இன்பமும் துன்பமும்
இன்ப துன்பங்கள் கடந்த
விழிப்பு நிலையும்தான்
வாழ்க்கை எனில்
அவற்றின் மர்மம் – அதாவது வாழ்க்கையின் மர்மம் –
வாழ்க்கையில் இல்லாமல்
நூல்களிலும்
அறிஞர்களிடமும்
ஞானிகளிடமுமா
இருக்கக்கூடும்?எப்போது
–தேவதேவன்
எங்கிருந்து பொங்கி வருகிறது
அந்த அரிய மனவெழுச்சி
என்பதை அறி.
பற்றிக்கொள் அதனை.
பிறிதெதுவுமே வேண்டியதில்லை
பிறிதெல்லாவற்றையுமே நாம் அறிவதற்கு.
எண்ணம் > நினைவுகள் > அறிவு > அநுபவம் எனும் தொடரில் நம் அநுபவங்கள் மற்றும், நம்முள் உறையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு கால அநுபவங்களே நம் எண்ணங்களின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. இந்த எண்ணங்களில் முளைக்கும் எதுவுமே, எல்லைக்குட்பட்டதாக இருக்கிறது. புனிதமற்றதாக இருக்கிறது. எண்ணங்களுக்கு அப்பால் காலத்திற்கு அப்பால் செல்லும் மனமே புனிதத்தை அறிகிறது. [1]
இந்த ‘அநுபவ வேளை’ சொல்லுக்கு இணங்காத பூரணமும் எழிலும் கொண்டதாக இருக்கிறது.
இந்த ‘அநுபவ வேளை’ எவ்வாறு நிகழ்கிறது?
அதை நிகழ்த்திக்கொள்ளும் ஆசையினால் அல்ல. முயற்சியினால் அல்ல. ஒரு லயிப்பில், ஆட்கொள்ளலில் அது நிகழ்கிறது. தன்னிச்சையாக நிகழ்கிறது.
சலனமற்ற தெளிந்த நீர்ப்பரப்பில் தன்னைத்தான் அருந்திச் செல்கிறது ஒரு பறவை
சரேலெனப் பறந்து
சரிந்து இறங்கி
நிலைத்த நீரின் மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி
அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது.
‘அநுபவ வேளை’ யின் சலனங்களே கலையில் வெளிப்படுகிறது. இயல்பான சொல்லிணைவுகள் அநுபவ வேளையைச் சுட்டும் தீற்றலாகக் (stroke) கவிதையில் வெளிப்பாடு கொள்கிறது.
எந்த மெய்யனுபவமும் சொல்லில் (கலையில்) வெளிப்பட்ட பின் அது உயிர்த்தன்மையை இழந்துவிடுகிறது எனலாம். அது வெறும் பருண்மைத் தன்மையுடையதாய் எஞ்சக்கூடும்.
அதுவும் ஓர் அறிவாக ஆகிவிடக்கூடும். இதையே
‘நூல்களிலும், அறிஞர்களுடமும், ஞானிகளிடமுமா’ என வினவுகிறார் தேவதேவன்.
பொங்கிவரும் அந்த அரிய மன எழுச்சியின் நிகழ்கணத்தில் ஒரு மின்னல் தீற்றலில் அனைத்தையும் அறிகிறோம்.
கடலாய் இதழ்விரிய மலர்மொக்கு உடையும் கணமே அது.
இன்னும்
–பிரமிள்
உடையாத ஒரு
நீர்க்குமிழி
நதியில் ஜீவிக்க
நழுவுகிறது.
கைப்பிடியளவு
கடலாய் இதழ்விரிய
உடைகிறது
மலர்மொக்கு
[1] Source of Thought J Krishnamurti
வேணு வேட்ராயன் எழுதும் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத்தொடர்:ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…