சிறுகதை

கடைசி ஆப்பிள்

13 நிமிட வாசிப்பு

“எல்லாருக்கும் என் முகம் என்றால் என் முகம்தானே எல்லாருக்கும்…”

என்ன விதமான சிந்தனை இது….?

முன்னாள் நண்பனும் இந்நாள் விரோதியுமான ஒருவனின் இறுதிச் சடங்கிற்கு வந்துவிட்டுக் காரணமே இல்லாமல் கர்வம் பிடித்த மனது யோசிக்கிறது. ஆழ்மனம் எதையெல்லாம் விரும்புகிறதோ அதையெல்லாம் முன்னாள் நண்பனின் மரணத்தில் யாரோ செய்கிறார்கள். “செத்தவனுக்கே போதும் போதும் என்றாகிவிடும் போல.. இத்தனை சடங்கா..!” எனக்கே ஒரு மாதிரி இருந்தது. இன்னமும் சொல்லப் போனால் கொஞ்சம் போர் கூட அடித்தது.

கூட்டம் அவ்வளவாக இல்லை. மிகச் சிறிய கூட்டம்தான் அது. குறைவாக வாழ்ந்திருப்பான் போல.

“முகம் பார்ப்பவரெல்லாம் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்கள்.

எனக்கு என்னவோ பார்க்கத் தோன்றவில்லை. நின்றுகொண்டே இருந்தேன். சுழன்றடித்த காற்றில் சுடுகாட்டு மரத்தின் இலைகளற்ற இம்சை தெரிந்தது.

என் கண்களுக்குள் ஏதோ பூச்சி ஊர்ந்தது போல இருந்தது. தலைக்குள் ரீங்காரமிடும் எதுவோ என்னைத் தள்ளாடச் செய்தது. என்ன நடக்கிறது. மண்ணுக்குள் புதைக்கப் பிணத்தைத் தூக்குவது போல வெறுங்கைகளைத் தூக்கிக் கொண்டிருக்கிறார்கள். நான் கண்களை நன்றாகத் தேய்த்துக்கொண்டு பார்த்தேன். எல்லார் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தேன். இருக்கும் சிலரின் கண்களில் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தது. வெறித்த விழிகளில் உற்றுப் பார்த்தேன். அங்கே பிணம் கண்ணுக்குத் தெரியவில்லை. பிணம் போலக் காற்றில் அவர்களாகவே கற்பனை செய்துகொண்டு வெற்றிடத்தைக் குழிக்குள் இறக்குவது போலத் தோன்றியது. எங்கிருந்தோ வந்து, பிணம் போல அழுத்திய பயத்தில் அங்கிருந்து மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடி வந்து ஏறிய பேருந்தில் திகில் துரத்தியது போல யாருமே இல்லை.

ஓட்டுநர் முறைத்துக்கொண்டே பேருந்தை ஓட்டிக் கொண்டிருக்க, மெல்ல ஒரு பிசாசைப் போல நடந்து வந்து; நடத்துனர் நடந்து வந்தாரா மிதந்து வந்தாரா என்று தெரியவில்லை. அனிச்சையாய்க் கை நீட்டினேன்.

11 ரூபாய்க்கு ஒரு டிக்கட் கொடுத்தார். மீதி ஒரு ரூபாயை அவர் தரவும் இல்லை. நான் கேட்கவும் இல்லை.

“இன்னைக்கு ஏதும் ஸ்ட்ரைக்கா…?” என் கேள்விக்கு அவரிடம் எந்தப் பதிலும் இல்லை.

***

“விஜிதன்…. நீ கதை எழுதப் போலாம்.. செமயா கதை சொல்லக் கத்துகிட்ட” என்ற காதலிக்கு எப்படிச் சொல்லிப் புரிய வைக்க….?

இடையே நான்கு முத்தங்களும் இரண்டு அணைப்புகளும் சாத்தியமாயிற்று. அவள் கண்களுக்குள்…….சரி கவிதை சொல்லும் மூடு இல்லை. இல்லாத ஒரு பிணத்தை இருப்பது போலப் புதைப்பது எப்படிச் சாத்தியம்… ஏன் பேருந்தில் யாருமே இல்லை. திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தேன். அந்தக் கணவாய் பூங்காவில் கூட்டமே இல்லை.

***

கடந்த மாதம் ஊருக்குப் போனபோதுகூட இரவில் தூக்கமின்றி வீதியில் நடந்து கொண்டிருந்தேன். தூக்கமின்றி நடந்தேனோ…. இல்லை நடப்பதற்காக நடந்தேனோ தெரிய முற்படவில்லை. நடந்தேன். என் ஊர் எப்போதும் போல் இல்லை. அது குட்டிச் சுவர்களோடு ஒன்றாகிவிட்டது. எங்குப் பார்த்தாலும் இருளுக்குள் இருள் மங்கிய தோற்றம். நான் எதைத் தேடுகிறேன் என்று தெரியவில்லை. எதையாவது தேடுகிறேனா என்றுகூடத் தெரியவில்லை. நான் நடந்துகொண்டே இருந்தது எனக்குத் தெரிந்ததா என்றுகூடத் தெரியவில்லை.

ஒரு கணத்தில் நின்று நிதானமாக ஒவ்வொரு வீட்டையும் பார்த்தேன். கொஞ்சம் சந்தேகமாகக்கூட இருந்தது. வீடுகளா இல்லை கல்லறைப் பெட்டிகளா…? அரவமற்று ஆளுமற்று இருப்பது போன்ற பிரமையை நான் விரும்பினேன் என்றுதான் கூற முடியும். சட்டென எனக்குள் இருக்கும் கடவுள், பற்கள் நீள ஒரு வீட்டு வாசலில் நிற்க வைத்தான் பிசாசைப் போல. தட்டுவதற்குக் கை நீண்டபோது கேட்ட காதுக்குள், “தட்டுங்கள் திறக்கப்படும்” என்று திருப்பத் திரும்ப வாய் முணுமுணுத்தது. யார் வாய் என்று தெரியவில்லை.

தட்டினேன். தலையில் முட்டினேன் என்றும் சொல்லலாம்.

இதோ இப்போது வந்து திறந்துவிடும் சப்தம், உள்ளுக்குள் உணர, மெல்ல நகர்ந்து அடுத்த வீட்டிலும் அதே போலக் கதவைத் தட்டினேன். அடுத்த வீட்டில் கருஞ்சாந்துப் பூனையைப் போலப் பிராண்டினேன். அடுத்த வீட்டில் வெள்ளை நிறப் பூனையைப் போல நக்கிப் பார்த்தேன், விரல்கள் கொண்டு. கடைசி வீட்டில் சொறி நாயின் பிராண்டல்களைக் கொண்டு இழுத்துவிட்டு ஓடி வந்து ஒளிந்து கொண்டபோது, ஒவ்வொரு வீட்டிலுமிருந்து பூச்சாண்டிகளைப் போலப் பற்கள் முளைத்த பூதங்கள் வந்து எட்டிப் பார்க்கும் என்று தோன்றிய கற்பனைக்குக் கையும் முளைக்கவில்லை. காலும் முளைக்கவில்லை. வாலும் இருக்கவில்லை. நெடு நேரம் ஆகியும் வீட்டுக்குள்ளிருந்து ஒருவரும் வெளியே வரவில்லை. அரச மரத்தினடியே படுத்திருக்கும் புத்தப் பாட்டியை கால் சொறிந்து எழுப்பினேன். பூமிக்குள்ளிருந்து எழுந்தது போல எதையோ உதறிக்கொண்டு எழுந்தமர்ந்த புத்தப் பாட்டிக்கு முகமெல்லாம் இருள். இருளெல்லாம் முகம்.

‘என்ன…!’ என்பது போலப் பார்த்தது. நானும், ‘ என்ன….?’ என்பது போலப் பார்த்தேன்.

ஒன்றுமில்லை என்று மீண்டும் திரும்பிப் படுத்துக்கொண்டது. சரி ஒன்றுமில்லை என்று நானும் திரும்பி நடக்கத் துவங்கினேன்.

அடுத்த வீதியில் ஆங்காங்கே திறந்திருந்த வீட்டில் ஒருவரோ இருவரோ நரியைப் போல அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். சிந்தைக்குக் கருப்பு நிறம்தான் போல. இருளுக்கும் சிந்தனைக்கும் மூளை வடிவம் என்று நம்பியபோது எனக்கு ஊர்க் கிணற்றில் எட்டிக் குதிக்கத் தோன்றியது. எட்டிக் குதித்து அந்த நடுநிசியில் நீந்த மறக்கையில் என்னில் நிலவின் பின்புறம் நீந்திக் கொண்டிருந்தது. நிலவின் பின்புறம் அத்தனை சுவாரசியம் இல்லை. முதுகில் பள்ளம் தோன்றியது போல அது.

***

“ம்ம்ம்.. அப்புறம்.. கதை என்னாச்சு….?” என்ற காதலிக்குக் கைவிரல்களில் சொடுக்கெடுத்தேன். கழுத்தெல்லாம் உடைத்தது போல முகம் திருப்பிக் கொண்டவளுக்கு இன்னும் என் மீது நம்பிக்கை வரவில்லை. நான் கதை சொல்கிறேன் என்று மட்டும் சொல்லும் அவளுக்கு அந்தக் கதையில்தான் அவளும் இருக்கிறாள் என்று யார் சொல்வது….?

கடந்த வாரம்கூட இப்படி ஒரு சம்பவம் நடந்தது….!

நான் வேக வேகமாக நடந்தேன். வேகம் என்பது நடக்காமலும் இருக்கிறது.

வேறு வழியில்லை. நடக்க வேண்டும் என இருந்தது. நடந்துதான் ஆக வேண்டும் போலத்தான் இருந்தது. ஓரிடத்தில் நிற்க முடியாத வண்டின் மனநிலை எனக்கு. தேனெடுக்க மறந்த கோபம் என்னிலும் இருந்தது. வாய் திறக்காமல் கத்தும் ஓசையை நானே காதுக்குள் கேட்டேனா இல்லை காதே எனக்குள் சொல்லியதா, தெரியவே வேண்டாம். வாழ்வதின் பொருள்படும் சப்தங்களில் என்னை நானே கூர்ந்து கவனித்துக்கொண்டே நடந்தேன். நடப்பதில் பல வகை உண்டு. பலதிலும் நடப்பவைதான் உண்டு.

அதை ஆறு என்று எல்லாம் சொல்லிவிட முடியாது. ஆனால் அதில் நீர் இருந்தது. அதிலும் சாக்கடையும் ஏதோ கழிவு நீரும், இன்ன பிற குழம்புகள், குழப்பமும் கலந்த கலவியில் அது ஒரு மஞ்சள் நிற வண்ணத்தில் ஓர் ஓவியத்தைக் குவித்தது போல இருந்தது. அதன் அருகே குதித்துவிடப் போவதாக ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். பார்க்கப் பெண் போலவே இல்லை. அத்தனை நைந்திருந்தது அவள் உடல். தலை இருக்கும் இடத்தில் இருந்தது தலைதானா என்ற சந்தேகம் வழக்கம் போல எனக்கு வந்தது. நான் நின்று அவள் என்ன செய்கிறாள் என்று கவனிக்க ஆரம்பித்தேன். என்னால் உணர முடிந்தது. அவள் தற்கொலைக்கு முயன்று கொண்டிருக்கிறாள். எனக்குச் சட்டென சுவாரசியம் தொற்றிக்கொண்டது. இதுவரை தற்கொலையை நான் நேரில் சந்தித்ததில்லை. அதுவுமில்லாமல் இந்த நேரத்தில் அது பார்க்க என்னை உற்சாகப்படுத்தும் போலிருந்தது. அருகில் இருந்த மரத்தடியில் நின்று லாவகமாகச் சாய்ந்துகொண்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அவள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையே எதுவோ போல நின்ற போதும், எட்டிப் பார்ப்பதும்.. சுற்றும் முற்றும் பார்ப்பதுமாக ஒரு சிறுபிள்ளையின் விளையாட்டைப் போல விளையாடிக் கொண்டிருந்தாள். எனக்குத்தான் இதயத்தின் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது. இல்லையில்லை இதயமே அதிகமாகிக் கொண்டிருந்தது. இருப்பதற்கும் இல்லாமல் போவதற்கும் இடையேதான் இருக்கிறது எல்லாமும். ம்ஹும்.. இருந்திருக்கும் எல்லாமும். ம்ஹும்.. இருந்ததா எல்லாமும். ஆதியின் நுனிக்கும் அந்தத்தின் பிணிக்கும் இடையே பிண்ட கலவியில் நான் பித்ருவாகவும் ஆகிடுவேன் போல.

நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். அங்கே காற்றில்லை என்றுதான் தோன்றியது. அல்லது காற்றுக்கு வேலி இல்லை என்றும்தான் தோன்றியது. வெளி வளையும் வித்தையில் சற்றும் நகராமல் நிற்கப் பழகி இருந்தேன். அங்கே சூரியன்கூடக் கொஞ்சம்தான் இருந்தது. அங்கே சூனியம்தான் அதிகம் இருந்தது. சூரியனின் சூனியம் அதிகமாக இருந்தது. சூனியத்தில் சூரியன் தகிப்பதைக் குறைந்துக் கொண்டிருந்தது.

படக்கென்று எட்டிக் குதித்துவிட்டாள். விழிகள் படக்கென்று மூடி திறந்தது எனக்கு.

எனக்கு மூச்சு அடைப்பது போல இருந்தது. கழுத்தை நீவிக் கொண்டேன். மூச்சுத் திணறுவதை நன்றாக உணர முடிந்தது. அது நன்றாகவும் இருந்தது.

ஒரு மரணத்தை அதுவும் தற்கொலையை இத்தனை அருகில் பார்த்த போது என்னிடமிருந்த குரூரமெல்லாம் என்னை விட்டு அகன்றது. அதே நேரம் ஒரு வித நல்லதனம் என்னில் சேர்ந்து என்னை அலைக்கழிக்க ஆரம்பித்தது. அருகில் சென்று நன்றாக எட்டிப் பார்த்தேன். பிணமாகிவிட்ட அந்தப் பெண்ணும் என்னையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள். செத்தும் சாகவில்லை வாழ்வு. இறந்தும் இருக்கிறது ஆசை. இனி ஒரு தரம் ஒரே தரம் கத்தி அழுதுவிட்டால் நான் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடலாம் என்று முடிவுக்கு வந்தேன். வெறுமையாகத் திரும்பிய போதுதான் சற்று முன் நான் சாய்ந்து நின்ற மரம் இலைகளற்றுக் கிளைகளற்று மொட்டை மரமாக நின்றிருந்தது அறிவுக்குத் தெரிந்தது. அந்த நேரத்துக்கும் தெரிந்தது.

நான் வேக வேகமாய் ஏறி மரத்தில் இருந்து மூன்று முறை வழுக்கி விழுந்தேன்.

உடலெல்லாம் சிராய்ப்பு. அந்த நேரத்தில் அது தேவையாய் இருந்தது. மீண்டும் விடாமல் முயற்சி செய்து மரத்தின் உச்சி போல் இருந்த நோஞ்சான் கிளையில் அமர்ந்தேன். என்னைச் சுற்றி பரந்த வானம் இருந்தது. அந்த வனாந்தரத்தில் யாருமே இல்லாத நிலை ஒன்றை பூசிக் கொண்டிருந்தேன். நிறமற்று இருப்பதில் கண்களுக்குள் கலவரம் நடப்பதைக் கயமுயவெனக் கண்டு கொண்டும் இருந்தேன். யாரையுமே காணவில்லை. ஒருவேளை நானும்கூட இல்லையோ என்றுகூடத் தோன்றியது. குனிந்து என்னை நானே பார்த்துக்கொண்டேன். என் கண்கள் என்னைச் சுலபமாகக் கடக்க முடியவில்லை. என்ன கொடுமை நடக்கிறது. உள்ளிருந்து கத்தத் துவங்கினேன். ஓசை முடிந்திருந்ததோ எனக்குள் என்ற சந்தேகமும் வந்தது. அதைத் தொடர்ந்து காகத்தின் குரல்தான் எனக்கு என்று அப்போது உடனடியாக நம்பினேன். எனக்கு எதையாவது நம்பிக்கொண்டே இருக்க வேண்டும். இனி எப்போதுமே எனக்குக் காகத்தின் குரல்தானோ….!

“உன் பேர் என்ன…..?” என்று காகம் கேட்கையில் எப்படி இருக்கும். கேட்டுப் பார்த்தேன். “கா உக்கா பெக்கா எக்கா….” சிரித்துக்கொண்டேன்.

இலையற்ற கிளையற்ற அசைவோடு மனதுக்குள் தடுமாறியதை நம்புவதும் நம்பாததுமாக இரண்டு நான் அங்கே அமர்ந்திருந்தேன்.

கீழே தெரிந்த அந்த நிழலற்ற மாயத்தில் எனக்குக் காக்கையின் உருவம்தான் இருந்தது. அது பார்க்கப் பார்க்க ஓர் ஓவியத்தில் பறக்க முடியாமல் நின்றுவிட்ட வளைவை வெளியில் வைத்திருந்தது. சரி இறங்கலாம் என்றுபோது ஒரே ஒரு கொய்யாப் பழம் அங்கே வயிறு வீங்கித் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டேன்.

“ஓ இது…. இது கொய்யா மரமா…?” என்று அப்போதுதான் உறைத்தது. அப்போது செத்தவளை விட்டுவிட்ட மனதுக்குக் கொய்யாப் பழத்துக்குத்தான் நாக்கு பாதி என்றது. வெடுக்கெனப் பிடுங்கிக் கையாலாயே அழுத்திப் பிளந்தேன். கழுத்தைக் கொய்தது போலப் பழத்தின் இரு பாதி சம பாதியாக இல்லை. தனக்கென்று கொண்டதில் அதிகமும் செத்தவளுக்கென்று பிளந்ததில் சற்று குறைவும் இருக்க அந்தப் பாதியைத் தூக்கி அந்தச் சாக்கடைக்குள் எறிந்து செத்தவளுக்குச் சமர்ப்பித்தேன். பிண்டம் உனக்கு. அண்டம் எனக்கு. அல்லது பிண்டம் எனக்கு அண்டம் உனக்கு. அண்டமுமற்ற பிண்டமுமற்ற நீயும் நானும்.. இனி அண்டமுமல்ல…பிண்டமுமல்ல என்று உள் நாக்கு பிறழத் தானாக வந்த வார்த்தைகளில் இடி மின்னல் மழை வெயில் பனி எல்லாமும்.

மானுடப் பண்பில் தவறிடக் கூடாத மானுடன் நான் என்று நம்பிக்கொண்டேன். பாதி பிய்ந்த கொய்யாப் பழத்தில் ஒரு புழுவாக நுழைய முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் நொடியில் கனிந்து நெண்டியது எனக்குள். எனக்கு என்னிடம் பிடித்ததே இப்படிப் புலம்பித் திரிவதுதான். ஒரு புழுவின் சாயலைத் தானாக மனம் வேண்டியபோது சில நிமிடங்கள் அந்தக் கொய்யாப் பழத்தின் உட்சிவப்பில் அமர்ந்திருந்தேன். அது சொல்லிக் கொண்டிருந்த சம்பவத்தை நினைவூட்டியது.

நீங்கள் நீங்களாக இல்லாத சமயத்தில் நானாக மாறத்தான் வேண்டும். பொது விதிக்குள் இருக்கும் தனி விதி இது. இறங்கி வேகமாய் நண்பனைப் பார்க்கச் சென்றேன். போகும் வழியெங்கும் இருளும் ஒளியும் பிணைந்துகொண்டே கிடந்தன. பல இடங்களில் இருளே சிரித்திருந்தது. அசைவற்ற காற்றில் திசையற்று நின்றிருந்தது பூமி.

***

“நம்பறயா இல்லையா?” என்று கேட்கையில், கன்னத்தில் கை வைத்து, “நீ வர வர லூசு மாதிரி ஆகிட்ட விஜிதன். என்னென்னமோ பேசற…!”என்ற காதலியிடம் அடுத்து நடந்ததை அழுந்த கொடுத்த முத்தத்தில் இருந்து ஆரம்பித்தேன்.

’அந்த வழியா வந்திட்டிருந்தபோது ஒரு வாழை மரம் கண்ணுக்கு லட்சணமா வளைஞ்சு எல்லாம் காட்டிட்டு இருந்துச்சு. ஒரு கணம் நான் பேய் பிடித்தவனானேன். எனக்கு அப்போது புணர வேண்டும் போல இருந்தது. யாராவது மனிதர்கள் அங்கே இருந்திருந்தால், ‘ இந்த மாதிரி இந்த மாதிரி எனக்குப் புணரத் தோன்றுகிறது…..கொஞ்சம் உதவி செய்யுங்கள்’ என்று கேட்டிருப்பேன். அங்குதான் யாருமே இல்லையே. பேசாமல் வாழை மரத்தைக் கட்டிக்கொண்டு கால்களைப் பின்னிப் புணர ஆரம்பித்தேன். இதையும் நீ நம்பித்தான் ஆக வேண்டும். வாழை மரத்துக்கும் யோனி இருக்கும் என்பது ஆதி விதி. அங்கே ஒரு பிசாசு தன்னை வாழை மரத்துக்குள் நின்று கொண்டு எனக்கு இடம் கொடுத்தது. பிசாசின் பெரிய மனது பெரும்பாலும் தேவதைகளுக்கு வாய்ப்பதில்லை.

பளார் என்று விழுந்த அறையில்….”கண்ணம்மா, இது மட்டும் பொய்” என்றேன். கட்டிக்கொண்டாள். கால்கள் பின்ன…..!

மூச்சு வாங்கிக்கொண்டே,’ அப்பறம்…?’ என்றாள் கண்ணம்மா.

***

அப்பறம்.. நண்பனைப் பார்க்கப் போனேன்.

நண்பன் காணாமல் போய்விட்டான் என்றார்கள்… அவன் வீட்டில். அவன் வீட்டில் எட்டிப் பார்த்தேன். அவன் வீடும் காணாமல்தான் போயிருந்தது என்றான் ஒரு எதிரி. எதிரிக்குள் காற்றால் நுழைந்தபோது அவன் ரசனை அவ்வளவு நன்றாக இல்லை. அவன் அவனாகவே இல்லை. நானாகவும் இல்லை. எப்போதோ செத்துக் கிடப்பவனுக்கு வீதி எங்கும் துர்நாற்றம் என்பது மட்டும் நினைவில் இருந்தது. ஒரு வீட்டில் வாசலின் ஓரத்தில் கட்டிலில் படுத்துக் கிடந்த முதியவனை உற்றுப் பார்த்தேன். உற்றுப் பார்க்கும் அளவுக்கு எல்லாம் அவனுக்கு முகம் இல்லை. அதில் முகமூடி எத்தனை லேயர் என்பது மட்டும்தான் என் ஆராய்ச்சி. சிறு வயதில் என்னைப் பாலியல் பலாத்காரம் செய்தவன் என்று என்னால் மாற்றி யோசித்து நினைவு கூர முடிந்தது. ஒருவேளை அவன் அவனில்லாமல் இருந்தாலும் இப்படி ஒரு வாய்ப்பை நான் வீண் செய்ய விரும்பவில்லை. இதுதான் வாய்ப்பு. அவன் மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டு பல்லில்லாத அவன் வாயில் குறியைத் திணித்தேன். நேரம் ஆக ஆக அவன் மூச்சு திணறிச் செத்தான். நான் கீச்சு மூச்செனச் சிரித்தேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் கிழட்டு….. இங்கு ஒரு கேட்ட வார்த்தையை நீயே போட்டுக்கொள்.

கண்ணம்மா காதைப் பொத்திக்கொண்டு உற்றுப் பார்த்தாள். எதுவோ நிறைந்த முகத்தில் எதிலோ வழிந்த முத்தத்தை வழித்து எடுத்து அப்பினேன். வாய் நிறைய தின்றவளுக்கு வழுக்கிக்கொண்டு சென்ற தொண்டையின் அசைவைச் சுண்டு விரல் தடவி அறிந்தேன்.

***

நான் சொல்லிக் கொண்டிருப்பதெல்லாம் கனவில்லை என்று உறுதியாக நம்புகிறேன்.

தேவைக்குப் பயிரிட்டது போக வியாபாரத்துக்குப் பயிரிட்டவன் ஒருவனையும் காணவில்லை. பதுக்கி வைத்து விலையை ஏற்றித் தேவையை உருவாக்கியவனைக் காணவில்லை. சாதிக்கும் சாமிக்கும் செத்தவனைக் காணவில்லை. கொன்றவனைக் காணவில்லை. வெட்டியாய் விவாதம் செய்பவனைக் காணவில்லை. மீம்ஸ் போட்டு மீல்ஸ் சாப்பிடுபவனைக் காணவில்லை. கொலை செய்பவனைக் காணவில்லை. கொலையுண்டவனைக் காணவில்லை. கவிதைக்காரன்களைக் காணவில்லை. கொஞ்சம் நிம்மதியாகக்கூட இருந்தது. கவிதைகளைத் திருடித் தன் பெயர் போட்டுக்கொள்ளும் கொள்ளைக்காரங்களையும் காணவில்லை. வீதிச் சண்டியர் இல்லை. வீதிச் சண்டையும் இல்லை. துப்பாக்கிக்காரன்களைக் காணவில்லை. அரசாங்கம் இல்லாமல் போயிருந்தது. அணுகுண்டுக்கு வேலையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இருக்கும் கிணறு குளம் குட்டை ஆறு நதி என்று நீரை எடுத்து எடுத்து காசாக்கி கல்லா கட்டியவனைக் காணவில்லை. காதலுக்கு வாழ்ந்தவனையும் காணவில்லை. காதலுக்குச் செத்தவனையும் காணவில்லை. பள்ளிகள் இல்லை. கோவில்கள் இல்லை. ஆலயங்கள் இல்லை. மசூதிகள் இல்லை. நாய் பேய் காக்கா குருவி கோழி அணில் முயல் என்று ஒன்றையும் காணவில்லை.

தேடித் தேடித் தொலைந்ததில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் குட்டியாய்த் தெரிந்தது யானை ஒன்று.

எலும்பும் தோலுமாக யானையைக் காணுதல்தான் காட்டில் சாபம் என்று உரக்கச் சொன்னபோது கண்ணம்மா தூங்கிவிட்டிருந்தாள்.

***

புல்லாங்குழலைவிட யானையின் பசி ஆற்றும் மூங்கில் மேல் காதல் கொள்ளும் இசைக்காரன் நான் என்பதால் அந்த யானை அப்படிப் படுத்திருந்ததை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எழுப்பிவிட்டேன். அது அசைய மறுத்துப் படுத்துக் கொண்டேயிருந்தது. அத்தனை பெரிய யானைக்குக் காலச்சுருக்கம் போல வாழ்வின் பெரும் சுமையென அசைய மறுத்தது. பார்க்கப் பார்க்க…… கண்ணீரில் நானும் கண்களில் யானையும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருந்தோம். குழம்பாத குட்டை இருந்தென்ன லாபம். இரண்டு கைகளையும் அதன் முதுகில் சாத்தி என் உடல் பலத்தையெல்லாம் கொடுத்து முன்னோக்கித் தள்ளிப் பார்த்தேன். அது அசையவேயில்லை. தும்பிகையைப் பிடித்து இழுத்துப் பார்த்தேன். சிறுவயதில் தங்கையைச் சாக்குப் பையில் அமர வைத்து முன்னாலிருக்கும் இரு முனைகளையும் பிடித்து வீடு முழுக்க இழுத்துக்கொண்டு சென்றதெல்லாம் நினைவு வந்து தொலைக்கிறது. இப்போது தங்கையையும் காணவில்லை. என் குடும்பத்தையும் காணவில்லை. யாரெல்லாம் வேண்டியவர்களோ அவர்களெல்லாம் காணாமல் போனது குறித்து இந்த யானையிடமாவது சொல்ல வேண்டுமெனக் காதுக்குள் கத்துகிறேன். யானைக்கு வேறு ஏதோதான் கேட்கிறது. காது மட்டும் கேட்கவில்லை. அசைய மறுக்கும் யானைக்குக் காடு இல்லவே இல்லை. திரும்பிப் பார்க்கிறேன். காடெல்லாம் நிறம் மாறி செந்நிறம் போர்த்தியிருந்தது. என்னவோ நடக்கறது என்று புலப்பட்டது. வேகமாய் எழுந்து ஓடிவிட்டேன்.

யாரிடமாவது இது குறித்துச் சொல்ல வேண்டும் என்று ஓடியபோதுதான்…..சாலையோரம்.. ஆங்காங்கே ஐந்தடிக்குச் சில குடிசைகள் அசையாமல் நின்றன. ஆசையாய் ஓடிச்சென்று உள் நுழைய, உள்ளே யாருமே இல்லை. உள்ளிருக்கையில்தான் தோன்றியது; அது குடிசையே இல்லை. கூடாரம் மாதிரி. அந்தக் கூடாரத்தின் உள்ளே ஓரிடத்தில் மட்டும் மண் சற்று கூடுதலாக நெகிழ்ந்திருந்ததைக் காண முடிந்தது. வரலாற்று நினைவுகள்…… புவியியல் பூகோள அமைப்புகள்……அறிவியல் தத்துவங்கள் என்று என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியாத நிலையோடு முன்பு எப்போதோ படித்த ஒன்று நினைவுக்கு வந்தது.

பட்டென ஒரு நாயைப் போல மாறி அந்த நெகிழ்ந்திருந்த மண்ணைப் பறிக்க, இரண்டு கைகளும் நான்கு கால்களாகச் செயல்பட்டன. நினைவு என்னில் சரி. சரியான ஒன்றில்தான் நினைவுக்குச் சற்று கூடுதல் பலமென்று நம்பியதில் தவறுகள் சரியெனப் பட்டது. அங்கே தோண்டத் தோண்டப் பறிக்கப் பறிக்கக் கொஞ்ச ஆழத்திலேயே ஒரு பிணம் புதைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. நாடோடிகளில் ஒரு பிரிவு. அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் இப்படித்தான் அவர்களின் குடிசைக்குள்ளாகவே புதைத்துவிட்டுப் போய்விடுவார்கள் என்று படித்தது சரிதான். அங்கே மரணம் ஒரு நிகழ்வு என்பது மட்டும்தான். அங்கே அழவோ துக்கப்படவோ நிம்மதிக்கோ அது இல்லாமைக்கோ ஒன்றுமில்லை. ஒன்றுமில்லாத ஒன்றுக்குத்தான் இத்தனை பாடு. தோண்டி எடுத்த அந்தப் பிணத்திடம் நான் யானைக் கதையைக் கூறினேன். பிணம் கதை கேட்பதில் கெட்டி போல. தலையை ஆட்டி ஆட்டிக் கேட்டு இல்லாத பல்லைக் காட்டி இளித்தது. எல்லாம் புரிந்துவிட்டதாம். சரி கிளம்புகிறேன் என்றபோது என்னை வாரி அணைத்து என் முன் நெற்றியில் முத்தமிட்டது. சாக விடுபவர்களுக்குத்தான் அசைவில்லை. செத்துப் போகிறவர்களுக்கு அப்படி இல்லை. அது அசைத்துக் கொண்டுதான் இருக்கிறது பிரபஞ்சத்தை.

பிரபஞ்சத்தின் அடியே நடை போடும் வரிசையில் காரண காரியத்தோடு எறும்புகள். வேக வேகமாய் அதைச் சொல்லச் சென்று கொண்டிருக்கும் எறும்புகளுக்கு இனி சொல்லவும் மெல்லவும் என் கதையும் இருக்கும். உற்றுப் பாக்கவும் தோன்றாத நிலையில் ஒவ்வோர் எறும்பின் முதுகிலும் நானே சரிந்திருந்தேன். என் கால்களின் நயமுயக் கீறிக் கொண்டிருந்தது காலத்தின் வளைவுகளை.

வஞ்சத்தின் தேவையெல்லாம் தீர்ந்துவிட்டன போல. நெஞ்சம் வெடித்தழும் ஓலம் எனக்குள் எங்கோ ஒரு மூலையில் கசிந்துகொண்டே இருந்தது. எதுவெல்லாம் தானோ அதுவெல்லாம் நானோ என்ற கேள்விக்கும் பதிலுக்குமிடையே நானொரு தீப் பொறியாக மழைத்துளியாகத் தூசியின் நகலாகக் காற்றின் வெளியாக ஆகாயத்தின் ஓட்டையாக மாறிக் கொண்டிருந்தேன். நகரவும் முடியாமல் நகராமலும் முடியாமல் மையத்தின் உட்சுருங்குதலைக் கொண்டிருந்தேன். ஆயிரம் நுண்ணுயிர்க் கைகளை ஒவ்வொன்றாக இழந்துகொண்டே வந்தேன். இவ்வாழ்வில் இழப்பதற்குக் கண்டிப்பாக ஏதோ இருக்கிறது. உணர உணர அது இலகுவாக மாறியது.

***

அற்றுப் போவதன் அவசியம் தாமரையின் இலை நீர் குறித்துக் கவனமாய்ச் சிந்தை கிளறியது.

பிறகு இரண்டு நாட்களுக்குப் பின் ஆடையின்றிச் சுற்றுகையில் வழியில் கிடந்த ஆடையை எடுத்து அணிந்துகொண்டேன். அதன் பிறகுதான் தெரிந்தது அது என் காதலியின் ஆடை என்று. எதற்கு இங்கே கழட்டிவிட்டிருக்கிறாள் என்று யோசித்துக்கொண்டே, ஆடை அணிந்த பிறகு என்னைப் பார்க்கையில் என் காதலியைப் பார்ப்பது போலவே இருந்தது. அவளும் நானும் ஒரே உருவத்தில்தான் இருக்கிறோம் என்று ஆழமாக மனம் நம்பியது. மனம் என்று ஒன்றை ஏனோ தொலைத்துவிட நம்பிய சாரத்தில் அவளைப் போலவேதான் மாறி இருந்தது எனது நடை. இடைகூடச் சற்று பருத்திருந்தது. யானையின் பிளிறல் எனக்குள் காதாட்டியது. காட்டின் பரந்த நிலை என்னுள் பறக்கத் தொடங்கியது. விண்மீன்களின் கூட்டத்தில் கண் சிமிட்டிப் பார்க்கத் தோன்றியது. பூமி சற்று சுருங்குவது போல உணர்ந்தேன். காற்றின் அசைவற்ற தன்மை அத்தனை அழகானது. அற்புதமானது. அகோரமானதும்கூட. அதில்தான் வன்மையும் உண்மையும் இருக்கும்.

நான் நடையும் ஓட்டமுமாக வந்து பார்க்கையில் என் காதலியைக் காணவில்லை. எனக்கு அழுகை கண்ணீரின்றி முட்டிக்கொண்டு வந்தது. நேற்று வரை கொத்து கொத்தாய் ஆப்பிள் தொங்கிக் கொண்டிருந்த அந்தத் தோட்டத்தில் இப்போது ஓர் ஆப்பிளைக்கூடக் காணவில்லை. ஒரே ஓர் ஆப்பிள் கருகி கறுப்பின் வழமையில் பூத்திருந்தது. அது பூமிப்பந்தின் ஆறிப்போன நெருப்புத் துண்டைப் போல இருந்தது. என் காதலியையும் காணவில்லை. ஆப்பிளின் நிறமும் என்னை முதன் முதலாக பயமுறுத்தியது. அங்கே எதுவுமே இல்லாமல் இருந்தது. ஒரு மனிதனையும் காணவில்லை. காற்றில்லை. சுற்றி இருக்கும் மரங்களில் ஒன்றுக்கும் கிளைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அதில் இலைகள் இல்லை. இந்த பூமியே சுவாசமற்று இருந்தது.

புல் பூண்டு செடி கொடி இலை பாதை என்று ஒன்றும் இல்லாமல் இருந்தது. வெளிச்சம் மங்கிய பகலைத்தான் உணர்ந்தேன். அசசீரிகள் ஒன்றும் இல்லை. ஆகாயம் அங்கே இல்லை. அத்துவானங்களின் ஆக்கங்கள் யாவுமற்று உப்பிய வயிற்றை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது பூமி. ஸ்ஸ்ஸ்ஸ் என்ற அந்த ஆதிச் சத்தம் தன்னை உள் வாங்கிக்கொண்டதாக நம்பினேன்.

நான் நடுங்கிக்கொண்டே கீழே விழுந்தேன். உருண்டேன். புரண்டேன். எழுந்திருக்க முடியவில்லை. என்னை உணரும்போது என் வயிறுக்குக் கீழே புறுபுறுவென்றிருந்தது. என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஆனால் ஊர்ந்து நகர முடிந்தது. என் உடல் வலுவலுப்பாகிவிட்டிருந்தது. என் தலை தாத்தாவின் கைத்தடித் தலை போல, குச்சி மிட்டாய்த் தலை போல ஆகியிருந்தது. எனக்கு வால்கூட முளைத்திருந்தது. இப்போது என்னால் நன்றாக உணர முடிந்தது.

நான் ஒரு பாம்பாகிவிட்டேன்.

என்ன பாம்பென்று தெரியவில்லை. என்னை ஆராயும் மனநிலையும் இல்லை. உடல்நிலையும் இல்லை. கோரப் பசி. அந்தக் கறுப்பு ஆப்பிள் மட்டும்தான் தலைக்கெட்டும் தூரத்தில் இருந்தது. வேறு வழி இல்லை. அந்த ஆப்பிள் என் பசியைப் புரிந்துகொண்டு என் நடு முதுகில் நச்சென்று விழுந்து, “வா வந்து தின்னு” என்றது. இந்த பூமியைக் கொல்லு என்பது போல கயமய பாஷையில் ரக்கிரி புக்கிரி என்றது. நான் கிழிந்த வாயில் சிரித்தேன். இரண்டு நீண்ட பற்களில் கொக்கானி காட்டினேன்.

சாபம் கொடுத்த ஆப்பிளே சாபம் நீக்கியது. அங்கே அந்தத் தோட்டம் நாலாபுறமிருந்தும் குறுகிச் சுருங்கி ஒரு புள்ளியை நோக்கி வந்து கொண்டிருந்தது. விரிந்த குடையின் மறந்த நடையெனச் சுருங்கும் நுகத்தடி குறுகினச் சிதிலமென அது தன் போக்கில் வட்டமிட்டு வட்டமிட்டுக் கழுகின் சித்திரத்தைக் கைக்குள் கொண்டு வந்து கழுத்தைச் சிக்க வைத்துக்கொண்டதைப் போல இருந்தது.

நாட்கள் நகர என்னால் வேகமாய் நகர முடியவில்லை. என் நீளம் குறைந்திருந்தது. நான் குட்டைப் பாம்பனாகிவிட்டேன். கொஞ்சம் குண்டாகிவிட்டேன். இப்போது ஊறுவதற்கு பதில் வளைந்து ஒற்றை வாலில் நடக்கத் தொடங்கியிருந்தேன். பாதி தூரம் போவதற்குள் பாதி நாள் ஆகிவிடுகிறது. எனக்கே புரிந்துவிட்டது. நான் புழுவாகிவிட்டேன். எனக்கு வயிறு சிறிதுதான் என்றாலும் அதற்குள் இப்போது பசி இல்லை. தாகம் இல்லை. தானற்று நகர்ந்து கொண்டிருந்தேன். நான் எதுவோ என்றுதான் நம்பினேன். எல்லாம் மறந்து கொண்டிருந்தது. அது நன்றாகவும் இருந்தது. புழுவாய் நீந்தி நீந்தி நீண்டு நீண்டு நகர்ந்து செல்கையில் நான் சிரிக்கிறேனா அழுகிறேனா தெரியவில்லை. தெரியவும் விரும்பவில்லை. இந்த பூமி கொஞ்ச கொஞ்சமாய் குறைந்து கொண்டும் கரைந்து கொண்டுமிருந்தது. காலம் வேகமாய் மிக வேகமாய்ச் சுழன்றது.

சூரியன் அற்ற வெளி இதுதான். சுருங்கக் கூறின் நரம்பின் கொழுப்பில் நானற்று நகரும் புழுவுக்கு நெற்றியில் விதி இல்லை. முட்டியில் பிண்டம் இல்லை.

வானத்தில் ஒன்றுமில்லை. பிரபஞ்சம் தன்னை எங்கோ நகர்த்திக்கொண்டது. பால்வீதியும் பால்நிலவும் “பாப்பாம்……பாப்பாம்” என்று ஒலி எழுப்பியபடியே மறைந்துகொண்டது. நாள்களற்ற ஒரு பொழுதில் நான் புழுவிலிருந்து அதற்கும் குறைவான உயிராய் மாறினேன். இடையில் மீன் கனவு வந்தது எல்லாம் தனிக்கதை. பின் ஒரு பொழுதில் நான் கண்ணுக்குத் தெரியாத ஒரு செல் அமீபாவாக மாறிப் போனேன். பெருவெடிப்புக்குத் தேவை இல்லாத பிரபஞ்சம் என்னை வாவென்று அழைத்துக்கொண்டது. நான் இப்போது தூசியாகி வெற்றிடமாகி சூனியமாகி ஒன்றுமில்லாமல் போயிருந்தேன்.

“இந்த உலகத்தில் கடைசி மனிதன் நான்தான்” என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். கடைசி மனிதன் சொன்னால் நம்பித்தானே ஆக வேண்டும்…..!

கவிஜி

கோவையில் வசிக்கிறேன். ஒரு தனியார் கம்பெனியில் மனிதவள மேலதிகாரியாக பணி புரிகிறேன். அதே நேரம் திரைப்பட இயக்குனர் ஆக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இலக்கல்ல வாழ்க்கை. இலக்கை நோக்கிய பயணமே வாழ்க்கை என்ற புத்தனின் தத்துவத்தில் சற்றே சித்தார்த்தனாகிச் சிதறுவது இயல்பின் திரிபு எனக்கு. எழுதுவதால் வாழ்கிறேன். எழுதுவதற்கே வாழ்கிறேன். 'நிழல் தேசத்துக்காரனின் சித்திரப் பறவைகள்' எனது முதல் கவிதை நூல் 2016-இல் 'புதுவை ஒரு துளி கவிதை' அமைப்பு மூலமாக வெளியானது. 'ஊதா நிறக் கொண்டை ஊசி கதைகள்' எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 2017-இல் 'சென்னை பூவரசி' வெளியீடாக வெளியானது. படைப்பு குழுமத்தின் 2018-க்கான சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விருது பெற்றது. 'பச்சை மஞ்சள் சிவப்பு' எனது முதல் நாவல் 2018-இல் 'கோவை சப்னா' வெளியீடாக வெளியானது.

Share
Published by
கவிஜி

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago