வட்டப்பாதை

13 நிமிட வாசிப்பு

பறவையின் உகிர்கள் காற்றைக் கிழிப்பவை. காற்றின் உகிர்கள் காலத்தை வருடுபவை. நான் ஓடத்தின் முனையில் நின்றபடி கடந்து வந்திருந்த நீர்பரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானில் பறந்து கொண்டிருந்த நாரையின் பிம்பம் நீரில் நீந்திக் கொண்டிருந்தது. அந்நியப் பறவை தன் அகத்தில் சம்போகிப்பதை மறைத்துக்கொள்வதைப் போல நிச்சலனம் பூண்டிருந்தது குளம்.

குனிந்து கூழாங்கல் ஒன்றை எடுத்து எறிந்தேன். நீரில் உண்டான வட்டங்கள் வலிக்கு அழுவது போல் இருந்தது. நீர், கண்ணீர் சிந்தினால் யார் பொருட்படுத்தப் போகிறார் என்பதால்தான் இப்படி வட்டம் போட்டு தன் அழுகையைக் காட்டிக் கொள்கிறது.

இதை ஒரு விசித்திரமான சிந்தனை என்று உள்ளம் நினைத்துக் கொண்டிருந்த போதே இனி விசித்திரம் என்று அடிக்கோடிட்டுக்கொள்வதற்கு ஏதும் மீதம் இருக்கக் கூடுமா என்றும் நினைத்துக்கொண்டது. அடுத்த கூழாங்கல்லைக் கையில் எடுத்ததும் ஒரு தனித்துவமான தணுமையைக் கையில் உணர்ந்தேன். காலத்தின் ஸ்பரிசம். அல்லது காலத்தின் முத்தம்.

காலத்தை நம்மால் புலனுணர்ந்து கொள்ள முடியாது என்று தொடர்ந்து பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். அல்லது காலம் நம்மிடையே கலவரம் இன்றி தான் அமைதியாக வாழும் பொருட்டு அப்படி நம்மை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறது. வரலாற்றின் பதிவுகள் விசைகள் குறிப்புகள் என எல்லாமே காலத்தின் சேனைகள். அறிவியலின் குறிப்புதவியும் பெளதீகத்தின் அடிப்படையும்கூடக் காலம்தான். நாம் அறிவெனவும் தர்க்கமெனவும் சேகரித்து வைத்திருக்கும் அனைத்துமே இவ்விரண்டிலும் இருந்து பெறப்பட்டவையே.

காலம் நம் முன் ஒரு மாயாஜால நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. காலத்தின் இருப்பை உணர்வுப்பூர்வமாக அறிந்துகொண்டால் மனிதன் தன் அசவா மூளையைத் தீட்டியபடி தன்னை நோக்கிப் படையெடுத்து வந்து அவனையும் காயப்படுத்திக்கொண்டு தன்னையும் காயப்படுத்திவிடக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு அதற்கு இருந்தது.

வெறும் நொடி முள்ளின் ஒலிகளை மட்டுமே கூர்ந்து சில மணி நேரங்கள் கேட்கும் செவி ஒன்று பைத்தியமாகத் தூண்டும், அல்லது உறக்கத்தில் தள்ளும். ஏனெனில் அது மரணத்தின் தொடர் நினைவூட்டல் ஆகிவிடுகிறது. இப்படித்தான் நாம் கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்று அறியும் அனைத்திலும் காலம் இருந்தபடியே இல்லாமல் இருக்கிறது. ஒரு இலையை ஒளித்து வைக்கச் சரியான இடம் கானகம்தான் என்பதைப் போல அத்தனைக்குள்ளும் வியாபித்திருப்பதன் மூலம் காலம் தன்னை ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது.

தொல்லியல் ஆய்வாளர்களையும் அறிவியல் ஞானிகளையும்விடக் கவிஞர்களுக்குக் காலத்துடன் ஒரு பிரத்தியேகமான உரையாடல் இருந்தபடி இருக்கிறது. அதைக் காலமும் தனக்குப் பாவலர் பாடும் பெருமிதப் பாட்டு என்கிற ரீதியில் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டிருக்கிறது. இத்தனை விதிகளையும் கண்கட்டு வித்தைகளையும் தாண்டிக்கூடக் காலத்தின் ரேகைகளைப் புனைவின் வழியாகவும் அறிவின் வழியாகவும் குடைந்தபடியே இருக்கிறான் மனிதன். இதோ இன்று நான்கூட அந்தப் பரீட்சையின் ஒரு அங்கம்.

*

நண்பர்கள் எழுவருடன் அன்று புஹாரியில் இரவுணவை உண்டேன். அன்று நான் வழக்கத்தைவிட மிக இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக செல்வி தெரிவித்தாள். காரணமே இல்லாமல் இப்படி வீண் செலவு செய்து ஒரு உணவுக் கொண்டாட்டம் எதற்கு என்று அலுத்தும் கொண்டாள். காரணம் இருக்கிறது. நான் யாரிடமும் வெளிப்படுத்தவில்லை அவ்வளவே.

அடுத்த வாரம் இதே நாள் இரவு எட்டரை மணிக்கு நான் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன். ஆடிப்பெருக்கு தினம். எனது முப்பதாவது பிறந்தநாள்.

எல்லோரிடமிருந்தும் விடைபெற்றதும் அன்னையின் கனகாம்பர மனம் நினைவில் எழுந்தது. நான் பூக்கடைக்குச் சென்று ஒரு முழுக் கூடையையும் வாங்கிக்கொண்டேன். அதை வண்டியின் பின்புறம் வைத்துக் கட்டும்போது கடைக்காரர் உதவ வந்தார். நான் அவரைத் தவிர்த்துவிட்டு அந்தக் கூடையை வண்டியின் பின்வைத்து என்னிடமிருந்த ஒரு கயிற்றை எடுத்தேன். அவர் நான் இலாவகமாகப் போட்ட முடிச்சினை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

வண்டியில் சென்று கொண்டிருக்கையில் வரிசையாக எண்ணங்கள் எழுந்தன. கனகாம்பரத்தைக் கொண்டு எப்படி இன்றைய தனிமையை அழகூட்டுவது என்று எண்ணினேன். அது தேவையில்லை, வாசனைக்காகத்தானே வாங்கி இருக்கிறேன், அந்த நறுமணத்தை விடவா நாம் அழகாக அடுக்கி வைத்திட முடியும். வங்கிக் கணக்கில் இரண்டு இலட்சம் வரை இருக்கிறது, நாளையே அதை எல்லாம் எடுத்து ரொக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மில் செலவு செய்வது செலவிடுதலின் இன்பத்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது. நறுமணமற்ற காகிதமலர்.

நான் சரியாக நான்கு மாதங்களாக யூ டியூப் அலைவரிசைகளில் முடிச்சுகள் இடுவதைப் பயின்று கொண்டிருக்கிறேன். அதில் தூக்கிடுபவனின் முடிச்சினைப் பயின்று நல்ல இலாவகம் கைக்கொள்வதற்கு எனக்கு இரண்டு நாட்களே ஆயின. நான் எதையும் வேகமாகக் கற்றுக்கொள்பவன் என்று எனது பள்ளிக்கால ஆசிரியர்கள் சொல்வார்கள்.

பின்னர் தொடர்ந்து வேறு வேறு முடிச்சுகள் இடக் கற்றேன். கடந்த மாதங்களில் இதுதான் எனது பொழுதுபோக்கு, கல்வி எல்லாம். கயிறு என்பது ஒரு அற்புதமான கருவி. நூறடி கயிற்றினை நூறடிக்கும் நீண்டிருக்கும் பல நார்களைக் கொண்டு நாம் உருவாக்குவதில்லை. மாறாகச் சின்னச் சின்ன நீளம் கொண்ட நார்களைத் திரித்துத் திரித்து அடுத்த நார்களுடன் இணைத்துக்கொண்டே இருக்கும்போது அது ஒரு நீண்ட பிணைப்பினை ஏற்படுத்திவிடுகிறது.

வரலாறும் அப்படித்தான். கிடைத்த துண்டுத் தகவல்களையும் தொல்லியல் ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் குறித்த ஒரு தொடர்ச்சியான பிம்பத்தை ஏற்படுத்தித் தந்துவிடுகிறது. வரலாறும் காலமும் உளமயக்கு மட்டும்தானா? ஆடிப் பெருக்கு அன்று நான் தற்கொலை செய்துகொள்ளத் தேதி குறித்தேன். அப்படித்தான் என் உள்குரல் என்னிடம் குறிப்பு சொன்னது.

நெடுங்காலமாக உள்ளேயே அமைதியாக இருந்த அந்தச் செய்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதுவாகவே சர்ப்பத்தின் நாநுனியின் ஈரத்தைப் போல என்னுள்ளத்தைத் தீண்டியது. அப்போதே முடிவு செய்துவிட்டேன். இரண்டாண்டுகள் கடுமையாகப் பணி செய்தேன். அதை இந்த அரையாண்டில் செலவு செய்கிறேன். இன்னும் ஒரே வாரம். அதுவரை சேமிக்கவும் செலவிடவும் முடியாத இந்தக் காலத்தை விரயம் செய்வது பல தற்கொலைகளுக்குச் சமம் என்பதால் இந்த முடிச்சு போடும் விளையாட்டினைத் தேர்ந்தெடுத்து இறங்கியிருக்கிறேன். நானாகவே நான்கு புதிய முடிச்சுகளைக் கண்டு பிடித்திருக்கிறேன்.

படுக்கையின் அருகே எனது கணினி மேசை மீது தேவையின்றிக் கலைந்து கிடந்த அத்தனை பொருட்களையும் ஒருக்கினேன். என் பொருட்கள் இறைந்து கிடப்பதில்லை, அப்படி இருக்குமேயாயின் உடனடியாக அறைச்சுவர்களை ஒரு குறிப்புதவிக் கோடாக வைத்துக்கொண்டு அதற்கு இணையான தளத்தில் இருக்கும்படி வைத்துவிடுவேன். ஒரு பேனாவிற்கு அருகில் இருக்கும் புத்தகம் குறிப்புதவி. இணைக்கோட்டில் அன்றி சாய்ந்தும் வளைந்தும் கலைந்தும் கிடக்கும் எதுவும் எனக்குள் துன்பத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சிறிய தட்டில் கூடையில் இருந்த மலரின் கால்பங்கினை எடுத்துப் பரப்பினேன். அது ஒரு துணை. வாசனையைப் போல இனிய துணை யாரும் இருந்துவிட முடியாது. படிமங்களாகவும் சொற்களாகவும் எழும் நினைவுகள் துரதிருஷ்டமானவை. அவை உருவாக்கும் எண்ணக் கொந்தளிப்புகளும் போதாமையும் பதற்றத்தைக் கிளர்த்துவன. வாசனைகளின் வழியே எழும் நினைவுகள் பேரின்பம். அது ஒரு மென்வருடல். தாலாட்டு.

அறையின் சாளரத்தைத் திறந்துவிட்டுக் கதவுகளை உட்தாளிட்டுக்கொண்டேன். கழுத்தில் கத்தியின் கூர்முனை பட்டதும் விரைந்து வெளிவரும் குருதியென அறைக்குள் காற்று நிரப்பிக்கொண்டது. இன்று ஒத்திகை பார்க்கும் பொருட்டு எனது படுக்கை என் கால் நீளும்வரை எட்டிவிடாத தொலைவில் உத்தரத்தில் இருந்த இரும்பு வளையத்தில் கயிற்றினை நுழைத்து முடிச்சிட்டேன். அது வட்டமாக இருந்தது.

வட்டம்தான் பதறுபவர்களுக்கு ஆறுதல். அதன் செங்கோணங்கள் அற்ற தன்மை முக்கியம். எந்தப் புள்ளியிலும் விரைத்து நிற்காமல் வளைந்து கொண்டிருக்கும் அதன் காருண்யம் ஒரு புன்னகை. கைவளையத்தைக்கூடக் காப்பு என்கிறார்களே. தற்கொலைக்குத் தூக்கிடுதல் போன்று ஒரு அழைப்பு, ஒரு அணைப்பு வேறெதிலும் கிட்டாது. தொங்கியபடி காலத்தின் துளிகளைச் சுட்டுவது போன்ற இலயத்தில் ஆடிக் கொண்டிருந்தது. படுக்கையில் அமர்ந்து இரசித்துக் கொண்டிருந்தேன்.

‘தூக்கிடுபவனின் குறிப்புகள்’ என்ற எனது டயரிக்குறிப்புகளை விழிகளால் தொட்டுவிட்டுத் தட்டானைப் போல் அங்கிருந்து விருட்டென எழும்பி மீண்டும் அந்தத் தூக்கின் வட்டத்திற்குப் போய் என் கழுத்தினைப் பொருத்திப் பார்த்தேன். மலர்ச்சூழலில் எப்படியோ தொடர்ந்து உறங்கிப் போனேன். சாளரத்தின் வெளியிலிருந்து வானம் மட்டும் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது.

கனவுகள் வேற்றுலகவாசியின் மந்திரத் தொடர்புகள். எங்கிருந்தோ யாரோ செய்யும் சமையற்கலை. அதன் சுவை மனதைத் தன் அடிமையாக்கிக்கொள்ளக் கூடியது. ஒரு நெடுங்கிரியின் அடிவாரத்தில் அமர்ந்திருந்தேன். என் மீது குகையின் கனல் ஏற்படுத்தியிருந்த வியர்வைப் பிசுபிசுப்பு. கொஞ்ச நேரத்தில், அமர்ந்திருந்த பசுநிலமே யாரோ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைப்பது போல மேலெழும்பி முன்னிருக்கும் நிலத்துடன் ஒட்டிக்கொள்வது போல நகர்ந்தது. என்னைச் சமநிலையில் வைத்திருக்கும் பெளதீகப் பண்புகள் எல்லாம் அந்த நிகழ்விற்கு ஒத்துப் போயின, நான் மலையின் மீது முட்டிச் சப்பையாகப் போகிறேன் என்று நினைத்தேன். திடமலையில் ஒரு பகுதியில் என் உயரத்திற்கு மட்டும் ஒரு பிளவு உண்டாகி வாசல் போல உள்ளிழுத்துக் கொண்டது. புத்தகம் மூடப்பட்டிருந்தது. மேலெழும்பி வந்த பின், நான் ஒரு புற்தரையில் கிடந்தேன். அது புவித்தாயின் யோனி மயிர் என்று தோன்றியது. என் உடலையே ஒரு விரலாக எண்ணிக்கொண்டு மேலும் கீழும் தேய்த்தேன். அகழ்பவனைத் தாங்கியபடியே நிலம் மெளனித்திருந்தது. அதைச் சீண்டுவதாய் மேலும் புரண்டேன்; இடவலமாய், மேல் கீழாய், குப்புற, பின் மல்லாந்து என. புற்கள் என்னைச் சுற்றிக்கொண்டு என் இயக்கத்தைத் தடை செய்யப் பார்த்தன. அந்த எதிர்ப்பு என்னைச் சீண்டவே, திறமையாக முடிச்சுகளை அவிழ்த்தபடி வெளியேறிக்கொண்டே இருந்தேன். இன்னும் பற்றியது. இன்னும் மூர்க்கத்துடன் அசைந்து புற்தளைகளைப் பிய்த்தெறிந்தேன். மெல்ல நிலம் முனகியது. இதுவரை நானே கண்டிராத என் வேகத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தேன். ஆழம் வெடித்தது. மண் பீய்ச்சி அலைபோல் எழுந்து என்னை மூடியது. நிறையிருள் சூழ்ந்து கிடந்தது. அங்கு நீண்ட காலம் சிறையிருந்தேன். ஒவ்வொரு நீட்சியையும் அன்னையின் கனகாம்பர மலர் வாசம் குறுக்கித் தந்தது. அங்கிருந்து செங்குத்தாகப் பல அடி உயரத்தைக் கடந்து நான் எழுந்தாக வேண்டும் என்று நினைத்ததும் நிலமுருகி நீராக மாறிக் கொண்டது. நீர் என்னை உந்தி மேற்தள்ளியது. யாரோ அழைக்கும் தன்னுணர்வு வந்ததும் அனல்விரல் போலச் சடுதியில் விழித்தெழுந்தேன். நான் வியர்வையால் நனைந்திருந்தேன். இரவில் மரண ஒத்திகை பார்க்காமலேயே உறங்கி இருக்கிறேன். எப்படி என்னை இத்தனைத் துயில் சூழ்ந்து கொண்டது என்பதன் ஆச்சரியம் விரிந்தது.

காலையில் ஒத்திகை பார்ப்பது அத்தனை சரியானதாகத் தோன்றவில்லை. மாட்டியிருந்த சுருக்கினைப் பிரித்துப் பார்த்தேன். என்னால் சுருக்கைக் கழற்ற முடியவில்லை. அத்தனையும் மறந்துவிட்டேனா! எப்படி இத்தனை மாதங்கள் கற்றுக்கொண்ட ஒரு செயல் ஒரு துயிலில் சில கனவுகளில் முற்றிலும் மறந்து போய்விடுகிறது. ஆயிரம் முறை எண்ணாமல் வாள் பிடித்த மாவீரனுக்கும் எண்ணத் தடங்கல் ஏற்பட்டுவிட்டால் வாள் நழுவும். வாளுக்கு மனதில் இருந்து விழிப்புணர்வுடன் அறிவிப்புகள் செல்லக்கூடாது, வாள் மனதின் பகுதியாக இருக்கும் வரை மட்டுமே ஒருவன் வாள்வீரன். எனக்கும் அப்படியே ஒரு தடை உள்ளிருந்து எழுந்தது. யாரோ கதவைத் தட்டுகிறார்கள், கனவில் என்னை அழைத்தவர்தான் இவர் என்று அத்தனை உறுதியான எண்ணமெழுந்தது.

அழைப்பு மணியும் கதவுத் தட்டல்களும் சீரான இடைவெளியுடன் ஒலித்தது. நான் வருவதாகச் சொல்லிவிட்டு, ஓடிச் சென்று கத்தியுடன் வந்தேன். என்னால் தீர்க்க முடியாத முடிச்சினைக் கத்திவைத்து அறுத்துத் தூக்குக் கயிற்றினைக் கட்டிலுக்கு அடியில் ஒளித்து வைத்தேன். தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட நாகம் போலக் கிடந்தது. கதவினைத் திறந்தேன். அங்கு ஏற்கனவே பழகிய முகம் கொண்ட ஒரு இளைஞன் நின்றிருந்தான். சிறுவனிலிருந்து இளைஞனாகப் போகிறேன் என்பதன் தாவலைக் குறிக்கும் கோட்டு மீசை. அவன் புன்னகை என் சட்டைக்குள் கைவிட்டு வருடியதைப் போல இருந்தது. தேடிவந்த என்னைக் கண்டு கொண்டதாலா இல்லை தன்னைப் புரிந்துகொண்ட ஞானிக்கு வருமே அது போன்றதா என்று என்னைக் குழப்பியது அப்புன்னகை.

அவன் விழிகளில் அன்றீந்த தாயின் கனிவும் தன் மகவைப் பிரிந்த தாயின் துயரமும் ஒருங்கே இருந்தன. அவனைப் பற்றிய விபரங்களை விசாரித்தபோது அவன் எதையுமே என்னிடம் தெளிவாகச் சொல்லி இருக்கவில்லை என்பது உரையாடலின் பிற்பகுதியில்தான் புரிந்தது. அவன் என்னிடம் இப்படிச் சொல்லியதாக எனக்குப் புரிந்தது : ‘உங்களால் ஒன்று ஆக வேண்டி இருக்கிறது. உங்களது தற்கொலை எண்ணம் பற்றிய விபரத்தை நான் அறிவேன், உங்களை அதிலிருந்து தடுக்க மாட்டேன். ஆனால், இறக்கப் போகும் நீங்கள் இந்தப் பரீட்சையில் கலந்துகொள்வதன் மூலம் சில உயிர்களைக் காக்கப் பயன்படலாம். என்னுடன் ஒரு இடத்திற்கு வந்து அமர வேண்டும் அவ்வளவுதான்.’

நான் உடனடியாக ஏற்றுக்கொண்டேன். என்னால் மறுப்பு எதுவுமே சொல்ல முடியவில்லை. முடிச்சுகளை நான் மறந்ததற்கும் இவனது அழைப்பிற்கும் ஏதோ ஒரு தளை இருக்கிறது.

‘போய் வருகிறேன்’ என்று சொல்லிவிட்டுத் தன் மனதின் நுரையீரல் எங்கும் அவ்வறையின் காற்றினை அள்ளி உள்ளே எடுத்துக்கொண்டான். அவனுக்கும் கனகாம்பர நறுமணம் பிடித்திருந்ததை நான் நட்புணர்வுடன் ஏற்றுக்கொண்டேன்.

அவன் சென்ற பிறகு நான் ஏன் அவனை எதிர்க்கவில்லை, குறைந்தபட்சம் கோபம்கூடக் கொள்ளவில்லை என்று யோசித்தேன். சிறுவன் என்பதால் காருண்யம் காட்டிவிட்டேனா? இல்லையே, அவன் தன்னை ஒரு சிறுவனாக முன்வைக்கவே இல்லையே, அப்படியெனில் பயந்துவிட்டேனா? சடுதியில் நாளங்களில் கொதிப்பேறியது. வேகமாக எழுந்து கண்ணாடியைக் குத்தினேன். அது என் பிம்பத்தைக் காட்டுவது போலவே எனது கோபத்திற்கும் என் மீது எதிர்வினையாற்றி என் விரல்களில் இருந்து குருதி கசிய வைத்தது. மீண்டும் நாற்காலியில் அமர்ந்துகொண்டு என்னைத் தொகுத்துக்கொள்ள முயற்சித்தேன். மெல்ல உள்நதி அமைதி கொண்டது.

அவனை எங்கு பார்த்திருக்கிறேன் என்று சலனமேயின்றித் தேடத் தொடங்கியது மனம். பல நிமிடங்கள் சலித்தெடுத்த பிறகும் தெரியவில்லை. மூக்கிற்குக் கீழிருக்கும் உதடு பார்வையில் இருந்து தப்பிக்கொள்வதைப் போல. திடீரென நினைவில் மேலெழுந்து வந்தது அந்தக் கணம். ஆம், புரிகிறது. இவனை நான் உணவகத்தில் பார்த்தேன். எங்களுக்கு உணவு பரிமாற வந்த இளைஞனேதான் இவன். அவனை ஒரு கணம் மட்டுமே விழியோடு விழிதொட்டுப் பார்த்திருந்தேன். இருந்தாலும் அது அப்படியே நிலைத்துக் கிடக்கிறது. நான் பார்ப்பேன் என்பதை அறிந்தே அவனும் என் விழியைத் தொட்டு மீண்டது போலிருக்கிறது. அப்படியெனில், அவன் எனது உணவில் ஏதோ துயில் வேதிப்பொருளைக் கலந்திருக்கக்கூடும். இருக்காது, என்னிடம் பறிப்பதற்கென்று எதுவுமே இல்லை என்பதும் தெரிந்தவன் போலத்தானே அவன் பேச்சு இருந்தது. புலனறியா தந்திகளை மீட்டுகிறான். அல்லது அவனே காலத்தின் மீட்டலுக்கு இசையும் தந்திகளுள் ஒன்றாக இருக்கிறான்.

*

என்னை மட்டும் அந்த ஓடத்தில் அமர வைத்து அனுப்பினான். நான் அச்சம் கொண்டுவிடப் போகிறேன் என்பதற்காக அவன் சொன்ன ஆறுதல் மொழிகளை நான் பொருட்படுத்தாமல் அவன் சொன்ன விதிமுறைகளை மட்டுமே கவனத்தில் கொண்டேன். நான் மறுகரையில் இறங்கியதும் அவன் சொன்ன பெட்டி இருந்தது. அதில் சென்று உட்புறமாய்த் தாளிட்டுக் கொண்டேன். அது ஒரு மேஜிக் செய்பவனது கட்டமைப்பைப் போல் இருந்ததாகக் கற்பனை செய்துகொண்டேன். அதில் என் உடலுக்குத் தேவையான இடம் இருந்த போதும் கருவறைச் சிசுவின் தோரணையிலேயே கால்களையும் கைகளையும் சுருக்கிக்கொண்டு படுத்திருந்தேன்.

அவன் சொன்னபடி மெல்ல அந்தப் பெட்டி சுழலத் தொடங்கியதும் கண்களை இறுக்கிக் கொண்டேன். இராட்டினம் ஒன்றில் இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டேன். குமட்டி வந்தது. நான் இருக்கிறேனா? ஆம் என்னால் சிந்திக்க முடிகிறது, அதனால் நான் இருக்கிறேன். இல்லை கனவில் சிந்தித்துக் கொண்டிருக்கிறேனா? அய்யோ இந்தக் கேள்விகள்? சொற்களை உருவாக்கியதும் முளைத்துக்கொண்ட கேள்விகள் தொடர்ந்து மானுடனின் அமைதியின்மைக்கான வேள்வியை வளர்த்தபடி இருக்கின்றன. அன்பை உணர்ந்ததும் அதன் பக்க விளைவாக உரிமை எழுந்துகொள்வதைப் போலத்தான் சொற்களில் இருந்து முளைத்த இந்தக் கேள்விகளும்.

சொற்கள் ஆடைகளைப் போல. எத்தனை சிறப்பாக முன்வைத்தாலும் அது ஒருவனது தோல் என்றாகி விடப்போவதில்லை. ஆனால் அதில் ஆகுபெயர்கள், அளபெடைகள் என எத்தனை வேலைப்பாடுகளை நுண்மனம் கண்டறிந்திருக்கிறது. தூளியில் ஆடியபடி மெல்லப் பேசி ஓய்ந்து உறங்கச் செல்லும் மழலையைப் போலச் சுழன்று நின்றது. நான் தொடக்கத்தில் இருந்ததை விடவும் இன்னும் உடல் சுருங்கிவிட்டிருந்தேன். தன்னைத் தானே அணைத்துக்கொள்வதில் வரும் பாதுகாப்புணர்வு தேவையானது. மெல்ல நிமிர்வு கொண்டேன்.

என்னுடைய வாழ்வின் பல பகுதிகள் மறந்து போனதைப் போல உணர்ந்தேன். என்னை இங்கு அனுப்பிய யாரோ ஒருவரது முகத்தையும் மறந்திருக்கிறேன். ஆனால், யாரோ அனுப்பியதும் அவர் வரைபடம் போலத் தெளிவாகச் சொல்லி இருந்த பாதைகள் அப்படியே நினைவில் இருந்தது. தொடர்ந்து நடந்து அவன் சொன்ன வீட்டிற்கு முன்பு வந்து நின்றேன். என் சட்டைப் பையில் இருந்த ஒரு புகைப்படத்தை எடுத்துப் பார்த்தேன். அதில் இதே வீட்டின் முகப்பு ஒரு திருமணவீடு போல அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அதில் மணமகனாக நானிருந்தேன். என் மனைவியாக தேவி இருந்தாள்.

*

அவளுக்கு முன்பு எனது துயரம் கூடுதல் கணம் கொண்டுவிடுகிறது. காரணமற்ற ஏதோ ஒரு நிழல் படிந்து என்னை அழுத்துகிறது. பல செய்திகளை நான் மறந்தபடியே இருக்கிறேன். இருந்த போதும் இளமையில் நான் கேட்ட பார்த்த சில விசயங்கள் துல்லியமாக இன்றும் நினைவில் மீள்கின்றன. நான் துயரம் கொள்வது நினைவில் இருப்பவற்றிற்காகவா அல்லது மறதியில் அழிந்தவைக்காகவா.

‘ஏங்க, ஏதோ பித்து பிடிச்சதைப் போலவே இருக்கீங்க?’

‘…..’

‘நம்ம முதல் பிள்ளையை நெனச்சிட்டே இருக்கீங்களா?’

‘இருக்கலாம்,’ என்றேன்.

எங்கள் முதல் குழந்தை பிறந்து இறந்து போயிருந்தது. அந்தக் கவலையில் மூழ்கிவிடக்கூடாது, அந்த மனநிலை தற்போது பிறக்க இருக்கும் இரண்டாவது பிள்ளையைத் தாக்கும் என்பதை அவள் அறிந்திருந்தாள். தன்னால் எத்தனை இயல்பாக இருக்க முடியுமோ அப்படி இருந்தாள்.

அந்த நிகழ்விற்குப் பிறகு இரண்டாண்டுகள் நான் கடுமையான மனப்பிறழ்வில் இருந்தேன். குற்ற உணர்வின் ஆழத்தில் வீழ்ந்திருந்தேன். ஓரிரு முறை தற்கொலைக்குக்கூட முயன்றிருந்தேன். அன்னையின் வலியைவிட எனது வலி அதிகம் என்பதைப் போல இரக்கமின்றி நடந்து கொண்டிருந்திருக்கிறேன். ஒரு முறை ரம்பத்தினை எடுத்து என் முகத்தின் நடுவே ஒரு வெட்டு போட்டுக்கொண்டேன். அவள் பதறிப் போய் என்னை இறுக்கிக்கொண்டாள். இன்று வரை அவள் என்னை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. தன்னைவிட எந்த வகையில் நான் அதிகம் வலி கொண்டிருக்கிறேன் என்றுகூடக் கேட்டதில்லை. இப்படி இருப்பதன் பிழையை நான் ஒவ்வொரு கணமும் உணர்ந்திருக்கின்ற போதும் அதிலிருந்து நான் மீள்வதை இயலாததாகக் கருதுகிறேன். அல்லது அவ்வதைக்குள்ளேயே இருந்து கொண்டிருப்பதையே நான் விரும்புகிறேன்.

இப்போது ஏழாண்டுகளுக்குப் பிறகு இந்த இரண்டாவது கரு தங்கி இருக்கிறது.

‘க்ளீனிக் போய் எல்லா டெஸ்டும் எடுத்தாச்சி. குழந்தை மிகவும் ஆரோக்கியமா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. எந்த பயமும் இல்லை. மெல்ல நான்காவது மாதத்திற்குள் வந்திட்டோம். இன்னும் ஆறு மாதம் ஓடியே போயிடும். அப்பறம் நம் வாழ்க்கையில் இன்னொரு ஜீவன் வந்திடும். சந்தோஷம்தான்’ என்றாள்.

‘ஆமாம்,’ என்று புன்னகையுடன் சொன்னேன்.

‘என் செல்லக் குட்டி ராஜா’ என்று சொல்லி என்னை அணைத்து தன் மார்புக்குள் என் முகத்தைப் புதைத்துக்கொண்டாள். எனக்கு மூச்சு முட்டியது, அவள் இறுக்கியதால் அல்ல, மாறாக அவள் எனக்குத் தந்த கனலின் உருக்கத்தினால்.’

‘நான் யார், என்னை ஏன் இப்படி ஒருத்தி நேசிக்க வேண்டும். நான் கிழம். இவளுடன் புணரும் நான் ஒரு விலங்கு மட்டுமே. என்னை ஏன் இப்படி நேசிக்கிறாள் இவள்’ என்ற எண்ணம் ஒரு கழிவிரக்கத்தை ஏற்படுத்தியது. வீழ்ந்த அலை உச்சத்தை நோக்கி எழும்புவதைப் போல எரிச்சல் வந்தது. அவளை உதறினேன்.

மீண்டும் மீண்டும் நெருங்கி வந்தாள். ‘என்னாச்சு என் கண்ணனுக்கு.’ கொஞ்சினாள்.

அவள் அன்று அணிந்திருந்த கனகாம்பரம் என்னைக் கிளர்த்தியது.

எனக்கு அவளது கொஞ்சல் எப்போதும் போலவே தேவையும் பட்டது. மெல்ல இரவின் பின்னணியை அவள் சேமித்துக்கொண்டு தன் ஆடைகளைக் களைந்து தன்னை என் முன் வைத்தாள். அவள் உடல் அமிர்தம். என்னை அவள் மீது இட்டுக்கொள்வது பாவம். ஆனால் அதைத்தான் மீண்டும் மீண்டும் செய்துகொள்கிறேன்.

எனக்குள் ஏற்பட்ட விரைப்பு என்னை, ‘இழிந்தவனே’ என்றது. அவள் விழி, ‘வாடா குரங்கே’ என்பது போலிருந்தது. என்னை ஆற்றுப்படுத்தத்தான் அவள் இப்படிக் காமம் கொள்கிறாள் என்று நான் சமநிலையின்போது யோசித்தாலும் இந்தக் கிளர்வில் அப்படி ஒரு அறிகுறியையும் அவள் முகத்தில் கண்டறிந்துவிட முடியவில்லை. அவள் முற்றாகவே என் முன் தன்னைப் படைக்கிறாள். அவள் மீது பாய்ந்தேன். எனது முகத்தழும்பின் மீது நாநுனியால் வருடினாள். வெறித்தனமாகப் புணர்ந்தேன். நானே அவளது முதல்பிள்ளை என்று முனகினாள். தீச்சுட்ட பாவத்தைத் தீயில் இறங்கியா கழிப்பது? கழிக்க முனைந்தேன். அவள் மீதே உறங்கிப் போனேன்.

*

பிரசவ தினத்தின் இரவில் மழை பெய்து கொண்டிருக்க, துணைக்கு யாருமே இல்லை. நான்தான் துர்நிகழ்வு ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதால் யாருக்கும் தெரிவிக்காமலேயே தேவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். சிகிழ்ச்சைக்குப் பின்னர், தேவி மயங்கிவிட்டிருக்க நான் சிசுவின் அருகில் இருந்தேன். செய்தியைக் கேள்விப்பட்டதும் நூற்றுக்கணக்கில் சொந்தமும் சுற்றமும் வந்து சேர்ந்தனர். மெல்ல என் மனமும் திருவிழா கூட்டத்தில் நடக்காவிடிலும் முன்னகர்வதைப் போல அந்த மகிழ்வில் இணைந்து கொண்டது. இது போலத்தான் தூய இன்பம் என்பது இருக்கும் என்பதை நீண்ட நாட்களுக்குப் பிறகு உணர்ந்தேன். நானே தாயின் கருவிலிருந்து புத்துயிர் பெற்றது போல் இருந்தது.

‘மாப்பிள்ளை, மிகவும் சந்தோஷம்’ என்று சொல்லியபடியே என் கைகளுக்குள் தன் கைகளை வைத்து மகிழ்க்கண்ணீர் சிந்தினார்.

அருகில் இருந்த நண்பன், ‘இனிமே மச்சானுக்கு கெடச்ச கவனிப்பில் பாதிதான் மிஞ்சும். மீதிய வாங்கிக்க வந்திட்டான் ஜுனியர்’ என்றான்.

திரும்பி சிசுவின் முகத்தைப் பார்த்தேன். என்னைக் காண்பது போல் இருந்தது. விழி கூசுதல், ஆண்குறி, அழுகை அனைத்திலும் என்னையே கண்டேன்.

தேவியின் உடல் தேறவில்லை. அவள் ஒரு வாரம் மருத்துவமனையிலேயே இருக்கட்டும், பலஹீனம் குறைந்ததும் கிளம்பலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார். தேவியைத் தனியறைக்கு மாற்றித் தந்தார். நான் துணை இருந்தேன். அங்குதான் முதன் முதலில் பழச்சாறு பிழிவதிலிருந்து துணியைத் தூய்மையாக்குவது வரை தெரிந்துகொண்டேன். அத்தனை செயல்களையும் நானே செய்தேன். யாரையும் இருக்க விடவில்லை. எல்லோருக்கும் இது இரட்டிப்பு மகிழ்ச்சி. வருகை செய்த நண்பர்கள் மற்றும் சொந்தங்களின் எண்ணிக்கை குறைந்து இல்லாமல் போனது.

நள்ளிரவில் தேவியின் உடல் படுக்கைமேல் எழுந்து எழுந்து வீழ்ந்தது. உறக்கம் கலைந்து எழுந்து பீதியடைந்தேன். வலிப்பு. உடனே செவிலியை அழைத்தேன். தொலைபேசி அழைப்புகள் பறந்தன. தள்ளுவண்டியில் அவளை ஏற்றி அவசர சிகிழ்ச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்றனர். பின்தொடர்ந்து வந்த என்னை உள்ளே வர அனுமதிக்கவில்லை. எனக்கு வரவிருந்த அழுகையை ஏதோவொன்று தடுத்தது. ஆம், பிள்ளையைத் தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஓடினேன். ஓடுகையிலேயே என் மீது மீண்டும் கீழ்மையுணர்வு பெருக்கெடுத்தது.

அந்தச் சிறு தொட்டிலில் அது கிடந்தது. இது இங்கிருக்கக் கூடாது. இந்த சிசு என்னை அவமானப்படுத்தும் அடையாளம். என்னைக் கூனிக் குறுக வைக்கும் சின்னஞ்சிறிய சிறுமை. இதனால்தான் இத்தனை பிரச்சனையும். இதைக் கொன்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். சில முறை தற்கொலைக்கு முயன்று தோற்றது நினைவிற்கு வந்தது. சிசுக்கொலை அதிபாதகமல்லவா. ஆனால், இது நான்தான், இதைக் கொல்வதும் ஒருவகையில் தற்கொலைதான். அதற்கு யாரும் அருள் தர வேண்டியதில்லை. எடுத்தேன். அதன் மெல்லசைவுகள் புழுவை நினைவூட்டின. அதன் மென்மயிர்கள் கொம்புகள் போல எரிச்சலூட்டின.

படாரென்று கதவு திறக்கப்பட்டது. தன் முகத்தை மூடியிருந்த ஒரு ஆள் தன் கையில் ஒரு பிள்ளையுடன் நின்றான். அவன் அந்த சிசுவை நன்கு மூடி வைத்திருந்தான். அது உறங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். என் கையில் இருந்த எனது பிள்ளை கத்தத் தொடங்கி இருந்தது.

அவன் என்னிடம் ஒரு உதவி கோரினான். ‘நீ இப்போது என்ன செய்யப் போகிறாய் என்பது எனக்குத் தெரியும். தயவு செய்து உன் பிள்ளையை என்னிடம் தந்துவிட்டு இந்த குழந்தையை வைத்துக்கொள். அது இங்கிருக்கக் கூடாது அவ்வளவுதானே’ என்றான்.

என் கைகள் தடுமாறிப் பிள்ளையை விட்டுவிடுவேன் என்று தோன்றியது. என்னால் அவன் வேண்டுதலை மறுக்க முடியவில்லை.

‘நீ நினைத்தது உண்மைதான், இது இங்கிருந்து அகன்ற உடனேயே தேவி நலமாகிவிடுவாள்’ என்றான். அதற்கு உதவத்தான் தான் இங்கு வந்திருப்பதாகவும் சொன்னான்.

அவன் தன் கையில் இருந்த பிள்ளையை முன் நீட்டினான். அது அச்சு அசலாய் என் பிள்ளையைப் போலவே இருந்தது. அல்லது இறந்து போன அதன் அண்ணனைப் போல. அவன் அதைத் தொட்டிலில் வைத்துவிட்டுத் தானாக முன்வந்து என் கையில் இருந்த பிள்ளையை வாங்கிச் சென்றான். யாரோ நெஞ்சிலிருந்தும் கொஞ்சம் எடையைத் தற்காலிகமாக எடுத்துக் கொண்டது போலிருந்தது.

அவள் மயக்கத்தில் இருந்தபோதே எல்லாம் முடிந்துவிட்டது. இது அந்த மகப்பேறு க்ளீனிக்கில் இருந்த யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டேன். விழித்தெழுந்து அவள் இடப்போகும் ஓலத்தை ஏற்கனவே என் மனவிழிகளில் எழுப்பி அதைக் கடப்பதற்கான ஒத்திகைகளைச் செய்துகொண்டேன். என் கீழ்மைகள் ஒன்று கூடின.

*

அவனை ஓடத்தில் ஏற்றிவிட்டுப் புகைப்படம் ஒன்றை அவன் சட்டைப்பையில் வைத்துவிட்டு, உரிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் சொல்லிய பின்னர் பின்னோக்கித் திரும்பிப் பார்க்காமல் ஓடினேன். மலை நிலத்தின் அருகே இருந்த மரநிழல்களில் சென்று நின்றேன். குளம் கொஞ்சம் அப்பால் இருந்தாலும் என் பார்வைக்குத் தெளிவாகத் தெரிந்தது. இடையில் கைவைத்துக் கொண்டு மூச்சினை சமநிலைக்கு கொண்டு வந்தேன். குளத்தில் நாரை நீந்துவதைப் போலத் தெரிந்ததும், வானைப் பார்த்தேன், அது தன் இறக்கைகளால் காற்றைக் கிழித்துக்கொண்டு பறந்து கொண்டிருந்தது. வானும் நீரும் ஒன்றே என்று உள்ளம் மயங்கியது.

*

உணவானை எடுத்துக் கொண்டிருந்தபோது அவர் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நானும் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். சாப்பிட்டு முடித்ததும் என்னிடம், ‘தம்பி, இதை வைத்துக்கொள்’ என்று நூறு ரூபாய்த் தாளை ஊக்கத்தொகையாகத் தந்தார்.

அவரிடம் பணம் வாங்கக் கூடாது என்று தோன்றியது. அத்தனை அணுக்கமாகத் தோன்றியது அவர் முகம். தந்தையைப் போல. அவரது முகவட்டத்தை இரு அரைவட்டங்களாகப் பிரிப்பது போல ஒரு நீண்ட தழும்பு இருந்தது.

‘தம்பி எனக்கு ஒரு உதவி செய்யணுமே’ என்றார்.

அதை நான் மறுக்கப் போவதில்லை என்று ஏற்கனவே அறிந்திருந்தேன். ‘கண்டிப்பாக’ என்றேன். விடுதி சாத்தப்பட்டதும் வருகிறேன் என்று சொல்லிச் சென்றார்.

‘தம்பி. நான் சொல்வது உங்களுக்குப் புரியாது. ஆனா நீங்க நான் சொன்ன மாதிரி செய்தா ஒரு உயிரைக் காப்பாத்தலாம்’ என்றார்.

அவர் பொய் ஏதும் சொல்லவில்லை என்று தெரிந்தது. ‘ம். சொல்லுங்க.’

‘நாளை நண்பர்களோடு ஒருத்தன் சாப்பிட வருவான். அவன் அடுத்த வாரம் தற்கொலை செய்து கொள்ளப் போகிறான். அவனைச் சந்தித்து நான் சொல்வதை நீங்கள் சொல்லணும்’ என்றார்.

‘….’

‘பதற்றப்படாதீங்க, நீங்க வருவீங்கன்னு அவனுக்குத் தெரியும். அதனால உங்களிடம் கோபப்பட மாட்டான்’ என்றார்.

நான் ‘புரியுது சார்’ என்றேன். என் அகத்தின் ஆழத்திலிருந்து முதன் முறையாகக் கனகாம்பரத்தின் நறுமணம் எழுந்தது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்