கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்

9 நிமிட வாசிப்பு

பிரமிள் கவிதை பற்றிக் குறிப்பிட்டுக்கொண்டுவருகையில் ‘குழந்தைமை’ என்னும் சொல்லையும் ‘innocence’ என்னும் சொல்லையும் இணைத்தே சொல்லியிருப்பதைக் கவனித்திருப்பீர்கள். பிற்காலத்தில் ஜெயமோகன் இதே நிலையை ‘களங்கமின்மை’ என்றே குறிப்பிடுவதையும் அறிந்திருக்கிறோம். ‘பெரும்திறனாளர்கள்’ ஒரு ‘வீம்பி’ன் காரணமாகவும் ஒருவர் சொல்லை ஒருவர் பயன்படுத்தாமை கொள்வதுண்டு.

‘அந்த’ மெய்ப்பொருளை அறிந்தவர்கள் ‘குழந்தைமை’தான் எத்துணை அருமையான சொல் என்பதை உணர்வார்கள். அத்தோடு மிகமுக்கியமாக அது ஒரு நேர்மறைச் சொல்லாக இருப்பதையும் கண்டுநிறைவார்கள். ‘innocence’ எனும் ஆங்கிலச் சொல்லுக்கான பொருளும் ‘களங்கமின்மை’ என்றே இருந்தது, இருக்கட்டும். ஒருநாள் அதன் வேர்ச்சொல்லைத் தேடி, அடிப்படைப் பொருள் மாறாத அதன் இலத்தீன் சொல்லையும் அதன் பலதரப்பட்ட பொருளையும் வாசித்துக்கொண்டிருக்கையில்தான் புதியதான ஓர் உண்மையை ஒளிரும் ஒரு வியப்புடன் கண்டடைந்தேன்.

‘இன்மை’ அல்லவா பேருண்மை. முன்னொட்டாக வரும் ‘களங்கம்’, நாம் விலக்க வேண்டியவற்றைக் குறிக்கும் சொல் அல்லவா? மெய்மையைக் கண்டடைவதற்கான வழியையல்லவா இது சொல்கிறது. மெய்மையை தர்க்கப்பாதையில் நேரடியாக அன்றி, மெய்மையில்லாதவற்றை விலக்கிவிலக்கிச் செல்வதன் மூலம்தானே காணமுடிகிறது?

குழந்தைமை என்ற சொல் ஒரு கவிதையைக் கட்டமைக்கிற படிமமாக இருக்கிறதென்றால், ‘களங்கமின்மை’ கவிதை சுட்டும் வெளியாக அல்லவா இருக்கிறது.

மனிதர்களோடும், இயற்கையோடும், பொருள்களோடும் நாம் கொள்ளும் உறவைப்போலவே கருத்துகளை விளம்பும் சொற்களோடும் நாம் கொள்ளும் உறவும் முதன்மையானது.

எனது வாசிப்பின் துவக்ககாலத்தில் William Blake-இன் கவிதை நூலைப் புரட்டியபோது காணப்பட்ட ‘Songs of innocence’, ‘Songs of experience’ என்று அவர் தம் கவிதைகளைப் பாகுபடுத்தியுள்ள அந்த வரிகளைப் பார்த்தவுடனே நான் அசந்துவிட்டேன். அதற்குப் பிறகுதான் அவர் கவிதைகளுக்குள் நுழைந்ததும், பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அந்த வரிகளின் பொருளாழத்தை நான் அறிந்துகொண்டதும். என்னை ஈர்த்த கவிகளுள் மிக முக்கியமான ஒருவராக அவர் ஆகியிருந்ததன் காரணமும் இதுதான்.

(எனது) வாழ்வும் சரி, கவிதையும் சரி, இந்த இரண்டாலும் ஆனது என்பதே எனது ‘அபாரமான கவிதை ஞானம்’.

அண்மையில் வெளிவந்துள்ள ‘எல்லாம் ஒரு கணம் முன்புதான்’, ‘மகாநதி’ ஆகிய இரண்டு தொகுப்புகளிலிருந்தும் இரண்டு கவிதைகளைக் காணலாம்.

ஊஞ்சலில் ஆடிய குழந்தை

ஊஞ்சலில் ஆடிய குழந்தை
இறங்கி நின்றுகொண்டு
ஊஞ்சலை ஆட்டிக்களிக்கிறது.

தன்னை மகிழ்வித்தவளைத்
தான் இறங்கி மகிழ்விக்கிறது

தான் ஆடிக்களித்ததையே
விலகி நின்று காண்கிறது

ஆட்டுவிப்பதையும்
ஆடும் ஊஞ்சலில் யாருமில்லாததையும்
காண்கிறது.

உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கிறது
என்ற ஊஞ்சலிடம்
எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கிறது
என்கிறது குழந்தையும்.
0

அறிவாலும்….

அறிவாலும் திறனாலும் புகழ்பெற்ற
மனிதர்கள் வரிசையில் வந்தமர்ந்துகொண்டு
உரையாற்றிய அந்த செல்வந்தர்
நிரூபித்தார்
பணம், புகழ், அறிவு
மூன்றும்
ஒரே வகைப் பிசாசுகள்தாம் என்பதை
0

இவைகள் ஒரு சிறிய மாதிரிகள்தாம்.

கவிதைக்கு நோக்கம் என்று ஒன்று இருக்குமானால் அது குழந்தைமை எனும் களங்கமின்மையாக மட்டுமே இருக்க முடியும் என்று தோன்றுகிறதில்லையா? அங்கிருந்துதானே நாம் கற்றுக்கொள்கிறோம்?

இரண்டாவது கவிதையில், செல்வந்தர் எப்படி நிரூபித்தார் என்பது விவரிக்கப்படாமலே கவிதை தன் விரிவையும் ஆழத்தையும் கொண்டதாகி இருக்கிறது.
0

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்/ மழலைச்சொற் கேளாதவர் என்று கவி குறிப்பிடும்போது குழந்தைமை எனும் களங்கமின்மையைத்தான் என்றே கொள்வோமானால்தான் நாம் கவிதையின் ஆழத்திற்குள் சென்றவர்களாவோம். இல்லையெனில் அதற்குச் சற்றுக்கீழேதான் தங்கிவிடுவோம். கவிதை முடிவிலாது செல்லும் ஆழத்தைக் கொண்டுள்ள ஒரு பயணம், தீவிரம். நாம் எல்லோருமே குழந்தைகளாக மாறாதவரை வேறு வழியே இல்லை. ஒரு கவிதையைப் பார்க்கலாம். விமர்சக அன்பர் ஒருவர் இந்தக் கவிஞரின் கவிதை இயக்கத்தைக் குறித்து ‘பேராசைமிக்க மைதாஸ்’ என்னும் பொருள்படப் பேசியதன் பின்புலம் இந்தக் கவிதைக்கு உண்டு எனினும் கவிதை தனது பிறப்பின் மூலத்தை வேரோடு அறுத்துவிட்டே மேல்பூத்து நிற்கக்கூடியது என்பதை நாம் அறிவோம். அத்தோடே இரட்டைக்குழந்தைகள் போல் பிறந்த அடுத்த கவிதையையும் இணைத்துள்ளோம். அது கொண்டாடும் ‘கடவுள் எனும் பெயரற்ற பேரன்பு, பெருங்கொடை, பேரறம்’ என்பதெல்லாமே குழந்தைமையைத்தான் குறிப்பிடுகின்றன என்பது நமது துணிவு. ‘இராஜ்யபாரம்’ கவிதையில் ‘இராஜ்யபாரம் என்பது லேசா’ என மன்னரின் சித்தம் குறித்துக் கவலைகொண்ட ‘அறிவாளி’ மக்களும், மந்திரிபிரதானிகளும் மன்னரை என்ன செய்திருப்பார்கள்? புத்தி பேதலித்துவிட்டதென ஒருவகையான சிறையில்தான் அடைத்திருப்பர் என்பது அறிய முடியாததா என்ன?

இராஜ்ய பாரம்

மைதாஸ் நீ தொடுவதற்குமுன்
எல்லாம் பொன்னாகத்தானே இருக்கின்றன,
வேறு ஒரு வரம் கேள்.

பேசத் தோன்றாமல் நின்றதனால்
அவளாகவே உதவினாள்;
நீ தொடுவதெதுவுமே
தன் இயல்பினின்றும் நலிந்து விடாதவாறு
வரம் தருகிறேன் என்றாள்.

அன்று முதல் மைதாஸ்
தன் ராஜ்யத்திலுள்ள
அனைத்துக் குழந்தைகளையும்;
குழந்தையுள்ளம் கொள்ளும்
நேரம் பார்த்து
அந்தந்த மனிதர்களையும்
போய் தவறாது தொட்டுவிடும்
வேலை மும்முரத்திலாழ்ந்தான்.

மக்களும் மந்திரி பிரதானிகளும்
மன்னரின் சித்தம் குறித்தும்
நாட்டைக் குறித்தும்
கவலைகொண்டு கூடினர்

இராஜ்ய பாரம் என்பது லேசா?
0

சாத்தானியப் பேரரசும் கடவுளும்

இவ்வுலகையே
ஓர் குடையின்கீழ் ஆளும்
அரசனாக்குகிறேன் உன்னை,
உன் பெயரை மட்டும்
என்னிடம் கொடுத்துவிடு என்றான்
சாத்தான்.

நிபந்தனைகளேதும் வேண்டாம்
அந்த அரச பதவியையும்
நீயே வைத்துக்கொள்
என் பெயரையும்
இதோ பெற்றுக்கொள் என்று
கையளித்துச் சென்றுவிட்டார்
கடவுள்.

சாத்தானியப் பேரரசெங்கும்
மாசுபடுத்தப்படாத அரும்பொருளாய்
துயரப்படுவோர் இளைப்பாறும்
மென் தோள்களாய்
இன் தீண்டல்களாய்
சாத்தானைத் தேவனாக்கும்
பெரும் பணியாய்
இடையறா கருணா இயக்கமாய்
பேரறிவாய்
மெய்மையாய்
எங்கும் நிலவியபடி
எங்கும் திரிந்து கொண்டிருந்தது
கடவுள் எனும் பெயரற்ற பேரன்பு.
பெருங் கொடை.
பேரறம்.
0
பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள் (2007)

நாம் களையவேண்டிய களங்கத்தைச் சொல்லக்கூடியதே குழந்தைமையும் அதன் இன்னொரு பக்கமான மேதைமையும். குழந்தைமை காலமற்ற, கவலையற்ற வாழ்விற்கு அழைத்துச் சென்று வாழ்வின் ஒத்திசைவில் நம்மைக் குளிர்ப்பாட்டுகிறதென்றால், மேதைமை, காலத்தினதும் துயர்களினதும் இருளுக்கு அழைத்துச் சென்று வாழ்வையும் வழியையும் சுட்டும் ஒளியாகத் திகழ்கிறது.

“கவிதையைப் பற்றி மட்டும் நாம் எந்த ஒரு வரையறையையும் விளக்கத்தையும் கொள்ளமுடியவில்லை. அது விலகிவிலகிச் சென்றுகொண்டேயிருக்கிறது மர்மமாயிருக்கிறது” என்கிறார்கள். வாழ்வும் கலையும் வேறுவேறல்ல என்கிறோம் நாம். இதை அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். வாழ்வைப் புரிந்துகொள்ளாதவர்களால் கவிதையையும் புரிந்து கொள்ளமுடியவில்லை, படைத்துக்கொள்ளமுடியவில்லை. மனிதனால் இந்நாள்வரை அது முடியவில்லை. விபரீதமான தங்கள் வாழ்க்கையை உணரவோ, அதிர்ச்சியடையவோ கூடிய மனவெழுச்சியும் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். கவிஞர்கள் என்று சொல்பவர்களும்கூட. இத்தகைய கவிஞர்களே கவிதையை ஒரு துறையாக்கி, கலையாக்கி இதுவே போதும் என இருந்துவிடுகிறார்கள். கலைகளின் உச்சமான கவிதையோ தன்னைத்தானே தாண்டிச் சென்று தன் அடிப்படைச் சுருதிக்கே எப்போதும் ஏங்குகிறது. மெய்மையையும் அதன் வேகத்தையும் தவிர எந்தவகை அணிகலன்களையும் பகட்டையும் சூடாதிருக்கிறது. தனது வாழ்வுப்போக்கைத் தவறான பாதையில் செலுத்திக்கொண்டிருக்கிற மனிதனால்; கவிதையை நோக்கி மட்டும் எப்படித் தன் விழிகளைத் திருப்ப இயலும்? எப்போதும் புதிய புதிய பிரச்னைகளிலேயே மாட்டிக்கொள்கிறது மானுடம்.

வாழ்வை உருவாக்கிக்கொண்டதைப்போலவே கவிதையையும் நாம் உருவாக்கிக்கொண்டு வருகிறோம். விளக்கமாகவே பேசிவிட்டோம் என நினைக்கிறேன். பெண்ணை ‘அணங்குகொல்!’ என வியந்து நெஞ்சம் மாய்கிறதை ஏற்றுக்கொள்வோம். கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புல இன்பங்களும்; இந்தப் பெண்ணிடமே உள என வியக்கும் ஆண் மனதை நாம் யோசிக்கத்தானே வேண்டும்? அல்லது நமது கவிதைப்புரிதலை வாழ்வு குறித்த நமது கண்டடைதலை, வேட்கையை? கலைகளின் உச்சபட்ச நிலையைத்தான் கவிதை என்கிறோம் ஆதலால் கவிதை அதன் மாண்புநிலை குறித்த கேள்விக்கே இடமில்லாமல் செய்துவிடுகிறது. வாழ்வைவிட மிக உன்னதமான கலை கிடையாது என்று சொல்லும்போதும் கவிதையை நாம் மறுக்காமல் கவிதையைத்தான் நாம் சொல்கிறோம். அப்புறம் வாழ்வும் கவிதையும் வேறுவேறல்ல என்கிறோம்.

இவையெல்லாம் பேரமைதியையும் பெருங்களியையும் காணாது தோல்வியுற்றவர்களாய் வாழ்வை நாம் படைத்துக்கொண்டபடி கவிதையையும் நாம் படைத்துக்கொண்டு திணறுவதுதான் நமது கெடுபேறு. கண்கூடாய் வரும் இந்த வாழ்வை நாம் ஏற்புமறுப்பற்ற ஓர் பார்வைகொண்டு எதிர்கொள்பவர்களாய் இல்லாமல் இந்த வாழ்வை நாம் பார்வையற்றவர்களாய் ஏற்பதும் மறுப்பதுமாய் ஒரு போருடனும் சச்சரவுடனும்தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்? இங்கிருந்தும்தானே நமது கவிதைகள் பிறக்கின்றன? பிறக்கின்றன, சரி. அவர்கள் தமது மூலஊற்றை, குழந்தைமை எனும் இன்மைப்பெருங்களத்தை மறந்தவர்களாய் இந்த வாழ்வையே இறுதிநிலையாயும், நூறு விழுக்காட்டு உண்மை எனவும் கண்டவர்களாய் ஒரு பெரும்பள்ளத்துள் வீழ்ந்துவிடுவதுதான் கெடுபேறு என்கிறோம்.

இத்தகைய ‘கெட்ட’ அனுபவத்திலிருந்து தீவிரமாய் வெளிப்படும் கவிதைகளும் உலகில் உண்டு.

ஆத்திரம் கவிதையாகாது. முதிர்ச்சி அடைந்த நிலையிலும் ஆத்திரம் போன்ற ஒன்றே — அதைத்தானே மனவெழுச்சி என்கிறோம் — ஓர் உயர்ந்த தீவிர நிலையைக் காட்டுகிறது. ஒன்று ஆத்திரமோ அல்லது முதிர்ச்சியின் தீவிரமான மனவெழுச்சியா என்பதை ஆர்வமிருக்கும் நம் உள்ளம் தானே கண்டு கொள்ளும். காலமற்ற நிலையின் குழந்தைமையில்தான் இயங்கக்கூடியது அந்த ஆர்வம்.

புலனின்பங்களில் மாட்டிக்கொண்டு கீழ்நடமாடும் கவிதைகளைப் போன்றவையே, பிரச்னையில் தாமும் மாட்டிக்கொண்ட ஒரு மனஅவசத்தின் வெளிப்பாடான கவிதைகளும்; இதுபோன்ற கவிதைகளை நாமே அடையாளம் கண்டுவிலகும்போதுதான் நம் மனதும் மெய்யான கவிதைவெளியில் மிதக்கும்.

ஆனால் கவிதையோ தனக்கு இங்கேயும் பொறுப்பு இருக்கிறது என்கிறது. என்றாலும் நாம் அதனைக் கேள்விக்குள்ளாக்கும் இடத்திற்கே வந்திருக்கிறோம் இப்போது.

கவிதை – கவிஞன் – தன் வெளிப்பாட்டுத் திறன்களிலேயே அதிகமும் உழலக்கூடாது என்பேன். கவிதையை ஒரு கலையாகக் கற்றுக்கொண்டவனால் காதலிக்க முடியாது என்று நாம் அடிக்கடி சொல்வது இதனால்தான். தாமரை இலைகளைச் சாப்பாட்டு இலைகளாக்குமளவுக்கான இலேசான தையலே போதுமானதாயிருக்க வேண்டும் அதற்கு. வாசகனைப் பொழுதுபோக்கிற்குள்ளோ, இன்பத்திற்குள்ளோ, துன்பத்திற்குள்ளோ ஆழ்த்தவோ அல்ல வாழ்வின் தீவிரமானதோர் அமைதிக்குள் ஆழ்த்தவே அது முயலவேண்டும். இப்போது கடந்த ஒரு பக்கத்திலிருக்கும் ‘அறிவாலும்…’ என்ற தலைப்பிட்ட கவிதையை மீண்டும் வாசித்துப்பாருங்கள். அறிவாலும் திறனாலும் புகழ்பெற்ற/ மனிதர்கள் வரிசையில்/ வந்தமர்ந்துகொண்டு/ உரையாற்றிய அந்த செல்வந்தர்/ நிரூபித்தார்/ பணம், புகழ், அறிவு/மூன்றும் /ஒரேவகைப் பிசாசுகள்தாம் என்பதை) இக்கவிதைக்கு நம் அகம் அளிக்கும் சிறப்புக்குக் காரணமென்ன? கண்டுகொண்டால் உணர்ந்தால் நான் சொல்வதைப் புரிந்துகொண்டீர்கள் என்று பொருள். கவிதை என்பது மனிதன் அடையவேண்டிய நிலையாக இல்லாது தத்தளிக்கும் மனிதனுடையதாக இருப்பதா சரியானது? அடையவேண்டிய நிலைகுறித்த தத்தளிப்பு என்பது வேறு. அடைய வேண்டாததை அடைய வேட்கும் தத்தளிப்பு வேறு. இதெல்லாம் நம்மால் முடியாததுதானா? கவிஞன் என்பவன் அபூர்வ மனிதன்தானா? நூறாண்டுக்கு ஒருமுறையே தோன்றுபவன்தானா? ஆயிரமாண்டுகளுக்கொருமுறை தோன்றும் அவதாரம்தானா? அவமானச் சின்னம்தானா? கவிதை வாசகர்களின் எண்ணிக்கைக் கணக்கைக்கொண்டும் நாம் இதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

தீவிரமும் எழுச்சியுமற்று தான் புரிந்து, செயலிழந்து ஏற்றுக்கொண்ட வாழ்வைவைத்தே கவிதையையும் அவன் ஏற்றுக்கொள்கிறான். கவிதை விழைகிற வாழ்வைவிட்டு எவ்வளவுதூரம் விலகி இருக்கிறானோ அவ்வளவு தூரம் கவிதையைவிட்டும் விலகியே இருக்கிறான். அவன் கவிதை எனச் சொல்வதும் வாழ்வு எனச் சொல்வதும் அவனே தனக்காகக் கட்டமைத்துக்கொண்டவை என்பதையே மறந்தவனுமாகிறான். போலியானவையும் தட்டையானவையும் என்கிறோம் நாம். எல்லாவற்றிற்கும் கவிதையே மிகப்பெரிய அளவுகோலாக இருப்பதால், அந்த அளவுகோலையே தனக்கேற்ப வடிவமைத்துக்கொண்ட மனிதனால் தன் விடியல் காணாது தவிக்கிறது கவிதைவெளி. இந்தக் கோளாறுகளை நாம் கடப்பதற்காகத்தான் குழந்தைமை பற்றியும் குழந்தைப்பருவம் பற்றியும் நாம் ஆழமாய்ச் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். நாணயத்தின் ஒரு பக்கம் குழந்தைமை என்றால் அதன் மற்ற பக்கம்தான் மேதைமை. மற்ற அறிவுகள் எல்லாம் ஓர் இயந்திரம் படைத்துவிடக்கூடிய புலமையே என்று அறிவோம். கவிஞன் எனும் ஆளுமைக்கான பண்பை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னேயே உலகம் கண்டுவிட்டது. கவிஞன் பிறக்கிறான் உருவாக்கப்படுவதில்லை என்னும் புகழ்பெற்ற மொழியையும் நாம் கேட்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறையே மகாகவிகள் பிறக்கிறார்கள், அவதாரங்கள் பிறக்கின்றன. தர்மம் அழிந்து அதர்மம் ஓங்கும்போது நான் பிறக்கிறேன் எனும் கூற்றுக்கள் எல்லாம் எதைக் காட்டுகின்றன. இந்த வாழ்வை — இது இப்படித்தான் இருக்கும் என்றே சோர்ந்து நாம் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்பதைத்தானே?

எல்லோரும் அடையவேண்டிய ஒன்றையோ அல்லது உணர்வுத்தீவிரம் எனும் அதன் வேட்கையையோ கெடுபேறாக அபூர்வமாகவே மாண்புமிக்கவர்களான மனிதர்களுக்குக் குழந்தைப்பருவத்திலேயே அது கிட்டியிருக்கிறது. அபூர்வமான விழிப்பு நிலையை அடைகிறார்கள் அந்த மனிதர்களே. இதற்குப் பிறக்கும்போதே அவர்கள் மூளை அணுக்களிலுள்ள மாறுதல்கள்தாம் காரணமாயிருப்பின் அதுதான் எத்துணை கெடுபேறு என்று புலம்புகிறோம் நாம். காத்திருக்கமுடியாது, வாளாவிருந்துவிட முடியாது மேற்செல்ல வேண்டியவர்களாகிறோம்.

மனிதன் தோன்றிய காலத்திலிருந்து மனிதமூளை சேமித்துக்கொண்ட அறிவுச்சுமையால், மனிதனிடம் ஏற்பட்டுள்ள தள்ளாட்டம் — பிற எந்த உயிர்களிடமும் இல்லாதது — வாழ்வை வாழ்வின் தூய்மையை, தேவாமிழ்தை, மெய்மையை, அழகை, அன்பை, அருளை அவன் பருகுவது — ஓர் கருணையில்தான் — அவன் தன் ‘நானை’ முற்றிலுமாய் இழந்த நிலையில் அதாவது மூளை அறவே செயல்படாது, விழித்திருக்காது, மறைந்துபோனவேளையில்தான்.

இந்த மூளையின் அபாரமான இயந்திரத்திறமை ஒவ்வொரு மூளையிலும் அங்கங்கே உள்ள இயந்திர உறுப்புக்களின் தற்செயலான இயங்குவேகம் சுறுசுறுப்பு ஆகியவற்றைப் பொறுத்துள்ளது. ஒருத்தர் மிகப்பெரிய விஞ்ஞானியாகிவிடுகிறார். ஒருத்தர் மிகப்பெரிய காவியத் தலைவனாகிறார், ஒருத்தர் மிகப்பெரிய நினைவாற்றல் கொண்ட புலவர். ஒருவர் மிகப்பெரிய கட்டமானக் கலைஞர் ஆனால் புற உலகின் எத்துணை பெருவளர்ச்சியினாலும் நாம் களைந்திராத மானுடதுக்கம், வறுமை, நோய், துரோகம், அறமின்மை இவற்றிற்கெல்லாம் இங்கே பதில் இல்லை. எல்லாமே மாபெரும் மூளை இயந்திரத்தின் ராட்சசப் பணிகள்தாம். மூளையின் இந்த இயந்திர வலையினுக்குள் சிக்கிக்கொண்ட எத்தகைய பெரிய மனிதர்களானாலும் சரி அனைவருமே ஒரே கிணற்றுள்ளே விழுந்துவிட்ட தவளைகள்தாம்.

ஆனாலும் போதிய நல்லறிவு நமக்கிருந்தால் இவைகளெல்லாம் கொண்டே நல்லவண்ணம் இவ்வுலகை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் இவையெல்லாம் ஒரு ‘கொசு’ தான். மூளை பற்றிய மிக முதன்மையான விஷயம் என்னவென்றால் அதனுள் சுரக்கும் தீமையினைக் காணவும் கண்டு அழிக்கவும் ஏன் நம்மால் முடியவில்லை என்பதுதான்?

ஏன் நமது மூளை அமைதியாக இல்லை: எப்போதும் பதற்றம் கொண்டபடி இயங்கிங்கொண்டே இருக்கிறது. அது ஏன் மரணம் பற்றி அறியவில்லை, அடங்கவில்லை அதன் தேவை என்ன? பயம் என்ன? அதுமட்டும் தன்னை அறிந்திருந்தால் தன்னை அறிந்து, தான் அழிந்து, அந்த அமைதியாகவே மாறியிருந்தால் விடிந்திருக்குமல்லவா இந்த உலகம்?

கவிதை வாழ்வின் பிறிதொன்றாக இருக்கையில்தானே கலையாகிறது. பிரமிள் தன் வாசகர்களுக்கு மிக முக்கியமாக விட்டுச்சென்றதும் சுட்டிச் சென்றதுமான ஒரு குறிப்பினை நாம் இங்கே அவதானிக்க விரும்புகிறோம் அது:

கவிதையை ஒரு கலையாக வெளிப்படுத்தும் வேகத்தை இரண்டாம்பட்சமாக்கி, மனிதப்பிறவி அடையத்தகுந்த பெருமதியான நுண்மாண் நுழைபுலத்தை முதன்மைப்படுத்தும் நோக்கத்தையே இந்தியமரபு தன்னுள் கொண்டுள்ளதாகக் கூறியதை இங்கே நினைவுபடுத்துகிறோம். அப்போது வாழ்வே கவிதையாகத்தானே இருக்கும். அந்தக் கவிதைகள்தான் இயற்கையின் ஓர் தனிப்பெருங்கருணையினால் அவ்வப்போது எந்த மனிதனுக்குமே வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது என்று நாம் சொல்லிக்கொண்டேயிருக்கிறோம். அந்தக் கவிதையில் இந்தப் புறஉலகம் தாம் பிறந்த மெய்யான ஓர் பேருலகைக்காட்டும் குறியீடாகவும் படிமமாகவும்தானே காட்சியளிக்கிறது. எல்லாமும் கவிதையாக எல்லோரும் கவிஞர்களாக வாழும் தருணமல்லவா அது? இங்கே எளிய ஒரு கவிதையினைத் தருகிறேன். இதை எழுதிய கவிஞர் யார் என்பதே தேவையில்லை: யாரும் இதற்கு உரிமைகொண்டாட வரமாட்டார்கள். மேலும் இதைக் கவிதையாக்கும் ஒரு சொல்லில் கனலும் ஓர் உணர்ச்சி – அது எங்கிருந்து வருகிறது என்பதில்தானே அது கவிதையாகிவிட்டிருக்கிறது. புத்துணர்ச்சி பொங்கிய வாழ்வாகவும்! எல்லாச் சொற்களையும் குறியீடாகவும், காட்சியினை படிமமாகவும்!

முற்றம்

எழுதவும்
வாசிக்கவும்
மனிதர்களைச் சந்திக்கவுமாய்
அமைந்த இந்த இருக்கையும் இடமும்
சந்தேகமேயின்றி
பசுமை கவிந்த
அவன் வீட்டின் முற்றமேதான்.
0

ஐந்தாவது வரியான ‘சந்தேகமேயின்றி’ என்ற சொல்லைத்தான் நான் சொன்னது. வீடு, முற்றம், பசுமை, இடம், இருக்கை, எழுதுதல், வாசித்தல், சந்தித்தல் என்றுள்ள சொற்களையெல்லாம் குறியீடாகவும் காட்சியினைப் படிமமாகவும் உயிர்பித்ததல்லவா அது?

மெய்மையை ஒரு போதமாகவே அறிந்துகொண்ட முதிர்ச்சியான நிலையில் இந்த உலகில் நாம் காணும் யாவுமே ஒரு படிமமாகவும் குறியீடாகவும்தான், காணப்படத் தோன்றிவிடுகிறது பேரனுபவ நிலைதான் அதுவும். போதமானதாலேயே அதனின்றும் நாம் பெறும் கல்வி சொற்களால் வெளிப்படுத்தவே முடியாதபடி வாயடைத்துவிடும் வியப்புக்குரியது. ‘வீட்டின் முற்றம்’ என்ற சொல்லைக் கவனியுங்கள். அடைய வேண்டியது வீடு என்றால், அதில் அடைந்திருப்பவர், முற்றம் வந்து அமர்கிறார், ஏன், எதற்கு? கேள்விகளேமயமான ஓர் உள்ளத்தைப் பெற்றிருப்போமானால் நாம் எத்தகைய அனுபவத்தைப் பெறுவோம்?

அறிந்துகொண்ட நிலையிலேயே அது எத்தகைய போதமானாலும் (மெய்யனுபவம்) சரி, கடந்து, அதாவது வெளியே வந்து — இங்கே முற்றம் வந்து — அமரவேண்டிய ‘வீடு’தானோ அது, கவியின் பார்வையில்? கவிஞன் என்ன சொல்லக்கிடக்கிறது?

ஒரு கவிதையைப் புரிந்துகொண்டால் — அது கவிதையாயிருக்கும்பட்சத்தில் அதைத் திரும்பத்திரும்பப் படிக்கலாம். வாழ்வாங்கு வாழும் வாழ்க்கையைப் போன்றதே அது; இல்லையா?
தூய உணர்ச்சிவேகம் அல்லது அதேவேகம் கொண்ட அமைதி அல்லது பார்வை சொற்களில் ஏறிநிற்கையில் உண்டாகும் கவிதையையும் வாழ்வையும் இன்னும் சற்று விளக்கலாம். பெரியவர் எல்லாம், பெரியவர் அல்லர் என்று சொல்லும்போது இரண்டாவது பெரியவர் என்ற சொல்லை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள். எதிர்பாராது ஒரு நண்பனைச் சந்திந்தவேளை, வியப்பு ஒளிர ‘கடவுளைப் பார்த்தமாதிரி இருக்குதப்பா’ என்று உங்கள் வாய் உதிர்த்த மிழற்றலை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், சொற்கள் பொருள்தரும் கணங்களை நாம் தொட்டிருக்கிறோம்தானே? அதைத்தான் நாம் இங்கே கவிதை என்கிறோம். இன்னும் இன்னும் வாழ்வில் நாம் எத்தனை கவிதைகளைச் சந்திந்திருக்கிறோம். வாழ்ந்திருக்கிறோம் என்பது சரி, எப்படியெல்லாம் வாழ்வை இழந்திருக்கிறோம் என்பதைத்தானே நாம் அறிந்துகொண்டிருக்கவில்லை. எல்லாம் வெறும்சொற்கள்தாம் என்றாகிவிட்ட வெளியில் மக்கும், மடமையுமாய்ப் பொருளிழந்த ஒரு வாழ்க்கையைத்தாம் நாம் வாழ்ந்துகொண்டிருக்கையிலும், மனிதனால் படைக்கப்பட்டிருக்காத ஓர் இயற்கையின் தனிப்பெருங்கருணையினால்தானே நாம் வாழ்வை விரும்பிவிரும்பி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கீழே இரண்டு கவிதைகள், இக்கட்டுரையோடு நெருக்கமாகவும், புரிந்துகொள்ளவும்.

என் கவிதை

நான் பாட விரும்பியிருந்தேன்
ஆட விரும்பியிருந்தேன்
ஓவியனாக விரும்பியிருந்தேன்
இசைக்கவும் விரும்பியிருந்தேன்
எழுத்தை ஆளும்
தொழில் நுட்பனாகவும் விரும்பியிருந்தேன்
ஒரு போதும் பொருளை விரும்பியதில்லை எனினும்
புகழை விரும்பியிருந்தேன்
உன்னைக் கண்ட பிறகோ
இவை எல்லாமே எனைவிட்டு வெட்கி
விலகியது கண்டேன்
ஆகவேதான் இன்றைய என் கவிதைகளில்
ஒரு மவுனம் மட்டுமே உள்ளது
தாமரை இலையைச் சாப்பாட்டு இலையாக்கும்
சிறு தொழில்நுட்பம் மட்டுமே உள்ளது
பூர்வ ஜன்ம ஞாபகம்போல்
சிறிதே இசை சிறிதே நடனம் சிறிதே ஓவியம்
பாவம்போல் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கிறது.
0
புல்வெளியில் ஒரு கல் (1998)

சின்னஞ் சிறிய சோகம்

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ் சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே.

விழித்திருத்தலே
என்னை வெளிப்படுத்துகிறது.

இரவின் மயான அமைதி.
என் தனிமையைப் போக்கும் புத்தகங்கள்.
கடிகாரத்தின் டிக்டிக்கில்
காலக் குழந்தையின் தேம்பல்.

ஆனால்
என் முன் வந்து
குறும்புடன்
(என்னை விழித்தபடியே கனவுகாண்பவனாக்கியபடி)
என் விழிப்பையே வேடிக்கை பார்க்கும் மௌனம்.

அந்த மௌனத்தோடு
நான் மௌனமாய் இணைகையில்
வெளிப்படுவது: மௌனம் மற்றும்
அதில் ஒரு பேருயிராய்த் ததும்பும் இறவாமை.

படுக்கையில் எனது குழந்தை நெளிந்தது.
இறவாமை (அம்ருதா) என்பது அதன் பெயர்.
ஒரு கொசு அவள் மேலிருந்து எழுந்து விலகி
அவளைச் சுற்றி வட்டமிடுகிறது.
அதன் ரீங்காரத்தில்
வெறிமிகுந்த ஒரு போர் விமானம்.
கையிலுள்ள புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு
அக் கொசுவை அடிக்க முயலுகிறேன்.
தோற்றுத்தோற்று அலைகிறேன்.
பத்துவிரல்களும் கூடிய எனது கைகளால்
அதை அடித்துக்கொல்ல:
இதுவே எனது வேலை எனும்படி முழுக்கவனமாக:
கடைசிவரை அதை விரட்டிக்கொண்டே இருக்கிறேன்,
துயிலும் எனது குடும்பத்தின் நடுவே.

சாந்தி என்பதும் அமிர்தம் என்பதும் அரவிந்தன் என்பதும்
வெறும் பெயர்கள்தாமே
துயிலும் இம்முகங்களில் வெளிப்படுவதும்
சின்னஞ்சிறிய வாழ்க்கையின் சின்னஞ்சிறிய சோகமே.
0
சின்னஞ்சிறிய சோகம் (1992)


நன்றி: சுடலைமுத்து

தேவதேவன் எழுதும் ‘கவிதையின் மதம்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்