விதியினும் பெரிதோர் பொருள்

< 1 நிமிட வாசிப்பு

ஒரு நதியிடமிருந்து தப்பிவந்த எறும்பு
எதன்மீதோ
ஊரத் துவங்கியிருந்தது…

வளைந்து நெளிந்து ஒரு வட்டத்திலிருந்து
பெரு வட்டமாய்
முன்னேறிக் களித்தாடியது…

நொடிகள் பூராவும் தடித்துக் கொண்டன
அது மீண்ட வேளையில்…

தப்பியோடிச் சிலாகிக்க முயன்று
தோற்றுவிட்டதை எண்ணி
மீண்டுமோர் வட்டமிட்டது…

எப்படியும் ஏறிவிடலாமென
திடமாய் நம்பி தடமேறிப் போனது…

இன்றுமட்டும் இதைத் தாண்டிவிட்டால்
வாழ்வின் கோடிட்ட இடங்களை
அது நிரப்பி விடலாம்…

எதனைப் பற்றிக்கொண்டு
நீந்திச் செல்வது
நதிகளற்ற பெருவெளியில்…

கொடுந்தீ பற்றியெரியும் ஒரு கட்டிடத்தின்
உள்ளிருந்து வந்த ஒரு காகிதம்
அதன் கால்களில் உரசியவாறு சென்றது…

எறும்பு ஊரத் தொடங்கி நெடுநேரம் ஆகிவிட்டிருந்தது..

இப்போது சாரை சாரையாய்ப் பெயர்ந்து
நகரத் துவங்கி இருந்த
கரையான்களைக் காண நேர்ந்தது…

சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு முன்னைக் காட்டிலும்
வேகமாய் நகர்ந்து முன்னே சென்றது…

கரையான்களின் கண்களுக்குள் நெருப்பின் வாடை…
அதுவே இப்பொழுது அவற்றின் ஆடையாய்…
கரையான்கள் நெருங்க நெருங்க
எறும்பு
பெரிதினும் பெரிதானது
நீண்ட கால்களுடன்
உருண்ட கண்களுடன்
கூரிய கொடுக்குகளுடன்…
திமிறியது…
இனி கோலமாவைத் தின்பதில்லை
எனும் கொதிப்புடன்…

1 thought on “விதியினும் பெரிதோர் பொருள்”

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்