மலரினும் மெல்லிது காமம்

14 நிமிட வாசிப்பு

“இல்லை முடியாது, என்னுள் அலைப்பாய்ச்சலாய் எழும், என் இதயத்தை அழுத்தும் இவ்வுணர்வை நிறுத்தியாக வேண்டும். ஆனால், மென்மஞ்சள் நிறக் கூந்தலும், ஆழப்பாயக் காத்திருக்கும் நீலக்கண்களும் உடலின் சதைத்துணுக்குகள் எல்லாவற்றிலும் அதிர்வைப் பரவவிட்டுக் கிளர்ச்சியைத் தூண்ட எத்தனிக்கிறது. நேராய் முகம் நோக்கி இருக்க, கைகளால் தாடையைத் தாங்கிக்கொண்டேன். ஏன் இப்படி மயக்குகிறாய்? உன் இளமுலைகள் என் கண்களைக் களவாடுகின்றன. உளி கொண்டு செதுக்கியது போலவிருந்த யோனியின் முனைகளும், அதன் மேல்நோக்கிச் சுருண்டிருந்த செம்பட்டைநிற முடிக்கற்றையும் என் ஆண்மையின் அணுவொன்றையும் மெல்ல உரசிக் கிறக்கத்தைக் கொடுக்கிறதே!” கத்திக்கொண்டிருக்கிறேனா? இல்லை, இல்லை, அமைதியாகச் சலனமின்றி அமர்ந்தபடி கண்முன் விரிந்த காட்சிகளை உள்வாங்கிக்கொண்டிருந்தேன். வழக்கமாய் லயித்துக் காண்பவை, இன்று வெறும் காட்சிகளாகக் கடந்துபோயிருக்க வேண்டும். இது ஒருவகையில் முன்வடிவப் பயிற்சி மாதிரிதான், அச்சப்படத் தேவையில்லை. ஆயினும், ருசியப் பெண்களின் அழகை வசந்தகால மலர்களோடு ஒப்பிடலாம். மலர்ச்சியான முகமும், குளிர் பாய்ந்த கண்களும். பார்த்த மாத்திரத்திலே கிளர்ச்சியைக் கொடுக்கும். எண்ண ஓட்டத்தில் என் குறியை அவள் உதடுகளால் முத்தமிடுவது போல இருந்தது. அய்யோ, நான் தோற்றுவிட்டேனா? இருக்காது. இது பிரமைதான். உணர்ச்சியற்ற சுண்ணி ஒருவித ஆறுதலைக் கொடுத்தது. வேறு போர்ன் அழகிகளைச் சோதனை செய்துபார்க்கலாம். இலத்தின் அமெரிக்கா, ஸ்வீடன், உக்ரைன் என மூளை மின்அலை மூலம் காட்சிகளைக் கணநொடியில் சிந்தனைக்கு ஏற்றபடி மாற்றியது. இல்லை இவளைவிடப் பேரழகி வேண்டும். மாற்று, வேகமாய். சீ, என்ன பருத்த முலை, வசீகரமானவள் இல்லை, இயல்பாகவே இவளைக் கண்டால் முயங்கத் தோன்றுமா? நெடுநாளாய் ஆகிவிட்டது, போர்ன் வலைத்தளங்களில் நுழைந்து. மெய்நிகர்க்காட்சி ஒளிபரப்பான்கள் அதன் தேவையை ஆக்கிரமித்துவிட்டன. கல்லூரி நண்பன் உலகின் தலைசிறந்த ‘போர்னோ ஒப்டிம்’ அலுவலகத்தில் உயர் உருவவடிவமைப்பு வல்லுனராய்ப் பணி செய்கிறான். ஒரு குளிர்காலத்தில் நகரத்தின் மையமாய் வானுயர்ந்த உணவகத்தின், மதுக்கடையில் அரைப்போதையில் உளறியது நினைவில் வந்தது, “என்ன ஒரு மிருகம் நாம், நம் ரசனைகள் தரம் குறைந்துவிட்டது நண்பா! கேள் எவ்வளவு கீழிறங்கிவிட்டோம். கீழ்த்தரமான மலத்தைவிடக் கேவலம் ஆனவர்கள்.”

சமயங்களில் அப்பா என்னிடம் கூறிய சில அவ்வப்போது நினைவில் எழும், “மனிதர்கள் உணர்ச்சிகளைத் தவிர்க்க முயல்வது முட்டாள்தனம். பெருமழையின் நீரோட்டம் தேரிகளில் தேங்கிய வெள்ளம் போல விரைவில் வடிந்துவிடும் அல்லவா. அதே போல, உணர்ச்சிகளும் எழும்பி அடங்கிவிடும். அதுவே சுழற்சி. ஒருவரின் கடினமான தருணங்களில் ஆறுதலான வார்த்தைகளை மாத்திரம் அளித்தால் போதுமானது. அதேசமயம் எளிய நம்பிக்கையை அளி, அதுவே போதுமானது. கெட்டிக்காரனைப் போல நடந்துகொள்ளாதே. மீறினால், உணர்ச்சிகள் அதன் உக்கிரத்தை எட்டிவிடும். அழுகையோ, கோபமோ, மகிழ்ச்சியோ எதுவாயினும் கவனமாகக் கையாள வேண்டும். உன் புத்தியின் அகங்காரத்தைக் கொட்டிவிடாதே. அது சிலசமயம் உறவுகளை முறித்துவிடும்” என்பார்.

அவன் தொடர்ந்தான், “உனக்குத் தெரியுமா? வந்து குவிந்துள்ள புதிய வடிவ முன்திட்டங்களை. சீ, குப்பைகள். மலத்தை முன்னே கொட்டியது போல இருந்தது. ஆடையில்லாமல் இருந்தபோதுகூட இவ்வளவு இச்சை கொண்டு திரிந்திருப்போமா? சிலவற்றைக் கூறுகிறேன். உடலின் வடிவ இலட்சணத்தையே கேலி செய்வது போல உள்ளது. இந்தப் பிரபஞ்சம் நமக்கு அளித்த அழகியலைக் கருவறுக்கிறோம். இப்போதெல்லாம் திருமணங்கள் குறைந்துவிட்டது உனக்குத் தெரியுமல்லவா? தனியனாய் அலைவதில் ஆணும் பெண்ணும் ஏன் பகட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். உடல் மேல், உடல் கிடந்து இயங்குவதில் அவர்களுக்கு இன்பம் இல்லை, மோகம் முகம் நிறைந்து ததும்பத் திரியும் காதலர்கள் எவரையும் கண்டதாய் நெடுநாட்களாக நியாபகம் இல்லை. ஓர் ஆண் பெண்ணிடமும், அதேபோல் பெண் ஆணிடமும் எதைத் தேடி ஓடுகிறார்கள். அத்தேவையை அதாவது காமத்தேவைகளைத் தீர்த்துக்கொள்ள இயந்திரமும், மெய்நிகர்க்காட்சி ஒளிபரப்பான்களும் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டது. ஆக இதைக்கடந்து இரு பாலருக்கும் இடையில் எவ்வித பந்தமும் இல்லையா இந்நூற்றாண்டில். எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் கணவனுமாய், மனைவியுமாய் வாழ்ந்து தீர்த்த முந்தைய தலைமுறையினர் எதில் அகப்பட்டு அத்துணை நாட்களும் சகித்தபடி வாழ்வை முடித்தனர். நான் உளறிக்கொண்டே இருக்கிறேன் என்றுதானே நினைக்கிறாய். என் வேலையில் நான் பிணம், அழுகிப்போய்விட்டேன். முன்பெல்லாம் விலையுயர்ந்த நறுமணம் வீசும் தைலங்கள் தேவைப்படும். இப்போது அதுவெல்லாம் தேவையில்லை. என்னிடம் எப்போதும் புளித்த வாடை ஒன்று ஒட்டிக்கொண்டுள்ளது. இதைப்பற்றி என் மனைவியிடம் பேசினேன். அவள் கூறினாள் அப்படி ஒன்றும் இல்லை என்று. பின்பு அறிந்துகொண்டேன், அது புளுத்துப்போன என் ஆன்மாவின் வாடை என்பதை…” பேசிக்கொண்டிருக்கும்போதே மூன்று குவளை ஓட்கா உள்தள்ளிவிட்டான்.

நான் மெதுவான குரலில் பதில் அளித்தேன், “ஆம், எவ்வளவு சீர்கேடான பணி இது. விட்டுவிடு நண்பா. தெரியும் தேவைக்கு அதிகமான பணம் உன்னிடம் உள்ளது. உன் மகனை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்த்துவிட்டாய். உன் மனைவி உருவ அறுவைசிகிச்சை செய்து இன்னும் இளமையாக, கவர்ச்சியாய்த் தெரிகிறாள். மன்னித்துக்கொள் நண்பா. நீ மன்னிப்பாய், என்னவாய் இருந்தாலும், அவள் என் முன்னாள் மனைவி அல்லவா? சரி என்ன உத்தேசிக்கிறாய்? வேலையை விட்டுவிட்டுச் சமூகத்திற்குப் பணிவிடை செய்யவிருக்கிறாயா? தயங்காமல் கேள், நானும் உனக்கு உதவுகிறேன்.” இதைச் சொல்லிமுடிக்கும் வரை என்னை வலுவாய்க் கட்டுப்படுத்திக்கொண்டேன். பீறிட்டுச் சிரித்தபடி என் உள்ளில் எழுந்த மற்றொருவன், அவன் பதிலுக்காகக் காத்திருந்தான்.

தலையை வேகமாய் ஆட்டியபடி, “உனக்குத் தெரியுமா? ருசிய வோட்கா இன்றும் அதே தரத்தில் கிடைக்கிறது.” நான் கையைத் தாடையில் தடவியபடி, “இதுவா நான் கேட்ட கேள்விக்கான பதில்?” என்றேன். அவனோ, “நண்பா, நான் கூறினேனே! மகனைத் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் சேர்த்துள்ளேன். கல்விக்கு ஆகும் செலவு. நாம் இரண்டு தலைமுறைக்குச் சம்பாதிக்க வேண்டும், இன்னும் மூன்று அல்லது நான்கு வருடங்கள் சகித்துக்கொள்வேன். இவ்வேலையைத் தக்கவைத்துக்கொள்வதைத் தவிர வேறு போக்கிடம் இல்லை.”

நண்பர்களின் நினைவுகள் என்னுடைய நேரத்தைத் தின்றுவிடும் அரக்கர்கள். மீண்டும் காட்சிகளை மாற்றிக்கொண்டே வந்தேன். ஓரளவுக்கு முயற்சி வெற்றி அடைந்துவிட்டது என்பதை உணர்ந்தேன். சிறுமாறுதல்களை இயக்கச்சமன்பாட்டில் புகுத்தினால் இன்னும் நேர்த்தியான நிருபீட்டு மாதிரி கிடைக்கும். அறையில் என்னோடு அமர்ந்திருந்த ஜியா கூறினாள். ஜியா கூறுவதை மறுப்பதற்கு இயலாது. அப்படித்தான் அவளை வடிவமைத்துள்ளேன். அவள் கூறினாள் “ருசியா பெண்கள் அழகானவர்கள் மறுக்கவில்லை, ஆனாலும் நீ அவர்களைக் காணும்போது மிகவும் வழிகிறாய். உனக்குத் தெரிகிறதா? சரி அது உன் தனிப்பட்ட விருப்பம். மூளை, அழகைத் தீர்மானிப்பது ஹார்மோன், முகத்தின் வடிவ ஒழுங்கியல் மற்றும் நிறங்களின் சேர்க்கை முக்கியமாய் உன் வழித்தோன்றலின் ஜீன்களின் அழகு பற்றிய சமன்பாடாய் இருக்கலாம். இது ஒருவகையில் கண்டதை வகைப்படுத்தி, அதில் நெருங்கிய தரவுகளைத் தொகுத்து. நெருங்கி ஒத்துப்போகும் தொகுப்பின் முடிவை அளிப்பதைப் போல. எதுவாயினும் இதுபோன்ற தனிப்பட்ட விஷயங்களை நாம் பேசிக்கொள்ள வேண்டாம்.”

அவனுக்கு இதனை இத்தோடு முடித்துக்கொள்வதில் விருப்பமில்லை, ஜியாவின் சொற்கள் அவனிடம் ஆர்வத்தை உருவாக்கியது, “இல்லை, ஜியா நீ மேலும் தொடர வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். நீ மிகவும் புத்திசாலி, இல்லையா ஜியா. ஜியா” என்று பேச வற்புறுத்தினான். மெலிதாய்த் தலை கவிழ்ந்து ஜியா சிரித்தாள். என் மனைவியின் சிரிப்பு, அற்புதமாய். அவளின் கன்னக்குழிகளைவிட நேர்தியாகவே வடிவமைத்து இருக்கிறேன்.

“தெரியும். நீங்கள் ஏன் என்னை ஜியா என்கிறீர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன். பழைய தரவுகளை அடிக்கடி உபயோகப்படுத்துவதில்லை. சில மாதங்கள் முன் ‘ஜியா லிசா’ ருசிய தேசத்துப் பெண் இறந்துவிட்ட செய்தித் துணுக்கை என் மையஅறிவுப் பெட்டி பயனுள்ள தகவல் எனச் சேமித்துள்ளது. காரணம் அதே பெயர்தானே எனக்கும் சூட்டியுள்ளீர்கள். பிறகு பழைய தரவுகளைச் சோதித்ததில் என் பெயர்க்காரணம் புரிந்தது. மறுப்பேதுமில்லை, நீங்கள் அழகை மதிப்பவர். போர்னோ அழகி என்றாலும் உருவத்தைக்கூட அப்படியே வடிவமைத்து உள்ளீர்கள். அபாரம், நீங்கள் அறிவுஜீவிதான் ஒப்புக்கொள்கிறேன்.” அதே மெல்லிய சிரிப்புடன் கூறிமுடித்தாள் ஜியா.

“அருமை, நீ மேலும் மேலும் உன்னை வலுவாகத் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு கட்டமைக்கிறாய். நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீ அற்புதமானவள்.”

“தெரிந்துவிட்டது, வேண்டாம். உங்களுக்கே தெரியும் நான் மறுப்பேன் என்று, சரியான காரியக்காரர் நீங்கள். புகழ்ந்துகொண்டே இரண்டு குவளை மது கேட்பீர்கள், இவ்வாரம் ஏற்கனவே ஒரு நாள் தேவைக்குக் குடித்துவிட்டீர்கள். இன்று வேண்டாம். இன்னும் ஆறு நாட்கள் நீங்கள் காத்திருக்க வேண்டும்.” எனக்கான துணையாக எல்லாவிதத்திலும் ஜியாவை நான் வடிவமைத்துவிட்டேன்.

காலம் வேகமாக நகர, மனிதர்கள் அறிவியலை விஞ்சத் துடிக்கிறார்கள். உணவு, உறக்கம், கல்வி, மருத்துவம் எல்லாமே அசுர வளர்ச்சியை எட்டிவிட்டது. விவசாயம் பன்னாட்டு நிறுவனங்கள் கைகளில், கைநிறைய சம்பளம். எல்லாருமே பட்டப்படிப்பு படித்தவர்கள். புதிய கண்டுபிடிப்புகள், உணவுப்பஞ்சம் ஏற்பட இன்னும் யுகங்கள் ஆகும். நான் செய்வது கிறுக்குத்தனமா? உணர்வுகளைக் கட்டுப்படுத்தலாம், ஏன் மட்டுப்படுத்தலாம். ஆனால் இல்லாமல் ஆக்கவியலுமா? கோபத்தையோ, எரிச்சலையோ, மகிழ்ச்சியையோ போன்ற உணர்ச்சியை அல்ல மனிதனிடம் இருந்து நீக்க நான் முயல்வது ‘காமத்தை’.

நெடுநேரம் அமைதியாக இருந்தேன். ஜியா என்னை அழைத்தாள் “சரி, நீ கவலைப்படுவதைப் போலத் தெரிகிறதே. இம்முறை மட்டும்தான், மனதில் ஏற்றிக்கொள். இரு உன் மதுக்குப்பியோடு வருகிறேன்.” பின்னே நான் வடிவமைத்தவள் அல்லவா!

ஜியா எனக்குப் பிடித்தமான குவளையில் மதுவை ஊற்றி, சிறிது தண்ணீர் கலந்து கைகளில் நீட்டினாள். பின் கையில் சிறிய தட்டத்தை நீட்டி “நாகரீகமாய்ப் பழகினாலும் ஊறுகாயைத் தொட்டு நக்கித்தான் குடிக்கிறாய்.” ஜியாவை நோக்கிப் புன்னகைத்தேன், ’நீ எவ்வளவு புத்திசாலியாகவும், அழகாகவும் இருந்தாலும் மனிதன் இல்லையே. எப்படிப் புரியவைப்பேன் ஊறுகாயின் சுவையை’ என எண்ணியபடி ஒரு மிடறு குடித்தேன்.

“நான் உன்னிடம் சிலவற்றைப் பற்றிக் கலந்துரையாட விரும்புகிறேன். உனக்கு விருப்பம் இருக்கிறதா?” என்றாள் ஜியா.

“தாராளமாக, பேசலாம்” ஆக நானே விரும்பியது.

“உன்னுடைய இந்தக் கண்டுபிடிப்பு பயனுள்ளது என எண்ணுகிறாயா?”

“ஆம், இதில் என்ன சந்தேகம். மகத்தான கண்டுபிடிப்பு. பார்க்கத்தானே போகிறாய். இதன் மூலச்சமன்பாட்டிற்காக எத்தனை கோடி கிடைக்கப்போகிறது என்பதை.”

“சரி, இந்தக் கண்டுபிடிப்பின் விளைவுகளை எப்படிச் சமாளிப்பாய். மதத்தலைவர்கள் உன்னைச் சாடுவார்கள். உலகச்சுழற்சியை இது பாதிக்கும் எனக் கவுன்சிலின் முன் முறையிடுவார்கள்.”

“முறையிடட்டும். எந்த மதத்தலைவர்களும் நான் கேட்கும் மறுகேள்விக்குப் பதில் அளிக்க மாட்டார்கள் தெரியுமா? நான் கேட்பேன், உங்களின் மதத் துறவிகளுக்கு மட்டும் காம ஒடுக்கு ஒரு சடங்காய் இருக்கிறதே என்று மடக்கிவிடுவேன்.”

“உனக்குத் தெரியுமா? காம ஒடுக்கு உண்மையிலே சாத்தியம் என்று”

“ஏன் தெரியாது. பௌத்தம், சமணம், கிறிஸ்தவம் எல்லாவற்றிலும் இருக்கிறதே. எத்தனையோ துறவிகள் முயற்சித்தார்கள். காந்திகூடச் சிலமுறைகளைக் கையாண்டார்.”

“சரி, உன் வழியிலே வருகிறேன். அவர்கள் தீவிரமான மனப்பயிற்சியின் மூலம் ஒடுக்கினார்கள். நீ செய்வது பயிற்சிமுறையா?”

“வழிகள் எதுவாயினும் முடிவு அதுதானே. நான் முற்றிலுமாக அவ்வுணர்ச்சியை நீக்க முயலவில்லை. தேவைப்படுபவர்கள் என் கண்டுபிடிப்பை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நிரந்தமான விலகல் கிடைக்காது. அதையும் உனக்குத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.”

“சரி, நீ மெச்சும் கண்டுபிடிப்பின் வழிமுறைதான் என்ன?”

“உனக்குப் பலமுறை விளக்கியுள்ளேன். மீண்டும் ஒருமுறை கூறுகிறேன் கேள். ‘பசி’, உன்னால் உணர முடியாது. உயிர்களுக்கு மட்டுமே உரித்தானது. மதத்துறவிகள் மனப்பயிற்சியுடன் உணவு உண்ணும் வேளையையும் சுருக்கிக்கொண்டார்கள். பிரம்மத்தை எந்நேரமும் சிந்திப்பவர்களின் வயிறு எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும். ஒருவரின் பசியின் முன் காமம் சிறிது தணிந்து போகும். புரிந்துகொள்வாய் என நினைக்கிறேன். பல வேசிகள் பசியாலயே தன்னை மேய்ந்துகொள்ள அனுமதித்துக்கொண்டார்கள். அதை அவர்கள் அனுபவித்து மகிழ்ந்து இருப்பார்கள் என்று நீ எண்ணினால், எனக்கு நீ முட்டாளாகவே தெரிவாய். தவறாக நினைக்காதே, இது என்னுடைய பார்வை. பிறகு இதுவே பழக்கப்பட்டுவிட்டது அவர்களுக்கு. இங்கே என் கேள்வி அவர்கள் பசிக்காகக் காமத்தை ஏற்றுக்கொண்டார்கள், கொண்டாடினார்கள் எனக் கூறுவதை நீ ஏற்றுக்கொள்வாயா? இல்லை என்பாயா? என்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் பசி, ஆமாம் உண்மையிலே பசி, வயிறு எரிந்துகொல்லும் பசித்தீயின் கடுஞ்சுவாலைகள் உடலின் அசைவை மாற்றும் வல்லமை கொண்டது, நீ ஒப்புக்கொள்ள இயலாது. ஆயினும் ஒப்புக்கொள்ள வேண்டும். வயிறு தள்ளத் தின்றாலும், என் கண்டுபிடுப்பு மூளையின் பசியுணர்வை முழுமைப்படுத்தாது. எப்போதும் ‘பசி’, ‘பசி’ என வயிறு எரிந்துகொண்டே இருக்கும். இங்கே காமம் எழாது, நிச்சயமாக எழாது.”

“அபத்தமான கண்டுபிடிப்பு. காமத்தைத் தவிர்க்க இயலுமா? அது இயற்கைக்குப் புறம்பானது. வேண்டுமெனில், தடுத்துக்கொள்ளலாம். எத்தனையோ மதநிறுவனங்களில் காம ஒடுக்கில் வெந்து, சுயமைதுனம் செய்து அவமானப்பட்டவர்கள் வரலாற்றில் இருக்கிறார்கள் அறிந்திருக்கிறாயா? சிலர் தற்கொலைகூடச் செய்துகொண்டார்கள்.”

“அய்யோ, ஜியா. முற்றிலுமாய் நிராகரிக்காதே. காம ஒடுக்கு தேவைப்படும்போது மாத்திரம் இந்தத் தொப்பியை, நான் கண்டுபிடித்த இத்தொப்பியை அணிந்துகொண்டால் மாத்திரம் போதும். மின்காந்த நுண்ணலைகள் பசியைத் தூண்டிக்கொண்டே இருக்கும், உன் வயிறு முழுமையாய் நிறைவை அடைந்தாலும். பின்விளைவுகள் இருக்காது. கலவியின்போது அதிகக் கலோரிகள் உடலால் கிரகிக்கப்படும். நீ பசியில் இருக்கும்போது, இயங்குதலுக்குத் தேவையான கலோரியே கிடைக்காதபோது, காமத்திற்கு உன் மூளை இடமளிக்காது.”

“ஆனால் ருசியப் பெண்களைக் காணும்போது, நீ தொப்பி அணிந்திருந்தும், உன் குறியின் எழுச்சியைப் பார்த்தேனே, இது தவறாக இல்லையா? உணர்ச்சி இல்லை. ஆனால் உறுப்புகள் சிலிர்க்கிறது.”

“சரிதான், அது என் தோல்வியே. என்ன செய்யலாம்?”

“ஏற்கனவே கூறிவிட்டேன். அதைச் சரிபடுத்திக்கொள்ளலாம், ஆனால் அதற்கு முன் நீ என்னுடைய கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டும். அதில் உண்மை மட்டுமே இருக்க வேண்டும்”

“சரி கேள்”

“எதற்காக இந்தக் கண்டுபிடிப்பு”

“விடுதலைக்கு”

“விடுதலையா? நீ காம ஒடுக்கைத்தானே ஆராய்ச்சி செய்கிறாய்? எதில் எங்கே விடுதலை இருக்கிறது? பிதற்றாதே!”

“நீயே சொல். ஒரு ஆணிற்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் எங்கே தேவைப்படுகிறார்கள். இப்போதெல்லாம் இருபால் காதலர்கள் குறைவாகவே காணப்படுகிறார்கள். முன்பு குடும்பங்கள் இருந்தது, அது மனிதனைக் கட்டுப்படுத்தியது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்தார்கள். இந்நூற்றாண்டின் ஆகப்பெரிய சாபம் என்னவென்று தெரியுமா? வளர்ச்சி. மனிதக்குல வளர்ச்சி. எங்குமே தேவைகள் பணம் மூலம் நிவர்த்தி செய்யப்படும்போது சகமனிதரின் தேவை எங்கே இருக்கிறது? எனவே மனிதர்கள் தனியர்கள் ஆனார்கள். குறிக்கோள் சம்பாதிப்பது மட்டுமே, உலகத்தின் சுழற்சியை மாற்றினார்கள். குடும்பங்கள் குறைந்தது. இருந்தாலும் உடல்பசி வாட்ட, பன்னாட்டு நிறுவனங்கள் கலவி விளையாட்டு உபகரணங்கள், அதற்கு மட்டுமே உபயோகிக்க கூடிய நுண்ணறிவு இயந்திர மனிதர்கள் என உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். விளைவு காதல் எங்குமே இல்லை, ஒரு திருக்குறள் சொல்கிறேன். கேள்,

‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்’ இதன் அர்த்தம் என்ன?”

“காமம் ஆனது மலரைவிட மென்மையான உணர்வு, அதனை உணர்ந்தவர்களே. எங்குத் தேவைப்படுகிறதோ அங்கு மாத்திரம் அதனைக் கவனமாக அனுபவித்து, அதன்மூலம் கிடைக்கும் உணர்ச்சிக்குவியலின் சமுத்திரத்தில் மூச்சடக்கி மூழ்கி இன்பநிலையை அடைவார்கள். மாறாய் அதனின் உச்சத்தை வன்மையாகக் கையாண்டால் காற்றை நீரினுள் பெருக்க ஊதினால் அழகாய் எழும்பும் நீர்குமிழியைப் போல மேலெழும்பி, ஒரு புள்ளியில் அதன் இறுதிநிலையில் வெடித்துவிடும். அதேபோல காமம், நீ அதனை எவ்வாறு கையாள்கிறாயோ, அதன்படியே விளைவு இருக்கும்.”

“சரியான விளக்கவுரை, ஏற்கனவே எளிதியுள்ள விளக்கவுரைகளைக் கூறுவாய் என எதிர்பார்த்தேன். அருமையான விளக்கம். சரி, விஷயத்திற்கு வருவோம். இங்கே மென்மையான மலரினும் மெல்லிய காமம் இருக்கிறதா? வன்முறையான பலாத்காரங்கள்தானே நடக்கிறது, ஏன்? காதலின் உச்சம் காமம். காமத்தின் உச்சம் காதல். ஒன்றுக்கொன்றின் எல்லை இன்னொன்று. காதலில் திளைத்துப் பின் எழும் காமமே சிறந்தது. ஊடலும் கூடலும் இல்லாத காதல் வாழ்க்கை சூன்யம் போன்றது. இத்தலைமுறைக்குக் காதல், சேர்ந்து முயங்கிப் போவதற்குத் தேவையான கடவுச்சீட்டு போல ஆகிவிட்டது. அது கிடைக்காமல் போகும்போது, உடல்பசி தீராக்காலத்தில் மிருகமாய் ஆகிவிடுகிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் கற்பழித்துக் கொல்லப்பட்டார்கள். இப்போது ஆண்களும் கொல்லப்படுகிறார்கள். அவ்வளவே வித்தியாசம். காதல் இல்லையேல் கலையும் இல்லை. இங்கே நான் மீண்டும் நிறுத்திக்கொள்கிறேன், கலையில்லை. நிச்சயமாக அருமையான கவிதைகளைப் படித்து வெகுநாளாய் ஆகிவிட்டது. வாழ்க்கை மேம்பாட்டு, சுயமுன்னேற்றப் புத்தகங்கள்தான் விற்பனையிலும் அதிகம், அருமையான இலக்கியம் பேசக்கூடிய புத்தகங்கள் வரத்து குறைந்துவிட்டது, எழுதுவதற்கும் ஆட்கள் இல்லை. கவிதை எனும் பீடம் அரிதாகிவிட்டது. நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். எங்குமே அது தென்படவில்லை. இசைக்கலைஞனோ, கவிஞனோ இப்போதெல்லாம் அரிதாகிவிட்டார்கள். இன்னும் சில வருடங்களில் மிருகங்களைப் போலச் சரணாலயங்களில் காணப்படலாம். மிருகங்களைப் போல நாம் சித்திரவதைப்படுத்திக் கேட்கலாம், கம்பைத் தாண்டும் குரங்கைப்போல அவர்கள் நம் முன்னே அம்மணமாய் நிற்பார்கள், குரூரமான அடிகூட அவர்கள் மேல் விழலாம்”

“இது கவலைக்குரிய சம்பவம்தான். ஆனால், அதற்காகவா இப்படி ஒரு கண்டுபிடிப்பு?”

“நீ தவறாக எடுத்துவிட்டாய். நான் சிறிது நேரம் பழைய நியாபகத்தில் கடகடவென்று பேசிவிட்டேன். நிதானமாய் இருந்திருக்க வேண்டும். காரணம் நீ நினைப்பது போல அல்ல. இது மனிதக் குலத்திற்குத் தீர்வை அளிக்கும், சிலநேரம் ஓய்வைக்கூட அளிக்கும். சரி சரி, இப்போது எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமான ஆல்கஹால் என்னுள் புகுந்துவிட்டது. என்னை ஓய்வறைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என் தங்கமே, ஆமாம் மறந்துவிட்டேன். என் பதிலில் உனக்கு விருப்பமா? சரி காலையில் கூறு. இப்போது அதனைக் கேட்கும் மனநிலையில் நானில்லை. உறக்கம் தேவை, நிம்மதியான உறக்கம். எனக்குக் கிராமத்தில் உறங்குவதைப் போல உணர வேண்டும். தென்னைமர ஓலைகள் காற்றில் உரசும் சப்தம், வைக்கோல் மழையில் நனைந்தால் வரும் நைந்த வாசனை, வயல்வெளியில் பூச்சிகள் கத்தும் ஓசை, போதும், இது போதும். என் அன்பே ஜியா. இனிய இரவு.”

அவன் தங்கியிருந்த வீடு அடுக்குமாடிக் குடியிருப்பின் இருநூற்று பத்தாவது மாடி. இந்நகரின் வளர்ச்சி பரந்து விரிவதை அவன் விரும்பவில்லை, மாறாக உயர எழும்பிக்கொண்டு இருக்கிறது. சூரிய வெளிச்சம் சன்னலை அடைந்து, அவனை எழுப்ப முன்மதிய வேளை ஆகிவிடும். இரவு அசந்து உறங்கியதன் விளைவு. உடல் அசதியாக, கை கால்கள் கனம் கூடி உளைச்சல் எடுத்தது. தலை விண்ணென்று வலித்தது. சரியான நேரத்தில் ஜியா வந்தாள், அவள் கையில் சாத்துக்குடிச் சாறு இருந்தது. அருமையான பெண் அல்லவா இவள், உடனடித் தெம்பு கிடைக்கும்.

“வணக்கம் அன்பரே, உங்களுக்காக ஒரு பரிசு காத்திருக்கிறது”

“அன்பே, எனக்கு பிடித்தமான சாளை மீன் குழம்பைச் சமைத்துள்ளாயா?”

“நீங்கள் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்டவர்தான். ஆனால் ஒன்றோடு நிப்பாட்டிக்கொள்ளுங்கள். சரி, எழுந்து வாருங்கள், உங்கள் அறைக்கு. என் பரிசு உங்களை மகிழ்விக்கும் வாருங்கள்.”

அறைக்குள் நுழைந்தார்கள், காட்சித்திரையில் ருசிய போர்னோ அழகி ஜியா வெற்றுடம்புடன் சுயமைதுனம் செய்து கொண்டிருந்தாள். அவள் சிவந்த முலைக்காம்புகள் மென்மையான ரோஜாப்பூவின் இதழைப் போல இருந்தது. ஓரிதழ்ப்பூ நம்ப முடியாத கிளர்ச்சியைக் கொடுத்திருக்க வேண்டுமே! என்ன, எவ்வித உணர்ச்சியும் இல்லை. என் சுண்ணி மண்ணுளிப் பாம்பைப் போலக் கிடந்தது. ஜியா என்னைப் பார்த்துச் சிரித்தபடிப் பல காட்சிகளை மாற்றிக்கொண்டு இருந்தாள். விரும்பிய முடிவுதான். ஆனால் நான் தொப்பி அணியவில்லை, எனக்குப் பசியும் எடுக்கவில்லை.

“ஜியா, எப்படி சாத்தியம். நான் தொப்பி அணியவில்லை. எனக்குப் பசியும் எடுக்கவில்லை.”

“நான் கூறினேனே, இது பரிசு. ஏற்றுக்கொள்ளுங்கள்”

“இல்லை ஜியா. இயக்கமுறையைக் கூறு. என் தலை கொதிக்கிறது. இதயம் துடிக்கும் ஓசை உனக்குக் கேட்கவில்லையா.”

“மூளை பசியுணர்ச்சியைத் தூண்டுவதைப் போன்ற வழிமுறையைச் சிறிது மாற்றியுள்ளேன். நேற்று பசியைத் தூண்டும் வேதிப்பிணைப்பைத் தூண்டினாலும், மூளை உண்மையில் ஆராய்ந்து, நீ பசியில் இல்லை என்பதை உணர்ந்துவிட்டது. ஆனால் உன்னை அது ஏமாற்ற விரும்பவில்லை. இருந்தாலும் காம இச்சைக்கான உணர்ச்சியும் தூண்டப்பட்டு உன் குறி விறைப்பு எடுத்துவிட்டது. நான் இன்று மாற்றி இருப்பது, மூளையின் உணர்ச்சியில் சங்கிலிப் பிணைப்பின் மூலமாய் உடலைக் கட்டுப்படுத்தும் மையக் கட்டுப்பாட்டு நரம்புகளை. காதலோ? காமமோ? உணர்ச்சி தோன்றும்போது உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதன்மூலம் விரைவாய் உடலின் முக்கிய உறுப்புகள் விறைப்பை அடையும். அதனைக் கட்டுப்படுத்துகிறோம், மின்காந்த அலைகள் மூலமாக. சரி நீ கூறினாய் அல்லவா? இதயம் துடிக்கும் ஓசை கேட்கிறதா? நீயே சொல். உன் இதயம் அத்தனை வேகமாகவா துடிக்கிறது? இந்த அறை முழுவதற்கும் மின்காந்த அலைகளைப் பரப்பிவிட்டு இருக்கிறேன். உண்மையைச் சொல் உனக்குள் உணர்ச்சிகள் ஊடுருவிவிட்டதா! இல்லையெனில் நிச்சயமாக, இது வெற்றியின் மாதிரியே, எனவே இதனை எளிதில் உபயோகத்திற்குச் சந்தையில் கொண்டு வரலாம்.”

இதயம் இயல்பாகவே துடிக்கிறது. பெண்களின் உடல் என்னைக் கிளர்ச்சியில் ஆழ்த்தவில்லை. உலகின் தலைசிறந்த நடிகைகளையும் ‘போர்னோ ஒப்டிம்’ மெய்நிகர் வடிவமுறையில் போர்னோ அழகிகளாக மாற்றி உள்ளது. அவர்களையும் ஒருமுறை சோதித்துக்கொண்டேன். எதிர்பாராத பரிசைத்தான் ஜியா அளித்துள்ளாள். நிரூபிட்டு மாதிரியின் இறுதி வடிவம் முழுமையடைய வேண்டும். இனி மனிதர்களின் பெரும்பான்மை விரும்பியபடி வாழலாம். காம இச்சை தோன்றும் போதெல்லாம் இக்கருவி அவர்களை மீட்டெடுக்கும். மதங்களில், ஞான மரபுகளில் கடினமான ஒன்றாக அல்லவா வரையறுக்கப்பட்டது, காமம். நான் உருவாக்கியது உபயோகமானதா? நேற்று குடித்த மதுவின் கசடுகள் என்னைக் குழப்புகிறது. சத்தியமாக, இது மகத்தான கண்டுபிடிப்பு. நண்பன் கூறியது மீண்டும் நினைவில் வந்தது, “நாம் எல்லாம் மலத்தைவிடக் கீழானவர்கள் தெரியுமா?” யாரை மன்றாடுவேன், எனக்குத்தான் கடவுள் என்றொருவர் இல்லையே!. இது இயல்பான நிலைதான். அறியாத கேள்விகளுக்கு, விடை பெற முயற்சிக்கும்போது இதைப் போன்ற குழப்பங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

செயற்கை நுண்ணறிவு மனிதர்களும், கலவி விளையாட்டு உபகரணங்களும் சந்தையில் தாராளாமாய்க் கிடைக்கும்போது, இது போன்ற கண்டுபிடிப்புகள் மனிதர்களை மீட்டெடுக்கும். மூளை அபாரமானது. முயங்குதலின்போது அடையும் இன்ப உச்சநிலையை, வேறுவழியில் காட்சி ஊடகங்கள், மெய்நிகர் காட்சி ஒளிபரப்பான்கள் வழி எளிதாக கிடைக்குமேயானால் மூளை அதற்கேற்றவாறு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளும்.

நான் நின்றுகொண்டே பலவாறு சிந்தித்துக்கொண்டே கூறினேன் “ஜியா, இதன் இறுதி வடிவமைப்பை முடித்துவிடு. இன்றே மீண்டும் ஒருமுறை பரிசோதித்துப் பார்ப்போம்.”

இயந்திரத்தின் இறுதிவடிவம் கண்முன்னே இருந்தது. மெய்நிகர்க் காட்சி ஒளிபரப்பான்களை அணிந்துகொண்டு அமர்ந்தேன். ஓடிக்கொண்டிருந்த காட்சிகள் கிளர்ச்சியை ஏற்படுத்தவில்லை. குறியில் விறைப்புமில்லை. முடிந்தது, அபாரம். விடுதலை, நான் நம்பிக்கொண்டிருந்த விடுதலை என்முன்னே தயாராக இருக்கிறது.

மகிழ்ச்சியைக் கொண்டாட விரும்பினேன். “ஜியா, அன்பே….”

“வேண்டாம் நிறுத்துங்கள், உங்கள் மனநிலை நிறைவாக இருக்கிறது அல்லவா. எனவே மது வேண்டும் அப்படித்தானே. பொறுங்கள் வருகிறேன்.” ஜியா கூறியபடியே அங்கிருந்து நகர்ந்து மறைந்தாள்.

வீட்டில், மாடியின் முன்பாகம் நின்றேன். வளைந்து அரைவட்டமாக உலகம் கண்முன்னே விரிந்திருந்தது. சாம்பல் நிறவானம் தூறுவதைப்போல இருந்தது. அருமையான காலநிலை, கூடுதலாக இரண்டு குவளை மது எடுத்துக்கொள்ளலாம். மழை பொழிய ஆரம்பித்தது. யாரோ எழுதிய புத்தகம் ஒன்றின் வரி நியாபகம் வந்தது “வானமும், பூமியும் முயங்குதலே மழை.” கவித்துவமானது அல்லவா! மழை. இல்லை, என் குறி விறைப்பு எடுக்கிறது. என்னுள் காமம் தோன்றுகிறது. அபத்தம். இன்னும் பல வரிகள் நியாபகத்தில் வருகிறது, “மழை, வானின் நிர்வாணம்.” அய்யோ, இயந்திரம் நுண்ணலைக் கதிர்களைப் பரப்புகிறதா? ஆம் செயல்பாட்டில்தான் இருக்கிறது.

மெய்நிகர்க் காட்சி ஒளிபரப்பான்கள் என்னுள் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லையே? நான் கற்ற, செயல்படுத்திய அறிவியல் பொய்யா? அப்பா எப்போதும் கூறும் சில அறிவுரை நினைவில் எழுந்தது, “உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயல்வது முட்டாள்தனம், உன் அகங்காரத்தைக் கொட்டிவிடாதே. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தினால், சிலநேரம் அது உக்கிரத்தை எட்டிவிடும்.”

நான் இதுவரை அறிவியலின் வாயிலாய் அறிந்துகொண்ட காமம் வேறு. அது வெறும் பசி, முயங்குதல், சுயமைதுனம் மாத்திரமே கிடையாது. இன்னும் பயிற்சி தேவை, நான் தோற்றுப் போய்விட்டேனா? இல்லை புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டுள்ளேனா?

காட்சிகள் கிறங்கிக்கொண்டிருக்கின்றன. ஆம், காட்சி. இதுதான் பிழை, காட்சி. மூளை, காட்சிகளின் வாயிலாக மாத்திரமே உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவில்லை. அடிக்கடி அப்பாவின் அறிவுரை என்னுள் கேட்கிறது, வருடங்கள் ஆகியிருக்கும். முகமோ, உருவமோ தெளிவாய்த் தெரிவதில்லை. குரல் அப்பாவுடையதா? நினைவில் இல்லை. மொழி, ஆம் அந்த மொழி படிமமாகப் புதைந்துள்ளது. காட்சியும் ஒரு படிமமே. மொழி, குரல், தொடுகை அய்யோ இன்னும் எத்தனை. எனக்கு என்னவாயிற்று, முட்டாள். சாதாரண மழை பெய்துகொண்டிருந்தது. அதனைப் பற்றிய அற்புதமான வரிகள், அய்யோ மீண்டும் சில நினைவில் வருகிறதே ‘வானின் விந்து மழை’, சிந்தனைகள் கிளறிக்கொண்டே வந்தது. ஒவ்வொன்றும் கிளர்ச்சியில் ஆட்படுத்தியது. காமம், காமம். எதிலும் காமம், சற்றென நின்றேன். மொழி உருவாக்கிய படிமத்தைப் புரிந்துகொள்ளவியலா மூளைச் செயல்பாடு, அதனைக் கிரகித்துக்கொள்ள முடியாமல் குழம்பியுள்ளது. தோற்றுவிட்டேனா? இல்லை உண்மையை அறிந்துகொண்டேன் என்பதே நிதர்சனம், என்னை நானே தேற்றிக்கொள்கிறேன், ஆமாம் தவறு ஒன்றும் இல்லையே.

ஜியா மதுவும், ஊறுகாயையும் எடுத்து வந்தாள் “என்ன அன்பரே, கவலை தோய்ந்தது போலக் காட்சி அளிக்கிறீர்கள்.”

“சரியாகச் சொன்னாய், வெற்றியில் பருக விரும்பினேன். ஆனால்…”

“என்ன ஆனால், நான் உங்களோடு தொடர்ந்து பேச விரும்புகிறேன். ம்ம், பேசுங்கள்.”

“ஜியா, இதன் வாயிலாய் நான் அறிந்துகொண்டது எல்லாமே வெற்றுத்தாள்களில் எழுதப்படும் தொடர்பில்லா வார்த்தைகள், இசை தெரியாதவருக்குக் காட்டப்படும் இசைத்துணுக்குகள் போன்றது, அதனை யாருக்கும் இதன் அர்த்தம் இதுதான் என நிரூபிக்க இயலாது.”

“போதை தலைக்கு ஏறிவிட்டது உங்களுக்கு” கோபத்தோடு கூறினாள் ஜியா.

உண்மைதான் தலைக்கு ஏறிவிட்டது, கூட்டு இயக்க நிலையில் எல்லாமே தலைகீழாகச் சுற்றுகிறது. சிறுவயதில் நான் வாழ்ந்த ஊருக்கு அருகில் இருந்த கோயிலின் கோபுரத்தின் உள்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த மரசிற்பங்களை அம்மா என் கண்ணில் விழாமல் கவனித்துக்கொள்வாள். அவை எல்லாமே பாலியல் விளையாட்டுகள், பின் பருவம் எய்திய வயதில் அப்பாவிடம் கேட்டதற்கு, “நம் முன்னோர்கள் கோயில்கள் எழுப்பினார்கள், அதனோடு இப்பாலியல் சிற்பங்களுக்கு ஓரிடம் அமைத்துக் கொடுத்தார்கள், நம் வாழ்வோடு அந்நியமாய் இவை இருந்திருக்கலாம் எனக் கருதி இருந்தால் அனைத்துமே செதுக்கப்பட்டு இருந்திருக்குமா? இதனின் அத்தியாவசியம் உணர்ந்துகொள்ளக் கூடியதே, அருவருக்கத்தக்க வகையில் ஒதுக்கித் தள்ளவியலாது. இங்கே இயற்கை இறைவனின் வடிவாய் இருக்குமேயானால், மழையும் வெயிலும் காற்றும் புழுதியும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் இணைத்துக்கொண்டு இயங்கியே ஆக வேண்டும். இது இறைவனின் லீலை, நம் தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டது. இதுவும் இயற்கையின் படிநிலையில் ஒன்று, அதுதான் இயங்குதல். எல்லாமே இயங்கிக்கொள்ள வேண்டும், தானாக சுயஒற்றில் ஒற்றைப்புள்ளியில் இயங்கிக்கொள்ள வேண்டுமானால், சுழற்சி நிச்சயமாய் வேண்டும். அதுவே உயிர்ச் சுழற்சி, பிறத்தலும் பின் மரணித்தலும் நிகழ வேண்டும். வட்டச்சுழற்சி அது, அதற்கான ஒரு காரணி காமம், அதுவே உயிரைத் தோற்றுவிக்கிறது. அதன் காரணமே இச்சிற்பங்கள்.” எதையும் வார்த்தைகள், சொற்கள் என எண்ணியபடி நினைவு கூறமுடியாமல் அமைதியாய் நின்றேன், ஆனால் மொழிகள் அற்ற, வடிவங்கள் அற்ற, புலன்கள் அற்ற, ஏதோ ஒன்றை உணர்ந்துகொண்டு இருந்தேன்.

“நீங்கள் அறிவுஜீவிதான், ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தயவுசெய்து அமைதியாய் இருக்க வேண்டாம். எப்போதும் போல வார்த்தைகளைக் கொட்டுங்கள்” என்றாள் ஜியா இறுதியாக.

எனக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. எதிலோ சிந்தனைகள் பாயத்தொடங்கிவிட்டால், எதிரில் நிற்பவரைக் கவனிப்பது போலவே கண்களும், அவர்களின் வார்த்தைகளைக் கூர்ந்து கேட்பது போலக் காதுகளும் இருக்கும். ஆனால், என் நனவிலி அவ்விடம் இருக்காது. எதிர்வினை ஆற்றாமல் வெகுநேரம் நின்றிருப்பேன். பின் நினைவு வந்தவனாய், நுண்ணறிவு பெண்ணே. எப்படிப் புரிய வைப்பேன்? காமம் என்பதை எங்களைவிட அறிவில் விஞ்சினாலும், சில தரிசனங்களை நீங்கள் உணரமுடியாதே. ‘காமம் தரிசனம்’ வெறும் உணர்ச்சி அல்ல. மழை ஓய்ந்து, மெல்லியப்படலம் நீர்வலை போர்த்தியது போலிருந்தது வானம். அதன் விளிம்பிலிருந்து செவ்வண்ண ஒளிக்கீச்சு வீசியது. மெல்லிய புன்னகையோடு அவளைப் பார்த்தேன். தலை கவிழ்த்து நின்றுகொண்டிருந்தாள். அவள் உதடுகள் புன்னகைப்பது போலிருந்தது. காலின் பெருவிரல் மாத்திரம் தரையைத் தொட்டு அரைமணி முள்ளைப் போல அசைந்து கொண்டிருந்தது. நாணம், இதன் பெயர் நாணம். என் குறி விறைப்பானது. இல்லை, இல்லை, இவள் இயந்திரம்.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்