விற்பனைப் பிரதிநிதியின் காலாவதிக்காலம்

8 நிமிட வாசிப்பு

1

அந்தத் தீபகற்பத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிறிய நிலப்பகுதியை மட்டும் வெட்டிவிட்டால் முற்றிலும் தீவாகிவிடக்கூடியதுதான் அந்நகரம், தற்போது அது வருடத்தின் பனிக்காலத்திலிருந்தது. ஆண்டு புதுக்கணக்குத் தணிக்கை முடிந்த நிலையில் அலுவலகமொரு நீண்ட பெருமூச்சுடன் மௌனமாக இயங்கிக்கொண்டிருக்க, ஜெனோலி கண்ணாடித் தடுப்பறைக்குள் கணினி முன்பாக மும்முரத்திலிருந்தாள். அவள் கம்பெனித் தொடக்கத்திலிருந்து அங்கு வேலை பார்ப்பவள். சமீபமாகப் புதிய இளம்பெண்கள் பலரையும் பணியிலெடுத்து அவர்களின் மூலம் அன்றாடத் திட்டவரையறைகள், கட்டளைகள் மற்றும் உற்பத்திசார்ந்த ஏற்றுமதி, இறக்குமதி, சம்பளப்பட்டுவாடாக்கள், கையிருப்பு மற்றும் விளம்பர மேலாண்மை என முழுமையும் தலைமையகத்திற்குத் துல்லியமாக உடனுக்குடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இத்தகைய தடாலடி மாற்றங்களால் நடைமுறைகள் தலைகீழாகவும் புதிய வேகத்திற்கான ஏற்பாடாகவும் ஆதாயமற்ற செலவினங்களைத் துடைத்தழிப்பதற்கு ஏதுவாகவும் இலக்குகளை எட்டுவதற்கான நவீனச் செயல்திட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாகவும் பொதுக்குழுக் கூட்டத்தில் விதந்தோதப்பட்டது. மற்றபடி இந்தப் புதிய நிர்வாகி தனது பொன்னிறக்கூந்தல் தந்தைக்கு ஓய்வு கொடுத்து மலைச்சரிவில் அவருக்கொரு பண்ணை வீட்டையும் சில பணியாட்களையும் நியமித்துவிட்டிருந்தார். என் போன்ற முதுநிலைப் பணியாளர்கள் பலரும் சுமையெனக் கருதப்பட்டு அல்லது நவீனத் தொழில்நுட்பங்களில் குறைபாடுடையவர்கள் என்கிற பெயரால் விருப்பப் பணி ஓய்விற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தோம். பதிமூன்று வருடங்கள்தான் ஆயிற்று, இந்த முப்பத்திநான்கு வயதில் திருமணம் ஆகாமலேயே, ஆலையின் முதிர்ந்த விற்பனைப் பிரதிநிதியாய் நான் ஆகிவிட்டிருந்தேன். “பத்து வருடம் வேலை செய்துவிட்டீர்கள். உங்களுக்கான வசிப்பிடத்தோடு எதிர்கால வாழ்க்கைக்கான பொருளாதாரப் பின்னணிகளையும் இந்தக் குறுகிய காலத்தில் கம்பெனி தாராளமாக ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. நியாயமாக உணருங்கள், இன்னும் எத்தனையோ திறமையான இளைஞர்கள் வரிசையிலிருக்கிறார்கள், அவர்களுக்கு விட்டுக்கொடுங்கள். மேலும் நிர்வாகம் புதிய செயல் எல்லைகளை நோக்கி நகர்ந்திருக்கிறது. வேகமும் செயல்திறனும் விரைவில் முடிவெடுக்கும் ஆற்றலும்தான் இங்கு முக்கியம். முதிர்ந்த பணியாளர்கள் பணியில் தன்னிச்சையாகவும் பொறுப்பற்றும் இருக்கிறார்கள் என்பதைக் கம்பெனி அறிந்திருக்கிறது. மேலும் உங்களுக்கான தொழிற்சங்கங்கள் மூலம் நிர்வாகத்தைக் கதவடைப்பு செய்வதாக மிரட்டிக்கொண்டும் சம்பளத்தை இன்னும் உயர்த்துமாறும் கேட்டுக்கொண்டிருப்பது நியாயமாகப்படுகிறதா?” எனத் தலைமை நிர்வாகி குரலுயர்த்திக் கேட்டதை நினைத்து, இத்தகைய புறக்கணிப்பால் எங்களில் பலர், மனம் நொந்துபோய் இருந்தோம். இந்த நிர்வாகம் உறுதி செய்யப்படாத புதிய ஒப்பந்தக்கூலிகளை மட்டும் நியமனம் செய்து, சம்பளத்தைக் குறைத்து வருவாயை நீட்டித்துக்கொள்ளப் புத்திசாலித்தனம் செய்கிறது என்று நொந்துகொண்டிருப்பதைவிட, ஒரு பெருந்தொகையைப் பெற்றுக்கொண்டு வேறு கம்பெனிகளில் அனுபவச் சான்றிதழ் மூலம் வேலைகளைத் தேடிக்கொள்வதே நல்லது எனப்பட்டது. அநேக நண்பர்கள் விருப்ப ஓய்வில் போயும் விட்டார்கள்.

இப்போது நான் ஜெனோலியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் தனது கத்தோலிக்கத் தாயின் சாயல்கள் ஏதும் தனக்கு வந்துவிடாதபடி புரதம் மற்றும் கொழுப்பு உணவு வகைகளைக் குறைத்து, பழங்களையும் காய்கறிச்சாறுகளையும் புசித்து, சிறிய கச்சிதமான உடலிலேயே செழிப்பும் மினுமினுப்புமாய், கவுனும் காலுறையும் அணிந்து தொலைபேசியில் சிரத்தையற்றவளாய், ஆனாலும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் கொஞ்சும் இசை போன்ற குரலால் அபிநயித்துக் கொண்டிருந்தாள்.

நேற்று காண்டீனில் அவள் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இன்னும் பொருள்படுவதாய் இல்லை. ஏற்கெனவே இந்த நகரத்தின் வேகம் தன்னை அவதானிப்பதாய் இருக்கவில்லை என்று அவள் கடிந்து கொண்டிருந்தாள். ஒரு பெண்புலியின் புழங்குவெளிக்கு, வேட்டையாடவும் உறங்கவும் சுமார் 250 சதுர கிலோமீட்டர் சுற்றளவுள்ள கானகமும் அதிலுள்ள சமவெளிகளும் பல்லுயிர்த் தொகுதியும் நீர் ஆதாரங்களும் தேவைப்படுவது போலவே, தனக்கு மூச்சுவிடவும் சுயமாக இயங்கவும் இந்த வீடு மற்றும் தொழிற்சாலைகளைவிடப் பெரிய வெளி தேவைப்படுவதாகவும், இந்தக் கடுங்குளிர் அவளது மறைவிடத்தில் வெப்பத்தை மிக மோசமாக அடைகாப்பதாகவும், படுக்கையில் ஏதோ அவளுடலின் மேல் ஏறி அமர்ந்து, ஒரு விரலையும்கூட அசைய விடாமல் இறுக்கி அமுக்குவது போலவும், பிரக்ஞை நிலையில் தலையுடன் தன் உடலே தன்வசம் இல்லாது போனது மாதிரியும் அந்நேரத்தில் ஒரு துர்நாற்றம் பரவுவதை உணர்வதாகவும் சொல்லியிருந்தாள். அச்செயல் அவளது பிறப்புறுப்பின் பூங்கனவை அந்நியப்படுத்தியும் அத்துடன் சகவாசமில்லாத ஆயினும் அறிவார்ந்த அந்த முரட்டுத்தனம், அது என்னவென்று புரியாத அச்சத்தின் உடனிகழ்வு நிலையில் வெட்கமற்ற அல்லது திருப்திமிக்க உலகத்தின் ஆண்மைக்கோளாறு போக இன்னபிறவுமான நிலைகளால், தான் ஒரு பைத்தியக்காரியாக ஆகிக்கொண்டிருக்கிறேன் எனவும் சிடுசிடுத்திருந்தாள்.

வரும் கோடைக்கு முன்பான இப்பனிக்காலத்தில் நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். நாட்டின் பொருளாதாரச் செய்திகள் அதிகம் கவலையளிப்பதாக இருந்தது. முதியவர்களுக்கான பென்சன் தொகையை அதிகரித்திருந்தார்கள். மரக்கறி வகைகள் பால் பொருட்கள் போன்றவற்றுக்கு கடும் எரிபொருள் தட்டுப்பாட்டால் அதிக விலைகளையும் கொடுக்க வேண்டியிருந்தது. ஜெனோலி, தான் ஒரு சுழற்சியில் இருப்பதாய், நீண்ட காலங்களை வெறுமையாகவும் அதேசமயம் திட்டமிட்டு நகர்த்துவதில் சலிப்படையாமல் இருக்க வேண்டியிருக்கிறது என முகம் இறுக்கிக் காதலற்றுச் சொன்னது ஞாபகம் வந்தது, அப்போது அவளை ஒரு கணம் உணர்வுப்பூர்வம் ஏதுமில்லாத கவர்ச்சியற்ற வறண்ட சாம்பல் பூத்த மாமிச உடலாய்ப் பார்த்தேன். அவள் எப்போதும் ஜீன்ஸ் அணிந்து ஒரு பாரமான முதுகுப்பையுடன் தன் காலணிகள் மற்றும் ஆடைகள் நிரம்பிய பெட்டியைப் பயண இடங்களில் இழுத்துக்கொண்டு அலைபவள் போல எனக்குத் தோன்றினாள். மேலும் அவள் சொல்லியிருந்தாள் தனது கூந்தலிழைகளில் சில வெண்ணிறமாகியும் உலர்ந்தும் முனைவெடித்தும் கொண்டிருக்கிறது என்றும், ஆனால் சருமத்தில் புதிய அழகு கூடிவருவதாகவும், தன் இரு மார்பகங்களும் பழுத்த வெண்மையிலிருந்து மங்கிக் காவி கலந்த மஞ்சள் நிறத்தில் திரளுவதாகவும், புதிய ஆண்களின் பார்வையால் அவை அவளுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதாகவும் சிரித்துக்கொண்டாள். தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருள்களுக்கான புதிய சந்தைகளின் விஸ்தீரணம் உலகமெங்கும் பிரபலமடைந்து வருவதால் கூடுதல் பணி உயர்வு பெற்று அவள் வேறொரு நாட்டிற்குப் பயணப்படப் போகிறாள். எனக்குத் தலைவலி துவங்கியிருந்தது, மிகத் தொலைவில் உருளைக்கிழங்குகள் மற்றும் ஏற்றுமதிக்கான டேலியாப்பூக்களும் பன்றிகளுக்கான வரகு தானியங்களும் விளையும் மலைப்பாங்கான ஊரிலிருந்து வந்து இந்தத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரத்தில் வேலை பார்க்கும் எனக்கு, அவளது இந்த மோசமான பிரிவு மிகுந்த துயரத்தை உண்டுபண்ணும் என உணர்ந்தேன். மற்றபடி இந்த நகரம் மனிதத்தன்மையற்ற உடனடி முடிவுகளுக்காகவும் பிரியங்களின் மீதான வலுத்த சந்தேகத்தையும் தங்குமிடங்களில் உடலை மரத்துப்போகச் செய்யும் அடுக்குமாடி வெப்பத்தையும் அதற்கான பதிலீடாக மது வகைகளையும் வறுத்த உணவுகளையும் கடற்கரை உல்லாச வீடுகளையும் கொண்டிருப்பதைத் தவிர, நமக்கு ஒரு சவாலையும் விட்டுவைப்பதாயில்லை என்றும் எனக்கு ஆயாசம் மிகுந்து வந்தது. உற்சாகமூட்டும் ஒரு ‘ரெட் புல்’ பானத்தை வாங்கி டின்னை உடைத்துப் பருகினேன். எதிரில் வந்து ஜெனோலி அமர்ந்தாள். முகம் பார்க்கும் சிறிய இதய வடிவிலான கண்ணாடியை எடுத்துப்பார்த்து இரு உதடுகளாலும் பூசியிருந்த உதட்டுச் சாயத்தை அழுத்தி மேலும் நாவால் நீவி ஈரப்படுத்தியபின் அதைக் கைப்பையில் வைத்து விட்டுப் பிறகுதான் நிமிர்ந்தாள்.

“ரொம்பவும் சோர்வாகத் தெரிகிறாய் ரிச்சி, கொஞ்சம் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டிருக்கலாமே?” என்றாள்.

அவளுக்குப் பின்னால் தடுப்பிற்கு வெளியே நடைபாதையில் ஒரு சிறுவன் தன் உதடுகளைக் கண்ணாடிச் சுவரில் அழுத்தி கண்களால் உள்ளே பார்க்க முயன்று கொண்டிருந்தான்.

“ஜெனோலி, நான் விவசாயத்திற்குத் திரும்பலாம் என்றிருக்கிறேன்”

“நீ அதற்குத்தான் லாயக்கு” என்று சிரித்தவள். பொதுவாக அலுப்பூட்டக்கூடிய காரணங்கள் உன்னைப் போன்ற ஆண்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது என்றாள். அவர்கள் பொறுப்பென்று நினைப்பது பெண்களுக்கு அப்பாற்பட்ட உலக விஷயங்கள் மட்டுமல்ல, ஓர் ஆணாகத் தன்னை அறிந்துகொண்ட அல்லது பால்யத்தில் தாயைப் பிரிந்துவிட்ட பின்பே அந்நியப் பெண்களின் விசேஷத் தன்மைகள் மீது சிநேகமும் மோகமும் கொள்கிறார்கள், பிறகும் தன் அடையாளங்கள் பற்றிய பிரச்சனைகள் அவர்களால் தீர்க்க முடியாத அளவிற்குத் தொடர்கிறது இல்லையா? என்றவள் கூடவே,

”உனக்கு உதவாமல் போய்விட்டவள் நான் என்று நீ முடிவெடுத்துவிட்டாய் அப்படித்தானே” என வினவினாள்.

நான் அயற்சியின் பொருட்டுப் பேச்சை ஒரு முடிவிற்குக் கொண்டுவர நினைத்தேன். தலைக்குள் வலி அதிகரித்துக்கொண்டிருந்தது. “நான் மீண்டும் கிராமத்திற்குப் போய்விடலாமென்றிருக்கிறேன். பிறகு எப்போது உன்னைச் சந்திப்பேன் எனவும் தெரியவில்லை. என்னுடன் பழகிக் கொண்டிருப்பது ஆடுகளிடம் உட்கார்ந்து அசைபோடுவது போல் உனக்குக் கேலியாகப்போய்விட்டது” என்றேன்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ரிச்சி. உன் குறித்து நான் யோசித்துக்கொண்டுதானிருக்கிறேன். அதிருக்கட்டும், நீ ஆடுகள் என்று சொன்னவுடன் எனக்கு ஒரு ஸ்டீக் துண்டைச் சாப்பிட வேண்டும் போலிருக்கிறது, ஆர்டர் செய்” என்று கட்டளையிட்டாள். அதற்குமுன் பணியாளர் வைத்துவிட்டுப் போயிருந்த சோளசூப்பை சுவைக்கத் துவங்கியிருந்தாள்.

எனக்கோ, அவளிடம் இனிமேல் ஒன்றுமே இல்லை என்பதுபோல ஆகிவிட்டிருந்தது. அவள் உணவுகளை முடிக்கும்வரை மௌனமாய் இருந்தேன்.

“ரிச்சி, கிராமத்திற்குப் போகும்முன் தொலைபேசியில் தகவல் கொடுத்துவிட்டு ஒருமுறை ஃப்ளாட்டிற்கு வந்துவிட்டுப்போ” என்று கண் சிமிட்டிச் சிரித்தாள்.

வருகிறேன் என்று நான் உறுதியளித்தேன். அவளுக்கும் கூடத்தான் என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். தீவிரமான காதலோடு, அவளது புட்டத்தை ஆட்டும் செய்கையை, பெப்பர்மிண்ட் மணக்கும் அவளது முத்தத்தை, உள்ளாடைகள் காய்ந்து கொண்டிருக்கும் அவளது பால்கனியை, குளியலறையில் அவள் வெகுநேரம் செலவழிப்பதை, அந்நேரங்களில் முகச்சவரம் செய்யக்கூடத் தோன்றாமல் மௌனமாய்ப் படுக்கையில் யோசித்துக் கொண்டிருக்கும் என்னையும் நினைத்து ஒரு கணம் தலையை உலுக்கிக்கொண்டேன். இதற்கிடையில் அப்பெண்புலி தன்வெளிக்குள் பாய்ந்து போயிருந்தது.

2

வாடகை வாகன ஓட்டுனர் “மெட்ரோ ரயில் விடுவதற்கான தூக்குப்பாலங்கள் பணியிலிருப்பதால் அத்தகைய சாலை அடைப்புகளின் குறுகிய பாதையில் செல்ல முடியாது“ என்று, ஒரு பெரிய வணிக வளாகத்தின் முன்வாசலில் இறக்கிவிட்டுப் போனார். அந்த வளாகம் இரண்டு இணைச்சாலைகளின் நடுவே இருந்த நிலத்தில் பிரம்மாண்டமாய் ஐந்தடுக்கு உயரத்துடன், முகப்பில் ஒளி ஊடுருவாத கருத்த கண்ணாடிச் சலாகைகள் கொண்டு போர்த்தப்பட்டிருந்தது. நான் இந்தக் கிழக்குச்சாலையிலிருந்து அதற்கிணையான மேற்குச்சாலைக்கு போகவேண்டியிருக்கிறது. எனவே வளாகத்திற்குள் நுழைந்தேன். மேல்நோக்கி நகரும் படிக்கட்டுகளுடன் மக்கள் நடமாட்டமும் மௌனமான இரைச்சல் ஒலியும் அந்தப் பகலிலேயே அங்காடிகள் பலவற்றில் விளக்குகள் எரிந்து கொண்டும் ஆங்காங்கே விற்பனைப்பொருட்கள் வாங்கப்பட்டும் கொண்டிருந்தன. எதிரும் புதிருமான பல குறுகிய வழிகளை எதிலும் இடித்துக்கொள்ளாமல் கடந்து மூன்றாம் தளத்திற்கு ஏறிப் பிறகு பக்கவாட்டுப்படியில் மேற்குவாசல் வழி உள்ளே வந்து கொண்டிருப்பவர்களையும் விலக்கிப் போகவேண்டுமென்பதை அறிந்து அதைக் கண்டும்பிடித்தேன். கிரில் கோழிகள் வெந்துகொண்டிருக்கும் உணவு விடுதிகள், அங்குச் சீருடையில் பரிமாறும் இளம்பெண்கள் மற்றும் காதலர்களுக்கான சிறிய கைவளையல் போன்ற கடிகாரங்கள், ப்ளாக் மெட்டல் மோதிரங்கள், பெயர் பொறித்த சாவிக்கொத்துகள் மேலும் வாழ்த்து அட்டைகள் விற்கும் தள்ளு வண்டிகள் நடைபாதையில் நெருக்கியடித்திருந்தன. ஓர் உடற்பயிற்சிக் கூடம், கண்ணாடித்தடுப்பறையில் கார்ட்டூன் புத்தகங்களை வாடகைக்குப் படிக்கும் அறை, பெருத்த சப்தத்துடன் சில்லறைகள் கொட்டும் சூதாட்ட எந்திரங்கள், ஒரு திரையரங்கு, வைரங்கள் மற்றும் விலை உயர்ந்த திருமண ஆடைகள் விற்கும் மாடங்கள் எனப் பலவற்றையும் தாண்டி, புறவாசலில் நீண்டு அந்தப்புறம் நடைபாதையில் இறங்கச் சாத்தியமான, கால்களுக்குக் கீழான சாலையில் வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருக்கும் இரும்புப்பாலத்தை அடைந்தேன். வடக்கே பிரதானச் சாலையில் பெருவெள்ளம் போல் வாகனங்கள் பாய்ந்து கொண்டிருந்தன. நடைபாதைகளில் கட்டழுத்தமான வண்ணச்சீருடையுடன் இடுப்பில் துப்பாக்கிச் சுமந்த காவலர்களை மேலிருந்து பார்க்க முடிந்தது. நடந்துகொண்டிருக்கும் மக்களிடையே ஆபத்தான சந்தேகத்துக்குரிய நிஜமான குற்றவாளிகள் போய்க்கொண்டிருக்கிறார்களா அல்லது இந்த நகரம்தான், தனது அதிகாலைச் செய்தித்தாள்களுக்காகத் தொடர்ந்து குற்றம் புரிகிறதா? ஒவ்வொரு நாளும் இந்த நகரத்தின் மீதான அச்சமும் அதற்கான மனப்பிறழ்வும் கூடவே தலைக்குள் வலிகளும் கூடியும் மறைந்தும் கொண்டிருந்தன. உயிருள்ள அல்லது உயிரற்ற ஜடமான அனைத்திற்கும் என் உடலின் இயங்குவிசைக்கும் இடையே, இணைப்பும் விலகலும் நிகழ்வதுதான் எனது சுருக்கமான வாழ்வு என்றும், நான் ஒரு எந்திரத்தின் உதிரிபாகமாகத்தான் பூமியில் அலைந்துகொண்டிருக்கிறேன் எனவும் தோன்றியது. இறங்கும் படியில் சரிவாக நீளும் எவர்சில்வர் குழாயின் மீதான என் கைகளைச் சட்டென விடுவித்துக்கொண்டேன். இறங்கிய நடைபாதையில் தரை துளைத்து நீண்டிருக்கும் பல துண்டிக்கப்பட்ட ஒயர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் அறுக்கப்பட்ட போல்ட்டுகள் சிலவும் அபாயகரமாகத் துருத்திக் கொண்டிருந்தன. சாலையோர மரங்களின்மீது பலவண்ணக் குமிழ்பல்புகள் சரம்சரமாய்த் தொங்கியும் தவழ்ந்தும் கிடந்தன. இந்தச் சாலையினுடைய ஆழத்தில் அதனைப் பலமுறை மேடுறுத்திச் செப்பனிட்ட காலமும் வரலாறும் உலோகங்களும் ஏன் பிணங்களும்கூட அடுக்குகளாகப் புதைந்திருக்கக் கூடும்.

தொடர்ந்த ஈயப்புகையால் தாவரங்களின் இலைகள்கூடக் கறுத்தக் கனிமத்தகடுகள் போலத் தோற்றமளித்தன. அறியமுடியாத பல உலகங்கள் இந்நகரத்தின் வெவ்வேறு மூலைகளில் தன் வினைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக, அதேசமயம் எனது மனமற்ற உடல் இந்த நகரத்தின்மீது ஒட்டாத ஒன்றாகவும் தவித்துக்கொண்டிருக்கும்போது, எல்லாக் கட்டிடங்களிலும் மரங்களிலும் அந்த அந்தியில் மின்சாரம் படபடவெனப் பற்றத் துவங்கியிருந்தது.

சாலையின் மேற்புறம் உயரமான ஒரு தனித்தெருவிலிருக்கும் குடியிருப்புகளில் உள்ள எனது அறைக்குப் போய்க்கொண்டிருக்கிறேன். மிகச்சரியாகத்தான் பாதைகளை நினைவு கொண்டிருக்கிறேனா?

3

உயரமான குடியிருப்பின் கூரைத்தளத்திற்கு வந்துவிட்டேன். என்ன ஆச்சர்யம் அங்கே புதியதாக பாலிதீன்பைகள் போர்த்திய காய்கறித் தொட்டிகள் வரிசையாக ஆள்நுழைந்து அறுவடை செய்ய ஏற்றவகையில் இடைவெளிவிட்டு விளைவிக்கப்பட்டிருந்தன. அதற்கு மேலே அனைத்தையும் மூடும் பச்சைநிற ப்ளாஸ்டிக் நார்களால் ஒரு சல்லடைக் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. இடது பக்கத்திலிருந்த எனது அறை திறந்து கிடப்பதைப் பார்த்தேன். மேலும் எனது ஆச்சரியம் பெருகியபடியிருக்க மெல்லிய விளக்கொளியில் என்ன வகையான செடிகள் அங்கே வளர்கின்றன என ஒரு வரிசையில் நுழைந்து முதல் தாவரத்தை உற்றுப் பார்த்தபடி இருக்க, இருமுனையும் குவிந்து நடுவில் பெருத்த பாகல் காய்களைப்போல ஆனால் அந்த முரட்டுத் தோலில்லாமல் வழுவழுப்பாகச் சில காய்கள் நீண்டு தொங்கிக் கொண்டிருந்தன. நான் பார்த்துக் கொண்டிருந்தபோதே அவற்றில் ஒன்று மீன் துடிப்பது போலத் தன் கீழ்முனையை அசைத்துத் துள்ளியது. அல்லது அப்படித்தான் எனக்குப் படுகிறதா என்று சந்தேகித்தேன். சட்டென வியர்ப்பது போலவும் உடனே குளிர்ந்த காற்று உடலைத் தழுவவும் திறந்திருந்த எனது அறை வாயிலுக்குள் அச்சத்துடன் எட்டிப் பார்த்து நுழைந்தேன். அங்கே இருந்த சமையலறை முற்றிலும் இடம் மாற்றப்பட்டிருந்தது. அங்கே வெறுமனே உள்ளாடை மட்டும் அணிந்து தன் புறமுதுகைக் காட்டியவாறு ஒருவன் யார் இவன் மின்அடுப்பில் எதையோ சமைத்துக் கொண்டிருக்கிறான்? சுமார் இருபது வயதிற்கு மிகாமலிருக்கும் அவனது பின்புறம் மிகுந்த இளமையாகவும் அவன் சருமம் வெளிர்ச்சிவப்பில் மினுங்குவதாகவும் பட்டது. அப்போதுதான் சட்டெனக் கவனித்தேன். அங்கே அவனது முழங்கால் மடிப்பிற்கு மேலே இரண்டு பின்புறத் தொடைச்சதைகளுக்குள்ளும் எவையோ முண்டி அசைந்து நெளிந்து கொண்டிருக்க தீச்சுட்டதுபோல இரண்டு வடுக்களும் அதன் மீதிருந்தன. மேலும் என் அச்சம் கூடியது. நான் “ஏய் யார் நீ” என்று கத்தினேன். அவன் மெதுவாகத் திரும்பிப் பார்த்து “கொஞ்சம் அமைதியாக இருந்தால் நீங்கள் இருக்க விருப்பப்படும்வரை இங்கு இருந்துவிட்டுச் செல்லலாம்” என்றான். பிறகு முணுமுணுக்கும் குரலில் காதலர்களும் விவசாயிகளும் காலத்தில் மரித்துவிட்டாலும் அடுத்தவர் நூற்றாண்டிலும் உலாவித் திரிவார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றான். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. மேலும் அவன் தலை திருப்பிக் குனிந்தவாறே தனது கட்டைவிரல் நகத்தைக் கத்தி போல ஆக்கி பின்புற இடது தொடையில் இருக்கும் அத்தழும்பின் மீது ஒரு கீறலை இழுத்தான், ஜிப்பை திறந்ததைப்போல அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் கொழுத்த வாழைப்பழம்போல ஒரு புழு “பளக்”கென்று தன் நெளியும் வளையங்களுடன் அவன் உள்ளங்கையில் வந்து விழுந்தது. பிறகு சாவகாசமாகச் சிவந்து பிளந்திருந்த தன் தொடைச்சதையை இடது கைவிரல்களால் இறுக்கிக் கீழிருந்து மேலாக அழுத்தி நீவ அது சட்டென மூடி மறுபடி தழும்பாகிவிட்டது. அதன் கீழ் நுனியில் ஒருதுளி ரத்தம் கசிந்து கோடிட்டது. “அடக்கடவுளே என்ன இது” என்று கூக்குரலிட்டேன். என் சப்தம் எனக்கே கேட்கவில்லை. மேலும் அவன் அறைக்குள் இருக்கும் என்னை ஸ்தூலமாய்ப் பார்க்கிறானா எனவும் தெரியவில்லை. பேசிக்கொண்டே இருந்தான். வெளியில் இருந்த காய்கறித் தாழ்வாரத்திலிருந்து வினோதமான கீச்சொலிகள் கேட்கத் தொடங்கின.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்