சிறுகதை

ஒரு பூனையின் சுயசரிதை

8 நிமிட வாசிப்பு

முதல் பாகம்

பறவைகளின் மொழியை ஒருவாறு கண்டறிந்து ஒரு கிளியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதுதான் “ஜோ” என்ற நம் கதையின் கதாநாயகி என் அருகில் வந்தாள். காற்றினை மெலிதாக அதிரவைத்து என்னிடம் நெருங்கி வந்தாள். வழக்கமாக வாஞ்சையுடன் அவளின் சருமத்தைத் தடவிக்கொடுத்தேன். பலவிதமான இசைக் குறிப்புகளைத் தன்னுடன் ஒளித்துவைத்திருக்கும் ஓர் இசையமைப்பாளரின் ஹார்மோனியம் ஏதோ ஒன்றை நம்மிடம் கூற விழையும் தவிப்பு ஜோவின் குரலில் இன்று இருந்தது. முதன் முதலாக ஜோவின் ஏற்ற இறக்கமான குரலுடன் அவளின் உடல் மொழியையும் கண்களின் பாவத்தையும் கணக்கிலெடுத்து அவள் மொழியில் பேச ஆரம்பித்தபோது மிகுந்த சிக்கல் இருந்தது. தினமும் ஒரு பயிற்சிக்காகக் காலை நேரங்களிலும், பின் இரவுக் காலங்களிலும் பால்கனியில் அமர்ந்துகொண்டு அவளுடன் பேசிப்பழக அவளின் மொழியில் எனக்குக் கூடுதல் ஆளுமை கைகூடியது. எங்களின் சந்திப்பின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு பகுதியாக அவளின் சுயசரிதையை என்னிடம் கூறினாள். முதலில் அவளுடைய பூர்வீகம் குறித்த நினைவுகளிலிருந்து தொடங்கினாள்.

“அப்போது எனக்கு ஒரு வயதிருக்கலாம். சரியாக நினைவில்லை என்றாலும் அந்த ஆசிரமத்தின் நிர்வாகியின் முகத்தை இன்றளவும் என்னால் மீட்டெடுத்துத் தெளிவாக விளக்க முடியும். அவருடைய மடியில்தான் நான் அதிக நேரத்தைக் கழித்திருக்கிறேன். அவர்தான் எனக்கு “ஜோ” என்று நாமகரணத்தைச் சூட்டியிருக்க வேண்டும். அவரின் மிக நேர்த்தியான விரல் நகங்களில் காலைச் சூரியனின் ஒளி பட்டுச் சிதறும் அழகினை நான் பலமுறை அவரின் மடியில் அமர்ந்துகொண்டு மிக அருகாமையில் ரசித்திருக்கிறேன். அவரும் செல்லமான புனைப் பெயர்களுடன் என்னைக் கொஞ்சி மகிழும்போது அவரின் மெலிந்து நீண்ட விரல்களை அளப்பரிய வாஞ்சையுடன் நக்கிக்கொடுப்பேன்.

ஒருநாள் தொடர்ந்து மழை பொழிந்து கொண்டிருந்தது. இடித்து ஓய்ந்த வானம் மேகங்களைத் தனக்குகந்தவாறு மாற்றியெடுக்கும் முயற்சியில் தோற்றுக் கொண்டிருந்தது. ஒரு வெள்ளிக் கம்பியினைப் போல ஒரே கோட்டில் விழும் தொடர் மழைத்துளிகள் காற்றிற்கு லேசாகத் தடுமாறி ஒரு கைதேர்ந்த நாட்டியக் கலைஞரின் இடுப்பசைவிற்கிணங்க ஒரே சீராக அசைந்து கொடுத்தது. தூரத்திலிருக்கும் மகிழ மரத்தினடியில் நின்று கொண்டிருந்த ஆசிரம நிர்வாகி ஒரு பெரிய குழியைத் தோண்டிக்கொண்டிருந்தார். மழையில் தான் தொப்பலாக நனைந்ததைக்கூடத் துளியும் பொருட்படுத்தாமல் குழி தோண்டுவதை அவரின் வாழ்க்கையின் முதல் லட்சியமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து விடுதியின் இடதுபக்க மூலையில் இருந்து ஒரு பெண்ணின் உடலைத் தோள்களில் சுமந்து கொண்டுவந்து குழியில் மிகுந்த அக்கறையுடன் கிடத்தினார். மழை நின்று காற்று அடித்தது. இலைகளில் தேங்கியிருந்த நீர்த்திவலைகள் பெருமழையாக மீண்டுமொரு முறை பொழிந்து ஓய்ந்தது. குழியினருகில் அமர்ந்துகொண்டு நிர்வாகி அந்தப் பெண்ணை உற்றுப்பார்த்து தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு கேவிக்கேவி மிகுந்த சப்தத்துடன் அழ ஆரம்பித்தார். நடுங்கிக்கொண்டே நீண்ட மரக் கைப்பிடியுள்ள மண் வாரியை எடுத்துக் குழியினை மண் மூடி நிரப்பினார். எதுவும் நடவாதது போல பால்கனியில் வந்தமர்ந்தார். தயக்கத்துடன் தற்காப்பு இடைவெளியுடன் அவர் அருகில் நின்றுகொண்டிருந்த என்னை அதே அன்புடன் அழைத்தார். என்னை அப்படியே வாரி அணைத்துக்கொண்டு மடியில் வைத்துக்கொண்டார். வழக்கமாக அவரின் விரல் நகங்களைப் பார்த்தேன். விரல் இடுக்குகளில் உறைந்திருந்த உதிரத்தின் மணம் அவர் என்னுள் என்னையுமறியாமல் திணித்த சைவ உணவுப்பழக்கத்தை முதன் முதலாக அசைவமாக மாற்றியது. நிர்வாகியின் திடீர் மரணம் குறித்து பலவிதமான யூகங்களை மிகுந்த நேர்த்தியான புனைவுடன் விடுதியில் உள்ள பலர் அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள்.

அதன் பிறகு என் வாழ்க்கையின் தடமே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. எங்கெங்கோ அலைந்து திரிந்தேன். ஒரு காட்டுப்பூனையின் காம வேட்டையில் இருந்து தப்பித்துத் தலைதெறிக்க ஓடும் போதுதான் கருப்பனைச் சந்தித்தேன். அகலமான அச்சுறுத்தும் விழிகள், சாம்பல் போர்த்திய கரிய நிறம், சதைப்பிடிப்பான ஒரு பஞ்சுப்பொதியைப் போல உப்பிப் பருத்த கன்னங்கள், இப்படி ஏதோ ஒன்று அவனிடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத்தான் அவன் காதல் என்று என்னிடம் அடிக்கடி பிதற்றிக்கொண்டிருப்பான். எங்கள் இருவரின் குடும்ப வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகத் தொடர்ந்தது. எந்த ரகசியத்தையும் நான் கருப்பனிடம் மறைத்தது இல்லை. எப்படியாவது என் கடந்த கால வரலாற்றை அவனிடம் கூற ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன்.

ஒரு நிலாக்காலத்தில் கருப்பனை அருகில் இருக்கும் உயரமான குன்றிற்கு அழைத்துச் சென்றேன். நிலவொளியில் நிறைவான கலவியில் இருவரும் ஈடுபட்டோம். கருப்பன் தன் வழக்கமான முத்தங்களால் என்னை முழுவதும் நிறைத்தான். பிறகு ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனிடம் ஒன்றுவிடாமல் அனைத்தையும் கோர்வையாகக் கூறினேன். முதன் முதலாக கருப்பனின் பாத நகங்களைப் பார்த்தேன். நிலவொளி பட்டு என் கண்களை மேலும் பிரகாசமாக்கியது. மெலிதாக விசும்பிக்கொண்டே குற்ற உணர்ச்சியால் தலையைக் கவிழ்த்துக்கொண்ட என்னைக் கருப்பன் தன் முத்தங்களால் தேற்றினான். அதுவே நான் அவனைச் சந்தித்த கடைசி நாளாகப் போனது. எங்கோ தொலைவிலிருந்து காற்று கொண்டு வந்த கருப்பனின் உதிரத்தின் மணம் என் நெஞ்சில் இரண்டாம் முறையாக நிறைந்து வழிந்தது.

மீண்டும் முதலிலிருந்து ஓர் ஆரம்பம், மீண்டும் ஒரு போராட்டமென வாழ்க்கையை நகர்த்த வேண்டியிருந்தது. அடிக்கடி நிர்வாகியும் கருப்பனும் கனவில் வர ஆரம்பித்தார்கள். அப்போதுதான் ஒருநாள் உன் மனைவியை அவள் வழக்கமாக வரும் பல்பொருள் அங்காடியில் சந்தித்தேன். பார்த்தவுடனேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. எவரையும் நொடியில் கவர்ந்திழுக்கும் எழிலான முகம். எங்களைப் போன்ற அனாதைகளுக்கு எப்படியாவது உதவத் துடிக்கும் இரக்க குணம். அவளைப் பின்தொடர்ந்து வந்து காரில் ஏறிக்கொண்டேன். என் உரிமையான செய்கைக்கு அவள் மறுப்பேதும் கூறவில்லை. உங்கள் வீட்டின் முடிசூடா ராணியாக வலம் வந்தேன். அவளை நான் கொல்லத் துளியும் திட்டமிடவில்லை. மிகவும் எதேச்சையாக என் கண்முன்னேயே நடந்தேறிய உன் மனைவியின் மரணம் ஒரு துர்பாக்கியமான சம்பவம்தான்.

இதே பால்கனியில் அவளின் மடியில் அமர்ந்து அவளின் வாசம் மிகுந்த கன்னத்துடன் என் கன்னத்தை இழையோட்டினேன். முந்திய தினம் நீ அவளைக் காயப்படுத்தியிருக்க வேண்டும். அவளின் மேலுதட்டின் சிறிய சதைப்பிளவில் இருந்து உதிர்ந்த உதிரம் என்னை மூன்றாவது முறையாக மிருகமாக்கியது. நன்றியுணர்ச்சியால் என் நெஞ்சு விம்மினாலும் என் நாவு முழு நிலாக்காலத்தில் கடற்கரையில் தன்னிலை மறந்த அலைகளைப் போல உயரே எழும்பி அடங்கியது. என் திடீர்ப் பாய்ச்சலிலிருந்து தடுமாறி அவள் பால்கனி சுவற்றினைப் பிடிக்க நிலை குலைந்து ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்துவிட்டாள்.

உனக்கெல்லாம் அப்போது என்னிடம் துளியும் பிரியம் இருந்ததில்லை. ஏதோ ஓர் அருவருப்பான மிருகத்தைப் பார்ப்பது போலத்தான் என்னைப் பார்ப்பாய். எவ்வளவு முயன்றும் உன் அன்பிற்குப் பாத்திரமாக என்னால் நடந்துகொள்ளவே இயலவில்லை. உன் மனைவி இறந்த பிறகுதான் என்னையும் ஓர் உயிராக மதிக்கக் கற்றுக்கொண்டாய். உன் மனைவி இறந்தது குறித்து நீ மிகப் பெரிதாய் வருத்தப்பட்டு நான் பார்த்ததேயில்லை. அவளின் மரணம் ஏதோ ஒரு வழியில் உனக்கு நிம்மதியைத் தேடிக்கொடுத்ததாக நான் உணர ஆரம்பித்தேன். உன் வினோதமான இந்தச் செய்கை எனக்கு மிகுந்த வியப்பை அளித்தது. கூடவே பதற்றமாகவும் இருந்தது. உன் மனைவியின் மரணம் குறித்து உன் மேல் சாற்றப்பட்டிருக்கும் குற்றம் நிரூபிக்கப்பட்டு உனக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதி. என் முழுக்கதையையும் உன்னிடம் கூறிய திருப்தியில் நான் இங்கிருந்து செல்கிறேன்.”

சிறிது தூரம் சென்ற ஜோ மீண்டும் என்னிடம் திரும்பி வந்தது. “எங்கு செல்லப் போகிறேன் என்று நீ கேட்கமாட்டாயா?” என்று அதிகாரத்துடன் என்னை மிரட்ட மிகுந்த அச்சத்துடன் “எங்கே?” என்று திணறிக்கொண்டே கேட்டேன். “ஏன் உனக்குத் தெரியாதா? உன் கள்ளக்காதலி பெமீலாவின் வீட்டிற்குத்தான்” என்று வாலைச் செங்குத்தாக நீட்டிக்கொண்டு என்னைத் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிட்டது.

இரண்டாம் பாகம்

“மிஸ்டர் டிசோசா, நீங்கள் ஏதாவது கூற விரும்புகிறீர்களா?” மெலிந்த உடல்வாகு, அடர்த்தியான புருவம், மெலிதாக மீசை இருந்தால் மேலும் கவர்ச்சியாக இருந்திருக்குமோ என்று யோசிக்க வைக்கும் படர்ந்த உதட்டின் மேற்புறம். நீண்ட கவர்ச்சியான விரல்கள். அவனுடைய உடல்வாகின் சுற்றளவைச் சராசரிக்கு உயர்த்திக்காட்டும் அவன் அணிந்திருந்த தளர்வான உடை.

“இந்தக் கொலையை நான் செய்யவில்லை, மை லார்ட்” நீதிபதியை நோக்கிக் கூறினான். “சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் மற்றும் சாட்சியங்களை வைத்துப் பரிசீலித்ததில் பெமீலாவை டிசோசா கொலை செய்யவில்லை என்று ஊர்ஜிதமாகிறது. ஆதலால் இவர் மேல் சுமத்திய குற்றம் தள்ளுபடியாகிறது. உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க காவல் துறைக்கு ஆணையிடுகிறேன்”.

இரண்டு மாதங்கள் கழித்து வீட்டிற்குத் திரும்பினான் டிசோசா. வழக்கம் போல ஜோ உற்சாக ஒலி எழுப்பிக்கொண்டே அவனைத் தொடர்ந்து வந்தது. பியானோவின் மேல் மெத்தென ஏறி நின்று அவனைப் பார்த்தது. பிறகு பியானோவின் ஒலிக்கட்டைகளின் மேல் மிடுக்காக குறுநடை பயின்றது. அப்போது பியானோ எழுப்பிய ஒலியில் பித்தோவனின் “Moon light sonata”வின் ஒலிக்குறிப்பு இருந்தது. இது துளியும் சாத்தியமே இல்லை என்று தெரிந்தும் உண்மை இதுதான் என்று கூடுமானவரை நம்புவதற்கு முயற்சி செய்தான் டிசோசா.

இருள்தான் மரணம் என்று சிலர் கூறுகிறார்கள். அவன் அதனுடன்தான் தினமும் வாழ்கிறான். இருள் அவனுக்கு மற்றவர்களைப்பாற்கிலும் அதிகம் கற்றுக் கொடுத்திருக்கிறது. கற்றுக்கொண்டும் இருக்கிறான். இருள் சில சமயம் அதன் தனிமை குறித்தோ அல்லது அவனைப் போல் இல்லாமல் மற்றவர்கள் அதை நேசக் கரம் நீட்டாமல் அலட்சியப்படுத்தும்போதோ ஒருபாடு அவனிடம் புலம்பித் தீர்த்துவிடும். அவனுடைய நிலையும் அதுதான் என்றானபடியால் ஆழ்ந்த அக்கறையுடன் அது சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு ஆறுதலும் சொல்வான்.

அவன் மற்றவர்களைப் பார்க்கிலும் மிகவும் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவன் இரண்டு கைகளில் மொத்தம் பத்து கண்களைக் கொடுத்திருக்கிறார். நளினமான அவன் விரல் நுனிகளில் பார்வை நரம்புகளின் ஆரம்பம் இருந்தது. அவன் மூளை இடுக்குகளில் வழிய வழிய ஏராளமான பிம்பங்களைச் சேமித்து வைத்திருந்தான். ஒவ்வொரு காலையும் குளிரைத் தகர்க்கும் முதல் உளியெனக் கதிரவனின் ஒளி மிதமான வெப்பத்துடன் அவனுடைய பியானோவின் ஒலிக் கட்டைகளில் முதலில் படர்ந்து, பிறகு அவனுடைய விரல்களைத் தீண்டும். அவனுடைய கையிருப்பில் கதிரவனின் வரைபடங்கள் ஏராளமாக இருந்தன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனுடைய “காலைப் பனியின் சோகம்” என்ற ஓவியத்தை மன்னரின் வாரிசில் வந்த ஒரு ரஷ்ய முதியவர் ஐம்பது கோடிக்கு ஏலம் கேட்டபோது அவனுடைய காதலி பெமீலாவால் துளியும் நம்பவே முடியவில்லை. ஆனால் அவனோ “பிச்சைகாரன், தானமாகக் கேட்பது போல் என் விலையை ஒரு மன்னரின் வாரிசு நிச்சயிக்கிறது” என்று அனைவருக்கும் கேட்பது போல் மிகவும் சப்தமாகச் சிரித்துகொண்டே அந்த அறையை விட்டு வெளியேறினான்.

அன்று மாலை பெமீலா அவனைக் காண வந்திருந்தாள். இரண்டு காப்பிக் கோப்பைகளுடன் பொகைன்வில்லா செடியின் அருகில் இருக்கும் மர இருக்கையில் இருவரும் அமர்ந்து கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் இருவரும் ஒன்றும் பேசவில்லை.

“ஒரு சுவையான காப்பியுடன் என் இன்றைய மாலையை மேலும் ரசிப்பாக்கிவிட்டாய் பெமீலா”. அதற்கும் அவள் பதில் ஒன்றும் கூறவில்லை. மழை வருவதற்கு முன் வானத்தில் சிறிய கீற்றாகத் தெரியும் செல்லமான மின்னலைப் போல இருந்தது அவளின் ஆரம்பப் புன்னகை.

வீட்டினுள் பியானோ ஒலித்தது. அவனுடைய செல்லப் பூனை ஜோவின் வேலையாகத்தான் இது இருக்க வேண்டும். சிறிது நேரத்தில் அவன் அருகில் வந்து காலில் உரசினாள். அவளை அப்படியே அள்ளி மடியில் சிறை பிடித்தாள் பெமீலா. முதலில் முரண்டு பிடித்தாலும் பிறகு ஏதோ அவளின் ரகசிய உடன்படிக்கைக்குக் கட்டுப்பட்டவளைப் போல அமைதியாக இருந்தாள். ஒத்தடம் கொடுப்பது போல அவளின் கன்னத்தோடு ஜோவின் நாசியை உரச எதிர்பாராமல் துள்ளிக் குதித்து ஓடினாள் ஜோ. மீண்டும் பியானோவின் ஒலி. ஆனால் இந்தத் தடவை அவனுக்கு மிகவும் பரிச்சயமான பித்தோவனின் “Moon light sonata”வின் முதலடி. அவனுக்கு எதுவும் புரியவில்லை. எப்படி ஜோவிற்கு இந்த இசைக் குறிப்பு தெரிந்திருக்கும். அப்படியே அவன் வாசிப்பதைக் கேட்டிருந்தாலும் ஒரு பூனை தன் கால்களால் முறைப்படி பியானோ இசைப்பது ஒரு போதும் சாத்தியமேயில்லை. பயிற்சி பெற்ற அவனுடைய மாணவர்களே இந்தப் புகழ் பெற்ற ஒலிக் குறிப்பை வாசிக்க பல முறை திணறியிருக்கிறார்கள்.

அவனுடைய விரல்களைப் பிடித்து முத்தமிட்டாள் பெமீலா. “மிகவும் கவர்ச்சியான விரல்கள்” என்று அவனுடைய விரல்கள் ஒவ்வொன்றையும் ஒரு குழந்தையின் ஆர்வத்தில் தடவிக்கொண்டே ஆராய்ந்தாள்.

“உன்னைப் போல் என்னை நினைத்துவிட்டாயா! எனக்குப் பத்து கண்கள்” என்றான் அவன். “உன் உதட்டையும் சேர்த்து பதினொன்று கண்கள் உனக்கு” ன்றவள் நேற்று அவன் கொடுத்த முத்தத்தைச் சரசரக்கும் பொகைன் வில்லாவின் பூக்களின் சாட்சியுடன் மீண்டும் அழுத்தமாகக் கொடுத்தாள்.

“இன்று நீ யாரையாவது உன்னுடன் அழைத்து வந்திருக்கிறாயா?”

“எனக்கு உன்னை விட்டால் யாரும் நண்பர்கள் கிடையாது என்பது இந்த மலைக் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். உனக்கு மட்டும்தான் எப்படித் தெரியாமல் போனது என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது” என்று செல்லமாக அவனிடம் கடிந்துகொண்டாள். அப்போது ஜோ வினோதமான ஒலிகளை எழுப்பிக்கொண்டே அவர்களைக் கடந்து ஓடியது.

இந்த இரவை உன்னுடன் கழிக்கலாம் என்றிருக்கிறேன் என்று அவள் கூறும்போது அவன் மறுப்பேதும் கூறாமல் அவளை இறுக அணைத்துக்கொண்டான். இரவு நெடு நேரம் வரை விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அடிக்கடி பியானோவின் ஒலி இரவின் அமைதியைக் கவனிக்க வைத்தது.

அவனுக்கு அன்றைய காலை வழக்கமான காலையாக இருக்கவில்லை. வீட்டிற்கு வெளியே பலர் குழுமியிருந்தார்கள். நடுங்கியபடியே அவன் காவலர்களுடன் வெளியே வந்து வராண்டாவில் அமர்ந்துகொண்டான். அவனுடைய விரல்களில் ரத்தக்கறை காய்ந்து போயிருந்தது. அங்கு நடந்த அனைத்திற்கும் ஒரே சாட்சியாக இருந்த ஜோ சுற்றுச் சுவரிலிருந்து குதித்து அவனருகில் வந்தது.

உள்ளே சென்ற காவலர்களும் துப்பறிவாளர்களும் எதிலிருந்து தொடங்க வேண்டும் என்ற குழப்பத்திலிருந்தார்கள். அறை முழுவதிலும் ரத்தக்கறை சிதறியிருந்தது. அவனைத் தவிர வேறு ஒருவரின் கைரேகைகளும் அந்தப் பியானோவின் ஒலிக் கட்டைகளில் இருந்தது. தரையில் கவிழ்ந்து கிடந்த அவளின் உடலை மிகவும் அருகில் அவதானித்த ஓர் இளைஞன் கைக் குட்டையால் வாயைப் பொத்திக்கொண்டு தலைமைக் காவலரைச் செய்கையால் அழைத்தான். பெமீலாவின் தொண்டை மிகவும் கொடூரமாகச் சிதைக்கப்பட்டிருந்தது. அறையின் பல இடங்களில் சுவர் உட்பட ஒரு பூனையின் ரத்தக்கறை படிந்த பாதச்சுவடுகள் ஏராளமாக இருந்தன.

எதிர் வீட்டில் இருக்கும் சாமுவேலைக் காவல் அதிகாரி விசாரிக்கத் தொடங்கினார். அவரைப் பின்தொடர்ந்து “ஜோ” வந்தது.

“டிசோசாவைப் போல “ஜோ”விற்கும் பார்வை கிடையாது சார்”

“ஜோ!”

“அவனோட வளர்ப்புப் பூனை சார்”

நெற்றியைச் சுருக்கிக்கொண்டு காவல் அதிகாரி “ஜோ”வைப் பார்த்தார். சாமுவேலின் அருகில் வந்ததும் புலி போலப் பிளிறிக்கொண்டே அங்கிருந்து ஓடியது ஜோ. சிறிது நேரத்தில் காற்றில் மிதந்து வந்த பித்தோவனின் “Moon light sonata” வின் இசை அனைவரின் கவனத்தையும் மொத்தமாகத் திசை திருப்பியது.

பிரேம பிரபா

நொடிக் கனவுகளாய்க் கடந்த காலங்களை மீண்டும் ஒழுங்குபடுத்தி, மீள்பட்டியலிட்டு, மறு வாசிப்பிற்குட்படுத்தி நம்மை நாம் தயார்ப்படுத்தும் நிலைதான் ஒரு படைப்பாளி குழந்தைத்தனத்துடன் வைக்கும் முதலடி. இப்படி நடந்துவிட்டது, இப்படி நடந்திருந்தால் இதை ஓரளவிற்குத் தவிர்த்திருக்கலாம், இப்படித்தான் நடந்திருக்க வேண்டும், என்ற தடுமாற்றத்தின் பதிவுகளாகத்தான் என் சிறுகதைகள் (1.அவன், அவள் மற்றும் நிலா 2.தொடர்ந்து தோற்கும் புலிக்கடவுள் 3.டோரியன் சீமாட்டி) என் கட்டுரைகள் (1.முகமூடிகளும் முட்கிரீடங்களும்) என் கவிதைத் தொகுப்புகள் (1.ஒரு கோடிக் கனவுகள் 2. அஞ்சறைப் பெட்டி) வெளிவந்திருக்கின்றன. முக்கியமாக ஒரு படைப்பாற்றலின் ரகசிய நீட்சி படைப்பாளியைச் சற்றே ஆசுவாசப்படுத்தும் தற்காலிகச் சலுகையே தவிர, அவன் அத்தகைய படைப்புகள் வாசகனின் மனதில் இடம் பிடிக்க அதிகம் போராட வேண்டியிருக்கிறது. தன் கதாபாத்திரங்களின் வடிவை மேம்படுத்தி வாசகனின் பொதுப்புத்தியில் சிறிது நேரம் இளைப்பாற வைப்பதற்கான யுக்தியை நோக்கித்தான் என்னைப் போன்ற பலரின் இலக்கியப் பயணங்களும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

Share
Published by
பிரேம பிரபா

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago