இன்று வானம் கருநீலத்தில் தண்ணென்று குளிர்ந்து புலர்ந்திருக்கிறது. நல்ல காலை. மகிழத்தின் இரவு வானில் செம்பன் சற்று அடர்ச் செம்மை கொண்டு செவ்வொளியைப் பொழியும்போது மென்சூட்டைக் கிளப்பிவிடும். சூடு சற்று அதிகமாகும் மறுநாள் காலைகள் எப்போதும் இப்படி இனிமையாகவே விடிகின்றன.
கருங்காலைகள் எனக்கு மனதிற்கினியவை. வானில் நீலா தன் நீல ஒளியை இளங்குளிரோடு பொழிந்து கொண்டிருக்கிறது. என் குடியிருப்பைச் சுற்றி இருந்த மரத்தோட்டங்களில் மகிழ மர இலைகள் நீலத்தில் இருந்து இளஞ்சிவப்புக்கு மாறிக் கொண்டிருக்கின்றன.
அதிகாலையிலேயே எழுந்து மாடிக்குச் சென்று கண்களை 360 பாகையில் சுழலவிட்டு நீலாவைப் பல நிழற்படங்கள் எடுத்துச் சேமித்து வைத்துக்கொண்டேன். நிறம் மாறும் மகிழ மரங்களையும், பூக்கத் தொடங்கும் குமுக மலர்களையும் நீலாவோடு சேர்த்துப் பதிந்துகொண்டேன். ஓய்வாக இருக்கும்போது எடுத்துப் பார்த்து ரசிக்க.
மகிழத்தின் அனைத்து மொழிகளிலும் இயற்கையைப் பாடுவதென்றால் நீலாவைப் பாடுவதுதான். தன் மென்குளிரால் இதமாய் அணைக்கும் நீலா, அன்னை போல் கொடுப்பவள் நீலா, யாதுமானவள் நீலா. நீலா நீலா நீலா. மீண்டும் மீண்டும் பார்த்தாலும், மீண்டும் மீண்டும் கேட்டாலும் நீலா மட்டும் எந்நாளும் சலிப்பதேயில்லை.
ஒவ்வோர் இரவிலும் செம்பனும்தான் எழுந்து வருகிறான். மரங்களை நீலமாக்குகிறான், நிலத்தில் நறுமணத்தோடு சூட்டையும் கிளப்பிவிடுகிறான். சில இரவுகளில் காண அழகாகவும் இருக்கத்தான் செய்கிறான். மிதமான சூட்டைக் கிளப்புவானாகினும் பயிர்க் கோபுரங்களுக்கு உள்ளிருக்கும் சூட்டின் அளவுக்கெல்லாம் அவன் புழுங்குவதில்லை.
ஆனாலும் அவனைப் புகழ்ந்து பாடி ஒரு பாட்டும் நான் பார்த்ததாக, கேட்டதாக நினைவில்லை. வியப்புதான் இது. பல இரவுகளில் நானே அவனைப் புகழ்ந்து ஏதாவது எழுத வேண்டும் என நினைத்துக்கொள்வேன். எதிலும் முதல் என்பது ஒரு பெரும் கிளர்ச்சியல்லவா. இதை நினைக்கும்போதெல்லாம் என்னையறியாமல் புன்னகைத்துக்கொள்கிறேன்.
கீழே இறங்கி வரும்போது அமுதன் கண்களில் ஆடியை அணிந்துகொண்டு இருக்கையில் சாய்ந்திருந்தான். நான் நடந்து சென்று அவன் கண்களில் இருந்த கண்ணாடியைக் கழட்டி அருகில் இருந்த மேசையில் எறிந்துவிட்டு அவன் மடியில் தாவிப் படுத்தேன்.
“எழுந்தவுடன் ஒளிப்படம் பார்ப்பதன்றி வேறு அலுவல் இல்லையா உனக்கு?” என்றேன் சற்று எரிச்சலாக. அமுதன் ஒன்றும் சொல்லாமல் என் தலையைக் கோதினான்.
ஓரிரு நிமிடங்களில் என் எரிச்சல் வடிந்து அவன் தொடுகையில் கிறங்கிப் படுத்திருந்தேன். என்னை எங்கே தொட்டால் கிறங்குவேனென இவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.
“கள்ளா, வா,” அவன் கழுத்தை இழுத்து உதட்டில் ஆழ முத்தமிட்டேன்.
என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்.
“என்ன நேற்றில் இருந்து ஒரே நிசப்தம், உன் தொண்டையிலிருந்து குரலே எழவில்லையே,” என்றேன்.
அமுதன், “ஒன்றுமில்லை,” என்றான். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். இந்த ஆண்களுக்குக் குழந்தை என்று வரும்போது மட்டும் இந்த உணர்வு எழுந்து வந்துவிடுகிறது.
“எனக்குத் தெரியாதா. குழந்தையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறாய் நீ,” என்றேன்.
முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, “அல்ல,” என்றான்.
“எரிமறைந்த நிலக்கதைகள் படித்திருக்கிறாயா?” என்றேன்.
அமுதன் இடதும் வலதும் தலையை ஆட்டினான்.
அவன் தலையில் தட்டிவிட்டு, “உனக்கு அந்தத் திரையைக் கண்ணில் ஒற்றிக்கொள்ளவே காலம் சரியாக இருக்கிறது. பல பல பல நூறு வருடாந்திரங்களுக்கு முன் ஆண்கள் பெண்ணின் கருப்பையில் நேரடியாகவே விந்தைச் செலுத்துவார்களாம். தன் விந்தைச் சுமக்கும் பெண்ணை அந்தக் காலத்திய ஆண்கள் இல்செறிப்பு என்னும் முறையில் அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் என இந்தப் புராணத்தில் வருகிறது. ஆண்கள் கொடூரக் குணம் கொண்டவர்களாகவும், உயிர்க் கொலை புரிபவர்களாக இருந்ததாகவும்கூடச் சொல்கிறது. அந்தக் குணம் மரபணுவில் இருப்பதால்தான் இப்படி எல்லா ஆண்களும் விந்து என வந்துவிட்டால் முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்கிறீர்களோ?” என்றேன்.
அமுதன் என்னை நையாண்டியாய்ப் பார்த்தான்.
“ஆண்கள், இற்செறிப்பு… உயிர்க் கொலை… இந்தக் குப்பைகளைப் படிக்க வேறு வேண்டுமா நான்?” என்றான்.
நான் உரக்க நகைத்துவிட்டு, “உண்மையாகக்கூட இருக்கலாம் அல்லவா. வேறெதற்கும் நீ என்னிடம் பிணங்குவதில்லையே. என் கருமுட்டையை வேறு விந்து கொண்டு வளப்படுத்திக்கொள்கிறேன் என்றவுடன் இரண்டு நாளாய் முகம் வாடி, குரலடங்கிப் போய்ச் சுற்றி வருகிறாய்.” என்றேன்.
“கனி, எல்லா ஆண்களையும் போல எனக்கும் உன் கருப்பை அளிக்கும் எக்குழந்தையும் என் குழந்தையே. என்னுடைய வருத்தம் நீ பெண் பிள்ளை மட்டுமே வேண்டும் எனச் சொன்னதால்தான். நீ இப்படிப் பெண் மகவு மட்டுமே அளித்த ஆண்களின் தகவலைச் சட்டத்திற்குப் புறம்பாகப் பெற்றாய் என்பது அரசுக்குத் தெரிந்தால் உன் பதவியே பறிக்கப்படக்கூடும்,” என்றான் அமுதன்.
“எப்படித் தெரியும். அதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். அதுவும் நான் பெண் மட்டும் போதுமெனச் சொல்லவில்லை அமுதா, முதல் பிள்ளை பெண்ணாய் இருந்தால் நன்று. உன் விந்து ஆண் பிள்ளையைத்தான் ஜனிக்கிறது, நான் என்ன செய்ய. முதல் பிள்ளையை நீ நன்றாக வளர்த்தால், அதன் பிறகு உன் விந்தை வைத்தே அடுத்த கருவை வளப்படுத்திக்கொள்வோம். அடுத்து ஆண் மகவிருக்கட்டும். நான் பனியைப் போல ஆண் மகவே வேண்டாமென்றா சொல்கிறேன். என்றாவது உன்னை ஆணாய் அடங்கி இரு என அதட்டி இருக்கிறேனா சொல்,” என்றேன்.
“பெண்ணாட்சி இல்லா வீடு பொலிவிழந்து கெடும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு. நீ கண்ட கதைகளைப் படித்துவிட்டு என்னை ஓர் ஆணாக இருக்க விடுவதில்லை. சில வேளைகளில் பெண்ணுக்குரியதையும் செய்ய வைக்கிறாய்,” என்றான். அவன் கண்களில் சோகம் தெரிந்தது.
“நாம் ஏன் சமமாக இருக்கக்கூடாது அமுதா?” என்றேன். என் வாயைத் தன் வலக்கையால் பொத்தினான்.
“இப்படிப் பேசுவதை நிறுத்து. நீ செய்யும் வேலைகளில் ஒன்றைக்கூடக் குறையின்றி என்னால் செய்ய முடியாது. நான் செய்வதையும் நீ செய்ய முடியாது. ஒரு பெண் வளர்த்த குழந்தையை நான் பார்த்தவுடன் தெரிந்துகொள்வேன். அவரவர் வேலைகள் அவரவர் சரியாகச் செய்தால் போதும்,” என்றான்.
“அப்படியொன்றுமில்லை, என் காவல் எல்லையில் இப்பொழுது இரண்டு ஆண்கள் காவலதிகாரிகளாய் இருக்கிறார்கள் தெரியுமா? காலம் மாறி வருகிறது. ஆண்களும் பெண் வேலைகளை முயன்றால் செய்ய முடியும்,” என்றேன்.
என் தலை அதிராமல் இருக்கையில் விழும்படி எழுந்து சமையல் மேஜையை நோக்கி நகர்ந்தான்.
“எங்கே ஓடுகிறாய்?” என்றேன் நகைத்துக்கொண்டு.
“எனக்கு வேலை இருக்கிறது. உன்னோடு வாய்ச் சமருக்கெல்லாம் காலமில்லை. என்ன உண்கிறாய், வழக்கம் போல் பாலண்ணமா?”
நான் பதில் சொல்லக் காத்திருக்காமல் மேசையில் பொத்தான்களை அழுத்தினான். மேசைக்குக் கீழ் அடுப்பு மூட்டப்படும் ஒலியும், மளிகைப் பொருள் கொள்கலன்கள் திறக்கப்படும் ஓசையும் மெதுவாகக் கேட்டது. அருகில் இருந்த வைப்பறையைத் திறந்து திறனேறிக் கொண்டிருந்த இருவருடைய செல்லங்கிகளையும் தற்பரிசோதனை நிலைக்கு மாற்றினான்.
அலைகொலுவியைக் காதில் சொருகிக்கொண்டு படுக்கை அறைக்குள் நுழைந்தான். ஒரு நாள்கூட அவன் மகனை அலைகொலுவியில் அழைத்துப் பார்க்காமல் பேசாமல் இருப்பதில்லை. ஆனால் ஒரு நாளும் நான் பார்க்கப் பேச மாட்டான், அது ஏனென்று எனக்கு விளங்கியதில்லை. அவன் கதவை அடைக்கும் முன் அவன் கண்ணிலிருந்து 180 பாகையில் அறைக்குள் அவன் மகனின் முப்பரிமாணப் பிம்பம் பீச்சப்படுவது தெரிந்தது.
நான் அமுதனை முதலில் சந்தித்தபோது அவனுடைய முன்னாள் அணுக்கி அவனை விலக்கிய வருத்தத்தைவிடத் தன் மகனைப் பிரிந்திருக்க வேண்டிய சோகத்தில்தான் அதிகம் உடைந்துபோய் இருந்தான். மகிழத்தில் உள்ள ஒவ்வோர் ஆணும் தனக்கு நடக்கவே கூடாதென நினைக்கும் துயரம் அது. தமிழ் நிலத்தில் என்றல்ல, மகிழம் முழுக்கவே கருப்பை வழி உரிமை முறைதான். குழந்தை நேரடியாகப் பெண்ணிற்கே சொந்தம். விலக்கப்பட்ட ஆணுக்கு விலக்கூதியம் கொடுக்கப்பட்டால் போதும். அமுதனின் அணுக்கி அனுமதிக்கபட்ட நேரங்களில்கூடப் பிள்ளையைப் பார்க்க விடுவதில்லை என என்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட காவல் கோட்டத்தில் வழக்கு பதிய வந்த போதுதான் முதன் முதலில் அமுதனைச் சந்தித்தேன். அழுகையால் சிவந்த மூக்கும், பதட்டத்தால் கடிபட்ட உதடுமாய் உட்கார்ந்திருந்தான்.
எங்கள் நெறி நிலைநாட்டு நிலையங்களுக்கு வரும் முக்கால்வாசி வழக்குகள் அனுமதியற்ற பிள்ளைத் தடையும், ஆண் கவர்தலும்தான்.
முன்னதில் மன்றாட்டோடு ஆண்களும் பின்னதில் விட்டால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வெறியோடு பெண்களும் உட்கார்ந்திருப்பார்கள்.
வழக்கமான சலிப்போடுதான் அவன் மன்றாட்டு நகலை வாசித்தேன். அவன் விலக்கூதியத்தை வாங்க மறுத்ததால் கோபம் கொண்டு அவன் அணுக்கி குழந்தையைப் பார்க்க விடுவதில்லை எனச் சொல்லியிருந்தான். பல பெண்களின் விலக்கூதியத் தொகையில் மொத்த வாழ்க்கையும் வாழ்ந்துவிடும் ஆண்கள் மத்தியில் அது வேண்டாம் எனச் சொன்ன முதல் ஆணை என் பத்து வருட நெறியாள்கை வாழ்வில் அப்பொழுதுதான் பார்த்தேன். உடனே என் அறைக்குள் அழைத்து அமுதனிடம் பேசினேன்.
“விலக்கூதியத்தை ஏன் மறுக்கிறீர்கள்?”
“நான் விவசாயத் துறையில் தலைமை விவசாயியாக இருக்கிறேன். இந்த விலக்கூதியத்தால் எனக்குப் பயனொன்றும் இல்லை. என் குழந்தைக்கு அதைச் செலவழிக்கும்படிச் சொன்னதிற்கு எனக்கு இந்த நிலை,” என்றான்.
“அதை வாங்கி நீங்கள் குழந்தையைச் சந்திக்கும் நாட்களில் பரிசாகக் கொடுத்துவிடலாமே?”
சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “அருணனைக் கருவுறும்போது கருப்பை நல நிலையத்திற்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தார் என் அணுக்கி. இயந்திரங்களின் அணைப்பில் குழாய்கள் சூழ இருந்த அவர் கருப்பைக்குள் இருந்த கருமுட்டையை ஊசி மூலம் என் விந்தைச் செலுத்தி வளப்படுத்தியதை என் கண்களால் பார்த்தேன்,” என்றுவிட்டு மேலே பேசாமல் தயங்கிக் கொண்டிருந்தான்.
“நீங்கள் அஞ்சாமல் எதுவும் சொல்லலாம். நீங்கள் இப்போது சொல்வதெதுவும் உங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட மாட்டாது,.”
அப்பொழுதும் தயக்கமாகச் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.
என் மேஜையில் இருந்த குமிழை அழுத்தி அறையின் அனைத்துப் பதிவுக் கருவிகளையும் அணைத்தேன். என் கண்ணைப் பார்வை மட்டுமான நிலைக்கு அவன் காணும்படி மாற்றி வைத்தேன்.
“ஒரு பதிவும் இருக்கப் போவதில்லை பயமில்லாமல் சொல்லுங்கள்.”
தன்னைத் திரட்டிக்கொண்டு சொல்ல ஆரம்பித்தான். “அன்று எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ஒரு பெண் பிறந்தவுடன் கருமுட்டைப் பையும் கருப்பையும் அகற்றப்பட்டுத் தனி உயிரி போலக் கருப்பை நிலையங்களில் வளர்க்கப்படுகிறது. ஆனால் என்னைப் போன்ற ஆண்கள் விந்தை வாழ்நாள் முழுக்கச் சுமந்து கொண்டுதான் அலைகிறோம். என்னுடலில் ஒரு நாள் முன்வரை இருந்த திரவம் உருவாக்கும் குழந்தையின் மேல் எனக்கிருக்கும் வாஞ்சையைவிடப் பல வருடங்கள் தன் உடலைவிட்டுத் தனியாக வளரும் கருமுட்டையும் கருப்பையும் உடைய பெண்ணிற்கு அக்குழந்தை மேல் பாசம் இருக்க வாய்ப்பில்லை. இது நிரூபணமற்ற அசட்டு எண்ணம்தான், ஆனால் எனக்கு இந்த எண்ணம் வந்த பிறகு அன்பு கொண்ட உயிருக்கு விந்தளிப்பு ஊதியம் பெறுவதை என் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்றான்.
“எந்த ஆணும் எந்தக் குழந்தைக்கும் உரிமை கோர முடியாதென்பது விதிவிலக்கில்லாத நெறி. அதைக் கோரும் ஆண்கள் மலடாக்கப்பட்டுத் தங்கள் குழந்தைகளிடமிருந்து முற்றிலும் விலக்கப்படுவார்கள் என்பது தெரியும் அல்லவா?”
அமுதன் பதட்டத்துடன், “நான் உரிமையெல்லாம் கோரவில்லை. என் குழந்தை மேல் உள்ள அன்பால் எனக்கு விலக்கூதியம் வேண்டாம் என்றே சொல்கிறேன். அருணன் என்றும் என் அணுக்கிக்கு உரியவனே. அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. நீங்கள் நெறிகளைவிட இரு பக்க நியாயங்களைப் பார்ப்பவர், அதற்கும் மேலாக ஆண் பெண் பேதம் சற்றும் பார்க்காதவர் என்று என் நண்பர்கள் சொன்னார்கள். அதனால்தான் இதை உங்களிடம் சொல்கிறேன். வேறு யாரிடமும் பதிவுகளற்றுகூட இதையெல்லாம் சொல்லியிருக்கமாட்டேன்.,” என்றான். பயந்திருக்கிறான் என்பது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.
“இது நாள் வரை உள்ள உங்கள் நடத்தையில் நீங்கள் விதிமீறல்களில் எந்த நாட்டமும் காட்டவில்லை என உங்கள் நடத்தை அறிக்கை காட்டுவதால்தான் உங்களோடு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இல்லாவிட்டால் காவல் யந்திரங்களை வரவழைத்திருப்பேன்.”
அவன் பயத்தில் உறைந்து உட்கார்ந்திருந்தான்.
“நீங்கள் விலக்கூதியம் மறுப்பதால் உங்கள் அணுக்கிக்கு நிகழும் சங்கடங்களை எண்ணிப் பார்த்தீர்களா? நீங்களே சொல்லுங்கள், தன் முன்னாள் அணுக்கனுக்கு விலக்கூதியம் சரியாகக் கொடுக்காத பெண்ணுக்கு அணுக்கனாக நீங்கள் சம்மதிப்பீர்களா?”
இல்லை என்பது போலத் தலையை ஆட்டினான்.
“விலக்கூதியம் வேண்டாமென நினைக்கும் நீங்களே இப்படிப்பட்ட பெண்களைத் தவிர்க்கும்போது மற்றவர்கள் அவர் அருகில்கூடச் செல்ல மாட்டார்கள. இது அவருக்கு எவ்வளவு பெரிய சமூக இழுக்கைத் தரும் என்பதை யோசியுங்கள்,”
“வேறு வழியே இல்லையா?” என்றான், பரிதாபமாக.
நான் சற்று யோசித்துவிட்டு, “இருக்கிறது. விலக்கூதியத்தை உங்கள் மகன் பெயரில் அரசாங்க வைப்பில் வைக்க இடமிருக்கிறது. உங்கள் அணுக்கி நேரடியாக உங்கள் பெயரில் அதைச் செய்ய முடியும். அவன் வயது வந்தபின் அதை எடுத்துக்கொள்ளலாம்,” என்றேன்.
முகம் மலர, “இது சரியாக இருக்கும்,” என்றான்.
“உங்களுக்குச் சம்மதமெனில் உங்கள் முன்னாள் அணுக்கியோடு பேசி இதை நானே நேர் செய்துவிடுகிறேன்.”
எழுந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டான். “மிக்க நன்றி,” என்றான், அவன் உதடுகள் மெல்லத் துடித்துக் கொண்டிருந்தன.
அவன் வழக்கு சுமுகமாகத் தீர்க்கப்பட்டவுடன், சில மாதங்கள் கழித்து அவனை ஓர் இசை அரங்கில் பார்த்தேன். பார்த்தவுடன் ஓடி வந்து கட்டிக்கொண்டான். அவன் நண்பர்களிடமெல்லாம் நான் இல்லாவிட்டால் தன் மகனைப் பார்த்தே இருக்க முடியாது என அறிமுகப்படுத்தினான். என்னை மகிழ்விப்பதில் குறியாய் இருந்தான். ஒன்றாகச் சேர்ந்து உணவருந்தப் போனோம். அவன் உணவிற்கான பணத்தை அவனே செலுத்துவதில் மட்டும் பிடிவாதமாய் இருந்தான். ஆண்களிடம் காணவே கிடைக்காத ஒருவிதத் தற்சார்பு மனப்பான்மை அமுதனுக்கு எப்போதும் உண்டு. அந்த முறையும் அவன் உதடுகள் மெலிதாய்த் துடித்துக் கொண்டிருந்தன. ஓரிரு மாதங்களில் மேலும் சில சந்திப்புகளுக்குப் பிறகு அவனை என்னோடு குடியமர்த்திக் கொண்டேன்.
அவன் என்னோடு வந்தும்கூட இரு வருடங்களுக்கு மேலாகிறது. அமுதனால் பிள்ளைகளை மிக நன்றாக வளர்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை மிக விரைவாகவே வந்துவிட்டாலும் என்ன குழந்தை வேண்டும் என முடிவெடுக்க எனக்கு இவ்வளவு காலம் பிடித்துவிட்டது.
அமுதன் தன் மகனைப் பார்த்துப் பேசி முடித்துவிட்டு வெளியே வந்தான். உணவும் சமையல் மேஜையின் மேல் தயாராக இருந்தது.
“பாலும், அரிசியும் சமையல் மேஜையறையில் குறைவாக உள்ளது. மேஜை ஏற்கனவே நிறைப்பதற்கான உத்தரவை அனுப்பிவிட்டது. இன்று நீ எனக்கு முன் வந்துவிட்டால் மாடியில் தருவிக்கப்பட்டிருக்கும், அதைக் கொண்டு வந்து நிறைத்துவிடு,” என்றான்
மேஜையில் அவனோடு உட்கார்ந்து பாலண்ணம் அருந்தினேன். “அமுதா, சமையல் குறிப்பில் இனிப்பைக் கொஞ்சம் அதிகப்படுத்தி வைக்கச் சொன்னேனல்லவா. குறைவாக இருக்கிறது,” என்றேன்.
“இது போதும். அதி இனிப்பு அவ நஞ்சு,” என்றான்.
நான் உரக்க நகைத்துவிட்டு, “பழமொழிகளின் ஊற்றாகிவிட்டாய் நீ,” என்றேன்.
“இன்று அறுவடை நாள் சற்று முன்னே செல்ல வேண்டும். மாலையில் பார்ப்போம்,” அவன் உண்ட தட்டைச் சமையல் மேசைக்கு மறுபுறம் இருந்த சுத்திகரிப்புக் கலனில் போட்டுவிட்டு எழுந்தான்.
செல்லங்கிக்குள் தன் உடலைச் செலுத்திக்கொண்டு, கையில் தலைக் கவசத்தை எடுத்துக்கொண்டு என் அருகில் வந்தான். என் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு, “எப்பொழுது சந்திப்பு?” என்றான்.
“மதியம்.”
“அந்த விந்துதான் என முடிவெடுத்துவிட்டால் அவனோடு கூடிவிடு. விந்தளிப்பவனோடு கூடாமல் பெறப்படும் குழந்தைகளிடம் பெண்களுக்குப் பாசம் பெரிதாக இருப்பதில்லை. இதை நான் அனுபவத்திலேயே பார்த்திருக்கிறேன்,” என்றான்.
நான் ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்தேன்.
“இதையாவது தயவுசெய்து கேள். வருகிறேன்,” என் தலையில் முத்திவிட்டு மாடிக்குச் சென்றான்.
என் செல்லங்கி இன்னும் ஐந்து நிமிடத்தில் எனக்கான செல்வழி ஒருக்கப்பட்டுவிடும் என்பதற்கான ஒலியை மூன்று முறை எழுப்பியது. நானும் எழுந்து செல்லங்கிக்குள் என்னை நுழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றேன். மாடியின் வட முனையில் எங்கள் குடியிருப்புக்கான தாவு மையம் இருந்தது. இங்குக் குடியிருப்போர் அனைவரையும் காலை வேளையில் அங்கே பார்க்க முடியும். அனைவருக்கும் மகிழத்தில் இரு வேலை நாட்கள்தான். மற்ற நாட்களில் எல்லாம் எந்திரங்கள் வேலை செய்யும்.
தாவு மையத்தில் உற்சாகமான முகங்கள், சில தெரிந்தவை, சில தெரியாதவை. தெரிந்த முகங்களுக்கு முகமன் தெரிவித்துக்கொண்டு சென்று வரிசையில் முன் சென்று நின்றேன். அவர்கள் முறைக்குக் குறைந்தது அரை மணி நேரம் முன்பாகவே தாவு மையத்தில் குழுமிக் கதையடித்துக் கொண்டிருப்பதுதான் முக்கால்வாசிப் பெண்களின் இயல்பு. நான் அப்படிச் செல்வதில்லை.
நீலத்திரைக் கதவுகள் திறந்துகொண்டன. நான் தாவுதட்டில் சென்று நின்று தலைக் கவசத்தை அணிந்துகொண்டேன். கதவு மீண்டும் மூடியது. தாவுத்தட்டு என்னை உந்தி என் செல்திசையில் வானில் செலுத்தியது.
அரை நிமிடத்தில் என் வழியில் இருந்த இன்னொரு தாவுத்தட்டில் செல்லங்கி என்னை இறக்கி மற்றொரு உந்தலைப் பெற்றுக்கொண்டது. இரண்டு தாவல்களில் என் வேலையிடம் வந்துவிடும். அமுதனுக்கு ஆறு தாவல் தூரத்தில் இருந்தது அவன் வேலை செய்யும் கதிர்க்கோபுரம். நிறைய தாவல்கள் இருப்பதால் அவனுக்கு வழி ஒருங்க நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தாவலுக்குக் கூட்டமதிகமில்லாத நேரமான முன் காலையில் கிளம்பிச் சென்று பின் மதியத்தில் வீடு சேர்ந்துவிடுவான். சில நாட்களில் தாவல் நேரம் ஒருங்க தாமதமானால் பொதுப் பறக்கைகளிலும் சென்று வருவான். நான் பொதுப் போக்குவரத்துகளைத் தவிர்த்துவிடுவது வழக்கம். அனைத்துப் பார்வையும் என் மேலேயே இருக்கும், எனக்கு அது பிடிப்பதில்லை.
மாடியில் இருந்து இறங்கி என் அறைக்குள் சென்று செல்லங்கியைக் கழட்டுவதற்குள் பனி வந்துவிட்டாள். அவள் உடலும் சேர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தது.
“எப்படியிருக்கிறது?” என்றாள்.
“எப்போதும் போல,” என்றேன், அவளைப் பார்த்துச் சிரித்தபடி.
என் புஜத்தை அழுந்தக் கிள்ளினாள்.
“வலிக்கிறதடி” அவள் கையை விலக்கிவிட்டேன். உண்மையிலேயே வலித்தது.
“வலி தெரிகிறதல்லவா அப்பொழுது கிளர்ச்சியும் தெரியும். என்னிடம் எப்போதும் போல என்றெல்லாம் உளறாதே. சொல்,” என்றாள் முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டு.
“உண்மையிலேயே பெரிதாக ஒன்றும் இல்லை. சரியானவனாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர.”
“முதல் குழந்தையடி. உன் சம நிலையெல்லாம் சற்றுத் தூக்கித் தூரப்போடு. மகிழ்ந்திரு, கிளர்ந்திரு, வாஞ்சை கூட்டுயிரு. குழந்தைக்குத் தெரியுமடி இதுவெல்லாம்,” என்றாள்.
நான் வாய்விட்டு நகைத்தேன்.
“மனமறிவதைத் திண்ணமாக அறிய முடியுமென்றால் அதோ அங்கு நிற்கிறதே காவல் யந்திரம், அதையும் நம்மால் பிள்ளை பெற வைத்திருக்க முடியும். சிரிக்காதே. மூன்று பெற்றவள் நான், சொல்வதைக் கேள். பிள்ளை பெறும் சமயத்தில் இப்படி உணர்வுகளை மூடி வைக்காதே, வெளிக் காட்டு, அடிக்கடி கரு நிலையம் சென்று கருவிடம் பேசிக் கொண்டிரு,” எனறாள்.
“சரி” என்றேன். என்னை அவள் தனியாக விட்டால் போதுமென்றிருந்தது எனக்கு.
“எப்போழுது சந்திப்பு?” என்றாள்.
“மதியம்”
“மாலை நிதிலாவிற்குப் பார்வை பெருக்கச் சடங்கு. ஞாபகம் இருக்கிறதல்லவா?” என்றாள்.
“இருக்கிறது” என்றேன், எனக்கு அது சுத்தமாக மறந்துவிட்டது.
“விந்தளிப்பவனைப் பிடித்திருந்தால் அவனையும் அழைத்து வந்துவிடு,” என்றாள்.
சரி என்பது போல் தலையாட்டினேன்.
என் புஜத்தசையைக் கிள்ளுவது போல் பிடித்து ஆட்டிவிட்டுப் பனி அவள் அறை நோக்கிச் சென்றாள்.
நான் இப்படி மறப்பவளல்ல. பனி சொல்வது போல் உள்ளுக்குள் கிளர்ந்துதான் இருப்பேன் போலிருக்கிறது.
அமுதனுக்கு மாலை வர நேரமாகுமெனக் கொலுவியில் செய்தி அனுப்பிவிட்டு உட்கார்ந்தேன். அதுவரை வாசலில் காத்திருந்த தலைமைக் காவல் யந்திரம் என்னருகில் வந்தது. “உயரதிகாரிக்குக் காலை வணக்கம்” என்றது
“வா என் பூதமே. எப்படி விடிந்திருக்கிறது இன்று?”
“சுட்டிக் காட்டுவதற்கு மன்னிக்கவும். என்னை நீங்கள் பெயர் சொல்லி அழைக்கலாகாது. பெயர் சொல்லி அழைக்கும்போது நான் பதிலளிக்கவும் கூடாது” என்றது.
“முந்நூற்றிபது, நான் உன்னை அழைத்தது பெயர் சொல்லி அல்ல. சரி எனக்கு நேரமில்லை. பதிலைச் சொல்,” என்றேன்.
“ஆளுநர்ச் சதுக்கத்தில் இன்று சமத்துவச் சங்கத்திற்கு ஐந்து நிமிடக் கோஷத்திற்கும், ஐந்து நிமிடப் பேச்சுக்கும் மதியத்தில் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மாலையில் அதே சதுக்கத்தில் வசந்த விழாவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. வேறு முன்னறிவித்த நிகழ்வுகள் இல்லை,” என்றது.
“ஏற்பாடுகள்?”
“வழக்கம் போல்தான். மதியத்திற்கு ஒரு தலைமை மற்றும் இரு காவல் யந்திரங்கள். மாலையில் ஐம்பது தலைமை மற்றும் இருநூறு காவல் யந்திரங்கள். உத்தரவிற்கு உதவி உயரதிகாரி அலையோடையில்,” என்றது.
“மாலைக் காவலை அதிகப்படுத்து. சென்ற ஆண்டு போல் இம்முறை நிகழ்ந்தால் தலைவி சினம் கொள்வார்.”
“உத்தரவு,” என்றது.
“செல்.”
காவல் யந்திரம் சென்றவுடன் அலுவல் யந்திரத்தை உயிர்ப்பித்தேன். “உயரதிகாரிக்குக் காலை வணக்கம்,” என்றது.
“நிரல்?”
“காலையில் இரு வழக்குகளுக்குத் தீர்ப்பு. ஒரு வழக்குரையாடல். இன்று மதியத்திற்கு மேல் நிகழ்ச்சிகள் எதுவும் கூடாதென்பது தங்கள் உத்தரவு,” என்றது.
“சரி. நிகழ்வைத் தொடங்கு.”
அலுவல் யந்திரம் நிரலை இயக்கியது. நான்கு அலுவல் யந்திரங்கள் அதனதன் இடங்களில் உயிர்ப்பிக்கபட்டன. என் முதல் வழக்குத் தீர்ப்புக்காக ஒருவரை நேரிலும் மூவரை முப்பரிமாண ஓடையிலும் இரண்டு காவல் யந்திரங்கள் என் முன் அமர வைத்தன. நான் வேலையில் மூழ்க ஆரம்பித்தேன்.
நான் வேலையை முடித்துச் சதுக்கத்தில் இருந்த உணவகம் சென்று சேரும் பொழுது விந்தளிப்போன் ஏற்கனவே எனக்காகக் காத்திருந்தான். அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.
“உங்களுக்கு உள்ளே அமர வேண்டுமா அல்லது வெளியேவா?” என்றான்.
தலை தூக்கி வானைப் பார்த்தேன். நீலா மிக அழகாக வானில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சதுக்கத்தைச் சுற்றித் தாழ்வாக வெட்டிவிடப்பட்ட மகிழ மர நிரைகள் மென்செம்மையாய் நின்றிருந்தன.
“வெளியே”
யந்திரத்தைப் பார்த்துக் கையசைத்தான். எங்களை அழைத்துச் சென்று வெளியில் போடப்பட்டிருந்த உணவு மேசைகளில் ஒன்றில் அமர வைத்தது.
“இந்த உணவகத்தில் சமைப்பது மட்டுமல்ல காய்கறி நறுக்குவது முதல் அனைத்தும் மனிதர்கள்தான் செய்கிறார்கள், தெரியுமா?” என்றான், உட்கார்ந்தவுடன்.
“ஆம், முன்பே சில முறை வந்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் சுவையில் மாறுபாடிருக்கும். ஆனால் உணவு வர நேரம் நிறைய எடுக்கும்,” என்றேன்.
“இதுதான் இங்கு எனக்கு முதல் முறை,” என்றான்.
யந்திரம் எங்களை அணுகி நின்றது. தன் வயிற்றுப் பகுதியில் இருந்த பான அறையைத் திறந்து காட்டியது. இருவரும் சுட்டிய பானங்களை எடுத்து எங்கள் முன் இருந்த கண்ணாடிக் குவளைகளில் ஊற்றியது. அதன் மார்பில் அங்குக் கிடைக்கும் உணவு சமைக்கப்படும் காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தன.
“இங்கு அதிகம் பேர் உண்ணும் உணவெது?” இயந்திரத்தை நோக்கிக் கேட்டான்.
“எங்கள் தலைமை சமையல் வல்லுனரின் சிறப்பான தயாரிப்பான திருமண விருந்து அதிகம் பேர் விரும்பி உண்பது,” என்றது. என்னைப் பார்த்தான்.
“நானும் அதைத்தான் ஒவ்வொரு முறையும் சொல்வேன்,” என்றேன்.
“அப்பொழுது அதையே எனக்குக் கொடு,” என்றான்.
யந்திரம் தலை வணங்கிவிட்டு என்னைப் பார்த்தது. “எனக்கும்,” எனறேன். தலை வணங்கி விட்டு விலகியது.
அலை அலையாய் கலைந்த தலை முடியும், விரிந்த தோள்களும், நீண்ட நாசியும் கொண்டிருந்தான். அவன் அழகிய மாநிற முகம் நீலாவின் ஒளியில் மின்னுவது போலிருந்தது. மாநிறமும் கருநிறமும் கொண்டவர்கள் மகிழத்தில் மிக குறைவு. அதனாலேயே அதிகம் விரும்பப்படுவது.
“மின்னும் மாநிறம் உங்களுக்கு. தைலத்தின் தயவா?” என்றேன் புன்னகையுடன்
“கருப்பையின் அருட்கொடை. தைலம் மேலும் மின்னுமே.” என்றான் சற்று இடைவெளி விட்டு, “என்னை உங்கள் பரிசீலனைப் பட்டியலில் தெரிவு செய்ததற்கு நன்றி,” என்றான்.
“எனக்கு முதலில் பெண் வேண்டும். உங்களுக்கு எட்டும் பெண் பிள்ளைகள் என்பதால் உங்களை முதலில் தெரிவு செய்தேன். தொழில் என உங்கள் அறிமுகத்தில் எதுவும் குறிக்கப்படவில்லை, விந்தளிப்பு மட்டுமே செய்கிறீர்களா? “
“எனக்கு முதல் பெண் பிறக்கும் வரை விவசாயத் துறை பணியில் இருந்தேன். உங்களைப் போல் அனைவருக்குமே பெண் வேண்டும் என்பதே பேரவா. ஓரிருவர் தெரிந்தவர்கள் தேடி வந்து கேட்டதால் விந்தளித்தேன். இப்பொழுது அதுவே எனக்குப் போதுமான ஊதியத்தை அளித்துவிடுகிறது,” என்றான்.
“ஆண் வேண்டாம் என்பதல்ல. முதல் பெண் அடுத்து பிறக்கும் ஆண் குழந்தைகளைப் பேணிவிடுவார்கள் என்பதால்தான்.”
“நிச்சயமாக. அதில் தவறே இல்லை. இப்படிப்பட்ட நம்பிக்கைகளை வைத்துதான் என் வாழ்க்கை ஓடுகிறது,” என்றுவிட்டு நகைத்தான்.
என்னைச் சீண்டுகிறானோ எனத் தோன்றியது. நாவடக்கு எனும் சொல் நாக்கின் நுனி வரை வந்துவிட்டது. சிரமத்துடன் அடக்கிக்கொண்டு பானத்தை ஒரு மிடறு அருந்தி அச்சொல்லைத் தொண்டைக்குள் திணித்தேன். பார்வையை அவன் மீதிருந்து விலக்கிச் சதுக்கத்தைப் பார்த்தேன்.
பத்து ஆண்களும் ஒன்றிரண்டு பெண்களும் சதுக்கத்தில் உற்சாகமாகக் கூவிச் சிரித்துக்கொண்டும் உரக்கக் கத்திக்கொண்டும் இருந்தனர். அவர்களுடன் முப்பரிமாணப் பதாகை எழுத்துகளைச் சதுக்கம் முழுக்கப் பரவலாகப் பீச்சியபடி எந்திரங்கள் ஆடிக் கொண்டிருந்தன. “ஆணின்றி பெண்ணில்லை”, “ஆணை அடக்காதே”, “ஆண் மகவை வெறுக்காதே”, எனப் பல கோஷங்கள் பல வண்ணங்களில் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. ஒரு பெண் சதுக்கத்தின் மையப் பீடத்தில் பேசுவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தாள். அவர்களைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் கூடியிருந்தது. அதில் என் காவல் யந்திரங்களும் அடக்கம்.
தலைமை காவல் யந்திரம் கையை மேலே உயர்த்தியவுடன் யந்திரங்கள் பதாகை ஓடைகளை நிறுத்தின. கூட்டம் “பேச்சு”, “பேச்சு” எனக் கூவுவது நாங்கள் அமர்ந்திருந்த இடம் வரை கேட்டது.
அப்பெண் உரையாட ஆரம்பித்தாள். தூரம் என்பதால் சரியாக எனக்குக் கேட்கவில்லை, காதில் கொலுவியை மாட்டிக் கேட்கலாம், எனக்கு ஆர்வமில்லை.
என் ஓரப்பார்வையில் அவன் கொலுவி மாட்டிக் கேட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.
கோஷங்கள் நடு நடுவில் எழுந்துகொண்டே இருந்தன. அவள் முடிக்கும்போது சொன்ன சொல்லைக் கூட்டம் ஏற்று ஒற்றைக் குரலாய்க் கோஷம் எழுப்பியது.
“ஆம்பளடா, ஆம்பளடா, ஆம்பளடா!”
விந்தளிப்பவன் சிரித்துக் கொண்டிருந்தான். அவன் உதட்டிலும் அவ்வார்த்தை ஓசையில்லாமல் ஓடியது.
அவன் கொலுவியைக் கழட்டும் வரை காத்திருந்துவிட்டு, “என்ன சொல் இது?” என்றேன்.
என்னைச் சற்று ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, “உங்களுக்குத் தெரியாதா?” என்றான்.
நான் இல்லை எனத் தலையாட்டினேன்.
“காவலதிகாரி என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன். சமத்துவச் சங்கத்தின் புது கோஷம் இது. நம் இனம் மகிழத்திற்கு இடம் பெயரும் முன் இருந்த கிரகத்தில் தமிழுக்குப் பேச்சு மொழி, எழுத்து மொழி என இரண்டு இருந்ததாம். இச்சொல் பேச்சு மொழியில் வழக்கில் இருந்த சொல் என அவர்கள் சொல்கிறார்கள். ஆண் என்றால் நிமிர்வு என்னும் பொருள்படும் சொல்லாம். எனக்கு எப்போது இந்தக் கோஷத்தை கேட்டாலும் சிரிப்பு வந்துவிடும். நல்ல பாடலுக்கு ஏற்ற சொல்,” என்றான் உற்சாகமாக.
“சங்க உறுப்பினரா நீங்கள்?” என்றேன்.
அவன் உதட்டில் புன்னகை மறைந்தது. “இல்லையில்லை. அவர்களின் கோமாளித்தனங்களில் ஒரு விருப்பம், அவ்வளவுதான்,” என்றான்.
சற்று இறுக்கமானான். என்னைக் காவலதிகாரியாய்த்தான் இன்னும் பார்க்கிறான், தன் விந்தைப் பெறப் போகும் பெண்ணாக அல்ல என்பது தெரிந்தது.
அவன் கைகளைத் தொட்டு “ஓர் ஆர்வத்தில்தான் கேட்டேன் வேறொன்றும் அல்ல. இசை ஆர்வம் உங்களுக்கு அதிகமோ?” என்றேன்.
புன்னகை மீண்டும் அரும்ப, “ஆம்,” என்றான்.
அவன் இசையைப் பற்றியும், பழந்தமிழ் இசைக் குறிப்புகள் பற்றியும் பேச ஆரம்பித்தான். அவனுக்கும் என்னைப் போல் பழங்கதைகளைப் படிப்பதில் ஆர்வம் இருந்தது. எனக்கும் ஆர்வமுண்டு என நான் சொன்னவுடன் மீண்டும் உற்சாகமானான்.
“இதையெல்லாம் படிப்பவர்களைக் காண்பதைவிட நீலாவை இரவு வானில் காண்பது எளிது என நினைத்திருந்தேன்,” என்றான்.
“எரி மறைந்த நிலக்கதைகள் படித்திருக்கின்றீர்களா? நான் அதை வாசித்துக் கொண்டிருக்கிறேன்,” என்றேன்.
என் இரு கைகளையும் அவன் இரு கரத்தால் வலியப் பற்றினான். அமுதன் இப்படி இறுக்குவதில்லை. வலிப்பது போல் இருந்தது, ஆனால் பிடித்திருந்தது.
“ஏதோ மாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நான் இக்கதைகளைப் படித்த இன்னொருவரைப் பார்த்துவிட மாட்டோமா எனப் பல வருடங்களாகத் தேடிக் கொண்டிருக்கிறேன்,” என்றான்.
நான் புன்னகைத்தேன், என் கைகள் இன்னும் அவன் கரங்களுக்குள்தான் இருந்தது. “இக்கதைகளில் உண்மையிருக்கும் என நினைக்கிறீர்களா?”
“அவை கதைகளே அல்ல, முழு உண்மைகள். கதை போல் தெரிய வேண்டும் என்பதற்காகச் சிலவற்றைச் சேர்த்திருக்கின்றனர் என்றே நான் நினைக்கிறேன்,” என்றான். அவன் அதை முழுமையாக நம்பித்தான் சொல்கிறான் என்பது முகத்தில் தெரிந்தது.
“அக்கதைகளில் வருவது போல ஆண்கள் கொடூரமானவர்களாய் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என்ன?”
“நானும் அப்படித்தான் நினைத்தேன், அனலொடுக்கம் எனும் கதை நூலைப் படிக்கும் வரை. அக்கதை நூல் மகிழத்திற்கு நம் முன்னோர் இடம் பெயர்ந்த கதையைச் சொல்கிறது. எரி மறைந்த நிலக்கதைகள் சொல்வதைப் போலக் கடும் வெக்கையும் கடும் குளிருமான மாறி மாறி வரும் அந்தக் கிரகத்தில் இருந்த வரை ஆண்கள்தான் அனைத்துமாய் இருந்ததாக இக்கதையும் சொல்கிறது. ஆனால் அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமையின்றியும், ஒருவர் மீதொருவர் கொடும் செயல்களை இயற்றிக்கொண்டும் இருந்திருக்கின்றனர். இது அந்தக் கிரகத்தின் அழிவில் சென்று முடிந்திருக்கிறது. அது அழியும் முன் மகிழத்திற்கு இடம் பெயர்ந்த அன்னையர் தாங்கள் தேர்ந்தெடுத்து அழைத்து வந்த ஆண்களின் மரபணுவில் மாற்றம் செய்து அவர்களின் தீமைகளை அகற்றிவிட்டனர் எனச் சொல்கிறது,” என்றான்.
நான் சிரித்துவிட்டேன். “நல்ல கதை. இது உண்மையென்றால் வரலாற்றில் இருக்க வேண்டுமல்லவா? நம் வரலாறு பல்லாயிரம் பேர் இடம் பெயர்ந்து வந்ததாகச் சொல்கிறது. அத்தனை பேருக்கும் மரபணு மாற்றம் சாத்தியமா என்ன?”
அவன் என் சிரிப்பில் இணையவில்லை. “நம் மக்களில் ஒரு பாலினம் தேவைக்கேற்ப உருவாக்கப்பட்டது என எப்படி வரலாற்றில் பதிய முடியும்? ஆனால் நீங்கள் சொல்வதும் சரி. மரபணு மாற்றம் செய்யப்படாத ஆண்கள் கண்டிப்பாக மகிழத்திற்கு இடம் பெயர்ந்திருப்பார்கள் என்றே நானும் நினைக்கிறேன்.. முழு ஆண்கள்,” என்றான்.
“முழு ஆண்கள். நன்றாக இருக்கிறது,” என்று நகைத்துவிட்டுத் தொடர்ந்தேன். “சரி அப்படியே வைத்துக்கொள்வோம். அந்த முழு ஆண்கள் மகிழத்தில் ஏன் கொடூரமாக நடந்துகொள்ளவில்லை? வன்முறை, தாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்கள் மிகச் சொற்பம் என்பது உங்களுக்கே தெரியும்,”
“அவர்கள் தங்களை மறைத்துக்கொண்டு வாழலாம் அல்லவா?” என்றான்.
எந்திரம் எங்கள் மேஜை முன் வந்து நின்றது. எங்களுக்கான உணவைப் பரிமாறிவிட்டுப் போனது.
நான் ஒரு கவளம் எடுத்து வாயிலிட்டுச் சுவைத்துவிட்டு, மிக நன்று எனத் தலை ஆட்டினேன். “பேச்சைத் தொடர்வோம். ஏன் மறைவு?”
அவனும் இரு கவளங்கள் வாயில் போட்டுவிட்டு, “அருமை,” என்றான். அவனே தொடர்ந்து, ” என்னிடமும் இதற்குச் சரியான பதில் இல்லை. அவர்களுக்கான நேரத்திற்காகக் காத்திருக்கலாம் அல்லவா?”
“அப்பொழுது இங்கு இருக்கும் யார் வேண்டுமானாலும் நீங்கள் சொல்லும் முழு ஆண்களாய் இருக்கலாம். உள்ளே இந்த உணவைத் தயாரித்தவர்கள், அதோ அங்கே கோஷம் எழுப்பியவர்கள், ஏன், நீங்கள்…” என்றேன் புன்னகைத்தபடி.
அவனும் சிரித்தான். “அப்படி இருக்கும் ஆண்களுக்கு இளமையிலேயே சொல்லப்பட்டுவிடும் என நினைக்கிறேன். அவர்களுக்குத் தங்களை மறைக்கத் தெரிய வேண்டும் அல்லவா?”
“ஒரு கதைப் புத்தகத்தை வைத்து ஒரு பெரிய சதி வலையையே பின்னிவிட்டீர்கள். நீங்களே இப்படிப்பட்ட கதைகளை எழுதலாம். ஆண்கள் மகிழத்தைக் கைப்பற்றி மீண்டும் தங்கள் வன்கோன்மையை நிலை நாட்டுவது பற்றி.”
வாய்விட்டுச் சிரித்தான். “ஆம் அது நல்ல கதையாகத்தான் இருக்கும். அந்தப் புத்தகத்தின் முடிவில் பாடல் போன்று சில வரிகள் வரும். ஏதோ பாம்பு என்று… எனக்கு முழுதாக நினைவில் இல்லை. ஆனால் அதன் கருத்து மகிழத்தைக் காக்க முழு ஆண்கள் எழுவார்கள் என்பது போல் ஏதோ. பாருங்கள் எனக்கு எழுத வாய்ப்பளிக்காமல் ஏற்கனவே எழுதிவிட்டார்கள்,” என்றான்.
இருவரும் சிரிப்பில் சேர்ந்துகொண்டோம். ஒரு கதைப் புத்தகத்தைப் பற்றி ஒருவரிடம் இப்படிப் பேசிச் சிரித்துப் பல நாட்கள் ஆகின்றது.
உணவும் மிக நன்றாக இருந்தது. அந்தச் சிறுவனின் கத்தலைக் கேட்கும் வரை வேறு ஒன்றிலும் கவனம் செல்லவில்லை.
“சதுக்கத்தை அருகில் கொண்டு வா, கொண்டு வா, உடனே,” என்று எங்கள் மேசைக்கு அருகில் நின்று கத்திக்கொண்டிருந்தான்.
அவன் தந்தை அவனிடம், “கத்தாதே. அது எந்திரம் அல்ல, உன் உடல் உறுப்பு. வாய் விட்டுச் சொன்னால் உன் கண்கள் கேட்காது, உன் மூளையின் மூலம் உத்தரவளிக்க வேண்டும். ஓரிரு மாதங்களில் பழகிவிடும் வா.”
நான் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ” மன்னிக்கவும், சமீபத்தில்தான் பார்வை பெருக்கினோம், கண்ணை வைத்து ராட்டினம் சுற்றிக் கொண்டிருக்கிறான்,” என்றான்
நான் பரவாயில்லை என்பது போல் புன்னகைத்தேன். அப்பொழுதுதான் நிதிலாவின் பார்வைப் பெருக்கம் ஞாபகம் வந்தது.
“சில நிமிடங்கள் அலையோடைக்குள் போய் வரட்டுமா. ஒரு முக்கியமான விழாவை மறந்துவிட்டேன்,” என்றேன்.
“தாராளமாக. நீங்கள் என்னைப் பார்க்கவில்லை என்றால் உணவை இன்னும் ரசித்துச் சாப்பிடுவேன்,” என்று சிரித்தான்.
நான் புன்னகைத்துவிட்டு, அலையாடியை என் கைப்பைக்குள்ளிருந்து எடுத்துக் கண்ணில் மாட்டினேன். அலையாடியோடு இணைந்திருந்த கொலுவியைக் காதுக்குள் மாட்டிப் பனியை அழைத்தேன். ஓடையில் அவள் முன்னும் அவள் பின் அவள் வீடு முழுக்க ஆட்களும் தெரிந்தனர்.
“நேரில் வர மாட்டாய் என எனக்கு முன்பே தெரியும். காலையில் நான் கேட்ட பிறகுதான் உனக்கு விழா நினைவே வந்தது. அவ்வளவு கிறக்கம்,” சொல்லிவிட்டு உரக்க நகைத்தாள்.
ஓடையில் இருந்த என் பிம்பத்தின் கன்னத்தைக் கிள்ளி முத்தினாள். கன்னம் மெலிதாக வலித்தது.
“எப்படி இருக்கிறான்?”
நன்று எனத் தலையை மட்டும் ஆட்டினேன்.”நிதிலா எங்கே?”
“வா,” என்று என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றாள். இரண்டு செவிலியர் நிதிலாவிற்குத் தன் கண்களுக்கு எப்படி உத்தரவிடுவதென்று சொல்லிக் கொண்டிருந்தனர். அருகில் அவள் கண்கள் ஒரு புட்டிக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அதைச் சுற்றி நீல மலர்களால் வட்டம் ஒன்று போடப்பட்டிருந்தது. நிதிலா எங்கள் இருவரையும் பார்த்தாள்.
“அம்மா உன் முகத்து மச்சம் இங்கிருந்தே தெரிகிறது,” என்றாள். அவள் முகத்தில் பெருமகிழ்ச்சி தாண்டவமாடியது.
நான் அருகில் சென்று அவளை அணைத்து இரு கன்னத்திலும் முத்தினேன். “உனக்கு என்ன பரிசு வேண்டும்?”
“என் கண்ணிற்குத் தூரப்பார்வை இணைப்பு வாங்கித் தருகிறீர்களா, கனியத்தை? அம்மா முடியாது என்று சொல்லிவிட்டார்,” என்றாள்.
“நிதிலா இப்பொழுது எதற்கு அதெல்லாம், சில வருடங்கள் போகட்டும்,” என்றாள் பனி.
அவளை முறைத்துவிட்டுச் செவிலியரிடம் திரும்பி “கொண்டு வந்திருக்கிறீர்களா?” என்றேன்.
தலைமைச் செவிலி போல் இருந்தவள் எடுத்துக் காண்பித்தாள். “இதன் விலை” என ஆரம்பித்தாள். அவளைக் கையமர்த்திவிட்டு, “இன்றே போட்டுவிடுங்கள்,” என்றேன்.
புன்னகைத்துத் தலையாட்டிவிட்டுப் பணப்பரிமாற்ற ஆடியை என் முன் நீட்டினாள். என் ஆட்காட்டி விரலை அதில் பதிந்து, என் கடவு எண்ணைத் தட்டினேன்.
“நீங்கள் வாங்கித் தந்துவிடுவீர்கள் என்று எனக்கு தெரியும்,” நிதிலா எழுந்து என்னைக் கட்டிக்கொண்டு குதித்தாள். அவள் கைகள், அவள் குதிப்பதால் மேலும் கீழும் ஆடி என் இடுப்பில் குறுகுறுத்தது. அவன் முன் உட்கார்ந்துகொண்டு நெளிய விரும்பாமல் தொடு உணர்வு கடத்தியை அணைத்தேன். அவளை மீண்டும் முத்திவிட்டு, ” இப்படியே என்றும் மகிழ்ந்திரு,” என்றுவிட்டு அவளை உட்கார வைத்தேன். முத்தமிட்ட உணர்வே இல்லாதது ஏமாற்றமாய் இருந்தது. அலையோடையில் தொடு உணர்வின்றி இருப்பது எனக்குப் பிடிப்பதில்லை. கனியிடம், போக வேண்டும், எனச் செய்கை காட்டிவிட்டு, இணைப்பைத் துண்டித்தேன்.
அவன் பானத்தை உறிஞ்சிக்கொண்டு சதுக்கத்தில் வசந்த விழாவிற்குக் கூடிக் கொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“நாமும் விழாவில் பங்கெடுப்போமா?” என்றேன்.
என்னைத் திடுக்கிட்டவன் போல் திரும்பிப் பார்த்து, “முடித்துவிட்டீர்களா? போகலாம், எனக்கு ஆட்சேபனை எதுவும் இல்லை.” என்றான்.
“யார் கண்டது, ஒரு புது அணுக்கியைக்கூட நீங்கள் அங்குக் கண்டுகொள்ளலாம். அதன்பின் விந்தளிக்க முடியாது எனச் சொல்லிவிடக் கூடாது.” என்றேன்.
அவன் சிரித்தான். “உங்களைத் தெரியாதவர் தமிழ் நிலத்தில் யார்? நீதி என்று கேட்டாலே செய்தியோடைகள் உங்கள் முகத்தைத்தான் கொண்டு வந்து கொட்டுகின்றன. அதுவுமில்லாமல் காவல் உயரதிகாரியுடன் இருக்கும் ஆணைக் கவர எந்தப் பெண்ணும் துணிய மாட்டாள்.” என்றான்.
“மது மயக்கில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். சென்ற ஆண்டு எந்திரங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்குச் சண்டைகள், காயங்கள். பல ஆண் கவர்தல், கடத்தல் முயற்சிகள் வேறு.”
“அதுதான் சதுக்கம் முழுக்கக் காவல் எந்திரங்களால் இம்முறை நிரப்பிவிட்டீர்களா?” என்றான்.
நான் உணவிற்கு விலையைச் செலுத்திவிட்டு அவனுடன் சதுக்கம் நோக்கி நடந்தேன்.
நீலா வானில் ஒரு பக்கம் இறங்கிக் கொண்டிருந்தாள், இன்னொரு புறம் செம்பன் ஏறி வந்து கொண்டிருந்தான். இரு ஒளிகளும் கலந்து ஊதா நிறத்தில் சதுக்கத்தை நிறைத்திருந்தது. எதிர்ப்பட்ட பெண்களில் பலர் ஏற்கனவே மது மயக்கில் இருந்தனர். இவர்கள் அனைவர் கைப்பைக்குள்ளும் விந்துக் குவளைகள் திறனேற்றப்பட்டுக் காத்திருக்கும். வருடம் ஒரு முறை செலவே இல்லாமல் கருப்பையை வளப்படுத்த அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. வசந்த விழா அனைவருக்கும் ஆனதுதான், ஆனால் வருபவர்கள் பெரும்பாலும் அரசாங்கம் தரும் வாழ்வூதியம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலை எதுவும் செய்யாமல் இருப்பவர்கள். வரும் ஆண்களும் பெரும்பாலும் இளைஞர்கள், அணுக்கிகள் அமையாமல் அலைபவர்கள்தான்.
பல வண்ண ஆடைகள் மின்னிக் கொண்டிருந்தன, செல்லங்கிகள் மேல்கூடப் பல வண்ண வேலைப்பாடுகள். சதுக்கம் முழுக்க வண்ணச் சிதறல்களாய் இருந்தது. அவன் அருகில் வந்து, “எப்பொழுது நீர் தெளிப்பான்கள் இயக்கப்படும்? சற்று வெக்கையாக இருக்கிறது.” என்றான்.
“நீலா முழுக்க மறைந்து செம்பனின் செம்பழுப்பு ஒளி மட்டும் சதுக்கத்தை நிறைக்கும் பொழுது. குளிர்ந்த மது அருந்தினால் சற்றி வெக்கை தணியும், இருங்கள்,” என்றுவிட்டுச் சுட்டு விரலைத் தலைக்கு மேல் தூக்கினேன்.
அங்கே வயிறு முழுக்க மதுக் குப்பிகள் நிறைக்கப்பட்டுக் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்த எந்திரங்களின் நீலக்கதிர்கள் என் விரல் ரேகையை வருடிச் சென்றன.
சற்று அருகில் இருந்த எந்திரம் என்னை நோக்கி ஓடி வந்தது.
“இரண்டு” என்றுவிட்டு அதன் நெஞ்சில் இருந்த ஆடியில் சுட்டுவிரலைப் பதித்துக் கடவு எண்ணை அடித்தேன்.
எந்திரம் வயிற்றைத் திறந்து இரண்டு குப்பிகளை எடுத்து ஒன்றை என் கையில் கொடுத்துவிட்டு என்னைப் பார்த்தது. அவனை நோக்கிச் சுட்டினேன். அவன் கையில் ஒன்றைக் கொடுத்துவிட்டுத் தலை வணங்கி விலகியது.
“ஆண்களுக்குத்தான் வெக்கை பிடிக்குமே. புழுக்கம் உச்சத்தில் இருக்கும் கதிர்க் கோபுரங்களில் வேறு வேலை செய்திருக்கிறீர்கள்,” என்றேன்.
அவன் சில மிடறுகள் மது விழுங்கிவிட்டு “அது புழுக்கம், அது பிடிக்கும். சற்றேனும் நீரில்லாத வெப்பம் எனக்குப் பிடிப்பதில்லை. நீரற்ற வெக்கை பெண்ணற்ற ஆண் போல,” என்றான்.
நான் வாய்விட்டுச் சிரித்தேன். எங்களுக்கு முன்னால் சற்று தூரத்தில் இருந்த ஒரு சிறு குழுவை எந்திரங்கள் அரண் போல் அமைத்துச் சதுக்கத்தை விட்டு வெளியேற்றிக் கொண்டிருந்தன. பார்வையைக் குழுவினுள் வீசினேன். மதியத்தில் கோஷமெழுப்பிய கூட்டம்.
“ஆண்கள் விந்துப்பை அல்ல!”
“போகப் பொருளாய் மாறாதே!”
“எந்திரமாய் ஆகாதே!”
“ஆணின்றி பெண்ணில்லை!”
“உன் இடத்தை உடனே கேள்!”
கோஷங்கள் வலுத்து எழுந்தன. அவர்களுடைய இரண்டு எந்திரங்கள் அவற்றை வாங்கி ஒலி பெருக்கிக் கொண்டிருந்தன. அனுமதியற்ற போராட்டம். இரு வார சிறை வாசம் நிச்சயம். ஆண்களும் பெண்களும் அவர்களைப் பார்த்து நகைத்துக் கொண்டிருந்தனர்.
மதுவை நானும் இரு மிடறு அருந்திவிட்டு அவனைப் பார்த்தேன், அவனும் நகைத்துக் கொண்டிருந்தான்.
நான் அவனைப் பார்ப்பதைப் பார்த்துவிட்டு, “இவர்களின் சமத்துவத் தத்துவங்கள் எல்லாமே எனக்குப் பெரும் நகைப்பை அளிக்கிறது,” என்றான்.
எல்லா ஆண்களும் ஏன் இப்படி என நினைத்துக்கொண்டேன், ஆனால் சொல்லவில்லை. “சமத்துவமே கூடாது என்கிறீர்களா?”
“அல்ல, சமத்துவம் என ஒன்று இல்லை என்கிறேன்,” என்றான். நான் நின்றுவிட்டேன். சற்று முன்னால் சென்றவன் நான் உடன் வராததைப் பார்த்து நின்று பின்னால் திரும்பினான்.
“காதல் கொண்ட இரு உயிர்கள் சமத்துவமாக அன்றி எவ்வகையிலும் இருக்க இயலாது.”
அவன் புன்னகைத்தான். உடன் நடக்கும்படி செய்கை செய்தான். நடக்க ஆரம்பித்தேன். “அளிக்கும் இடத்தில் இருப்பவர்களுக்கு இருக்கும் உவகை, பெறுகிறோம் எனத் தெரிந்து பெறுபவர்களிடம் இருக்கும் என நினைக்கிறீர்களா?” என்றான்.
“காதலில் அளித்தலும் பெறுதலும் இரு பக்கமும்தான்,” என்றேன்.
“அப்படித் தோற்றம் அளிக்கும், ஆனால் அது அப்படி அல்ல. அது ஒரு பக்கம், ஒரு பக்கம் மட்டும் எப்போதும் தாழ்ந்திருக்கும் துலாத் தட்டு. எல்லா உறவிலும் அளிப்பவர் ஒருவர் பெறுபவர் ஒருவர், எப்பொழுதும் எந்நிலையிலும். இதில் எங்குச் சமத்துவம் காண்பது?” என்றான்.
மாநிறத்தில் அழகான தோற்றப் பொலிவோடு இருந்த ஓர் இளைஞனை ஒரு காவல் எந்திரம் சீண்டிக் கொண்டிருந்த இரு பெண்களிடமிருந்து காத்துக் கொண்டிருந்தது. அவன் அதன் கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். விழாவில் கலந்துகொள்வது முதல் முறையாக இருக்க வேண்டும். பயத்தில் உடல் ஆடிக் கொண்டிருந்தது. ஒருத்தி அவன் புட்டத்தில் பலமாகத் தட்டினாள். எந்திரம் அவளைத் தூக்கி விலக்கி வைத்துவிட்டு, இளைஞனைத் தூக்கிக்கொண்டு வேறு பக்கம் பறந்தது. இருவரும் வெடித்துச் சிரித்தனர்.
“அவர்கள் போராடுவது இவர்களைப் போன்றவர்களிடம் இருந்து ஆண்களுக்கு மதிப்பை வாங்கித் தருவதற்காகத்தான். ஆண்கள் இப்படியே வதைபட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்கிறீர்களா? அவர்களுக்குச் சமத்துவம் கொடுக்கப்படவே கூடாதா, என்ன? நீங்களும் ஓர் ஆண்தானே. உங்களுக்கு இதைப் பார்க்கும்போது வருத்தமாக இல்லையா?” என்றேன்.
அவன் சிரித்தான். “சமத்துவம் இதை நிறுத்தும் என நினைக்கிறீர்களா? அதுவும் சமத்துவம் பிறரால் தரப்படும்போது?”
நான் குழம்பிப் போய், “வேறு என்ன மாற்று?” என்றேன்.
“ஆண்கள் சமத்துவம் தேவைப்படாத நிலையை எட்டு….” அவன் சொல்லி முடிப்பதற்குள் வானிலிருந்து நீர் யந்திரங்கள் பெரும் இசையொலியுடன் வண்ண நறுமணநீரைப் பொழிந்தன. கூட்டத்திலிருந்து கிளம்பிய உற்சாகக் கூச்சல்கள் அந்த இசையொலியுடன் போட்டி போட்டன. விழா தொடங்கியாயிற்று இனி நின்றெல்லாம் பேச முடியாது. நானும் அவனும் அந்த போக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோம்.
அடுத்த நாள் காலையில் விடுதியறை ஒன்றில் உறக்கத்திலிருந்து எழுந்தேன். நேற்று விழாவில் நடந்தது எதுவும் சரியாக நினைவில் இல்லை, நான் நிறைய மதுவருந்தியிருக்க வேண்டும். உடல் முழுக்க வலித்தது.
சற்று நேரம் கண் திறக்காமல் அமர்ந்திருந்தேன். நினைவு வந்து, அவன் அருகில் இருக்கிறானா எனக் கண் திறந்து பார்த்தேன்.
படுக்கைக்கு அருகில் உள்ள மேசையில் ஓர் அழகிய நீலவண்ண மகிழ இலையின் மேல் விந்துக் குப்பி வைக்கப்பட்டிருந்தது. மகிழ இலை என்றால் அது காதல் மடல்தான். என்னையறியாமல் புன்னகைத்தேன்.
இலையைக் கையில் எடுத்தேன். ஊதா நிற ஒளிப் பேனாவால் எழுதியிருந்தான்.
“உங்கள் மகவு உங்களைப் போன்றே அனைத்து மங்கலங்களும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன்.”
இலையைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தேன். அவ்வளவுதான். ஏமாற்றமாய் இருந்தது. குளியலறைக்குள் சென்று முகம் கழுவினேன். ஆடியில் ஆடையற்ற என் உடல் தெரிந்தது. வலது மார்பில் நகக்கீறல், கழுத்தில் பற்களின் தடம். முதுகில் கண்களைச் செலுத்தினேன், நிறைய கீறல்கள். உடல் வலிக்குக் காரணம் தெரிந்தது. அவனும் மது மயக்கில் இருந்திருக்க வேண்டும்.
அமுதன் ஒரு முறைகூட இப்படி முரட்டுத்தனமாக என்னுடன் கூடியதில்லை, மது மயக்கில்கூட. ஆனால் அந்த வலியும் எனக்குப் பிடித்திருந்தது. இரு முறை பல் தடத்தைத் தடவிப் பார்த்தேன். உதட்டில் புன்னகை தெரிந்தது. ஆடியில் இருந்து கண்ணை எடுத்தேன்.
சற்று இளைப்பாற வேண்டும் போல் இருந்தது. மீண்டும் படுக்கைக்கே வந்து அமர்ந்தேன். சட்டென்று ஞாபகம் வந்தது. நான் என் கண் பதிவை எப்போதும் அணைப்பதில்லை.
நேற்றிரவின் பதிவுகளை மீட்டி ஓட விட்டேன். விழா பதிவுகள்தான் மிக அதிகமாக இருந்தன. அறைக்கு வந்த பிறகான பதிவுகளைக் கண்களிலிருந்து என் முன்னால் முப்பரிமாணக் கதிரலையில் வீசினேன்.
என் இடையை அவன் வளைத்திருந்தான். “உங்களுக்கொன்றும் ஆட்சேபனை இல்லையே. நான் சமத்துவத்தை நம்புபவள், உங்கள் அனுமதியில்லாமல்…” நான் அவன் கண்களைப் பார்த்துக் குழறிக் குழறிப் பேசிக் கொண்டிருந்தேன். அவன் என் கண்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் கடும் மதுமயக்கில் இருந்தான்.
“அடுத்த தமிழ் நிலத் தலைமை நெறி அரசிக்கு மகவளிக்க யாருக்கு ஆசையிருக்காது?” என்றான்.
என் இதயம் சற்று நின்றுவிட்டுத் திரும்ப மிக விரைவாக அடிக்க ஆரம்பித்தது. என் பதிவுகளில் அனைத்தையும் விரைவாக முன்னும் பின்னும் நகர்த்தினேன், எங்கும் என் வாயில் இருந்து அந்தத் தகவல் வரவில்லை. அதைப் பற்றிய பேச்சே நிகழவில்லை. எனக்கும், தலைவிக்கும் மட்டுமே தெரிந்த அரச ரகசியம் இது. என்னிடமேகூட ஒரே முறைதான் சொல்லப்பட்டது, அதுவும் ரகசியத் தலைமை மனையின் ரகசியச் சந்திப்பறையில் வைத்து. அமுதனுக்கும் கனிக்கும்கூட இது தெரியாது. இது இவனுக்கு எப்படித் தெரிந்தது? இவன் யார்?
அலை கொலுவியில் அவனை அழைத்தேன். அந்தக் கொலுவி அடையாளம் அழிக்கப்பட்டுவிட்டதெனச் சொல்லியது.
ஊதியத்திற்கு விந்தளித்தவன் தொடர்பில் இருக்கக் கூடாதென்பது நெறி. அவன் நெறியின்படியே இதை அழிக்கலாம். உடனடியாக அழித்துவிட்டிருக்கிறான்.
பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேல் அவனோடு இருந்திருக்கிறேன் ஆனால் அவனை நான் கணிக்கத் தவறியிருக்கிறேன். எனக்குக் கோபம் தலைக்கேறியது.
அலையோடையில் அலுவலக அடையாளத்திற்கு அழைத்து அலையோடைக்குள் இறங்கினேன். விடுமுறை நாள், எந்திரங்கள் மட்டுமே இருந்தன.
என் அறைக்குள் நுழைந்தேன். விடுமுறை நாட்களில் என் அலுவலக யந்திரம் தன்னை உயிர்ப்பித்துக்கொண்டு மற்ற யந்திரங்களிடம் வேலை வாங்கிக் கொண்டிருக்கும்.
“என் அறையில் உள்ள அனைத்து எந்திரங்களையும் அணைத்துவிட்டு, நீயும் உறங்கச் செல்.” என்றேன்.
“உயரதிகாரிக்கு வணக்கம். ஆணை,” என்றது. எந்திரங்களை அணைத்துவிட்டு அதுவும் உடனடியாக உறங்கியது. என் மேசையில் இருந்த குமிழை அழுத்திக் கண்காணிப்பு அமைப்புகளை அணைத்தேன்.
“1734 திற,” என்றேன். என் மேசைப் பெட்டகம் திறந்தது. ரகசிய நடவடிக்கைகளுக்கு அரசாங்க உயரதிகாரிகள் உபயோகத்திற்கு மட்டும் தரப்படும் கட்டற்ற தேடல் பொறியை எடுத்தேன். இதற்கு எல்லைகள் இல்லை. இது பதிவுகள் எதையும் செய்வதில்லை. எத்தனை நிமிடம் உபயோகத்தில் இருந்தது என்பதை மட்டும் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பும். ஐந்து நிமிடத்திற்கும் குறைவாக உபயோகப்படுத்துவதற்கு எந்த விளக்கமும் சொல்ல வேண்டியதில்லை.
அதை உயிர்ப்பிப்பதற்கு முன் என்ன கேட்க வேண்டும் என ஒரு முறை மனதில் தயார் செய்துகொண்டேன். உயிர்ப்பித்தேன். அவன் முப்பரிமாணப் பிம்பத்தை என் கண்களில் இருந்து பொறிக்குக் கடத்தினேன். “அத்தனை நிலத்திலும் இவன் சார்ந்த இயக்கங்கள், இவன் தொடர்புகள், இவன் நடவடிக்கைகள் அனைத்தையும் தேடு. தேடியதை என் கண்ணறையில் சேமி,” என்றேன்.
“ஆணை,” என்றுவிட்டு என் கண் சேமிப்பறையில் தகவல்களைக் கொட்டத் தொடங்கியது..
தேடல் முடித்தவுடன் “தற்சமயம் எங்கிருக்கிறான்?” என்றேன்.
“யவன நிலத்தில்,” என்றது. என் ஆளுகை எல்லையைக் கடந்துவிட்டான். எரிச்சலில் உதட்டைக் கடித்தேன்.
“உறங்கு,” என்றுவிட்டுக் குமிழை அழுத்தி கண்காணிப்பைச் செயல்படுத்திவிட்டு, அலுவல் யந்திரத்தை உயிர்ப்பித்தேன். அலையோடையிலிருந்து வெளியேறி விடுதியறையை அடைந்தேன்.
கண் சேமிப்பறையில் இருந்து தேடல் பொறி அளித்த தகவல்களை என் முன் ஓட விட்டேன். நிறைய தகவல்கள். ஒன்றுக்கொன்று இணைப்பில் உள்ள தகவலை மட்டும் மேலே எடுத்தேன்.
அதில் எழுபரிதி என்னும் இழை மேலெழுந்து வந்தது. எழுபரிதி என்னவென்று பார்த்தேன். யவனத்தில் உள்ள ஆண்களுக்கான அழகு நிலையம். நிறைய ஒலிப்பேழைகள். சில காட்சித் துணுக்குகள்.
அவன் குரல், அவன் படம். ஆண்கள் உடலையும் மனதையும் எப்படி அழகாக வைத்துக்கொள்வது என்பதற்கான குறிப்புகள், எழுபரிதி அளிக்கும் சேவைகள் என அனைத்துமே விளம்பரப் படங்கள்.
தன்னை விவசாயத் துறைப் பணியாளனாகவே ஒவ்வொன்றிலும் அறிமுகப்படுத்திக்கொண்டான்.
பொறுமையாக ஒவ்வோர் ஒலிப்பேழைகளாகக் கேட்டேன். அனைத்தும் ஒன்று போலவே இருந்தன. சலித்துப் போய் ஒன்பதாவது ஒலிப்பேழையை இயக்கினேன். வழக்கமான அறிமுகத்திற்குப் பிறகு குறிப்பைப் பேச ஆரம்பித்தான்.
“இந்தக் குறிப்பு உங்கள் மனதிற்கானது. உடலில் நிமிர்வு கொண்ட ஆண், பெண்களின் கனவுகளுக்குள் செல்கிறான் என்பதைச் சென்ற முறை பார்த்தோம். உடல் நிமிர்வை நடிக்க முடியாது. உங்கள் மனம் நிமிர்ந்தால் உடல் நிமிரும், திமிறும். மனம் எப்படி நிமிரும்? உறவின் கோண்மை உங்கள் கையில் உள்ளது என்னும் எண்ணம் வரும் பொழுது. அது எப்படி வரும்? நீங்கள்தான் அவளை ஆட்சி செய்கிறோம் என நீங்களே நம்ப வேண்டும். நமக்கு நன்றாகத் தெரியும் அது உண்மையல்ல என்பது. ஆனால் உங்கள் மனதை இதற்கு நீங்கள் பயிற்றுவித்துப் பாருங்கள். ஒரு பெண்ணும் உங்களை விலக்க மாட்டாள். பிறகு நீங்கள் அண்டிப் பிழைப்பவரல்ல, சமத்துவப் பிச்சை கேட்கும் கோமாளியல்ல, நிமிர்வு கொண்ட ஆண். பெண்கள் விரும்பும் பேரழகன். எழுபரிதிக்கு வாருங்கள், இதைப் போன்ற பயற்சிகளை மிகக் குறைவான கட்டணத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்”
நிமிர்ந்து உட்கார்ந்தேன். நேற்று அவனிடம் பேசியதெல்லாம் நினைவிற்கு வந்தது.
எழுபரிதி என அனைத்துச் செய்தியோடைகளிலும் தேடினேன். நூறு வருடத்திற்கு முந்தைய செய்தித் துணுக்கு ஒன்று கிடைத்தது. படிப்பதற்கான குறிப்பு.
“அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆண்கள் மட்டுமே கொண்ட எழுபரிதி என்னும் சிறு இயக்கம் யவனத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களுக்கு இறப்பாணை பிறப்பிக்கப்பட்டது,” என்றிருந்தது.
அதன் கொள்கை, கருத்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இறப்பாணைச் செய்தியோடைகளில் மேலும் தேடினேன். ஆண் குற்றங்களை மட்டும் பிரித்தெடுத்தேன். ஆண்கள் மட்டுமே ஆன குற்றங்கள் மிகச்சிலவே இருந்தன.
அதில் ஒன்று, இரண்டு பெண்களை அவர்கள் விருப்பமில்லாமல் உறவு கொண்ட வழக்கு. என் இத்தனை வருட காவல் வாழ்வில் நான் ஒரு வழக்கைக்கூட இப்படிச் சந்தித்ததில்லை. ஓர் ஆணும் இதற்குத் துணிந்து நான் பார்த்ததில்லை. இதுவும் நூறு வருடத்திற்கு முன்பு அதே காலகட்டத்தில் யவனத்தில் நடந்தது.
“ஆண்கள் பெண்களுக்கு மேலானவர்கள். பெண்ணை அடக்கி ஆளப் பிறந்தவர்கள். முழு ஆண்களை உருவாக்குவோம். முழுதாகக் கைப்பற்றுவோம். ஒரு நாள் எங்கள் இயக்கம் வெல்லும்,” என அவன் வழக்காடுமன்றத்தில் முழங்கியதாக எழுதியிருந்தது. இயக்கத்தின் பேரில்லை.
முழு ஆண்கள். முழு ஆண்கள். முழு ஆண்கள். ஏதோ புரிபடுவது போல் இருந்தது.
அவன் விட்டுச் சென்ற விந்துக் குப்பியைப் பார்த்தேன். இது பெண்ணாக இருக்க வாய்ப்பில்லை. இவன் விந்தளித்த எந்தப் பெண்ணிற்கும் பெண் மகவு பிறந்திருக்க வாய்ப்பில்லை.
எனக்குக் கோபம் வடிந்து சற்று புன்னகை அரும்பியது. கெட்டிக்காரன் என நினைத்துக்கொண்டேன். நான் இவனை ஒன்றும் செய்ய முடியாது என்பதைத் தெரிந்தே விளையாடி இருக்கிறான். என் கழுத்தை வருடினேன். இன்னும் அது மெலிதாக இதமாக எரிந்தது. மீண்டும் அந்த பன்னிரெண்டு மணி நேரத்தை ஓட விட்டேன். சிரிப்பு, பேச்சு, பேச்சு மேலும் பேச்சு, ஆட்டம், கூடல். நான் எங்கும் அவனை ஆள முயற்சிக்கவில்லை, அவனும் அப்படியே. இணை, துணை, சமம். அமுதனோடு இப்படி ஒரு நாளும் நான் இருந்ததில்லை. எப்பொழுதும் நான் அவனை ஆள வேண்டும் என எதிர்பார்ப்பான்.
அப்படி முழு ஆண் என்பது உண்மையாகவே இருந்தால், அது இவனைப் போல் இருந்தால், அதுவும் இந்தப் பன்னிரெண்டு மணி நேரம் போல இருந்தால் நன்றாகத் தானிருக்கும். சமத்துவச் சங்கங்களும், எழுகதிர்களும் தேவைப்படாது.
அவன் சொன்ன நூல், அவன் சொன்ன நூல், ஆ,, அனலொடுக்கம். அதைக் கொலுவி கொண்டு தேடி எடுத்தேன். நேராகக் கடைசிப் பக்கத்திற்குச் சென்று அவன் சொன்ன பாடலை வாசித்தேன்.
நீல இருள் நளினம் கெட்டுத் தரணி ஆள
தகதகக்கும் செங்கொழுந்தாம் எங்கள்
செம்பாம்பும் போக இருள் சூழ்ந்து நிற்க
கரும்பாம்பின் வாய்க்கிரையாய் மகிழம் ஆகும்
நாளதுவில் நீ பார்ப்பாய்
பொன்னொளியின் போர்வை போர்த்தி
அனலோன் எழுச்சி
செந்தழலின் நா பட்ட
இருளின் வீழ்ச்சி
வாய் விட்டு நகைத்தேன். செம்பனை யாரோ ஏற்கனவே பாடிவிட்டார்கள், நான் முதலாளாக முடியாது.
விந்துக் குப்பியைக் கையிலெடுத்தேன். நான் முடிவெடுக்கும் முன், நீண்ட நேரம் அதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தேன்.
ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி –
சிறுகதை – தன்ராஜ் மணி
” ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,
வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,
தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,
எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.”
சுவாரசியம் நிறைந்த ,கற்பனையின் சிறகு விரிந்த, வடிவ நேர்த்தி கொண்ட, கலை அமைதி கூடிய அறிவியல் புனைகதை.
பெண்கள் அவசியம் படிக்க பரிந்துரைக்கிறேன்.பகல் கனவில் கூட அவர்கள் காண முடியாத நிஜங்கள் நிகழும் கதை.
கதை நிகழ்வது எதிர்காலத்தில், மகிழம் என்ற கிரகத்தில்,இன்று நாம் ரத்தமும் சதையுமாக வாழ்ந்து வரும் ஒரு வாழ்வு புராணங்களின் தொன்மங்களின் ஒரு பகுதியாகி விடும் சாத்தியம் உள்ளது என்பதை இப்போதே நமக்கு தெரியவருவது சுவாரசியமானது.
இன்று நம் பூமியில் நிகழ்ந்து கொண்டிருப்பவற்றுக்கு நேர் எதிரான தலைகீழான சம்பவங்கள் பல அக்கிரகத்தில் நடக்கிறது.
சூரியனை போன்ற ஒன்று செம்பன் என்று பெயர் உதிப்பது இரவில், நிலவைப் போன்ற ஒன்று இருப்பது பகலில் பெயர் நீலா.
இதுபோலவே ஆட்சி நிர்வாக அதிகாரம் குடும்பத் தலைமை அனைத்தும் பெண்களின் கையில்,உரிமைகள் கேட்டு போராடுவதும் வீட்டில் சமையல் செய்வதும் ஆண்கள்.
பெண்களுக்கு பணிந்தும் பயந்தும் ஆண்கள் வாழ்கிறார்கள்.
ஆண்கள் சம உரிமை கேட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள், தாழ்வு உணர்ச்சியில் பழமொழிகளை உருவாக்கிக்கொண்டு அதை நம்பவும் செய்கிறார்கள்.
“ஆண் அடங்கி பெண் ஆண்டால்தான் அது வீடு”
“பெண் ஆட்சி இல்லாத வீடு பொலிவிழந்து விடும்”
அந்த சூழ்நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டு இப்படி பழமொழிகளை உருவாக்கிக்கொண்டு அடங்கி வாழ்பவர்கள் சிலர்.
எதிர்ப்புக் கோஷங்களும் உண்டு
‘ஆண்கள் வெறும் விந்துப்பை அல்ல”
“ஆண் மகவை வெறுக்காதே”
“ஆண் இன்றி பெண்ணில்லை”
“ஆணை அடக்காதே”
இவ்வாறான ஒரு சூழலில், அந்த நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெறப்போகும், நீதிபதியான கனி என்பவளின் பார்வையில் விரிகிறது கதை.
கனியின் வீட்டில் ஏற்கனவே அமுதன் என்று ஒரு துணைவன், இருக்கிறான் எல்லாவகையிலும் கனியை மனம் கோணாது கவனித்துக் கொள்கிறான், நேர்மையானவன் மிகவும் அன்பானவன் பணத்தை பொருளை பெரிதென எண்ணாதவனென அனைத்து நற்குணங்களையும் கொண்டிருந்தபோதும் அவன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள கனி விரும்பவில்லை.
கதையில் அதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது, மகிழம் கிரகத்தில் பெண்ணிற்க்குத்தான் சர்வ அதிகாரங்களும் இருப்பதால், தற்போதைய நமது சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கு இருக்கும் மவுசை போல். பெண் குழந்தை பெற வேண்டுமென்று கனிவிரும்புகிறாள்.
தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி எட்டு பெண்களுக்கு பின் குழந்தைகளை பிறக்க செய்த ஒருவனை கண்டுபிடித்து அவனுடைய விந்தை நாடிச் செல்கிறாள்.
இங்கே கருப்பை நிலையங்கள் உண்டு விந்தையும் முட்டையையும் சேகரித்து கருவிகளே குழந்தைகளை உருவாக்கிக் கொடுத்து விடும் எனினும் பிள்ளை தருபவனுடன் கொஞ்சிக் குலாவுவதும் உறவு வைத்துக்கொள்வதும் மகிழ்ச்சியை ,கிளர்ச்சியைத் தரும் அது குழந்தைகளுக்கு நல்லது என்று தோழியின் ஆல் உந்தப்பட்டு அவனை சந்திக்கச் செல்கிறாள் கனி.
அவன் ரகசிய இயக்கத்தை சேர்ந்தவன் அந்த இயக்கத்தின் நோக்கம் ஆண்களுக்கான அதிகாரம், தற்போது பூமியில் நிலவுவதைப்போன்று,மகிழம் கிரகத்தையும் மாற்றவேண்டும் என்ற வேட்கையோடு பல நூறு ஆண்டுகளாய் ரகசியமாக இயங்கி வரும் இயக்கத்தின் ஒரு கன்னி.
அந்த இயக்கத்தின் நோக்கம் முழு ஆண்கள் பெண்களிடமிருந்து விடுதலைபெற்ற முழுமையான ஆண்கள், அவன் நோக்கம் நிறைவேறியதா? முடிவாய் வென்றது யார்? இது தான் கதைக்களம்.
இந்த கருவை மையமாகக் கொண்டு பல்வேறு ஆதாரமான அடிப்படையான கேள்விகளை நம்முள் எழுப்புவதே இக்கதையின் வெற்றி.
பெண்களின் கருப்பையில்தான் அவர்களை தளைத்துள்ள அடிமை சங்கிலியின் சாவி இருக்கிறதா?
ஆண் பெண் சமத்துவம் ?அல்லது எந்த ஒரு உறவிலும் சமத்துவம் என்பது சாத்தியமா?
உண்மையிலேயே சமத்துவத்திற்கு தேவை இருக்கிறதா?
பெண்களால் நிர்வகிக்கப்படும் மகிழம் கிரகத்தில் ஏன் வன்முறையே இல்லை? வன்முறை ஆண்களின் இயல்பா பெண்களிடம் இயல்பிலேயே வன்முறை கிடையாதா?
தன்னுடைய அதிகாரம் தன் குடும்பத்தில் உள்ள ஒருவரிடம், தன் வாரிசுகள் இடமே கை மாறவேண்டும் என்று ஏன் கனி எதிர்பார்க்கிறாள்?
ஆண் குழந்தைகள் அங்கே வாழ்வது அப்படி ஒன்றும் கடினமல்ல வறுமை நோய் போன்ற சிக்கல்கள் அந்த கிரகத்தில் இல்லை. இருந்தும் ஏன் அவனை போன்ற ஒருவனை விட்டுவிட்டு இன்னொருவனை நாடுகிறாள்?
உண்மையில் தான் வெல்ல பட்டதை எழுபரிதிதி இயக்கத்தின் உறுப்பினர் இடம் தான் தோல்வியடைந்ததை, ரசித்து ஏற்றுக் கொள்கிறாள். பெண்மை ஆண்மைல் வெல்லப்பட ரகசியமாக உள்ளூர ஏங்கிக் கொண்டிருக்கிறதா?
இவ்வாறு எண்ணற்ற கேள்விகளை ,கோணங்களை, வாசிப்பு சாத்தியங்களை ,இக்கதை எழுப்புகிறது.
கற்பனைக்கும் எட்டாத தொழில்நுட்பங்கள் சர்வசாதாரணமாக புழங்கிக் கொண்டிருக்கும் எதிர்காலத்தில் நிகழும் கதைக்கு பழந்தமிழை இயன்றவரை தூய தமிழை கதை சொல்ல தேர்வு செய்த உத்தி மிக அருமை.(ஒரு ஆங்கில வேற்று மொழி சொல் கூட இல்லை) பழமைக்கும் பழமை புதுமைக்கும் புதுமை.
நிறைய புதிய சொற்களை உருவாக்கியுள்ளார் ஆசிரியர்.
செல்லங்கி, பதாகை ஒடைகள்,அலைகொலுவி,எழுபரிதி,விலக்கூதியம்,அலையாடி, நெறி நிலை நாட்டு நிலையங்கள், வன்கோன்மை,தாவுநிலையம்,பொதுப்பறக்கை, முப்பரிமான ஓடை என எதிர்கால தொழில்நுட்பங்களுக்கான தூய தமிழ் சொற்கள்.
பழங்கால இந்திய மரபின் விழாவான வசந்த விழா, மகிழம் கிரகத்திலும் நடக்கிறது.என்ன இங்கே பெண்களால் ஆண்கள் சீண்ட படுகிறார்கள் பெண்களிடமிருந்து ஆண்களை காப்பாற்ற எந்திர காவலர்கள் போராட வேண்டியிருக்கிறது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழில் வாசிப்பவர்களின் எண்ணிக்கை உயரப் போவதில்லை என்ற குறிப்பையும் ஆசிரியர் இதில் காட்டியுள்ளார், நீதிபதி போன்ற உயர் பதவியில் இருக்கும் கனி தன் வாழ்வில் ஒரே ஒரு வாசகனை தான் கண்டு கொள்கிறாள்
அதேபோல எத்தனை வலுவான சட்டங்கள் இருந்தாலும் அதிநுட்பமான கருவிகளைக் கொண்டு அனைத்தும் கண்காணிக்கப்பட்டாலும் அதிகாரத்தில் இருப்போர் விதிகளை மீறுவது இயல்பே, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
கதைத் தலைப்பிலிருந்து, மாந்தர்களின் பெயரில் வளர்ந்து ,மொத்த கதையிலும் தமிழ் விருந்து படைத்திருக்கிறார் ஆசிரியர்.
இந்த கொரோனா காலத்தில் நாம் தவறவிட்ட சில உண்மைகள் அல்லது நாம் இவ்வளவு காலம் தேவையின்றி சுமந்த சில சுமைகள் சட்டத்தின் காரணமாக ஊரடங்கு காரணமாக இல்லாமல் இருக்கிறோம்,தேவையற்ற பொருள்களை வாங்கிக் குவிப்பதும் ,தேவையின்றி அங்கும் இங்கும் செல்வதும். தேவையற்ற காரியங்களை செய்வதும் தடுக்கப்பட்டிருக்கிறது.
பல்லாயிரம் ஆண்டு காலத்திற்கு பிறகு பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு கிரகத்திலும் மனிதன் உண்கிறான் உடுத்து கிறான் உறவு கொள்கிறான் இவ்வளவுதான் மனிதன்,அன்றைய காலகட்டத்தின் நிலைக்கேற்ப தொழில்நுட்பங்களையும் வசதிகளையும் பயன்படுத்துகிறான்.
இவ்வளவுதானா மனிதவாழ்வு? இதுதான் மனித வாழ்வா?
மு.கதிர் முருகன்
கோவை
அன்புள்ள கதிர் முருகன்,
விரிவான குறிப்புக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
தன்ராஜ் மணி
நல்ல அறிவியல் புனைவு. இது நடந்தால் எப்படி இருக்குமென்ற க கற்பனை புன்னகையை வரவழைத்தது. அல்லி ராஜ்ஜியம் மலர்ந்தாலும் ஆச்சர்யமில்லை. நிறைய உழைப்பு தெரிகிறது, அதற்கு பாராட்டுக்கள் ஆசிரியருக்கு