“தேசத்தின் பாதுகாப்புக்காகக் கேட்கிறேன். தயவுசெய்து இணைய முற்றுகையைத் தளர்த்திவிடுங்கள்.”
சுவர்த் திரையில் தெரிந்த முகமூடி உருவத்திடம் மன்றாடிக் கொண்டிருந்தார் டாக்டர் கணாதராவ். குரலில் அவசர உணர்வும் கெஞ்சலும் இருந்தன. அவரது தலைக்கு மேலே கூட்டாளுமைத் தலைவர் புன்னகையுடன் சட்டகத்தில் தொங்கிக் கொண்டிருந்தார்.
“எங்களை நீங்கள் நம்ப வேண்டியது தற்போது அவசியம் டாக்டர். பிரச்சனையின் உண்மையான காரணத்தைக் கண்டறிய வேண்டுமானால் இந்தப் பழைய புலன் விசாரணை முறைகளை ஒதுக்கி வைத்துவிடுங்கள். சிலிகான் பள்ளத்தாக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டதில் இருந்து அறம்சார் அத்துமீறிகள் நமது கூட்டரசின் நலத்திற்காகவே பணியாற்றி வருகிறோம். இணையப் பாதுகாப்பின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டுவதே எங்கள் பணி. ஓர் இணையதளத்தைக் கைப்பற்றினால் மூன்று மணிநேரத்திற்கு எங்கள் குழுச்சின்னத்தை முகப்பக்கத்தில் வைத்திருந்து ஓர் அறிவுரையுடன் வெளியேறுவதே எங்கள் வழிமுறை.”
“உங்களை இப்போது நம்புகிறேன். இந்த முடக்கத்தைச் சரிசெய்ய நீங்களும் உதவி செய்ய வேண்டி இருக்கலாம். ஒருவேளை நீங்கள் சொல்வது தவறாக இருந்தால் நீங்கள் கொடுக்க வேண்டிய விலை அதிகமாக இருக்கும். மீண்டும் சந்திப்போம்.”
திரை மீண்டும் சுவராக மாறியது. கண்ணாடியைக் கழற்றி மேசைமீது வைத்தார் டாக்டர் கணாதராவ், நேனோ அறிவியல் மையத்தின் தலைமை விஞ்ஞானி. பளபளப்பான வழுக்கைத் தலைமேல் வியர்வைத்துளிகள் மின்னின. அந்தத் துளிகளில் மாறிக் கொண்டிருக்கும் கணினித் திரையின் வண்ணங்கள் பளிச்சிட்டன. தொடர்ந்து வந்து விழுந்து கொண்டிருந்த அவசரச் செய்திகளின் எண்ணிக்கை லட்சங்களைத் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது.
அறுபது கோண வடிவத்தில் ஒரு கால்பந்து பொம்மை அலங்காரமாக மேசைமீது சுழன்று கொண்டிருந்தது. அறுபது முனையங்களிலும் ஒரு கார்பன் அணுவின் அடையாளம். மிக அதிக மூலக்கூறுகளின் எண்ணிக்கையில் அமைந்த மிக வலுவான தனிமக் கட்டமைப்பு. பக்மின்ஸ்டர் ஃபுல்லரின் நானோ கட்டமைப்பின் மாதிரி.
சுவரில் மாட்டி இருந்த படத்தில் ஒரு குடும்பத்தின் ஐந்து தலைமுறையினர் உடல்நலத்துடன் சிரித்துக் கொண்டிருந்தனர். படத்தின் கீழே “அரசு ஆயுள் நீட்டிப்பு எண்ணெய் – முதுமையைத் தள்ளிப்போடும் அற்புதம்” என்ற விளம்பர வாசகம் இருந்தது.
டாக்டர் கணாதராவ் நான்கு புறமும் கண்ணாடிகளால் சூழப்பட்ட தனது அறைக்கு வெளியே பார்வையைச் செலுத்தினார். காப்பு உடை அணிந்த தரவு மைய நிர்வாகிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். எப்போதும் பரபரப்பாகச் செயல்படும் சான்றாளுமைத் தரவுத் தளத்தின் அதிவேகக் கணினிகள் செயலிழந்து கொண்டிருந்தன. இடர் கால நெறிமுறைகளின் படி, தரவுகள் அதிவேகத்தில் மின்காந்தத் தகடுகளில் பதிவு செய்யப்பட்டுக் கொண்டிருந்தன. ராட்சத பிரின்டர்கள் அச்சடித்த காகிதங்களைத் துப்பிக் கொண்டிருந்தன. பதிவு நகல் எடுத்து முடிந்த தகவல் இயந்திரங்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மரப் பெட்டிகளில் வைத்து மூடப்பட்டுக் கொண்டிருந்தன.
டாக்டர் குளிர்ந்த நீரை முகத்தில் ஊற்றிக் கழுவிக்கொண்டு அறை வாயில் கதவைத் திறந்தார். சேவகர் வழிகாட்டிக் கொண்டு வர, தரவு மையக் கண்ணாடி அறைகளுக்கும் நிர்வாக மையச் சுவர்களுக்கும் இடையில் நடந்து வந்து கொண்டிருந்தவரைப் பார்த்தார். வந்தவர் நடு வயதுக்காரராகத் தெரிந்தார். உடல் உறுதியாக இருந்தது. முகத்தில் தசைகளும் பற்களும் வலுவாக இருந்தன. நடையிலும் தொய்வில்லை. ஆனால் அவரைச் சுற்றி ஒரு முதுமை வளையம் வர என்ன காரணம்? முதுமை உடல் சார்ந்தது என்று எவர் சொன்னது?
அனுமந்த ராவ் அணுகி வந்துவிட்டிருந்தார்.
“நமது அலுவலகத்திற்கு வெளியே நின்று தடுமாறிக்கொண்டிருந்தார் ஐயா. யாரைப் பார்க்க வேண்டுமென்று சொல்லத் தெரியவில்லை. சட்டைப் பையில் உங்கள் பெயர் இருந்தது” என்றார் சேவகர்.
“அனுமந்தா, உனக்குத்தான் காத்துக் கொண்டிருந்தேன். வருக ஆய்வுச்சாலைக் கவிஞனே.” கை குலுக்கி வரவேற்று அறைக்குள் அழைத்துச் சென்று இருக்கையில் அமர்த்தினார்.
“பேரனின் உடல் நிலை குறித்து ஏதாவது தகவல் வந்ததா?”
பதிலுக்கு முன்னுரையாக ஒரு பெருமூச்சு வெளிவந்தது.
“மருத்துவர்கள் தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறார்கள். கூடுதல் செல் வளர்ச்சி நோய்க்குப் பாரம்பரியமான கதிரியக்க மருத்துவத்தையும் முயன்று கொண்டிருக்கிறார்கள். கார்பன் நேனோ குழல்களும் இலக்கு வைத்துப் புற்றுச் செல்களைத் தாக்கி வருகின்றன”
“கவலைப்படாதே அனுமந்தா. உனது நிதி விண்ணப்பத்தைச் சிறப்பு அதிகாரம் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டேன்.”
“நல்லது செய்தாய். சரியான காலத்தில் உதவி.”
“அது என் கடமை; சரி, உனது உடல்நிலை எப்படி உள்ளது?”
“உடலுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை கணாதா. இன்னும் 50 ஆண்டுகள் கடத்த வேண்டுமே என்பதுதான் பிரச்சனை. நினைவுக் குழப்பம்தான் அடிக்கடி வருகிறது. இப்போதுகூட எனது பேரனுக்குப் பிரச்சனையா அல்லது கொள்ளுப்பேரனுக்கா என்று திடீரென்று குழப்பம் வந்துவிட்டது கணாதா. அந்த உயிர்த் துறப்புரிமைச் சட்டம் வந்தால் நல்லது.”
“அது அவ்வளவு எளிதல்ல. இருநூறு ஆண்டுகளுக்கு ஒவ்வோர் உறுப்பினரும் கூட்டரசுக்குப் பணி செய்யவேண்டும் என்று ஆதாரச் சட்டம் கூறுகிறது. காலம் முதிரும் முன் விரும்பி உடல் உகுக்கும் உரிமையைச் சரியாகக் கையாள முடியுமா என்ற அச்சம் நமது தலைவருக்கு – அவர் அனைத்துப் பெருமைகளும் கொள்வாராக – இருக்கிறது. கொஞ்சம் பொறுத்துக்கொள். நேனோ குழல் ஆய்வு, மூளைக்கும் பயன் தரத் தொடங்கும் நாள் தொலைவில் இல்லை. என்ன இருந்தாலும் இளமை நீட்டிப்பு மருத்துவத்தில் உனக்குத் தெரியாதது உண்டா?”
“என்ன சொல்வது! சில காலைகள் மிகவும் தாளமுடியாமல் விடிகின்றன. எழுந்து கதவைத் திறந்ததும் செய்தித்தாள்களும் தொலைக்காட்சிப்பெட்டிகளும் வீட்டிற்கு முன்னே குதித்துக் கொண்டிருக்கின்றன. எண்களும் அறிக்கைகளும் நெளிந்து கண்ணுக்குள் விரைகின்றன. என் அறைக்குள் சென்று கதவை அடைத்து இருளுக்குள் புதைந்தால்தான் நிம்மதி”
வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தார் டாக்டர் கணாத ராவ்.
“கண் மூடியதும் ஒரு பெரும் ஊஞ்சலில் உட்கார்ந்திருப்பதாக உணர்கிறேன். ஊசலில் ஒரு கணத்திற்குள் ஆயிரம் ஆண்டுகள் முன்னும் பின்னும் பார்க்கிறேன். அடுத்த ஊசலில் இன்னும் ஆயிரம் ஆண்டுகள். பிரபஞ்ச உச்சியில் அடிக்கப்பட்டுள்ளது என் ஊஞ்சலின் ஆணி. ஊசலின் வேகம் தாளாமல் பிய்ந்து கொள்ளும்போதுதான் உறக்கத்தில் நுழைகிறேன்.”
கணாதராவின் அலைபேசி ஒலித்தது.
“அமைச்சர் அழைக்கிறார். ஒரே நிமிடம் பொறுத்திரு.” அனுமந்தராவ் தலையைத் தூக்கிப் பார்க்கும்போது கணாதராவ் அறைக்கதவிற்கு வெளியில் இருந்தார்.
திறந்து வைத்து விட்டுப்போன கணினியில் செய்தி அஞ்சல்கள் விழுந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு செய்தி வருகையும் இனிய மணி ஓசையுடன் இருந்தது. மணிகள் ஒன்று கலந்து ஒரு நீண்ட கார்வையாக மாறி ஒலித்தன. உள்ளே வரும்போது இந்த ஒலியை எப்படித் தவறவிட்டோம் என்று நினைத்துக்கொண்டே கடைசியாக வந்த செய்தியை அசட்டையாகப் படித்தார் அனுமந்தராவ்.
“காலை முதல் எனது கை ரேகையைச் சான்றாளுமைக் கணினி மறுத்து வருகிறது. ஓய்வூதியம் பெற முடியவில்லை”
அனுமந்தருக்கு ஆர்வம் மேலிட்டது. எப்போதும் அவர் பிறருக்கு வந்த செய்தியைப் படிப்பதில்லை. ஆனால் இந்தச் செய்தி அவருக்கு மிக அணுக்கமானது. அடுத்த செய்தியைப் படித்துப் பார்த்தார்.
“வங்கிப் பணமாற்றம் செய்ய முடியவில்லை. விரல் பதிவு தோற்கிறது”
“பள்ளிக் கட்டணத்திற்குக் கடைசி நாள்”
“தேர்வு மையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது”
“கொள்ளுப்பாட்டன் இயற்கை மரணம், வயது 201. எரியூட்டும் மையத்தில் அனுமதி மறுக்கிறார்கள். எனது ரேகையை உள்ளீடு செய்தால் சான்றாளுமை சர்வரிலிருந்து நிதி அமைச்சரின் படத்துடன் அவரது தகவல்கள் டவுன்லோட் ஆகின்றன”
அடுக்கடுக்காகச் செய்திக் கட்டங்கள் விலகிக் கொண்டிருந்தன. புதிய செய்திகள் தங்களை திரையில் ஒளிரவிட்டுக் கொண்டிருந்தன.
உள்ளே பதட்டத்துடன் நுழைந்த கணாதராவ் விரல்களில் இலேசான நடுக்கம் இருந்தது.
“உனக்கு இன்று காலையில் வந்த பிரச்சனை நாடு முழுவதும் பரவி வருகிறது. மொத்த சான்றாளுமைச் செயலியையும் முடக்கச் சொல்லி அமைச்சர் உத்தரவிட்டுவிட்டார்.”
அனுமந்தராவ் முகம் சலனமின்றி இருந்தது. மெதுவாக எழுந்துகொண்டார்.
“உனது அவசர அலுவலுக்கு இடையிலும் எனக்கு உதவி செய்தாய். நன்றி நான் வருகிறேன்”
“உட்கார் அனுமந்தா. நான் இப்போது ஒரு சிக்கலில் இருக்கிறேன். நேனோ தொழில்நுட்ப மையத்தின் தலைமை விஞ்ஞானி, மானுட – செயலிக் கூட்டாட்சியின் ஆலோசகன், நாட்டின் உயரிய அறிவியல் விருது பெற்றவன் இந்த எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டுப் போய்விட விரும்புகிறேன். மனித வாழ்நாளை இரட்டிப்பாக்கிய ஆய்வில் வெற்றி பெற்றோம். என்ன பயன்? ஒவ்வொரு வெற்றியும் புதிய அழுத்தத்தைக் கொண்டு வருகிறது.” கணாதராவ் குரல் உடைந்து கொண்டிருந்தது.
மீண்டும் அமர்ந்துகொண்ட அனுமந்தரின் வெறிப்பான பார்வை சூன்யத்தை நோக்கி இருந்தது. கைகள் விறைப்பாயின. ஆள்காட்டி விரல் மேசைமீது வட்டங்களை வரைந்து கொண்டிருந்த்து. நெற்றியில் சுருக்கக் கோடுகள்.
சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பெரிய ஊசல் கடிகார ஓசை நொடிகளை ஆண்டுக் கணக்கில் தாண்டுவதுபோல இருந்தது. டாக்டர் கணாதராவின் தூக்கம் இழந்த நாவில் சூடாகக் குடித்த காப்பி கசந்து கொண்டிருந்த்து. கண்ணாடி அறைக்கு வெளியே பொறியாளர்களின் நகர்வுகள் ஓசையற்ற போரைப் போல இருந்தன.
அனுமந்தராவ் குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார். அவரது உதடுகள் விரிவது போலத் தெரிந்தது.
“காய் அழுகிவிட்டால் கலனைப் பழிப்பதா?
கலன் கருகிவிட்டால் காயைப் பழிப்பதா?
ஊர்வது பறந்துவிட்டால் உலகம் தாங்குமா?”
கண்கள் மூடிய நிலையில் உளறல் போல உச்சரித்தார் அனுமந்தராவ். சன்னதத்தில் இருப்பவனின் அருள் வாக்கு போல என்று முதலில் எண்ணினார் கணாதராவ். அல்லது மது அருந்துபவனின் உளறல்? இரண்டும் சென்று தாக்கும் இடம் மூளையில் ஒன்றுதானோ? இல்லை தனியாக விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையின் பேச்சு. இந்தத் திடீர் கிறுக்குப் போக்குதானே அனுமந்தராவை ஆய்வுப்பணியை விட்டு வெளியேற்றியது! இதுதானே என்னையும் தலைமைப் பதவிக்கு எடுத்துச் சென்றது!
சொற்கள் குளறினாலும் கணாதருக்குச் செவிகொள்ள முடிந்தது. உள் உண்மையும் வெளி உண்மையும் உரசிக்கொள்ளும் இடத்தில் எழும் ஒளிச்சொடுக்கு போல; அணுவுக்கும் மகத்துக்கும் இடையில் ஊஞ்சலாடும் அறிவின் வேகத்தில் சூனியத்தில் எழுந்த சுருள். அகன்ற கைகளுக்குள் அண்டத்தை அடக்க விழைபவனின் ஏக்க மூச்சு.
இருக்கை பின்னுக்குத் தள்ளப்படும் ஓசை எழுந்தது.
“நேரம் ஆகிவிட்டது. எனக்கு மருந்து சாப்பிட வேண்டும். புலன் குழப்பக் கோளாறு. தயவுசெய்து என்னை வீட்டில் விடச் செய்ய முடியுமா? வீட்டு முகவரி என் சட்டைப் பையில் உள்ளது”
கைத்தாங்கலாக நண்பனை அழைத்துக்கொண்டு வெளியே வந்து டாக்டர் கணாதராவ் காவலரை அழைத்தார், “யாரப்பா அங்கே? செயலாளரை வரச்சொல். அப்படியே இன்னும் இரண்டு நிமிடத்தில் அவசரக் கூட்டம் என்று அறிவிக்கச் சொல்.”
***
மகிமை பொருந்திய கூட்டரசின் நிரந்தர உறுப்பினர் அனுமந்தராவ் அவர்களே,
வணக்கம். இந்த மின்னஞ்சலை நீங்கள் படிக்கும்போது ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
மானுட- இணையக் கூட்டரசின் ஆட்சிக் கட்டமைப்பு நெறிமுறைகளின் படி, ஒவ்வோர் உறுப்பினரும் ஒவ்வொரு கணிப்பொறியும் தனது இருப்பையும் அடையாளத்தையும் தொடர்ந்து நிரூபிக்க வேண்டிய அவசியத்தேவையைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.
தொடர்ச்சியான மானுட மற்றும் இணைய மோசடிகள், ஆள்மாறாட்டங்களால் தேசத்தின் பொருளியல் மற்றும் பாதுகாப்புக்கு அபாயம் நேருகிறது. அதனால்தான் இந்த விதிகள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் உள்ளன. மனிதனின், செயலியின் செயல்பாடுகள் பிற மனிதர்களையும் செயலிகளையும் பாதிக்காமல் இருக்க, அனைத்து இயக்கங்களும் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது அவசியமாகியது.
நெறிமுறைகளை மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை இயற்றுவதும் அவற்றை இணையச் செயலி கண்காணிப்பதும் மனித – இணையப் பூசல்களை இரு தரப்பும் இணைந்து பேசித் தீர்த்துக்கொள்வதும் கணினியைவிட ஒரு படி மேலாகச் சபை அதிகாரம் கொண்டிருப்பதும் என, இந்த அமைப்பு சிக்கலான கட்டமைப்பு கொண்டு விளங்குவது நம் அனைவரின் பாதுகாப்பான இருப்புக்காகவே.
இன்று காலை ஓய்வுதிய அலுவலகத்தில் தங்கள் அடையாளம் சான்றாளுமை மென்பொருளால் மறுக்கப்பட்டமைக்கும் தாங்கள் பொருத்தமற்ற பேச்சுக்காக அங்கிருந்து அமைதியான முறையில் அகற்றப்பட்டதற்கும் கூட்டாட்சியின் சார்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தங்கள் ஓய்வூதியம் அவசரகால நெறிமுறைப்படி கணக்கில் சேர்க்கப்பட்டுவிட்டது. சான்றாளுமை சிஸ்ட்த்தின் பிழைகள் விரைவில் சரிசெய்யப்பட்டுவிடும். இது குறித்த தங்கள் மேலதிக ஆலோசனைகளைத் தங்கள் உறுப்பினர் நுழைவில் பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்க மனித-இணையக் கூட்டரசு
தங்கள் உண்மையுள்ள அமைச்சர்
அடையாளத்துறை
***
நீள்வட்ட மேசையை ஒட்டி அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் அமர்ந்திருந்தார்கள். வறுத்த முந்திரித் தட்டுகள் காபிக் கோப்பைகளுடன் வைக்கப்பட்டிருந்தன. மையத்திரையில் அமைச்சர் தோன்றினார். முகமன் இல்லாமலேயே தொடங்கிவிட்டார்.
“இன்று நம்முன் நிற்கின்ற பிரச்சனையை நமது விஞ்ஞானிகள் தீர்த்துவிடுவார்கள் என நம்புகிறேன். எந்த அரசு சேவையும் தடை இல்லாமல் வழங்க நமது கூட்டாட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இன்னும் ஒரு மணி நேரத்தில் தலைவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இதற்குக் காரணமான சக்தியைக் கண்டுபிடித்து, அவர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். நமது அரசு உறுப்பினர்கள் நலம் நாடும் அரசு. டாக்டர் கணாதராவ் பெரிய அறிஞர். நமது விஞ்ஞானிகள் நுண்ணறிவு கொண்டவர்கள். பனிப் பிரதேச ஆய்வு முகாம்களை நினைவில் கொண்டவர்கள்.”
“அமைச்சர் அவர்களே, தீவிரமாக முயன்று கொண்டிருக்கிறோம். பழகிவிட்ட தொழில்நுட்பங்களில் பிரச்னைகள் வந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. அதனால்தான்….”
அமைச்சர் உருவம் இருந்த இடம் கருப்புத்திரையாக மாறிவிட்டது. பேசிக் கொண்டிருந்த கணாதராவ் உடல் குளிரில் உறைந்தது போல விறைத்திருந்தது. இரத்தம் சுண்டி முகம் வெளிறிப் போய் வயிற்றில் இனம் புரியாத குழைவை உணர்ந்தார். தான் சிதைந்து விடவில்லை என்பதை உணர்த்த தீவிரத்தன்மையைக் குரலில் வரவழைத்துக் கொண்டார்.
“அறிஞர்களே, சான்றாளுமை சர்வர்கள் நமது நாட்டின் உறுப்பினர்களின் கை ரேகை அடையாளங்களைப் புறக்கணித்து வரும் சிக்கலைப் பற்றி எல்லாருக்கும் தகவல் அனுப்பிவிட்டேன். யாருக்காவது பயனுள்ள தீர்வு இருந்தால் சுருக்கமாகச் சொல்லலாம்.”
முதல் இருக்கையில் அமர்ந்திருந்த டாக்டர் ஜைமினி தனது பெரிய தொப்பையை மேசை மீது அமர்த்தி இருந்தார். அவர் முன் காலியான முந்திரித் தட்டு இருந்தது.
“டாக்டர் அவர்களே, நான் எனது பையன்களைத் தீவிரமாக முடுக்கிவிட்டிருக்கிறேன். இது ஏதோ அயல் உடு மண்டல சதி போலத் தெரிகிறது உயிரியல் ஆயுதங்கள் மாதிரி ஏதாவது நடந்திருக்கிறதா என்று கண்டுபிடித்தபின் சொல்கிறேன்.” தனது கடமையை முடித்த உணர்வுடன் அமர்ந்துகொண்டார்.
சங்கடமான அமைதி அரங்கில் உருண்டு நின்றது. விஞ்ஞானிகளுக்கே உரித்தான தீவிர முகங்கள் அதி தீவிரத்தன்மையைப் பூசிக் கொண்டிருந்தன.
பின் வரிசையிலிருந்து ஒரு தயங்கிய குரல் குறைவான ஆற்றலுடன் ஒலித்தது. “ஐயா, நான் உயிர்ச் செயலி ஆய்வக மாணவன். பிரச்சனை சான்றாளுமை சர்வரில் இல்லாமல், உறுப்பினர்களின் விரல்களில் இருக்குமோ என்று தோன்றுகிறது.”
கணாதராவ் ஒரு சுண்டுதல் தலைக்குள் வந்ததை உணர்ந்தார். கலன்களையே – சர்வரையே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஒருவேளை காய்களில் – விரல்கோட்டு உள்ளீடுகளில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்?
“உள்ளீட்டில் கோளாறு இருக்கலாம் என்கிறாயா?” விவாதத்தின் ஆர்வத்தில், பேசுபவது யாருடன் என்பதையே கவனிக்கவில்லை.
“ஆம். சில விரல் பதிவுகளின் வரியோட்டங்களை நாம் கூர்ந்து பார்க்கவேண்டும்.”
சற்று முயற்சி செய்து தன் உடலைப் பின்னால் வளைத்த டாக்டர் ஜைமினியின் உதடுகள் எள்ளலுடன் சுருங்கின. “தம்பி, நீ எந்தப் பல்கலையில் படித்தாய்? உனது அனுபவம் எவ்வளவு?”
டாக்டர் கணாதராவ் கையை உயர்த்தி இடைமறித்தார்.
பேசியில் செயலரை அழைத்த கணாதராவ், “உடனடியாக எனக்கு இன்று காலையில் வந்த அனுமந்தராவின் விரல்களின் எம் ஆர் ஐ வரியோட்டங்கள் வேண்டும்,” என்றார்.
அகலமான நீர்மப் படிகக் காட்சித் திரையில் நான்கு படங்கள் நின்றிருந்தன. கோடுகளால் அமைந்த உயிரின் இருப்புகள்.
“முதல் படம் ஒரு வருடம் முந்தையது. அடுத்த மூன்று படங்களும் இன்று காலை ஒரு மணி நேர இடைவெளியில் எடுக்கப்பட்டவை.”
துள்ளி எழுந்தான் பின் வரிசை மாணவன். “ஐயா, படங்களைக் கூர்ந்து பாருங்கள். கருப்பாக சில புள்ளிகள் விரல் வரிகளுக்கிடையில் அடைத்துக் கொண்டிருக்கின்றன. பாருங்கள். சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காந்தப் புள்ளிகள் போல. இல்லை. இன்னும் படத்தை அணுக்கமாக நோக்க வேண்டும்.”
சுட்டியின் மேல் கணாதராவின் விரல் சுழன்றது. படம் அணுகி அணுகி வந்தது.
“அவை புள்ளிகள் அல்ல. குழல்கள். ஒவ்வொரு படத்திலும் அவற்றின் இடம் மாறி வருகிறது. அவை,….அவை…. ஏன் கார்பன் நேனோ குழல்களாக இருக்கக் கூடாது?
“ஒரு கிருமிப் படையெடுப்பு போல?”
“ஆம் ஏன் இது ஒரு நேனோ படையெடுப்பாக இருக்கக் கூடாது?”
டாக்டர் கணாதராவ் தயக்கத்துடன் தொடர்ந்தார். “அப்படி என்றால், விழித்திரை, முக ஒப்பீடு இவை ஏன் தோல்வி அடைந்தன? மேலும் தோலுக்குள் இந்தக் குழல்கள் எப்படி ஊடுருவின?”
“இனிமேல்தான் அதற்கு விடை காண வேண்டும்.” மாணவன் குரலில் உற்சாகம் குறைந்திருந்தது.
அறையில் இருந்தவர்கள் சலனம் அடைந்ததை கணாதாராவ் கண்டார். ஒருவேளை பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டிருக்கிறாமா? இன்னும் ஒரு திருப்பம் சென்றுவிட்டால் இது எல்லாம் முடிந்துவிடுமா? உடனே முதல் ஆளாகத் தலைவரிடம் சொல்லிவிட வேண்டும். பிறகுதான் அமைச்சர். சரி, ஆனால் திருப்பம் எப்படிக் கிடைக்கும்? முடிவையே யோசித்துக் கொண்டிருக்கிறோம்.வழி எங்கே? யார் இந்த மாணவன்? பெயர்கூடத் தெரியவில்லை. ஜைமினி மோசமானவன். சிறிது அசந்தாலும் அமைச்சரிடமிருந்து நம்மைப் பிரித்துவிடுவான்.
அரங்கம் சிறு குழுக்களாக மாறிப் பேசிக்கொள்ளத் தொடங்கியது. பல துறை அறிஞர்களும் கற்பிதங்களை உருவாக்கத் தொடங்கினார்கள்.
தனக்குத்தானே சில சொற்களைப் பேசிக்கொண்டிருந்த ஆராய்ச்சி மாணவன் “ஐயா” என்று கூப்பிட்டபோது எல்லாத் தலைகளும் அவனை நோக்கித் திரும்பின.
“உள்ளீட்டுப் பிரச்சனையால் விரல் வரி ஒப்பீடு தோல்வி அடைகிறது. செயலியிலும் அதே சிக்கல் பரவி இருந்தால்? பிற உறுப்புகளின் அடையாள ஒப்பீடுகள் செயலியின் கோளாறால் தோல்வி அடைந்து கொண்டிருந்தால்?” மாணவன் பேசும்போதே ஏதோ கண்டடைந்த ஒளியை அவன் கண்களில் கண்டார் கணாதராவ்.
காயும் அழுகல். கலனும் கருகல்.
டாக்டர் ஜைமினி இப்போது எழுந்தேவிட்டது.
“சிறியவர்களின் பேச்சைக் கேட்க நமக்கு நேரமில்லை. இவர்கள் அடிப்படை அறிவியலையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்கள். நாம் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம்.”
இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்த கணாதராவ்,
“டாக்டர் ஜைமினி, உங்கள் உயிர் வேதியியல் திறமைக்குப் பெரும் சவால் வந்திருக்கிறது. முந்திரியின் புரதங்களை வைத்து உயிரை நீட்டுவதற்கான ஆராய்ச்சி பற்றிய சிறுகுறிப்பை உடனடியாகத் தயார் செய்து தாருங்கள்” என்றார்.
தொப்பை ஆர்வத்துடன் மீண்டும் மேசையில் பொருத்திக்கொண்டது. எதையோ தீவிரமாக எழுதத் தொடங்கியது.
“செயலியிலும் சிக்கல்; உயிர் அடையாள உள்ளீடுகளிலும் தடங்கல்; டிஜிடல் மின்னணுவியல் தோல்வி அடைந்துவிட்டது என்கிறாயா?”
“அந்த முடிவுக்கு வருவதற்கு அச்சமாக இருக்கிறது. நமக்குச் சான்றாளுமை சர்வர்களின் சிலிகான் சிப்புகளின் அணுக்கப் படங்கள் தேவை டாக்டர்” மாணவன் முகத்தில் கவலை தெரிந்தது. கெஞ்சும் குழந்தையின் சங்கடமான புன்னகை இருந்தது.
***
டாக்டரின் மேசை மீதிருந்த வண்ணப்படங்களைப் பார்த்துக்கொண்டே மாணவன் சொன்னான் “டாக்டர், எலக்ட்ரான்கள் தாவிச் செல்லும் பாதைகளிலும் அவை அடைத்துக்கொள்ளும் துளைகளிலும் ஏதோ ஒன்று இருட்டாக அமர்ந்து கொண்டிருக்கிறது.”
கூட்டத்தைக் கலைத்துவிட்டு ஆய்வு மாணவனை மட்டும் தன் அறையில் வைத்திருந்தார் கணாதராவ்.
“அப்படி என்றால், கார்பன் நேனோ குழல்கள் மனித விரல் ரேகைகளிலும் சிலிகான் சிப்புகளிலும் உட்கார்ந்து கொண்டிருக்கின்றன என்கிறாயா? அங்கே எப்படி வந்தன?”
“தெரியவில்லை. நேனோ ஆய்வு பல துறைகளில் சென்று கொண்டிருக்கிறது. ஆயுளை நீட்டிக்கும் எண்ணெயில் குழல்களைக் கலக்க அரசு நிபந்தனையுடன் அனுமதி அளித்துள்ளது”
டாக்டர் வயிற்றில் ஒரு நெளிவை உணர்ந்தார். ஊஞ்சலாடும்போது வரும் இலகுத்தன்மை போல.
மின்னலாக அந்தச் சொற்றொடர் கணாதராவை வெட்டிச் சென்றது. “ஊர்வது பறந்துவிட்டால் உலகம் தாங்குமா?”
எந்தக் கணத்தில் இத்திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கும்!
“டாக்டர், ஒவ்வொரு செல்லும் உயிர்களே; நேனோ அணுக்களுடன் அணுக்கமாகிவிட்ட செல் புரதங்கள் அணுக்களுக்கு உயிர் கொடுத்துவிட்டனவா? ஊர்தல் என்ற ஓர் உயிர்ச்செயல் நிகழ்ந்துவிட்டதோ?”
கணாதராவ் ஆழமாகச் சொற்களை உதிர்த்தார்.
“அணுக்களைத் தனியே பிரித்தெடுத்து ‘ஜீவன்’ என்ற சொல்லின் வடிவை அணுப் புள்ளிகளால் கோலம் போட்டது பழங்காலக் கம்பெனியான ஜெ பி எம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் மனிதம் தொட்டது மானுட அறிவின் ஒரு சிகரம்; ஆனால் உயிரின் இருப்பின் அடையாளத்தில் ஓர் அபாயப்புள்ளியைத் தொட்டுவிட்டோம்.”
“அப்படி என்றால் நாம் எல்லாக் கணினிகளையும்…”
“நாட்டின் இயக்கம் நிற்கப் போகிறது. அது விபத்தாக இல்லாமல் திட்டமிட்டதாக இருந்தால் மீள்வது குறைந்த வலியுடன் இருக்கும். என்னுடன் வா”
***
“தொடர் அதிர்ச்சிகளைக் கொடுத்துக் கொண்டிருக்கிறீர்கள்”
கணாதராவின் கண்கள் அழுத குழந்தையின் கன்னம் போலச் சிவந்திருந்தன. அருகில் மாணவன் துடிப்புடன் அறையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இன்னும் எந்த அடிப்படைகள் தகரப் போகின்றன? சிப்புகள் தங்கள் அடிப்படை பூலியன் விதிகளை உடைத்துக் கொண்டிருக்கின்றன. மின் காந்தவியலும் ஒளியின் விதிகளும் பொய்த்துவிட்டன் என்று சொல்லப் போகிறீர்களா?”
“அமைச்சரே, நாம் இப்போது ஒரு யுக சந்தியில் நின்றிருக்கிறோம். எலக்ட்ரான்களின் ஓட்டமும் இருத்தலும்தான் டிஜிடல் மின்னணுவியலின் அடிப்படை. இந்த எதிர்மின் துகள்கள் திட்டமிட்டபடி சிலிகான் குறைக்கடத்திகளின் மீது பறந்து சென்றும் படிந்தமர்ந்தும் பூச்சியங்களையும் ஒன்றுகளையும் தேக்கிவைக்கும் நினைவகமாக ஆக்கின – பல ஆயிரம் ஆண்டுகளாக.
பறக்கும் எதிர்மின் துகள்களைத் தடுக்கவும் குழிகளில் அமர்ந்திருக்கும் துகள்களை எழுப்பவும் ஒன்று உள்ளே புகுந்துவிட்டது. மிக மிக அணுவாக.”
“எப்படி ஏற்பட்டது இது? யார் செலுத்தியது?”
“நேனோ எண்ணெயில் கார்பன் துகள்களை அதிகப்படுத்தி வாழ்நாள் நீட்டிப்பு ஆய்வு செய்தோம் அல்லவா? துகள்கள் தசைத் திசுக்களைக் கடந்து தோலுக்கும் அங்கிருந்து எப்படியோ கணினி நினைவகத்திற்கும் வந்திருக்க வேண்டும்.”
கணாதராவின் விளக்கம் பேராசிரியரின் ஆர்வத்துடன் இருந்தது. அந்த ஆர்வம் அந்தச் சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருந்தது.
அமைச்சர் கண்களால் மாணவனின் இருப்பைச் சாடை காட்டினார்.
“இந்த இளம் ஆராய்ச்சி மாணவன் நல்ல குறுக்கு வெட்டுச் சிந்தனை உள்ளவன். அவனது ஆலோசனைகள் எனக்குத் தேவை. இப்போது உடனடியாக எல்லா மின்னணு சாதனங்களும் நிறுத்தப்பட வேண்டும். முதலில் அணு உலை. பின்னர் ராணுவத் தளங்கள். அடுத்து நிதிச்சேவை, இணையம், அலைபேசி, எங்கெல்லாம் டிஜிடல் மின்னணுவியல் உள்ளதோ அனைத்துக் கருவிகளுக்கும் கோளாறு தொற்றப் போகிறது. நகரும் நேனோ குழல்கள் ஊடுருவப் போகின்றன”
“அல்லது ஏற்கெனவே தொற்றிவிட்டதா?” அமைச்சர் பொறியை நோக்கி விரையும் பூச்சியின் வேகத்தில் பேசினார்.
“ஐயா, இதைப்பாருங்கள்”
மாணவன் தன் செல்பேசியை கணாதராவிடம் நீட்டினான்.
தலைமை அணு மையத்தின் பாதுகாப்புக் கணினியில் கோளாறு ஏற்பட்டது. நிலையம் நிறுத்தப்பட்டு ராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.
செய்தியை உரக்கப் படித்து முடிக்கும் முன்பே, அறையின் அனைத்து விளக்குகளும் அணைந்துபோயின. ஏதோ மின்பொருள் பொசுங்கும் மணம் எழுந்தது.
“அவசர கால விளக்குகள் வேலை செய்யவில்லை. தீப்பெட்டி உடனடியாக வேண்டும்”
மாணவன் தனது கால் சட்டையிலிருந்து மெழுகுதிரியையும் தீப்பெட்டியையும் எடுத்தான். டாக்டர் வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்க அறையில் மெல்லிய ஒளி தயங்கியபடியே முதலில் படபடத்துப் பின்னர் நின்று எரிந்தது.
மாணவன் தன் பையிலிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். அறையின் குறைவான வெளிச்சத்தில் பழுப்பு நிற அட்டையின் நாள்பட்ட மணம் எழுந்தது. அட்டை மீது அழகிய கையெழுத்துகள் வரிசையாகப் பூக்களைப் போல உட்கார்ந்திருந்தன.
“அடிப்படைகள் நகரும்போது”
டாக்டர் கையெழுத்தைக் கண்டுகொண்டார். அரிய கலைப்பொருளைக் கையாளுவது போலப் புத்தகத்தைத் தடவினார். அவரது முகம் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தியது.
“தம்பி இது உனக்கு எங்கே கிடைத்தது?”
மாணவன் முக்கியமான ஒரு வரலாற்றுத் திருப்பத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டான். அப்படி எண்ணிக்கொள்பவர்களைப் போலப் பேச்சில் நிதானம் தவழ்ந்தது.
“சொல்கிறேன் சார். அதற்கு முன் இந்த நோட்டுப் புத்தகத்தின் பத்தாவது அத்தியாயத்தின் தலைப்பைத் தயவுசெய்து பாருங்கள். டிஜிடல் மின்னணுவியல் தோல்வி அடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற தலைப்பு நமக்கு முக்கியமானது.”
“இது இன்று காலை எனக்கு ஒரு பெரியவரிடமிருந்து கிடைத்தது. ஆய்வகக் கட்டடத்திற்கு வெளியே தேனீர் குடித்துக் கொண்டிருக்கும்போது அவரைக் கைத்தாங்கலாக அழைத்து வந்த பாதுகாவலர் தனக்கு அவசர வேலை இருப்பதால் அந்தப் பெரியவரை வீட்டில் விடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். அந்த அரை மணி நேரம் என் வாழ்வை மாற்றி அமைத்தது.”
டாக்டர் கணாதராவ் ஒரு குழந்தையை எடுப்பது போலப் பக்கங்களைப் புரட்டினார். பத்தாவது அத்தியாயத்திற்கு வந்தார். வேகமாகக் குறிப்புகளைப் படித்தார். அமைச்சர் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். இரண்டு பக்கங்கள் முடியும்போது இருவரும் ஒரு நிறைவை அடைந்தது போல இருந்தது
“பெரும் வேலைகள் இருக்கின்றன. உடனடி எதிர்வினையாக அனலாக் முறையில் அனைத்தையும் மாற்றி அமைப்போம். காலம் கருதி இருக்க முள் கடிகாரங்கள், பரிமாற்றத்திற்கு ரேடியோ தகவல் தொடர்பு, மானுட சமிக்ஞை மூலம் ரயில் போக்குவரத்து, அச்சு கோத்த செய்தித்தாள்கள், கம்பியிலாத் தந்தி, சுருள் திரைக் காமிராக்கள், ட்ரங்க் முறையிலான தொலைபேசி பூத்கள், எண்களைச் சுழற்றும் தொலைபேசிகள் என மூன்று நாட்களுக்குள் தேசத்தின் இயக்கத்தைச் சரிசெய்ய முடியும்”
அமைச்சரின் முகத்தில் ஆறுதலைப் பார்த்தார். அமைச்சர் ஒரு சிறுவனைப் போலப் புத்தகத்தை முகர்ந்து கொண்டிருந்தார்.
“வேலை இழக்கும் கணினித் துறை இளைஞர்களை அடுத்த கட்ட ஆய்வுக்குச் செலுத்தவும் சாதாரணத் திறமை உள்ளவர்களைக் காகித முறையில் தரவு மேலாண்மைக்கு அரசு சேவை மையங்களிலும் பயன்படுத்திக்கொள்ளவும் ஆலோசனைகள்” என்றது அடுத்த உப தலைப்பு.
கணாதராவின் முகம் இருண்டு கொண்டிருந்தது.
புத்தகத்தைப் பிடுங்கி அட்டவணைப் பகுதியை அமைச்சர் உரக்கப் படித்தார்.
“புவியீர்ப்பு நின்றுவிட்டால்…” என்றது முதல் தலைப்பு. அடுத்த கட்டுரை “பூமியின் வயிற்றில் சூடு குறையத் தொடங்கினால்…”
மூன்றாவது கூறியது “தண்ணீரில் பொருட்கள் கரையாவிட்டால் …”
“அமைச்சரே, நான் முக்கியமான சிலவற்றைப் பேச வேண்டும். இந்தத் தகவல்கள் எனது இருப்பையே புரட்டிப் போடலாம். ஆனாலும் நான் சொல்லவேண்டும்.”
கணாதராவ் உறுதியான குரலில் எதையோ முடிவு செய்துவிட்டது போல ஆரம்பித்தார்.
உறைந்து போய்விட்ட கணினியின் நிழல் பெரிதாகச் சுவரில் விழுந்திருந்தது. அதன் மேல் ஒரு பல்லியின் நிழல் ஓடிக்கொண்டிருந்தது. மெழுகின் கருகல் மணம் பரவத் தொடங்கி இருந்தது.
“அனுமந்த ராவும் நானும் பள்ளியிலிருந்து ஒரே வகுப்புத் தோழர்கள். ஒரே நாளில் உயர் அறிவியல் மையத்தில் சேர்ந்தோம். அவன் தீ போன்ற ஆர்வத்தால் அறிவுத்தேடல் கொண்டவன். எல்லா உண்மைகளையும் தானாகவே சோதித்துப் புரிந்துகொள்வான். அடிப்படை உண்மைகள் ஒரு நாள் மாறக்கூடும் என்பான்.”
“ஆய்வை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வான். அப்போது அறிவியல் மையங்களின் அரசியல் படிக்கட்டுகளில் நான் மேலே ஏறிக் கொண்டிருந்தேன். அவன் சமரசம் செய்து கொள்ளாதவன். எனது எல்லா ஆய்வுக்குழுக்களிலும் அவன் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன். எங்கள் அணி ஒவ்வொரு தடையாகத் தாண்டிக் கொண்டிருந்தது. அனுமந்தன் நிர்வாகப் படிக்கட்டுகளில் ஏறவே இல்லை. அவனது கொடைதான் எனது இன்றைய பதவியும் பெயரும்.”
சற்று இடைவெளி விட்டார் கணாதராவ். ஈன்றுவிட்ட பசுவைப்போல இலேசாக உணர்ந்தார்.
“அதுவரை புரதங்கள் மூலம் செல் உயிரியலில் மாற்றங்கள் செய்து உயிர் நாளை நீட்டித்து வந்தோம். அப்போதுதான் நேனோ ஆயுள் நீட்டிப்பு ஆராய்ச்சியில் இறங்க ஆரம்பித்தோம்.”
“தம்பி, வெளியே சென்று முதல் கதவில் யாராவது பாதுகாவலர் இருந்தால் வரச் சொல்லமுடியுமா? அழைப்பு மணி வேலை செய்யவில்லை என்று சொல்”
அமைச்சரின் குரல் இலேசாக அதட்டியது போல இருந்தது
மாணவன் மங்கலான வெளிச்சத்தில் விருப்பமில்லாமல் வெளியேறினான்.
“நீர் ஞானியாக ஆகிக்கொள்வது பற்றி எனக்குப் புகார் இல்லை. நான் அடுத்த வருடம் தேர்தலைச் சந்திக்கவேண்டும்” நோட்டுப் புத்தகத்தை மேசை இழுப்பானில் வைத்துப் பூட்டினார் அமைச்சர்.
டாக்டர் கணாதராவ் ஏளனப் புன்னகை போன்ற ஒன்றை உதிர்த்தார். “நேனோ ஆய்வில் உறுதியான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினான் அனுமந்தன். அப்போதுதான் நாம் அந்த முடிவை எடுத்தோம்”
பாதுகாவலர் ஓடி வந்தார். “அமைச்சருக்குத் தலைவர் அலுவலகத்திலிருந்து வாகனம் வந்துள்ளது. நீங்கள் அங்கே உடனே இருக்க வேண்டுமாம்”
நோட்டுப் புத்தகத்தை எடுத்துத் தன் பெட்டியில் வைத்துக்கொண்டே அமைச்சர் சொன்னார் ஓங்கிய குரலில் “நமது ஒப்பந்தம் நினைவில் இருக்கட்டும்.”
கணாதராவ் அமைச்சரிடம் கை குலுக்கும்போது சுருங்கிய பலூன் போலத் தனது கைகள் மெலிந்திருப்பதாக உணர்ந்தார்
***
“செல்லே, மெதுவாகப் பிரி;
அடி வயிற்றின் அக்னியே, குறைவாய் எரி; நிறைய நாள் சுடு
என் அருமைக் குரோமோசோமே, அணு அணுவாக நின்று மெதுவாகத் தேய்க”
ஆய்வுக் கூடத்தில் நுண்ணோக்கியின் அடியில் செருகி இருந்த தாளில் வசனக் கவிதை எழுதப்பட்டிருந்தது. சில ரசாயனத் துளிகள் முக்கியமற்ற இடங்களில் தெளித்துப் பரவி இருந்தன.”
சில காட்சிகளும் சில சொற்களும் ஏன் எவ்வளவு காலம் கடந்தாலும் நினைவில் நிற்கின்றன? தற்போது மூளை ஏன் அவற்றைத் தோண்டி எடுத்து ஓடவிட வேண்டும்?
கதவைத் தட்டி வெகுநேரமாகி விட்டதாக உணர்ந்தார் கணாதராவ்.
கதவை அனுமந்தராவ் திறந்ததும் டாக்டர் கணாதராவும் மாணவனும் உள்ளே நுழைந்தார்கள். “வா கணாதா” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவரது புன்னகையில் உறங்கி எழுந்த குழந்தையின் இனிமை இருந்தது.
இளைஞனைப் பார்த்து “இவரை எங்கோ பார்த்திருக்கிறேன்” என்றார்.
“இன்று காலை நாம் சந்தித்திருக்கிறோம் ஐயா. என் பெயர் குவிரன்.”
தேனீர்த் தட்டை ஒரு நடுத்தர வயதுக்காரர் வைத்துவிட்டுப் போனார்.
“எனது பேரன்தான். உனது உதவியால் சிகிச்சை முடிந்து வீடு வந்துவிட்டான்”
அறையில் மாட்டி இருந்த படங்களை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த இளைஞனிடம் “அதுதான். இரண்டு ராமானுஜர்கள். ஒருவர் தனது மூளையை ஒளிரவிட்டவர். இன்னொருவர் சமுதாயத்தின் இதயத்தை ஒளிரவிட்டவர். இரண்டு பேருமே சொல்லாமல் சொல்வது, – அறிவிற்குப் பல்கலைக் கழகங்களும் ஆய்வகங்களும் அவசியமில்லை”
“அனுமந்தா, உன்னிடம் சில விடயங்கள் பேச வேண்டும்.”
“சொல்லுடா” ஆர்வத்துடன் இருக்கையில் முன்னே குனிந்தார்.
கணாதராவ் கேட்டார்,
“உனக்கு நினைவிருக்கிறதா? நேனோ ஆய்வு மையத்திலிருந்து நீ ஏன் வெளியேற்றப்பட்டாய்?”
உரக்கச் சிரித்துக்கொண்டார். குழந்தைமையும் எளிமையும் கலந்து வந்த சிரிப்பு.
“அதை ஏன் இப்போது கேட்கிறாய்? எனக்கு ஓர் உளப்பிரச்சனை இருந்தது. அதாவது ஒரு பொறிக்கான தூண்டலை இன்னொரு புலன் படிக்க ஆரம்பித்துவிட்டது. எப்படி என்றால் இப்போது பச்சை நிறத்தைப் பார்த்தால் அது மூளையில் பச்சையாகத் தெரியாது. தீய்ந்து போன எண்ணெயின் மணத்தை அது எழுப்பும். தேசிய கீதத்தைக் கேட்டால் பனிக்கட்டியின் குளிர்ச்சியை மூளை அனுபவிக்கும். கூடவே ஞாபக மறதி. நினைவுக் குழப்பம். ஆதலால் நேனோ ஆய்வில் இருந்து நானே வெளியேறிவிட்டேன்.”
“நீ உண்மையாகவே அப்படித்தான் நம்புகிறாயா அனுமந்தா?”
அனுமந்தராவ் தலையை அசைத்தார்.
“நீ இயந்திரத்தில் வார்க்கப்பட்ட விஞ்ஞானி அல்ல. கவித்துவம் நிறைந்தவன். ஆய்வகத்தில் கபிலரையும் காளிதாசரையும் பதஞ்சலியையும் கண்டவன். ஆராய்ச்சிக்கு நடுவே கவிதை புனைபவன். உன் சிந்தனையின் தாவலைத் தொடர மற்றவர்களால் முடியவில்லை. உனது இந்த இயல்பையே உனக்கு எதிராக அதிகாரிகள் மாற்றி இருந்தால்? உன்னை வெளியேற்றுவது யாருக்காவது உதவி செய்வதற்காக இருந்தால்…”
கணாதராவின் தொண்டை அடைத்துக்கொண்டது.
“நமது ஆய்வகத்தை உலகமே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது. நமது கார்பன் நேனோ குழல்கள் உடலில் தறுதலைகளாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஃப்ரி ரேடிகல் அயனிகளை அழித்து வாழ்நாளை நீட்டித்தன. ஆனால் இந்தக் குழல்களே ஃப்ரி ரேடிகல்களாக மாறி செல்களுடன் வினையாற்றிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை நீ முன்வைத்தாய். மருந்துகளை வெளிப்படுத்தும் முன் அதிகத் தரவுகள், ஆய்வுகள் வேண்டும் என்றாய். எங்களுக்குத் தலைவர் விரும்பியது போன்ற முடிவுகள் அவசரமாகத் தேவைப்பட்டன. உடனடியாகக் களச் சோதனைகளில் புதிய மருந்தை மனிதர்களுக்குப் பரிசோதனை செய்யவேண்டி இருந்தது.”
“இன்று நீ அஞ்சியது நடந்துவிட்டது.”
அனுமந்தரின் முகம் மென்மையாகச் சிரித்தது. கணக்குகள் போட அறியாத நேரடிச் சிரிப்பு.
“நீ சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆய்வுகளுக்கு நேரடிச் சோதனைகளும் அவசியம்தானே?”
“இல்லை, நான் ஒரு சுயநலவாதி. எல்லா ஆய்வுகளிலும் உன்னைப் பயன்படுத்திக் கொண்டேன். ஆனால் முக்கிய தருணத்தில் உன்னை வெளியேற்றத் திட்டமிட்டேன்.”
“ஏன் பிரித்துப் பேசுகிறாய்? நீ, நான், இந்தத் தம்பி, இந்தக் கோப்பையில் ஊறிக் கொண்டிருக்கும் நுண்ணுயிர்கள் எல்லாம் செல்களே அல்லவா? செல்களெல்லாம் அணுக்களின் விதவிதமான கூடுகையின்றி வேறென்ன? நமக்குள் இந்த நொடியில் எவ்வளவு ஃபோட்டான்கள் ஊடாடி இருக்கும்?”
“உடலின் ஒவ்வொரு செல்லும் ஒரு தனி உயிர். எல்லா செல்களும் ஒருங்கிணைந்து உருவாகும் தன்னுணர்வின் ஆற்றல் ஓர் அற்புதம். புடவி என்னும் உடலில் அனைத்து உயிர்களும் செல்களே. க்வான்டம் மெய்யியலில் நாம் இதைக் கற்கவில்லையா?”
அனுமந்தராவின் புன்னகை பெருமிதமும் உள விரிவும் கொண்டவருக்கானது.
“உனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தமே இல்லையா?”
“அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?” மீண்டும் எளிமை கலந்த உரத்த சிரிப்பு.
அப்போது டாக்டர் கணாதாராவ் கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டார். உடல் குலுங்கியதிலிருந்து அவர் அழுதுகொண்டிருப்பது தெரிந்தது.
“இப்போது இவ்வளவு விசனப்படும்படி என்ன ஆகிவிட்டது நண்பா. இன்னொரு தேனீர் கொண்டுவரச்சொல்கிறேன். நீ மிகவும் குழப்பிக்கொள்கிறாய்,” என்றார் அனுமந்தர்.
“இல்லை. நான் இதைச் சொல்லாவிட்டால் எனது உள்ளம் வெடித்துவிடும். மன எழுச்சி பெற வைத்து மூளையில் இலக்குகளை அடையும் ஆராய்ச்சியில் உனது பேரனை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம். அவனுக்கும் நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகமாக கார்பன் நேனோ குழல்கள் மூலம் மருந்துகளைத் தந்தோம்.”
கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டார் கணாதர். தேனீர் வந்தது
“தேவையில்லாமல் குழப்பிக்கொள்கிறாய். முதலில் செல்களின் தேய்மானத்தைக் குறைத்து ஆயுளை நீட்டித்தோம். செல் பிரிதல் நின்றுவிட்டால் தோல் சுருங்கும்; எலும்பு வளையும்; குருதியின் விசை குறையும். இந்தத் தேய்மான வேகத்தைக் குறைத்துப் பிரிதலின் காலத்தை நீட்டித்தோம். ஆயுள் இருநூறை அடைந்தது. அடுத்த கட்டமாக எதிர் ஆக்சிகரணிக்களுக்கு நேனோ துகள்களைப் பயன்படுத்தித்தானே ஆகவேண்டும்?”
இடைவெளி விட்டு மெதுவாக யோசித்துப் பேசிக்கொண்டிருந்தார் அனுமந்தர். அறையினுள் தேனீர் கமழ்ந்துகொண்டிருந்தது.
“நேரடி ஆய்வுகள் நல்லதுதானே கணாதா. அதுவும் அவன் முன் அனுமதியுடன்தானே செய்திருப்பாய். இப்போது பார், அவன் நல்ல குணமாகி வந்துவிட்டான். அதற்கும் நீதான் உதவி செய்தாய்”
“மறந்துவிட்டேன் கணாதா. இந்த நோட்டில் பிக்கோ தொழில்நுட்பம் குறித்த சில கருத்துகளை எழுதி இருக்கிறேன். படித்துப் பார்.”
எந்தப் பொருளும் தன்னைவிட நுண்மையான பொருளை அறியவோ அளக்கவோ முடியாது. ஒரு பொருளை அறிய அதைவிட நுண்மையை அடைய வேண்டும்.
கண்ணீரை வாளினால் அறுக்க முடியாது.
“நேனோவில் ஆயிரத்தில் ஒரு பங்கான பிக்கோவின் பரிமாணத்தில் நாம் வேலை செய்யத் தொடங்கினால் ஒவ்வொரு கார்பன் குழலும் ஓர் யானை போல் பெரிதாகிவிடும். எளிதாகக் கையாண்டுவிடலாம். இந்தச் சிக்கலைத் தீர்க்க முடியும்.”
உச்சகட்ட ஒலியில் கணாதராவ் கத்தினார்.
“அனுமந்தா, நமது ஆய்வகத்தில் நிர்வாக உதவியாளராக அவனைக் கொண்டு வந்து சேர்த்தாய். அப்போது எங்களுக்கு ஒரு மானுட முள்ளெலி தேவைப்பட்டது. உன் பேரனின் உடலில் அவன் அனுமதி இல்லாமல் அதிக பட்ச கார்பன் குழல்களை ஆய்வுக்காகப் பயன்படுத்திய பாவி நான்.” அவர் அனுமந்தரின் முன் மண்டியிட்டிருந்தார். கைகள் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தன.
அந்த அறையைச் சில நிமிடங்கள் மவுனம் எடுத்துக்கொண்டது. காற்று அறைக்கதவு வழியாக மெதுவாக வீசி அனுமந்தராவின் சொற்பத் தலைமுடிகளை அலைத்தது. எங்கோ ஒரு ரயில் அபாய ஒலியுடன் நின்றது. அனுமந்தராவ் முகத்தில் சில மாறுதல்கள் ஏற்பட்டன.
சிக்கிக் கொண்டிருக்கும் எதையோ எடுப்பது போன்ற சிரமம் முகத்தசைகளில் வந்துபோனது. வெறிப்பான பார்வை சூன்யத்தை நோக்கி இருந்தது. கைகள் விறைப்பாயின. ஆள்காட்டி விரல் காற்றில் வட்டங்களை வரைந்து கொண்டிருந்தது. நெற்றியில் சுருக்கக் கோடுகள்.
இயல்பு நிலைக்கு வரும்வரை இருவரும் காத்திருந்தனர்.
குளிர்ந்த தண்ணீரை எடுத்துக் குடித்தார்.
“கணாதா, எனக்கு ஒரு யோசனை. ஒரு வேளை டிஜிடல் மின்னணுவியல் தோற்றுவிட்டது என்று வைத்துக்கொள். சுழிகளாகவும் ஒன்றுகளாகவும் மாறும் எலக்ட்ரான்களின் தாவல்கள் குழம்பிவிட்டது என்று வைத்துக்கொள். நமது ரேகையை சர்வர்கள் மறுத்துவிடலாம். கணினிகள் தவறுசெய்யலாம். தேசத்தின் அனைத்து நிர்வாக, பாதுகாப்பு, நிதி இயக்கங்களும் நின்றுவிடலாம். அப்போது நமக்குப் புதிய வழிகள் தேவை. ஒரு வேளை அனலாக் முறைக்குத் திரும்ப வேண்டிவரலாம்.”
இளைஞன் குழப்பத்துடன் டாக்டரைப் பார்த்தான். டாக்டரிடம் மெல்லிய குரலில் சொன்னான் “காலையில் என்னிடம் சொன்ன அதே பேச்சு.” டாக்டர் கணாதராவ் அர்த்தத்துடன் ஆதுரத்துடன் தலை அசைத்தார்.
பழுப்பு அட்டை போட்ட அந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டார் கணாதராவ்.
“அனுமந்தா, நீ வானம் போன்றவன். நாங்களெல்லாம் உன்னில் மிதக்கும் குருவிகள். எங்களால் உன் மகத்துவம் குறைவுபடாது. மீண்டும் சந்திப்போம்” என்று சொல்லிக் கையைப் பற்றிக் கொண்டார்.
அனுமந்தராவ் அன்புடன் தலை அசைத்தார்.
வெளிச்சுவரின் கதவைத்திறந்து வெளியேறிய கணாதராவ் திரும்பி அவரைப் பார்த்தபோது அனுமந்தராவ் கதவருகில் நின்று கொண்டிருந்தார். அவரிடம் இருந்த புன்னகையில் எளிமையோ குழந்தைமையோ இல்லை.
நல்ல கதை. சீரான நடை. நல்ல அழகான தமிழ் (இடையில் ‘சிஸ்டம்’ மட்டும் ஏன் ஆங்கிலத்திலேயே? நானோ போன்ற சொல்லை அவ்வாறே பயன்படுத்தியது சரிதான்! பல சிக்கலான சொற்களைக் கூட அழகிய தமிழில் பெயத்துவிட்டு, இதை மட்டும் ஏன்?!)
கணினி ‘கணிணி’ என்று எல்லா இடத்திலும் வருகிறது!
நானோவின் ஆயிரத்தில் ஒரு கூறான ‘பிக்கோ’ (pico-) என்பதை ‘ஃபைக்கோ’ என ஒலிபெயர்த்திருப்பது சரியல்ல…
கதையின் முதன்மை மாந்தர்கள் ஏன் ‘ராவ்’ஆக இருக்கிறார்கள்? (அதென்னவோ கொஞ்சம் உறுத்துகிறது, எனக்கு!)
அந்த வசனக் கவிதை மிக அருமை… ஒரு வேத சூக்தத்தின் நடை மிளிர்வு அதில், ஈர்க்கிறது…
நானோ ஆய்வில் வளர்ந்துவிட்ட ஒரு காலத்திலும் கணினித் திரைகள் எல்.சி.டி.தானா? (இதன் தமிழ் பெயர்ப்பு அழகு!) இன்றே எல்.ஈ.டி-க்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றன? ஓ.எல்.ஈ.டி-க்கு அடுத்த கட்டத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.. (அல்லது, எல்.சி.டி. திரையில் ஏதேனும் விசேஷம் உள்ளதா??)
நன்றி
பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி வெண்கொற்றன். திருத்தங்கள் செய்துவிட்டோம்.
கருத்துக்களுக்கும் பிழை சுட்டல்களுக்கும் நன்றி . சரி செய்து கொள்கிறேன்
ராகவேந்திரன்