மூன்று மாதங்கள் கடுமையான மன அழுத்தத்தின் பிடியில் இருந்துவிட்டு வெளியே வந்த பிறகு அன்றுதான் முதன்முதலில் பணிக்குச் சென்றிருந்தாள் ஸ்ருதி. அவளது கோதுமைத் தோல் வறண்டு வெளுத்திருந்தது. அவளது விழிச்சூழ் எலும்புகளின் வெளிப்படையான தோற்றம் கண்கள் ஒடுங்கி இருந்ததை இன்னும் சற்று தூக்கலாகக் காண்பித்தது. உடலெடை வெகுவாகக் குறைந்திருந்தது போலத் தோன்றியது. அவளது கழுத்து மெலிந்து ஒடுங்கிப் போயிருந்தது. அவளது சமீபத்திய நிழற்படங்கள் எவற்றிலும்கூட இன்றைய நிஜத்தோற்றத்தின் சாயலைத் தேடினாலும் கண்டறிந்துவிட இயலாது. எத்தனை குறுகிய காலத்திற்குள் மனம் மனிதரை எத்தனை உருக்கிவிடுகிறது. அவளது மனதின் பிடிக்குள் சிக்கிக்கொண்ட பிறகும் இத்தனை துன்பங்களையும் தாங்கிக்கொண்டு ஓரளவு மீண்டு வந்திருக்கிறாள் என்பதே புதைக்கப்பட்ட விதையின் வீரியத்தைத்தான் நினைவூட்டுகிறது. கொடுங்கனவுகளாலும் அதனால் ஏற்பட்ட உறக்கக் கொள்ளையாலும் அவதிப்பட்டு வந்தவள் தற்போதுதான் மெல்ல மீளும் அறிகுறிகளுடன் இருப்பதாகச் சொன்ன அவளது மருத்துவருடைய பரிந்துரையின் பேரில் பணிக்கு வந்திருக்கிறாள்.
வாடிக்கையாளர் குறை தீர்க்கும் பிரிவில் இருப்பதால் மிகுந்த கவனமும் செய்நேர்த்தியும் தேவைப்படும் பணி அவளுடையது. மூளையின் சமிக்ஞைகள் அதற்குரிய பாதையில் சென்றால் போக வேண்டிய இடத்திற்குச் சரியாய்ப் போய்ச் சேரும். ஆனால் புற நரம்பு மண்டலம் மைய நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாடின்றித் – துயரக் கடலால் சூழ்ந்த தீவாகிப் போன நிலையில் – தனிமைப்பட்டு இருந்தது. அதிலிருந்து அப்போதுதான் மீண்டிருந்ததாகத் தன்னைக் கருதிய அவள் அத்தனை ஒழுங்காக வேலை செய்வோம் என்பதைத் தானே எதிர்பார்த்திருக்கவில்லை. கோடையின் பின்மதிய வெயில் முழுவதும் சாய்ந்துவிடுவதற்கு முன் இன்மதலைப் போல் கைகள் விரித்து வந்து மோதும் தென்றலைத் தழுவியது போல மிகுந்த மகிழ்வாயிருந்தது. விடுமுறைக் காலத்தில் நத்தை போல ஊர்ந்து துயரத்தின் சாலையை நீட்டிக்கொண்டே இருந்த காலம், இன்று பணிக்குள் விழுந்ததும் பல மடங்காகத் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டது.
அலுவலகத்தின் முகப்பிற்கு வந்ததும், மகிழுந்தினை அழைக்கத் தனது மிடுக்கு அலைபேசியின் செயலியைப் பயன்படுத்தினாள். அவளது கண்கள் இரண்டும் ஒளிநீங்கிய கரித் துண்டங்கள் போலிருந்தன. ஒரு மாதக்கணக்கில் அழுததாலும் கணினியின் ஒளித்திரையினையே பார்த்தவாறு கிடந்ததாலும் அவள் கண்கள் தொய்ந்திருந்தன. வெய்யோன் எழுகையில் மலையின் அடிவாரத்தில் விழும் குகைநிழல் போல நிலைத்திருந்தன விழியடிக் கருவளையங்கள். மூன்றாம் தளத்திலிருந்து தீக்ஷிதா அவளை அழைப்பது போலிருந்தது. தலையை உயர்த்திப் பார்க்கையில் வானத்து ஒளிக்கடல் அவள் கண்களில் தூறியது. விழி பிடுங்கப்பட்டது போல ஒரு கணம் உணர்ந்தாள். தன் கைகளால் நெற்றியில் தற்காலிக வடிகட்டி அமைத்து தீக்ஷிதாவைப் பார்த்தாள். தீக்ஷிதா ஒரு தேவதை. இப்போது என்ன செய்தி கொண்டு வந்து என்னை அழைக்கிறாள்.
“ஜெஃப்ரியிடமிருந்து பார்சல் வந்திருக்கு” என்று தெளிந்த குரலில் ஒரு அசரீரி போலக் கத்தினாள் தீக்ஷிதா.
ஏதோ ஓர் அசெளகரியத்தைத் தவிர்க்க நினைப்பவள் போல எச்சில் விழுங்கியவாறே, மெல்லப் பதிவு செய்த வண்டி வந்து நிற்பதையும் மீண்டும் நிமிர்ந்து தீக்ஷியையும் பார்த்தாள். அவள் கண்கள் அப்போது இறந்த மான்விழிகளைப் போலாகி இருந்தன. உள்ளே மூளை ஏதோ மின் இணைப்புகளைச் சுண்டி விளையாண்டு கொண்டிருந்தது. அவளது உட்செவிக்குள் இருக்கும் சமநிலை அமைப்புகள் உடலின் மீதான கட்டுபாட்டுத் திறனை இழந்து தனியாகச் சுழலத் தொடங்கி இருந்தன. அவள் கால்முட்டிகள் மடக்கு நாற்காலியை மடக்கியது போலச் சடுதியில் குலைந்தது. அவள் வீழும் முன் அந்த வண்டி ஓட்டுநர் அவளைப் பிடித்திருந்தான்.
ட்ரமர்ஸ் என்ற பன்னாட்டு நிறுவனத்தில் முதல் மாத ஊதியம் மட்டுமே பெற்றிருந்தேன் நான்.
“ஸ்ருதி, இன்று ஜெஃப்ரியின் தந்தை இறந்ததற்கான ஈமச்சடங்கு. வா போய் வரலாம்” என்று சில நண்பர்கள் என்னை அழைத்தார்கள்.
ட்ரமர்ஸ் நிறுவனத்திலேயே வேறொரு பிரிவில் பணிபுரிந்து வந்த ஜெஃப்ரியின் தந்தை 03.08.2045 அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்த நிகழ்விற்குப் பின்னரே அவனை நான் முதன்முதலில் அறிந்து கொண்டிருந்தேன். இறுதி சடங்குகளுக்கான நிகழ்வில்கூடப் பறிகொடுத்தவர்களின் பெருஞ்சோகத்தைக் காட்டாமல் அளவிட முடியாத மர்மமான சிற்பத்தெளிவுடன் நிலைத்திருந்த முகத்தைக் கொண்டிருந்தான். அங்கிருக்கும் நண்பர்கள் ஒவ்வொருவரும் தொட்டுச் செல்ல ஏதுவாய்க் கைகளை அவ்வப்போது விரித்தும் பின் மடக்கியும் கொண்டான். ஒரு சிலர் அவனை அணைத்துத் தேற்றுவதாக நினைத்து அவனைவிட அதிக விம்மல்களை வெளிப்படுத்தினர். அதன் பின் சுமார் ஆறு மாதங்கள் அவனைப் பற்றி நான் நினைக்கக்கூட இல்லை.
திடீரென்று ஒரு நாள் அவனுக்கு மிகச்சிறந்த பணியாளர் என்ற விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து – அவனைத் தேற்றுவதற்காக எல்லோரும் கூடி முடிவெடுத்து தேர்ந்தெடுத்திருப்பார்களே ஒழிய – அவ்வளவு பெரிய ஞானியாக அவனிருக்க வாய்ப்பில்லை என்ற பிம்பமே எனக்குள் இருந்தது. தீக்ஷிதான் அவனைப் பற்றி அறையில் இருக்கையில் பெருமிதத்துடன் சொன்னாள். அதிலிருந்தே அவனைப் பற்றிய அறிதல் புற்றுநோய் போல அறிகுறிகள் ஏதும் காட்டாமலேயே மெல்ல ஆர்வமாக வளர்ந்தது. அங்கு வந்த முதல் நாளிலிருந்தே தீக்ஷிதான் என் மீது ஒட்டிக்கொண்ட நட்பின் பேருயிர்.
ஜெஃப்ரியின் தந்தை மட்டுமின்றி, அவனது அக்காவும் சரியாக இரண்டாண்டுகளுக்கு முன் ஆகஸ்டு மூன்று – அதாவது 03.08.2043 – அன்று தற்கொலை செய்துகொண்டு இறந்திருந்தாள் என்பதை எதார்த்தமாய் தீக்ஷிதா சொன்னாள். அதைக் கேட்டதும் எனது உள்ளத்தின் ஆழத்தில் ஒரு சில்லிடல் ஏற்பட்டது. அவனது அம்மாவைப் பற்றிக் கேட்டபோது அவனது பிறப்பிலேயே அவர்கள் இறந்ததை அறிய நேர்ந்தது. அவன் ஒரு அக்மார்க் முத்திரை குத்தப்பட்ட அநாதை. நானும் ஓர் அநாதைதான். சொந்த நிலத்தில் ஏற்பட்ட மூளையற்ற மதம் பிடித்த போரில் மொத்தக் குடும்பத்தையும் ஒற்றைக் குண்டின் வாயில் இழந்துவிட்ட அற்பங்களுள் நானும் ஒருத்தி. பாலைமலை போல வறட்சியின் பிரபஞ்சத்தில் எவருக்கோ எஞ்சி இருந்த அன்பின் கசிவில் பிழைத்து அதன் தோள்மீதேறி கடல் கடந்து வந்து வாழ்பவள் நான். நான் உலகை இழந்த அநாதை. அவனும் வேறொரு விதத்தில் அப்படித்தான்.
கூடவே தீக்ஷிதா “தற்கொலை என்பது ஒருவித பரம்பரைச் சொத்து, அதிலிருந்து தப்புவது மரபுக் குறியீட்டாக்கத்தின் கைகளில்தான் இருக்கிறது. ஜெஃப்ரிக்கும் அதே பாதைதான்” என்று சேர்த்துப் பகர்ந்ததும், பனியுறைவு கொண்டு செய்த கத்தியின் முனையால் எனது அடிவயிறு தீண்டப்பட்டது போலிருந்ததை உணர்ந்தேன்.
இப்படி ஒரு கருத்தைச் சொன்னதற்காக தீக்ஷிதாவிடம் கோபித்தும்கொண்டேன்.
தீக்ஷிதாவோ “நான் ஆதாரமின்றி எதையும் சொல்லவில்லை. ஜெஃப்ரி அவனது தந்தையின் மரணத்திற்கு முன்பே சிலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவன்” என்று சொல்லித் தொடர்ந்து “நண்பர்கள் அவனைக் காப்பாற்றி மருத்துவரிடம் கொண்டு சென்ற பின், ஜெஃப்ரியின் உதிரத்தில் mGluR5 வின் எண்ணிக்கை அளவிற்கு அதிகம் இருந்தது என்ற உண்மை தெரிந்தது” என்று சொன்னாள்.
“அதனாலென்ன பேயே! அவனும் தற்கொலை செய்தே ஆகத்தான் வேண்டுமா? அதை மீறி அவன் வெல்லவே மாட்டான் என்று நீ எப்படி முடிவு செய்தாய்” என்று தீக்ஷிதா மீது எரிந்து விழுந்தேன்.
தீக்ஷிதா விடாப்பிடியாய், “சில சமயம் தற்கொலை எண்ணங்களுக்கு எதிராக அவன் போராடியும் இருக்கிறான். இல்லையெனில் நிச்சயம் இன்று அவன் நம்மிடையே உயிரோடு இருப்பது என்பதே சாத்தியம் இல்லை. இரவில் திடீரென எழுந்து ஜன்னல்களை மூடித் தாளிட்டுக்கொள்வான். நண்பர்களின் உறக்கத்தைக் கலைத்து விடக்கூடாது, அதே சமயம் ஏழாவது தளத்திலிருந்த அவனது அறையிலிருந்து கீழேயும் குதித்துவிடக் கூடாது. அவன் முயற்சி செய்கிறான்தான், ஆனால் முழுக்க உதவிட ஒருவர் வேண்டுமே. அப்படி ஒன்று சாத்தியமும் இல்லையே. எத்தனை நாள் என்பதுதான் கேள்வி. இப்போது அவன் தந்தை இறந்ததும் அவன் முனைப்பெல்லாம் வீண் என்று அவன் மனமும் ஒரு தோற்றத்தை ஏற்றுக் கொண்டிருக்கும். அத்தோடு அவன் எப்படிப் போராடுவான் என்பதே எங்கள் எல்லோருக்கும் இருக்கும் கேள்வி” என்றாள்.
இப்படித்தான் எதையாவது சொல்லிச் சொல்லியே அதை ஒருவரைச் செய்ய வைத்துவிடுவதுதான் இந்த உலகின் இயல்பு. அவனுக்கே தோன்றாவிடிலும் இத்தகையை விஞ்ஞான அரைகுறை உளவியல் பேச்சுகள் ஒருவனை அவன் செய்யவே விரும்பாத ஒன்றைச் செய்து முடிக்கத் தூண்டுதல் தந்துவிடும். தீக்ஷிதாவும் இதை வேண்டுமென்றே சொல்லவில்லை என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இல்லை.
முதலில் அவனைத் தவிர்க்க வேண்டும் என்றே நினைத்தாலும் என்னிடம் மட்டுமே அவனுக்கு இருத்தலின் முழுமை ஏற்படும் என்ற உணர்வு உள்ளத்தைக் கூசவைக்கும் அளவிற்கு ஒளியலைகள் போல் வந்து என்னை அழுத்தியது. ஏன் அவனுக்கு எல்லாமுமாக நான் இருக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்ததுமே என் வாழ்வின் பிடிப்பினைக் கைகள் துழாவிப் பற்றுவது போல உணர்ந்தேன். ஒரு கணம் என் தாயின் வெம்மையையும் என் தந்தையின் சிரிப்பையும் மின்னல் வெட்டெனக் கண்டேன்.
உடனே அமைதியுடனும் தெளிவுடனும் நான் ஜெஃப்ரியைக் காதலிப்பதாகவும் அவனுடன்தான் நான் வாழ்க்கைத் துணையாக இருக்கப் போவதாகவும் தீக்ஷிதாவிடம் சொன்னேன். எனது வைராக்கியத்தனத்தை அறிந்திருந்த தீக்ஷிதா தடுமாறி என்னைத் தடுக்க நினைத்தாள்.
முடியாது என்பதைச் சீக்கிரம் அறிந்துகொள்ளவே “அவன் ஒரு நெஞ்சழுத்தக்காரன். நீ அதற்கும் மேல. இருவரும் சேர்ந்து ஒன்றுக்கு மாறாக அடம் பிடித்தால் யார் ஜெயிப்பீர்கள்” என்றுகூட எனக்குச் சொல்லத் தெரியவில்லை எனச் சொல்லி நிறுத்திக்கொண்டாள்.
நிற்பதால் ஏற்படும் மயக்கம்தான், உளத்திலிருந்து எழும் மின்னறிவிப்புகள் திடுமென ஓடிச் சென்று மூளையின் நரம்புப் பாதைகளைப் பிடுங்கும். அதிலிருந்து எறும்பின் தொடர் போல் தொடர்ந்து ஊர்ந்து செல்ல வேண்டிய நரம்பு மின்சாரம் தடைபட்டிருக்கும். ஓய்வும் மனதிடமும் அவளுக்கு வேண்டிய இரு ஊட்டங்கள் என மருத்துவர் சொல்லியிருந்ததை அறிவித்தவாறே தீக்ஷிதாவும் இன்னும் அலுவலக நண்பர்கள் இருவரும் ஸ்ருதி படுத்திருந்த நோயாளிக் கட்டிலின் பக்கவாட்டில் நின்றனர்.
“ஒய்வு என்னைக் கொலை செய்யப் பார்க்கிறது; மனதிடம் என்னைக் கைவிடுகிறது” என்றாள் ஸ்ருதி.
“ஜெஃப்ரி தான் தற்கொலை செய்துகொள்ளும் முன்னரே இந்தப் பதிவுபார்சலைத் திட்டமிட்டு இந்தத் தேதியில் உனக்குக் கிடைக்கும்படி செய்திருக்கிறான். அவன் ஏதோ ஒரு செய்தியை அல்லது ஏதோவொரு வெகுமதியை உனக்குத் தர நினைத்திருக்கலாம். ஆகஸ்டு இரண்டு அன்று பின் தேதியிட்டுப் பதிவு செய்யப்பட்டதாகக் காட்டுகிறது இந்தப் பதிவுக் கட்டு” என்றாள் தீக்ஷிதா.
மண்ணிலிருந்து தெளிந்து விலகிய தண்ணீர் போல எழுந்தவள் தீக்ஷிதாவையும் மற்ற எல்லோரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு அந்த அறையிலேயே முன்னால் விரிக்கப்பட்டிருந்த ஒரு கால்நீட்டும் நாற்காலியை இழுத்துப் போட்டு ஓரிரு நிமிடங்கள் அமர்ந்திருந்தாள். அத்தனை பேரும் சேர்ந்து உருவாக்கிய ஒரு செறிந்த அமைதி அவளை நீர் நிரம்பிய பலூன் மீதான ஊசிமுனை போலத் தீண்டிவிட்டிருந்தது. உடைந்து கதறினாள்.
அவளது உடல் மெலிந்திருக்கும் நிலையைக் கண்ட தீக்ஷிதாவிற்கு அளவுக்கதிகமாய்க் கருணை பெருக்கெடுக்கவே, முழங்காலிட்டுத் தன் கைகளுக்குள் ஸ்ருதியின் கைகளை எடுத்து வைத்துக்கொண்டாள் தீக்ஷிதா.
தீக்ஷிதாவிடம் “ஜெஃப்ரி என்ன செய்து வைத்திருக்கிறானோ? அவன் அனுப்பிய பார்சலில் என்ன இருக்குமோ?” என்ற கேள்விகளை நாற்பது ஐம்பது முறையேனும் ஸ்ருதி கேட்டுவிட்டிருந்தாள்.
தீக்ஷிதாவோ அத்தனை முறையும் பொறுமையாக “ஒன்னும் இருக்காது, நல்ல விசயமாத்தான் இருக்கும். நான் வேணும்னா திறந்து பார்த்துச் சொல்லவா?” என்றாள்.
“வேண்டாம்” என்று பதற்றமான விரிவிழிகளுடன் சொல்லியவாறே “எனக்கு அனுப்பிருக்கான், அவன் நான்தான் திறக்கணும்னுதானே நெனச்சிருப்பான்” என்றாள் தீர்க்கமான விடை கிடைத்தவளைப் போல.
எழுந்து அருகில் மேசையிலிருந்த பார்சலைத் திறக்க நினைத்தவள் குழந்தை கஷாயத்தை வாய்வரை கொண்டுவந்து பின் அருந்தத் தவிர்ப்பதைப் போலத் தவிர்த்தாள். மீண்டும் அவளது தீர்க்கத்தைப் பயம் ஆட்டம் கொள்ள வைத்தது.
“சரி இருக்கட்டும் நேரமும் தைரியமும் வருகையில் நானே திறந்துகொள்வேன்” என்று சொன்னாள். தள்ளிப் போட்டாள்.
அன்றிரவு அறைக்கு அவளை அழைத்து வந்து விட்டுவிட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பி இருந்தாள் தீக்ஷிதா. அவளது தனிமையைக் கண்டு அச்சம் கொண்டிருந்த போதும், தனிமைக்குள் உழன்று தவறாக எதையேனும் செய்துகொள்ளும் நிலையை எல்லாம் அவள் கடந்துவிட்டாள் என்பதை அறிந்தே இருந்தாள். எத்தனை போலியாக நடித்தாலும், எத்தனை இயல்பாக இருந்தாலும் நமது சத்தியத்தை நம்மைவிட நம் நண்பர்கள் அருகாமையில் கண்டுகொள்கிறார்கள்.
தனது இரவு உடையில் படுக்கையில் அமர்ந்தவாறே பாடல் கேட்கத் துவங்கினாள். ஆனால் நினைவு பாடலின் வசியத்தையும் மீறி அவனது நினைவுகளில் நிலை கொண்டிருந்தது.
அவனது நினைவுகள் வலுவான வேரெடுத்து உள்ளிறங்கிப் பல இராட்சத விரல்களாலும் கிளைகளாலும் ஸ்ருதியை நெருக்கிக் கொண்டிருந்தது. அவனது இறப்பு அவனது இறப்பு மட்டுமாக இருக்கவில்லை. தன் வாழ்தலின் தோல்வியாகவும் இருந்தது. தன் உறக்கங்களைப் பிறாண்டும் கொடுங்கனவுகளாகவும் இருந்தது.
“நீ, தயவுசெய்து அவனோட எண்ணங்களிலிருந்து கொஞ்சம் ஓய்வெடு. கொஞ்சமாவது வேற வேலைகளில் மனதை ஈடுபடுத்து” என்று எண்ணங்களின் இடையே பிம்பமாய்த் தோன்றிய தீக்ஷிதா சொன்னாள்.
“உன்னோட நோக்கம், அன்பு எதுவும் புரியாமல் இல்ல தீக்ஷி. சொல்லப்போனா நீ மட்டும்தான், பாதாளத்திற்கு இழுக்கப்பட்டுகிட்டிருக்க என்னைக் கைகொடுத்துப் பிடிச்சிகிட்டு இருக்க. ஆனா அவனது இறப்பு பற்றிய நினைவு! அது வேற பலத்தோட என்னை இழுக்குது. இறந்த பிறகு என்னைச் சுற்றி இருக்கும் ஒவ்வொரு பொருளும் பலமடங்கு அர்த்தமுள்ளதாகி அவனை நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கு” என்று அங்கே இல்லாத தீக்ஷிதாவிடம் சொன்னாள் ஸ்ருதி.
அன்றிரவு, தளும்பி எழும் தனிமையின் வலியை அவளால் நேருக்கு நேர் சந்திக்கவும் முடியவில்லை, தன் வெறுமையை யாருக்கும் முன் வைக்கவும் அவள் தயாரில்லை, குறிப்பாக தீக்ஷிதாவிடம். நேற்றிரவு துவங்கிய முகநூல் போலிக் கணக்கு எழுப்பத்திரண்டு நட்பழைப்புகளைச் சுமந்து நின்றது. அவள் எல்லா அழைப்பையும் பார்த்துக்கொண்டே இருந்தாள். எதிலும் அவள் மனம் இல்லை. தீக்ஷியை அழைத்துப் பேசலாம் எனத் தோன்றாமல் இல்லை. இருந்தாலும் தன் எல்லையை வகுத்துக்கொள்ளும் பண்பு அவளுக்கு இயல்பாகவே இருந்ததால் அதைச் செய்யவில்லை.
ஏற்கனவே ஒரு வாரம் அவளுக்காகவே விடுப்பு எடுத்துக்கொண்டு துணை இருந்தவளை “ஏன் இன்னும் நோகடிக்க வேண்டும்?” என்று நினைத்துக்கொண்டாள்.
ஜெஃப்ரியின் பெயரை அனுப்புநர் இடத்தில் தாங்கிய கட்டினை மீண்டும் பார்த்தாள். அவளோடிருந்த ஒவ்வொரு கணமும் எதிர்பாராத அல்லது மறக்கமுடியாத தருணங்களை உருவாக்கும் வல்லமை படைத்த அவன், இப்போது இல்லாதிருக்கும் போதும் அதையே செய்கிறானே.
“நிச்சயம் இது அவனால்தான் அனுப்பப்பட்டதா?” அவள் மனதிடம் கேட்டாள்.
“இறந்த பிறகு எங்கிருந்து அனுப்பி இருப்பான் இதை?” அவள் மனம் அவளிடம் கேட்டது.
அதைத் திறந்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம் முதன்முதலில் பேரமைதியுடன் அவளுள் எழும்பியது. அது மாறும் முன்னரே விரைந்து சென்று அதைப் பிரித்தாள். அதற்குள் மின்னணு வளையம் போன்ற கருவி ஒன்று இருந்தது. அத்தோடு மின்னேற்றியும் ஒரு சுருக்குப் பையும் ஒரு விளக்கக் கையேடும் இருந்தன. அக நடுக்கத்தினைப் பிரதிபலித்த கைவிரல்களுடன் கையேட்டினை விரித்துப் படித்தாள். அதில் அந்தக் கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்ற விபரங்கள் செய்முறை விளக்கப் படங்களோடு இருந்தது.
சில பக்கங்களிலில் முடிந்துவிட்ட அந்த ஏட்டினை அப்படியே போட்டுவிட்டு எழுந்து ஆடியைப் பார்த்தவாறு நின்று, மெல்ல அந்த வளையத்தில் இருந்த மஞ்சள் பொத்தானை அழுத்தினாள். அது சற்றே அதிக விரைப்புத் தன்மை கொண்டது போலத் தோன்றியது. மெல்ல தன் பிம்பத்தினைப் பார்த்துக்கொண்டே இருகைகளாலும் பற்றி உயர்த்தி அந்த வளையத்தினைத் தலையில் கிரீடம் போலச் சூட்டிக்கொண்டாள். அதிலிருந்து வெகு பரிட்சயமான ஒரு குரல் கேட்டது.
“ஸ்ருதி, பச்சைப் பொத்தானை அழுத்திக்கொள்.”
அவள் அது ஜெஃப்ரியின் குரல் என்று தெளியும் முன்னரே பச்சைப் பொத்தானை அழுத்தி, படுக்கையில் சரிந்து துயிலுக்குள் நுழைந்திருந்தாள்.
“ஒருவன் நிஜமான சுதந்திரத்தை நோக்கி முழுமையாக ஈடுபடுபவன் எனில் அவன் தற்கொலை எனும் செயல்பாட்டினைக் கண்டு தடுமாற்றமோ தயக்கமோ கொள்ளாதவனாய் இருக்க வேண்டும்” என்று ஓரிரவின் முனையில் என் அரையுறக்கத்தில் அவன் சொன்னபோது திடுக்கிட்டு எழுந்தேன். என் முழு ஆற்றலையும் ஒருங்கே சேர்த்து அவனை இழுத்து அணைத்துக்கொண்டு அவனது எண்ணம் தேவையற்றது என்று சொன்னேன். அதைச் சொல்லும்போதே அவனிடம் நான் தோற்றுப்போய், போலிச் சொற்களை உதிர்ப்பதாகத் தெளிவாக உணர்ந்தேன். அவன் முகம் உணர்வுகளின்றி இருந்தது. அவனுடலில் மக்காச்சோளத்தின் நறுமணம் எழுந்தது. அவன் ஆழத்தில் என்னை எள்ளிச் சிரிப்பதைத் தெளிவாக உணர்ந்தேன்.
எனக்குள் அந்த வைராக்கியம் வளர்ந்துகொண்டே போனது. “அதென்ன எண்ணம்? என்னைக் கடந்து அது எப்படி வென்றுவிடும் என்றுதான் பார்க்கிறேன். அன்பில் அணைந்துவிடாத நெருப்பென்று எதுதான் இருக்கமுடியும்?” என்று கேட்பதன் மூலம் அவனை உருக்க நினைத்தேன்.
“ஸ்ருதி, அன்பு என்பது ஒரு உளமயக்குதான். நிகழ்தகவுதான், ஒரு வாய்ப்பு, அவ்வளவே! உதாரணமாக நீ ஒரு தெருநாயைக் கல்லெறிவாய், ஆனால் நீ வளர்க்கும் நாயை உயிர்க்குழந்தை போலவே நினைப்பாய். ஒரு வேளை உன்னிடம் ஒரு வளர்ப்பு நாய் இல்லாமல் போய் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தினமும் உன்னைப் பார்த்து வாலாட்டி நன்றி சொல்லும் தெருநாய்க்கு உணவு வைப்பாய். அது தொடரும். தினமும் அந்த நாய்க்குப் பசி தீர்ப்பாய். அதுவும் உனக்கு முன் குழையும். திடீரென ஒரு நாள் அந்த நாய் உன் கண்ணில் படாமல் போனால் உனக்கு நடுமுதுகு அரிப்பு போல ஓர் அசெளகரியம் ஏற்படும். அந்த நாளில் ஏதோ இழந்ததாய் உன் ஆழம் உணர்த்தும். சில நாட்கள் கழித்து அந்த நாய் வண்டியில் அடிபட்டு இறந்து போயிருப்பதாக விபரமறிந்ததும் நீ சில நிமிடங்கள் துன்பம் கொள்வாய், கண்ணீர்கூட விடலாம். அதுதான் அன்பு என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் அன்பு முழுக்க முழுக்கத் தற்செயலானது. நிகழ்தகவின் தூண்டிலில் மாட்டிக்கொள்ளும் தருணங்களுக்கும் வழுக்கிச் செல்லும் தருணங்களுக்கும் இடையிலான வாய்ப்பு. அன்பின் வளர்ச்சி வெறும் திரும்பச்செய்தல் என்ற காரணியாலேயே நினைவில் பதியும் ஒரு தோற்றம். அவ்வளவே!” என்று தொடர்ந்து பேசிச் சட்டென நிறுத்தினான்.
எங்களிருவருக்கும் இடையில் பாறைகளாக மெளனம் ஒரு நிமிடம் குடி கொண்டது. அவன் எழுந்து நடந்து அப்பாறையின் மீது சுத்தியடித்தான். அதன் கெட்டித்தன்மை காணாமல் போய்க் குழைந்து உருகியது.
மீண்டும் “காலம் நீள நீள நீ விட்ட கண்ணீர் உலர்ந்து மெல்ல மங்கலாகத் தொடங்கும். மீண்டும் நிகழ்தகவுகள் உனக்கான வாய்ப்புகளை அளிக்கும். அன்பின் வாசல்களைத் திறந்துவிடும்” என்று சொல்லிப் புற மெளனங்கள் மட்டுமின்றி என் அகத்தின் மெளனத்தையும் கிளறி அலைகளை ஏற்படுத்திவிட்டு உறங்கத் துவங்கினான்.
அந்த வாரத்தில் அவனது தற்கொலை முனைப்புச் செயல்பாடுகள் குறைந்திருந்தன. ஒருவேளை அதற்குத் தயாராகிவிட்டானோ என்ற எண்ணம்கூட எனக்குத் தோன்றியது. என்னை முடிந்த வரை தவிர்க்கப் பார்த்தான். ஜெஃப்ரியின் விழிகள் இளம் நீலத்திலிருந்து அடர்நீலத்திற்கு மாறிவிட்டு வசீகரம் பெருகி இருந்தது. அவன் சாதாரணமாக என்னைப் பார்க்கையிலுமே தேவதூதனைக் காணும் பாவிபோல ஓர் அகக் கலக்கத்தை நானுள்ளே உணர்ந்தேன். அவன் முகத்தைப் பார்த்துப் பேச எனக்குச் சில வாரங்கள் எடுத்தன. அவன் இரத்தத்தில் mGluR5 என்ற செல் புரத ஈர்ப்பானின் செயல்பாடு அதிகமாகிக்கொண்டே இருந்தன. அவனது உயிரியல் மரபு அவனைத் தன் வசம் இழுத்துக் கொண்டிருந்தது.
ஒரு முறை “எப்படி சுசைட் பற்றிய எண்ணங்களை நீ தவிர்க்கிறாய்?” என்று நான் கேட்டேன்.
“மெல்ஸாக் மற்றும் வாலின் பெயின் கேட் தியரி” என்றான்.
“……”
“முடிந்த வரை இணையம், சமூக வலைத்தளம் ஆகியவற்றில் இருப்பது. பொதுவா ஆய்வறிக்கைகள் பலவும் அவை தற்கொலை உணர்வுகளை ஏற்படுத்தும் முக்கிய காரணி என்று சொல்லிக்கொண்டே இருக்கும். ஆனால் என்னுடைய தனித்துவமான கணக்கு வேறு. அதை உனக்கு விளக்கிச் சொல்கிறேன்,” என்றான்.
“சொல்லன்பே” என்று அவன் காதருகே வந்து என் நா நுனியால் ஒரு தீண்டல் செய்துவிட்டு அவன் முன் அமர்ந்தேன்.
“ஏதோ ஒரு சிறு காயம் ஏற்பட்டால், வலியின் செய்தியை நரம்புகள் மேலே எடுத்துச் செல்லும். அதற்கேற்ப வலிக்கும் இடத்தில் நாம் தேய்த்துவிடுவோம். தேய்ப்பின் சமிஞ்கைகள் நரம்புகள் வழியே மூளைக்கு எடுத்துச் செல்லப்படும்போது, வலியின் சமிஞ்கைகள் மறைக்கப்பட்டுவிடும். அதை நம் மூளை உணராது. அதே வழிமுறைதான்!”
“…………..”
“என் உள்குரல் சூசைட் பண்ணிக்கோ என்று என்னை அழுத்தம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் போதும், உடனே சமூகவளைத்தளத்தின் ஆழத்திற்குள்ளோ, அலுவலக பணிக்குள்ளோ தலையைப் பொதிந்துகொள்வேன். அவை இன்னும் பல மடங்கு பெரிய தற்கொலைக் காரணிகள். அவை என்னை ஒன்றும் செய்யாது. பெரிய கோட்டினை அழிக்காமலேயே சின்னதாக்குவதற்கு அருகில் ஒரு பெரிய கோட்டினைப் போடுவது போல” என்று கொக்கரிப்புச் சிரிப்பு சிரித்தான்.
“அப்பப்பா நீ ஒரு மகா வியாக்கியானி! போடா ஃபூல்” என்றேன்.
“அவ்வளவு ஏன், இந்த பெயின் கேட் தியரியேகூட இணையத்தில தேடிக் கண்டுபிடிச்சிகிட்டதுதான்” என்று கண்களைச் சுருக்கியவாறே பழித்தான்.
தினமும் அந்தக் கருவியைப் பொருத்தியதுதான் தெரிந்தது. சடுதியில் உறக்கம் தன் வாலினை விழுங்கும் பாம்பு போல அவளை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. கனவின் திடலில் கனவின் சமுத்திரத்தில் கனவின் அடர்வனங்களில் எல்லாம் விழுந்தாள். அதில் ஜெஃப்ரியே எங்கும் நிறைந்திருந்தான். அவனது முகத்தில் அத்தனை மினுமினுப்பு, விழி கூசும் தேவன் தொடங்கி முலைசப்பும் மதலை வரை அவனாகவே இருந்தான்.
ஜெஃப்ரி இன்னும் இறக்கவில்லை என்பதன் உத்திரவாதம் போலிருந்தது அந்த சொப்பனங்கள். அதில் ஸ்ருதி சாவே அற்ற ஆடல்களைக் கண்டாள். முன்னறியப்படாத தீவுகளில் ஒரு விலங்கெனவும், நொந்து போன வாழ்வியல்களால் அடைபட்டவர்களுக்கு மீட்பரெனவும் அவளால் மாற முடிந்தது. அவளை அப்படி எல்லாம் மாற்றித் தகவமைத்துக்கொள்ளும் வாய்ப்பினை அவன் ஏற்படுத்திவிட்டிருக்கிறான் போல.
அவள் கனவினையும் கனவு அவளையும் மாறி மாறி விழுங்கிக்கொண்டனர். ஜெஃப்ரி நிஜத்தைவிட இத்தனை மடங்கு விஸ்வரூபமெடுத்து அவளுடன் பறக்க முடிந்ததன் பேறு அவளை மகிழ்வித்தது. எட்டு மணி நேரம் மின்னேற்றம் தீர்ந்த பிறகு அன்றன்றைக்கான கனவுகளும் தீர்ந்தன. உறக்கமும் பிரியாவிடை பெற்றது.
ஒவ்வொரு நாளும் காலை அவள் தீஞ்சுவை ஊறும் மலர் போலிருந்தாள். அவளது கண்களின் கீழிருந்த கருவளையங்கள் மெல்லக் காற்றில் மறைந்தன. அவள் விழி ஒளி பெற்றது. அவளுக்கு வாழ்வில் கடுமையான பற்று உருவாகி இருந்தது. இரவின் உறக்கமும் அதனுள் வழிந்த கனவுகளும் அவளை நிஜ உலகிற்கு குழந்தையின் விழியுடனும் முதிய மனத்துடனும் தயார் செய்திருந்தது. ஜெஃப்ரி இறக்கவில்லை என்கிற நிகருணர்வை நிஜ உலகிலும் பெற்றாள்.
அவன் புதிதாக இணைந்து பணியாற்றி வந்த ஹொரைசன் (Horizon) ஃபார்மா நிறுவனத்தில் அவனுக்கான மருந்து மாத்திரைகள் இன்னபிற மருத்துவச் செலவுகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டன. அவனது மனநல மருத்துவர்கூடத் “தொடர்ந்து மனப்பயிற்சிகளையும் லித்தியம் மாத்திரைகளையும் பயன்படுத்தி வந்தால் இந்தத் தற்கொலை எண்ணங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்; நான் சொல்லும் பயிற்சிகளையும் படிநிலைகளாகத் தொடர்ந்து செயல்படுத்தி வந்தால் நிச்சயம் இந்த எண்ணங்கள் மறைந்து போகவும் வாய்ப்புகள் உள்ளது” என்று என்னிடம் தெரிவித்தார்.
என் அன்பின் எல்லைகளால் அணைகொள்ளாத நிலையில் எல்லாம் லித்தியம் அவனைக் காப்பாற்றி வந்தது. 2047 ஆம் ஆண்டின் கோடை அவனை மெல்ல எனக்கு மீட்டுத் தந்தது. நாங்கள் இருவரும் புதிதாக ஒரு குடியிருப்பிற்கு மாறியிருந்தோம். அவன் விழிகள் அடர் நீலத்திலிருந்து வெளிர் நீலத்திற்கு மாறிவந்தது. மெல்ல அவன் என் பிடியில் விழுந்திருந்தான். இருப்பிடத்தை மாற்றியதும் உலகமே மாறிவிட்டது போன்ற உணர்வு எங்கிருந்து வருகிறது என்பதே புரியவில்லை.
இருபது நாள் விடுப்பு எடுத்துவிட்டு ஐரோப்பாவில் இந்த நாடுதான் என்ற கணக்கின்றி ஒரு நீண்ட பயணம் மேற்கொண்டோம். ஃப்ளோரன்ஸ், ஆஸ்விட்ஸ், ஆம்ஸ்டர்டேம், மாண்டெ ப்ளாங்க், விஸ்டுலா, பார்சிலோனா, ரெய்ஜாவிக் எனப் பறவைகளாகி இருந்தோம். பிறகு இந்தியாவிற்குள் காஷ்மீர், குருத்வார், ஹைதராபாத், போபால் என எந்த ஒரு பயணத்திட்டமும் இல்லாமல் தோன்றிய இடங்களுக்கெல்லாம் சென்றோம். ரயில் பயணம்தான் என்பதால் பயணம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ரயிலில் செல்வது போலவே ஒரு அலையுணர்வு மனதில் எழுந்து வந்தது. அது இனிய நினைவுகளால் நிரம்பி தளும்பியது.
அவனது தற்கொலை எண்ணங்களை வென்றிருந்த இத்தகைய உணர்வு எனக்கு வாழ்வின் மேல் கடும் உத்வேகத்தை அளித்தது. பணியிடத்திலும் சரி, உடற்பயிற்சியிலும் சரி ஒரு வெடிப்பு போல முன்வந்து கொண்டிருந்தேன். எங்கள் உடலிணைவுகளும் லாவாச் சிதறல் போல முழுமை கொண்டிருந்த நாட்கள் அவை.
ஃப்ரெஞ்ச் ஆல்ஃப்ஸ் மலையில் நாங்கள் தங்கி இருந்த நாளில், எங்கும் வெண்மை மட்டுமே நிறைந்திருக்கும் விழிக்காட்சியில் ஸ்கீயிங் செய்தோம். அன்றிரவுகளில் ஒதுக்கீடு செய்த அறைகளில் கலவியின் ஆழங்களில் திளைத்திருந்தோம். அதிகபட்சமாக அங்கு மட்டும்தான் நான்கு இரவுகள் தங்கி இருந்தோம். அங்கிருக்கையில் ஒரு முறை அவன் மேரினேட்டட் ஹெர்ரிங்கை இரு தட்டுகளில் ஏந்திக் கட்டிலில் அமர்ந்திருந்தோம். என் நாவில் உணவின் தசைப்பகுதி பட்டதும் கடித்து விழுங்கினேன். வெறும் போர்வைகள் மட்டும் எங்கள் ஸ்பரிசங்களின் மிச்சத்தை நினைவூட்டுவதாக மேலிருந்தது. அவனுக்குத் திடீரென ஒரு விளையாட்டு தோன்றியது.
விவிலியப் பிரதியை எடுத்து வந்து அமர்ந்தான். “பைபிள் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி. சிலருக்குப் புனித நூல், சிலருக்குப் புரட்டு, சிலருக்குத் தலையணை, சிலருக்கு எடைக்கு போடும் நூல். எனக்கு பைபிள் கனவுகளின் தொகை. அதில் பெரும்பாலான வசனங்கள் எனக்குக் கனவுகளாகவே நீளும். அதனால் நீ இப்போது தற்செயலாக ஏதோ ஒரு பக்கத்தைப் புரட்டிக் கண்களை மூடி விரலால் தொடு. அந்த வசனத்தைப் படித்துப் பார்ப்போம். கனவு மாதிரி இருக்கிறதா என்று” என்றான்.
“இது என்னடா புதிய விளையாட்டு, ஒரு பகுத்தறிவு ஞானிக்கு அப்படி என்ன விவிலியத்தின் மேல் சடுதியில் ஒரு மோகம்” என்று கேட்டேன்.
“பயப்படாத, நான் உன்ன கன்வர்ட் எல்லாம் பண்ணிட மாட்டேன். தவிர உனக்கு மதங்களின் மீது இருக்கும் வெறுப்பும் எனக்குத் தெரியுமே. பைபிள் எப்பவுமே எனக்கொரு கனவுக் கடைதான். எல்லார்க்கும் மரண எண்ணம்தான் கடவுள் மீதான நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கிறது. அப்படியென்றால் என்னை மரணத்தின் சுழிக்குள் இழுக்கும் விசையான உள்குரல்தான் கடவுள். அந்தக் கடவுளும்தான் இப்ப இல்லயே, அதைத்தான் கடந்து கொண்டிருக்கிறேனே. அதனால மதரீதியா பார்த்தால் நான் ஒரு நாத்திகன்தான், இல்லை எனில் அகம் பிரம்மாஸ்மி” என்று சொல்லித் தலைகீழாகக் கால் மேலாக நிற்பது போல விளையாட்டு காட்டினான்.
“சரி பைபிளை எடுத்து வா” என்றேன்.
ஒரு நிமிடம் பொறு என்று சொல்லிவிட்டுத் தன் கணினித் திரைக்கு முன் அமர்ந்து “பைபிள் சிலருக்கு ஞானம், சிலருக்குப் புனிதம், சிலருக்குக் குப்பை, சிலருக்குச் சட்டம், சிலருக்கு இறைகுரல், சிலருக்கு இலக்கியம், சிலருக்குத் தத்துவம், சிலருக்கு மதம். எனக்கு மேற்சொன்ன எல்லாவற்றையும் உள்ளடக்கிய கனவுகளின் தொகுப்பு என்று கொள்வது வசதியாகவும் இனிதாகவும் இருக்கிறது. அது தரும் கற்பனைகள் மேலேறி வேறொரு உலகில் சென்று வர முடிகிறது” என்று ஒரு பதிவினைத் தன் முகநூல் சுவரில் பதிந்தான்.
உணவுத் தட்டுகளை மேசையில் வைத்துவிட்டு அவனருகே வந்து நானும் அவன் சொன்னவாறே என் கைகளில் புரளும் பக்கங்களை விழிமூடியவாறே திறந்து சரிபாதிக்கும் அருகில் ஓரிடத்தில் நிறுத்தி விரல்களை வைத்ததும், அவன் அதைக் குறித்துக்கொண்டு என்னை அப்படியே விழி திறவாதபடிக் கண்களைக் கட்டினான். என்னை அமரவைத்துத் தோள்களை அழுத்தித் தந்தவாறே படுக்க வைத்தான். என் முழங்கால்களின் பின்புறம் ஒரு தலையணையை வைத்ததும் இடுப்புப்பகுதியிலும் கால்களிலும் ஓர் ஓய்வை உணர்ந்தேன். என்னிரு புறங்களிலும் தலையணைகளால் அணை வகுத்தான். பிறகு வாசித்தான்:
கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது
சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும்
நெருப்புத்தழலும் விழுந்தது.
தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்;
மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக்
கலங்கப்பண்ணினார்.
சங்கீதம் (18 : 13,14)
விழி மூடிக்கிடந்த எனக்கு அவன் உடலில்லாத குரலாக ஒலித்தான். அதில் கனவுத்தன்மையையே பார்த்தேன்.
சில சமயங்களில் அதீத மகிழ்வே எதிர்ப்பக்கமான ஆபத்தைப் பற்றி எண்ண வைக்கும் திறவுகோல். அவனது தெளிவும் தற்கொலை எண்ணங்களே முற்றிலும் இல்லாமல் போய்விட்ட நிலையும் என்னை மகிழ்வித்தது போய் சந்தேகத்திற்கும் அச்சத்திற்கும் ஆட்படுத்தியது. அவன் நிஜமாகவே குணமடைந்து வருகிறானா அல்லது அணையப் போகும் விளக்கின் பிரகாசம்தான் அவன் முகத்தில் தெரிகிறதா என்று குழம்பியும் போனேன்.
அப்படி நான் அவனிடம் என் வியாகுலத்தைத் தெரிவித்த ஒரு நாளில் இதே விவிலிய விளையாட்டை அவன் மீண்டும் நினைவூட்டினான்.
“இரு நான் வாசிக்கிறேன் நீ தெரிவு செய்” என்று நான் அவனிடம் சொன்னேன்.
“சரி” என்றான்.
அவன் விழிகளை என்னிடம் இருந்த ஷாலைக் கொண்டு மறைத்துக் கட்டினேன். அவன் வெகுவாய்ப் பழக்கப்பட்டிருந்த வீட்டிற்குள் ஒரு குருடன் இலாவகமாக நடப்பது போல பைபிளை துழாவினான். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பக்க எண்கூடத் தெரியும் என்கிற முகத்துடன் தொட்டான்.
நான் வாசித்தேன்.
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்;
நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.
அந்தந்த நாளுக்கு அதினதின் பாடே போதும்.
(மத்தேயு 6:34)
ஸ்ருதி சில மாதங்களிலேயே வெகு இயல்பான நிலையை அடைந்திருந்தாள். சொல்லப் போனால் மன அழுத்தத்திற்கு முந்தைய ஸ்ருதியைவிடப் பல மடங்கு செறிந்த பேரழகும், பெரும் உழைப்பும் அவளிடம் ஒட்டிக்கொண்டது. அவளுக்கு ஒரு தெரபி போல ஜெஃப்ரியுடனான சொப்பன இரவுகள் இருந்தன.
மெல்ல அவள் அதீதத் தெளிவும் சுறுசுறுப்பும் பெற்று அனைவரிடமிருந்தும் எரிச்சலையும் எதிர்ப்பையும் பெறும் ஸ்தானத்திற்குப் போனாள். தீக்ஷிதாவைச் சட்டை செய்யாத பண்பு தீக்ஷிதாவிற்குக் கடும் அயற்சியையும் நட்பின் மீதான அவநம்பிக்கையையும் தந்தது. இருப்பினும் அவளை இழக்காத தோழியாகவே இருந்தாள். தனக்கென இருக்கும் ஒற்றைத் தோழியை அப்படி அவசரப்பட்டு இழந்துவிடுவது அவளுக்கு ஒப்பானதாக இல்லை.
ஒரு நாள் மாலையில் ஸ்ருதியின் இருப்பிடத்தில் பேச்சு மெல்ல ஜெஃப்ரியின் பக்கம் திரும்பியது.
“ஸ்ருதி, உனக்காகத்தான்டா சொல்றேன், நீ அவன் நினைப்பிலிருந்து கொஞ்சம் விலகு, தினமும் அந்தக் கருமத்தைப் பயன்படுத்தாத, அது உன்னை அடிமையாக்குது” என்றாள். சொன்னவளுக்கு உண்மையிலேயே ஸ்ருதிக்காகத்தான் இதைச் சொல்கிறோமா அல்லது இறந்துபோன ஒருவனின் எலக்ட்ரானிக் குரல் மீதிருக்கும் அற்பமான பொறாமைதான் காரணமா என்ற கேள்வி தோன்றியது.
ஸ்ருதி கூரிய ஓநாய் போன்ற கண்களுடன் தீக்ஷிதாவை வெறுப்புடன் பார்த்தாள். நிதானமாக எழுந்து வந்து அறைக்கதவைத் திறந்து தீக்ஷிதாவைப் பார்த்துவிட்டுப் பின்பு வெகு தீர்க்கமாக வெளிப்புறத்தைப் பார்த்தது அவளைக் கண்ணாலேயே கழுத்தைப் பிடித்துத் தள்ளியது போல இருந்தது.
உணவென்று நினைத்துத் தீயை அள்ளி வாயில் போட்டுவிட்டவளைப் போல தீக்ஷிதா கடுமையான வெறுப்புடன் வெளியேறினாள். ஆனாலும் தானும் அப்படி ஒரு சொல்லைச் சொல்லி இருக்கக் கூடாதுதான் என்ற எண்ணம் அவள் கூடவே வந்தது. அவசரத்தில் அவள் படுக்கையிலேயே வைத்துவிட்ட தனது இருசக்கர வண்டியின் சாவியும் அவள் நினைவிற்கு வந்த கணத்திலேயே வெளியே எறியப்பட்டது. பட்டெனக் கதவையும் சாத்தி தன் முற்றுப்புள்ளிக்கு இன்னொரு முறை அதன் மேலேயே முற்றுப்புள்ளி வைத்தாள் ஸ்ருதி.
அங்கிருந்து ஆற்றாமையுடனும் சினத்துடனும் தன் வசிப்பிடத்திற்குச் சென்ற தீக்ஷிதா நேரடியாகப் படுக்கையில் விழுந்தாள். அவளது உறக்கத்தைப் பறித்துவிட்ட ஸ்ருதியின்மீது கடும் அயற்சியும் தவிப்பும் ஒருசேர வந்தது. அதற்கெல்லாம் காரணமானது அந்த ஜெஃப்ரியின் கனவுக்கருவி என்று முடிவிற்கு வந்தாள். ஆம், அதுதான் அவளை ஆட்டிப் படைக்கிறது. நாளை எப்படியாவது அதை எடுத்து ஒளிய வைத்துவிட வேண்டும் என்று நினைத்தாள். நினைத்த கனமே அது சாத்தியமில்லை என்று தெரிந்ததும் அவளுக்கு அழுகை வருவது போலிருந்தது.
சரியாக நள்ளிரவில், ஒரு அதிர்ச்சியாக ஜெஃப்ரியிடமிருந்து அவளுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. கண்களை நம்பாதவள் போல விழித்துப் பார்த்து மீண்டும் கசக்கிவிட்டுப் பார்த்தாள். அவன்தான், அந்த மகா பாவி, அவன் இறக்கவே இல்லைதான் போல. இத்தனை மாதங்கள் கழிந்த பின்னும் அவன் உயிரோடு இருப்பவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கிறான் என்ற தடுமாற்றம் அவளைத் திகைப்படையச் செய்தது.
கொஞ்ச நேரக் குழப்பத்திற்குப் பிறகு அந்த மின்மடலைத் திறந்து கண் சிமிட்ட மறந்து வாசித்தாள். அதோடு பறவையே கிளையானது போல அந்த மின்னஞ்சலுடன் ஒன்றிப்போய் ஒற்றை மூச்சில் வாசித்து முடித்துவிட்டுத் தன்னுணர்வையும் உயிருடனிருத்தலையும் சந்தேகித்தவாறு மெல்லத் தன் படுக்கையில் அமர்ந்து உடைமாற்றாமலேயே சரிந்தாள்.
அன்புள்ள தீக்ஷிதாவிற்கு,
உன்னை நேரில் இதுவரை அணைத்திடாத அன்பு நண்பன் எழுதுவது.
நீ நிச்சயம் ஸ்ருதியின் மீது கொண்டிருக்கும் அன்பினால் என் மீது கொலைவெறி சினம் கொண்டிருப்பாய். அவளது அணைப்பின் சூட்டை அனுபவித்த எவருக்கும் அவள் மீது அப்படியொரு பேரன்பு வருவது இயல்பேதான் என்றாலும் நீ இவ்வுலகில் அவளுக்கென சில தருணங்களில் மட்டுமே நிகழும் ஒரு அரிய விந்தை என்பதை முதலில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் தவறிய கோடிட்ட இடங்களை எல்லாம் நீ பூர்த்தி செய்திருக்கிறாய். நான் அவள் மேல் சுமத்திய எல்லாவற்றையும் நீ களைந்து அவளை மூச்சுவிட வைத்திருக்கிறாய்.
நீ அவளது தவிப்பிற்கு இந்நேரம் விடை என்ன என்று தேடி அலுத்திருப்பாய். இன்னும் அவள் என் நினைவாலேயே தடுமாறிக் கொண்டிருப்பதைக் கண்டு என் மேல் கரைபுரண்ட சினத்துடன் சபிக்கும் சொற்களை இட்டுக் கொண்டிருக்கவும் கூடும் என்று கணிக்கிறேன்.
வழக்கத்திற்கு மாறாக நான் இன்று என்னால் மட்டுமே இயன்ற ஸ்ருதிக்கான ஒரு தீர்வுடன்தான் உன்னிடம் பேசுகிறேன். நான் அவளுக்கென அனுப்பிய ஒரு கருவியில் சில தொழில்நுட்ப உச்சங்கள் இருக்கின்றன. அக்கருவியின் பெயர் ‘புத்துணர்ச்சி’. அது இப்போதுதான் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறையில் இருக்கிறது. உலகிலேயே அதை முதன் முதலாகப் பயன்படுத்தும் வெகு சிலரில் நானும் ஒருவன். அதை இறந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும்.
நான் அதிகப்படியாகச் சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டிருந்தது அத்தகைய பயன்பாட்டாளராக இருப்பதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கு முக்கிய பங்கு வகித்தது. எனது உளவியலையும் விபரங்களையும் அதிலிருந்து இந்தக் கருவி மிச்சமில்லாமல் உள்ளீடாக எடுத்துக்கொள்ளும். அதிலிருந்து என் ஆளுமையை அது விரிவு செய்யும்.
மெல்ல ஒரு மெய்நிகர் உலகில் என்னை மீண்டும் படைக்கும். அதிலிருந்து கொண்டு நான் ஒரு சொர்க்கத்தில் இருப்பவனைப் போல இந்த பூமியில் இருக்கும் எனக்கானவர்களிடம் தொடர்புகொள்ள முடியும். வெறும் குரலாகத் தொடர்புகொள்வதைவிடக் கனவுகளின் மூலம் தொடர்புகொள்ள முடிவது இதன் சிறப்பு.
ஸ்ருதி இந்தக் கருவியை அணிந்துகொண்டு மஞ்சள் பொத்தானை அழுத்தியதும் அவள் உறக்கத்தில் நான் நுழைந்துகொண்டு, அவளது தோலில் முடியும் உணர்வு முடிச்சுகளைப் பற்றி அதன் வழியே மழையைக் கயிறெனப் பிடித்து ஏறும் சாகசத்தைச் செய்யும் என் ஆகிருதி.
அதன் மூலம் என் இறப்பை ஸ்ருதி கடந்திடுவாள். அவளுக்கு என் இறப்பைப் பற்றிய அறிவு இருக்கும் போதும்கூட என்னுடைய தினசரி சந்திப்பு அவளை கவலை மறக்கச் செய்யும். அத்தனை மாயப் படைப்பு இந்தக் கருவி.
ஒரு வேளை அவளுக்கு இந்த மெய்நிகர் ஆவியாகிய ஜெஃப்ரியே போதைப் பழக்கம் போலவும் மாறக்கூடும். அத்தகைய நிலை ஏற்பட்டால் அதற்கென ஒரு பாதுகாப்புத் தந்திரமும் இந்தக் கருவியில் பொருத்தப்பட்டுள்ளது. அது சிவப்புப் பொத்தான்.
அவள் என்மேல் – இந்தக் கருவி மேல் – போதை கொள்வதை அறிகிறேன். சிவப்புப் பொத்தானை அவளை நேற்று அழுத்தச் சொல்லி இருக்கிறேன். அது ஒரு வேலை செய்யும், அது ஸ்ருதியிடமிருந்த என்னைப் பற்றிய அத்தனை நினைவுகளையும் தடமின்றி அழித்துவிடும். அவளை என்னைப் பொருத்தவரை தபுலா ரஸாவாக்கிவிடும். அதாவது க்ளீன் ஸ்லேட்.
நான் ஒவ்வொரு முறை அவள் கனவிற்குள் நுழைகையிலும் மெல்ல நான் அவள் நினைவடுக்குகளில் எங்கெல்லாம் ஊடுருவி இருக்கிறேன் என்பதைக் கண்டறியவும் முடிந்தது. அதிலிருந்து தொகுக்கப்பட்ட தரவினைக் கொண்டு என்னை முழுமையாக அழிக்கவும் முடியும். நான் அழிந்ததால் ஏற்படக் கூடிய வெற்றிடங்களில் அவளது நம்பகத் தன்மையைக் குலைக்காத விதத்தில் ஒரு புனைவு சொருகப்பட்டிருக்கும். அதை அவள் வெகு இயல்பாக ஏற்றுக்கொள்வாள்.
நாளை நீ செய்ய வேண்டிய இறுதி உதவி ஒன்றுதான். இந்த உறக்கத்திலிருந்து அவளை எழுப்பிவிடுவது. அவள் நேற்றிரவிலிருந்து அதாவது 15.02.2048 அன்று இரவு பத்து மணியிலிருந்து இந்தக் கடைசிக் கனவிற்குள் நுழைந்திருக்கிறாள். அவளிடமிருந்து எனது மொத்த நினைவுகளும் அழியப்பெற எட்டு மணி நேரங்கள் ஆகும். நாளை காலை சரியாக ஆறு மணிக்கு நீ அவளறைக்குச் சென்று அவளை எழுப்பிச் சற்றே துணை இருந்து அவளைக் கவனிக்க வேண்டும். அவள் விழித்து எழாத பட்சத்தில் ‘புத்துணர்வு’ கருவியை ஷட் டவுன் செய்துவிட்டுப் பின்னர் எழுப்ப வேண்டும். அவள் புதியதொரு ஸ்ருதியாக மாற்றம் அடைந்திருப்பாள். நான் முற்றிலும் விலகி இருப்பேன்.
உன்னிடம் தோழமையே பாராட்டாத தோழன்,
ஜெஃப்ரி.கே
நாள் : 03.08.2048
பி.கு:
ஐந்து மணிக்கே விழித்தாள் தீக்ஷிதா. தன் இருசக்கர வாகனத்தில் விரைந்து சரியாக ஸ்ருதியின் வசிப்பிடத்தை அடைந்து, அவள் அறையைத் திறந்திருந்தாள். மெல்ல இருளை விடியல் விழுங்கிக் கொண்டிருந்தது.
படுக்கை யாருமின்றித் தனித்திருந்தது.
தீக்ஷிதா, “ஸ்ருதி, ஸ்ருதி” என்று தடுமாறிய குரலில் அழைத்தாள்.
அவளிடமிருந்து பதில் இல்லை என்றதும் பதறி, இருக்கும் அத்தனை மூலை முடுக்குகளையும் விடாமல் தேடினாள். காணவில்லை. பால்கனிக்கு முன்னிருக்கும் கதவு திறந்திருந்தது. அது திறந்து கிடந்த நிலையே இவளைப் பனிக்கத்தியால் கிழித்தது போலிருந்தது. கால்கள் வேர்பிடித்தது போலக் கனத்தது. குரல் எழவில்லை. கண்ணீர்த் ததும்பலுடன் ஒரு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு முன் சென்றவள் பால்கனியில் காஃபியுடன் நிற்கும் ஒரு தேவதையைப் போல ஸ்ருதியைப் பார்த்தாள்.
இவளைத் திரும்பிப் பார்த்த ஸ்ருதி, “ஹேய் என்னடி, சூரிய உதயத்துக்கு முன்னாடியே வந்திருக்க, நேற்று போலவே இன்றைக்கும் ஃபிட்னஸ் மையத்திற்குப் போகவேண்டும் என்று அடம் பிடிக்காதே. இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. நான் இரண்டு மணி நேரத்திற்குப் பாடல் கேட்கப் போகிறேன்” என்றாள்.
ஒரு வீரியமான இன்கனவைப் போல அவளை அணைத்துக்கொண்டு அழுகையை அடக்கிக்கொண்டு ததும்பினாள் தீக்ஷிதா.
“இங்க வா, என்னாச்சு” என்று ஆறுதல் சொல்லி அவளை ஸ்ருதி அழைத்து வந்து “யாருக்கும் ஏதும் பிரச்சனையா” என்றவாறே தன் காஃபி கோப்பையை மேசையின் மேல் வைத்தாள். “இரு, உனக்கும் ஒரு காஃபி எடுத்து வருகிறேன்” என்று சொல்லிவிட்டு விரைந்தாள்.
சில்லென்று ஓடிவந்து அந்த அறைக்குள் நுழைந்த மென்காற்றால் அருகிலிருந்த நூலொன்று அம்பு பட்ட புறாவின் இறகினைப் போலப் படபடத்துக் கொண்டது. தீக்ஷிதா எழுந்து அந்நூலில் அடையாளக் குறி வைக்கப்பட்டிருந்த அந்தப் பக்கத்தினைத் திறந்து வாசித்தாள்:
ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்;
நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.
அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.
அவளது கண்ணீர் உலர்ந்திருந்தது.
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…
View Comments
இந்த பெரு முடக்க காலமும், வாழ்வில் பலருக்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்புகள் தந்த ஏமாற்றங்கள், வலிகள், உறவுகள் போன்றவற்றிற்கான ஆகிவிடக் கூடாத இந்த அருமருந்து கருவியின் மீதான ஏக்கங்களை உருவாக்கி விடும் ஆபத்து உள்ள அளவிற்கு மன ஆறுதல் தரும் புனைவு.