19 ஆகஸ்ட் 2046
மலர்விழி வெகுநேரம் இருண்ட வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். திறந்தவெளியில் அவளுடைய சின்னஞ்சிறு மனம் தட்டான்களைப் போல திசையற்றுத் திரிந்து கொண்டிருந்தது. அம்மா வருவதாகச் சொல்லி ஏமாற்றப்பட்ட இரவில் வானத்தில் நட்சத்திரங்கள் இல்லாதது மேலும் பாரமாக இருந்தது. துரு பிடித்திருந்த கம்பிகளிலிருந்து நேற்று பெய்தோய்ந்த மழையின் கிழட்டுத் துளி சட்டென்று விடுப்பட்டு மலர்விழியின் முகத்தில் வீழ்ந்தது. சுரண்டி நக்கிப் பார்த்தாள். காத்திருப்பின் ருசி சிலசமயம் துவர்க்கும் என்பதாக உணர்ந்து, மீண்டும் தனக்கு மேலே கம்பிகளுக்கு அப்பால் விரிந்திருக்கும் வானத்தைப் பார்த்தாள்.
“வானம்னா என்னம்மா?”
“அதுவொரு திறந்தவெளி…”
“அது எங்கம்மா இருக்கு? எவ்ள பெருசு?”
“அது எங்கயும் இல்லம்மா. பூமிக்கு வெளில இருக்கு. அதுவொரு இடம் இல்ல…”
“அப்பறம் எப்படிம்மா நீலமா இருக்கு? நம்ம அங்க போலாமா?”
“மலர்… உடனே வானத்துக்குப் போக முடியாது. அது கடவுள் இருக்கற இடம்…”
அம்மா கடைசியாகச் சொன்ன கதை ஒரு தட்டானைப் பற்றியது. தட்டானின் வாலில் கயிற்றைக் கட்டி அதைப் பறக்கவிட்டு வயல்வெளிகளில் அவரோடிய அனுபவத்தை மலர்விழி நினைத்துப் பூரித்துக்கொண்டாள். மலர்விழி மீண்டும் வானத்தைப் பார்த்தாள். அம்மா வானத்திற்குச் சென்று இரண்டாண்டுகள் கடந்துவிட்டன என்பதை அவள் மனம் ஏற்க மறுத்தது.
“இப்ப எனக்கு என்ன வயசுப்பா? சொல்லுப்பா… ஏன் நான் இப்படி இருக்கேன்? எனக்கு என்ன ஆச்சுப்பா?”
மலர்விழியை அறைக்குள்ளே அடைத்து இன்றோடு ஒரு வருடம். கருப்புநிறக் கனவுந்து மீண்டும் வீடிருக்கும் பகுதிகளில் அலைந்துவிட்டு வெளியேறியது. வனவிலங்குகளின் உயிர்த்தவிப்பின் உச்சக் கெக்கரிப்பைப் போன்ற ஒலிகள் வீதியெங்கும் பரவிக் கொண்டிருந்தது. அத்தனையும் சோகம் தோய்ந்த குழந்தைகளின் குரல்கள். பரசுராமால் அதற்குமேல் அச்சத்தங்களைக் கேட்க இயலவில்லை. ஸ்டார் நகரம் நோய்வாய்ப்பட்டு விம்மிக் கொண்டிருந்தது. ‘குழந்தைகளற்ற நகரம்’, ‘சொந்தக் குழந்தைகளைக் கொன்று தருபவர்களுக்கு அரசு சன்மானம்’, ‘தனியார் இரகசியப் பிரசவ மருந்தகங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் உடனடித் தூக்கு’ போன்ற விளம்பரத் தாள்கள் மட்டும் கட்டிடச் சுவர்களிலும் சாலையோர மின்சாரக் கம்பங்களிலும் சாப்பாட்டுக் கடை மேசைகளிலும் பல்லிளித்துக் கொண்டிருந்தன.
நகரத்தின் குரல்வளையைக் கௌவிப் பிடித்திருந்த நோய்கள் கட்டுப்பாடில்லாமல் மனித மனங்களின் ஓரங்களில் உராய்ந்து கொண்டிருந்தன. வீட்டிற்கு வெளியில் வர இயலாமல் பலர் பட்டினியில் செத்துக் கொண்டிருந்தனர். வீட்டுக் குழந்தைகளின் நினைவலைகளில் சிக்கிச் சிதைந்து கொண்டிருந்தவர்கள் ஏராளமானோர் மனத்தொய்வில் வெறுமையில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்தனர்.
மலர்விழியின் நிலைமையைக் காட்டிலும் அவளைத் தொடர்ந்து இருளுக்குள் பூட்டி வைப்பது அவளின் மனத்தைக் குறுக்கிக்கொண்டே இருந்தது. தினமும் பகலில் பயத்திலேயே இருப்பாள். மனமும் நினைவும் தவறித் தவறி மீண்டும் எழும். உள்ளம் சமன்நிலையற்றுத் தவித்துக் கொண்டிருந்ததன் விளைவாக நீண்டு கொண்டிருக்கும் அவளுடைய இரவுகள். இருளுக்குள் அவளுடைய வெண்மை பூத்த கண்கள் மட்டும் அசைவது தெரியும். மிரண்டிருந்த கண்களின் ஆழத்தில் ஒரு குரூரமான பயமும் பரித்தவிப்பும் உற்று நோக்குபவர்களுக்கே தெரிய வாய்ப்புண்டு. காட்டில் மனிதர்களுக்குப் பயந்து பதுங்கிக் கொண்டிருக்கும் மிருகங்களைப் பார்ப்பதைப் போலவே மலர்விழியைப் பார்ப்போரின் கண்களுக்கு அவள் ஒரு நோயாளியாக மட்டுமே காட்சியளிப்பாள். உடன் அசெளகரியான ஒரு கழிவிரக்கமும் வெளிப்படும்.
மீண்டும் கருப்புநிறக் கனவுந்து கடந்து சென்று கொண்டிருந்தது. எப்படியும் நகரத்தைச் சுற்றி நான்கைந்து கனவுந்துகள் பணியில் இருந்தன. தூரத்தில் கதறும் குரல்கள் ஓய்ந்தபாடில்லை. இன்று காலையில் நாற்பது குழந்தைகளைப் பிடித்துவிட்டார்கள். உடனுக்குடன் செய்தியிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது.
ஆடர்சன் கண்ணாடிப் பேழையில் உருவாக்கப்பட்ட அறைக்கு வெளியே உட்கார்ந்து உணவிற்கு உத்தரவிட்டான். வழக்கமான அவனது கண்காட்சி நேரமது. கண்ணாடிப் பேழைகள் போன்று உருவாக்கப்பட்ட பலநூறு அறைகள் அக்கட்டிடத்தின் பெரும்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தன. ஆடர்சன் சூடான ஆட்டிறைச்சியைச் சுவைத்துக்கொண்டே கண்ணாடி அறைக்குள் நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆழ்ந்த ஒரு மனநிறைவுக்குள் புன்னகையுடன் கண்ணாடிப் பேழைக்குள் நடக்கும் மாபெரும் உயிர் யுத்தத்தைப் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது கை தட்டிச் சிரித்தான்.
“சார்லஸ்… பார்த்தியா? முதலாம் உலகப் போருக்குப் போய்ட்டு வந்த ஒரு திருப்தியைக் கொடுக்குது இல்லையா? நிஜம் எவ்ள அழகு சார்லஸ்… பீறிட்டடிக்கும் அத்தனையும் நிஜம்… கொல்றதைவிட இது எத்தனை பேரின்பம்…?”
அருகில் இருந்த அவனுடைய இராணுவ ஆலோசகன் சார்லஸ் குவளையில் இருந்த விஸ்கியை ஒரு மிடறு அருந்திவிட்டுச் சிரித்தான்.
“ஸ்டார் நகரம் இன்னும் சில மாதங்களில் என் கையில் முழுவதுமாக… நம்ம இனக்குடியேற்றம் அடுத்து நடக்கும்…சார்லஸ்… இன்னும் ஆயிரம் தடுப்பூசிகள் வந்துருக்கு. எல்லாமே நம்ம இனமக்களுக்கும் நம்ம இராணுவத்துக்கும் மட்டும்தான்…”
கண்காட்சிக்கூடத்தை விட்டு வெளியில் வந்தவன் புலன்களுக்கான பசி தீராமல் மீண்டும் விதிமுறைகளை நினைவுபடுத்தும் தொனியில் நகரங்களில் எல்லோருக்கும் விதிமுறைகள் அடங்கிய தாள்கள் விநியோகிக்க உத்தரவிட்டான்.
“எல்லாம் பாதி உயிரு போனவனுங்க சார்லஸ். நம்ம என்ன சொன்னாலும் கேட்பானுங்க. மிருகங்களைவிட ஒரு மோசமான வாழ்வுக்கு இங்குள்ள அத்தனை நாய்களையும் நாம தயார் செஞ்சிக்கிட்டு இருக்கோம்…”
ஏற்கனவே பரப்பரப்பின் உச்சத்தில் தகித்துக் கொண்டிருந்த நகரம் மேலும் நிம்மதியிழந்து காணப்பட்டது.
விதிமுறை 1
வீட்டிற்குள் குழந்தைகளை வைத்திருப்பவர்கள் அவர்களாகவே முன்வந்து அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
விதிமுறை 2
ஒவ்வொரு வாரமும் ஒருமுறை அரசு காவல்துறையினர் வீட்டிற்குள் பரிசோதனைக்கு வருவதை அனுமதிக்க வேண்டும்.
விதிமுறை 3
வீட்டில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டுப் பொருள்களை உடனடியாக அழித்துவிட வேண்டும்.
விதிமுறை 4
தம்பதியினர் அனைவரும் குடும்பக் கட்டுபாட்டை உடனடியாக நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.
விதிமுறை 5
புதியதாகக் குழந்தைகளைப் பிரசவிப்பவர்களின் விவரங்களை ஒவ்வொரு மருத்துவமனையும் உடனடியாக அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
விதிமுறைகளின் அச்சுறுத்தல் நாளுக்கொரு பக்கமாக மேலோங்கிக் கொண்டிருந்தது. பரசுராம் மலர்விழியைப் பாதுகாத்து வைத்திருந்தார். வீட்டின் பின்பக்கப் பகுதியில் இரண்டு நாள் தோண்டி உருவாக்கிய பழைய பதுங்குக் குழி ஒன்றை விரிவாக்கி அதனுள் மலர்விழியை அடைத்தார். காற்று வருவதற்குத் கிழக்கே வானம் பார்த்த சிறு திறப்பு. அதையும் காவல்துறையினர் பரிசோதனைக்கு வரும்போது பழைய தண்ணீர் ஜெனரேட்டரை வைத்து மூடிவிட வேண்டியதாகிவிடும். அந்நேரம் மலர்விழிக்கு மூச்சுத் திணறல் அதிகரிக்கும்; பயந்து நடுங்குவாள். இருள் ஒரு கரும்பாம்பைப் போல அவளை மெல்ல விழுங்கும். மனத்தின் அலறலைச் சற்றும் வெளிப்படுத்த முடியாமல் உள்ளுக்குள்ளே விம்மித் துடித்துப் போவாள்.
16 மார்ச் 2040
சீனா முற்றிலும் அழிக்கப்பட்டுப் புதிய குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏறக்குறைய நான்கு வருடப் போருக்குப் பின் சீனாவை அமெரிக்க இராணுவம் முழுவதுமாகக் கைப்பற்றியது. ஆடர்சன் என்கிற அமெரிக்க இராணுவத் தளபதியின் பெருங்கனவு இது. ஒன்று சீனாவைக் கைப்பற்ற வேண்டும், அடுத்து ஆசியாவில் இருக்கும் ஸ்டார் நகரத்தின் வளங்களைச் சூரையாட வேண்டும்.
ஆடர்சன் தன் இராணுவ நுணுக்கங்களை மீண்டும் துரிதப்படுத்தினான். அன்றைய இரவு முக்கியமான கூட்டத்தில் தாக்குதலுக்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டது. ஸ்டார் நகர நிலத்தை இரண்டாகப் பிளந்தால் கிடைக்கும் கோடிக்கணக்கான கனிமவளங்கள் இன்னும் பல்லாண்டுக்கு ஆடர்சனை உலகின் முதலாளியாக மாற்றிவிடும். ஸ்டார் நகரத்தின் தற்காப்பை மீறி அந்நகரத்தைக் கைப்பற்றுவதும் எளிதல்ல. உலகின் விலையுயர்ந்த ரஷ்ய ஆயுதத் தயாரிப்பில் ஸ்டார் நகரும் பெரும் பங்கு வகித்தது. இதுவரை உலக நாடுகளுடன் எந்த நல்லுறவையும் பாராட்டாத ஒரு பணக்கார நகரம்தான் ஸ்டார். ஆயினும் 2030ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் அதன் இராணுவப் பலம் அசாத்திய அளவில் ரஷ்யாவுடன் இணைந்து வளர்ந்தது.
“ஸ்டார் நகரத்தை அழிக்கணும்னா… அடுத்து ஒரு தலைமுறை அங்க உருவாகக்கூடாது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்டார் நிலத்துல மிஞ்சறது பிணங்கள்தான்…” ஆடர்சனின் குரல் ஆதிக்க நாடுகளின் குரலாகப் பிரதிபலித்தது. ஸ்டார் நகரத்தின் மீது தனது முதல் பரிசோதனையைத் துவங்க ஆயத்தமானான்.
அன்றிரவு வானில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டே மொட்டைமாடியில் படுத்துக் கொண்டிருந்த எத்தனை நூறு குழந்தைகளின் கண்களில் அவ்வெள்ளைப்பூ தெரிந்திருக்கும் என்று கணக்கிடுவதற்கில்லை. ஆடர்சன் பத்தாண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் வெளிக்கொண்டு வந்த ‘மரபணு அணுகுண்டு’ முதன்முறையாக உலகின் ‘கனிமவள இதயமான’ ஸ்டார் நகரத்தின் மையத்தில் பிரயோகிக்கப்பட்டது.
25 ஆகஸ்ட் 2046
மலர்விழி பெய்து கொண்டிருந்த மழையைத் தொட நினைக்காமல் எட்டியே இருந்தாள். அவளுக்குத் தெரியும் அது வானம் பொழியும் மழையல்ல. அப்படியொரு மழையை அவள் பார்த்ததே இல்லை. ஸ்டார் நகரத்து வானம் மழையை மறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. வெறும் வெய்யில் மட்டுமே அவளுக்கும் எல்லோருக்கும் பழக்கமான தட்பவெப்பம்.
செயற்கை மழை காலை 10 மணி வரை பெய்துவிட்டு அலாரம் கொடுக்கப்பட்டதைப் போல நின்றுவிடும். மலர்விழி இருந்த அறைக்கு மேல் அடிக்கப்பட்டிருக்கும் இருக்கையில் அமர்ந்து கொண்டே அறையில் இன்னமும் கரையாமல் தேங்கிக் கொண்டிருந்த மழைநீர்த் தேக்கத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு பூரான் தனது பலநூறு கால்களை உபயோகித்து இருக்கையில் ஏறி மலர்விழியை அடைய எத்தனித்துக் கொண்டிருந்தது. சற்றும் பயமில்லாமல் மலர்விழி அதன் அத்தனை அழகான உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
இன்று மலர்விழியை வேறு இடத்திற்கு மாற்றுவதாகப் பரசுராம் சொல்லியிருந்தார். வீட்டில் இருக்கும் கடைசிக் குழந்தை. மலர்விழியின் அண்ணன் சுகுமாறன் கடந்தாண்டு அரசால் பிடிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டான். அதன் பிறகு அவனைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லை. பக்கத்து வீட்டில், முன் வரிசை, என எப்படியும் பலநூறு குழந்தைகள் காணாமல் போய்விட்டனர்.
“ஏய் பூரான்! உனக்கு எத்தனை வயசு?”
மலர்விழி பூரானை நோக்கி முகத்தை நெருக்கமாகக் கொண்டு சென்றாள். அவளுக்கு இரண்டு வயது இருக்கும். சுவரிலிருந்து பூரான் பரசுராமின் மீது விழுந்து அவர் துடித்தெழுந்தபோது தவறி பக்கத்தில் இருந்த மலர்விழியின் மீது விழுந்து பூரான் ஊர்ந்து இறங்கியது. அவள் ஏதோ ஒரு விளையாட்டு இரயில் தன்னைக் கடந்து போவதைப் போலக் கை தட்டி அதனை வேடிக்கைப் பார்த்தாள். அதே வேடிக்கை பார்க்கும் ஒரு மனோபாவத்துடன் இப்பொழுது மலர்விழியினால் இருக்க முடியவில்லை. தன் கைகளை உயர்த்திப் பார்த்தாள். சுருங்கி மெலிந்துபோன கைகளில் அடந்திருந்த உரோமங்கள் அவளுக்கு அச்சத்தை மட்டுமே உண்டாக்கிக் கொண்டிருந்தன. முடியுதிர்ந்த தன் தலையின் நடுப்பகுதியில் தெரியும் மண்டை ஓட்டின் மீது வெகுநேரம் ஊர்ந்து கொண்டிருந்த நீரட்டையை உதறித்தள்ளவும் பலமில்லாத மலர்விழி ஓர் அழகிய தட்டானை வானில் கற்பனை செய்து கொண்டிருந்தாள்.
04 ஏப்ரல் 2043
அன்றைய பிறந்தநாள் கொண்டாட்டத்தின் முடிவில் மலர்விழி அம்மாவுடன் மொட்டைமாடியில் உட்கார்ந்திருந்தாள். இருவருக்கும் வானத்தைக் கவனிப்பது கொள்ளை பிரியம். உலகம் என்கிற மாபெரும் வெளியில் வானம் அவர்களுக்கு அத்தனை ஆறுதலான அதிசயம். வானத்தின் கீழே அவர்கள் இருவரும் சிறுபுள்ளியாகித் துன்பங்கள், புலம்பல்கள், கோபங்கள் என எல்லாமும் கரைந்து சிறுத்துவிடுவதாக நினைத்துக்கொள்வார்கள்.
“மலர் அம்மா சொல்லுவேன்… கேட்பியா?”
“சொல்லும்மா… நான் என்ன செய்யணும்?”
“அதோ தெரியுதே அந்த வானத்துக்கு அம்மா போய்ட்டா நீ தைரியமா இருக்கணும். ஓகேவா? அம்மாவ நினைச்சிக் கவலைப்படக்கூடாது…”
“ஏன்ம்மா… நீ சொல்ற மாதிரியே நம்ம ஜெக்லின் அண்டியும் சொன்னாங்க. அப்புறம் அவங்களும் செத்துட்டாங்கன்னு சொன்னாங்க. அதே மாதிரி நிறைய பேர் ஏன்ம்மா காணாம போறாங்க? சாவறதுன்னா என்னம்மா?”
“கடவுள் நம்மள படைச்சாரு. அவருக்கு ரொம்பப் பிடிச்சிப் போச்சின்னா நம்மள எடுத்துக்குவாரும்மா… ஜெக்லின் அண்டி மாதிரி… அம்மா மாதிரி நீ… அப்பா… எல்லோரும் ஒரு நாள் வானத்துக்குப் போய்ருவோம்…”
“தட்டான் மாதிரியாம்மா?”
மௌனம்.
“ம்மா… எனக்கு ஒன்னு தோனுதுமா… உன்னை மாதிரி நானும் கல்யாணம் செஞ்சிக்கிட்டா? எனக்கும் என்னை மாதிரி ஒரு குழந்தை வேணும்…அந்தக் குழந்தைக்கிட்ட நான் இதையே சொல்லணும்… எங்களுக்கும் ஒரு வானம்…” என்ற மலர்விழியை ஏஞ்சலின் அப்பொழுதுதான் ஆச்சரியத்துடனும் பயத்துடனும் கவனித்தாள்.
மூன்று வயது மலர்விழியின் தொடை இடுக்கிலிருந்து இரண்டாவது முறையாக இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
10 செப்டம்பர் 2044
பசியின் கொடுமை தாளாது ஸ்டார் நகரத்தின் ஒரு தம்பதியினர் தன் ஐந்து வயது இரட்டைக் குழந்தைகளைக் கொன்று வீதியில் அவர்களின் பிணங்களைப் போட்டுவிட்டு அங்கேயே உட்கார்ந்திருந்தனர். இரண்டு மணி நேரத்திற்குப் பின் இராணுவப் படை வந்து சேர்ந்தது. தம்பதியினருக்குப் பணம் ஒரு பெட்டியில் அடைக்கப்பட்டுத் தரப்பட்டது. நாய் எலும்புத்துண்டைக் கௌவிக்கொள்வதைப் போலக் குழந்தைகளின் அப்பா எகிறிப் பாய்ந்தார். பசி ஒரு கட்டத்திற்குப் பின் வன்முறையைத் தூண்டும்; பிறகு மிருகக்குணத்தை உசுப்பும்.
ஆடர்சன் ஸ்டார் நகரத்திற்கு அறிமுகப்படுத்தியது மரபணு அணுகுண்டு மட்டுமல்ல; அதையும்விடக் கொடுமையான பசி என்கிற மிருகத்தையும் அவிழ்த்துவிட்டான். மரபணு அணுகுண்டுத் தாக்குதலுக்கு முன்பே நாடாளுமன்றக் கட்டிடத்தை மட்டும் முற்றிலும் தாக்கி அழித்துவிட்டான் ஆடர்சன். அன்று வானில் வெடித்துப் பூத்துப் பரவிய அவ்வணுகுண்டு மக்களை ஒன்றுமே செய்யவில்லை. சட்டென்று வானம் இருண்டது. ஒரு வாரம் அப்படியே வானம் மறைக்கப்பட்டிருந்தது. அவ்வளவுதான். மறுவாரத்தில் மெல்லச் சூரியனைக் கண்ட ஸ்டார் நகரம் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியது. ஆனால், அது ஸ்டார் நகரில் இருந்த ஒவ்வோர் உயிருக்குள்ளும் பலநூறு கொடிய நோய்களைவிட ஆபத்தான தளர்வை, தொய்வை, சோம்பலை, மரணத்தை விதைக்கத் துவங்கியதை யாருமே அறிந்திருக்கவில்லை.
“வானத்துக்கு என்ன ஆச்சும்மா? ஏன் இருட்டாவே இருக்கு?”
மலர்விழியின் கேள்விக்கு ஏஞ்சலிடம் அப்பொழுது குழப்பம் மட்டுமே எஞ்சியிருந்தது. அனைவருக்கும் அதுவொரு வாணவேடிக்கை என்பதைப் போலத்தான் தெரிந்தது. ஆராய்ந்து கண்டுபிடித்துச் சொல்வதற்குள் அவ்விருள் விலகி மீண்டும் வானம் தென்பட்டதும் எல்லோருக்கும் கிடைத்த ஆறுதல் பரப்பரப்பைக் கட்டுப்படுத்தியது. அடுத்த ஒரு வாரத்தில் நடந்தவை யாராலும் கணிக்க முடியாதவைகள் ஆகும்.
“சித்தப்பாவுக்குக் கிறுக்குப் பிடிச்சுக்கிச்சாம்!” என்று கூறிய மலர்விழியின் பாட்டி நல்லம்மா அடுத்த சில நொடிகளில் வீட்டின் மொட்டைமாடியிலிருந்து கீழே குதித்து இறந்ததுதான் மலர் வீட்டில் நிகழ்ந்த முதல் மரணம். அடுத்தடுத்துப் பலரும் மனச்சோர்வால் அச்சோர்வின் அதீதத்தைத் தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.
22 ஆகஸ்ட் 2046
பரசுராம் மலர்விழியைப் பதுங்குக் குழியிலிருந்து தூக்கினார். சோர்ந்து தாழ்ந்திருந்த கண்களை உயர்த்தி வெளிச்சத்தைப் பார்க்க முடியாமல் மலர்விழி தடுமாறினாள். கால்கள் மெலிந்து வலிமையில்லாமல் தொங்கிக் கொண்டிருந்தன.
“ப்பா… என்னால முடியலப்பா. என்னை எங்கயும் கொண்டு போய்டாத… நான் இங்கயே இருக்கன். வானத்துக்குப் போகற நேரம் நான் இங்க இருக்கணும்… என்னால மூச்சு விடமுடியல…”
பரசுராம் கைகளில் தாங்கியிருந்த மலர்விழியைத் தரையில் வைத்துவிட்டுச் சத்தமிட்டு அழுதார். அதுவரை தேக்கி வைத்திருந்த அத்தனை அழுகையையும் அப்பொழுது கேட்க முடிந்தது. ஏஞ்சலின் புற்றுநோயால் இறந்தபோதுகூட வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்திருந்த அத்தனை துன்பமும் தெறித்துக் கொட்டியது.
“ப்பா… எனக்கு எத்தனை வயசுப்பா? நீயாச்சம் சொல்லுப்பா…நான் இந்தப் பூமியில எத்தன வருசமா இருக்கன்ப்பா…?”
அழுது தேம்பிக் கொண்டிருந்த பரசுராமால் ஒரு வார்த்தையும் பேச இயலவில்லை. அழுகையைக் கட்டுப்படுத்தித் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார். மலர்விழி அழுகையை ஓர் அதிசயத் திரவம் போல அப்பாவின் கண்களிலிருந்து வழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் எவ்விதச் சலனமும் இல்லை. ஆழ்ந்த சோர்வு மட்டுமே அவளைப் போர்த்தியிருந்தது.
“உனக்கு ஆறு வயசும்மா…” என்று பரசுராம் சொல்லி முடிப்பதற்குள் கறுப்புக் காலணிகள் அணிந்திருந்த ஆடர்சனின் இராணுவப் படை அவர்கள் இருக்கும் இடத்தைச் சுற்றி வளைத்தது. வெட்டவெளி. செயற்கை மழை பெய்யத் துவங்கியது.
“சார்லஸ்! ரிப்போர்ட்டிங்! மலர்விழி 13,056… ஆடர்சன்… Glass Room 245ல போட ஒரு புது பீஸ் கிடைச்சுருக்கு…ஷோவ்க்கு ரெடியாகு…”
மலர்விழி தடுமாறியவாறே எழுந்து நின்று அவளுடைய வயோதிகமடைந்து மரணத்தின் வாசலை எட்டி நிற்கும் உடலுக்கும் மேலே விரிந்திருந்த வானத்தைப் பார்த்தாள். ஒரேயொரு சின்னஞ்சிறிய தட்டான் பறந்து கொண்டிருந்தது.
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…
View Comments
ஆசிரியர் பாலமுருகனின் கைவண்ணம் எப்போதுமே மாறுப்பட்ட கோணத்தில் அமைந்து வருகிறது.தினசரி வாழ்க்கை முறைக்கு அப்பார்ப்பட்ட கதையிது.கண்களினோரம் நீர் வழிந்தோடியது. இதுதான் எதிர்கால நம்நிலை. எழுத்தாளன் என்பவன் இறந்தகாலத்தையோ, நிகழ்காலத்தையோ வடிவமைப்பவன் மட்டுமல்ல. நாளைய உலகையும் நம்முன் நிறுத்தக்கூடியவன்.மிகுதியான கற்பனைவளம் ஆசிரியருக்குத் தனித்துவமான ஒன்று. வாழ்த்துகள் நண்பரே...
அறிவியல் சிறுகதை படிப்பது இதுதான் முதல்முறை. அதுவும் தமிழில் வாசிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்திய எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. தங்களின் மற்ற சிறுகதைகள் படித்துள்ளேன். அறிவியல் சிறுகதை இதுதான் முதல்முறை. பன்முக ஆற்றல், வாழ்த்துகள் பாலமுருகன். தொடர்ந்து பலதுறையில் எழுதவும். நன்றி.