு கலைஞனைப் பற்றிய 360 டிகிரி பார்வையை இரண்டு மணி நேரங்களில் சாரு விவரிப்பது முற்றிலும் புதிதான ஒரு கலை வடிவம்.

சாரு இதற்காக எந்தத் தயாரிப்பும் செய்வதில்லை. சின்ன நட்புரீதியிலான சந்திப்புகளில் அதைப்பற்றிய பேச்சு வரும்போது இயல்பாகப் பேச ஆரம்பித்துப் பொழிந்து ஓய்ந்துவிடுவார்.

சாரு சொல்லும் இந்தக் கலை வடிவத்தில் மற்ற கலை வடிவங்களுக்கு இல்லாத ஒரு விசேஷத் தன்மை உள்ளது… இதில் போலி, நாடகத் தன்மை, சிருஷ்டி, பயிற்சி என எதுவும் கிடையாது. அந்தக் கலைஞனின் வாழ்வையும், அவன் படைப்புக்களையும், தான் உள்வாங்கியதைக் கலவையாக்கித் தன்னையே ஒப்புக்கொடுத்து வெளிப்படுத்தும் உன்னதமான விஷயம். இதில் சாருவின் உடல் நடுங்கும், வியர்வை பெருகும், கண்ணீர் வரும், கோபத்தில் உடல் கிடுகிடுக்கும். இந்த நேரத்தில் கலை என்பது சிருஷ்டியோ, மனமோ, உடலோ என தனித்தனியானது அல்ல… உன்னதமான கலை என்பது எல்லாமும் சேர்ந்ததுதான். ஒரு துளிகூடப் பொய் கலக்காமல், பரிசுத்தமான உண்மையுடன் தன் உடலையும், மனதையும், வாழ்வையும், கலைக்குள்ளும் கலைஞனுக்குள்ளும் கரைத்து கலையாகவே சாரு வாழ்வது புரிவது போல இருக்கும்.

ஒரு சக கலைஞனைப் பாராட்டுவதென்பது அவன் படைப்புகளைச் சிறப்பானது எனப் பொதுவெளியில் எழுதுவது மட்டும் அல்ல… அவனுடைய தனிப்பட்ட நற்குணங்களை, பழக்க வழக்கங்களை விதந்தோம்புவதுவும் அல்ல. அவனுடைய தனித்தன்மையான ஆன்மாவுக்கு அருகில் அவனாகவே மாறிச் சென்று தரிசிப்பதாகும். அதற்கு அவனுடைய படைப்புகளை வாசித்தால் மட்டும் போதாது. அந்தக் கலைஞனின் பேட்டிகள், வாழ்க்கை வரலாறு, அவன் சார்ந்த செய்திகள் என அனைத்தையும் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். இதற்கு மேலும் அவன் வாழ்ந்த இடத்துக்குச் சென்று பார்க்க வேண்டும். வாழ்வில் சம்மந்தப்பட்டவர்களிடம் பேச வேண்டும். அப்போதுதான் அந்தக் கலைஞனின் முழுப் பரிமாணம் நமக்கு ஓரளவு கிடைக்கும். இதை நான் சாரு நிவேதிதாவின் வாழ்க்கை மூலம்தான் புரிந்துகொண்டேன்.

விக்டர் ஹாராவின் கதையை இப்படியாகச் சொல்லிவிட்டு சிறு இடைவெளி எடுத்துக்கொண்டு நிகழ்காலத்துக்கு வருவார். இப்போது அவர் சீலே சென்று விக்டர் ஹாரா கொல்லப்பட்ட இடமான விக்டர் ஹாரா ஸ்டேடியத்துக்குச் சென்றதை விவரிக்க ஆரம்பிப்பார். அந்த ஊர் கைடுக்கு இந்த விக்டர் ஹாரா ஸ்டேடியத்தைப் பற்றித் தெரியவில்லை. சாரு விளக்கிச் சொன்னதும் அந்த கைட் அழுதுகொண்டே இனி உங்களிடம் கைடுக்கான சேவைத் தொகையைப் பெற மாட்டேன் என்று சொல்லியதைச் சொல்லி அந்த ஸ்டேடியத்தில் விக்டர் ஹாராவைப் பற்றிப் போட்டுக்காட்டப்படும் வீடியோவைச் சொல்லி, அந்த ஊரில்(கிராமத்தில்) விக்டர் ஹாராவைப் பற்றித் தெரியாத, அவர் கவிதை தானென்றும் தெரிந்திராத ஒரு பெண் கிடாரில் விக்டர் ஹாரா கவிதையை வாசித்துக்கொண்டிருந்ததைச் சொல்லி முடிப்பார். அதற்கும் மேல விக்டர் ஹாராவைக் கொன்ற ராணுவ ஆள் மீது இப்போது அமெரிக்காவில் நடந்துகொண்டிருக்கும் வழக்கைப் பற்றியும் சொல்வார்.

இன்னொரு தடவை உங்க கூட சீலே போகணும் சீனி என்பார்.

மெக்கா மதினா செல்வது, ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வது போன்றது சாருவுக்கு மற்ற கலைஞர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்வது. அதற்காக மெனக்கெட்டுத் தயாராவார். பணம் சேர்ப்பார். திட்டமிடுவார். எனக்குத் தெரிந்து பத்து வருடமாகத் திட்டமிட்டுப் பணம் சேர்த்து சீலே போய் வந்தார்.

விக்டர் ஹாரா என்பது ஓர் உதாரணம்தான். தனக்குப் பிடித்த கலைஞர்களை அவர்கள் உயிரோடு இருக்கும்போதே நேரில் சென்று சந்திப்பது சாருவுக்கு வழக்கமான ஒன்று. இதில் சின்னவன், பெரியவன் வயது வித்தியாசம் போன்ற ஈகோவெல்லாம் துளியும் கிடையாது. சமீபத்திய உதாரணம் சார்வாகன். தன் எழுத்துக்காக இன்னொரு எழுத்தாளர் தன் வீடு தேடி வருவது எவ்வளவு உவப்பானது… அதுவும் அந்த எழுத்தாளரின் எழுத்துகளையெல்லாம் படித்துவிட்டுச் செல்வது!

அதற்குப் பிறகு சார்வாகனைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் பழுப்பு நிறப்பக்கங்களில் விரிவாக எழுதினார்.

இந்த வழக்கம் சாரு நிவேதிதாவிற்கு ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்திருக்கிறது. தி.ஜா, வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் எனப் பலரையும் சந்தித்துக்கொண்டே இருந்திருக்கிறார். நகுலனைத் திருவனந்தபுரத்தில் போய்ப் பார்த்துவிட்டு வந்ததை விரிவாக எழுதியிருக்கிறார். இந்தக் கால வாசகர்களுக்கு சாருவின் விரிவான அறிமுகம் இல்லையென்றால் நகுலன் குழி தோண்டிப் புதைக்கப்பட்டிருப்பார். எழுத்தாளர்களில் யார் யாரை வச்சிருக்கா? என்பது போன்ற இலக்கியத்தரமான செய்திகளில் நகுலனுக்கு அப்போதிருந்தே ஆர்வம் இருந்திருப்பது சாருவின் கட்டுரைகள் மூலம் தெரிய வருகிறது.

கேரளாவில் ஆ.மாதவனைச் சந்தித்து வெள்ளித்தட்டு பரிசளித்துவிட்டு வந்திருக்கிறார். அவருடைய 8வது நாள் கதையைப் படித்துவிட்டு இதைச் செய்ததாக என்னிடம் ஒரு முறை கூறினார்.

இப்பொழுதெல்லாம் ஓர் எழுத்தாளனின் புத்தகத்தை 200 ரூபாய் கொடுத்து வாங்கிவிடுவதே எழுத்தாளனுக்கு செய்யும் பேருதவியாக நினைத்துவிடுகிறார்கள் வாசகர்கள். அந்த எழுத்தாளன் மீது ஓர் அதிகாரமும் வந்துவிடுகிறது. “உங்க புக்கை காசு குடுத்து வாங்கிப் படிச்சிருக்கோம்” என்று சொல்வதில் ஒலிக்கும் கோரமான அதிகாரம் அருவருப்பூட்டுவதாக இருக்கிறது. ஒரு புத்தகத்தை அல்ப 200 ரூபாய் குடுத்து வாங்குவதோ, அதைப் பற்றி நாலு வரி கிறுக்குவதோ அந்த எழுத்தாளனுக்குச் செய்யும் மரியாதை அல்ல. அக்குள் மயிர் அளவுக்குக்கூட அந்த எழுத்தாளனுக்கு அதனால் புண்ணியம் கிடையாது. இந்தச் செயல்களெல்லாம் வாசிக்கும் தன்னை இண்டெலக்சுவலாக காட்டிக்கொள்ள உதவும் ஓர் உத்தி… அவ்வளவுதான்! எந்த ஒரு கலைஞனையும் உங்களுக்குள் பொய் சொல்லிக்கொள்ளாமல் உண்மையாக நேசிக்க முயற்சி செய்ய வேண்டும். மனதுக்கு நெருக்கமான ஒரு கலைஞனை சாரு கொண்டாடுவது போல எல்லோரும் கொண்டாட வேண்டும. அதில் எப்படி சதவீத வேறுபாடு இருக்க முடியும்? ஒரு குட்டிக் குழந்தையை 50 சதவீத அன்புடன் முத்தமிட முடியுமா? இறைவனை 20 சதவீத பக்தியுடன் வழிபட முடியுமா? எந்த ஒரு கலைஞனையும் உங்களால் முழுமையாகக் கொண்டாட முடியவில்லை என்றால் உங்களை நீங்களே ஒருமுறை சுயபரிசீலனை செய்துகொள்ள வேண்டும். அறியாமையில் இருப்பது தவறே இல்லை. ஒருவர் மூலம் தெரிந்த பின்னும் பிடிவாதமாக அதே அறியாமையைத் தொடர்வதுதான் மனநோய்.

நானும் சாரு நிவேதிதாவைச் சந்திப்பதற்கு முன் பலரையும் போலத்தான் இருந்தேன். சாரு ஒவ்வொரு கலைஞனையும் தன்னால் முடிந்த அளவுக்குக் கொண்டாடுவதைப் பார்த்துப் பார்த்து எனக்கும் புரிய வந்தது. இதற்கு மேல் இவனை எப்படிக் கொண்டாடுவது எனத் தெரியாமல் சாரு தவிப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். எவ்வளவு சொன்னாலும், எவ்வளவு படித்தாலும், நேரிலேயே போய்ப் பார்த்துவிட்டு வந்தாலும், எவ்வளவு எழுதிக் குவித்தாலும், சாருவுக்கு அந்தக் கலைஞனைக் கொண்டாடி முடித்து விட்டோம் என்ற திருப்தி மட்டும் வரவே வராது.

சாருவைச் சந்தித்து அவர் கையில் புத்தகம் கொடுக்கும் எழுத்தாளர்களிடம் பாக்கெட்டில் கையை விட்டு வரும் பணத்தை எடுத்துக் கொடுப்பார்.

“அய்யய்யோ… உங்க கிட்டல்லாம் காசு வாங்கக் கூடாது’’ என்று பதறுவார் புத்தகம் கொடுத்த எழுத்தாளர். ஆனாலும் சாரு வற்புறுத்திக் கொடுத்துவிடுவார். தருண் தேஜ்பாலை கோவா சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தார். வேறு எந்த எழுத்தாளராவது அவரைச் சிறையில் போய்ப் பார்த்திருப்பார்களா? ஒரு வாசகன்கூட போய்ப் பார்த்திருக்கமாட்டான். இதுதான் இன்றைய எழுத்தாளர்களின் நிலைமை. அசோகமித்திரன் இறந்ததற்கு 60 பேர் வரைதான் வந்திருந்தார்கள் என்று சாரு வேதனையுடன் தெரிவித்தார்.

கேளிக்கை என்பது வேறு கலை என்பது வேறு. இரண்டும் தேவைதான். ஆனால் நாம் கேளிக்கையாளர்களுக்குக் கொடுக்கும் இடத்தைக் கலைஞர்களுக்கும், கலைஞர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கேளிக்கையாளர்களுக்கும் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். கமல்ஹாஸனுக்கு விஸ்வரூபம் படப் பிரச்சனையின்போது நிறையப் பேர் தங்கள் வீட்டுப் பத்திரங்களை அனுப்பி வைத்ததாகக் கமல் சொல்லியிருக்கிறார். ஆனால் ஒரு டீ குடித்து தம் அடிக்க காசு கொடுக்காமல் கோபி கிருஷ்ணனை நாம் கொன்றிருக்கிறோம். மூத்த எழுத்தாளர் என்றில்லை… சமகாலத்திலேயே கோபி கிருஷ்ணன் கதைகளை எடுத்துக்கொண்டு பத்திரிகைகளின் அலுவலகங்களுக்கு சாரு நடந்திருக்கிறார்.

நான் உட்பட பல இளைய எழுத்தாளர்களுக்குப் பல நாட்கள் செலவழித்துப் பிழை திருத்தம் செய்திருக்கிறார். வயதில் குறைந்த எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு விரிவான அறிமுகங்கள் கொடுத்து எழுதியிருக்கிறார். என் முதல் புத்தகமான தற்கொலை குறுங்கதைகளுக்கு சாரு எழுதிய விரிவான முன்னுரை அளவுக்கு இதுவரை வேறு எந்தப் புத்தகத்திற்கும் எழுதப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. அந்த முன்னுரை மட்டும் இல்லையென்றால் அந்தப் புத்தகத்தை வெறும் செக்ஸ் புத்தகம் என்று தமிழ்ச்சூழல் அறிவுஜீவிகள் நிறுவியிருப்பார்கள். சாரு நிவேதிதாவைத் தவிர வேறு யாருக்கும் அந்தப் புத்தகத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளும் தன்மையில்லை. இந்தத் தன்மையை சாரு தன்னுடைய உலக இலக்கியப் பரிச்சயத்தாலும் திறந்த மனதாலும் கலைஞர்கள் மீதுள்ள தீராத அன்பாலும் மதிப்பாலும் அடைந்திருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் கூடி ஒயின் அருந்திக்கொண்டிருக்கும் வேளையில்கூட சாரு ஏதேனும் ஒரு பிடித்த எழுத்தாளரை அழைப்பார். அவருடைய படைப்பைப் பற்றி நீண்ட நேரம் பேசுவார். உடன் இருப்பவர்களை அந்த எழுத்தாளருக்கு அறிமுகப்படுத்தி அவருடன் ஒவ்வொருவராகப் பேசச் சொல்வார். அந்த இரவு அந்த எழுத்தாளருக்கு அப்படியொரு அதி அற்புதமான இரவாகிவிடும்.

அதே போல இளம் இயக்குநர்கள் படம் நன்றாக இருந்தால், அவர்களுடைய அலைபேசி எண்ணை வாங்கி இவரே அழைப்பார். அந்த இயக்குநர் விரும்பினால் நேரில் சென்று சந்தித்துப் பாராட்டிவிட்டு வருவார். தியாகராஜன் குமார ராஜாவை அப்படித்தான் ஒரு காஃபி ஷாப்பில் சந்தித்துப் பாராட்டிப் பேசிவிட்டு வந்தார். ஆரண்ய காண்டத்தைப் பற்றியும் விரிவாக எழுதினார்.

இதுதான், இன்னார்தான் என்றில்லை, மலேஷிய ரேஷ்மானு இசையமைத்த ஒரு பாடலை… பிரிவு என்று நினைக்கிறேன் இதுவரை 1000 முறைக்கும் மேல் கேட்டிருப்பார். எல்லாரையும் கேட்கச் சொல்வார். ஒரு கலைப் படைப்பு சாருவுக்குப் பிடித்துவிட்டால் செய்யும் முதல் வேலை தானே ஒரு தற்கொலைப் படை வீரன் போல மாறி அதைப் பொதுவெளியில் பரப்புவதுதான். பிறகு தனிப்பட்ட முறையில் தனக்குத் தெரிந்த நண்பர்கள் அனைவருக்கும் அதைத் தெரியப்படுத்துவார். பார்த்துவிட்டீர்களா, கேட்டுவிட்டீர்களா, படித்துவிட்டீர்களா எனப் படுத்தியெடுத்துவிடுவார். இதுதான் ஒரு கலைஞனை நேசிப்பதென்பதும், அந்தக் கலைக்குச் செய்யும் மரியாதை என்பதும்.

ரேஷ்மானு போன் நம்பர் அப்போது சாருவுக்குக் கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் ஃபோனில் பாராட்டி இருப்பார். நேரிலும் சென்று பேசி இருப்பார். இந்த விஷயம் இதுவரை ரேஷ்மானுவுக்குத் தெரியாது. அவருக்குத் தெரிய வந்தால் எவனோ ஓர் எழுத்தாளன் நம்முடைய ஒரு பாடலை இந்த அளவுக்குச் சிலாகித்துக் கொண்டிருக்கிறானா என்று வியப்பாக இருக்கும்.

சாரு நிவேதிதாவின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்… கலையோ கலைஞனோ ஒரு பண்டமோ, சேவையோ அல்ல. ஒரு பீட்சாவைப் பணம் கொடுத்து வாங்கித் தின்றுவிட்டு ஆய் போவது போலக் கலையை அணுக முடியாது. ஒரு மசாஜ் செய்து கொண்டு 2000 ரூபாய் கொடுத்துவிட்டுப் போவது போலக் கலைஞனை நடத்தக்கூடாது. உள்ளன்போடும் மதிப்பு மரியாதையுடனும் நம்மால் என்னவெல்லாம் செய்து அவனைக் கொண்டாட முடியுமோ அவ்வளவையும் செய்ய வேண்டும் என்பதைத்தான்.

இங்கே இலக்கியம் எனப்படும் கலையறிவு ரசனைத் துறையில் ஒரு கலைஞனையோ கலையையோ ரசிக்க, கொண்டாட ஏகப்பட்ட வரையறைகள் வைத்திருக்கிறார்கள். சாதி, மதம், ஊர், சாரி, குழு என ஏகப்பட்டவைகளைத் தாண்டித்தான் கலைஞனை அணுகுவதற்கான மனோபாவமே வருகிறது. இது எனக்கு எப்படி இருக்கிறது என்றால் பெண்ணின் ஜாதி, மதம், படிப்பு, ஊர், வசதி, பரம்பரை, குடும்பம் என அனைத்தையும் அறிந்து கொண்டபின் அதையெல்லாம் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு, அதையே அந்த யோனிக்கும் சூட்டிப் பின் முத்தமிடுவது போல இருக்கிறது. ஆனால் சாரு இந்த எல்லைகளையெல்லாம் கடந்தவர். இப்படிச் சொல்வது சாரு என்ற தனி மனிதனைப் புகழ்வது அல்ல. சாருவின் பரந்துபட்ட வாசிப்பு, அதை அவர் எந்தத் தயக்கமும் பூச்சும் இல்லாமல் உள்வாங்கிக்கொண்ட விதம், கலை, கலாச்சாரம், தத்துவம், பண்பாடு என அனைத்தையும் திறந்த மனதுடன் அணுகுவது மற்றும் உள்வாங்கிக்கொள்வது என்ற இத்தகைய போக்கினால்தான் சாரு தனக்கு எல்லைகளில்லை என்ற நிலையை அடைகிறார். இந்த எல்லையற்ற தன்மையை எப்படி அவர் அடைந்தார் என்பதில் எந்த ரகசியமும் இல்லை. எல்லாவற்றையும் எழுதிக் குவித்திருக்கிறார். மொத்தமும் இணையத்திலும் புத்தகங்களிலும் கொட்டிக் கிடக்கின்றன. தன் வாழ்வை இவ்வளவு வெளிப்படையாக வேறு ஏதேனும் இந்திய எழுத்தாளர்கள் சமூகத்தின் முன் நிர்வாண எழுத்துக்களாக வடித்து வைத்திருக்கிறார்களா என்பது சந்தேகம்தான்.

எல்லைகள் இல்லாததால்தான் சாருவுக்கு தி.ஜானகிராமனும், வான்காவும், லாசராவும், ஜெனேயும், பீத்தோவனும், லாரா ஃபாபியானும், இளங்கோவனும், நபக்கோவும், நிக்கனர் பார்ராவும், லூயிஸ் புனியலும், ரித்விக் குமார் கட்டக்கும், மொஹம்மத் ஷுக்ரியும் எல்லாரும் ஒன்றுதான். விக்டர் ஹாராவின் கதைக்குச் சற்றும் குறைவில்லாமல் ஷுக்ரியின் கதையைக் கூறுவார். சாரு ஷுக்ரியின் கதையை சொல்லும்போது, மொராக்கோவின் தாஞ்சியர் வீதிகளில் ஷுக்ரியுடன், சாருவும் சூத்தில் கிழிந்த துண்டு கட்டிக்கொண்டு குப்பைத் தொட்டியில் ரொட்டியைப் பொறுக்கித் தின்றுகொண்டே போனது போலத் தோன்றும்.

படிப்பறிவு, எழுத்தறிவு இல்லாத ஷுக்ரி, மொராக்கன் வீதிகளில் முண்டகட்டை ரொட்டி என்று கிண்டல் செய்யப்பட்ட ஷுக்ரி சிறைக்குச் செல்கிறார். அங்கே அவர் அரபி கற்கிறார். அல்லாவின் கருணையால் அங்கே இருக்கும் நூலகத்தில் படிக்கிறார். அதாவது அரபியில் ’அ’னா, ’ஆ’வன்னா முதல் படிக்கிறார். நீதிக் கதைகளும், சமயக் கதைகளும் அவர் படித்திருக்கக் கூடும். ஆனால் அவர் வந்து நிற்குமிடம் இலக்கியம். எந்த அளவுக்கு என்றால், ஜெனேயைத் தாண்டிய இலக்கியம் என்று அவர் வாழ்ந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். அல் கூப்ஸ் அல் ஹஃபி என்ற அவரது முதல் புத்தகம் உலக அளவில் பிரபலமாகிறது. இதை சாரு சொல்கையில், நான் இரண்டு விஷயங்களை விளங்கிக்கொள்கிறேன்.

1) இது உலக அளவில் பிரபலமானதில்லை என்று சில இலக்கியக் குமாஸ்தாக்கள் வரிந்துகட்டிக்கொண்டு தரவுகளோடு வருவார்கள்.

2) சாரு மீது ஒரு மதிப்பீடு இருக்கிறது… விளிம்பு நிலை மக்கள் மற்றும் அவர்கள் எழுதிய இலக்கியம் என்றால் சாரு கொஞ்சம் சாஃப்ட் கார்னராகிவிடுவார் என்று.

முதலாவது விஷயம் இலக்கியம் எப்போதும் வெறும் தரவுகள் மற்றும் தர்க்கங்கள் சார்ந்து மட்டும் இருப்பதில்லை. கொஞ்சம் நுண்ணுணர்வு வேண்டும். “ஒன் நைட் இன் பேரீஸ்” உலகப் புகழ்பெற்றது என்று சொன்னால் கூட 90ஸ் கிட்ஸ் பலருக்குத் தெரியாது. இலக்கியத்துக்குச் சொல்லவா வேண்டும்?

விளிம்பு நிலையோ களிம்பு நிலையோ ஒரு இலக்கியப் பிரதி சாருவைத் திருப்திப்படுத்தினால் மட்டுமே அதைப்பற்றி சாரு சிலாகிப்பார். அதை எழுதி இருப்பவன் இதற்கு முன் முண்டகட்டையாய் ரொட்டி பொறுக்கியவனாய் இருந்தாலும் சரி, அவன் ரேப்பிஸ்டாக இருந்தாலும் இருக்கட்டும், அவன் ஒரு பெரும் பணக்கார ஃபிராடாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. அதனால்தான் தனக்கு யாரென்றே தெரியாத இளம் எழுத்தாளர் சாதனாவின் முதல் சிறுகதைத் தொகுப்பை அப்படித் தூக்கி வைத்து எழுதினார்.

பாப்லோ நெரூதாவின் கதைகளைச் சொல்லி அவர் பங்களா இருக்கும் கடற்கரைக்குச் சென்று கால் நனைக்க வேண்டாமா சீனி என்று கேட்கும் அதே சாருதான் கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு விளம்பரப் படத்தில் நடித்த, தனி மலையில் பங்களா கட்டிக்கொண்டு வாழ்ந்த கோடீஸ்வரக் கவிஞரான நிக்கனார் பாராவைப் பற்றியும் அப்படிச் சிலாகித்துப் பேசுவார். “அப்டி இருக்கணும்ல” என்று இடது கை கட்டை விரலைத் தூக்கிக் காட்டிக்கொண்டு, இடது பக்கக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, நாக்கை இடது பக்கச் சிங்கப் பல்லில் ஒட்டுக் கொடுத்துக்கொண்டு ஒயின் கிளாஸை கீழே வைக்கும் சாருவை அந்த ஒரு செகண்ட் மிஸ் செய்து விட்டு சிகரெட் இருக்கா ப்ரோ என்று நீங்கள் கேட்டுக்கொண்டிருந்தால் எத்தனை புத்தகம் படித்தாலும் உங்களுக்குத் தேவையானபோது சிகரெட் கிடைக்காது.

சாருவிடம் இருக்கும் தனித்தன்மையான விஷயமாக நான் பார்ப்பது என்னவென்றால் கலையைக் கலையாக உள்வாங்கிக்கொள்வது. எந்த மனத்தடையும் இல்லாமல், எந்த முன் முடிவும் இல்லாமல். எந்த முன் முடிவும் இல்லாமல் என்று நீங்களும் நானும் சுலபமாகச் சொல்லிவிட முடியும். சாரு போல இந்திய, உலக இலக்கியங்களும், தத்துவம், சிந்தனைகளும் படித்துவிட்டு முன் முடிவு இல்லாமல் இருப்பது என்பது படு சிக்கலானது. அதையெல்லாம் பழகிப் பார்த்தால்தான் தெரியும். பலர் மெண்டலாகிப் போனார்கள். மேலை நாட்டுக் கலை என்ற முடிவோடு படித்தால் எதுவோ நமக்குத் தெரிந்துவிட்டது என்ற மிதப்பில் சுத்துக்குழி, பூராம்பேட்டை போன்ற தமிழ்நாட்டுக் குக்கிராமங்களில் நடக்கும் கதைகளிலேயே நாம் குதிரையில் இருந்து குதித்து இறங்கி செர்ரிப்பழம் பறித்துச் சாப்பிடும் மாடசாமியை உருவாக்கிவிடுவோம். கேட்டால் மேஜிக்கல் ரியலிஸம் என்று சொல்லிவிடுவோம். ஆனால் சாரு உலக இலக்கியங்களை எல்லாம் படித்துவிட்டு எழுதிய முதல் நாவல் “எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும்.”

முழுக்க முழுக்க அப்பட்டமான தமிழ்நாட்டுக் கிராமத்தையும் அந்த மண்ணின் மைந்தர்களையும் அந்தக் காலகட்டத்தையும் வைத்து எழுதப்பட்ட நாவல். பாரதிராஜா படங்கள் போன்ற கிராமங்கள் அல்ல! அதே நேரத்தில் அந்தக் காலத்தில் தமிழ் இலக்கிய பஜனை பாடிக்கொண்டிருந்த கிராமமும் அல்ல. இதுதான் நிஜமான கிராமம். நிஜமான கிராமம் என்றால் அடூர் கோபால கிருஷ்ணன் காட்டிய கிராமமோ, சத்ய ஜித்ரே காட்டிய கிராமமோ அல்ல. நீங்களும் நானும் உணர்ந்த அல்லது சொரணை இல்லாமல் உணர மறுத்த கிராமம்.

இன்று வரை அந்த நாவல் போலத் தமிழக வாழ்வைக் காட்டிய இன்னொரு இலக்கியத்தை நான் படிக்கவில்லை.

இதனுடைய நீட்சிதான் ராஸலீலா.

இதைத்தான் நான் சாருவின் தனித்தன்மையாகப் பார்க்கிறேன். சார்த்தர், ஃபூக்கோ, தஸ்தாயேவஸ்கி, ப்யூக்கோவ்ஸ்கி, மார்க்கேஸ் எனப் படித்திருந்தாலும் அவர்களை அப்படியே காப்பியடிக்காமல் அதே நேரத்தில் அவர்களின் தன்மையையும் அப்படியே தனக்குள் ஏற்றிக்கொள்ளாமல் தேவையானதை எடுத்துக்கொண்டு, அதை கலாபூர்வமாக மட்டும் வரித்துக்கொண்டு தான் எழுதும் போது இங்கே இந்த நாடு, இந்த வாழ்வு சார்ந்து தன் தனித்தன்மையுடனும் தனிமொழியுடனும் உச்சத்தைத் தொடுகிறார். இந்த இடத்தைத்தான் வளர்ந்து வரும் கலைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு கலைஞனை அந்தக் கலைஞனாகவே மாறி அவனுக்குள் புகுந்து புரிந்து கொள்ளல் வேண்டும். புரிந்து கொள்ளல் மட்டுமே! அவனைப் பிரதி எடுப்பதோ, அவனின் தாக்கத்தை நமக்குள் ஏற்றிக்கொள்வதோ அல்ல. இது கொஞ்சம் சிக்கலானதுதான். பாரதியின் தாக்கம் சாருவுக்குள் இருக்கும். நபக்கோவின் தாக்கமும் சாருவுக்குள் இருக்கும். ஏன்… மைக்கேல் ஜாக்ஸனின் தாக்கம்கூட சாருவுக்குள் இருக்கலாம். அந்தத் தாக்கத்தின் அளவு நம் கலையின் தன்மையில் லேசாக வெளிப்படலாம்… ஆனால் அது நம் படைப்பின் தனித்தன்மையில் நுழைய அனுமதிக்கலாகாது. இதைத்தான் நான் சாருவின் வாழ்வியல் செய்தியாகப் பார்க்கிறேன்.

இதற்கான விடையை சாரு தன்னுடைய ஸீரோ டிகிரி மூலமாகச் சொல்கிறார். “ஊரின் மிக அழகான பெண்” என்ற சாருவின் மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பில் இன்னும் ஆச்சர்யங்கள் இருக்கும். வெளிநாட்டு எழுத்தாளர்களின் சிந்தனைப் போக்கையும், அவர்களின் எழுத்து நடையையும் சிதைக்காமல், அதே நேரத்தில் மொழிபெயர்ப்புச் சிறுகதை என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்காத மாதிரி எழுதி இருப்பார் சாரு. நைல், தேம்ஸ், மெகாங்க் நதிகளெல்லாம் அதனதன் எல்லைகளைக் கடந்து, தாண்டி, தமிழகத்துக்குள் நுழைந்து ஓடினால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் சாருவின் மொழிபெயர்ப்பு. சாரு மொழிபெயர்த்த சம்மந்தப்பட்ட எழுத்தாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு அதைப் படித்தால் பூரிப்பின் உச்சத்துக்குச் செல்வார்கள். சாருவுக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அப்படி இருக்க ஏன் இப்படி மெனக்கெட்டு உலகத் தரத்தில் மொழிபெயர்த்தார்? அதுதான் சாருவுக்கு கலையின் மீது இருக்கும் உன்மத்த நேசம். மொழிபெயர்க்கும் போது அந்த எழுத்தாளரின் மீது அளவு கடந்த அன்புடனும் மரியாதையுடனும் சன்னதம் வந்தது போல எழுதிக்கொண்டு இருப்பார்.

ஒரு குழந்தையைக் கர்ப்பப் பையில் வைத்து பாதுகாப்பது, அதைப் பிரசவிப்பது, வளர்ப்பது என்பதெல்லாம் மிக மிகப் புனிதமானது. புணர்வது என்ற சொல் கொஞ்சம் கொச்சையானது இங்கே. இயல்பான புணர்ச்சிகூட டாபுதான் நம்மிடையே.

கலைஞர்களை சாரு தன் கர்ப்பப் பையில் வைத்திருக்கிறார் என்றோ, கலைஞர்களை சாரு தன் மூலம் மீண்டும் பிரசவிக்கிறார் என்றோ எழுதி சைவ இலக்கியத்தில் சேர்த்துவிடலாம். “கலைஞனைப் புணர்தல்” என்று தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன். புணர்தல் என்பதை உடல் ரீதியான இணைதலைத் தாண்டி கலை ரீதியாக யோசித்தால், இந்த வார்த்தைதான் சரிவரும். சாரு மற்ற கலைஞர்களை ரசிப்பதையும், புரிந்து கொள்வதையும், கொண்டாடுவதையும் பார்த்து இந்த வார்த்தை எனக்குத் தோன்றியது. ஆனால், ஷாக் வேல்யூவுக்காக இதைத் தலைப்பாக வைத்திருக்கிறான் என்று இந்தக் கட்டுரை திசை திரும்பிவிட வாய்ப்புள்ளதால், வைக்கவில்லை. மேலும் அந்தத் தலைப்பை வைக்க முயன்றதற்கு இன்னொரு காரணம், இதுவரை புணர்ந்தவர்களும், புணராதவர்களும் இந்தக் கட்டுரையைச் சரியாகப் புரிந்துகொள்ளக் கூடிய சாத்தியமும் இதில் இருப்பதால்தான்.

கலையையும், கலைஞனையும் இமயமலையில் இருக்கும் பேங்காங்க் ஏரி என்று வைத்துக்கொள்ளுங்கள். பெரும்பாலும் அந்த ஏரி ஐஸ் கட்டியாக இருக்கும். நீராக இருக்கும் போதும் சில்லிடும் குளிரில் இருக்கும். நம்மில் சிலர் அந்த ஐஸ் நீரில் சுண்டு விரலை நனைத்து எடுத்து சுண்டு விரல் மட்டும் சில்லிட, தணல் போட்டு சூப் குடிப்போம். சாரு நிவேதிதா அந்த ஏரியில் குதித்து உடல் விரைத்து அந்த ஏரியுடன் உறைந்துவிடுவார்.

அராத்து

மற்ற மனித உயிரினங்கள் போல ஒரு தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தார். பிறந்ததுமே எழுத்தாளர் என்று தெரிந்துவிட்டதால் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றப்பட்டார். அப்போதெல்லாம் ஆதார் கார்ட் இல்லாததால், வேறு வார்டுக்கு மாற்றும்போது குழந்தை மாறிவிட்டதாக இந்த எழுத்தாளர் குடும்பத்தில் ஒரு சந்தேகமும், உறவினர்கள் மத்தியில் கிசுகிசுவும் நிலவி வருகிறது. அதனால் இவர்தான் அந்த எழுத்தாளரா? அல்லது இந்த எழுத்தாளர் வேறு குடும்பத்தில் வளர்ந்து வேறு பெண்களுடன் குடும்பம் நடத்தி வருகிறாரா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்.

ஹாவர்ட் யூனிவர்சிட்டியில் இவர் அட்மிஷனுக்கு விண்ணப்பிக்காததால் இவருக்கு சீட் கிடைக்கவில்லை. இதுதான் இன்றைய உலக யதார்த்தம் மற்றும் அபத்தம்.

இவருடைய புத்தகத்தை வேறு யாரும் ஆய்வு செய்யாமல், அடிக்கடி இவரையே சந்தேகங்கள் கேட்டு, இவரையே இவரது புத்தகங்களை ஆய்வு செய்யும் இழி நிலைக்குத் தள்ளுகின்றனர்.

இதுவரை எந்த அமெரிக்க ஆப்பிரிக்கப் பல்கலைகழகங்களும் இவரை உரை நிகழ்த்த அழைத்ததில்லை. எப்போதேனும் அழைப்பு வரும் என்று முன்கூட்டியே கணித்து, பதில் மெயில் தயாராக வைத்திருக்கிறார். அதில் 2 காரணங்களைப் பிராதானமாகக் குறிப்பிட்டு வர இயலாது என்று எழுதி வைத்து இருக்கிறார்.

1. எனக்கு ஆங்கிலத்தில் பேசினால் காதில் விழாது.

2. விசா எடுக்க என்னால் தெருவில் நிற்க முடியாது என்பதையும் தாண்டி, அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் இல்லை.

இவர் இதுவரை எந்த விருதையும் வாங்கியதில்லை. எப்போதேனும் யாரேனும் ஒரு இண்டர்நேஷனல் விருது கொடுத்துவிட்டால், அதற்குப் பிறகு ஆட்கள் போட்டு எழுதி பல்வேறு நாவல்கள் வெளியிடத் திட்டம் வைத்து இருக்கிறார்.

View Comments

  • குரு பூர்ணிமா நாளில் அற்புதமான கட்டுரை

  • சாரு நிவேதிதா பற்றி 360° மில் அறிந்து கொள்ள முடிந்தது.
    நன்றி!

  • நல்ல ஒரு வாழ்க்கை சரித்திரம் படித்த ஓர் உணர்வு..... இந்த உணர்வுக்கு காரணம் சாருவின் பிம்பமா அல்லது அராத்துவின் எழுத்தாழுமையா...???? புதிர்தான்....

Share
Published by
அராத்து

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago