அரூ 6 இதழ்கள்: ஒரு வாசிப்பனுபவம்

9 நிமிட வாசிப்பு

மேற்குலகப் படைப்பில், மிகுபுனைவையும் (fantasy fiction), அறிவியல் புனைவையும் (SF என்ற science fiction) சேர்த்து ஊகப்புனைவு (speculative fiction) என்று பெயரிடுகிறார்கள்.

கற்பனாவாதப் புனைவுகள் அனைத்துமே (அவை நனவிலிப் பிரக்ஞையிலும் படைக்கப்படுவதால்) கனவுநிலைப்புனைவு அல்லது கனவுருப்புனைவு என்ற பிரத்தியேகப் பிரிவிலும் இடம்பிடிக்கின்றன.

நம்முடைய அரூப மனம் வெளியற்ற நீள்பரப்பில், முடிவிலா காலத்தில் திரிந்துகொண்டே இருக்கின்றது. இந்த அரூபத் தரிசனத்தைத் தேடும் ஒரு முயற்சி அண்மையில் இணையத்தில் உதித்துள்ளது. இத்தேடல் நனவுலகின் விளிம்பில் நின்றவண்ணம் கனவுலகிற்குள் துழாவும் ஒரு யத்தனமாகும்.

சிங்கைத் தீவில் அடித்தளமிட்டு, 2018ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் ‘அரூ’ காலாண்டு மின்னிதழ் பிறந்துள்ளது. திருவாளர்கள் ராம்சந்தர், சுஜா செல்லப்பன், நா.பாலா முதலியோர் அடங்கிய ஆசிரியர் குழுவும் இவ்வகை இலக்கியத்தில் துடிப்புள்ள தோழர்கொத்தும் கைபின்னி இதழ்ப் பணியில் ஒருமித்துள்ளன. ஓவியங்கள், நிழற்படங்கள், தொடர்காட்சிச் சித்திரங்கள் (comics), நடனம், இசை, முதலிய கலை வடிவங்களுக்கும் கனவுருப்புனைவுப் படைப்புகளுக்கும் அரூ மின்னிதழ் ஒரு வெளியீட்டுக்களமாக அமைந்திருக்கிறது. சிங்கை உள்ளிட்ட பிற தேசங்கள் சார்ந்தோரும் இதழுக்குப் பங்களிக்கிறார்கள்.

முதல் ஆறு இதழ்களை (2018 அக்டோபர் முதல் 2020 ஜனவரி வரை) உள்ளுறைரீதியாகப் பார்வையிடுவோம். நவீன வாசகர்கள் ‘அரூ’ மின்னிதழ்களை அடைந்து, படைப்புகளை விரிவாகவும் ஆழமாகவும் வாசிக்க வேண்டும் என்பதே கட்டுரையின் நோக்கமாகும்.

நேர்காணல்கள்

ஜேசன் எரிக் லுண்ட்பர்க், ஜெயமோகன், கோணங்கி, டிராட்ஸ்கி மருது, வெய்யில், இசை, சிரில் வாங், ஆனந்தகண்ணன், டாக்டர் க்வீ லீ சுவி ஆகியோரின் நேர்காணல்கள் ‘அரூ’வில் பதிவாகியுள்ளன.

தென்கிழக்காசியக் கனவுருப்புனைவு இலக்கியத்தை வாசகர் கவனத்திற்குக் கொண்டுவர 2012இல் ‘லொந்தார்’ என்ற ஆங்கில மின்னிதழ் தோன்றியது. ஜேசன் எரிக் லுண்ட்பர்க் என்ற அமெரிக்க எழுத்தாளரே அதன் ஆசிரியர். இவர் தற்போது சிங்கப்பூர் ஆங்கில நூல்வெளியீட்டகமான Epigram Booksஇல் புனைவுப்பிரிவுப் பதிப்பாசிரியராகப் பணிபுரிகிறார்.

ஜேசன் பேட்டியில் கூறுகிறார்: “தென்கிழக்காசிய நாடுகளான பிலிபின்சு, இந்தோனீசியா, மியன்மார் முதலிய நாடுகளில் கனவுருப்புனைவு அறிமுகமாகியுள்ளது. அரை நூற்றாண்டுக்கால அமெரிக்க ஆளுகையிலிருந்த பிலிபின்சில் இவ்வெழுத்து வலுவாக உள்ளது. சிங்கப்பூர் ஆங்கிலச் சிறுகதைப் புலத்தில் இவ்வகைப் புனைவு கடந்த பதினைந்து வருடங்களாய் ஏற்றம் பெற்றுவருகிறது.” வாசகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஜேசன், ஒரு விடையில் “மேற்குலகில் கனவுருப்புனைவின் செல்வாக்கு 1930 முதல் 1960 வரை நீடித்தது. தென்கிழக்காசியாவில் இது தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்தே பிரபலமாகி வருகிறது” என்று சொல்கிறார்.

ஜெயமோகன் விஞ்ஞானப் புனைவுகளைக் குறித்துப் பேசுங்கால், “தமிழ் அறி-புனைவின் முன்னோடி சுஜாதா விஞ்ஞானத் தொழில்நுட்பக் கதைகளே அதிகம் எழுதினார்” என்றும், இலக்கியம் பற்றிப் பேசுங்கால், “மானுட வாழ்க்கை பூமியில் நிலைகொள்ள அறங்கள் கண்டடையப்பட்டன. அவையே ஒழுக்க நெறிகள் ஆயின. இலக்கியம் பேசுவது இந்த அறங்களின் மாற்றங்களைத்தான்” என்கிறார்.

கோணங்கி 2013இல் ‘விளக்கு’ விருதைப் பெற்றவர். இவருடைய தாத்தா மதுரகவி பாஸ்கரதாஸ் மதுரையில் மீனலோசனிப் பாலபாஸ்கர சபா என்ற ஒரு பாய்ஸ் கம்பனியை நடத்தியவர். கோணங்கி தம் நேர்காணலில் தாம் எழுதிய கதைகளின் பிண்ணனிச் சூழலையும் தம் எழுத்து முறையையும் மற்ற எழுத்தாளர்கள் எழுதியிருக்கும் கனவுருக் கதைகளையும் குறித்து உரையாடுகிறார். மேலும் அவர் சொல்கிறார்: “நான் நடத்தும் ‘கல்குதிரை’ சிற்றிதழ் 1989 முதல் வெளிவருகிறது. இவ்வேட்டின் ஆர்வலர் பிரமிள் ‘அசரீரி’ என்று ஒரு விஞ்ஞானச் சிறுகதையை மட்டும் எழுதியிருப்பினும், நிறைய அறிவியல் படைப்புகளை வாசிப்பவர். ‘கல்குதுரை’யின் நேயரான தேவதச்சன்,

நெடுஞ்சாலையின் குறுக்கே

பிரவேசிக்கும் கணத்தில்

அது ஓர் உயிரற்ற, உயிருள்ள பூனை

என்ற தம் கவிதையில் நுண்ணுலக (quantum) உண்மையைப் பொதிந்துள்ளார்.”

டிராட்ஸ்கி மருது தம் நேர்ப்பேச்சில், “என் சின்னத்தாத்தா சோலைமலை ‘பாகப்பிரிவினை’, ‘பதிபக்தி’ போன்ற சினிமாப் படங்களுக்குக் கதையும், வசனமும் எழுதியவர். காமிக்ஸ் கலைஞர் Moebius ஓவியத்துறையில் என்னுள் ஆன்ம உந்துதலை விதைத்தவர். புதுமைப்பித்தனின் சில கதைகளைக் காட்சி காட்சியாகப் பிரித்து, தொடர்சித்திரங்களாக வரைந்து கதை ஓட்டத்தை நகர்த்தியிருக்கிறேன். ‘இந்து’ பத்திரிக்கையில் வெளிவந்த ‘கபாடபுரம்’ காமிக்ஸ் சித்திரங்கள் ‘அரூ’ இதழில் மறுபரிசுரமாகியுள்ளது. நான் பத்திரிக்கைக் கதைகளுக்குப் படங்கள் போடும்போது, கதையில் இல்லாததையே காட்சிப்படுத்தி வரைவேன். என் ஓவியங்கள் கோட்பாட்டின்படி சீராகவும், கோட்பாடற்றுச் சிதைந்தும் இருக்கும்” எனப் பகிர்கிறார்.

கவிஞர் வெய்யில் தம் பேட்டியில், “புறமே அகத்தை வடிவமைக்கிறது. பின்னர், அகம் விரிந்து புறத்தையும் பாதிக்கிறது” என்றும், “பிறப்பும் வாழ்வும் சமூகத்தின் அதிகார அலகுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. படைப்புக் கலைஞனோ இந்த நிர்பந்தங்களை மீறுகிறான்” என்றும் உரைக்கிறார்.

கவிஞர் இசை தம் நேர்காணலில், “பாவனை அற்ற எழுத்தே எழுதும் எழுத்துக்கு நேர்மையாக இருத்தலாகும். எழுத்தில் என் சுயபகடியை உண்மையை நெருங்கும் ஒரு உத்தியாகப் பயன்படுத்துகிறேன். இணைய ‘மீம்’கள் நகைச்சுவை உணர்வை அளித்தாலும் பகடிக் கவிதைகள் ஒழுங்கும் ஆழமும் மிக்கவை” என்கிறார்.

ஆங்கிலக் கவிஞர் சிரில் வாங் (Cyril Wong) கனவுருப்புனைவு குறித்துப் பேசுகையில், “அமானுஷ்யத் திகில் கதைகளே எனக்கு அதிகம் பிடிக்கும்,” என்று குறிப்பிடுகிறார்.

குடியரசு ஆனந்தக்கண்ணனின் முகப்பேச்சு: “ஏ.கே. தியேட்டர் என்ற ஒரு நாடகக் குழுவை ஏற்படுத்தி, நாடகக்கலையைச் சிங்கப்பூர் மாணவமாணவிகளிடம் கொண்டுசேர்க்கிறோம். என் நிகழ்கலை நிகழ்ச்சிகளுக்கு, மனைவி நாகராணியும், நண்பர் ராஜேஷ் கண்ணாவும் பக்கபலமாய் இருக்கிறார்கள். இந்தியப் பாரம்பரியக் கதைகளை அறிமுகப்படுத்துதல் ஐம்பெரும் தமிழ்க் காப்பியங்களைப் பரிச்சயப்படுத்துதல் சிங்கை வரலாற்றுக் கதைகளை அறிமுகம் செய்தல் என்ற நோக்கில், எங்கள் நாடகங்களை நவீன உத்திமுறைகளைக் கொண்டு படைத்துவருகிறோம்.”

‘அரூ’ குழுமத்தினர் Dr. Gwee Li Sui உடன் நடத்திய உரையாடல் வருமாறு: “சிங்கைக்கே உரிய பேச்சு ஆங்கிலத்தின் கிளைமொழியான Singlishஐ வைத்து ஒரு நூலும், என் கவிதைகளைத் தொகுத்து ஆறு நூல்களும் வெளியிட்டுள்ளேன். என் ஆனர்ஸ் பட்டத்திற்கு, The Tin Drum என்ற மாயயதார்த்தப் புனைவைப்பற்றி ஆய்வுசெய்திருக்கிறேன். நான் ஒரு காமிக்ஸ் ஓவியனும்கூட. ‘அரூ’ இதழில் ‘அடாசு கவிதை’ என்ற தலைப்பில் சித்திரத் தொடரை வரைகிறேன். எழுத்தும், ஓவியங்களும் இணைந்து, திரைப்படம் போன்று காட்சிகள் மூலம் கதையைச் சொல்லும் கிராஃபிக் நாவல்முறையும் எனக்குப் பிடிக்கும். இத்துறையில், ‘Myth of the Stone’, ‘Old Heroes Solve Mystery’ ஆகிய இரு கிராஃபிக் நாவல்களையும் வெளியிட்டிருக்கிறேன்.”

தொடர்கள்

அறிவிலுமேறி அறிதல்‘ என்ற தொடர்கட்டுரையை வேணு வேட்ராயன் எழுதுகிறார்.

கவிஞர் தேவதேவன் தம் தொடரில், “கவிதை ஓர் ஆன்மிகக் கண்டடைதல். அது நம் உள்ளத்தைத் தீண்டி மேல் நோக்கிப்போகும் ஆற்றலைத் தருகிறது,” என்கிறார்.

நீளும் எல்லைகள்‘ என்ற நீள்கட்டுரையில், சீன அமெரிக்க எழுத்தாளர் Ken Liuவின் கதைகளைச் சுரேஷ் பிரதீப் விளக்குகிறார். நிகழ்கணங்களின் அழுத்தமும் நவீன அறிவியலும் இந்தக் கதைகளில் தென்படுகின்றன.

ஜெர்மனி, இத்தாலி, போலந்து, மெக்சிக்கோ, ஜப்பான் ஆகிய நாடுகளின் திரைப்படங்களைப் பிரதீப் பாலு தம் தொடரில் அலசுகிறார். கனவுருப்புனைவு, மிகைப்புனைவு, மீயதார்த்தம், மாயவித்தை (psychomagic), வெளிப்பாட்டுவாதம் (expressionism) ஆகிய கலைமுறைகளைச் சுமந்து வெள்ளித்திரையில் கதைகள் நகர்கின்றன. உதாரணத்திற்கு 1964இல் வெளியான Kwaiden என்ற ஜப்பானியச் சினிமா, பேய்கள் நடமாடும் நாட்டுப்புறக் கதைகளை மூலப்பொருளாகக் கொண்டது. படத்தின் இயக்குநர், தம் திரைக்காட்சிகளை ஜப்பானிய வரைச்சுருள்களிலிருந்து (scrolls) வடிவமைக்கிறார்.

டாக்டர் க்வீ லீ சுவி, ‘அடாசு‘ என்ற சித்திரக் கவிதைத் தொடரை அளிக்கிறார். ஒவ்வோர் இதழிலும் நான்கே சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவற்றின் முதல் இரண்டு அல்லது மூன்று சித்திரங்களைக் கண்டபின்னர், நம்முடைய அரூப மனக் கற்பனைவழியாக இறுதிச் சித்திரங்களைப் புரிந்துகொள்ளலாம். வினோதமான நான்கு கால் உயிரினம் ஒன்றின் வாயிலிருந்து மலரோ, கத்தரிக்காயோ, கையோ, பானக்குவளையோ, விளக்குக்கம்போ பரிணாமம் அடைந்து வெளியேறுகின்றன.

ஓவியக் கலைஞர்கள் ‘நாளையின் நிழல்கள்‘ என்ற தலைப்பில் தங்கள் மனோ ஓவியங்களை வடிக்கிறார்கள்.

கார்லாவின் கருஞ்சாயப் படைப்பு, எதிர்காலத் தொழிற்சாலைகள் கக்கும் கரியமில வாயுவின் புகைமண்டத்தை அச்சவுணர்வுடன் வெளிப்படுத்துகிறது.

சஞ்சனாவின் ஓவியம், இனியெழும் கட்டிட வெளிச்சுவர்கள் எல்லாம் அறிவியல் கருவிகளின் விளம்பரங்களைத் தாங்கி நிற்கும் எனப் பார்வையிடுகிறது.

இலக்கியா ஸ்ரீனிவாசனின் வரைவு, விஞ்ஞானச் சாதனங்கள் பொருத்தப்பெற்ற ஒரு மனிதத் தலையைக் கனவு காண்கிறது.

இளையபாரத்தின் ஓவியம், செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மானுடனோடு ஒன்றிப்போவதை எதிர்பார்க்கிறது.

சாதனா தம்முடைய நாளைய கனா ஓவியத்தில், ஒரு பெண் கண்ணீர் பெருகப் பூமி நினைவுகளைத் துறந்துவிட்டுச் செவ்வாய்க்குச் செல்வதைப் பதிகிறார்.

சஞ்சனாவின் ‘லிலி‘ என்ற சித்திரக் கதைத்தொடரில், சித்திரங்கள் அண்மைய, தூர, கோண ‘ஷாட்’டில் வரையப்பட்டுள்ளன. லிலி என்பவள் ஒரு கரடியுடன் மனப்பயணம் செய்கிறாள்.

க. கவினெழில் ஒரு மனிதத் தேனீயைச் சூப்பர் நாயகனாகத் தீட்டுகிறார். அது தன் சிறகுகளை வலித்து நீருக்கடியில் நீந்துகிறது; தன் சிறப்பு மோப்பச் சாதனம்வழி காலத்தை உறிஞ்சி இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் உணர்கிறது.

ஜெயந்தி சங்கர் தம்முடைய இரு படைப்புகளில் முகமூடி தரித்த ஒரு ஸ்திரியின் சிதைந்த ஓவியத்தையும் விசையீர்ப்பு அறும்போது வஸ்துகள் நிலைகுலைவதையும் முன்வைக்கிறார்.

அனிமேஷன் திரைப்படங்கள், சித்திரங்கள் வழியாகக் கதைகளைச் சொல்கின்றன. அனிமேஷன் சினிமாப் படங்களைப் பார்க்க விரும்பும் ஒருவரின் கதையை படக்காட்சிகளாக ‘அரூ’ முதல் இதழ் ஏந்தியுள்ளது.

புகைப்படக் கலைஞர்கள் தங்கள் மதிநுட்பத்தால், பூமியின் நிஜக் காட்சிகளைக் கனவுருபுனைவுகளாக உருவாக்கிவிடுகிறார்கள். ஆஷிக்கின் நான்கு நிழற்படங்கள் optically மாயத்தோற்றங்களைப் பிறப்பிக்கின்றன. காக்கா, மக்களோடு தாய் ஆகிய ஒளிப்படங்களைப் பிடித்த விஸ்வநாதன் கற்பனை உலகிற்கு இட்டுச்செல்லும் ஒரு சாத்தியத்தைப் பார்வையாளர்களிடம் உண்டாக்குகிறார்.

கருத்துரைகள்

சிறுவர்களும் இளைஞர்களும் தங்களுக்குப் பிடித்த கனவுருப்புனைவுகளைக் கூறுகிறார்கள். அவர்கள் சொல்லும் ஆக்கங்கள் காமிக்ஸ்களாக, தொலைக்காட்சித் தொடர்களாக, சினிமாப் படங்களாக இருக்கின்றன.

‘அரூ’ நடத்திய முதல் விஞ்ஞானச் சிறுகதைப் போட்டியில் வெற்றியடைந்த எழுத்தாளர்கள் அறிவியல் சிறுகதைகளைக் குறித்து தங்கள் எண்ணங்களைத் தெரிவிக்கிறார்கள்.

இயந்திரவியல், மின்னணுவியல், நரம்பியல், உயிர்மருந்தியல் முதலிய துறைகளைச் சேர்ந்த ஆய்வாளர்களிடம் கனவுருப் படைப்புகளைப்பற்றிக் கேட்டுப்பெற்ற கருத்துகள் ஓர் இதழில் தொகுக்கப்பட்டுள்ளன.

நாவல் பகுதிகள்

கே. பாலமுருகன் எழுதிக்கொண்டிருக்கும் ‘நீலநிறக் கண்கள்‘ என்ற நாவலின் ஒரு பகுதி இரண்டாம் இதழில் வெளியாகியுள்ளது.

இதழ் மூன்றில் கோணங்கி தற்போது படைத்துக்கொண்டிருக்கும் ‘நீர்வளரி‘ நாவல் பகுதி தரப்பட்டுள்ளது.

கட்டுரைகள்

இப்பிரிவில் தனிக்கட்டுரைகளைப் பார்ப்போம். 2018ஆம் ஆண்டு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் பங்கேற்ற உள்ளூர் ஆங்கிலமொழி எழுத்தாளர்கள் Nuraliah Norasid, Rachel Heng, Victor Ocampo ஆகியோர் தங்களுக்குப் பிடித்த கனவுருப்புனைவுகளாக Aldous Huxleyஇன் ‘Brave New World’ நவீனத்தையும் George Orwellஇன் ‘1984’ நாவலையும் குறிப்பிடுகிறார்கள். இச்செய்தியை ராமச்சந்தர் ‘1984க்கு ஒரு காதல் கடிதம்‘ என்ற கட்டுரையில் பதிகிறார்.

எஸ். ராமகிருஷ்ணனின் ‘வெயிலைக் கொண்டுவாருங்கள்’ என்ற தொகுதியிலுள்ள அதிக்கதைகளை கணேஷ் பாபுவின் ஒரு கட்டுரை விவரிக்கிறது.

சுதாகர் கஸ்தூரியின் ‘6174’ என்ற நாவலைக் குறித்து ஹேமா தனது வாசிப்பனுபவ கட்டுரையை ‘அரூ’ முதல் இதழில் தீட்டுகிறார்.

க.அரவிந்த் எழுதிய ‘சீர்மை’ என்கிற குறுநாவல், கென் வில்பர், அவர் மனைவி த்ரேயா ஆகியோரின் வாழ்க்கையை விஸ்தரிக்கிறது. குணா கந்தசாமி இப்படைப்பைப் பார்வையிடுகிறார்.

ரவிசங்கர் கோணங்கியின் ‘பாழ்’ நாவலையும் குணா கந்தசாமி கோணங்கியின் ‘த’ நாவலையும் குறித்துக் கருத்துரைக்கிறார்கள்.

கோணங்கியின் ‘பிதிரா’ நாவல் ‘பின்நவீனச் சாயல்கொண்ட ஒரு பிரதி’ என்கிறது யவனிகா ஸ்ரீராமின் ஒரு கட்டுரை.

பாலசுப்ரமணியம் பொன்ராஜின் ‘கோணங்கியின் புனைவுக் கலை‘ என்ற கட்டுரை, கோணங்கியின் கதைகளை ஐவகையாகப் பிரித்து ஆய்கிறது. மேலும், அது “குறைந்த ஒளியில் அசைகின்ற இருள்மய உருக்களே கோணங்கியின் படைப்புகளில் பெரும்பாலும் கதை உயிரிகளாக உலவுகின்றன” என்றும், “அவருடைய உரைநடை மொழியில் ஓர் இசைலயத்தை நாம் அனுபவிக்கலாம்” என்றும் கூறுகிறது.

வரதராஜனின் ‘எலி மூஞ்சிக் காவியம்‘ Art Spiegelmanஇன் ‘Maus’ கதையைச் சொல்கிறது.

Jim Starling உருவாக்கிய தானோஸ் என்ற சித்திரக் கதாபாத்திரத்தின் அரிய சக்தியையும் சாகசங்களையும் இயந்திரக் கவி பிரமிப்புடன் எழுதுகிறார்.

கமலக்கண்ணனின் ‘நிழற்கடவுள்கள்‘ கடவுளின் அறிய குணங்களைச் சித்தரிக்கிறது.

யூகோஸ்லாவியா உஸ்பெஸ்கிஸ்தானுக்கு வடமேற்கே, கசார்கள் என்ற ஓர் இனக்குழுவினர் வாழ்கிறார்கள். மிலோராத் பாவிச் அவர்களைப்பற்றி எழுதியுள்ளார். அந்நூலைத் தமிழில் பெயர்த்துள்ளார் ஸ்ரீதர் ரங்கராஜன். அதனை பெரு விஷ்ணுகுமார் விவரிக்கிறார்.

அறிவியல் சிறுகதை விற்பனர் ஐசாக் அசிமோவின் நூறாவது பிறந்தநாளில் ‘அரூ’ ஆறாவது இதழ் அவருக்குப் பெருமதிப்புடன் சமர்ப்பிக்கப்படுகிறது. இவரின் மிகுபுனைவுக் கதைகளையும், அறி-புனைவுக் கதைகளையும் வைத்து ஐசாக் அசிமோவின் புனைவுலகத்தை ராமச்சந்தர் தம் கட்டுரையில் ஆராய்கிறார். விளையாட்டுத்தனமான கற்பனை அம்சம், கேள்வி எழுப்புகின்ற அம்சம், முன்முடிவு இல்லா முடிவுகள் கொண்ட அம்சம், அரசியல் தாக்கம் உடைய அம்சம், மதம்-தத்துவம்-விஞ்ஞானம் மூன்றும் சந்திக்கும் புள்ளி நிரம்பிய அம்சம் ஆகிய ஐந்து அம்சங்களை அசிமோவின் படைப்புகளில் வாசகர் காணலாம் என்று தகுந்த ஆதாரங்களுடன் ராமச்சந்தர் எண்பிக்கிறார்.

கவிதைகள்

இயந்திரக் கவியின் ‘கருங்குழிப் பயண’த்தில், இருளிலும் கடவுள் புலப்படுகிறார்.

கலாப்ரியா தர்க்கமற்ற கனவைப் பாடுகிறார்.

வேவுபார்க்கும் செயற்கைக் கோள், தன் தினச் சேகரங்கள் திரட்டுதலை மகேஷ்குமார் கூறுகிறார்.

எழுத்துப் பிரதியை உருவாக்கும் கவியையும், அவன் படைக்கும் சொற்கள் தாளில் போய் அமர்ந்துகொள்வதையும் றியாஸ் குரானா கவனிக்கிறார்.

“கவிஞன் தன் சொற்களில் தன் மனச்சுமையையும் சேர்த்து இறக்கிவைக்கிறான்” எனக் கூறும் சுஜா செல்லப்பனின் பாடல், “வால் பற்றித் தொடரும் எடைமிக்க களிறுகள்” என்னும் கூர்மையான ஒரு மனக்காட்சியையும் சுமந்து நிற்கிறது.

கார்த்திக் திலகன் கவிதையில் ஓர் இராட்சதனிடமிருந்து பூமியைக் கடல் காப்பாற்றுகிறது.

கே.பாலமுருகனின் ‘உயிர்பெறுதல்‘ பாவில், பிணங்கள் தம் கல்லறைகளிலிருந்து வெறுங்கக்கூடுகளாக எழுந்து நகருக்குப் போகின்றன. நிறங்களாக மாறித் திளைக்கும் கொண்டாட்டம் ஜமீலின் கவிதையில் தளும்புகிறது.

ச. துரையின் கவிதையில், வயிற்றிலும் முதுகிலும் உருவான கோடுகளுடன் ஒருவன் வீடு வீடாகச் சென்று குடியேறுகிறான்.

நா. பாலாவின் ‘நைலான் புடவை‘, “ஓர் அந்தி வெளிச்சத்தில், மெல்லிய ஒன்று திடமாக வழுக்கியோ, திரவமாக மிதந்தோ, ஆவியாக உருகியோ நகர்கிறது. அதைப் பார்ப்பவனும் அதுவாகிப் போகிறான்” என்கிறது. ‘மோபியஸ்’ என்ற கவிதையில் ஆப்பிளும் அதைப் புசிப்பவனும் ஜீரண இயக்கத்தில் ஒன்றுபடாமல் இரண்டாகக் பிளவுபட்டுப் போகிறார்கள்.

ஒரு பேய்க்காற்றில், கல் அம்மியும் மோட்டார் சைக்கிளோட்டியின் தலைக்கவசமும் தங்கள் இருப்புகளை மாற்றிக்கொள்வதை இசையின் ‘அற்புதம்‘ பாட்டு படமெடுக்கிறது.

“ஆரம்பப்புள்ளி வட்டமாக வளைந்து, இறுதிப் புள்ளியைச் சந்திக்கும்போது, முதல்-இடை-கடைசிப் புள்ளிகளை உருவாக்கிய ஆற்றல் ஒரு பூஜ்ஜியமாய் முடிந்துபோகிறது” என்பதாக, தேவதேவனின் ‘சந்தித்தப்பின்தான்‘ என்ற கவிதைக் கட்டு மெய்யியல் பேசுகிறது.

எம்.கே.குமார், சுபா செந்தில்குமார், யாழிசை மணிவண்ணன், வே.நி.சூர்யா, டீன் கபூர் முதலானோர், ‘அரூ’ இதழ்களுக்குத் தங்கள் கவிதைப் பங்களிப்பை ஆற்றியுள்ளனர்.

சிறுகதைகள்

அனுஷா ஸ்ரீனிவாசன் ‘க்ளிக்‘ சிறுகதையில், காதுகேளாத ராஜா தன் லைட்டரைக் கிளிக்கிய போதெல்லாம் அவனுக்குக் காது கேட்கிறது.

பிரேம பிரபா தீட்டிய ‘கடைசி ஓவியம்‘ என்ற கதை, ஓர் ஓவியர் தாம்வரைந்த ஓர் அழகிய பெண் சித்திரத்தைப் பார்க்கமுடியாமல் தவிப்பதைக் கூறுகிறது.

வே.நீ.சூர்யாவின் ‘ஒரு பறக்கும் நாளில்‘, ஒரு பாட்டியின் சாபத்தால் வாலிபன் ஒருவன் சதா ஓடிக்கொண்டிருக்கிறான். அவனைத் தொடுபவர்களும் ஓடுகிறார்கள். இவ்வாசிரியரின் இன்னொரு கதையான ‘நரம்புமண்டலம்’ மனப்பயத்தினைக் கருவாகக் கொண்டது.

கணேஷ் பாபுவின் ‘அந்தரத்தில் நிற்கும் வீடு‘ சிறுகதை ஓர் உயிரியல் செய்தியைச் சொல்கிறது. பூமியின் ஜீவராசிகளுள் அதிகமானவை பூச்சி இனங்கள். அவையும் இப்போது மூன்றில் ஒன்றாக எண்ணிக்கையில் குறைந்துவருகிறது. வாசு கதாபாத்திரம் போல் கரப்பான்களோடு இணங்கி வாழ்தல் சூழலியத்திற்கு நன்மை பயக்கும்.

ஹேமாவின் ‘உவன்‘ சிறுகதை ஜெயந்தி சங்கரின் ஓவியத்தோடு வெளியாகியுள்ளது. பச்சை, அடர்ச்சிவப்பு, கருப்பு-வெள்ளை, மஞ்சள்-ஆரஞ்சு-பழுப்பு இன்னோரன்ன வண்ணக்கலவைகளைத் தெளித்து ஒரு நிறக்கனவினைக் காணவைக்கிறார் ஆசிரியை.

கே.பாலமுருகன் கதையில், கலப்பு ஹார்மோன் செலுத்தப்பட்ட ‘ப்ரோதேஸ்‘ வகைக் கோழி வருவல்களைத் தின்ற சங்கர், ஆல்பர்ட் ஆகியோருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஆணுணர்வு குறைகிறது.

உமா கதிரின் ‘களப எயிறு‘ சிறுகதையில், கரிணி பி.காம் தான் காணும் இரவுக் கனவுகளுக்குப் பகல் நேரங்களில் பயணித்து அர்த்தங்களைத் தேடுகிறாள். அண்மையில் அவள் முன்ஈறில் பொருத்தப்பெற்ற தாய்லாந்து யானைத் தந்தத்தால் உருவான இரண்டு செயற்கைப் பற்களே கனவுகளுக்கு ஏதுக்களாய் அமைகின்றன.

விக்டர் ஓக்காம்போவின் ‘முடிவிலியின் இழை‘ என்ற கதையில், அண்டத்தில் உண்டான ஒரு நுண்துளையில் ஒரு விண்வீரன் முடிவே இல்லாமல் விழுந்துகொண்டே இருக்கிறான். தன் கைகளில் ஒரு புத்தகத்தை ஏந்தியபடி…

Cyril Wong எழுதிய Zero Hour என்ற சிறுகதையை மகேஷ்குமார் ‘வெற்றுக் கணங்கள்‘ எனப் பெயர்த்துள்ளார். ஒரு நாள் காலை முதல் மதியம் வரை ஆள் அரவமும் நடமாட்டமும் இல்லாத ஒரு வினோதச் சிங்கைச் சூழலில் சிக்கித் திணறுகிறாள் ஆயிஷா என்ற மலாய்ப் பெண்.

கவிதைகளைப் போலவே சிறுகதைகளும் கனவுருப்புனைவுகளாக உருப்பெற்றுள்ளன.

நற்செயல்

‘அரூ’ நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்வான பத்துக் கதைகள் இதழ் மூன்றில் பதிவாகியுள்ளன. ஊகப்புனைவையும், அப்பிரிவின் மிகைப் புனைவையும், அறி-புனைவையும் ஆதரிக்கும் அரூ மின்னிதழ் தன் முதலாண்டுப் பிறப்பிலேயே உலகத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த விஞ்ஞானக் கதைகளை நூலாக்கியிருக்கும் நற்செயல் சாதனைமிக்கது.

நூற்றைம்பது ஆண்டுகாலச் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்தில், ஊகப்புனைவு என்ற வகைமையை ஒரு புதுப்பரிமாணமாகச் சேர்த்துக் கொண்டிருக்கும் ‘அரூ’ மின்னிதழ்க் குழுமத்தின் தொண்டு உண்மையாகவே போற்றற்குரியது.


கட்டுரை தட்டச்சில் உதவிய நண்பர் பாலாஜிக்கு நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்