நேர்காணல்

நேர்காணல்: எழுத்தாளர் இராம. கண்ணபிரான்

9 நிமிட வாசிப்பு

ஓய்வுபெற்ற ஆசிரியரான இராம. கண்ணபிரான் 1943ஆம் ஆண்டில் பிறந்தவர். தம் பள்ளிப் பருவத்திலேயே எழுதத் தொடங்கிய இவர், சிறுகதைகள், குறுநாவல்கள், கட்டுரைகள் என மூவகை இலக்கியங்களையும் தொடர்ந்து படைத்துவருகிறார். தாய்லாந்தின் தென்கிழக்காசிய எழுத்தாளர் விருதும் (1990), சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகக் கலை மையத்தின் ‘மாண்ட் பிளாங்க்’ இலக்கிய விருதும் (1997), சிங்கப்பூர்த் தேசியக் கலை மன்றத்தின் இலக்கியத்திற்கான கலாச்சாரப் பதக்கமும் (1998) பெற்றுள்ளார்.

ஓவியம்: பச்சைமுத்து தில்லைக்கண்ணு
எழுத்தாளர் இராம. கண்ணபிரானும் மனைவி ஜானகியும்

மண்ணில் விரவிக் கிடக்கும் தானியங்களை மட்டும் எடுத்துக்கொள்ளும் பறவையைப் போல இலக்கியத்திலும் சரி, வாழ்விலும் சரி தன் முன் தென்படும் அனைத்தையும் உள்வாங்கி, அவற்றுள் நேர்மறையானவற்றை மட்டும் கொத்தி எடுத்துச் சேகரித்துக்கொள்ளும் மனிதர். பரந்துபட்ட வாசிப்பு, அனுபவம், அறிவுத் தாகம் — அவரது வீட்டில் திரும்பிய பக்கமெல்லாம் பலதரப்பட்ட புத்தகங்கள், பத்திரிக்கைகள் உட்பட கிட்டத்தட்ட 5000 புத்தகங்கள்! “காலணிகள் வைக்கும் அலமாரி தவிர எல்லா இடங்களிலும் புத்தங்கள்தான்,” என்றார் அவர் மனைவி ஜானகி. “அது என்ன கதை ஜானகி?” என்று கேட்டு முடிப்பதற்குள் சமையல்கட்டில் இருந்து அந்தக் கதையின் தலைப்பு, கதைக்கரு, எப்போது, எங்கே அந்த எழுத்தாளரைச் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள் என்று அடுக்கிக்கொண்டே போவார் அவர். அவர்களைச் சந்திப்பது எப்போதுமே பெரும் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் தரும். நேர்காணலுக்கான கேள்விகளைக் கொடுத்த ஒரு வாரத்திலேயே பதில்களைத் தன் கைப்பட எழுதி அனுப்பி ஆச்சரியத்தில் ஆழ்த்திய கண்ணபிரான் ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றி. நேரில் சந்தித்தபோது, உரையாடலில் உற்சாகமாகக் கலந்துகொண்டு பல அனுபவங்களைப் பகிர்ந்ததோடு மட்டுமல்லாமல், நேர்காணலுக்குத் தேவையான புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்தும் தந்த திருமதி ஜானகி அம்மாவிற்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

பரந்துபட்ட ஆங்கில வாசிப்பும் கொண்ட எழுத்தாளர் கண்ணபிரான் அவர்களுடன், அறிவியல் மற்றும் மிகு புனைவுகள் குறித்தும் அவரது சில இலக்கிய அனுபவங்கள் குறித்தும் உரையாடியபோது…

உங்கள் வாசிப்பில் மனதிற்கு நெருங்கிய அறிவியல் புனைவு எது? ஏன்?

என் வாசிப்பில் மனத்திற்கு நெருங்கிய புனைவு, H.G.Wells எழுதிய The First Men in the Moon என்ற நாவலாகும். இந்த science fiction நாவல் 1901 இல் பரிசுரமானது. இந்நூல் 1961ஆம் ஆண்டு எனக்கு Senior Cambridge O-Level பரிட்சைக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்தது. இந்நாவல் என் மனத்திற்கு நெருக்கமானதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒரு காரணம், என் சிறுவயதிலிருந்தே celestial objects இல் எனக்குப் பிடித்தமானது நிலா. இரண்டாவது காரணம், என் ராபிள்ஸ் பள்ளியின் இலக்கிய ஆசான் திரு.சுப்பையா அவர்கள் இந்நூலை எனக்குக் கற்பித்த அருமையான முறை.

H.G.Wells எழுதிய The Door in the Wall சிறுகதை உங்களைப் பாதித்த கதைகளில் ஒன்றாக ஒரு முறை குறிப்பிட்டீர்கள். அவரின் படைப்புகளைப் பற்றி?

H.G.Wells தம் கதைகளுக்கு அறிவியல் உண்மைகளை அச்சாணியாகப் பயன்படுத்தியிருந்தாலும் மனித உணர்களையே முக்கியப்படுத்திப் போராட்டமாக மோதவிடுவார். The First Men in the Moon என்ற நாவலைத் தவிர, அவர் எழுதிய The Time Machine (1895), The Invisible Man (1897), The War of the Worlds (1898) போன்ற நவீனங்களும் எனக்குப் பிடிக்கும்.

H.G.Wells எழுதியிருக்கும் எண்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப்பற்றி (இவற்றுள் அறிவியல் புனைவுகளும் அடங்கும்) My View of H.G. Wells’ Short Stories என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

நீங்கள் எழுதிய ‘மனக்குகை’ என்கிற அறிவியல் சிறுகதை ஜூன் 1972இல் தமிழ் நேசன் பத்திரிக்கையில் வெளியானது. அறிவியல் புனைவு எழுத முயன்று பார்க்கும் ஆர்வம் எப்படி வந்தது? அந்தக் காலகட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

H.G.Wells எழுதிய எழுத்துகளே என்னை அறிவியல் புனைவில் செலுத்தியது. அக்காலத்தில், அதாவது அறுபது எழுபதுகளில், என்னைக் கவர்ந்த விஞ்ஞானக் கதையாளர்கள் மேலும் இருவர் இருந்தனர் — ராபர்ட் லூயி ஸ்டீவன்சன் (Robert Louis Stevenson) மற்றும் ஜூல்ஸ் வெர்ன் (Jules Verne). ஸ்டீவன்சன் எழுதிய Dr. Jekyll and Mr. Hyde (1886), வெர்ன் எழுதிய A Journey to the Centre of the Earth (1864), Around the World in Eighty Days (1872), Twenty Thousand Leagues under the Sea (1872) முதலிய நாவல்கள் என்னால் மறக்க முடியாதவை.

நான் அறிவியல் புனைவு எழுதத் தொடங்கிய எழுபதுகளில், சிங்கை மலேசிய நாடுகளில் அவ்வகைப் பிரிவில் எழுதியவர்கள் வெகுக்குறைவே. தமிழ்நாட்டில் சுஜாதா எழுதிக்கொண்டிருந்தார். இலங்கையில் ஓரிருவர் முயன்றதாக எனக்கு நினைவு.

நீங்கள் எழுதியவற்றில், உங்களுக்கு அதிக திருப்தி அளித்த மிகைபுனைவு (fantasy) எது?

நான் எழுதியவற்றுள் எனக்கு அதிக நிறைவைத் தந்த ஒரு மிகைப் புனைவு (fantasy) ‘கனவினிலே…’ என்ற சிறுகதை. மூலிகை மருத்துவம், நிறக்கனவுகள், அன்றைய மலாயாவில் போர்த்துகீசியக் காலனியாட்சிக்குப் பிற்பட்ட சுல்தான்கள் முதலியவற்றை fancy imagination பிரிவில் associate செய்து, fantasy imagination பிரிவில் கதைப்பின்னலுக்கு unification-ம், shapes-ம் அமைத்து உருவான புனைவு அது. வழக்கம்போல் அந்தக் கதைக்கும் செய்தி இருந்தது. ‘கனவினிலே…’ கதையின் message மனிதனின் பேராசை.

1988 இல் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து, அயோவா அனைத்துலக இலக்கியப் படைப்பாக்கத் திட்டத்தின் கீழ், அமெரிக்கா சென்று அங்கு மூன்று மாதங்கள் தங்கி ‘பீடம்’ என்னும் குறுநாவலை எழுதிமுடித்தீர்கள். இப்பணிக்காக அயோவா பல்கலைக்கழகம் உங்களுக்கு ‘Honourary Writing Fellow’ விருது அளித்தது. அந்த அனுபவம் குறித்துச் சொல்லுங்கள்.

அங்குப் பல இலக்கிய விஷயங்களைக் கற்றேன். அவற்றுள் முக்கியமானவை, மேல்நாட்டு இஸங்கள் என்ற இலக்கியக் கோட்பாடுகள். பல்கலைக்கழகச் சிறப்பு வகுப்புகளில் The Theories and Principles of Morden Literature குறித்து, ஆங்கிலத்தில் நேரடியாகப் பயின்றேன். தொண்ணூறுகளில் தமிழகச் சிற்றிதழ்களில் மேலைக் கோட்பாடுகளான structuralism, post-structuralism, post-mordernism முதலியன அறிமுகமானபோது, வாசிப்பில் அவை எளிதாகப் புரிந்தன. அமெரிக்காவில் என்னுடைய நூறு நாள் இலக்கியத் தங்கலும் கற்கையுமே அதற்குக் காரணமாகும்.

அயோவா அனைத்துலகப் படைப்பாக்கத் திட்ட சந்திப்பில் இராம. கண்ணபிரான் (வலதுபக்கத்தில் முதல் ஆள்)

நீங்கள் பல எழுத்தாளர்களைச் சந்தித்துள்ளீர்கள். அவர்களில் ஒரு சிலருடனான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறீர்களா? நீங்களும் அகிலனும்?

மலேசியத் தமிழ் எழுத்தாளர்ச் சங்கத்தின் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பெற்ற அகிலன், 1975இல் சிங்கப்பூருக்கும் ஒரு வாரம் வந்தார். அவரைப் பற்றி இரு கட்டுரைகள் எழுதினேன் — அகிலனுடன் சில நாள்கள், அகிலன் வருகை. ஒரு கட்டுரையின் தலைப்பையே என் நூல் ஒன்றுக்குச் சூட்டிப் பெருமையடைந்தேன். நான் தோபாயோ வட்டாரத்தில் குடியிருந்தபோது, ஒரு பகலுணவுக்கு அவர் என் வீட்டுக்கு வருகை புரிந்தார். சிறு பிள்ளைகளாக இருந்த என் மகள் செந்தில் பூங்கொடி, மகன் பால்வண்ணன் ஆகியோரோடு அவர் படம் எடுத்துக்கொண்டார். அப்படம் என் வீட்டு வரவேற்பறையின் சுவரை இன்றைக்கும் அலங்கரிக்கிறது.

சென்னைத் தமிழ்ப் புத்தகாலயம் என் ஐந்து புனைவு நூல்களை வெளியிடப் பரிந்துரைத்தவர் அகிலன். நூல் புகழும், சிங்கைத் தமிழ்ச் சிறுகதை உலகில் நான் ஓர் அடையாளத்தைப் பெறவும் வழிசமைத்த அவரை என் நெஞ்சம் மறவாது.

அக்காலப்பகுதியில், தமிழ் நேசன் தமிழக எழுத்தாளர்களுக்குச் சன்மானம் அளித்து, அவர்களுடைய நாவல்களைத் தன் ஞாயிறுப் பதிப்பில் தொடராக வெளியிட்டுக்கொண்டிருந்தது. அன்றைய தமிழ் நேசன் ஆசிரியர் முருகு சுப்பிரமணியன் அகிலனிடம் ஒரு தொடர்கதையைக் கேட்டபோது, “முதலில் உங்கள் நாட்டு எழுத்தாளர்களின் தொடர்களை வெளியிடுங்கள். பின்னர், நான் எழுதுவேன்,” என்றார்.

அவர் இங்கு வருவதற்கு முன், அவருக்கு அனுப்பப்பெற்ற இம்மண்ணின் படைப்பிலக்கிய நூல்களை எல்லாம் படித்து, அவை குறித்து ஓர் ஆரோக்கியமான கட்டுரையை எழுதி, தமிழ்நாட்டு இதழ் ஒன்றில் அதைப் பிரசுரித்துவிட்டே, அவர் இங்கு வந்தார்.

கலைமகள் நாராயணஸ்வாமி நினைவு நாவல் போட்டிக்கு அனுப்பப்பெற்றிருந்த ப.சிங்காரத்தின் நாவலைப் பரிசுக்குச் சிபாரிசு செய்தவர், போட்டி நீதிபதிகளில் ஒருவராக இருந்த அகிலன். அந்நாவல் கலைமகளில் தொடராக வந்தது.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் எழுத்தாளர்கள் இராம். கண்ணபிரான் மற்றும் நீல பத்மநாபன்

தி.ஜானகிராமனைச் சந்தித்தது எப்போது?

எழுபதுகளின் மத்தியில் தில்லி வானொலித் தமிழ்ப் பகுதியில் பணிபுரிந்த சமயம், அலுவலநிமித்தம் ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற தி.ஜானகிராமன், இந்திய தலைநகர் திரும்பும் வழியில் இரு நாள்கள் சிங்கப்பூர் வந்தார். நா.கோவிந்தசாமியும் நானும் ஒரு பகல் பொழுதை அவருடன் கழித்தோம். கம்பி வண்டியில் செந்தோசா தீவுக்குச் சென்றுவந்தோம்.

கையில் வெற்றிலைச் செல்லத்தை வைத்துக்கொண்டே, இடையிடையே வெற்றிலையை ருசித்தபடி, கர்நாடகப் பாடல்களைத் தம் உதடுகளுக்குள் பாடிக்கொண்டு, தி.ஜானகிராமன் உல்லாச இடங்களைப் பார்வையிட்டார். இசையும் உயிருமாக உலாவந்த ‘மோகமுள்’ பாத்திரங்கள் என் நினைவில் கிளர்ந்தன. ஒரு தடவை பாடலின் இராகத்தை அவரிடம் கேட்டறிந்தேன்.

அவர் எங்களுக்கு எழுதிய கடிதத்தில், “குடியேறிய உங்கள் நாட்டைச் சுவீகரித்துக்கொண்டு, அம்மண்சார்ந்த புனைவுகளை எழுதுங்கள். எழுத்து ஒரு தவம்; திடுமெனப் புஷ்பிப்பது இல்லை; காத்திருந்து காத்திருந்தே உதிக்கும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

தங்கமுனைப் போட்டித் தேர்வுக்காகவும் எழுத்தாளர் வாரத்திற்கும் சிங்கைக்கு வருகை புரிந்த எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, சா.கந்தசாமி மற்றும் ஜெயகாந்தனுடன் உங்களது அனுபவங்கள்?

சிங்கப்பூர்த் தேசியக் கலை மன்றம் நடத்திய முதல் தங்கமுனை விருதுச் சிறுகதைப் போட்டிக்கு, வெளிநாட்டுத் தமிழ் நடுவராக, சுந்தர ராமசாமி அழைக்கப்பட்டார். அவர் ஊடகத்துறையினருக்குக் கொடுத்த நேர்காணல்கள் என்னை மிகவும் கவர்ந்தன. அவை குறித்து பேச்சு எழுந்தபோது, “என்னிடம் உள்ள சிந்தனைக் கருத்துகளை, அவர்கள் தொடுக்கும் பேட்டி வினாக்களுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு பதில்களைக் கூறுவேன். என் பாணியில், சூட்சமம் எதுவும் இல்லை,” என்றார்.

அவரைக் காண அன்றைய இலக்கிய இளைஞர்கள் திரண்டனர். தரமான எழுத்துகளை வாசிப்பதற்கு, அவர் அவர்களிடம் தன் நினைவிலிருந்து படைப்பாளர்களின் பெயர்களைச் சொன்னார்.

இன்னொரு வருடம் சிறுகதைக்கு நீதிபதியாகச் சா.கந்தசாமி வருகை மேற்கொண்டார். அவர் எங்களிடம் கூறிய ஒரு கருத்து: “கதைகளில் இரு மாதிரிகள் உண்டு. ஒரு மாதிரி — கதை அம்சம் மிகுந்த கதைகள். இன்னொரு மாதிரி — கதை அம்சம் குறைந்த கதைகள். கதை அம்சத்தை நீக்கியே நான் என் கதைகளை எழுதுகிறேன்.”

இப்போதுபோல் அந்நாளில் ஆண்டுதோறும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா நடைபெறுவதில்லை. ஈராண்டுக்கு ஒரு முறையே எழுத்தாளர் வாரம் நடைபெறும். அந்நிகழ்வுகளில் பங்குபெறத் தமிழக எழுத்தாளர்கள் வந்துபோனார்கள்.

ஜெயகாந்தன் விஜயம் புரிந்தபோது அவருடைய வாசகர்கள் அலைமோதினர். ஓட்டல் அறையில் நண்பர்களும் நானும் அவரோடு நேரத்தைக் கழித்தோம். ஒரு முன்னிரவில் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, நாட்டார்ப் பாடல்களை உற்சாகமாகப் பாடியபடி, தம் மெத்தைமீது ஏறி நின்று, அவர் ஆடிய நாட்டியக் காட்சி மறக்கவொண்ணாதது. சுதந்திர ஜீவியான ஜெயகாந்தனை எழுத்தாளர் வாரப் பணியாளர்கள் அரசுக் கட்டுத்திட்டத்திற்குள் கொண்டுவர அரும்பாடுபட்டனர்.

நீங்கள் தமிழகம் சென்றபோது எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணனையும் சூடாமணியையும் சந்தித்த அனுபவம் குறித்து?

1983இல் நான் என் குடும்பத்தோடு தமிழ்நாடு சென்றேன். தமிழ்ப் புத்தகாலய உரிமையாளர் திரு.கண முத்தையா அவர்களின் உதவியில் திருமதி ராஜம் கிருஷ்ணனையும், ஆர்.சூடாமணியையும் சந்தித்தேன். என் சகலை தட்சிணாமூர்த்தியும், ‘தீபம்’ துணை ஆசிரியர் எஸ்.திருமாலையும் என்னுடன் வந்தனர்.

ராஜம் கிருஷ்ணன் அத்தருணம் சென்னைப் போரூர் பகுதியில் வசித்தார். நாவல்கள் எழுதுவதற்குமுன் அவர் மேற்கொள்ளும் களப்பணிகள், தகவல்களைத் திரட்டும் முறைமை குறித்து பேச்சு அமைந்தது. ஐம்பதுகளில் கலைமகள் நடத்திய கிழமைப்போட்டியில் ராஜம் கிருஷ்ணன் பரிசு பெற்றதை அவரிடம் நினைவுகூர்ந்தேன். அவர் மிகவும் குழந்தைத்தன்மையுடன் மகிழ்ச்சியாகப் பேசினார். அவர் தம் கைகளால் போட்டுத்தந்த டிகாஷன் காபி அருமையாக இருந்தது. போரூர் மின் நிலையம்வரை வந்து, திரு.கிருஷ்ணன் எங்களை வழியனுப்பினார்.

ஆர்.சூடாமணி அவர்களின் இல்லம் சென்றோம். அவர் தம் படைப்புகளில் குறிக்கும் நாகலிங்க மரம் அவர் வீட்டுவாசல் முன்னே நின்றிருந்தது. ஒரு மணி நேரமே அவர் எங்களுக்கு ஒதுக்கியிருந்தார். ஆனந்த விகடன் அறுபதுகளில் நடத்திய நாடகம் எழுதும் போட்டியில் அவர் பரிசு வென்றதை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். அவர் எழுதியிருக்கும் உளவியல் கதைகளைப் பற்றிப் பேச்சு கிளைவிட்டது. குறித்த நேரத்தையும் தாண்டி எங்கள் உரையாடல் நீண்டது.

2003இல் மீண்டும் நான் மனைவி மக்களோடு தமிழ் மாநிலம் சென்றேன். முன்பழக்கம் இருந்ததால், நான் நேரடியாகவே ராஜம் கிருஷ்ணனையும், ஆர்.சூடாமணியையும் எளிதாகச் சந்திக்க முடிந்தது. அம்முறை சென்னையில் வசிக்கும் என் மைத்துனர் ஞானசம்மந்தான் என்னுடன் வந்தார்.

ராஜம் கிருஷ்ணனின் நிலைமை இரக்கத்தக்கதாய் இருந்தது. தம் கணவரை இழந்து, தன்னிடம் எஞ்சியிருந்த சொத்தையும் அநியாயமாகப் பறிகொடுத்து, ஒரு சின்ன வீட்டில் ஓர் ஆயாள் துணையுடன் வசித்துவந்தார். அவருடைய பேச்சாடல் தெளிவற்று இருந்தது.

ஆர்.சூடாமணி அவர்கள் முன்பு நான் பார்த்தபடியே, அதே உள்ளத்திடத்துடன், காத்திரமான பேச்சும் கொண்டு காணப்பட்டார். அவரோடு மகிழ்வுடன் உரையாடிப் பிரிந்தோம். ஆர்.சூடாமணி தம் இறுதி வாழ்வில், தம் தந்தை தமக்கு விட்டுச்சென்ற சொத்து அனைத்தையும் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் உள்ளிட்ட பல அற நிறுவனங்களுக்குத் தானமாக வழங்கினார் என்பதை நான் சிங்கைக்குத் திரும்பியிருந்த காலத்தில் ஊடகம்வழி அறிந்து, மிகவும் நெகிழ்ந்துபோனேன்.

இருமொழிக் கவிஞர் மற்றும் நாடகாசிரியர் இளங்கோவனின் எழுத்துகள் குறித்து உங்கள் பார்வை?

அதிகார மேல்மட்டத்தினரால் ஒடுக்கப்பட்ட subalterns எனப்படும் விளிம்புநிலை மானுடர்களுக்குத் தம் எழுத்துக்களில் குரல்கொடுப்பவர், நவீனப் படைப்பாளி இளங்கோவன். எவருக்கும் அஞ்சாத, நிதர்சன ஆக்கங்கள் அவருடையவை. Fearless, bold and authentic expressions. அவருடைய முக்கிய நூல்கள் மௌனவதம் (1984) மற்றும் I, Bose (2009).

தொடர்ந்து பல தமிழ் இதழ்களை வாசிப்பவர் என்கிற முறையில், தற்காலத்தில் பலரும் மறந்துபோன முக்கியமான இதழ் என எதைக் குறிப்பிடுவீர்கள்? ஏன்?

தற்காலத்தில் அநேகரால் மறந்துபோன முக்கியமான இதழ் ஒன்றல்ல, மூன்று எனக் குறிப்பிடுவேன். அவையாவன: கந்தாடை நாராயணஸ்வாமி சுப்ரமணியம் என்ற க.நா.சு. நடத்திய ‘இலக்கிய வட்டம்’ (1963-65) என்ற சிற்றிதழ். சி.மணி எம்.ஏ. நடத்திய ‘நடை’ (1968-70) என்ற காலாண்டு இதழ். ச.செந்தில்நாதன் நடத்திய ‘சிகரம்’ (1975-82) என்ற இதழ். இம்மூன்றும் தீவிர வாசிப்பில் புதிய போக்கை உருவாக்கின.

அறிவியல் புனைவு குறித்து நீங்கள் வாசித்த இதழ்களில் நினைவில் நிற்கும் வகையில் ஏதேனும் படைப்புகள், கட்டுரைகள் அல்லது நேர்காணல்கள்?

அறிவியல் புனைவு குறித்து நான் வாசித்த நேர்காணல்கள் Writers at Work: The Paris Review, First Series edited by Malcolm Cowley என்ற நூலில் உள்ளன.

ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளிலும் தொடர்ந்து வாசிப்பவர் என்கிற முறையில், ஒரு படைப்பாளிக்கு இரு மொழி வாசிப்பின் அவசியம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

தமிழ் வாசிப்பும் ஆங்கில வாசிப்பும் படைப்பாளிக்கு அவசியம் தேவை. என் ஆங்கில வாசிப்பு, என் தாய் மொழி வாசிப்பைப் பல சமயங்களில் சிந்தனையில், பார்வையில் மிகவும் கூர்மைப்படுத்தி இருக்கிறது. In thinking and perspectives, my English reading has greatly sharpened and shaped my Tamil literary reading.

தமிழ் இலக்கியத்தில் இன்னும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியவைகளாக எவற்றைச் சொல்வீர்கள்?

பல ஆண்டுகளாய் வளர்ந்துகொண்டிருக்கும் உலகத் தமிழ் இலக்கியங்கள், அதாவது தாயகம் கடந்த தமிழ் இலக்கியங்கள் (Global tamil literatures or Diaspora Tamil writings) இன்னும் ஒழுங்குபட ஆராயப்படாத நிலையில் இருக்கின்றன. இந்த niche பகுதி விரைவில் கவனிக்கப்பட வேண்டும்.

அறிவியல் புனைவை இலக்கியத்தில் இருந்து விலக்கி வைக்கும் பழக்கம் தற்போது உலகளவில் மாறிவருகிறது என்று நினைக்கிறீர்களா?

அறிவியல் புனைவு விலக்கம் என்பது ஒவ்வொரு மொழி இலக்கியத்திற்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்திருக்கிறது. ஆனால் இன்றைய நாளில் அப்படி இல்லை. சூழ்நிலைகள் மாறி அறிவியல் புனைவுகளை ஏற்கும் நல்ல காலம் திகைந்திருக்கிறது. இப்போதைய உலகளாவிய அறிவியல் வளர்ச்சியும் தொழில்நுட்பப் பெருக்கமும் அதற்குக் காரணங்கள் ஆகும்.

உங்கள் வாசிப்பில் மேற்கத்திய நாடுகளின் அறிவியல் புனைவுக்கும் தமிழ் அறிவியல் புனைவுக்கும் ஏதேனும் வேறுபாடுகள் உள்ளனவா?

மேலை உலகில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் கால பகுதியிலேயே ஸ்டீவன்சன், வெர்ன், எச்.ஜி.வெல்ஸ் போன்ற முன்னோடி அறிவியல் புனையாளர்கள் உதித்துவிட்டனர். இருபதாம் நூற்றாண்டின் இருபதுகளில் SF அதாவது science fiction என்று ஒரு தனிவகை genre உருவாகிவிட்டது. இந்தப் பரிணாமம் தமிழில் இல்லை.

கருப்பொருளைப் பொறுத்த வரையில் இரு உலகப் புனைவுகளும் ஒத்துப்போகின்றன. சொல்முறையில் மேற்கு எழுத்தாளர்கள் research செய்து உழைத்து எழுதுவதால் அவர்களுடைய எழுத்துகள் நம்பகமாக இருக்கின்றன. மேலைத் தேசங்களில் அறிவியல் புனைவு வாசகர்களும் viewers-ம் அதிகம். ‘அவதார்’ புனைவு பெற்ற வரவேற்பை இயக்குனர் செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ பெறாதது ஓர் எடுத்துக்காட்டு.

இன்று கனவுருப்புனைவு (fantasy & science fiction) எழுதத் துவங்குபவர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?

இன்று எழுதத் தொடங்குவோர் ஒன்றை நெஞ்சில் இருத்திக்கொள்ள வேண்டும். இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது. புதியவர்கள் தங்கள் புனைவுகளில் அந்த எல்லையற்ற சாத்தியங்களை (endless possibilities) கண்டடைய வேண்டும்.

உங்கள் பார்வையில், இலக்கியமும் அரூபமும்?

இலக்கியமும் அரூபமும் என்று எண்ணுவதைவிட, நுண்கலைகளும் அரூபமும் என்றே எண்ணுகிறேன்.

இசைக்கலை ரூபமும், அரூபமும் உடையது. நவீன ஓவியக்கலை தன்னகத்தே அரூப அம்சங்களை உட்பொதிந்துள்ளது. தமிழில் பக்தி இலக்கியப் பாடல்கள் மெய்ப்பொருளை ரூபனாகவும் அரூபனாகவும் கொண்டாடுகின்றன.

நம் தலையில் உள்ள மூளை, அறிவு சார்ந்த மூளை-மனத்தையும், உணர்ச்சி சார்ந்த இதய-மனத்தையும் கொண்டதாக இருக்கிறது. அதிலுள்ள பில்லியன் கணக்கான neurons இயங்கும்போது நம் விழிப்பிலும் உறக்கத்திலும் உருவ அரூப images-களையே காண்கிறோம்.

எனவே, புனைவில் நாம் அறிதுயில் மேற்கொள்வோம்.


நேர்காணல் தட்டச்சில் உதவிய நண்பர் பாலாஜிக்கு நன்றி.

அரூ குழுவினர் and பச்சமுத்து தில்லைக்கண்ணு and இராம கண்ணபிரான்

View Comments

  • ஆம்..உண்மை ....இன்று எழுதத் தொடங்குவோர் இலக்கியத்திற்குத் தேவைப்படும் படைப்புக் கற்பனை (creative imagination), நனவு மனமும் (conscious mind) நினைவிலி மனமும் (unconscious mind) சார்ந்தது. அது எல்லைகள் (limits, boundaries) அற்றது. புதியவர்கள் தங்கள் புனைவுகளில் அந்த எல்லையற்ற சாத்தியங்களை (endless possibilities) கண்டடைய வேண்டும்.இதை நெஞ்சில் இருத்திக்கொள்ள வேண்டும்.
    ஐயா,கண்ணபிரான் அவர்களுக்கு என் நன்றி.

Share
Published by
அரூ குழுவினர் and பச்சமுத்து தில்லைக்கண்ணு and இராம கண்ணபிரான்

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago