பருந்தின் கண்கள்
எனது பைனாகுலரில்
காட்சிகள்
சரிவரத் தெரியவில்லை
நேற்றுவரை நன்றாகத்தானிருந்தது
பலத்த குளிர் காற்றினால்
அதன் திருகுவிசையில் ஏதோ
ஞாபகத் தொல்லை
அல்லது அதன் தொலைநோக்கில்
இடமும் காலமும் பிசகிவிட்டது
இப்போது காட்சிகள்
துண்டாடப்பட்டே தெரிகின்றன
அக்காட்சிகளை
ஒரு கொலாஜ் சித்திரக்காரனிடம் கொடுத்தால்
தகுந்த வர்ணங்களைக் கொண்டு
ஒன்றிணைக்கக் கூடும்
ஒரு மருத்துவரோ
அதன் ரத்தநாளங்களுக்கிடையே
தோதான அறுவை சிகிச்சை செய்வார்
புதிர்விளையாட்டுகளின் மேல்
மோகம் கொண்ட சிறுவனும் கூட
அதனைத் தாறுமாறாக இயங்கி
சரிசெய்ய இயலும்
எனினும்
அக்காட்சிகள்
அந்நிலப்பரப்புகள்
அம்மனிதர்கள்
நான் கண்ட காட்சிகளிலிருந்து
விலகி தூரப்படுத்திக் கொண்டு
வினோதமாய்
கோணலாய் தெரிகின்றன
அவை ஒன்று குழிகின்றன
அல்லது குவிகின்றன
இவற்றுக்கிடையே ஒரு பருந்து
எவ்வளவு தொலைநோக்காய்
ஜீவிதத்துடனிருக்கிறது…
காலத்திற்குள் தொலைபவன்
பன்நெடுங்காலமாய் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும்
கடிகாரத்தினைக் கையிலெடுத்துப் பார்ப்பவன்
அதனுள் நுழைகிறான்
முடிவிலிக் கனங்களுக்குள் அமிழ்ந்து கண்டறிகிறான்
எண்களோடு சல்லாபிக்கும் கலையை
ஒவ்வொன்றையும் கணக்கிட்டுப் பார்ப்பவனுக்கோ
எதுவும் பிடிபடவில்லை
நாளொன்றுக்கு மும்முறையென
முட்களின்மேல் நடனமாடுபவனின் தாளத்தைக் கேட்டபடியே
நகர்கின்றன நொடிகள்
காலங்களினிடையே கணக்கின்றிப் போய்வருபவன்
ஓய்வுகொள்ளத் தோதாய்
ஒவ்வொரு மணிநேரத்திற்கொருமுறை இணைகின்றன
இருமுட்கள்
ஐந்தின் பெருக்கல்களில் வாழ்ந்துதீர்க்கிறான்
தன் ஆயுளை
புதிர்ச் சுழலாய்த் தோன்றும் பொறியிலிருந்து
அவன் வெளியேற
காலம் உறைந்து கடிகாரம் நிற்கவேண்டும்
இல்லையேல் அதனுளளேயே தொலைந்துபோகக்கூடும்
மூதாதையர்களைப்போல்..