கட்டுரை

முள்ளம்பன்றிகளின் விடுதி: இரு பார்வைகள்

5 நிமிட வாசிப்பு

எல்லைகளற்ற மனவெளி

L. காயத்ரி

நண்பர் ஒருவர், அய்யனார் விஸ்வநாத்தின் ‘முள்ளம்பன்றிகளின் விடுதி’ எனும் சிறுகதையிலிருந்து ஓர் உறவு (affair) முடிவதைக் குறிக்கும் சிறு பத்தியை அனுப்பி என் கருத்தைக் கேட்டிருந்தார். அதன் சுவாரஸ்யத்தன்மை என்னை ஈர்க்கவே ‘முள்ளம்பன்றிகளின் விடுதி’ சிறுகதைத்தொகுதியைப் புத்தகக் கண்காட்சியில் தேடி வாங்கினேன்.

தொகுப்பில் – காதல் கதைகள், உறவுச் சிடுக்குகள் போன்ற வகைமைகள் இருக்குமென நினைத்தேன். ஆனால் அறிவியல் புனைவு, அமானுஷ்யம், ஃபாண்டஸி, சித்தப்பிரமை, மானுடவியல், யதார்த்தம், சர்ரியல், திருமணத்திற்கு வெளியிலான உறவுச் சிக்கல்கள் போன்ற தளங்களைத் தொட்டக் கதைகளை ஒருசேர வாசித்து வியப்படைந்தேன்.

நாம் வாழும் யதார்த்தத்தில் இருந்து, வருங்காலத்தைப் பற்றிய கண நேர கண்ணோட்டத்தை அளிப்பதுதான் அறிவியல் புனைவுகளின் சிறப்பம்சம். இத்தொகுப்பில் முள்ளம்பன்றிகளின் விடுதியும் சரக்கொன்றையின் கடைசி தினமும் அத்தகையதொரு வடிவில் எழுதப்பட்டிருக்கின்றன.

பொதுவாகக் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு புதிய உலகத்தைக் கதாசிரியர் சிருஷ்டித்தால், வாசகர் இடையிலேயே எங்கோ பின்தங்கிவிடக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் உண்டு. வாசிப்போரின் பார்வையும் கற்பனையும் எழுத்தாளரின் பார்வையோடு ஒன்றுவது கடினம். ஆனால் அய்யனார் விஸ்வநாத் யதார்த்தம் மற்றும் கற்பனையைச் சரிவிகிதத்தில் கலக்கிறார். இவை யாவும் நிகழக்கூடியவை என்று நம்மையும் அறியாமல் நம்பத் துவங்குகிறோம்.

பறக்கும் கார்கள், நூறு மாடி அடுக்குக் கட்டடங்கள், மாசுபடிந்த பூமி, அரிதாய்த் தோன்றும் சூரியன், மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு, கேரளா, சோரோ எனும் ஹ்யூமனாய்ட் ரோபோட், க்ளோன்ஸ் என்று நம் கற்பனையை விவரித்துக்கொள்ளும் அம்சங்கள் இந்த இரண்டு கதைகளிலும் உண்டு. மேலும் இதுவரை கேள்விப்பட்டிராத ஆனால் நம்பக்கூடிய கூறுகளும் ஏராளமாக இருக்கின்றன.

அதிநவீன ஒரு விஞ்ஞான உலகத்தில்; இணைப் பொருத்தம், நம் ஆயுட்காலம், பிள்ளை பெற்றுக்கொள்ளலாமா கூடாதா, அதற்கான தகுதிகள், அரசு சொத்தாகி நிற்கும் நம் நினைவுகள் போன்றவை வருங்காலத்தில் நிகழ்வது சாத்தியமே என்கிற எச்சரிக்கைகளையும் இக்கதைகள் தருகின்றன.

அதே நேரத்தில் எத்தனைதான் அரசும், அல்காரிதம்களும் நம் வாழ்வியலை ஆள முயன்றாலும் காதல், குரோதம், பாசம், தாய்மை, விதிகளை மீறுவது, மற்றவர்களை ஏய்த்துப் பிழைப்பது, சுதந்திரக் காற்றுக்கு ஏங்குவது போன்ற அடிப்படை மனித குணங்களிலும் இயல்பிலும் மாற்றங்கள் நிகழாது என்பதையும் இக்கதைகள் சரியாக எடுத்துக் காட்டுகின்றன.

அமானுஷ்ய வகைக் கதைகளை இலக்கியமாகக் கையாண்டவர்கள் மிகவும் குறைவு. தமிழில் எழுதப்படும் அமானுஷ்யக் கதைகள் எல்லாவற்றிலும் ஒரு பேயோ, மோகினியோ அமர்ந்துகொண்டு நம்மைக் கலவரப்படுத்தும். எனவே அமானுஷ்யக் கதைகள் என்றாலே ஒவ்வாமை கொள்ளும் ஆட்களில் நானும் ஒருத்தி. ஆனால் இத்தொகுப்பில் இருக்கும் ‘காட்சிப் பிழை’ கதை அமானுஷயத்தின் மேல் ஒவ்வாமை அல்லது நம்பிக்கை இல்லாதவர்களையும் அசர வைக்கிறது.

விபத்து ஒன்றில் இறக்கும் தணிகாசலம் சாமியாரும், கதைசொல்லியும் ஒன்றா? நாயகனின் எண்ணவோட்டங்களை அவனின் நாட்குறிப்பு சுமக்க, அட்சரம் பிசகாமல் இவையனைத்தும் சாமியாரின் நோட்டிலும் இருப்பது எப்படி? திகில், வேதாந்தம், தத்துவ விசாரம் என இன்னும் பல விஷயங்களும் காட்சிப் பிழை கதையில் அடங்கியிருக்கின்றன.

நம் கற்பனைகளை இன்னும் சற்று விரிவுப்படுத்தி ஒரு மாயப்புனைவின் உலகிற்குள் இழுத்துச் செல்கிறது ‘சமவெளி மான்’ கதை. இக்கதையில் விவரணைகள் அதிகமிருந்தாலும், நம்மை வியப்பிலாழ்த்தத் தவறவில்லை. ஒருவேளை படிமம் மற்றும் உருவகங்களைக் கதாபாத்திரங்களாகச் சித்தரிக்கிறாரோ என்கிற சந்தேகங்களும் மான் குறித்த விவரணைகளை வாசித்தபோது தோன்றியது. ஆனால் கதையை வாசித்து முடித்த பின்னரும் இது எந்தக் கதையாக இருக்கும் என்கிற சந்தேகத்திற்குத் தெளிவு கிடைக்கவில்லை.

ஆசிரியர் தன் முன்னுரையில் அவர் தற்போது வசிக்கும் நிலம் அளித்த கதைகள் என ‘கினோகுனியா’ (Kinokuniya) வையும் ‘நீலகண்டப் பறவை’ யையும் சொல்கிறார். எழுத்தைக் கொண்டாடும் கடையை எழுத்தாளர் எப்படிப் புறக்கணிக்க முடியும்? ஆம், கினோகுனியா என்பது உலகளவில் பல கிளைகள் கொண்ட பிரசித்தப் பெற்ற ஜப்பானிய புத்தகக் கடை. தமிழகத்தின் பழமை மற்றும் பெருமை வாய்ந்த புத்தகக் கடைகளான ஹிக்கின்பாத்தம்ஸ் மற்றும் கிக்கிள்ஸ் (Giggles) போன்று ஜப்பானில் கினோகுனியா.

இந்தக் கடையைக் காணோம் என்று துவங்கி, படிப்படியாக நாயகிக்குச் சித்தப்பிரமையாக இருக்கலாம் என்ற ஐயத்துடன் முடித்திருப்பது பரவசமான வாசிப்பை நல்கியது.

எல்லாவற்றின் பெயரையும் அறியும் ஆர்வம் நாளயடைவில் நோயாகவே முற்றும் ஒரு மனிதனின் கதையை ‘நீலக்கண்டப் பறவை’ சொல்கிறது. வீடு, வேலை, இணையம் என்று அவன் தன் வட்டத்தைக் குறுக்கிக்கொண்டாலும் இணையம் வழி ஏற்படும் பெயரறியா பெண் நட்பிற்கும், ஒரு குளிர்கால மாலைப்பொழுதில் அவன் ரசித்த ஒரு பறவைக்கும் பெயரைக் கண்டறிய முனைந்து இயலாது போய்ப் புனைவாய் பெயர்கள் இட்டு மன அமைதி கொள்கிறான்.

நாயகன் தன்னை ஆட்டிப்படைக்கும் இப்பெயர் அறியும் பிரச்சினைக்கு அவனே ஒரு தீர்வையும் கண்டறிவது புத்தம் புதிய அனுபவத்தைத் தந்தது.

‘எண்களால் நிரம்பிய சங்கமித்திரையின் அறை’ மதம் தாண்டிய காதல், பெற்றோர் எதிர்ப்பு, காத்திருப்பு, தனிமை, ஏமாற்றம் என பலவற்றைப் பேசுகிறது.

ஒரு தேர்ந்த கதைசொல்லியின் வழியாக உருக்கொள்ளும் ‘மூங்கில் மலரும் பெயரற்ற நிலங்களின் கதை’, வலியது பிழைக்கும், இரையாகிப் போன கடவுளர்கள், இவற்றுடன் மானுடவியல் கதையாகவும் பரிமாணம் கொள்கிறது.

இளைஞன் ஒருவனின் வயதுக்கு வரும் கதையாக ‘மல்லிகா அத்தை’ இருக்கிறது. பதின்பருவத்து ’ஹார்மோன்’ தடுமாற்றங்கள் மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் இருக்கும் ’ட்ரான்ஸ்க்ரெஸிவ்’ உறவுச் சிக்கல்களை மல்லிகா அத்தை பேசுகிறது. கதையின் முடிவில் தீர்ந்துபோன கள்ளமில்லாத குழந்தைமையின் பரிதாபமே நமக்கு எஞ்சி நிற்கிறது.

இத்தொகுதியைப் படித்த நாள் முதல் இன்றுவரை என்னுள் சலனங்களை எழுப்பிக் கொண்டிருப்பது ‘சமீபத்திய மூன்று சண்டைகள்’ கதைதான். எல்லாவற்றிற்கும் கணக்கு கேட்கும் கணவன், கொஞ்சம் அசமந்தமாக செலவு செய்யும் மனைவி, குழந்தை நிலா என்ற ’நியூக்ளியர்’ குடும்பம். உச்சபட்ச சண்டைகளும், கலவி வழி சமாதானங்களுமாய் நகர்கிறது இவர்களின் வாழ்வு. கதையின் இறுதியில் ஒரு விசும்பலுடன் பணிந்துபோகும் மனைவி வழக்கமான கையாலாகாதத் தனத்தின் வெளிப்பாடாக இருக்கிறாள். இந்தக் கதை யுகங்கள் தோறும் சிறுமைப்பட்டு, அடிமைப்பட்டு வாழ்க்கையை ஓட்டும் பெண்களின் நிலையைக் கூறுவதாக இருக்கிறது.

இந்தத் தொகுப்பில் பல கதைகள் திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட உறவுகளைப் பேசுகின்றன என்பது இப்படித் தொகுத்து எழுதும்போதுதான் தெரிகிறது. இந்த உறவுகள் ஒரு கட்டத்தில் பிரியவும் செய்கின்றன. அதற்கான காரணங்கள்தாம் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. இனி இதில் என்ன பரவசம், சராசரிகளுள் ஒன்றாகிவிட்டது (‘முள்ளம்பன்றிகளின் விடுதி’); என்ன காரணமென்று நாம் அறியாமலே பிரியும் ஜோடியின் துடைக்கப்படாத முத்தம் (‘ஈரப் பன்னீர்ப்பூ’); மற்றொரு சந்தர்ப்பம் வராமலா போகும் என்ற எதிர்பார்ப்புகளைச் சுமந்த (‘ராவண சீதா’)

நவரசக் கலவை எனும் அந்தஸ்தைப் பெறுகிறது ‘தில்லி 06’ கதை. துடிப்புமிக்க இரண்டு இளைஞர்களின் வெளிநாட்டு வேலை என்னும் கனவும், அது நிறைவேற அவர்கள் எடுக்கும் முனைப்புகள், மேற்கொள்ளும் அலைச்சல்கள், வெற்றிபெறும் நேரத்தில் எதிர்பாராமல் பறிகொடுத்து நிற்கும் பரிதாபம், தவிப்பு மற்றும் அழுகையோடு கதையின் எதிர்பாரா முடிவும் வியக்க வைத்தது.

தொகுப்பின் நிறைவுக் கதையான ‘பவழமல்லிப் பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்’ இலகுவான உரையாடல்கள் மூலமாகவே அடர்ந்த நேசத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கிறது.

மிளா, நளன், தமயந்தி, நிலா, மலர்ச்செல்வி, சங்கமித்திரை, செந்தாமரை, கொற்றவை, சரக்கொன்றை என்று கதாபாத்திரங்களுக்கு ரசனையான பெயர்களைச் சூட்டியதற்கு விசேஷ பாராட்டுகள்.

‘முள்ளம்பன்றிகளின் விடுதி’ ஒரு கொண்டாட்டம்.


முள்ளம்பன்றிகளின் விடுதி: கற்பனையின் சமர்க்களம்

டோனி ப்ரஸ்லர்

ஒவ்வொரு கதையும் சதைக் குருதி தோய்ந்த சதை. கடிபட்ட காகிதத்தின் ஓசையாய் இருக்கலாம், தழல் விருட்சமான மனமாய் இருக்கலாம், மயம் மாய சதை. நிலத்தைத் துரத்தும் பகலொன்றின் திசைகளை எண்ணிவிட முடியாது. அழிவகை மானிடம்தாம். நிலைத்த வரையறைகளைக் கதை பிறத்தலில் சுழித்து போடும் கலன். எனக்கு நெருக்கமான கதையொன்று ‘பவழமல்லி பூவீன்றவளுடனான அதிகாலை உரையாடல்’. காதற்காமன் வரையறை என்ற என் சட்டகத்தை அறுத்தெறிகிறது. விட்டேத்தியாகக் குறுக்கில் வாசிக்கையில் பறந்தது இன்னொன்று ‘நீலகண்டப் பறவை’. விசாரமழை. மெய்நிகர் கதவின் நிழற்பூவைத் திறக்கத் தற்செயலென விழும் உபாயம் எல்லாம், இயல்புநிலையைப் போர்த்தியே அலைகிறது. தர்க்கவிளையாட்டின் பிரவாகமான தத்துவம் தற்செயல் அதிர்ச்சியில் கரைந்தோடிவிடும். கதா, பாத்திரவார்ப்பு, உருதிரிபுகள், துருக்கனாக்கள், திரிந்ததிணை, ஒருவாறு பார்த்தால் அதிகார அடிப்படைகள் மீது நிகழும் கூடுவிசைப் பாய்ச்சல் எனப்படுகிறது. புனைவின் நெருக்கம் இதுவரை நான் அறியாதது. தொகுப்பு நெடுகக் கவிதை உறங்கியபடி நிகழ்கிறது.

இது கதை பாய்ச்சலில் ரீங்கரிக்கும் புனை வளி முயக்கமாய் இருக்கலாம்.

அறி-அதி-சாகசம்.


மேலும் பார்க்க

முள்ளம்பன்றிகளின் விடுதி – அய்யனார் விஸ்வநாத் – எழுத்து பிரசுரம்

காயத்ரி and டோனி ப்ரஸ்லர்

சொந்த ஊர் சேலம். தற்போது சென்னை. மின் மற்றும் மின்னணுவில் பொறியியல் (EEE) பட்டதாரி. சென்னை, மும்பை மற்றும் அமீரகத்தில் துறை சார்ந்த நிறுவனங்களில் பணி புரிந்தவர். சிறு வயது முதலே ஆங்கில, தமிழ்ப் புத்தகங்கள் வாசிப்பதில் ஈடுபாடு உள்ளவர். வாசிப்போடு வாய்பாட்டு, ஓவியம், புகைப்படங்கள் எடுப்பது, கதை, கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் உள்ளவர். தினமலரின் 'பட்டம்' சிறுவர் மலரில் எளிய முறையில் ஆங்கிலம் பயிலக் கட்டுரைகள் என இதழியல் சார்ந்தும் தன் பங்களிப்பைச் செய்து வருகிறார்.

Share
Published by
காயத்ரி and டோனி ப்ரஸ்லர்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago