முத்துராசா குமார் கவிதைகள்

< 1 நிமிட வாசிப்பு

கடுக்காய் பால்
+
கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து
+
சுவர்
=
கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.
[ ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.
நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சு கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.


முகமலர்ச்சியோடு அலையும்
எனது தெருநாயிற்கு
மூன்று கால்கள் மட்டுமே.
அதன் தாவுதலுக்கும் ஓட்டத்திற்கும் நோவே வராது.
தராசின் எடைக்கற்களைப் போன்று ஒவ்வொருவருக்கும்
ஒவ்வொரு வாழ்க்கை எடை.
எனக்குண்டான எடையின் மீது
குமட்டலும் விரக்தியும்
பீறிடுகையில் தெருநாயினைத்
தன்னம்பிக்கைத் தத்துவமாகப் படித்துக்கொள்வேன்.
சமீபமாக
பீறிடுதலைக் கட்டுக்குள் வைக்கமுடியவில்லை.
என்னை நானே கொல்வதற்கும் பயம்.
நிலத்திலும் இருக்கக் கூடாது
வானுக்குள்ளும் போய்விடக் கூடாது.
அரூப மரமான நட்டநடு அத்துவானமே
உலகின் உயரமான உச்சிக்கிளை.
அக்கிளையிலேறிதான் மீதி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கிறேன்.
சித்திரைத் திருவிழாவிற்கு மட்டும்
பூமிக்கு இறங்குவேன்.
பனையளவு வளர்ந்து
மூப்பேறிய தெருநாய்
என்னைப் பார்த்து தூரத்தில் போய்
உமிழ் தெறிக்கக் குரைக்கும்.
வருடத்திற்கு ஒரு முறை
வெறுமையைப் பார்த்து ஓலமிடும்
மூன்று கால் நாயினை
திருவிழா அன்றைக்கு மட்டும் கிறுக்கென அழைப்பார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்