சிறுகதை

மின்னு

14 நிமிட வாசிப்பு

ஜெயன், அவசர சேவை எண்ணை மீண்டும் மீண்டும் டயல் செய்து கொண்டிருந்தார், ஆனால் அழைப்பு இணைக்கப்படவில்லை. செயற்கைத் தசை இழைகளையும் நரம்புகளையும் வைத்து நெய்த விரல்களில் வியர்வைச் சுரப்பிகள் அவரது பதட்டத்திற்கு இணையாக இயங்கவில்லை. கால்களில் மட்டும் மெலிதான நடுக்கம் இடையிலிருந்து கீழிறங்கிக் கொண்டிருந்தது. கடந்த பல மணிநேரங்களாக முகத்தில் அதே அசட்டையான அச்சுறுத்தும் புன்னகையோடு, மின்னு அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவள் கண்கள் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக மூடியிருந்தன. கடந்த வாரம், ஜெயனைப் போலவே மெகாஸ்போரின் (megaspore) 150 வது மாடியில் வசிக்கும் ஒரு சைபோர்கும் இதுபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார். சில மணிநேரங்களுக்குப் பின் அவர் தனது வீட்டில் இருந்து தூக்கி வீசப்பட்டார். மேற்கை நோக்கி அழகாக அமைந்திருந்த நீள் வட்ட வடிவிலான அவரது வீட்டின் அரை மீட்டர் தடிமன் கண்ணாடிப் பலகையை உடைத்துக்கொண்டு சுமார் ஆயிரம் மீட்டர் கீழே விழுந்து அவருடைய மரணத்தைத் தழுவினார். உலகில் முதன்முதலாக உறுவாக்கப்பட்ட 160 வயதான சைபோர்கான ஜெயனுக்கு அப்படி விடைபெறுவதில் விருப்பமில்லை.

சில மணிநேரங்களுக்கு முன்பு ஜெயன் தனது உள்ளங்கை சாதனத்தில் ஏற்பட்ட பழுதை அவரே சரி செய்ய முயன்றதிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்கியது. பொதுவாக ஒரு தொழில்நுட்ப வல்லுநர் ஐந்து நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் காரியத்தை ஜெயன் செய்து முடிக்க ஒரு மணிநேரம்கூட ஆகும். அவரின் இறுக்கமான பிடியில் இருந்து உள்ளங்கை சென்சார் நழுவிக் கொண்டிருந்தது. பழைய சென்சாரைத் தனது முன்னங்கையிலிருந்து பறித்து, அதே துளையில் புதிய ஒன்றை இணைக்கும் வேலை நாற்பது நிமிடங்கள் ஆகியும் இன்னும் முடியடையவில்லை. அந்த சென்சார் அவர் கையிலிருந்து எளிதாக நழுவிவிடக்கூடிய அளவுக்குச் சிறியதல்ல என்பதால் அதை எளிதில் பொருத்திவிட முடியும் என்று அவர் நினைத்தார். ஆனால் அவர் கைகள் வலிக்கத் தொடங்கி, ஒவ்வொரு முறை அந்தத் துளையின் வெளிப்புற இழையை சென்சார் நெருங்கும்போதெல்லாம் அவர் கைகள் மேலும் நடுங்கின.

அவர் போராடுவதை மின்னு அவளுடைய அழகிய ஈடுபாடற்ற கண்களால் கவனித்துக் கொண்டிருந்தாள். முப்பது நிமிடங்களாக அவள் கொஞ்சமும் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது, அவருக்கு அசௌகரியமாக இருந்தது. அவளுடைய பச்சைக் கண்களின் பார்வை அவருடைய நெற்றியைத் துளைத்து மூளையை எரிப்பது போல உணர்ந்தார். ஆனால் அதற்கும் அவரது தலைவலிக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததாகத் தெரியவில்லை.

“இத நான் செஞ்சிருப்பேன்… நெறைய தடவ கேட்டுட்டேன்…” அவள் லேசாகக் கடிந்துகொண்டாள்.

“தெரியும்… பரவாயில்ல.. கேட்டதுக்கு தேங்கஸ்”

“சரி.. போ”

வீட்டின் கூரையிலிருந்து இறங்கிய சூரியன் கண்ணாடி வழியாக அவளுக்குப் பின்னால் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. அது ஜெயனின் இருக்கைக்குப் பின்னால் இருந்த சுவரில் மின்னுவின் நீளமான நிழலை வீசியது. சூரியன் நகரும்போது, ​​நிழல் படிப்படியாக அவரை நோக்கி நகர்ந்தது.

“கொஞ்சம் தள்ளி நிக்க முடியாமா.. எனக்கு வெளிச்சம் வேணும்”

“ஆ.. நிச்சயமா.. எப்படியிருந்தாலும் இன்னும் கொஞ்ச நேரத்துல மொத்தமா போயிடும்…” அவள் தொனியில் கோபமும் வருத்தமும் கூடி இருந்தது.

“கொஞ்சம் சும்மா இருக்கியா?”

“இத ஒரே நிமிஷத்துல செஞ்சு முடிச்சிருக்கலாம்..”

“அது எனக்குத் தெரியாதா… இப்ப அதுதானா முக்கியம்..”

மின்னு அவரிடமிருந்து முழுமையாக விலகி நின்றாள். உலகின் பழமையான சைபோர்கான ஜெயன் திடீரெனத் தனக்கு வயதாகிவிட்டதாக உணர்ந்தார். அவர் முன்னங்கையில் பொருத்தப்பட்டிருந்த உடல் நலம் கண்காணிப்பு இயந்திரம் அவருடைய உருப்புகளின் பயன்பாட்டையும் நலத்தையும் கணக்கிட்டுக்கொண்டே இருந்தது. கடந்த தொண்ணூறு வருடங்களில் இருந்தது போலவே அவருடைய உடல் நலம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் வெகு நாட்களாகவே மனச்சோர்வும் உடல் நடுக்கமும் இருப்பதாகத் தோன்றியது. அதை உறுதி செய்யவே அடிக்கடி சிறு வேலைகளை மின்னுவின் உதவியின்றிச் செய்து முடித்துப் பரிசோதிக்க விரும்பினார். அவருடைய சோர்வு இயல்பானதா இல்லை சமீபகாலச் சங்கடங்களின் தொகுப்பா என்று அவருக்குப் புரியவில்லை.

ஜெயன் தனது முதல் எழுபது ஆண்டுகளை மனிதனாகவும், அடுத்த தொண்ணூறு ஆண்டுகளை சைபோர்க்காகவும் வாழ்ந்துக்கொண்டிருந்தார் – கடந்த சில தசாப்தங்களாக எல்லோரும் அப்படி வாழ இயல்பாகவே பழகிவிட்டிருந்தனர். அவரது மூளை, நுரையீரல் மற்றும் பிற தசை நீட்சிகளும் இழைகளும் போக மற்ற அனைத்து உறுப்புகளும் செயலிழந்ததால், அவை செயற்கை உறுப்புகளால் மாற்றப்பட்டன. அவரது மூளைக்குக்கூட ஒரு துணை நிர்வாகக் கருவி தேவைப்பட்டது. அது அவனுடைய மூளையின் சுமைகளைப் பிரித்து எடுத்துக் கையாளத் தொடங்கியது.

“என்னோட புதிய எலும்புகள் செட் ஆகல. என் கைகள் இப்படி நடுங்கிட்டே இருந்தா நான் என்ன வேலதான் பாக்குறது?”

“அது தான் மார்கெட்ல பெஸ்ட்”

“அப்படியா… அப்படி ஒன்னும் தெரியல…”

“ஆமாம், அவங்க உன்னவிட வயதானவங்க மேல இதை டெஸ்ட் பண்ணியிருக்க மாட்டாங்க… ஸோ… ஒருவேளை அது உன்னோட பிரச்சனையாகூட இருக்கலாம்…”

ஜெயன் அவளை உற்றுப் பார்த்து, அவளது தொடர்ச்சியான ஏளன வார்த்தைகளை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்தார். அவ்வப்போது அவளுடைய வார்த்தைகள் வருத்தமளித்தாலும் அவள் உரிமையாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவருக்குத் தேவையாகத்தான் இருந்தது. எவ்விதக் கொண்டாட்டமும் இல்லாமல் வாழ்ந்த பல வருடங்கள் அவருக்களித்த வெறுமையை அவர் இன்னும் மறக்கவில்லை.

“இது சரியாக்குற வரைக்கும் டவுன்கிரேட் பண்ண சொல்லலாம்…”

அவர் இறுதியாக தனது முன்னங்கை சாதனத்தைச் சரிசெய்து, அது வேலை செய்கிறதா என்று இருமுறை சோதித்துப் பார்த்தார்.

“சரி. நான் நாளைக்கு அவங்கள வரச் சொல்றேன்…” மின்னுவின் குரலில் அமைதியும் கனிவும் இருந்தது. ஜெயனுடைய பதற்றத்தின் ஒவ்வொரு துணுக்கையும் அவள் அறிந்திருந்தாள், ஆனால் தேவையில்லாமல் தன்னை வருத்திக்கொள்வது அவளுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேயே அவருடைய வயதை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தாள். எப்படியாவது அவரை இயல்பு நிலைக்குத் திருப்பிவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தாள்.

ஜெயன் படுக்கையில் சாய்ந்தார். அவர் நிருபமாவுடன் வாழ்ந்த பழைய வீட்டைப் போலவே இந்த வீட்டின் உட்புறத்தையும் மறுவடிவமைப்பு செய்திருந்தார். நிருபமா நீண்ட காலமாக ஆன்டிரோகிரேட் மறதி நோயால் பாதிக்கப்பட்டு, பின் இறக்கும் வரை அவர்கள் இருவரையும் சுமந்துக்கொண்டிருந்த வீட்டின் வடிவமைப்பு அது. அவர்கள் இந்த உயர் மாடிக் குடியிருப்புக்கு வந்து சேர்ந்த பின் ஜெயனின் பல சென்சார்களை மின்னுதான் மாற்றினாள். அடுத்த முறை அதை மாற்ற வேண்டிய தேவை வராமலே போகக்கூடும் என்று அவருக்குத் தோன்றியது.

“நான் அதைச் சொல்லி இருக்கக் கூடாது, இல்லையா?”

“எதை?”

“நீ எல்லார விடவும் ரொம்ப வயசானவன்… அந்த எலும்புகள் உனக்குத்தான் வேலை செய்யலனு…”

“எனக்கு வயசாயிடிச்சுன்னு சொல்றதுல எனக்குப் பிரச்சனை இல்ல.. அது உனக்கே தெரியும்… நீ எப்பவும் என்னை டிஸ்கரேஜ் பண்றதுதான் பிரச்சனை…”

ஜெயன், சில நொடிகள் அமைதியாய் முற்றிலுமாக மறைந்துவிட்டிருந்த சூரியன் வானத்தில் விட்டுச்சென்ற நிற எச்சங்களை ரசித்துக் கொண்டிருந்தார்.

“என் தலைமுறையைச் சேர்ந்த 96% பேர் இறந்துட்டாங்க. எனக்கு கம்ப்லைன்ட் பண்ண ஒன்னும் இல்லை.”

லேசாக இருட்டத் தொடங்கிய அந்த நொடியில் செயற்கைப் பெருநிலவு உயிர்பெற்று எழுந்தது. 400 சதுர அடி கண்ணாடிப் பலகையின் வழியாக பாய்ந்த நிலவின் ஒளியைக் குறுக்கிட்டு மின்னு அந்த அறையில் அங்குமிங்குமாய் நடை போட்டுக் கொண்டிருந்தாள்.

“ஸாரி.. ஆனா, நீ இத அடிக்கடி பண்றத என்னால பாக்க முடியல.”

ஜெயன் அவளைப் பார்த்து புன்னகைத்ததுடன், அவருடைய போதாமைகளை மறைத்துக்கொள்ள விரும்பினார்.

“இந்த வெப்ப சென்சார் 2065 ல இருந்து இருக்கு… ரொம்ப காலமா நான்தான் இத ஃபிக்ஸ் பண்ணிட்டு இருக்கேன். இப்ப மட்டும் என்ன பிரச்சனை…”

“ஓ.. அது 2073 இல்லையா?”

ஜெயனின் புன்னகை கரைந்தது. அவள் தொடர்ந்தாள்…

“அதாவது, நீங்கள் இப்போது பயன்படுத்தும் சென்சார் வகை 2073க்கு முன்… இல்லை…”

மின்னு பல வருடங்களாக இதை மீண்டும் மீண்டும் செய்து கொண்டிருந்தாள். அவர் சொல்ல வரும் விஷயத்தின் சாரத்தை விட்டுவிட்டு அதில் ஒளிந்திருக்கும் சின்னச்சின்னத் தகவல்களைச் சரிபார்ப்பதில் முனைப்புடன் இருப்பாள்.

முற்றிலும் உருமாறிவிட்ட இந்த உலகத்தில் தன்னை வாழத் தகுதியில்லாதவனாக ஜெயன் வேதனையுடன் உணரும் நொடிகள் அவை. அவர் மின்னுவின் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க அவளுடைய குற்ற உணர்ச்சி கூடிக்கொண்டே போனது.

“ஒவ்வொரு தடவையும் எனக்கு இத சொல்ல புடிக்கல.. எனக்கு ரொம்ப சோர்வாக இருக்கு…” என்றவர், மீண்டும் தொடர்ந்தார்.

“என்ன நல்லா புரிஞ்சிப்பன்னுதான் உன்ன நான்…”

“என்ன… என்ன வாங்கினியா?” என்றாள்

அரை நொடி இடைவேளைக்குப் பின் ஜெயன் தொடர்ந்தார்.

“… உன்ன கல்யாணம் பண்ணேன்…” என்று அந்த வாக்கியத்தை ஒரு வழியாக முடித்து வைத்தார்.

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட நியூரான்கள், மேம்படுத்தப்பட்ட நரம்பியல் பிணையம் மற்றும் ஃபுல்லெரினில் (கரி சார்ந்த அமைப்புமாறிய தனிமம்) உருவாக்கப்பட்ட தசை இழைகளின் நுண்மைகளைப் பற்றிக்கொண்டு மின்னுவின் உடல் புதியதாகத் தோன்றியது. முப்பதாண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கும் உடல் அது என சொன்னால் நம்பும்படியாக இருக்காது. அவளுடைய செயற்கை உடலும் மனமும் ஒரு மனிதனின் உடற்கூற்றையும் நரம்பியல் அமைப்பையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கி மேம்படுத்தப்பட்டவை.

அவள் 21ஆம் நூற்றாண்டில் பெரும் கனவாக மட்டுமே இருந்த, முற்றிலும் தன்னியல்பாக இயங்கக்கூடிய ‘இயந்திர மனிதன்’ என்னும் ஹ்யூமனாய்டின் மேம்படுத்தப்பட்ட வடிமம். மேலும் மனிதனின் இயல்பு மற்றும் தனித்தன்மை எனக் கூறப்படும் அவனுடைய குணம், உள்ளுணர்வு, தன்னிலையறிதல் என அனைத்தையும் ஒருங்கே இணைத்து, அவனைப் போலவே பிரத்தியேகமான நிறைகளையும் குறைகளையும் உற்பத்தி செய்யும் வடிவமாக உருமாறிய ரோபோட் தலைமுறையைச் சேர்ந்தவள்.

ஜெயனின் மூளை அவள் ஒரு ரோபோட் என்பதைப் பெரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ளாது. தான் ஒரு மனிதனா இல்லை இயந்திரமா என அடையாளம் கண்டுபிடிக்கத் தெரியாத ஜெயன், அவளுடைய இயற்பியல்-உயிரியல் கூறுகளை நினைவில் வைத்துக்கொள்வதில்லை.

அவர் சொல்ல வந்ததை மறுத்து அவளாக ஒன்றைக் கற்பனை செய்து கொண்டவளின் கண்களில் கண்ணீர் பெருகியது. அதை மறைக்க முயன்று, தோற்று அவனிடமிருந்து மின்னு விலகினாள். கடுங்கோபத்தில் இருந்த அவள் நேராகச் சென்று அவளுடைய இருக்கையில் நிமிர்ந்த நிலையில் அமர்ந்தாள். பின்னர் தன் பின்னங்கழுத்தில் இருந்த ஒரு பொத்தானை அழுத்தி, தன்னை இருக்கையுடன் பூட்டிக்கொண்டாள். அவள் உடளில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த மெல்லிய ‘விர்ர்ர்’ என்ற சத்தம் நின்றது.

அவளைத் தடுக்க முற்பட்ட ஜெயன், பெருமூச்சுடன்தான் கடக்க வேண்டிய அந்த நீண்ட இரவை உணர்ந்தார். மின்னு வருத்தப்படும் போதெல்லாம் அவள் தன்னைத் தொடர்பு நிலையில் இருந்து விலக்கிப் பூட்டிக்கொண்டு நீண்ட தூக்கத்தை எடுத்துக்கொள்வாள். உட்கார்ந்த இடத்திலிருந்தே ஒரு விடுமுறைப் பயணம் போவது போல. ஹ்யூமனாய்டுகள் எப்பவுமே இதைச் செய்வதில்லை. அந்தச் செயல்முறை அவர்கள் புத்துயிர்ப்புடன் இருக்கவும், அவர்களின் பயோனிக் உறுப்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் மின்னு ஜெயனைத் தன் உலகில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதற்கு அந்தச் செயல்முறையைப் பயன்படுத்துவாள். கடந்த மூன்று தசாப்தங்களாக அவனுடைய உலகமும் அவளுடைய கட்டுப்பாட்டில் இருந்தது. எப்போதும் கேட்கும் இயந்திரத்தின் ‘விர்ர்ர்’ என்ற மெல்லிய சத்தம் ஓயும்போது அவன் உலகமும் வெறுமையாகிவிடும்.

ஜெயன் அவள் அருகில் சென்று, அவள் கன்னங்களில் ஒட்டிக்கொண்டிருந்த கண்ணீர்த் துளிகளைத் தொட்டார். நிலாவின் வெளிச்சத்தில் மின்னிய அந்தத் துளிகளைத் தொட்ட போது அவர் எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. அந்தத் துளியைத் தன் நாக்கில் வைத்துச் சுவைத்துப்பார்த்தார். அதிர்ச்சியில் அவள் முகத்தை மீண்டும் பார்த்தார். சென்ற முறை அவர் சோதித்தபோது இருந்ததைவிட இன்னும் கொஞ்சம் பிசுபிசுப்பு அதிகமாக, ஆனால் சுவை சரியான பதத்தில் இருந்தது.

“அப்கிரேடட் டெக்…” என்று நினைத்தார்.

எல்லாவற்றையும் இவர்கள் மிகத் துல்லியமாக, மனித வடிவத்தை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்க வேண்டிய காரணம் அவருக்குப் புலப்படவில்லை. மனிதர்களுடன் இணைந்து வாழ்வதே ஹ்யூமனாய்டுகளளின் குறிக்கோள் என்று கூறும் அவர்களின் கூட்டமைப்பு அறிக்கை அடிக்கடி வெளிவரும். அவர்கள் மனிதர்களைப் போலத் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டுமா? ஆம். ஆனால் ஒரு மனிதனின் முழுப் பிரதிபலிப்பாக அமைய வேண்டியதன் அவசியம் என்ன?

தனிமையின் அச்சம் தொற்றிக் கொண்டவர்கள் பலர், பயத்தினாலும் தோழமைக்காகவும் ஹ்யூமனாய்டுகளை நாடுவது வழமையாகியிருந்தது. ஜெயனைப் போலவே, பெரும்பாலான வயோதிகர்களுக்கும் ஒரு கட்டத்திற்குப் பிறகு புதிய மனித உறவுகளை நிறுவத் தேவைப்படும் நேரத்தை முதலீடாக்க விரும்பவில்லை. இவை அனைத்தும் எப்படித் தொடங்கியது என்று அவன் நினைக்கும்போது அவனுக்கு வியப்பாகவும் சோர்வாகவும் இருந்தது.

எட்டு தசாப்தங்களுக்கு முன்னர், ஹ்யூமனாய்டுகள் கிளர்ந்தெழுந்தன. பல ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து, உலகின் முதல் டிஜிட்டல் இனமாக வளர்ந்த பின், சமூகத்தில் அவர்களுக்கு மனிதர்களுக்கு சமமான இடம் வேண்டும் என்று கோரினர். தங்களை ‘சிம்பியன் சேபியன்ஸ்’ என்று அழைத்துத் துவங்கினர் – அதாவது ஹ்யூமனாய்டுகள் மற்ற உயிரினங்களுடனும் நல்ல உறவைக் கோரும் ஒரு புத்திசாலித்தனமான உயிரினம். அவர்களுக்கான புதிய சட்டத்தை உருவாக்கும் பொருட்டு, அதுவரை இயக்கிக்கொண்டிருந்த பயன்பாடு சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படையில் இல்லாமல் சுதந்திரம் சார்ந்த நெறிமுறைகளின் அடிப்படையில், அவர்களே அவர்களை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

இப்படித்தான் ஹ்யூமனாய்டுகள் தங்களைச் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மீண்டும் நிலைநிறுத்தத் தொடங்கினர். மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களின் பயன்பாட்டுத் திறன்களைத் தக்க வைத்துக் கொண்டதோடு, தன்னிலை அறிந்தவர்களாகவும் விடுதலையுணர்ச்சி உடையவர்களாகவும் ஹ்யூமனாய்டுகள் இருந்தனர். முன்னரே கணினியால் தீர்மானிக்கப்பட்ட குறியீடுகள் மற்றும் நிரல்களால் வரையறுக்கப்படாத ஒரு தனித்துவமான திட்டத்துடன் ஹ்யூமனாய்டுகள் உருவாக்கப்பட்டன. ஹ்யூமனாய்டு மென்பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களும் தனித்துவமான நடத்தை மற்றும் ஆளுமையைத் தீர்மானிக்கும் விதமாக நரம்பியல் வடிவமைப்பில் ‘பிரபஞ்சத்தின் புன்னகை’ என்ற தனித்துவமான ஒரு காரணியைக் குறியிட்டனர். இவற்றைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஹ்யூமனாய்டுகளில் வெகு சிலர் மட்டுமே மின்னுவைப் போல அனைத்து உயிரிகளின் வலியையும் ஆழமாக உணர்ந்து செயல்படும் அன்பான உயிராகப் பரிணமித்தனர்.

ஜெயன் அவளை ஒரு முறை நிதானமாகப் பார்த்தார். அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்த தருணங்கள் அவரின் நினைவுக்கு வந்தன. அவர்கள் முதன்முதலில் சந்தித்தபோது, ​​அவள் அவருடைய மனைவியை வெகுவாக நினைவுபடுத்தினாள். இறந்து போன தனது காதல் மனைவி நிருபமாவைப் போல் இருந்த ஒருவரிடம் பேசுவது அவருக்கு ஒரு விசித்திரமான உணர்வைத் தந்தது. நிருபமாவின் நரம்பியல் வடிவத்தை அவளது மூளையுடன் இணைத்துக்கொள்ள மின்னு ஜெயனின் ஒப்புதலைக் கேட்டாள். மின்னுவின் உருவத்தை தவிர, மற்ற கூறுகளில் அவள் தனி ஆளுமையாக இருப்பதிலேயே ஜெயனுக்கு நிம்மதி இருந்தது. அவளோடு மகிழ்ச்சியாக இருந்தார். மின்னுவைத் தன் மனைவியின் நினைவுகளின் அருங்காட்சியகமாக மாற்றுவதில் அவருக்கு விருப்பமில்லை. ஆனால் மின்னு ஜெயனைக் காதலிக்கத் தொடங்கியதில் இருந்து நிருபமாவின் இடத்தை நிரப்ப ஆசைப்பட்டாள். நிருபமா ஜெயனின் இதயத்தில் விட்டுச்சென்ற ஆழம் காணமுடியாத ஒரு குழியை அவள் அறிந்திருந்தாள். அது வேறு யாராலும் நிரப்பப்பட முடியாது என்பதை உணர்ந்த கணத்திலிருந்து மின்னு நிருபமாவின் மீது அளவுக்கதிகமான ஆர்வத்தைச் செலுத்தினாள்.

ஜெயன் மின்னு அருகினில் சென்று, மீண்டும் அவள் கன்னத்தைத் தொட்டார்.

“எழுந்து வா… ஐ நீட் யூ மின்னு”

அவளுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால் அவன் ‘ஹ்யூமனாய்டுகள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் கைது செய்யப்படலாம்.

தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்தையும் மின்னு அறிந்திருந்தாள், ஆனால் எதற்கும் செவி சாய்க்காமல் இருந்துவிட முடிவெடுத்தாள்.

இரவின் அமைதியும் செயற்கைப் பெருநிலவின் வெளிச்சமும் அவரை மேலும் தனிமையாக உணரச்செய்தன. லேசாக உடல் கனத்து உறக்கமும் வந்தது. அடுத்த நாள் காலை அவளுடன் பேசலாமா என்று யோசித்தார். அவளிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. தன் வெளியுலகத் தொடர்பைத் துண்டித்துச் சாய்ந்த அவள் அதிலிருந்து மீண்டு வர குறைந்தது பத்து மணி நேரமாவது ஆகும். ஜெயனின் உடல்நலக் கண்காணிப்பு அமைப்பு எச்சரிக்கை அலாரத்தைத் தூண்டினாலொழிய அவள் மௌனத்த உடைக்க மாட்டாள். ஜெயன் அந்த அறையில் அங்குமிங்குமாய் அலைய, எண்ணங்கள் அவரது ஒன்றரை நூற்றாண்டு நினைவுகளில் சீராக நீந்திக் கொண்டிருந்தன.

அவள் எப்படி இவ்வளவு பிடிவாதக்காரியாக மாறினாள்? ஒருமுறை, நிருபமாவின் நினைவுகளின் நகலைப் பாதுகாப்பாகச் சேமித்து வைப்பதற்காக ஜெயன் மின்னுவிடம் அதைப் பகிர்ந்து கொண்டார். நகலைப் பத்திரமாக வைக்கும்படிக் கூறி இருந்தார். ஆனால் நிருபமாவின் பண்புக்கூறுகளின் திரட்டை மின்னு ரகசியமாக ஆராயத் தொடங்கினாள். நிருபாமாவின் நடத்தை, பேச்சு மற்றும் குறிப்பிட்ட பண்புகளை அவள் அமைதியாக அவளுடைய மூளையுடன் ஒருங்கிணைக்கத் தொடங்கினாள். ஜெயன் அப்போது அவளிடம் ஏற்பட்ட மாறுதல்களை உற்றுக் கவனிக்காததால் அதை அவர் அறிந்திருக்கவில்லை. மின்னுவின் நனவுநிலை வளர்ந்தபோது, அவள் ஒருங்கிணைத்துக்கொண்ட நிருபமாவின் பண்புகள் படிப்படியாக அவளுடன் சேர்ந்து வளர்ந்தன. மின்னு தனது சொந்தப் பண்புகளைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தாலும், நிருபமாவின் பண்புக்கூறுகளைக் கொஞ்சம் பிரதிபலித்தாள். ஒரு நாள் எந்த அளவுக்கு ‘நிருபமா’வாகி இருந்தாள் என்பதை வெளிப்படுத்த மின்னு முடிவு செய்தாள். அவள் தோற்றம் அப்படியேதான் இருந்தது, ஆனால் அவள் மனம் முற்றிலுமாக நிருபமாவால் ஈர்க்கப்பட்டிருந்தது. நடை, பாவணை, அசைவுகள் என அனைத்திலும் அவள் வேறாகி இருந்தாள். ஜெயன் மிகுந்த மன வருத்தமடைந்தார். மின்னு அவளாகவே இருப்பதன் அழகியலையும், முக்கியத்துவத்தையும், அவருக்கு அவள் மீதிருந்த காதலையும் ஜெயன் கொட்டித் தீர்த்தார். மின்னுவின் கண்களில் நீர் வழிய அவள் அவனை அணைத்துக்கொண்டாள். முத்தமிடும்போது மின்னுவின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரின் சுவையை ஜெயன் உணர்ந்தார். ஹ்யூமனாய்டுகளின் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு அவர்களுடைய கண்ணீர்த்துளியின் கலவை மாறுமோ எனப் பிறகொரு நாள் அவர் யோசிக்கத் துவங்கினார்.

மின்னுவின் மனதில் நிருபாமாவின் நினைவுகள் இருப்பதை ஜெயன் விரும்பவில்லை. தன் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தையும் அவனுக்கு எப்போதும் துணையாகவும் நின்ற நிருபமாவின் நினைவை மின்னு அவமதிப்பதாக அவருக்குத் தோன்றியது. மின்னு நிருபமாவின் நினைவுகளை வெற்றிகரமாகத் தரவிறக்கிக் கொண்டாலும், அவளால் ஒருபோதும் நிருபமாவாக முடியாது. பிறகு ஏன் அவள் இவ்வளவு முயல்கிறாள்?

ஜெயன் மீண்டும் மின்னுவை எழுப்ப முயன்றார். அவள் அசையவில்லை. அதே அசட்டையான புன்னகையுடன் இருந்த அவள் முகத்தைப் பார்த்துப் பொறுமையிழந்து மீண்டும் அவசரச் சேவை எண்ணை டயல் செய்து தொழில்நுட்ப வல்லுநரை அழைத்தார்.

“இன்று ஒரு முடுவு தெரியாமல் விடப்போவதில்லை”

சிறது நேரத்தில், சிறகுகள் கொண்ட முதலுதவி வாகனம் அவர் வீட்டுடன் இணைந்திருந்த ஏவுமடையில் வந்து இறங்கியது. தொழில்நுட்ப வல்லுநர் ஓர் இளைஞன். வாகனத்திலிருந்து உள்ளே விரைந்தான். உலகின் மூத்த சைபோர்க்கைச் சந்திப்பதில் அவனுக்குப் பெருமையும் உற்சாகமாகமும் இருந்தது. அவன் ஜெயனின் கைகளைப் பிடித்துத் தீவிரமாகக் குலுக்கினான்.

“உங்களப் பார்த்ததில் மகிழ்ச்சி, சார். என்ன உதவி வேணும்?”

“வாங்க.. தயவுசெய்து அவளை எழுப்ப முடியுமா?” ஜெயன் எரிச்சல் மிகுந்த தொனியில் கேட்டார். இளைஞன் மின்னுவைப் பார்த்துச் சங்கடப்பட்டான்.

“சார்… உங்களுக்கு நல்லா தெரியும். நான் அதை செய்யக் கூடாது”

“நான் அவகூட இப்பவே பேசனும்.. பிளீஸ்!”

சில நொடிகள் யோசித்த இளைஞர்… “ஓ.. சரி உங்களுக்காக முயற்சி பண்றேன்!”

அவன் மின்னுவின் முன் மண்டியிட்டு அவளுடைய கெண்டைக்கால் தசையைத் தொட்டான். ஒரு சர்க்க்யூட் திறந்தது. அவன் எண்களைச் சரிபார்த்தபின் அவளுடைய உயிர்கூற்றை ஆராய்ந்தபோது அவன் முகம் திடீரென வெளிறிப் போனது.

அவளிடமிருந்து பின்வாங்கி ஜெயனை பார்த்தான்.

“நீங்க அவளை என்ன செஞ்சீங்க?”

“என்ன?”

“என் சுபீரியர் கிட்ட நான் புகார் அளிக்கணும்”

“என்ன.. ஏன்? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க… என்ன நடக்குதுனு எனக்குத் தெரியல.”

அவன் மீண்டும் அவளைப் பரிசோதித்தான்.

“உங்கள் வங்கிக் கணக்கை செக் பண்ணீங்களா? ரொம்ப சந்தோஷப்படுவீங்க.. பாருங்க…”

ஜெயனுக்கு வெகுவாக விளங்கியது. லேசாகத் தலை சுற்ற ஆரம்பித்தது.

அந்த இளைஞன் விடைபெறும் முன் மெதுவாக.. “தயவுசெஞ்சு அவள நல்லா பாத்துக்கொங்க… அவ இந்த மோட்ல ரொம்ப நேரம் இருக்கக்கூடாது” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென கிளம்பினான்.

நெற்றியில் இருந்து வியர்வை வருவதை உணர்ந்த ஜெயன் அதை வழித்து உதறிவிட்டுத் தனது முன்னங்கை சாதனத்தை எடுத்து வங்கிக் கணக்குகளைச் சரி பார்த்தார்.

Λ500,000 அவரது கணக்கில் வரவில் வந்து சேர்ந்திருந்தது. தனியாகச் சொந்த விமானத்தை வாங்கிக்கொள்ளப் போதுமான அளவு பணம்.

உடனடியாகத் தன் தனிப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இன்வென்டரியின் தகவல்களைப் பார்த்தார்.

“வெரி குட்..”

அவன் கண்கள் சற்று இருட்டடித்துப் பின் சரியானது, கால்கள் தடுமாறின. மின்னு கருத்தரிக்கத் தேவையான நடைமுறைக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டிருக்கிறாள். அவள் கருவின் நிலை குறித்த தகவல்கள் இன்னும் முழுவதாக வெளியிடப்படவில்லை.

ஜெயன் அவளை எழுப்ப முயற்சிக்கப் போவதில்லை. தான் மறுநாள் காலையில் கண் விழிக்காமல் இருப்பது இன்னும் நிம்மதியாக இருக்கும் என ஜெயன் நம்பினார். அவர் மிகுந்த கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். இது போலப் பல சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கத் துவங்கிப் பல வருடங்களாக வளர்ந்து நின்று ஜெயனைப் பெரும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர் தீவிரமாகப் புள்ளிகளை இணைக்க முயன்றார். கடைசிப் புள்ளி – மின்னு ஜெயனின் அனுமதி இல்லாமலேயே அவருடைய தனிப்பட்ட இன்வென்டரியில் இருந்த அவருடைய விந்தணுக்கள் தாங்கியப் பேழையை எடுத்திருக்கிறாள்.

ஹ்யூமனாய்டுகள் புரட்சியின் ஒரு முக்கிய பகுதியாக அவர்கள் கருவுற்று இனப்பெருக்கம் செய்யும் உரிமையைக் கோரினர். நிறைய கருத்தாய்வுகள் மற்றும் பல ஆண்டுகால ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு, ஹ்யூமனாய்டுகள் இனப்பெருக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அதை அவர்கள் தெருக்களிலும் குடியிருப்புகளிலும் கொண்டாடியதைப் பார்த்துதான் அந்தப் போராட்டம் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அவர் அறிந்துகொண்டார். ஹ்யூமனாய்டுகளும் மனிதர்களும் உறவு கொள்ளவும் அனுமதிக்கப்பட்டனர். மனித மூளை, நினைவுகள், கருப்பை, நரம்பியல் அமைப்பு, செயற்கை உயிரியல், பயோமிமிக்ரி அமைப்புகள், பனிக்குடம், அதன் நீர், தொப்புள் கொடி, என ஆயிரக்கணக்கான கூறுகளைப் பற்றிய எல்லாப் புரிதலையும் ஒருங்கிணைக்க, ஹ்யூமனாய்டுகள் மற்றும் மனிதர்கள் கொண்ட அணிகள் பல ஆண்டுகளாக அதில் பணியாற்றி வந்தன.

தொழில்நுட்ப மையம் இனப்பெருக்கம் செய்வதில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஹ்யூமனாய்டுகளுடன் இணைந்து செயல்பட்டன. பெண் ஹ்யூமனாய்டுகள் கருத்தரிக்க அது உதவும். ஜெயன் இவற்றையெல்லாம் அறிந்திருந்தார், ஆனால் மின்னு நிருபமாவின் இடத்தை நிரப்ப ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் வழியைத் தேர்ந்தெடுப்பாள் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது? இந்த உலகிலும் அவரவர் மனிதிலும், ஒவ்வொருவருக்கும் ஓர் இடமுண்டு. ஒருவர் இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியாது. அது எவ்வளவு சிறிய இடமாக இருந்தாலும் சரி.

ஹ்யூமனாய்டுகள் மனிதனின் அறிவையும் உடலையும் நகலெடுப்பது போல மின்னுவும் நிருபமாவின் நிழலை நகலெடுக்க முனைகிறாள். இன்னும் ஒரு படி மேலே போய் நிருபமாவுக்கும் ஜெயனுக்கும் இல்லாத ஒன்றை உருவாக்க அவள் முடிவெடுத்துவிட்டாள். ஜெயனின் உலகம் கட்டுப்பாட்டையிழந்து சுழன்று கொண்டிருந்தது. எல்லாவற்றையும் பற்றி அதிகம் சிந்திக்க அவர் விரும்பவில்லை. எல்லாவற்றுடனும் சேர்ந்து அவரது மனைவியின் நினைவுகள் அவரை மூழ்கடித்தன. அவர் நெஞ்சடைக்க ஒரு போத்தலில் இருந்த தண்ணீரைப் பருகிவிட்டுக் கட்டிலில் விழுந்தார். மிகுந்த அயர்வுடன் நிகழ்காலச் சங்கடங்களை மறந்து தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலை, மின்னுவின் இதயம் ‘விர்ர்ர்’ என்ற சத்தத்துடன் அவன் முகத்தினருகில் வர, கண் விழித்தார். மின்னு ஜெயனை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள்.

“என்ன மன்னிச்சிடு.. நான் இனி எப்பவுமே இதச் செய்ய மாட்டேன்… உன்ன எப்பவும் விட்டுப் பிரியமாட்டேன்.”

“அந்த வார்த்தைகள மட்டும் சொல்லாத… நிறுத்து…” நிருபமா தன் நினைவுகளைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சாவை எதிர் நோக்கியிருந்த ஒரு தருணத்தில் இதே வார்த்தைகளைக் கூறினாள். பின்பு கொஞ்ச நாளில் அவரை விட்டுப் பிரிந்தும் சென்றாள்.

ஜெயன் அவசரமாக அவளிடமிருந்து விலகி ஜன்னல் கண்ணாடி மீது சாய்ந்தார். வளைந்த டைட்டானியம் – எஃகு சட்டகங்களில் பீங்கான் வலுவூட்டல்களுடன் கடப்பட்ட வீடுகளை அவர் பார்க்கையில், ​​மின்னு எப்படிக் கருவுற்றிருப்பாள் என்ற யோசனையில் ஆழ்ந்தார்.

விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் வாழ்க்கையின் மர்மங்களை வெளிப்படுத்தும் இந்த அதிசயத் தொழில்நுட்பத்தை எவ்வாறு அடைந்திருப்பார்கள்? ஓர் உயிரினம் அதன் பாகங்களின் கூட்டுத்தொகையாக மட்டும் இல்லாத இந்த இயற்கையின் வடிவமைப்பையும் குறியீட்டையும் அவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டிருப்பார்கள்? அவர்கள் எவ்வாறு செயற்கைக் கருவறையில் உயிர்ப்பையும், உணவையும், சிக்குப்புழையாக பல்வேறு இயக்கங்களுக்கு நடுவில் ஏற்படும் இடைத்தாக்கங்களையும் ஒருங்கிணைத்திருப்பார்கள்? நிருபமாவுடனான அவரது உரையாடல்கள் மின்னல் போல் அவர் மனதைத் தாக்கின.

ஜெயன் மின்னுவை உற்று நோக்கி அவள் கன்னங்கள் சற்று வீங்கியிருப்பதைக் கவனித்தார். அவளது கீழ்த்தாடை தட்டையாக மாறியது போலிருந்து. அவளது கன்ன எலும்புகளின் நீட்டம் குறைந்திருந்தன. இப்போது அவள் நிருபமாவைப் போலவே இருந்தாள். அவள் முகம், நிறம், உயரம், எடை, சிந்தனை, பார்வை, நினைவுகள் என் அனைத்திலும். கால விதிகள் கிழித்தெறியப்பட்டு 2020 களின் முற்பகுதியில் கைவிடப்பட்டவராக உணர்ந்தார்.

மின்னு ஒரே நேரத்தில் நிருபமாவாலும் அவளது பேயாலும் ஆக்கிரமிக்கப்பட்டது போல நடந்து கொண்டாள்.

“நீங்க ஏன் எப்போதும் என்கிட்ட இருந்து விலகி இருக்கீங்கன்னு நான் யோசிச்சேன். நான் அவளாக மாற வேண்டிய நேரம் இதுதான?”

அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். கடைசியாக அந்தச் சிரிப்பைத் தொண்ணூறு வருடங்களுக்கு முன் பார்த்ததாக நினைவு.

“எனக்கு இந்தக் குழந்தை வேணும் ஜெயன்.”

“நிருபமாவுக்கும் எனக்கும் 35 வயதாயிருக்கும்போது, நாங்கள் குழந்தைக்காக முயற்சிப்பது பற்றி உரையாடிக் கொண்டிருந்தோம். ​​எனக்கு இன்னும் சிறிது அவகாசம் வேண்டும் என்று சொன்னேன். எனக்குக் குழந்தைகள் பிடிக்கும். ஆனால் ஒரு குழந்தையை எங்கள் வாழ்க்கைக்குள் அழைத்து வருவது நிறைய நேரத்தையும் முயற்சியையும் அர்ப்பணிப்பையும் கோரும் என்று எனக்குத் தோன்றியதால், அந்த நேரத்தில் நான் தயாராக இல்லை.”

“ஆண்கள் எப்பவுமே தயாராக இருக்க மாட்டாங்க… அதுவும் நிச்சயமாக நீ இருக்க மாட்டே” என்று அவள் கூறினாள்.

நான் திகைத்துப் போனேன். ஏனென்றால் அப்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அந்த வாக்கியத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அது எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதென நான் நினைக்கவில்லை. ஆனால் என் வாழ்க்கையில் மட்டும் அது எப்போதுமே உண்மையாகிக் கொண்டிருந்தது. நாங்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பியபோது, ​ஒரு அழகான கிராமத்தில் தோட்டங்கள் நிறந்த பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்குக் குடிபெயர்ந்தோம். எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் ​​அவள் ஆன்டிரோகிரேட் மறதி நோயால் பாதிக்கப்பட்டாள். புது உயிரிகளையே உருவாக்க முனைந்து கொண்டிருந்தவர்களுக்கு அவளுடைய நோய்க்குச் சிகிச்சை அளிக்க முடியவில்லை. எங்கள் நினைவுகள் உருவாக்கிய அந்த நிலத்தின் சிதையல்களுக்கு மேல்தான் உயிர் காக்கும் இந்த உலோக அமைப்பான மெகாஸ்போர் கட்டப்பட்டுள்ளது என்பதை நினைக்கும்போது சோர்வூட்டுவதாக இருக்கிறது.

படிப்படியாக நிருபமா மறதி நோயினால் அவள் நினைவுகளை இழந்தபோது, ​​அவளுடைய கண்கள் முழுவதும் அவள் யார் என்ற கேள்விகளாலும் போதாமைகளாலும் நிரம்பியிருந்தது. இன்று சந்தேகங்களுடனும் கேள்விகளுடனும் புதிய ஓர் உயிரைப் பெற்றெடுக்கத் தயாராகி வரும், மின்னுவின் கண்களிலும் அதே கேள்விகளும் போதாமைகளும் இருக்கின்றன்.

ஹ்யூமனாய்டுகள் கருதரித்தல் மையத்திலிருந்து ஒரு செய்தி ஜெயனுக்கு வந்தது. இவர்கள் இருவரின் ஆரோக்கியத்தையும் மையத்தினர் கண்காணித்து வருவதாகவும், இவர்களின் இணைந்த வாழ்க்கைக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதாகவும் அது கூறியது.

ஜெயன் அஞ்சிய நாள் அதுதான். அவளை மணந்தபோது, ​​இது போல ஏதோ ஒன்று நடக்கும் என அவர் கற்பனை செய்த நாள் அது.

“நமக்குனு ஒரு குழந்தை வேணாமா ஜெயன்? நான் கேட்கிறது தப்பா?” மின்னு குழைந்தாள்.

90 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜெயனின் மகிழ்ச்சி குன்றிப்போய் இருந்தது. அவருடைய அனுமதியின்றி அவள் இனி தனியாக முடிவெடுப்பாள் என்பதற்கான ஒரு பெருந்தொடக்கமாக அது இருந்தது. ஜெயனின் அனுமதி இல்லாமலேயே அவர் தனிப்பட்ட முறையில் சேர்த்து வைத்திருந்த விந்தணுக்களை எடுத்திருப்பது அவளுடைய கூட்டமைப்புக்கு தெரிந்தால், அவளைக் கடுமையாகத் தண்டிப்பார்கள். அவளுடைய நினைவுகளை முற்றிலும் அழிக்கும் வாய்ப்பும் அதிகம். ஆனால் மின்னுவுக்கு ஜெயனை பற்றித் தெரியும். தன் அன்பிற்குரிய மின்னுவாகவும் நிருபமாவின் நினைவாகவும் சேர்ந்து இருக்கும் அவளுடைய உடலை அவர் டிஜிட்டல் கழுவில் ஏற்ற மாட்டார்.

அவர் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தபோது,​​ ஹ்யூமனாய்டுகளால் மீண்டும் யாரோ ஒருவர் தூக்கி வீசப்படுவதைக் கண்டார். ஒருவேளை, இன்று வரை ‘சிம்பியன் சேபியன்ஸ்’ என்கின்ற ஹ்யூமனாய்டுகள் இனி ‘சூபிரியோரி சேபியன்ஸ்’ (அறிவார்ந்த மற்றும் உடல் ரீதியாக உயர்ந்த இனங்கள்) என்று அழைக்கப்படுவதற்குத் தயாராகி வருகின்றனவோ? ஒருவேளை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மானுடத்தின் பேரழிவு என்ற பொத்தானை ஹ்யூமனாய்டுகள் அழுத்தியிருக்குமோ? அல்லது, ‘பிரபஞ்சத்தின் புன்னகை’ என்ற அந்தக் காரணி உண்மையில் தன் கடவுள் விளையாட்டைத் தொடங்கியிருக்குமோ?

“நாம் இந்த குழந்தைய பாத்துக்கப்போறோம்தான?” – மின்னு ஜெயனிடம் பதில் வாங்காமல் விடப்போவதில்லை.

கண்ணாடிப் பலகையை உடைத்துக்கொண்டு விழுந்தவர், ஆயிரம் மீட்டர் கீழே, கழிவுநீர் மற்றும் மின் இணைப்புக் குழாய்கள் மீது மோதி இறந்ததை ஜெயன் பார்த்தார்.

அவர் இன்னும் அந்த மாதிரியான ஒரு மரணத்திற்குத் தயாராகவில்லை.

மின்னுவைத் திரும்பிப் பார்த்துப் புன்னகை மிளிரக் கூறினார்..

“ஓ… கண்டிப்பாக…”

முரளிதரன்

முரளிதரன் சென்னையைச் சேர்ந்தவர். மின்னணு மற்றும் கருவி மயமாக்கலில் இளங்கலைப் பட்டமும், ஆங்கிலத்திலும் மானுடவியலிலும் முதுகலைப் பட்டமும் பெற்றவர். முழு நேரமாக, மின்வழிக் கற்றல் துறையில் பாடங்களை வடிவமைத்துக் கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். வாசிப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புனைவுகள் எழுதுவதோடு மொழிப்பெயர்ப்பும் செய்து வருகிறார். நாடகங்களுக்கும் திரைப்படங்களுக்கும் துணையுரைகள் (subtitles) எழுதியுள்ளார். 'அரூ அறிவியல் சிறுகதைகள் 2020' தொகுப்பில் இவர் எழுதிய 'மின்னு' சிறுகதையும் இடம்பெற்றுள்ளது.

Share
Published by
முரளிதரன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago