கறுப்பு நிற பூனைக் குட்டியென
கொடுக்கிச் சுருண்டு துயில்கிறது இரவு
பேரமைதி நிலவும் இன்னேரம்
அதன் நிறம் உதிர்வது தெரியாமல்
நானும் தேவதையுமாக
கண்கள் கனிய விழித்திருந்து
அலாதியாகப் பேசிக்கொண்டிருக்கிறோம்
திட்டமிட்டு ஒதுங்கியிருக்கும்
இவ்விரவு முடிவதற்கு
இன்னும் சில துளிகளே மீதமிருக்கிறது
நீண்ட நாட்களின் பின்னர்
அபரிதமாக வாய்த்த இவ்விரவினை
விடியாதபடி வைத்திருப்பது
அத்தனை இலகுவான காரியமல்ல
துளித் துளியாகச் சிந்திக்கொண்டிருக்கும்
மூன்றாம் சாமத்தை
உடன் குளிர்ந்த நீராக மாற்றி
ஒரு குடுவையில் நிரப்பி அடைத்து வைக்கிறேன்
இனி எப்படியும் விடியச் சாத்தியமில்லை
அவசரவசரமாக பிடித்து அடைத்ததில்
தெரியாமல் சில மின்மினிப்பூச்சிகளும்
அகப்பட்டு மூச்சுத் திணறுகின்றன
அது என் மனசின் ஔியைத் தூர்வடையச் செய்தது
மனம் தாங்கொணா மட்டில்
குடுவையினை மெதுவாகத் திறந்து
மின்மினிப் பூச்சிகளை மட்டும்
வெளியில் பறக்க விடுகிறேன்
அத்தருணம் பார்த்து
ஔியோடு ஔியாகக் கலந்து
சூரியனும் வெளியேற முயற்சித்தன
அதன் தலையில் ஓங்கிக் குட்டி
குடுவையினை மூடி விடுகிறேன்
இப்போது தசாப்தகாலப் பிரிவின் துயரினை
அணுவணுவாகப் பேசித் தீர்த்தோம்
இரவினைக் குளிர்ந்த நீராக்குதல்
< 1 நிமிட வாசிப்பு