நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத்

36 நிமிட வாசிப்பு

திருவண்ணாமலையை சொந்த ஊராகக் கொண்ட அய்யனார் விஸ்வநாத் கவிதை, சிறுகதை மற்றும் நாவல் எனப் புனைவுத் தளத்திலும் விமர்சனங்கள், சினிமாக் கட்டுரைகள் என அ-புனைவுத் தளத்திலும் எழுதுபவர். மலையாள சினிமா மற்றும் உலகளாவிய மாற்று சினிமாக்களில் இவரது பங்களிப்பு இருக்கிறது. ஒரு தசாம்சத்திற்கும் மேலாக இணையத்தில் தொடர்ந்து எழுதிவரும் அய்யனார் விஸ்வநாத், 2006-ஆம் வருடத்திலிருந்து துபாயில் வசிக்கிறார்.

இவரது சமீபத்திய சிறுகதைத் தொகுப்பான முள்ளம்பன்றிகளின் விடுதி பற்றி எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியது, “கற்பனையின் சாத்தியங்களை விரிவாக்குவதும், இதுவரை நாம் அறிந்திராத உலகங்களுக்குள் நம்மை இட்டுச் செல்லக் கூடிய புதிய பாதைகளை உருவாக்குவதும்தான் இன்றைய எழுத்துலகின் சவால். காட்சி ஊடகங்களில் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. Black Mirror போன்ற உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானப் புனைவில் அமைந்த தொலைக்காட்சித் தொடர்கள் அதற்கு உதாரணம். இந்த narrative புரட்சி தற்காலத்திய எழுத்தில் அவ்வளவாக நடக்கவில்லை என்றே நினைக்கிறேன். அந்த வகையில் முள்ளம்பன்றிகளின் விடுதி தமிழில் ஒரு புதிய திறப்பைச் செய்திருக்கிறது.”

அய்யனார் விஸ்வநாத்தின் படைப்புகளில் அலைந்து திரியும் மனித மனம், அறிவியல் புனைவு, காட்சி ஊடகத்துக்கும் எழுத்துக்குமான உறவு, இலக்கியமும் சுவாரசியமும், கவிதைகள், பரீட்சார்த்த முயற்சிகள், சில வாசகர் கேள்விகள் என நீளுகிறது உரையாடல்.

சிறு வயதிலிருந்தே வாசிக்கத் துவங்கி, பள்ளி நாட்களில் கவிதை கட்டுரை எழுதத் துவங்கிவிட்டீர்கள். உங்கள் படைப்பு முதன் முதலில் பிரசுரமாகி அச்சில் பார்த்த அனுபவத்தைச் சொல்லுங்கள்.

அச்சில் தங்களின் படைப்புகளைக் காண்பது என்பது எழுதுபவர்களின் அடிப்படையான விருப்பமாக இருந்து வருகிறது. எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இதில் பெரிதாய் ஆர்வமில்லை. தொடர்ந்த வாசிப்பின் காரணமாக மேலெழும் எண்ணங்களை வரிவரியாக ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிக் கவிதை என நெக்குரும் மனநிலை பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கும். விதிவிலக்கில்லாமல் நானும் என் பதின்மங்களில் கவிதை போன்ற சிலவற்றை நாட்குறிப்பில் எழுதி வைத்துக்கொள்வேன். அவற்றை என் அந்தரங்க நண்பர்கள், தோழமைகளுக்கு வாசிக்கக் கொடுப்பேன். வருடத்துக்கு இரண்டு மூன்று தடிமனான நாட்குறிப்புகள் வரை அக்கவிதைகளின் எண்ணிக்கை நீளும். வாசிக்கும் நண்பர்கள் பத்திரிகைகளுக்கு அனுப்பச் சொல்வார்கள். வற்புறுத்துவார்கள். நான் அதைச் செய்யவில்லை. எழுத்தை அந்தரங்கமான ஒன்றாகவே பாவித்தேன்.

இருபதுகளில் கடிதம் என் இன்னொரு இலக்கிய வெளிப்பாடாக இருந்தது. முப்பது பக்கங்கள் வரை கொண்ட காதல் கடிதங்களை எழுதிய அனுபவம் உண்டு. நண்பர்களுக்குக் காதல் வந்தால் கடிதங்கள் உபயம் என்னுடையதுதான்.

இருபத்தாறு வயதில் இணையத்தில் வலைப்பூவில் எழுதி ‘பப்ளிஷ்’ செய்ததுதான் எழுத்தின் முதல் வெளிப்பாடு. தொடர்ந்து எழுதிப் பார்த்துக் கவிதை என்கிற வடிவம் கைவசமானதும் என் படைப்புகளைக் கேட்ட பத்திரிகை நண்பர்களுக்குக் கொடுத்தேன். மணல்வீடு போன்ற சிறுபத்திரிகைகளில் என் கவிதைகள் வெளிவந்தன. உயிரெழுத்தில் ஒரு கதை வெளியானது. சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த நாம் சிறுபத்திரிகையில் நண்பர் பாண்டித்துரையுடன் உரையாடியது நேர்காணலாக வெளிவந்தது. பிறகு சிறுபத்திரிகைகளில் எழுதுவதிலேயும் ஆர்வம் காட்டவில்லை. வலைப்பூ எனக்குப் பிடித்த இடமாக இருந்தது. இணையத்தில் எழுதுவதன் மூலம் கிடைத்த வாசகப் பரப்பே போதுமானதாக இருந்ததால் அச்சுப் பத்திரிகைகள் குறித்த கவனமோ தேவையோ எனக்கு இன்றுவரை எழவில்லை.

வலைப்பூவில் முதல் மூன்று வருடங்கள் எழுதித் தீர்த்ததை நண்பர்களே தொகுத்தனர். பவா மற்றும் ஷைலஜா அவர்களின் வழியாக வம்சிப் பதிப்பகத்தில் 2009ஆம் வருடம் மூன்று நூல்கள் வெளிவந்தன. இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஒரே சமயத்தில் வெளிவந்தன. பிறகு எழுதிய குறுநாவல்கள் மற்றும் சினிமாக் கட்டுரைகளை இரண்டு நூல்களாக அடுத்தடுத்த வருடங்களில் வம்சி வெளியிட்டது. நிகழ்திரை நூல் 2013ஆம் வருடம் வெளிவந்தது.

அதற்குப் பிறகு எழுதிய ஓரிதழ்ப்பூவை 2017இல் கிழக்கு வெளியிட்டது. ஓரிதழ்ப்பூ நாவல்தான் பரவலான வாசகக் கவனத்தைப் பெற்றுத் தந்தது. பல புதிய நண்பர்களை அறிமுகம் செய்து கொடுத்தது. சாரு நிவேதிதா இன்று வரைக்குமே ஓரிதழ்ப்பூவைப் புதுப்புது வாசகர்களிடம் கொண்டு சென்றபடியே இருக்கிறார். மிகவும் தன்வயமான, நிறைய தயக்கங்களும் கூச்ச சுபாவமும் கொண்ட என் எழுத்தாளர் என்கிற இருப்பு ஓரிதழ்ப்பூவுக்குப் பிறகு தன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டது.

எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா மற்றும் அய்யனார் விஸ்வநாத்

எழுதுவதோடு எழுதுபவனின் வேலை முடிந்து போகிறது போன்ற சென்ற தலைமுறைக் கருத்தாக்கங்களை விட்டு மெதுவாய் வெளியே வந்தேன். இந்தப் பரபரப்பான வாழ்வில் மாறிக்கொண்டே இருக்கும் எல்லாவற்றையும் போல எழுத்து சார்ந்த என் அணுகுமுறையையும் சரிபார்த்துக் கொண்டேன். எழுதியதை வாசகரிடம் கொண்டு சேர்க்கும் வேலையையும் எழுதுபவர் மேற்கொள்ள வேண்டிய காலம் இது என்கிற புரிதல்கள் வந்தன.

நூலின் வடிவாக்கம், அட்டை, பிழையில்லாத உள்ளடக்கம் போன்றவற்றில் இன்னும் கவனம் செலுத்தினேன். 2018இல் பழி நாவலும் கிழக்கு வெளியீடாக வந்து இன்னொரு வாசகப் பரப்பை அறிமுகம் செய்தது. முத்தாய்ப்பாக ஜீரோ டிகிரியின் எழுத்துப் பிரசுரம் வழியாக வெளிவந்த ஹிப்பி எல்லாக் கொண்டாட்டங்களையும் கொண்டு வந்து சேர்த்தது. அடுத்தடுத்து தனியறை மீன்களும் முள்ளம்பன்றிகளின் விடுதியும் எழுத்துப் பிரசுரமே வெளியிட்டிருக்கிறது. இன்னும் எழுத வேண்டியவை சொற்களாக என் உலகத்தில் மிதந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் படைப்புகளாக்கும் உத்வேகமும் உற்சாகமும் பொறுப்பும் கடந்த மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகி இருக்கிறது.

சமூகக் கட்டமைப்புகளை மீறி உணர்வுகள் வெற்றி பெறுவதை உங்கள் எழுத்து கதையோட்டத்தினூடே இயல்பாய்க் காட்டுகிறது. இதுபோன்று கட்டமைப்புகளை உடைத்து எழுதும்போது ஒருவிதப் புரட்சி தொனி ஒலிக்கும் வாய்ப்புள்ளது. இதை எவ்வாறு கையாள்கிறீர்கள்?

மனித உயிரும் மற்ற உயிரினங்களைப் போலவே கட்டமைப்புகளில் வாழ்வதை விரும்பாது. நாம் ஒவ்வொருவரும் அடிப்படையில் சுதந்திரமானவர்கள் மற்றும் தனியானவர்கள். சமூகம் என்கிற இந்த அமைப்பு கடவுள், மதம், ஒழுக்கம், குடும்பம், கடமை, அதிகாரம், கீழ்படிதல் என இன்னும் பலவிதமான பெயர்களில் நம்மை, நம் உணர்வுகளை முடக்கி வைத்திருக்கிறது. நமக்கு வழங்கப்படும் கல்வி, நாம் வாழும் வாழ்வு, ஏன் நம்முடைய இறப்பு உட்பட அனைத்துமே பிறரால் வடிவமைக்கப்பட்டதுதான். இன்னும் சுலபமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்தச் சமூகம் என்கிற அமைப்பு ஒரு மாபெரும் விலங்குக் காட்சி சாலையாக மாறிவிட்டிருக்கிறது அதில் நாம் அனைவரும் சாதுவான பிராணிகளாக, சொன்னதைக் கேட்டு நடந்து கொள்ளும் எளிய மிருகங்களாக இருக்கப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். மீறினால் கடுமையான தண்டனைகள் காத்திருக்கின்றன. வாழ்வு நம்மை உதறித் தள்ளிவிடும். எல்லோராலும் கைவிடப்படுவோம். இந்தப் பயத்தால் சமூகம் போட்டுக் கொடுத்த சாலையில் வரிசைமுறைகூட மாறாது நடந்துபோய், வயதாகி அல்லது நோய் வந்து செத்துப்போகிறோம். மேலும் இந்த அமைப்பு நமக்குச் சில கோமாளித்தனங்களையும் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதை நாம் திறம்படச் செய்து நம்மை நாமே மகிழ்வித்துக் கொண்டும் மற்ற உயிர்களுக்கான காட்சிப் பொருளாகவும் இருக்கிறோம்.

இந்தக் கோமாளித்தனங்களை வாழ்வின் நிமித்தம் நானும் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் என் படைப்புகள் இதைச் செய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன். என் எழுத்து என் பிழைப்புக்கானதில்லை என்பதால் அதில் முழுச் சுதந்திரமாக இயங்க முடிகிறது. என் கதை மாந்தர்கள் இயல்பாக இருக்கிறார்கள். உணர்வுகளும் அகமனமும் சொல்லும் வழியில் நடக்கிறார்கள். அதில் அவர்கள் வெற்றியை அல்லது இலக்கை அடைகிறார்களா என்பது முக்கியமில்லை. மிகச் சுதந்திரமான இருப்புதான் முக்கியமானது பரவசமானது. புனைவிலாவது அது இருக்கட்டுமே என்பதுதான் என் நிலைப்பாடு. இதில் புரட்சி அல்லது மீறல் என எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. மனித இயல்பே அதுதானே என்கிறேன்.

அலைந்து திரியும் மனித மனம் உங்கள் படைப்புகளின் ஓர் அம்சமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஓரிதழ்ப்பூ நாவலில் திருவண்ணாமலையைச் சுற்றிவரும் சித்தர்களைப் போல், கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் அகவெளியில் அலைந்து திரிவதாகத் தோன்றும். இந்த அலைந்து திரிதலைப் பற்றி?

அலைந்து திரிதல் என்கிற சொல்லே மிக வசீகரமானது. நம்மில் பெரும்பான்மையானோருக்கு இந்தக் கிறுக்கு இருக்கும். குழந்தைகளின் தட்டாமலை விளையாட்டில் இருந்து சூஃபி தியானமான Whirling வரைக்குமாய் நம்முடைய மனதையும் உடலையும் சுழற்றிப் பார்ப்பது ஒரு பரவசமான நிலைக்குக் குழந்தையையும் ஞானியையும் கூட்டிச் செல்லும். எப்போதுமே புதிரான மனதின் இன்னொரு ரகசிய அடுக்கை இந்த அலைந்து திரியும் பழக்கத்தின் வழியாய்க் குறைந்தபட்சம் எட்டியாவது பார்த்துவிட முடியும் என நினைக்கிறேன்.

வாழ்வு ஒரே நேர்கோட்டில் இருப்பது மிகவும் அலுப்பானது. ஒரு நாடோடிதான் மிகச் சிறந்த வாழ்வை வாழ்கிறான் என்பது என் அனுமானம். நாடோடியாக வாழ இயலாமல் போனவர்கள் நாடோடி மனதைக் கொண்டு திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் தினசரிகளின் நெருக்கடி வாழ்வில் தங்களைத் தொலைத்தவர்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மனதளவில் அலைந்து திரிவது மட்டும்தான்.

ஓரிதழ்ப்பூவின் ரவியும் அகத்திய மாமுனியும் பழியின் அய்யனாரும் குணாவும் ஹிப்பியின் நாயகனும் இந்த வகைமையில் வருபவர்கள்தாம் என்று இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில்தாம் புலப்படுகிறது. எழுதும் மனம் இயல்பாகவே தன்னுடைய கதைகளில் அதன் ஆழமான விருப்பத்தை ஒளித்து வைக்கிறது போல, நல்ல வாசகர்கள் அவற்றைக் கண்டுபிடித்து எழுதுபவனுக்குச் சொல்வதுதான் மிகச் சிறந்த வாசிப்பு. அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள்.

என்னுடைய இருபதுகளில் நிஜமான நாடோடியாக இருந்தேன். தன்னிச்சையான மனம், ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருக்க முடியாமை, எங்கும் எதிலேயும் பொருந்த முடியாமை போன்ற மனத் தடுமாற்றங்களுக்கான பதில்களை ஓஷோவை வாசிப்பதின் வழியாய்ப் பெற்றுக்கொண்டேன். தனித்தன்மை, சுதந்திரம், இருப்பு போன்ற கருத்தாக்கங்களின் மீது புது ஒளியை ஒஷோவின் உரைகள் பாய்ச்சின. பயணங்களின் வழியாய், வாசிப்பின் வழியாய் என் எழுதும் மனம் தன்னைக் கண்டுகொண்டது. திளைப்பு, பரவசம் போன்ற சொற்களுக்கான ஆழமான உயிர்ப்பைக் கண்டடைந்து அதிலேயே ஊறிக்கிடந்த நாட்களாக அவை இருந்தன. பின்பு எல்லாம் உதறி தினசரியில், குடும்ப வாழ்வில், வழமையானதொரு வாழ்க்கை முறையை மனம் தேர்ந்தெடுத்துக்கொண்டது. இது எப்படி நடந்தது என்பது இன்னமும் புதிராகத்தான் இருக்கிறது.

பாதுகாப்பான இந்த வாழ்வு தரும் அனைத்து மகிழ்வுகளையும் அனுபவித்தாலும் முன்பொரு காலத்தில் அலைந்து திரிந்த மனதின் ஏக்கம் இயலாமையாக மேலெழும். இந்த ஏக்கங்களைத்தான் என் புனைவுகளின் வழியாய் நிரப்பிக்கொள்கிறேன். இந்தப் புரிதல் இந்த நொடியில் கிடைத்ததுதான். எழுதும்போது இப்படி ஒரு தயாரித்தல்களோடு எழுதுவதில்லை. அது தானாய் நிகழும் ஒன்று. என் எழுத்து முழுக்கவே அகமனதின் செயல்பாடு மட்டும்தான். மேலும் இந்த அகமனம் என்பது புதிர் நிரம்பிய ஒரு வெளி. அது எப்போது எப்படி வெளிப்படுகிறது என்பதை எவராலும் யூகிக்க முடியாது.

வலைப்பூக்கள் கோலோச்சியக் காலத்திலிருந்து எழுதிவருகிறீர்கள். தற்போதுள்ள Facebook எழுத்துச் சூழலுக்கும் முன்பிருந்த வலைப்பூ சூழலுக்கும் முக்கியமான வித்தியாசம் என்ன? தொழில்நுட்ப மாற்றங்கள் உங்கள் எழுத்தை எந்த அளவிற்குப் பாதித்திருக்கின்றன?

வலைப்பூக்கள் கோலோச்சிய காலத்தை தனிப்பட்ட வகையில் எனக்கு முக்கியமான காலமாகக் கருதுகிறேன். என் வாசிப்பின் எல்லைகளை விரித்துக்கொண்ட காலகட்டம் அது. உடன் உலக சினிமாக்களையும் பெருமளவு பார்த்தேன். உலகெங்கும் இருக்கும் ஒரே அலைவரிசை கொண்ட நண்பர்களின் அறிமுகமும் அன்பும் கிடைத்தது. சித்தாந்தங்கள், அரசியல், தத்துவம், அயல் இலக்கியம், சினிமா போன்ற பல விஷயங்களைக் கற்கவும் உரையாடவும் விவாதிக்கவும் முரண்படவும் சண்டையிட்டுக் கொள்ளவும் வலைப்பூக்கள் தளம் அமைத்துக் கொடுத்தன. இன்று எழுதுபவனாக இருக்க மிக அடிப்படையான காரணம் வலைப்பூக்கள்தாம். நான் மட்டுமல்ல, இன்று தமிழ்ப் பத்திரிகைகளில் எழுதும் பலரும் வலைப்பூக்களில் எழுதக் கற்றுக் கொண்டவர்கள்தாம். அடுத்ததாய் நிகழ்ந்த சமூக வலைத்தளங்களின் வருகையால் இணையப் பயன்பாடு அதிகரித்தது. தமிழில் எழுதுவது இயல்பான ஒன்றாக மாறிப் போனது. தமிழ் இணையத்தின் வீச்சு எல்லா தரப்பு மனிதர்களையும் சென்றடைந்தது. ஆனால் பேஸ்புக்கும் ட்விட்டரும் வாட்சப்பும் மனிதர்களை இணைத்த அளவிற்கு நேரத்தைச் செறிவாக்க உதவவில்லை.

சமூக வலைத்தளங்கள் தமிழ்சினிமா குறித்து சண்டையிட்டுக்கொள்ளும் இடமாக, இலக்கிய வம்புகளைப் பேசும் இடமாக, அரசியல் கட்சித் தொண்டர்கள் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக்கொள்ளும் இடமாகத் தமிழர்களின் பயன்பாட்டில் இருக்கிறது. நாள் முழுக்க சமூக வலைத்தளங்களில் கிடந்து உழன்று – நட்பு, அன்பு, காதல், திருமணத்திற்கு வெளியிலான உறவு எனப் பல்வேறு சுழல்களில் சிக்கிக் காணாமல் போன என் பல நண்பர்களை அறிவேன். இந்த அலையில் சிக்கிக் காணாமல் போனவர்களில் பெண்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். சமூக வலைத்தளங்கள் வழியாகத் தங்களுக்கான சிறப்பான அடையாளத்தை உருவாக்கிக்கொண்ட நபர்களையும் பார்க்கிறேன். இந்த வகைமையிலும் பெண்களே முதன்மை வகிக்கிறார்கள்.

எழுத்தாளர்களைப் பொறுத்தமட்டில் வாசகருடன் நேரடியாகத் தொடர்பில் இருப்பதும் தங்களின் படைப்புகளை விளம்பரம் செய்துகொள்ளவும் சமூக வலைத்தளப் பயன்பாடு அத்தியாவசியம்தான். ஆனால் இதிலேயே கிடந்தால் துருப்பிடித்துப் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். படைப்பூக்கம் நிறைந்த பல இளம் எழுத்தாளர்கள் ஃபேஸ்புக்கின் உடனடி கவனம் தரும் போதைக்கு அடிமையாகி நாளையடைவில் காணாமல் போனதையும் பார்த்துக் கொண்டுதாம் இருக்கிறோம். ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணி நேரங்களைச் சமூக வலைத்தளப் பயன்பாட்டிற்குக் கொடுப்பது எல்லா வகையிலும் ஆரோக்கியமானது என நினைக்கிறேன். ஏனெனில் இந்த சமூகவலைத்தள அடிமைத்தனம்தான் மிக நெருங்கிய எதிர்காலத்தில் சூழலியல் சீர்கேட்டிற்குப் பிறகு நமக்கு நேரப்போகும் மிகப் பெரிய அபாயமாக இருக்கப் போகிறது. இதைக் குறித்து உடனடியாக இரண்டு கதைகள் நினைவுக்கு வருகின்றன. ஒன்று ப்ளாக் மிர்ரர் தொடரில் வரும் Nosedive மற்றொன்று Ken Liu எழுதிய Perfect Match எனும் சிறுகதை. இரண்டுமே சமூகவலைத்தளப் பயன்பாட்டின் அபத்தங்களையும் சிக்கல்களையும் மிகச் சிறப்பாக முன் வைத்த படைப்புகள். இதிலிருந்து தப்பிப்பது எளிமையானதுதான். அது நம் விரல் நுனியில்தான் அமர்ந்திருக்கிறது.

தொழில்நுட்ப மாற்றங்கள் என் எழுத்தை இரண்டு விதமாகவும் பாதித்திருக்கின்றன. வாய்ஸ் டைப்பிங் போன்ற வசதிகளை இன்னும் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அவ்வப்போது தோன்றும் எண்ணங்களை உடனடியாகப் பதிவு செய்து வைத்துக்கொள்கிறேன். கூகுல் டாக்குமெண்ட்டின் க்லவுட் வசதிகள் எழுத்தை விட்ட இடத்திலிருந்து உலகின் எந்த பாகத்திலிருந்தும் தொடரும் வாய்ப்புகளைத் தருகின்றன. இன்னொரு பக்கமாக இணையத்தின் காணொளிப் புரட்சியால் வாசிப்பது குறைகிறது. நேரம் காணாமல் போகிறது போன்ற சிக்கல்களையும் கடந்து வர வேண்டியிருக்கிறது.

இலக்கியம் பற்றிய உங்களின் சகல அனுமானங்களையும் உடைத்தெறிந்த படைப்பு எது?

கோபி கிருஷ்ணனின் ஒட்டு மொத்தப் படைப்புகளும் அதுநாள் வரை எனக்கு இருந்த இலக்கியம் குறித்தான அறிதல்களை மாற்றி அமைத்தது. கோபி கிருஷ்ணனின் வாழ்வையும் எழுத்தையும் தனித்தனியே பார்க்க முடியவில்லை. வாழ்வே எழுத்தாகவும் எழுத்தே வாழ்வாகவும் கொண்ட சொற்பமான மனிதர்களுள் கோபி கிருஷ்ணன் முக்கியமானவர். கோபி எனக்கு மிகத் தாமதமாக அறிமுகமானார். 2007ஆம் ஆண்டில்தான் கோபிகிருஷ்ணனின் மொத்த நூல்களையும் வாசித்தேன்.

உண்மையின் மீதிருக்கும் தணியாத தாகம் இவரது எழுத்துகளைத் தேடிப் பிடித்துப் படிக்க வைத்தது. இலக்கிய முலாம், பூச்சு, அழகியல், நடிப்பென எவ்வித அலங்காரங்களுமில்லாத மனித வாழ்வின் நேரடியான நெருக்கடிகளை, மனதின் விநோத நிலைப்பாடுகளை இவரது எழுத்தில் காணலாம். சாமான்ய வாசக மனதோடோ அல்லது நுண்ணரசியலைத் தடம் பிடிக்கத் துணியும் ஆராய்ச்சி மனதோடோ இவரை அணுகினாலும் கிடைப்பது ஒரே சுவையாகத்தான் இருக்கமுடியும். அது உண்மைத்தன்மை அல்லது எழுத்து நேர்மை அல்லது முகத்திலறையும் அப்பட்டம்.

கோபிகிருஷ்ணனின் உள்ளேயிருந்து சில குரல்களும் டேபிள் டென்னிசும் எனக்குப் பிடித்த நாவல்கள். பரீட்சார்த்தப் படைப்புகளிலும் சேர்க்கக் கூடிய தன்மைகளை இரண்டு நாவல்களும் கொண்டிருக்கும். உள்ளேயிருந்து சில குரல்கள் மிகப் புதியமுறையில் எழுதப்பட்ட ஒரு நாவல். மனதின் பல்வேறு நிலைகள் வெறும் தகவல்களாய்ச் சொல்லப்பட்டிருக்கும். முதுநிலை உளவியல் படித்த ரவீந்திரனும் ஸ்டெல்லாவும் மனநோயாளிகளைப் பற்றிய சமூகத்தின் தவறான புரிதல்களை களையும் பொருட்டு ஒரு மனநலக் காப்பகத்தில் சந்தித்த நோயாளிகளின் விவரங்களைப் பதிவு செய்வதுதான் இந்நாவலின் கதை. 59 மன நிலைகள் தனித்தனியாகச் சொல்லப்பட்டிருக்கும். உடன் ஆசிரியர் பார்க்கும் காட்சிகள் என 19 காட்சிகளையும் இன்றும் தொடரும் பழமை என்னும் தலைப்பில் ஆறு தனித்தனிக் குறிப்புகளும், சில செய்திகள் சிந்தனைகள் எனும் தலைப்பில் எட்டு குறிப்புகளும் இந்நாவலில் இடம்பெற்றிருக்கும்.

கோபி இந்நூலைப் படைப்பு என்பதோடு நிறுத்திக்கொள்கிறார். சிறுகதையா, நாவலா, ஆராய்ச்சி நூலா, பல சிறுகதைகளின் தொகுப்பா அல்லது சிலர் சொல்வது போல இலக்கியமே ஆகாமல் நின்றுவிட்ட வெற்றுக் குறிப்புகளா என்பதை வாசிப்போர் முடிவு செய்துகொள்ள வேண்டியதுதான்.

எனக்குக் கோபியின் ஒட்டு மொத்தப் படைப்புகளும் ஒரே நாவலின் வெவ்வேறு பக்கங்கள் என்பதாகத்தான் தோன்றுகிறது.

ஏன் மன வினோதங்களையும் இயல்பாய் அங்கீகரிக்கக்கூடாது? எனக்கேட்கும் கோபி, சுவாதீனம், சுவாதீனமின்மை என்கிற பாகுபாடுகள் அற்ற சமூகத்தை உண்டாக்க உதவுவது தனது இலட்சியக் கனவு என்கிறார். மன நோயாளி, பைத்தியக்காரன் என சக மனிதனை அழைப்பது மிகப்பெரிய வன்முறை. மேலும் அவ்வாறழைக்க யாருக்கும் உரிமையும் இல்லை எனும் அறிதலை நான் கோபியின் வழியாகத்தான் பெற்றுக் கொண்டேன்.

உங்கள் மனதிற்கு நெருக்கமான அறிவியல் புனைவு எது?

நிறைய உள்ளன. சிறுவயதில் காமிக்சுகளாக வாசித்திருக்கும் வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிய கதைகள், அவர்கள் பூமிக்கு வந்து இறங்கும் பறக்கும் தட்டு போன்ற கற்பனைகளில் இருந்து சுஜாதாவின் என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ போன்ற கதைகள் வரை இளம் வாசகனாய் அதிகற்பனைகளில் மூழ்கிக் கிடந்தது உண்டு. என் இனிய இயந்திரா வாசித்து இருபது வருடங்கள் கடந்திருந்தாலும் நிலா கதாபாத்திரமும் ஜீனோ என்கிற நாய்க்குட்டியும் இன்றும் நினைவில் இருக்கின்றன. சமீபமாய் நான் ஒரு அறிவியல் புனைவுக் கதையை எழுதிப் பார்த்தபோது நாயகிக்கு நிலா என்றுதான் பெயர் வைத்தேன்.

ஹெச். ஜி வெல்ஸ் உருவாக்கிய ‘கால யந்திரம்’ பற்றிய கதைகளும் Back to the Future திரைப்பட வரிசைகளும் இயந்திரங்கள் மனித ரோபாட்டுகள் குறித்த அசிமோவ் மற்றும் பிலிப் கே டிக் கின் கதைகளும், விண்வெளியைக் குறித்த ஆர்தர் சி.க்ளார்க்கின் புனைவுகளும் வாசிக்கப் படு சுவாரசியமானவை. ஆனால் இவற்றுக்கு இலக்கியத் தரம் உள்ளதா அல்லது வெறும் பொழுதுபோக்குக் கதைகளாக மட்டும் நின்றுவிடுகின்றனவா என்பது விவாதத்திற்கு உட்படுத்த வேண்டியது.

ஜெயமோகனின் அறிவியல் கதைகளின் தொகுப்பான விசும்பில் – ஐந்தாவது மருந்து, நம்பிக்கையாளன் ஆகிய இரண்டு கதைகளும் எனக்குப் பிடித்தமானவை. இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையான இணைவையும் விலக்கத்தையும் கூறும் கதைகளாக இருக்கும். மேற்கின் அறிவியல் புனைவுக்கான பாவனைகள் ஏதுமற்ற கதைகள் இதனாலேயே விசும்பு தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் முக்கியமானவை. தமிழில் சம காலத்தில் வேறு யாரும் தீர்க்கமாக அறிவியல் புனைவை அணுகியதாய்த் தெரியவில்லை. புது எழுத்தாளர்களிடமிருந்து சமீப வரவாய் விளையாட்டுத்தனமாக எழுதப்பட்ட ஒன்றிரண்டு ஆக்கங்களை வாசித்திருக்கிறேன். ஆனால் மேற்கிலும் ஐரோப்பாவிலும் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. அறிவியல் புனைவுக்குள்ளேயே கனவுருப்புனைவு, ஊகப்புனைவு, ஊழ்புனைவுகளெனப் (ஸ்பெகுலேடிவ், டிஸ்டோபியன், போஸ்ட் அபோகலிப்ஸ்) புனைவின் எல்லாச் சாத்தியங்களையும் எழுத்தாளர்கள் திறந்து வைக்கிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக ஜார்ஜ் ஆர். ஆர். மார்டினின் கனவுருப்புனைவு உலகத்தில் கிட்டத்தட்ட தொலைந்து போனேன் என்றும்கூடச் சொல்லிவிடலாம். கேம் ஆஃப் த்ரோன் வரிசைத் தொடர்களைப் பார்க்க ஆரம்பித்து அதன் நீட்சியாக A Song of Ice and Fire நாவலையும் வாசித்துத் திளைத்தேன்.

சென்ற வருடம் வாசித்ததில் அமெரிக்க வாழ் சீனரான கென் லியூ வின் The Paper Menagerie and Other Stories தொகுப்பு என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று.

தொகுப்பின் தலைப்புக் கதையான பேப்பர் மெனாஜரி முதல் வரியிலேயே உள்ளிழுத்துக்கொண்ட அபாரமான கதை. எளிமையாகவும் ஆழமாகவும் அதே சமயம் புனைவின் மாயத் திகைப்புகளையும் கொண்ட சிறுகதை. இந்தக் கதை வெளியான ஒரே வருடத்தில் அத்தனை சிறந்த விருதுகளையும் வென்றது. கென் லியூ தன் பதினோரு வயதிலிருந்து அமெரிக்காவில் வசிப்பவர். சிறுகதை, நாவல் மற்றும் மொழிபெயர்ப்பு ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்துகிறார். சமகாலத்தின் மிக முக்கியமான அறிவியல் புனைவெழுத்தாளர்.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் நமக்கு வெகு அருகில் உள்ள எதிர்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படப் போகும் நெருக்கடி அல்லது பயங்கரம் குறித்து ஒரு விரிவான பார்வையை முன் வைக்கின்றன. இந்த நிகழப் போகும் அபாயங்கள் குறித்து வாசிக்கையில் திகைப்பாக இருந்தது. இந்நூலை speculative fiction வாசிக்கும் நண்பர்களுக்கு அழுத்தமாகப் பரிந்துரைக்கிறேன்.

கேம் ஆஃப் த்ரோன் தொடர் குறித்தான நிறைய குறிப்புகளையும் பேப்பர் மெனாஜரி கதைகள் குறித்தும் பார்த்த உடன் அல்லது வாசித்த உடன் ஃபேஸ்புக்கிலும் என் வலைப்பூவிலுமாய் சிறு சிறு குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன். அவற்றை விரிவாக எழுத வேண்டும் என்கிற எண்ணம் இப்போது தோன்றுகிறது.

தமிழில் உங்கள் வாசிப்பனுபவத்தில் அறிவியல் புனைவின் தற்கால நிலை என்னவென்று நினைக்கிறீர்கள்?

அறிவியல் புனைவுலகம் சுஜாதா காலத்திலேயே தமிழில் முன்னெடுக்கப்பட்டது. தீவிர இலக்கியத் தளத்திலும் ஜெயமோகன் விசும்பு போன்ற சிறந்த கதைகளை எழுதினார். ஆனால் அதற்குப் பிறகு பெரிய முயற்சிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழில் போதுமான அளவிற்கு இயல்புவாத மற்றும் நவீன இலக்கியங்கள் எழுதப்பட்டுவிட்டன. புதிதாய் எழுத விரும்புவோர் அறிவியல் புனைவுகளை எழுதிப் பார்க்கலாம். எதிர்காலத்தின் கதைகள் என்கிற சொல்லே மிகுந்த பரவசத் தன்மையைத் தருகிறதல்லவா! நம்மவர்கள் போதுமான அறிவியல் அறிவோடு இந்தக் களத்தில் புதுக்கதைகளை எழுதிப் பார்க்கலாம். மேலும் அறிவியல் புனைவு என்கிற களம் தமிழில் இன்னும் ஆரம்பித்த இடத்திலேயே இருப்பதாக நினைக்கிறேன். சரியான புரிதலோடு எழுதப்படும் படைப்புகள் நிச்சயமாக உடனடி வாசகக் கவனத்தைப் பெரும் என நம்புகிறேன்.

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சிக்கும் வெளிவரும் புது எழுத்தாளர்களின் புனைவுகளை மிக ஆர்வமாய் கவனிப்பேன். அவற்றில் பெரும்பாலும் இயல்புவாதக் கதைகளாகக்கூட இருக்காது. அபூர்வமாய் நவீனத்துவத்தின் மொழியையும் கதைகூறலையும் சில படைப்புகள் கொண்டிருக்கும். கதைகள் என்கிற பெயரில் நூற்றுக்கணக்கான பக்கங்களில், “காலையில் எழுந்தேன், காஃபி குடித்தேன், பரோட்டா தின்றேன்,” என்றெல்லாம் திரும்பத் திரும்ப எழுதி வைக்கிறார்கள். வாசிக்கப் பரிதாபமாக இருக்கிறது.

நாம் ஏன் இதே கதைகளை இந்தப் பரப்பில் திரும்பத் திரும்ப உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்கிற சலிப்பு எழுதுபவருக்கு தோன்றினால் மட்டுமே அடுத்த கட்ட நகர்வு சாத்தியப்படும்.

சமீபத்தில் Black Mirror, Bandersnatch போன்ற அறிவியல் புனைவுத் தொடர்களைச் சிலாகித்து எழுதியிருந்தீர்கள். அம்மாதிரியான படைப்புகள் தமிழ் அல்லது இந்தியச் சூழலில் வருவதற்கான சாத்தியங்கள் பற்றி உங்கள் எண்ணம்?

இலக்கியம் திரைப்படம் இரண்டிலும் சாத்தியங்கள் நிறைய உள்ளன.

தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரை பணமோ தொழில் நுட்பமோ அறிவியல் புனைவுத் திரைப்படங்களை உருவாக்கப் பெரிய தடையாய் இருக்கப் போவதில்லை. போதாமை படைப்பாக்கத்தில்தான் இருக்கிறது. கதைகளின் பஞ்சம்தான் உள்ளபடியிருக்கும் சவால். மீண்டும் இலக்கியத்தின் பக்கம்தான் வரவேண்டியிருக்கிறது. கதைகள் இல்லாமல் திரைப்படம் எப்படி எடுப்பது? உதாரணத்திற்கு ப்ளாக் மிர்ரர் தொடரின் முதல் கதையான The National Anthem 2011 இல் வெளிவந்தது. சென்ற வருடம் மே மாதம் ஐந்தாவது சீசனாக 3 கதைகள் வெளிவந்தன. மொத்தம் 22 கதைகள். இதில் ஒரு கதைகூட அலுக்கவில்லை. மிகப் பிரமாதம், பிரமாதம் என்கிற இரண்டு வகைமைக்குள்தான் ப்ளாக் மிரர் தொடரின் கதைகள் இருந்தன.

அறிவியலுக்கும் மனிதனுக்குமான போட்டி பிரபஞ்சத்தின் ரகசியத்தை மனித மூளை கண்டுபிடித்த முதல் நொடியிலிருந்து துவங்குகிறது. அறிவியலோ மனித மூளையின் சாத்தியங்களை அடுத்தடுத்த எல்லைக்குத் தொடர்ந்து நகர்த்திக்கொண்டே இருக்கிறது. இதில் யார் யாரைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதுதான் புதிராக இருந்து வருகிறது.

தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் மானுட வாழ்வைத் தங்களின் கூர்மையான பார்வையின் மூலம், நுண்ணுணர்வின் மூலம் படைப்புகளாக மாற்றும் எழுத்தாளர்கள் எல்லையில்லாத் திறப்புகளைக் கொண்டிருக்கும் அறிவியல் புனைவின் பக்கம் ஏன் வரத் தயங்குகிறார்கள் என்பது புரியவில்லை. ஒருவேளை நம் சூழல் இன்னும் அறிவியல் புனைவைத் தீவிர இலக்கியத்தில் சேர்க்க மறுக்கிறதோ என்கிற சந்தேகங்கள் எழுகின்றன.

தீவிர இலக்கியம் என நாம் நம்பும் அனைத்துப் படைப்புகளும் தரும் அதே உணர்வைத்தான் எனக்கு அறிவியல் புனைவுக் கதைகளும் தருகின்றன. நீலகண்டப் பறவையைத் தேடி நாவல் எனக்குத் தந்த பரவசத்தையும் வியப்பையும் அறிவியல் புனைவுகளும் தருகின்றன.

Black Mirror தொடரின் நான்காவது seasonஇல் வரும் முதல் கதையான USS Callister தந்த வியப்பு இன்னும் இருக்கிறது. இந்தத் தொடரை பார்த்துக் கொண்டிருந்த நாட்களில் வேறொரு உலகத்தில் மிகச் சரியாகச் சொல்லப்போனால் எதிர்காலத்தில் வாழ்வது போன்ற பிரம்மை உருவானது. என் ஒவ்வொரு நொடியும் யாராலோ கண்காணிக்கப்படுகிறது, என் எல்லா நகர்வுகளையும் யாரோ தீர்மானிக்கிறார்கள் என்பன போன்ற கற்பனைகள்கூட என்னைச் சூழ ஆரம்பித்தன. உண்மையில் என் பைத்தியம் முற்றிற்று. கிட்டத்தட்டக் கடவுளைப் போன்றே அறிவியலையும் காண வேண்டும். அறிவியலும் கடவுளும் ஒன்றே என்றெல்லாம் பிதற்ற ஆரம்பித்தேன். Arkangel, Black Museum, White Bear போன்ற கதைகள் எந்த வகையிலும் தீவிர இலக்கியத்திற்கு மாற்றுக் குறைவானதில்லை என்பது என் எண்ணம்.

தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த பரீட்சார்த்தப் படைப்பு எது? ஏன்?

இந்தக் கேள்விக்கு ஒரே ஒரு நூலை மட்டும் பதிலாகச் சொல்வது கடினம். பெரும்பாலான படைப்பாளிகள், “நம்முடைய இந்தப் படைப்பை ஒரு சோதனை முயற்சியாக எழுதிப் பார்க்கலாம்” என்கிற முன் தயாரிப்புகளோடு ஒரு படைப்பை அனுகுவதில்லை. அப்படிச் செய்யவும் முடியாது. காலமும் சூழலும் படைப்பாளிகளின் அறிதலும் ஒரு மொழியின் முன்மாதிரியான படைப்பை எழுதத் தூண்டுகோலாக அமைகின்றன. சாருவின் ஜீரோ டிகிரி அப்படிப்பட்ட ஒரு நாவல். ஜீரோ டிகிரிக்குத் தமிழில் முன்னுதாரணங்கள் கிடையாது. இன்றும்கூட எந்தப் பக்கத்தில் இருந்து வேண்டுமானாலும் வாசிக்க ஆரம்பிக்கலாம். வடிவமல்லாத வடிவம் என்கிற வகையில் ஜீரோ டிகிரி எனக்கு மிகப் பிடித்தமான பரீட்சார்த்தப் படைப்பு.

கோணங்கியின் படைப்புலகத்தையும் இந்தப் பரிசோதனை முயற்சிகளில் ஒன்றாகச் சேர்க்கலாம். மதினிமார்கள் கதைத் தொகுப்பிற்குப் பிறகு கோணங்கியின் உலகம் படிமங்களின் தொடர்ச்சியாக, குறியீடுகளின் வழியாக கண்டடையக் கூடிய மாய உலகமாக மாறிப் போய்விட்டது. கோணங்கி உருவாக்கும் சொற்களின் உலகை, என் கைக்குக் கிடைக்கும் சில படிமங்கள் எனும் தூண்களைத் தடவிப் பார்த்து பூடகமாய்ப் புரிந்துகொள்ள முடிகிறதே தவிர அவரின் உலகம் இன்னும் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது.

ஆழ்மனதின் எண்ண ஓட்டங்களை அப்படியே எழுதிப் பார்த்த நகுலனின் நினைவுப்பாதை, நாய்கள் போன்ற நாவல்களையும் சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணியையும் பரீட்சார்த்தப் படைப்புகள் எனச் சொல்ல முடியும். தி.ஜானகிராமனின் மரப்பசு இந்த வகையில் முக்கியமானதொன்று. பிராமண அமைப்புக்குள்ளேயே இருந்து கொண்டு அதைக் கேள்வி கேட்பதும் அந்த அமைப்பின் ஆதார உணர்வுகளை அசைத்துப் பார்ப்பதும் மிகவும் துணிச்சலானதுதான். கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானுடம் அறுபதுகளில் தன்பாலியலைப் பேசிய நாவல். இதை எழுதத் துணிவது அசாத்தியமானதுதான். மேலும் தஞ்சைப் ப்ரகாஷ், ஜி.நாகராஜனின் ஆக்கங்களையும் பரீட்சார்த்த முயற்சிகளில் சேர்க்க முடியும்.

முன் மாதிரிப் படைப்புகள் தமிழில் அறுபதுகளில் இருந்தே முன்னெடுக்கப்படும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. இந்த முன்மாதிரிகளை உடைத்துக்கொண்டு தனித்தன்மையான ஓர் எழுத்தாளனாக தமிழில் நிலைபெறுவது என்பது மிகவும் சவாலானது.

பெருவாரியான மக்களை சினிமா, Youtube, Netflix சென்றடைவைதன் மூலம், இந்த நூற்றாண்டு VISUAL நூற்றாண்டு எனத் தோன்றுகிறதா? நாவல், குறுநாவல், கவிதையைத்தாண்டி VISUAL கலைஞர்களுடன் கைகோர்த்துக் கலை உருவாக்கும் அவசியம் தற்கால எழுத்தாளர்களுக்கு உள்ளதா?

சினிமா கண்டுபிடிக்கப்பட்ட முதல் நாளிலிருந்தே அது பெருவாரியான மக்களிடம் போய்ச் சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக நம் தமிழ்ச்சூழலில் சகலமும் சினிமாதான். தமிழரின் ரத்தத்தோடு கலந்துவிட்ட ஒன்றாக சினிமா இருப்பதை நம் சூழலின் ஐம்பது வருட அரசியலைக் கவனித்தாலே துலங்கும். ஆகையால் ‘விஷூவல்’ நூற்றாண்டு எனப் புதிதாக எதுவும் நம் சூழலில் உருவாகி வந்துவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது. இணையப் பயன்பாட்டின் அதிகரிப்பும் கணினி மற்றும் அலைபேசி தொழில்நுட்பங்களின் அசுர வளர்ச்சியும் தமிழர்களை நிறைய வீடியோ பார்க்க வைக்கிறது. எனவே சமகாலத்தை வீடியோக்களின் யுகம் எனச் சொல்வது சரியாக இருக்கும். வீடியோக்களைக் காண எந்தத் தனி முயற்சியும் எடுக்க வேண்டியதில்லை. மூளையை அல்லது ஆற்றலை அதிகம் செலவழிக்காது பார்த்துவிட்டு விரல் நுனியில் அடுத்த வீடியோவைக் காண ‘ஸ்க்ரால்’ செய்யலாம். சற்று காட்டமாய் சொல்லப்போனால் வீடியோக்கள் வாழைப்பழச் சோம்பேறிகளைத்தான் உருவாக்குகின்றன.

அறிதல் என்பது ஒருவழிப்பாதை கிடையாது. ஒரு நூலை வாசிப்பது என்பது எழுதுவதற்கு இணையானது. ஓர் எழுத்தாளரின் ஆற்றலுக்கு நிகரான ஆற்றலை வாசகரும் நூல் வாசிப்பு என்கிற செயலால் அதைத் தொடர்கிறார். நாம் பல வருடங்களாக ‘ஆசிரியன் இறந்துவிட்டான்’ போன்ற கருத்தாக்கங்களைப் பேசிவருகிறோம். ஆனால் வீடியோக்களைக் காண்பதில் இப்படி ஒரு சம அறிதல் நிகழ்வதில்லை.

இலக்கியம் திரைப்படமாவதிலோ அல்லது எழுத்தாளர்கள் Visual கலைஞர்களுடன் கைகோர்ப்பதிலோ ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் காணொளியாகத்தான் கலையை உருவாக்க வேண்டும் என்கிற அவசியம் எழுத்தாளர்களுக்குக் கிடையாது என்றுதான் நினைக்கிறேன். எழுத்து ஏற்கனவே கலையாகத்தான் இருக்கிறது. சமகாலத்தில் அதிகம் வீடியோக்கள்தான் பார்க்கிறார்கள், எனவே நீங்கள் எழுதுவதை அதாவது உங்களின் கதையை வீடியோவாகச் சொல்லலாமே எனக் கேட்டால் அதை மறுத்துவிடுவேன். இலக்கியத்தைச் செவி வழியாகப் புகட்டிவிடுவது என்பது இன்னும் இன்னும் மேலோட்டமான ஆட்களை உருவாக்கும். இவ்வளவு சோம்பேறித்தனத்தோடு ஓர் இலக்கியம் அறிந்து கொள்ளப்படுவதற்குப் பதிலாய் இரு தரப்புமே சும்மா இருக்கலாம்.

ஒரு மலையாளத் திரைப்படத்தில் பணி புரிந்திருக்கிறீர்கள். VISUAL ஊடகத்திற்குத் (Youtube, Netflix, சினிமா எதுவாகவும் இருக்கலாம்) தொடர்ந்து எழுதவேண்டும் என்கிற எண்ணம் உள்ளதா?

இப்போதுகூட ஒரு திரைப்பட இயக்குநருடன் இணைந்து ஃபேண்டசியும் அறிவியல் புனைவும் கலந்த ஒரு திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். பழி நாவலையும் மழைக்காலம் நாவலையும் சினிமா, இணையத் தொடர் இரண்டுக்குமே தந்துவிடும்படி சினிமா நண்பர்கள் கேட்டுக்கொண்டுதாம் இருக்கிறார்கள். நான்தான் தள்ளிப்போடுகிறேன். சினிமா இப்போதைக்கு என் கனவு கிடையாது. ஓய்வு நேரத்தில் என் அலைவரிசையோடு ஒத்து வரும் நண்பர்களோடு சேர்ந்து எழுத முடியும். மற்றபடி சினிமாவுக்கு என்று என் நேரத்தையும் வாழ்க்கைச் சூழலையும் மாற்றிக்கொள்ளும் விருப்பம் இப்போதைக்கு இல்லை.

“தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் எல்லாவித சாத்தியங்களும் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டன. ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் கூட மிகுந்து வராத இறுகிய கட்டுமாணங்கள் கொண்ட நவீனச் சிறுகதைகளிலிருந்து, சொல்லாமல் சொல்லிப் போகும் நுண்மக் கதைகள் வரை எல்லாமும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன,” என உங்கள் ‘முள்ளம்பன்றிகளின் விடுதி’ சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளீர்கள். தமிழ் இலக்கியம் அடுத்து பயணிக்க வேண்டிய திசை என்னவென்று நினைக்கிறீர்கள்? பிறமொழி இலக்கியங்களுடன் ஒப்பிடும்போது, தமிழில் இன்னும் என்னென்ன முயற்சிகள் செய்யப்பட வேண்டும்?

தமிழில் சிறுகதை வடிவத்தில் நிறைய பாய்ச்சல்கள் நடந்திருக்கின்றன. புதுமைப்பித்தனில் இருந்து அசோகமித்திரன் வரை பலரும் உலகத்தரமான கதைகளைத் தமிழில் எழுதியிருக்கிறார்கள். அசோகமித்திரனை மிகச் சரியாய் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உலக வாசகர்களிடையே கொண்டு போனால் அவர் ‘ரேமண்ட் கார்வர்’ அளவிற்குப் புகழடைவார் என்பது என் எண்ணம். சமகாலத்தில் எழுதப்படும் சிறுகதைகள், முன்னோடிகள் உருவாக்கி இருக்கும் எல்லைகளுக்கு அருகில்கூடச் செல்வதில்லை. அவை திரும்பத் திரும்ப ஒரே வாழ்வியலை, ஒரே சம்பவங்களைக் கூறுவதுதான் சலிப்பை ஏற்படுத்துகிறது. பேசாப் பொருளைப் பேசத் துணிந்த மரபு நம்முடையது. எனவே தமிழில் அதிகம் எழுதப்பட்டிராத அறிவியல் புனைவுகளை எழுதிப் பார்க்கலாம்.

நாவல்களைப் பொருத்தவரை பிறமொழியோடு ஒப்பிடுகையில் நம்மிடையே ஒருவிதத் தேக்கம் இருப்பதாக உணர்கிறேன். குறிப்பாக கன்னடம், வங்கம் மற்றும் மலையாளத்தில் வெளிவந்த நாவல்களை வாசிக்கும்போது நாம் சற்றுப் பின்தங்கி இருப்பதாக நினைக்கிறேன்.

இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கியம் கன்னடத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது என்பதை அடிக்கடிக் குறிப்பிடுவேன். மாஸ்தி வெங்கடேச அய்யங்கார், எஸ்.எல்.பைரப்பா, யு.ஆர். அனந்தமூர்த்தி, சிவராம காரந்த், குவெம்பு, பி.லங்கேஷ் என மிகச் சிறந்த முன்னோடிகளைக் கொண்ட கன்னட இலக்கியம் அவர்களின் நிலவியலைப் போலவே செழிப்பானது. வங்கத்திலும் மலையாளத்திலும் விரிவும் ஆழமும் கொண்ட படைப்புகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவை இன்றும் முன் மாதிரியாக நின்று கொண்டிருக்கின்றன. தமிழில் நாவல்களை எழுத வருவோர் குறைந்தபட்சம் இந்தியச் செவ்வியல் நாவல்களை வாசித்துவிட்டு எழுத ஆரம்பிப்பது நல்லது. நீலகண்டப் பறவையைத் தேடியையும் அக்னி நதியையும் கங்கைப் பருந்தின் சிறகுகளையும் சிக்கவீர ராஜேந்திரனையும் ஒரு குடும்பம் சிதைகிறதையும் வாசித்துவிட்டு எழுத ஆரம்பிப்பது எழுதுபவர் – வாசிப்பவர் என்கிற இரு தரப்புக்குமே நன்மை பயக்கும்.

எழுத்தாளர் சாரு நிவேதிதாவை ‘கர்மயோகி’ எனச் சொல்லியிருக்கிறீர்கள். உங்களுக்கும் சாருவுக்குமான உறவு பற்றி?

சாருவை பத்து வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் வைத்து சந்தித்தேன். அவருடனான அந்த இரவு உரையாடல் சாருவின் அசலான முகத்தை எனக்கு அறியத் தந்தது. பொதுவெளி உருவாக்கி வைத்திருக்கும் அத்தனை எதிர்மறை விஷயங்களையும் மாற்றி வைத்தது. சாரு குழந்தையைப் போன்றவர். பழகுவதற்கும் உரையாடுவதற்கும் விவாதிப்பதற்கும் இலகுவானவர். உலக இலக்கியம், சினிமா, இசை இன்னும் வானத்துக்குக் கீழ் உள்ள சகலத்தையும் குறித்து ஆழமாகவும் விரிவாகவும் உரையாடும் ஆற்றல் கொண்டவர். அவருடனான இன்னும் ஓர் இரவை சென்னையில் மிஷ்கின் அலுவலகத்தில் பகிர்ந்து கொண்டதுண்டு. அந்த இரவும் எப்போதும் நினைவில் இருக்கும் கொண்டாட்டங்களால் நிரம்பிய இரவு. அதற்குப் பிறகு இரண்டு வருடங்களுக்கு முன்பு வாசகவட்ட நண்பர்களை சந்திப்பதற்கும் ஷார்ஜா புத்தகத் திருவிழாவில் கலந்துகொள்ளவுமாய் சாரு, ஷார்ஜா வந்திருந்தார். வருவதற்கு முன்பு ஓரிதழ்ப்பூ நாவலை வாசித்துவிட்டு வந்தார். ஓரிதழ்ப்பூவுக்கான சரியான அடையாளத்தைப் பொதுவெளியில் உருவாக்கினார். அவரின் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஓரிதழ்ப்பூவை வாசிக்கக் கேட்டுக்கொண்டார். அவர் இங்கு வந்திருந்த ஒரு நாளில் மீண்டும் ஓர் இரவு அமர்வில் ஓரிதழ்ப்பூவின் சகல நுணுக்கங்களையும் மிக விரிவாகப் பேசினார். அவர் பேசப்பேச எனக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது.

கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாகத் தமிழிலக்கியச் சூழலில் இயங்கி வந்தாலும், தமிழின் அத்தனை இலக்கியவாதிகளுடனும் அறிமுகம் இருந்தாலும், நிறைய சினிமாத் தொடர்புகள் இருந்தாலும் பொதுவெளியில் என்னுடைய படைப்புகளைக் குறித்து இவர்கள் யாரும் எழுதியதோ பேசியதோ கிடையாது. ஏதோ ஒரு தயக்கம் தமிழிலக்கியவாதிகளிடையேயும் மூத்த எழுத்தாளர்களிடையேயும் இருந்து வந்து கொண்டிருக்கிறது. எழுத்தைத் தாண்டிய ஏதோ ஒன்றை இந்தச் சமூகம் எதிர்பார்க்கிறது போலும் என நானும் ஒரு புன்னகையால், அழுத்தமான கைக்குலுக்கலால் கடந்துவிடுவேன். சாரு இந்தத் தேக்கத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உடைத்தார். பரவலான வாசகக் கவனத்தை என் படைப்புகள் பெற்றன. நானும் புது உற்சாகம் பெற்றேன். சமீபத்தில் வெளிவந்த ஹிப்பி, தனியறை மீன்கள், முள்ளம்பன்றிகளின் விடுதி என என் அனைத்து படைப்புகளும் சாருவால் வாசிக்கப்பட்டுச் செழுமையடைந்த பின்புதாம் அச்சுக்குச் சென்றன. தனியறை மீன்கள் தொகுப்பின் கவிதைகளை ஒட்டிப் பொதுவெளியில் என்னுடன் ஓர் உரையாடலை நிகழ்த்தினார். இலக்கியச் சந்தையை ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவனை மையத்திற்கு இழுத்து வந்தது சாரு நிவேதிதாதான். எனவேதான் அந்த உரையாடலில் இவ்வாறு கூறியிருந்தேன், “சிதம்பர சுப்பிரமணியனினுக்கு தி.ஜ.ர வைப் போல அய்யனார் விஸ்வநாத்துக்கு சாரு நிவேதிதா. உங்களையும் கர்மயோகி என அழைப்பதுதான் பொருத்தமானது.”

மேலும் சாருவுடன் பழகும் ஒவ்வொருவரும் தங்களை வயதில் மூத்தவர்களாக உணரும் அளவிற்கு அவரின் செயலும் பேச்சும் இருக்கும். ஒவ்வொரு நாளும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும் ‘ஹெடோனிஸ்ட்’ அவர். நான் அவருடன் இருக்கும்போது என்னை மிகப் பழைய ஆளாக, வழக்கமான பழக்கங்களில் சிக்கிக் கொண்டவனாக உணர்ந்து வெட்கின தருணங்கள் பல உண்டு. சென்ற அக்டோபரில் பத்து நாட்கள் சாருவோடு இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்களின் ‘ஹில்டன்’ இரவுகள் என் இலக்கிய வாழ்வின் மகத்தான நாட்கள். நேரமும் மனநிலையும் வாய்க்கும்போது அந்த நாட்களை எழுதுகிறேன்.

உங்கள் கதைகளை எடிட் செய்யும் செயல்முறையைப் பற்றிச் சொல்லுங்கள்.

‘எடிட்டிங்’ என் எழுத்தில் முக்கியமான பங்கை வகிக்கிறது. குறிப்பாக ‘நான்லீனியர் எடிட்டிங்’. எழுதும்போது மனம் செல்லும் திசையில் கதை செல்லும் வழியில் வார்த்தைகளைக் கொட்டிவிடுவேன். பின்பு முறையாக தனித்தனி அத்தியாயங்களாகப் பிரித்து, கலைத்துப்போட்டு, ஓர் இழையின் கண்ணியையும் அடுத்த இழையின் தொடுப்பையும் மிகக் கவனமாக சேர்ப்பது தேவையில்லாதவற்றை வெட்டுவது போன்ற வேலைகள் நடக்கும். இந்த முயற்சிகளில் ஓரிதழ்ப்பூ நாவல் வெற்றிபெற்றது. ஏனெனில் அதன் கதைக் களம் அப்படி இருந்தது. கதை இயங்கும் தளம்தான் கதை கூறல் முறையைத் தேர்வு செய்கிறது. ஒரு மேலோட்டமான கதையைத் தொழில் நுட்பங்களைக் கொண்டு ஒரு போதும் நிரப்ப முடியாது.

ஓரிதழ்ப்பூ நாவலை எழுத நான்கு வருடங்கள் ஆயின. ஒவ்வோர் இழையையும் ஒவ்வொரு காலகட்டத்தில் எழுதி இருந்தேன். மொழியில் நிறைய மாற்றம். கதைக்குத் தொடர்பில்லாத பல விவரிப்புகள் என மொத்த நாவலும் கலைந்து கிடந்தது. எனவே ‘எடிட்டிங்’ தொழில் நுட்பம் மிக முழுமையாய் இந்த நாவலுக்குத் தேவைப்பட்டது. பழியும் ஹிப்பியும் ஒரே மனநிலையில் மிகக் குறுகிய காலகட்டத்தில் எழுதப்பட்டதால் அவற்றுக்கு இந்த ‘எடிட்டிங்’ தேவைப்படவில்லை. ஆகவே ‘எடிட்டிங்’ என்பது நாவலின் தேவையைப் பொறுத்தும் ஆகும்.

ஓரிதழ்ப்பூ நாவலை உங்கள் வலைப்பூவில் தொடராக எழுதினீர்கள். ஒரு நாவலைத் தொடராக வலைப்பூவில் எழுதும் அனுபவம் எப்படி இருந்தது?

ஓரிதழ்ப்பூ மட்டுமல்ல இதுவரை வெளிவந்த என் அனைத்துப் படைப்புகளும் வலையில் எழுதிப் பார்த்ததுதான். இந்த எழுதிப் பார்த்தவை நூல் வடிவம் பெறும்போது எடிட்டிங் வழியாக இன்னொரு பரிமாணத்தை அடைகின்றன. ஓரிதழ்ப்பூ நாவலுக்கு முன்பே பழியைத் தொடராக எழுதினேன். பழிதான் என்னுடைய முதல் நாவல். வலைப்பூவில் பரவலான கவனத்தைப் பெற்றுத் தந்ததும் பழி நாவல்தான். ஒரு காலகட்டத்தில் வன்முறையையும் காமத்தையும் தொடர்ந்து படங்களாக, படைப்புகளாகப் பார்த்தும் வாசித்தும் உருவான மனநிலையில்தான் பழியை எழுதிப் பார்த்தேன். முதல் அத்தியாயம் கீஸ்லோவெஸ்கியின் A Short Film about Killing படத்தின் சாயலில் வந்திருந்தது. புதுவை வாழ்வு எனக்குத் தந்த சில அறிதல்களை இரண்டாவது மூன்றாவது அத்தியாயங்களில் எழுதியாகிவிட்டது. தொடர்ந்து எழுதும் மன நிலையையும் உத்வேகத்தையும் தென் கொரிய இயக்குநரான ‘பார்க் சான் வூக்’ தந்தார்.

பழிவாங்குதலைக் குறித்து வெளிவந்த அவரின் ‘வெஞ்சன்ஸ் trilogy’ ஐ திரும்பத் திரும்பப் பார்த்தேன். பழி மெல்ல உருவாகி வந்திருந்த தளமான வன்முறையையும் காமத்தையும் வெளிப்படையாக எழுதவும் செய்யலாம் என்கிற நம்பிக்கையையும் இந்தப் படங்கள் விதைத்தன.

வலைப்பூவில் தொடர் எழுதுவதன் வசதி இதுதான். எழுதும்போது எழுத்து எந்தத் திசைக்கு செல்கிறதோ அதற்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முடியும். மேலும் பழி போன்ற ஒரு கதை கூறல் மொழியை வெளியிட இன்றும் பத்திரிகைகள் தயாராக இல்லை. ஆனால் வலைப்பூவில் இந்தச் சிக்கல் கிடையாது. அது நமக்கே நமக்கான இடம். எழுதுவது மட்டுமே அங்கு நடக்கும். தொடர் எழுதுவதில் வாசகர்களின் பங்களிப்பும் முக்கியமானது. அவர்களின் தொடர்ந்த உரையாடல்களும் அடுத்த அத்தியாயம் எப்போது போன்ற ஆர்வமும் இன்னும் வேகமாய் நம்மை இயங்கச் செய்யும்.

புதினம், சிறுகதைகள், கவிதைகள் என அனைத்து வடிவங்களிலும் எழுதுகிறீர்கள். உங்கள் மனதிற்கு மிக நெருக்கமானது எது?

இலக்கிய வடிவங்களில் எனக்குப் பிடித்தது கவிதை. மொழி தன்னை கவிதையின் வழியாகவே புதுப்பித்துக்கொள்கிறது. மொழியை ஆழமாகவும் செறிவாகவும் பயன்படுத்தும் கவிஞர்களின் மீது எனக்குப் பொறாமையும் உண்டு. எல்லாக் கவிதை விரும்பிகளையும் போலவே நானும் பல கவிதைகளை மனப்பாடமாகச் சொல்வேன். எதற்கு இருக்கிறதோ இல்லையோ கவிகளுக்கு ஆயுள் உண்டு. ஒரு கவி தன் கவிதைகளைக் குறிப்பிட்ட காலம் மட்டும்தான் எழுத முடியும் என நம்புகிறேன். உக்கிரமும் பித்தும் நெகிழ்வும் உன்மத்தமும் நிரம்பிய ஒரு மனதால் மட்டுமே மறைவான கவிதைகளை எழுத முடியும் என்பது என் நம்பிக்கை. நம் சூழலில் இப்படிப்பட மனநிலையோடு நீண்ட நாட்கள் ஒரு மனிதனால் வாழ முடியாது. நம் சமூகம் கவிகளை ஏறெடுத்தும் பாராத சமூகம். இங்கே ஏதாவது ஒரு புள்ளியில் லெளகீகத்தின் பற்களுக்கு ஒரு கவி தன்னைத் தின்னக் கொடுத்தே ஆகவேண்டும். அப்படி ஒரு சூழல் வரும்போது ஒரு நல்ல கவி, கவிதை எழுதுவதை நிறுத்திக்கொள்வது அனைவருக்கும் நல்லது. நான் அப்படி ஓர் இடத்தில் நிறுத்திக்கொண்டேன்.

சிறுகதைகளும் புனைவும் எழுத நிதானமான மனநிலைதான் தேவை. நினைவில் சுற்றிக் கொண்டிருக்கும் கற்பனை உலகம் வார்த்தைகளாக உருக்கொள்ளும்போது எழுத உட்கார்ந்தால் போதுமானது என்பதால் இப்போதைக்குப் புதினம் எழுதுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். அதிலேயும் குறுநாவல் என்கிற வடிவம்தான் இன்னும் நெருக்கமானதாக இருக்கிறது. குறுநாவலை ஐரோப்பாவில் ‘நாவெலா’ என்கிறார்கள். இதுவே பின்நவீன இலக்கிய வடிவத்தின் முகம் என்றும் அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள். எனக்கும் குறுநாவல் எழுதப் பிடித்திருக்கிறது. அதுவும் ‘நான்லீனியர்’ தன்மை கொண்ட கதைகளையும் அவற்றின் கதை சொல்லும் முறையின் மீதும் தீராத ஈர்ப்பு இருக்கிறது. சிலந்தி வலையைப் பின்னுவது போல ஒரு கதையை இழை இழையாகக் கோர்த்து இறுதியில் ஒரு முடிச்சில் பிரம்மாண்ட வலையாக மாற்றும் செப்பிடு வித்தையை இன்னும் ஆழமாகக் கற்றுத் தேர வேண்டும் என்கிற ஆசையும் உண்டு.

இரண்டாவதாக, குறுநாவலில் இருக்கும் கச்சிதத்தன்மை பெரிய நாவல்களில் கிடைப்பதில்லை. அவை வாசிக்க அலுப்பாக இருக்கின்றன. உண்மையிலேயே ஒரு பெரிய நிலப்பரப்பையோ அல்லது யுகாந்திர வாழ்வையோ எழுத எடுத்துக்கொண்டால் பக்கங்கள் அதிகம் கொண்ட ஒரு தடிமனான நாவலை எழுதலாம். ஆனால் விஷயமே இல்லாமல் வெறும் பக்கங்களுக்காக ஒரு கதையை வளவளவென எழுதுவது என்பது மிகவும் சலிப்பானது. எழுதுவதே சலிப்பென்றால் வாசிப்போருக்கு எப்படி இருக்கும். எனவேதான் நான் நூற்று எழுபது பக்கங்களுக்கும் குறைவாக ஒரு நாவல் இருக்கும்படிப் பார்த்துக்கொள்கிறேன். ஒரு பெரிய காலகட்டத்தை நாவலில் கொண்டு வர விரும்பினாலும் முந்நூறு பக்கங்களுக்கு மேல் எழுத மாட்டேன். மிகப்பெரிய நாவல்களின் காலகட்டம் முடிந்துவிட்டதாகத்தான் நினைக்கிறேன். இதைப் பெருங்கதையாடல்களுக்கு எதிரான சிறுகதையாடல் எனப் புரிந்துகொண்டாலும் பிழையில்லை.

உங்கள் எழுத்தில் சினிமாவின் காட்சி மொழி எந்தளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? சினிமா உங்கள் புனைவிற்கு அளித்த கொடை என்ன?

ஜெயமோகன் இங்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. சொற்கள் மற்றும் காட்சி இவற்றைக் குறித்து எங்களின் பேச்சு நகர்கையில் அவர் சினிமாவுக்கு எழுதுவதைப் பற்றிப் பேசினார். காட்சியைவிடச் சொற்களின் மீதே அவருக்கு விருப்பம் அதிகம் என்பதாகச் சொன்னார். எழுதுபவருக்குச் சொற்கள் மீதிருக்கும் காதல் அத்தியாவசியமானது. ஆனால் எனக்கோ இதில் தலைகீழ். எனக்கு எழுத்து என்பது சொற்களல்ல காட்சிதான். நான் என் கதையைக் காட்சிகளாகக் கற்பனை செய்துதான் சொற்களாக மாற்றுகிறேன். இந்தப் பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் சினிமாவின்மீது எனக்கிருக்கும் பித்தாகத்தான் இருக்க முடியும்.

எழுத்தாளர்கள் ஜெயமோகன் மற்றும் அய்யனார் விஸ்வநாத்

‘ஹிப்பி’ முழுக்கவே காட்சி நாவல்தான். முதன்முதலில் ஹிப்பிக்கு பதினான்கு காட்சிகள்தான் வைத்தேன். ஒரு சினிமாப்படம் போல எழுத்தில் காட்சிப்படுத்துவதுதான் நோக்கமாக இருந்தது. மெல்ல மெல்ல பல வருடங்கள் கழிந்து ‘ஹிப்பி’ இப்போதிருக்கும் வடிவத்தைப் பெற்றது.

இலக்கியத்தை சினிமா போல எழுதுவது சரியான அணுகுமுறையா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படி எழுதுவதன் மூலம் சொல்ல வருவதை நேரடியாகவும் சுவாரசியமாகவும் சொல்ல முடிகிறது. இதுவரைக்கும் என் எழுத்தை வாசித்தவர்கள் ஒரு கருத்தைப் பொதுவாய்ச் சொல்வதுண்டு. புத்தகத்தை எடுத்தால் வாசிக்காமல் கீழே வைக்க முடியவில்லை என்பதுதான் அது. இந்த வேகமான வாசிப்புக்குக் காட்சிகளாக எழுத்து விரிவதுதான் காரணம் என நினைக்கிறேன். ஏனெனில் நானும் காட்சியிலிருந்துதான் சொற்களை எடுக்கிறேன். அது மீண்டும் அங்கேதானே சென்றாக வேண்டும்.

சங்ககாலக் கவிதைகளையும் பக்தி இலக்கியத்தையும் வாசிக்காத சமகாலக் கவிஞர் எதை இழப்பதாக நினைக்கிறீர்கள்?

கவிதை எழுதப்படுவதை விடவும் கவிதையை வேரிலிருந்து வாசித்து அதன் மொத்த ஆன்மாவையும் புரிந்துகொள்வது என்பது முக்கியமானது. மேலும் இத்தகைய வாசகரே கவிதையின் முழுமைக்குக் காரணமாக இருக்கிறார்கள். என் வாசிப்பின் முதல் நிலையில் சங்க இலக்கியக் கவிதைகளே முதன்மையாக இருந்தன. குறுந்தொகையைச் சிலிர்த்துச் சிலிர்த்து வாசித்துக் கிடந்த நாட்கள் அற்புதமானவை. சங்க இலக்கியக் கவிதைகளின் பொருள் தேடி, தரவுகளைக் கண்டுணர்ந்து அதன் கவி வரிகள் உணர்த்தும் வேறோர் அர்த்தத்தை உணரும்போது அடையும் இன்பத்திற்கு நிகராய்ச் சொல்ல வேறெதுவும் இல்லை.

சங்க இலக்கியத்தைத் தொடர்ந்து பக்தி இலக்கியங்களிலும் மனம் கிடந்து உழன்றிருக்கிறது. அபிராமி அந்தாதியும் செளந்தர்ய லஹரியும் ஆண்டாளின் பாசுரங்களும் என் இயல்போடு கலந்துவிட்டவை. பாரதியிலிருந்து தமிழின் நவீன மற்றும் பின் நவீனக் கவிதைகள் வரைக்குமாய்க் கவிதை வாசிப்பு என்பது என் வாழ்வில் ஓர் அங்கம். இவற்றை வாசிக்காத நபர்களின் மீது எனக்கு ஒரு புகாரும் கிடையாது. அது அவர்களின் தேர்வு ஆனால் இதை எதையும் வாசிக்காமல் கவிதை எழுத முயல்வதுதான் ஆபத்தானது. மொழியைக் கற்காமல் அதன் தொன்மைத்தையும் உயரங்களையும் அறியாமல் கவிதை என்கிற பெயரில் எதையாவது கிறுக்கி வைப்பது மிகவும் அபத்தமானதும்கூட.

கவிமனம் என்பதும் கவிதை என்பதும் காலங்களையும் நிலத்தின் எல்லைகளையும் தாண்டியது. கவிதை நிச்சயம் ஓர் அலகிலா வடிவம்தான். அதைச் சரியாக வாசித்து உணர்பவர்களையும் கவிதை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்கிறது. சங்க இலக்கியக் கவிதைகளிலிருந்து சமகால உலகக் கவிதைகள் வரைக்குமான தொடர் வாசிப்பே என் கவிதைகளுக்கான ஆதார வித்து. இந்த வாசிப்பில்லாமல் கவிதை எழுத வருபவர்களை முதலில் கவிதை புறக்கணித்துவிடும்.

இலக்கியத்தில் காமத்தை எழுதுவதில் உள்ள சவால்கள் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்கள் எழுத்தில் அவற்றை எவ்வாறு கையாள்கிறீர்கள்?

காமம் தமிழ் எழுத்துகள் தோன்றிய காலத்திலிருந்து எழுதப்பட்டு வரும் விஷயம்தான் என்றாலும் காலந்தோறும் காமத்தை மிகச் சரியாய் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதற்காக ஓர் எழுத்தாளன் எல்லாப் புறக்கணிப்பையும் தாங்கிக்கொண்டு எழுத வேண்டிய அவசியமும் இருக்கிறது. இந்த வகைமையை எழுதும்போது எதிர்கொள்ளும் உடனடி சவால் எழுதுபவர்கள் மேல் விழும் இழிவான பார்வைதான். அடிப்படைவாதமும் மதவெறியும் தமிழ் இரத்தத்தில் ஊறிப்போய் இருக்கும் இக்காலகட்டத்தில் காமம் தடை செய்யப்பட்ட ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது. காமம் குறித்தான வெளிப்படையான பார்வையை முன் வைக்கும்போது அடிப்படைவாதிகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதுவும் பேஸ்புக் போன்ற தளங்களில் முற்போக்கு முகமூடிகளின் பின்னால் ஒளிந்திருக்கும் மத அடிப்படைவாதிகளின் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டி வரும். பழி நாவலுக்காக இத்தகைய தாக்குதல்களை நானும் எதிர்கொண்டேன். வலைப்பூ காலத்திலிருந்தே சில பூஞ்சை மனங்களின் கோரமுகங்களையும் குத்தல்களையும் எதிர்கொண்டே வந்திருப்பதால் இம்மாதிரித் தாக்குதல்களை என்னால் கடந்து போக முடிந்தது.

இன்னொரு சவால்தான் சிக்கலானது. அது சக எழுத்தாளர்களின் இளக்காரமான ஒற்றை வரி அவதூறுகள். தஞ்சை ப்ரகாஷ் இன்று வரை ஒரு பாலியல் எழுத்தாளர் என்றுதான் பலரால் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த இடக்கைப் புறந்தள்ளல்கள் ஜி.நாகராஜனுக்கும் சாருநிவேதிதாவுக்கும் நேர்ந்தது. சமகால வாசகர்கள் இந்த ஒற்றை வரி அபிப்பிராயங்களைக் கருத்தில் கொள்ளாமல் முழுமையான வாசிப்பின் வழியாக எழுத்துகளைக் கண்டடைய வேண்டும் என விரும்புகிறேன்.

இது எழுதுவதற்குப் பின் வரும் சிக்கல். ஆனால் எழுதும்போது காமத்தைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். உடல் அரசியல், பாலியல் சுதந்திரம், ஆணுடல் பெண்ணுடல் அரசியல்கள், சமூக அழுத்தம், மதங்கள் உருவாக்கிய அழுத்தம், பெண்ணடிமைத்தனம் எனப் பரந்துபட்ட வாசிப்பும் அறிதலும் இல்லாமல் காமத்தை எழுதுவது அபத்தத்தில் கொண்டு போய்விடும். மேலும் ஆபாசத்திற்கும் காமத்திற்குமான வித்தியாசங்களைப் புரிந்துகொள்வதும் அவசியம்.

என் எழுத்துகளில் காமம் இயல்பான ஒன்றாக இருக்க விரும்புகிறேன். அழுகையைப் போல, சிரிப்பைப் போல, கோபத்தைப் போல, மெளனத்தைப் போல இன்னொரு உணர்வு என்பதாகத்தான் சித்தரிக்க விரும்புகிறேன். அதே சமயம் இரு உடல்களின் ஆக்ரோஷமான தழுவலை சும்மா ஒரு வரியில் எழுதிவிட்டுத் தப்பிக்கவும் விரும்புவதில்லை. பழியில் வரும் விஜி-அய்யனார் கூடல் போல, ஓரிதழ்ப்பூவில் வரும் அங்கை-சங்கமேஸ்வரனின் கூடல் பகுதியைப் போல மிக விரிவாகவும் ஆழமாகவும் எழுத விரும்புகிறேன். எழுதுகிறேன்.

நிஜத்தைப்போலவே புனைவிலும் காமத்தை மிகச் சரியாக கையாள்பவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ஆண்களைப் போலக் காமம் குறித்தான வெளிப்படையான உரையாடல்களைக் கண்டு அஞ்சுவதில்லை. மிக இயல்பாக எதிர்கொள்கிறார்கள் என்பதற்குப் பழி நாவலுக்கு வாசகிகளிடையே கிடைத்த வரவேற்பு ஓர் உதாரணம். பெரும்பாலான தமிழ் ஆண்கள் பயந்தாங்கொள்ளிகள். தன் இணையின் முழு உடலைக் காணக்கூட அஞ்சுபவர்கள். பொதுவெளியில் மனைவியின் உள்ளாடைப் பட்டை தற்செயலாய் வெளியில் தெரிந்தாலும் பதறிப்போய் அதைக் கமுக்கமாய் சரிசெய்யும் பூஞ்சை மனம் கொண்டவர்கள். என் எழுத்தின் வழியாக இம்மாதிரி ஆண்களைச் சொஸ்தப்படுத்தினாலே போதும். என் எழுத்து சாபல்யம் அடைந்துவிடும்.

‘தனியறை மீன்கள்’ தொகுப்பில் சாருவுடனான உரையாடலில் “சுவாரஸ்யமாக இருந்தால் அது இலக்கியம் இல்லை” என்ற கருத்தை நீங்கள் இருவரும் விவாதித்தது முக்கியமான ஒன்று. தற்போது உங்கள் வாசிப்பில் தமிழ் இலக்கிய இதழ்களின் சுவாரஸ்யத்தன்மை எவ்வாறு இருக்கிறது?

தமிழ் இலக்கிய இதழ்கள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் எனத் தெரியவில்லை. காலச்சுவடு இதழை மாதா மாதம் வாசிக்கிறேன். முன்பு தடம் வாசித்துக் கொண்டிருந்தேன். தீராநதி, உயிர்மை, உயிரெழுத்து போன்றவற்றைச் சிலகாலம் வாசித்ததுண்டு. மற்றபடி இணைய இதழ்களை அவ்வப்போது வாசிக்கிறேன். எல்லா இதழ்களும் அவற்றின் அரசியலுக்குட்பட்டேதான் இயங்குகின்றன. ஒவ்வோர் இலக்கிய இதழுக்கும் ஒரு குறிப்பிட்ட நிலைய வித்வான்கள் இருப்பார்கள். அவர்கள் வழக்கம்போல் தங்களின் வழக்கமான வாத்தியங்களை இசைப்பார்கள். எப்போதாவது அபூர்வமாய்ச் சில நல்ல கதைகளை, கட்டுரைகளை வாசித்த அனுபவம் கிடைக்கும். அதைத்தான் நானும் சாருவும் சுவாரசியம் என்கிறோம். அது மிக அபூர்வம்தான்.

ஒரு காலச்சுவடு இதழில் சித்துராஜ் பொன்ராஜின் ‘கடல்’ கதையை வாசித்து வியந்தேன். ஒரு கொரியத் திரைப்படம் பார்த்தது போல் இருந்தது. அவரைத் தொடர்பு கொண்டு பாராட்டினேன். சந்திக்க வாய்ப்பு கிடைத்தபோது சந்தித்தேன். இன்னொரு இதழில் மகாஸ்வேதாதேவிக்கு அம்பை எழுதிய குக்கூ என்கிற அஞ்சலிக் கட்டுரை வாசித்து நெகிழ்ந்தேன்.

இப்போதைக்கு யோசித்தால் இவ்வளவுதான் நினைவுக்கு வருகிறது. மற்றபடி சில ஸ்டேண்டர்ட் டெம்ப்ளேட்டில் வரும் ஸ்டேண்டர்ட் அரசியல் கட்டுரைகள் பெரிய அலுப்பைத் தருகின்றன. கவிதைகள் கேட்கவே வேண்டாம். நவீனம் என்கிற வஸ்து தமிழில் தோன்றிய தினத்திலிருந்து இப்படித்தான் கவிதை எழுதுகிறார்கள். மொழிபெயர்ப்புகளின் கோராமை இன்னும் பெரிது. உண்மையிலேயே அலுப்பாக இருக்கிறது. தமிழ் இலக்கிய இதழ்களும், அவற்றில் எழுதுவோர்களும் தங்களின் சொந்த பாவனையிலிருந்து வெளிவந்தால் மட்டுமே இங்கே அசலான இலக்கியம் நிகழச் சாத்தியப்படும். அதற்கு அவர்கள் தாங்களே சுமந்து கொண்டு திரியும் அடையாள அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். அப்படி ஒன்று இங்கே நிகழ வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

தமிழில் மூத்த எழுத்தாளர்களே விமர்சகர்களின் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவேண்டிய சூழல் இருப்பதாகச் சொன்னீர்கள். புதிய விமர்சகர்கள் உருவாக என்ன செய்யலாம்?

தமிழில் விமர்சனக் கலை என்பது இப்போது அருகிவிட்ட ஒன்று. மேலும் விமர்சனங்கள் குழு சார்ந்ததாகவும் தனி நபர் ஆதாயம் சார்ந்ததாகவும் மாறிப் போய்விட்டது. எனவே சாய்வில்லாத விமர்சனங்களை இனிமேல் எதிர்பார்க்க முடியாது. இதைச் சூழலின் குறைபாடு என்பதாகத்தான் புரிந்துகொள்கிறேன். எழுதுபவர்கள் தங்களின் படைப்புகளுக்கான விமர்சன சன்னல்களைத் திறப்பதில்லை. விமர்சிப்பவர்களும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பைப் படைப்புகளின் மீதான விமர்சனம் என்பதாக முன் வைக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் பிரச்சனைகள் இருப்பதால் ஆரோக்கியமான விமர்சனச் சூழல் என்பது தமிழில் உருவாகச் சாத்தியமில்லாமல் இருக்கிறது.

எழுத்தாளர்கள் விமர்சகர்களாக இருக்கத் தேவையில்லை. விமர்சனம் என்பது தனியான துறை. எழுதுபவர்கள் அதையும் சேர்த்து சுமக்கும்போது மிகச் சரியான அல்லது கறாரான விமர்சனங்கள் வருவதில் சுணக்கம் ஏற்படுகிறது.

எழுத்தாளராக இல்லாத முழு விமர்சகராக மட்டும் இயங்க இப்போது யாரும் முன் வருவதில்லை. ஃபேஸ்புக் அனைவரையும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் மாற்றிவிடும் வல்லமை கொண்டிருப்பதால் ஏன் வெறும் விமர்சகராக மட்டும் இருக்க வேண்டும் எனப் பலர் நினைக்கிறார்கள். அதுவே இந்தத் தேக்கத்திற்கான காரணம் என என் நண்பர்கள் கருதுகிறார்கள். ஆனால் நானோ ஃபேஸ்புக்கின் சிக்கல் மட்டுமே இதற்கான காரணமில்லை என்று நினைக்கிறேன்.

விமர்சகர்களை எழுத்தாளர்கள் உட்பட யாரும் விரும்புவதில்லை. யாராலும் விரும்பப்படாத ஒரு நபராக இருக்க எவரும் விரும்பாததால் விமர்சனங்களும் விமர்சகர்களும் உருவாகி வருவதில்லை. அபிப்பிராயங்களே அனைவருக்கும் போதுமானதாக இருக்கிறது. மேலும் இப்போது இலக்கிய விமர்சகர்களைவிட சினிமா விமர்சகர்களுக்கு அதிக வரவேற்பும் புகழும் கிடைக்கிறது. ‘யுடியூப்’ போன்ற தளங்களில் சினிமா விமர்சகர்களுக்கு நிறையப் பணமும் கிடைப்பதால் இந்தத் தன்னலமற்ற துறை மெல்ல அழிந்தே போயிற்று.

சிறுவயதிலேயே காமிக்ஸ் படித்தீர்கள். தற்போதும் காமிக்ஸ் மற்றும் கிராஃபிக் நாவல்கள் வாசிப்பதுண்டா? உங்கள் படைப்பைத் தழுவி கிராபிக் நாவல் உருவாக்கும் எண்ணம் உள்ளதா?

இப்போதும் காமிக்ஸ் படிக்கிறேன். மகன்களுக்கு வாங்கும் நூல்களை நானும் சேர்ந்து வாசிக்கிறேன். உண்மையில் காமிக்ஸ் படிக்க வயது வரம்பே கிடையாது. நான் இன்னமும் காமிக்ஸ் வெறியன்தான். ஒரு காலத்தில் தினத்தந்தியில் நடிகைகள் பேட்டி கொடுக்கும்போது சொல்வார்கள் இல்லையா, “நான் தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டதே தினத்தந்தி வழியாகத்தான்” என்று, அதுபோல நானும் தமிழை வாசிக்க கற்றுக்கொண்டதே காமிக்ஸ்கள் வழியாகத்தான். ஆனால் இது நூறு சதவிகித உண்மை.

என் வீடு புத்தகங்களால் நிரம்பிய வீடு. அண்ணன்கள் இருவரும் நிறைய வாசிப்பார்கள். இரும்புக் கை மாயாவியும் லயன் மற்றும் ஆர்ச்சி காமிக்ஸ்களும் தமிழ்வாணன்களும் சிதறிக் கிடக்கும் வீட்டில்தான் நான் நடந்து வளர்ந்தேன். ஏழு வயதில் இப்போது காலமாய் உறைந்துவிட்ட என் கங்கா அண்ணன் சைக்கிளில் முன்னால் உட்கார்ந்தபடி காமிக்ஸ்களை தேடி திருவண்ணாமலை முழுக்க அலைந்திருக்கிறேன். தாமரைக்குள மேட்டில் பழைய இரும்பு மற்றும் பேப்பர் கடை வைத்திருக்கும் அன்வர் பாய் கடையில் அப்போது ஏராளமான காமிக்ஸ் புத்தகங்களும் ராஜேஷ்குமார், சுபா, பிகேபியின் மாத நாவல்களும் இறைந்து கிடைந்ததைக் கண்டுபிடித்தோம். மூன்று நாட்களுக்கு பதினைந்து பைசா என்கிற கணக்கில் வாடகைக்கு அவற்றை வாங்கி வாசித்துத் தீர்த்தோம். தமிழ்வாணன்கள் நூலகத்தில் அபூர்வமாய்க் கிடைப்பார்கள். காமிக்ஸ்களோ கிடையவே கிடையாது.

டேனிஷ் மிஷன் பள்ளியின் எதிரே இருந்த மாவட்ட மைய நூலகத்தில் பத்து வயதுக்குக் குறைவான சிறுவர்களை அனுமதிக்க மாட்டார்கள். என் அண்ணன் உள்ளே சென்று புத்தகங்களைத் தேட நான் கம்பிகளுக்கு வெளியில் இருந்தபடி சைகையால் அவனிடம் துப்பறியும் நாவல்களை எடுத்து வரச் சொல்வேன். அவனோ நா. பார்த்தசாரதியையும் கல்கியையும் எடுத்து வந்து இதுதான் கிடைத்தது என்பான். நாங்கள் இருவருமாய் வாடகை நூலகங்களில் லயன் காமிக்ஸ்களையும் சுபாவையும் பிகேபியையும் தேடிக் கண்டடைவோம்.

இப்படி ஒரு பின்னணியிலிருந்து வந்த எனக்கு கிராஃபிக் நாவல்களாக என்னுடைய படைப்புகளை மாற்ற கசக்குமா என்ன? ஆனால் கிராஃபிக் நாவல்களைத் தமிழில் உருவாக்க முடியுமா என்பது தெரியவில்லை. நான் முதலில் பார்த்த அல்லது படித்த கிராஃபிக் நாவல் Batman. இதை மிஷ்கின் அலுவலகத்தில் பார்த்து உடனடியாய் கையில் ஏந்தி வாசித்து வியந்தேன். மிஷ்கினின் நந்தலாலாவைப் பார்க்க பவாவுடன் சென்றிருந்தேன். முதல் நாள் ரெமி மார்டின் கொண்டாட்ட இரவுக்குப் பின்பான காலையில் அவர் அலுவலக நூலகத்தில் கண்டுபிடித்ததுதான் இந்த கிராஃபிக் நாவல் என்கிற வடிவம். பிறகு நானே தேடிச் சில பல டாலர்களைக் கொடுத்து வாட்ச்மென் (Watchmen) நாவலை வாங்கி வாசித்தேன். பின்னர் வாட்ச்மென் நாவலைப் படமாகப் பார்க்கும்போது அதே காமிக்ஸ் உணர்வைப் பெற்றதுதான் பெரிய ஆச்சரியமாக இருந்தது.

சமீபமாய்ச் சந்தித்த ஐஐடி விரிவுரையாளரான ஹேம் எனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார். எனவே இப்போதைக்கு கிராஃபிக் நாவல்களைவிட ப்ரெய்லியிலும் ஒலிவடிவிலும் என் நூல்களைக் கொண்டு வருவதுதான் முக்கியமானது என நினைக்கிறேன். அதற்கான வேலைகளிலும் ஈடுபட ஆரம்பித்திருக்கிறேன்.

சென்றாண்டு வாசிப்பில் உங்களுக்கு மிகவும் பிடித்த நூல்?

சென்ற ஆண்டு நிறைய வாசிக்க முடிந்தது. சரவணன் சந்திரன் மற்றும் லக்‌ஷ்மி சரவணக்குமார் படைப்புகளை அதிகம் வாசித்தேன். நிறைய புது எழுத்தாளர்களின் முதல் படைப்புகளைத் தனிப்பட்ட முறையில் வாசிக்க முடிந்தது. ஒரு சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இப்போது முதன்முறையாக எழுத ஆரம்பிக்கும் புதியவர்களின் கதைகளை வாசிக்க நேர்ந்தது. மற்றபடி அமேசான் போட்டியில் கலந்துகொண்ட சில படைப்புகளை வெளியிடும் முன்னதாகவே வாசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வாசிக்கும் நூல்களை அவ்வப்போது இணையத்தில் எழுதி விடுவதால் இந்த இடத்தில் மூன்று நூல்களைக் குறிப்பிட விரும்புகிறேன். ஹாருகி முரகாமியின் Killing Commendatore நாவல் கடந்த வருட வாசிப்பில் முக்கியமானதொன்று.

ஹாரி பாட்டர் வெளிவரும் முதல் நாளுக்காகக் காத்திருந்து வாசிக்கும் பதின்ம மனம் போல ஹாருகி முரகாமியின் இந்த நாவல் அறிவிப்பு வந்த நாளில் இருந்து என் மனமும் துள்ளிக் குதித்தபடிதான் இருந்தது. முரகாமியை வாசிப்பது என்பது நமக்குப் பிடித்தமான கனவை கண்விழித்தபடி காண்பதைப் போன்றது. முரகாமியின் மற்ற நாவல்களை ஒப்பிடுகையில் Killing Commendatore ஒரு மாற்றுக் குறைவுதான் என்றாலும் இந்த நாவலை வாசித்த ஒரு மாதமும் கனவில் மிதப்பதைப் போலத்தான் இருந்தது.

இரண்டாவதாக வங்காளத்தில் சீர்ஷேந்து முகோபாத்யாய அவர்களால் எழுபதுகளில் எழுதப்பட்ட கறையான் நாவலைக் குறிப்பிட வேண்டும். எனக்குப் பிடித்த சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட நாவல் இது. பல வருடங்கள் அச்சில் இல்லாமல் சென்ற வருடம் NBT வழியாக வெளிவந்தது. இந்நாவலை வாசிக்கும்போது ஆதவனை வாசிப்பது போல் இருந்தது. ஆதவனின் மொழியும் அவர் கையாளும் அகச் சிக்கலும், விட்டேத்தி மனமும், ஆழமான உளவியல் பார்வைகளும் நாவல் நெடுக இறைந்து கிடந்தன. சீர்ஷேந்துவின் கறையான் அளவில் மிகச் சிறிய நாவல். அகமனதின் போராட்டங்களைத் துல்லியமாகப் பேச முனைந்த படைப்பு. பல இடங்களில் வியந்தும் கரைந்தும் போனேன். உலகம் முழுக்க அறுபதுகளின் இறுதியில் எழுந்த அவநம்பிக்கையின் கண்ணீர்த் துளியை வங்கத்தில் சீர்ஷேந்து அவர்களின் வழியாகவும் பெற்றுக்கொள்ள முடிந்தது. வேசிமகனே என்கிற ஒரு வசையால் உந்தப்படும் கதையின் நாயகனான ஷ்யாமின் அலைவுகளும் திரிபுகளும் கண்டடைதல்களும் வாழ்வின் மிகப் பெரிய சன்னல்களைத் திறந்து வைப்பவை. கறையான் நாவல் சென்ற வருடத்தை மறக்க முடியாததாக மாற்றியது.

மூன்றாவதாக நிச்சலனம் – அகமத் ஹம்தி தன்பினார் எழுதிய துருக்கி நாவல். சென்ற வருட இறுதியில் நண்பர்களுடன் இஸ்தான்புல் பயணத்துக்கு திட்டமிட்டிருந்தேன். இஸ்தான்புல் என் கனவு நகரம். ஓரான் பாமுக்கின் எழுத்துகள் வழியாகவும் இயக்குநர் நூரி பில்கே சிலானின் திரைப்படங்கள் வழியாகவும் இந்நகரம் எனக்குள் ஊறிக்கிடந்தது. இஸ்தான்புல் செல்வதற்கு முன்பாக நிச்சலனம் நாவலைப் படிக்க விரும்பியிருந்தேன். இஸ்தான்புல்லைப் பற்றி எழுதப்பட்ட நாவல்களில் நிச்சலனமே முதன்மையானது என பாமுக்கே கூறியிருந்ததால் நாவலைப் பயணத்திற்கு முன்பு வாசித்து முடிக்க எண்ணியிருந்தேன். ஆனால் திட்டமிட்டபடி வாசித்து முடிக்க இயலவில்லை. இஸ்தான்புல்லின் வசீகரம், கேள்விப்பட்டதைவிட நேரில் பார்க்க இன்னும் கனவுத் தன்மையைக் கொண்டிருந்தது.

இஸ்தான்புல்லின் வீதிகள் எங்கும் நடந்தே சுற்றியலைந்துவிட்டுக் கூடு திரும்பிய பிறகு சென்ற மாதத்தில்தான் நிச்சலனத்தை வாசித்து முடித்தேன். ஓட்டமன் பேரரசு வீழ்ந்த காலகட்டத்திற்குப் பிறகான கதையை நிச்சலனம் காட்சிப்படுத்துகிறது. இஸ்தான்புல்லின் கலாச்சாரமும், பண்பாடும், மக்களின் வாழ்க்கை முறையும், குறிப்பாக பெண்களின் மிகச் சுதந்திரமான வாழ்வும், கொண்டாட்டமும் நாவலில் பிரதானமாகப் பதிவாகி இருக்கிறது. எப்போதும் இஸ்தான்புல்லின் நினைவிலும், பாஸ்போரஸ் நீரோட்டத்தின் அசைவிலும் இருக்கும்படி இந்த நாவல் வாசிக்கும் நேரங்களில் என்னைப் பார்த்துக்கொண்டது. மொழிபெயர்ப்பு சுமாராகத்தான் இருந்தது என்றாலும் அந்நகரை முழுமையாக உள்வாங்கிய எனக்கு மொழி ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இக்ஸானும், மும்தாஜூம் நூரனும் என்றும் மறக்க இயலாத கதாபாத்திரங்களாக மாறிப்போய்விட்டனர்.

வாசகர் கேள்விகள்

தமிழ்நாட்டிற்கு வெளியிலிருந்து வரும் புலம்பெயர்ப் படைப்புகளுக்கு போதுமான வரவேற்பும் இடமும் தமிழ்ச்சூழலில் இருக்கிறதா?

முதலில் வரவேற்பு என்றால் என்ன என்பதையும் எத்தனை பேர் வாசித்தால் அது வரவேற்பு பெற்ற படைப்பு என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். சதவிகிதத்தில் பார்த்தால் மிகப் பரிதாபமாக இருக்கும் என்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம். இப்போதைக்கு ஒரு படைப்பு ஆயிரம் வாசகர்களைச் சென்றடைந்தால் அல்லது ஆயிரம் புத்தகங்கள் விற்றால் அதை வரவேற்பு பெற்றப் படைப்பு எனக் கருதலாம்.

தமிழ்நாட்டின் உள்ளே இருந்து வரும் படைப்புகளுக்கு இந்த வரவேற்பு இருக்கிறதா என்பதே தெரியவில்லை. வெளியே இருக்கும் நாம் எப்படி வரவேற்பைப் பெற முடியும் என்பதும் தெரியவில்லை. தமிழில் தீவிர இலக்கிய வாசகர்கள் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம். அதில் ஆயிரம் பேர் எழுத்தாளர்கள் அல்லது ஒரு கவிதை நூலாவது வெளியிட்டவர்கள் என்று ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு சொன்னேன். இப்போது இதில் நல்ல மாற்றம் வந்திருக்கிறது. தீவிர வாசகர்கள் இரண்டாயிரம் பேர்தான். ஆனால் எழுத்தாளர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் எனப் பதிப்பகத்தார் சொல்கிறார்கள்.

இந்த ஆயிரத்து ஐநூறு எழுத்தாளர்களில் ஐம்பது குழுக்கள் இருக்கின்றன. ஊர் சார்ந்து, சாதி சார்ந்து, பிரபலத் தன்மை சார்ந்து இப்படி எத்தனையோ சார்ந்து சார்ந்து உள்ள குழுக்கள். இதில் அழகு என்னவென்றால் ஒரு குழுவிலிருப்போர் இன்னொரு குழுவில் இருப்போரைப் பற்றிப் பேசமாட்டார்கள். இதில் எங்கிருந்து பெரிய வரவேற்பைப் புலம்பெயர்ப் படைப்புகள் அல்லது தமிழ் நாட்டுக்கு வெளியில் இருக்கும் படைப்புகள் பெறும் என்பது தெரியவில்லை.

எனக்குத் தெரிந்து ஒரு தீர்வு இருக்கிறது. நம்முடைய படைப்புகள் கவனிக்கப்பட வேண்டுமெனில் நாம்தான் இறங்கி வேலை செய்ய வேண்டும். சரியான விளம்பரங்களின் மூலமாக, சந்தைப்படுத்துதலின் மூலமாக நம்முடைய படைப்புகளை இந்த ஆயிரம் நூல் வகைமையில் சேர்த்துவிட முடியும். இப்படி எழுத வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் வேறுவழியில்லை. வாசகர்களை அவரவர்களின் சமூக வலைத்தளப் புகழிலிருந்தும் வீடியோக்களின் பிடியிலிருந்தும் வெளியேற்றி நம் நூல்களை வாசிக்க வைக்க இவ்வளவையும் செய்ய வேண்டியிருக்கிறது. நாம் ஒதுங்கி இருந்தால் காலமும் ஒதுக்கி வைத்துவிடும். என் பன்னிரெண்டு வருட அஞ்ஞாத வாசம் கற்றுக்கொடுத்த பாடம் இது என்பதால் புதிதாக எழுத வருவோர் பயன்படுத்திப் பார்க்கலாம். ஆனால் இதில் ஒரே ஓர் ஆபத்துதான் இருக்கிறது. உங்கள் நூல்களைச் சந்தைப்படுத்தும்போது அவை குறைந்தபட்சத் தரத்துடனும் ஆழமான உள்ளடக்கத்துடனும் இருக்க வேண்டும். இல்லையென்றால் இந்தக் கொலைவெறி வாசகர் குழாம் கும்மியடித்துவிடும்.

உங்கள் முந்தைய நாவல்களில் அத்தியாயங்களைக் கலைத்துப் போட்டு விளையாடுவீர்கள். சமீபத்திய நாவலான ஹிப்பியில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும், புனைவில் மட்டுமே சாத்தியமாகும் சம்பவங்கள் வரிசையாக நடைபெறுகின்றன. ஆனால் எழுத்து இயல்புவாதத்திலிருந்து விலகாமல் பயணிக்கிறது. இந்த முரணை எப்படிக் கையாள்கிறீர்கள்?

முன்னரே குறிப்பிட்டது போல எழுத்து உத்திகளைக் கதைக்களம்தான் தீர்மானிக்கிறது. ஹிப்பிக்கு நான் லீனியர் கதை கூறல் முறைக்கான தேவை இல்லாமல் இருந்தது. எதையும் வலிந்து திணிப்பது என்பது படைப்பின் ஆதார ஒருங்கமைவைக் கேடாக்கும். நிறைய கதாபாத்திரங்கள் அல்லது ஏராளமான சம்பவங்கள் கொண்ட ஒரு பெரிய நாவலை எழுதும்போது இந்த அத்தியாயங்களைக் கலைத்துப் போடும் விளையாட்டு சரியாக வரும். ஆனால் அப்படி இல்லாமல் ஒரு சிறிய கதைக் களத்தை, நிகழ்வைப் படைப்பாக்கும்போது உத்திகளுக்கான தேவை இல்லாமல் போகிறது.

மிகு புனைவையும் இயல்பான மொழியில் எழுத முடியும் என்பதுதான் என் தரப்பு. தமிழில் அடர்த்தியான இலக்கிய மொழி எனக் கூறப்பட்ட பல படைப்புகளில் சீரான உரைநடை இருக்காது. நிறைய சமஸ்கிருத வார்த்தைகளை இட்டு நிரப்பி, துண்டு துண்டாய், குழப்பமாய் இடைவெளியே விடாமல், பத்தி பத்தியாய் எழுதி வைத்து இதுதான் இலக்கியம் என நிறுவ முயல்வதை நான் மறுக்கிறேன். இவர்களுக்குத் தமிழில் சீராக எழுதப் போதுமான பயிற்சி இல்லை என்கிற முடிவுக்குச் சில நேரங்களில் தள்ளப்படுகிறேன்.

வளமான மொழிநடையைக் கொண்டோருக்கு எழுத்து இயல்பாக வரும். எவ்வளவு பெரிய விஷயத்தையும் எளிமையாக எழுத முடியும். அசோகமித்திரனிலிருந்து ஹாருகி முரகாமி வரைக்குமாய் ஏராளமான மாஸ்டர்களை உதாரணங்களாகச் சொல்ல முடியும். எனவே இயல்புவாத எழுத்தால் மிகுபுனைவை எழுத முடியாது போன்ற முரணான புரிதல்களிலிருந்து வாசகர்கள் வெளியே வர வேண்டும்.

உங்கள் எழுத்தில் காணும் பொது அம்சமாக பால்யத்தைச் சொல்லலாம். எல்லா எழுத்தாளர்களுமே பால்யத்தையும் பதின்பருவத்தையும் எழுதிப் பார்க்கிறார்கள். அவற்றை எழுதுவதின் சுகம் என்ன? திரும்பத் திரும்ப எழுதியும் இன்னமும் மிச்சம் உள்ளதா?

எழுதித் தீராததில் பால்யம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. எழுத வரும் எல்லோரிடமும் இருக்கும் கதைகளில் பால்யம் சார்ந்த நினைவுக் கதைகள் முக்கியமானவை. ‘நாஸ்டாலஜி’ என்ற வகைமையில் வரும் இக்கதைகள் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டன என்ற பிரக்ஞை எழுதும்போது இருந்தாலுமேகூட, இது என்னுடைய கதை என முதலில் முன் எழுந்து வருபவை இவைதாம். எழுதுபவர்கள் இதைக் கவனமாக விலக்கி வைப்பது நல்லதுதான் என்றாலும் என்னிடம் அப்படி ஒரு கறார்தன்மை இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அதையே எழுதிக் கொண்டிருக்கக் கூடாது என்கிற புரிதலும் உண்டு.

பெரும்பாலானவர்களுக்கு அவர்களின் முதல் பதினைந்து வருட வாழ்வுதான் மிக அதிகபட்ச சுதந்திரத்தோடும், கள்ளமின்மையின் தூய்மையோடும் இருக்கிறது. அதற்குப் பிறகு வாழ்வு நெருக்கடிகளையும் சவால்களையும் ஏராளமான குயுக்திகளையும் பிழைப்பு சார்ந்த ஓட்டங்களையும் பரிசளித்துவிடுகிறது. பழைய நினைவுகளில் மூழ்குதல் என்பது மன அளவில் இப்போதைய வாழ்வு தரும் அலைச்சல்களிலிருந்து தற்காலிக விடுதலை உணர்வை அளிக்கிறது. எனவேதாம் அதைத் திரும்பத் திரும்ப அசைபோடுகிறோம் அல்லது எழுதுகிறோம். எழுத்தின் கடைசி எல்லை வரைக்குமே கூட இந்த பால்யம் சார்ந்த நினைவு தொடர்ந்து வரும். எழுதுபவர்கள் தவிர்க்க வேண்டிய அல்லது அளவாகப் பயன்படுத்த வேண்டியதில் பால்யம் முக்கியமானது.

ஆரம்பத்தில் கவிஞராக அறியப்பட்டவர் நீங்கள். கவிஞர்கள் நாவல் எழுத வரும்போது நாவலில் கவித்துவம் நிரம்பியிருக்கும். ஆனால் உங்கள் நாவல்கள் மிக இயல்பான எழுத்து நடையில் அமைந்திருந்தன, திட்டமிட்டே அதை வடிவமைத்தீர்களா?

நாவல் எழுத வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியபோது முதலில் வந்து விழுந்தது கூலிக்குக் கொலை செய்யும் கொலைகாரர்களைக் குறித்து வெளிப்படையாய் ஒரு நாவல் எழுதிப் பார்க்க வேண்டும் என்பதுதான். இதில் கவித்துவமாய் என்ன எழுதுவது என்று தெரியாததால் இயல்பான மொழி நடையைத் தேர்ந்தெடுத்தேன். பின்பு அதையே என் நாவல்களின் மொழியாய் வைத்துக்கொண்டேன்.

எழுத்தாளனின் இருப்பு அல்லது வெற்றி என்பது அவன் தனக்கான எழுத்துப் பாணியை உருக்குவதில்தான் இருக்கிறது. ஒரு படைப்பின் கீழே எழுத்தாளனின் பெயர் இல்லாவிட்டாலும் அதை எழுதியது இவர்தாம் என வாசகர் முடிவு செய்யும்போது அந்த எழுத்தாளரின் இருப்பு உறுதியாகிறது. இந்த நாவல்களின் வழியாக அப்படி ஒரு பாணியை உருவாக்கியிருக்கிறேன் என நம்புகிறேன். எனக்குக் கவிதை எழுத வரும் என்பதற்காக இந்த எழுத்தை மாற்றிக்கொள்ள முயலவில்லை. ஒருவேளை கவித்துவத்தைக் கோரும் படைப்புகளை எழுத நேரிடும்போது கவிமனம் கொஞ்சம் ஒத்துழைக்கலாம். ஆனால் அதையும் சுற்றி வளைத்து பூடகமாகப் புரியாமல் எழுதிப் பார்க்கப் போவதில்லை. செறிவான ஆக்கம் என்பதற்கும் புரியாத எழுத்துப் பாணிக்கும் சம்பந்தமில்லை.

விருதுகளும், பட்டியல்களும் எப்போதுமே சர்ச்சைகளை உருவாக்குபவை. அதுகுறித்து உங்கள் பார்வை?

பத்து வருடங்களுக்கு முன்பு விருதுகள் மற்றும் பட்டியல்கள் மீது எனக்கொரு கறாரான பார்வை இருந்தது. கொடுக்கப்படும் விருதுகள் மீதும் விமர்சகர்கள் அல்லது மூத்த எழுத்தாளர்கள் இடும் பட்டியல்கள் மீதும் நம்பிக்கை இருந்ததுதான் இந்தக் கறார் பார்வைக்குக் காரணம். எனவே எப்போது பட்டியல்கள் அல்லது விருதுகள் வந்தாலும் அவற்றின் தரம் குறித்தும் தகுதியின்மை குறித்தும் உருவாகும் சர்சைகளில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும். முரண்படல்கள் விவாதங்கள் வழியாய் தமிழ்ச் சூழலில் நிறைய பகைமையை உருவாக்கிக் கொண்டாயிற்று. மேலும் அவை கொண்டு வரும் அயற்சி அல்லது இத்தகைய பேச்சுகள் உருவாக்கும் கவன ஈர்ப்பு போன்றவற்றில் திரும்பத் திரும்ப ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இந்த எல்லா விமர்சனங்களுக்கும் எந்தப் பலனும் இல்லை என்பது பிடிபட்டது.

தமிழில் மட்டுமல்ல உலக அளவில் விருதுகள் என்பவை சாய்வுத்தன்மை கொண்டதுதான். இந்த விருதுகளை வழங்கும் அமைப்புக்கென்று ஓர் அரசியல் இருக்கும். அந்த அரசியலுக்கு ஒத்துவரும் அல்லது அமைப்புக்கு இணக்கமாக இருக்கும் நபர்களுக்கோ அல்லது படைப்புகளுக்கோ அந்த அமைப்பு தங்களின் வெகுமதியை விருது என்கிற பெயரில் தரும். இதில் தரம் அல்லது தகுதி போன்ற விஷயங்கள் இரண்டாம்பட்சம்தான்.

பட்டியல்கள் என்பதிலும் இதே அரசியல்தான் நிலவுகின்றது. ஒருவர் தனக்குப் பிடித்த நூல்களை அல்லது படைப்புகளைச் சிறந்தது என வகைப்படுத்துகிறார் என்றால் அந்தப் பட்டியல் அவருக்கானதுதான். அவர் நம்பும் அரசியல், வாசிப்பு மாற்றும் சாய்வுகளைச் சார்ந்தது. அது எப்படி அனைவருக்குமான பொதுவான தர அடிப்படையிலான பட்டியலாக இருக்க முடியும் என்பன போன்ற புரிதல்கள் வர எனக்குப் பத்து வருடங்கள் ஆயின. எனவே இவை இரண்டையும் குறித்து இப்போது பொருட்படுத்துவது கிடையாது.

உலக அளவில் விருதுகள் இப்போது இன்னொரு இடத்தை அடைந்திருக்கின்றன. அதை நெருங்க அல்லது அந்த விருதை வாங்க விரும்புவோர் அதற்கான ஏராளமான தயாரிப்புகளில் ஈடுபட வேண்டியிருக்கிறது. அதற்கான ஏஜெண்டுகளை அணுகுவது, விருதுக்கு ஏற்றார்போல் படைப்புகளை உருவாக்குவது – இதன் வழியாக நடுவர்களை இணங்க வைத்து இறுதியில் விருதை அடைவது என்பதுதான் சமகால விருதின் அடிப்படைச் செயல்முறையாக இருக்கிறது. ஆஸ்கர் விருதை வெல்ல ரகுமான் இந்த வழிமுறைகளைக் கடைபிடித்தார். தற்போது தென்கொரியாவின் Bong Joon-ho வும் இதே வழிமுறையைப் பின்பற்றி வெற்றியடைந்திருக்கிறார். Bong Joon-ho வைவிட பார்க் சான் வூக்கும் கிம் கி டுக்கும் மிகச் சிறந்த இயக்குனநர்கள் அவர்களுக்கு ஏன் இந்தப் புகழ் வெளிச்சம் கிடைக்கவில்லை என்றால் அவர்கள் Bong Joon-ho வைப் போல ஹாலிவுட்டில் ஆறு மாதம் வரை தங்கியிருந்து அதற்கான வேலைகளைப் பார்க்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.

ஒப்பீட்டளவில் தமிழ் இலக்கிய விருதுகள் மிகவும் மலிவானவை. இவ்வளவு மெனக்கெட வேண்டாம். இங்கு கொடுக்கப்படும் ஓரிரு விருதுகளைப் பெறத் தமிழ்ச் சூழலில் இருக்கும் அதிகாரம் மிக்க எழுத்தாளர்கள் மற்றும் சில சினிமா தொடர்புகளுடன் சுமுகமான உறவைப் பேணினால் போதுமானது. அல்லது முன்பொரு காலத்தில் எழுதுபவர்களாக இருந்து இப்போது இலக்கிய ஏஜெண்டுகளாக இருக்கும் நபர்களைக் கையில் வைத்துக்கொள்வதும் உடனடிப் பலனைத் தரும். தரம், படைப்பு, அங்கீகாரம் போன்றவற்றை விருதுகளோடும் பட்டியல்களோடும் போட்டுக் குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதுதான் எழுதுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டியது.

இன்னொரு முக்கியமான புரிதல் இருக்கிறது. அது என்னவென்றால், தமிழில் எழுதுபவர்கள் அனைவருமே விளிம்பில் வாழ்பவர்கள்தாம். மற்ற கலைத்துறைகளோடு ஒப்பிடும்போது அங்கீகாரமும் கவனமும் எழுத்துத் துறைக்கு மிகவும் குறைவு. சினிமா என்கிற ஒன்றின் முன்பு அதன் ஆதாரமாய் இருக்கக் கூடிய எழுத்து நிற்கக்கூட அஞ்சுகிறது. இங்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் குறுநில மன்னர்களைப் போலவும், நடிகநடிகையர்கள் வானத்தில் இருந்து அவதரித்தவர்கள் போலவும் உலவும் சூழலில் எழுத்தாளர்கள் கூனிக்குறுகி அடையாளமற்று வாழ வேண்டியிருக்கிறது. எனவே விருது என்கிற பெயரில் வாழ்நாளில் ஒரே ஒரு நாள் எழுதுவோருக்குக் கிடைக்கும் கவன ஈர்ப்பையும் விமர்சனம் என்கிற பெயரில் அடித்து நொறுக்கும் மனநிலையில் இருந்து வெளியேறுவது அவசியம் என்பதுதான் அது.

இந்தப் புரிதலுக்கு நான் நகர்ந்து வருடங்கள் ஆகின்றன. இந்த நிலைக்கு அனைவரும் நகர்ந்து விட்டால் சாந்தியும் சமாதானமுமாக தமிழ்ச்சூழலில் இயங்கலாம்.

Writer’s Block எல்லா எழுத்தாளர்களும் சந்திக்கும் ஒரு சவால். உங்களுக்கு அது ஏற்பட்டிருக்கிறதா? அதைக் கடந்து வரும் சூட்சுமம் குறித்து பகிர்ந்துகொள்ளுங்கள்.

உண்டு. நிகழ்திரை கட்டுரைத் தொகுப்பு 2013ஆம் வருடம் டிசம்பர் மாதம் வெளிவந்தது. அதற்குப் பிறகு 2017 வரை கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஒன்றுமே எழுதவில்லை. அவ்வப்போது வலைப்பூவில் சில சினிமாக் குறிப்புகள், பேஸ்புக்கில் சில சுயபுலம்பல்கள் இதைத் தாண்டி எதையும் எழுத முடியவில்லை. வாழ்வுச் சூழலும் சுழன்றடித்தது. ஓர் எழுத்தாளனுக்கு எழுதும் காலம்தான் அற்புதமானது. வேறெந்த ஒன்றையும் அந்த மகிழ்ச்சிக்கு இணையாக வைக்க முடியாது. எழுதும்போது கிடைக்கும் திளைப்பை வேறெந்த போதை வஸ்துவாலும் தந்துவிட முடியாது. இந்தச் சிக்கலில் இருந்து வெளியே வர நான் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அது தானாய் நிகழட்டும் என சினிமா பார்க்க ஆரம்பித்துவிட்டேன். புத்தக வாசிப்பும் குறைந்தது. தூங்கி எழுந்ததில் இருந்து மீண்டும் படுக்கைக்குச் செல்லும் வரை சினிமா பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏதோ ஒரு வகையில் எழுதாமை தரும் வெறுமையை நிறைய படங்கள் பார்ப்பதன் மூலம் நிறைத்துக் கொண்டிருந்தேன்.

உலகின் மிகச் சிறந்த, அதிகம் அறியப்படாத திரை இயக்குநர்களின் படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்த்துக் கொண்டிருப்பேன். ஓர் இயக்குநரின் மொத்தப் படங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வழக்கம் எனக்கு உண்டு. ஓர் ஆளுமையின் மொத்தத்தையும் அறிந்துகொள்ள இதுவே சிறந்த வழி என்றும் நினைக்கிறேன். ஃபின்லாந்தின் அகி கரிஸ்மாகி, செர்பியாவின் எமீர் கஸ்தூரிகா, தைவானின் ஹோ, என்றென்றைக்கும் பிடித்த டோனி காட்லிஃப், நம் ஊர் கே.ஜி.ஜார்ஜ் எனக் கலந்து கட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்போதாவது இலக்கியம் குறித்தும் எழுதாமல் நாட்களைக் கடத்துவது குறித்தும் லேசான ஓர் அச்சம் மனதில் பரவும். அடுத்த கணமே அதிலிருந்து வெளியேறுவேன். மீண்டும் அடுத்த நாள் எழுதாமையின் முள் குத்தும். எடுத்துப்போட்டுவிட்டு சினிமா பார்க்க ஆரம்பிப்பேன்.

இப்படியாக இந்த இலக்கியம் சினிமா என்கிற ஊசலாட்டம் உலகின் மிகச் சிறந்த க்ளாசிக் நாவல்களைப் படமாகப் பார்த்துவிடலாம் என்கிற முடிவில் வந்து நின்றது. அதையும் பார்த்தேன். கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் இதுவரை படமாக்கப்பட்ட அனைத்து சிறந்த நாவல்களின் திரை வடிவத்தையும் பார்த்து முடித்தேன். ஜோர்பா த க்ரீக் படத்திலிருந்து அன்னா கரேனினா வரைக்குமாய் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களைத் தொடர்ச்சியாய் பார்த்து முடித்தேன். பிறகு ஏதோ ஒரு தருணத்தில் ஓரிதழ்ப்பூவிற்குள் மனம் தவறி விழுந்தது. என்னுடைய, எனக்கே எனக்கான உலகில் மீண்டும் போய் அமர்ந்து கொண்டேன்.

எனவே இந்த எழுத்துத் தடையை எந்தவித சூட்சுமத்தாலும் ஒன்றும் செய்துவிட முடியாது. தடைக்காலத்தை முழுமையாக அனுபவிப்பது மட்டும்தான் சரியான வழியாக இருக்கமுடியும். விடியற்காலை எழுந்து நடந்து போங்கள், பாட்டு கேளுங்கள், யோகா செய்யுங்கள், குட்டிக்கரணம் அடியுங்கள் என்றெல்லாம் யாராவது சொன்னால் அதை நம்பாதீர்கள். உங்களில் இருந்து உங்களை நீங்கள் மட்டும்தான் கண்டுபிடிக்க முடியும். அதைத் தருணங்களே உருவாக்கும். எல்லாம் தன்னால் சரியாகும். சரியாகும் வரை காத்திருப்பதுதான் ஒரே வழி என நினைக்கிறேன்.

நன்றி: உமா கதிர்


மேலும் வாசிக்க

1 thought on “நேர்காணல்: அய்யனார் விஸ்வநாத்”

  1. விருதுகள் பற்றிய கூறியது புதிய திறப்பாக அமைந்தது 💚

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்