ஆளுமை என்ற சொல்லை நாம் பயன்படுத்துகிறோம். குறிப்பாக நமது கட்டுரையில் அங்கங்கே – பிரமிளைப் பற்றிய ஒரு குறிப்பிலும் கூட. ஆளுமை என்ற சொல் முற்றுமுழுமையான ஒன்றல்ல. சம்பிரதாயமாக நாம் வழங்குகிற ஒரு சொல்தான் அது. உண்மையில் நிறைவான மனிதன் என்பவன் ஆளுமையே அற்றவன். இன்மையே பேராளுமை என்ற சொல்லாலும் நாம் சொல்லும்போது அதுவும் கருத்துருமிக்க காலத்திலிருந்துவரும் ஒரு சம்பிரதாயமான ஒரு சமூகவெளியின் மதிப்புமிக்க ஒரு சொல்தான். உண்மையல்ல. உண்மை, ஒவ்வொரு கணமும் நிலைக்காது மாறிக்கொண்டே இருக்கிறது. ஆகவே அந்த மனிதனும் மாறிக்கொண்டே இருக்கிறான். இது ஒரு கருத்து அல்ல. இது உண்மை. இதில் ஆளுமை எங்கே இருக்கிறது? நாம் எப்போதும் நம் எண்ணத்தாலேயே ஒரு படிமத்தை உருவாக்கி அப்புறம் அதில் அமர்ந்துவிடுகிறோம். இருபதாம் நூற்றாண்டின் நவீன கவிதையை நிலைநிறுத்த எழுந்த டி.எஸ். எலியட் கவிதை என்பது ஓர் ஆளுமையை உருவாக்குவதல்ல, ஆளுமையிலிருந்து வெளியேறுவதே என்றது இதனால்தான். உண்மையை அறியாத மானுடம்தான் ஓர் ஆளுமையாகவும், பேர் பெறவும், வழிபடவும், அதிகாரம் பெறவும், செல்வத்தைப் பெறவும் என்னென்ன தவறான பாதைகளில் அல்லாடுகிறது! ஆளுமைகள் என்போர் மனிதன் அடைய வேண்டிய களத்தைச் சுட்டக்கூடுமே ஒழிய, நிறைவேறும் நன்மையானது அதைக் காண்பான் ஒருவனால் மட்டுமே ஆகக்கூடியது. அந்தச் சரியான செயல் அவன் வாழ்க்கையில் அமைந்திருக்கிறதா என்றால் உண்மை காலத்தின்பாற்பட்டதல்ல என்பதே பதில். நாம் அறிந்துகொள்ள வேண்டிய எந்தக் கேள்விக்குமான இந்தப் பதிலைக் கண்டடைவதற்கான ஆற்றல் கூர்மையானதும் விவேகமானதும், விடுதலைகொண்டதுமான ஓர் உள்ளத்தினுடையது. கவிதைகளில் செயல்படுவது ஓர் ஆளுமையின் இந்த ஆற்றல்தான்.
அண்மையில் நடந்த ஒரு மேடையில் அன்பர் ஒருவர் கேட்கிறார்: அய்யா, நீங்கள் வானம், மரம், பறவைகள் என எப்போதும் விரிந்த கருப்பொருட்களையே எடுத்துக்கொள்கிறீர்கள். அதுவே உங்கள் கவிதைகளை இங்ஙனம் ஆக்கிவிடுகிறது இது பற்றிக் கூறுங்கள். (நான் கண்டுபிடித்தது சரிதானே, இது ஏன்? இது பற்றிக் கூறுங்கள்.)
அன்று நான் அந்த நண்பரை நோக்கி – ஆனால் நானே உருவாக்கிக்கொண்ட வேறொரு கேள்விக்கே பதில் கூறினேன்.
நாம் கவிதையை, படைப்பை, மேலோட்டமாக அணுகக்கூடாது. கவியினுடைய மனமும் வாசகனுடைய மனமும் வேறுவேறு இல்லை என்ற நிலையில் இருவருடைய அக்கறைகளும் ஒன்றுபோலவே இருந்தாக வேண்டும். இங்கேதான் கவிஞன் என்பவனுடைய ஆளுமையை நாம் முக்கியப்படுத்துகிறோம். அதன் சரியான புரிதலுடனேதான். உருக்கமான ஓர் இசையைக் கேட்டு முடித்தவுடன் கண் ததும்ப வைக்கும்படி அந்த இசை கொண்டுசென்றுவிட்ட பேரமைதியான ஒரு மனநிலையுடன்தான் ஒருவன் ஒரு கவிதையை வாசிக்கத் தொடங்க வேண்டும் என்பேன். இது ஒன்றும் நமது புதிய செய்தி அல்ல, என்றும் மாறாத கவிதை குறித்த புதிய செய்தியே இதுதான். நாம் அறிந்ததும், எப்போதும் அறியத் தவறவிடுகிறதும்தான்.
ஒரு எழுத்தாளன் தனது ஆயிரம் பக்கங்களடங்கிய நாவலின் தலைப்பாக ‘விடியுமா?’ என்று எழுதுகிறான். ஒரு நண்பன் கவலையோடு தன் நண்பனிடம் “ஒரே இருட்டாக இருக்கிறது” என்கிறான்.
புரியாமலா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
கவிதையைப் புரியாமலும் மனிதன் இருக்க முடியுமா?
சாதாரண சொற்களில், சாதாரண நிகழ்வை, சில வரிகள் எழுதிவிட்டு அதை நீங்கள் நன்கறிந்த ஆளுமைமிக்க ஒரு கவி கவிதை என்று நீட்டுகிறான். கவிதை என்பது விலைமதிக்க முடியாத பொன்னாலான ஒரு சட்டகம் என்பதே அதன் பொருளாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டுக்காக இங்கே இப்போது சில கவிதைகளைக் காண்போம்:
கீழேயுள்ள தலைப்பிடப்படாத ஏழு சின்னஞ்சிறு கவிதைகளையும் அருகிலுள்ள “யாம் பெற்ற இன்பம்” தொகுப்பினைப் புரட்டி உடனே தேர்ந்தெடுத்துப் போட்டிருக்கிறோம்.
எத்துணை பெரிய வானம்
லேசான தூறல்.
0
கால் தகிக்கும் வெயிலில் நடந்தவன்
கண்டுகொண்டான்
காலூன்றி நிற்கும் மர நிழலை.
0
கண் முன்னால்தான் இருக்கிறது
காண்பாரில்லை.
0
ஓடும் புகைவண்டியில் மனிதர்கள்
தூரத்து உறவுகளோடு, தேடலோடு.
0
சலவை செய்த ஆடை
நேற்றையது இல்லை.
0
காலமெல்லாம் காற்றில்
அசைந்துகொண்டிருக்கின்றன
துயரென்பதேயறியாத பசுங்கொடிகள்.
0
எளிய கவிதை ஒன்றால்
‘அதை’க் கூறிவிட விரும்புகிறேன்.
0
நாம் கவிதையை மேலோட்டமாக அணுகுகிறோம். நம் அக்கறை என்ன என்பதே முக்கியம். கலைகளின் உச்சநிலையில் இருக்கிற கவிதையின் வாசகர்கள் நாம். நாம் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அகம் பற்றிய தன் கேள்வியைப் பிறரிடம் கேட்காமல் ஒருவன் தனக்குள்ளேயே கேட்டுக் கண்டடைய வேண்டும் – புறப்பொருட்களைத் தேடி அடைவது நமது அகம்தான். கவிதைக்கான பொருட்கள் என்று ஏதுமில்லை. மேலும் இயற்கைமீதான நமது உறவு முக்கியமானது என்பது இயற்கையான உணர்வின்பாற்பட்டதுதானே ஒழிய நமது தந்திரத் தேர்வுகள் அல்ல. நாம் அவற்றை எடுத்துக்கொள்வதில்லை; அவைகள்தாம் நம்மை எடுத்துக்கொள்கின்றன. நாம் அவற்றை எடுத்துக்கொள்ளும்போது அது வெறும் பாவனையாகத் தோற்று உதிர்ந்துகொண்டே இருக்கும். நாம் இவ்வுலகில் படைத்திருக்கும் பல ‘நன்மைகள்’ இத்தகையதாக இருப்பதே இவ்வுலகின் மிகப்பெரிய அவலம். தன்னலத்தின் ஊற்றிலிருந்து வருவதே பாவனை. அவை மேலும்மேலும் உலகைக் குழப்பத்திற்கும் போருக்கும் துயருக்குமே அழைத்துச்செல்லும்.
இன்று நான் இந்த உலகைப் பார்ப்பதுபோலத்தான் குழந்தைப் பருவத்திலும் பார்த்துக்கொண்டிருந்தேன். கொஞ்ச காலத்திலேயே மனிதர்கள் இந்த உலகிற்கு நன்கு பழக்கப்பட்டுவிட்டவர்கள் போலிருப்பதை அறிந்துகொண்டேன். காண்பதற்கும் சிந்திப்பதற்கும் எவ்வளவோ இருப்பதாகப்பட்டது. எந்த வயதிலும் மனிதர்களுக்கே உரிய அச்சம் தவிர்த்த வியப்பும் களிப்பும் எல்லோர்க்குமே இயல்பானது என்பது அறிவோம். வியப்புக்கும் களிப்புக்கும் அப்பால், மிக அதிகமான ஓர் அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் ஆளானவன்போலும், தனித்துப்போனவனாய், ஒரு பேரிடியால் அழுத்தப்பட்டவன் போலும் காண்போர்க்கு விசித்திரமானவனாய் இருந்திருக்கிறேன்.
இன்றும் தொடரும் இந்தக் குழந்தைப் பருவகாலத்து எனது இயல்பு அனுபவம் ஒன்றைக் குறித்து எழுதிய ஒரு கவிதையினை இங்கே குறிப்பது நலமாயிருக்கும் என நம்புகிறேன்.
பயணம்
கூட்டத்தில் ஓர் இடம் பிடிப்பதற்காகக்
காலத்தை எவ்வளவு வீணாக்கினாய்
எஞ்சிய பொழுதுகள் எரிந்து நின்ற வெளியில்
என்ன நடந்துவிடுமென்று அஞ்சினாய்
பெற்றோர் உடன்பிறந்தோர் தவிர்த்த
உற்றார் உறவினர்களை
உறவு சொல்லி விளிக்க
உன் நா காட்டும் தயக்கத்தில்
என்ன எச்சரிக்கையைச் சுமந்து வந்தாய்
உன் அறியாப் பருவத்திலிருந்தே
எப்போதும் உன் முகத்தில்
வெகுநீண்ட பயணத்தின் களைப்பு
இன்னும் வரவில்லையோ
நாம் வந்தடைய வேண்டிய இடம்?
இன்னும் காணவில்லையோ
நாம் கண்ணுறவேண்டிய முகங்கள்?
0
-புல்வெளியில் ஒரு கல் (1998)
கவிதை என்பதே படிமம்தான்; படிமம் இல்லாமல் கவிதை இல்லை. தொடக்க காலத்திலிருந்தே நாம் கவிதையைப் பற்றி இதைத்தான் சொல்லிக்கொண்டு வருகிறோம். புறஉலகு ஒன்றின் மூலமாகத்தான் நாம் நம் அகத்தை வெளிப்படுத்த முடியும் என்றிருக்கையில் நாம் வேறு என்ன சொல்ல முடியும்? அனுபவம் புறக்காட்சிகளில் படர்ந்தபடி ஒரு படிமமாக வெளிப்பட்டாலும் இறுதியில் எண்ணங்களின் ஒரு விளைச்சலே எனும் நிலையையே அது வந்தடைகிறது. அனுபவத்தை அடுத்து நம் நினைவே படிமமாக உருக்கொள்கிறது. படிமமும் ஓர் எண்ணமாகவே வெளிப்பட்டு நிற்பதை நாம் தடுக்க முடிவதில்லை. வேறு சொற்களில் சொல்வதானால், காலமற்ற அனுபவவேளை தன் இடத்தைக் கடந்துவிட்டபோதே அது காலத்தையும் இடத்தையும் ஓர் எண்ணத்தையுமே கொண்டதாகிவிடுகிறது. இதனால்தான் காலத்தையும் இடத்தையும் எண்ணத்தையும் கொண்ட ஒரு காட்சியைத் தீட்டி சாமான்ய மனிதனும் அதைக் கவிதை என்கிறான். நேர்க்காட்சிகள் அலுத்துப்போனநிலையில், கற்பனையும் புனைவுகளுமான மனக்காட்சிகளும், மனநெறியற்ற கற்பனைச் சித்தரிப்புகளுமாய்க் கவிதைகள் எழுதப்படுவதைப் பார்க்கிறோம். வாசகர்களும் விமர்சகர்களும் திணறுகிறார்கள். வாசகர்கள் ஓடிப்போயேவிடுகிறார்கள் என்று சொல்லவேண்டும். கவிதைக்கு வாசகர்கள் ஏன் குறைவாக இருக்கிறார்கள்? தெரிகிறதல்லவா?
கவிதைக்கு வேண்டிய மனவெழுச்சி என்பதே – வாழ்வுக்கு வேண்டிய மனவெழுச்சியும்தான் – இல்லாதவர்கள், தங்கள் பல்வலி, வயிற்றுவலி, பசி, பட்டினி, தலைவலி, தாகம், சோகம், மோகங்களைக் கவிதை என எழுதுகிறார்கள். பற்று, பாசம் மற்றும் புலனின்பங்களையும் அழகின்மையையும் இவற்றைவிட விசேஷமான ஒன்றாக இப்போது ‘படைப்பு’, ‘கட்டுமானம்’. படார் என எனக்கு இங்கே இப்போது நினைவுக்கு வருவது: ‘கவிதை ஒரு கலை அல்ல; அது ஓர் உணர்வு’ என்று நாம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு சொற்றொடர். இந்தக் குரல், ‘கவிதை என்பது ஓர் ஆளுமையின் வெளிப்பாடுதான்’ என்ற இடத்திற்கே நம்மை அழைத்துச் சென்றுவிடுவதைக் காண்கிறோம். ‘ஆளுமை’ என்ற சொல்லாலும் நாம் குழப்பிவிடாதிருக்க ‘ஆளுமை’ பற்றியும் இங்கே ஆரம்பத்தில் நாம் விளங்கிக்கொண்டிருக்கிறோம்.
0
காட்சிகள் வெளிப்படுத்தும் நம் அகம் எத்தகையது? எத்தகைய அகம் கொண்டு நாம் இந்த உலகைப் பார்க்கிறோம்?
பார்க்கிறோம், அனுபவிக்கிறோம், அப்புறம் நினைவுகளாகிவிட்ட அதைச் சிந்திக்கிறோம்; எந்த நினைவானாலும் அவை நம் எண்ணங்கள்தாம்; எண்ணங்களைத்தான் நாம் சிந்திக்கிறோம். அங்கிருந்துதான் நாம் செயல்படுகிறோம்.
பிறந்த சிசு இவ்வுலகத்தைத் தன் விழிகொண்டு காணத் தொடங்கியதிலிருந்துதான் எத்துணை அனுபவங்கள்! அவற்றில் அறிவுகளாகவும் ஞாபங்களாகவும் சேகரமாகியவைகளும், சேகரமாகாதவைகளும் எவ்வளவு? எவ்வளவு? இதில் பொதுவான கணக்கு ஒன்று உண்டு என்பதை அறிந்திருந்தேன். அத்தோடு அந்தக் கணக்கினை மீறய அபூர்வ அனுபவங்களாகவும் என்னிடம் சில இருந்தன.
ஜெயகாந்தன் தன் நண்பர்களோடு உரையாடுகையில் “உங்கள் முதல் அனுபவம் எது சொல்லமுடியுமா?” என்று கேட்பாராம்.
ஜெயமோகனிடம் எனக்கேற்பட்ட துவக்ககாலச் சந்திப்பு ஒன்றின்போது நான் இதே கேள்வியை அவரிடம் கேட்டேன். கேட்டது நல்லதாய்ப் போயிற்று. அவர் ஒரு வயதுகூடக் கூடியிராத சிசுப்பருவத்தில் தான் கண்ட அனுபவத்தையும் ஞாபகத்தையும் பின்னாளில் சம்பந்தப்பட்டவர்களும் அதிர்ச்சியுறும்படி கூறியதையும் உரைத்தார்.
அந்த உரையாடல் நான் தேடிய இடத்தையே வந்தடைந்தது சந்தோஷமாக இருந்தது. என்னுடைய மூன்று அனுபவங்களை நான் இங்கே கூற விரும்புகிறேன். முதலாவதாக; நான் அதிகபட்சமாய்த் தவழும் குழந்தையாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதுவும்கூட ஞாபகம் இல்லை. அதைவிடச் சிறிய சிசுவாகக்கூட இருக்கலாம். தார்சாவிலுள்ள கட்டிலில் என்னைக் கிடத்தியுள்ளார்கள். அந்த வீட்டின் சுற்றுப்புறத்தின் தோற்றமெல்லாம் மிகத் தெளிவாகப் பதிந்துள்ளது மூளையில். மொட்டைத் தலை முழுக்க மொழுமொழுவென்று எண்ணெய். எண்ணெய்க்காக வந்த எறும்புகள் ஆயிரம். அவற்றின் திடீர்க் கடிகளால் நான் அலறுகிறேன். இந்த விஷயத்தைப் பின்னாளில் அம்மாவும் எனக்குச் சொல்ல – பயங்கர நிகழ்வு அல்லவா – அம்மாதான் ஓடிவந்து என்னைத் தூக்கிக்கொண்டு காத்ததைச் சொல்கிறார். இல்லை, அத்தகைய சிசுப்பருவத்தின் ஞாபகம் சாத்தியமில்லை அம்மா சொன்ன நிகழ்வின் அடிப்படையில் பிறந்த மாயத்தோற்றமாகத்தான் இது இருக்க வேண்டும் என்றே பிற்காலத்திய எனது பகுத்தறிவுச் சிந்தனை யோசித்தது என்றாலும் உண்மையாகவும் கிடந்தது. இதே போன்ற இன்னொரு நிகழ்வும் இதை உறுதி செய்தது மட்டுமின்றி அசைக்க முடியாத ஓர் உண்மையாகவும் நிலைத்தது. அதைக் கூறுவதற்குமுன் ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். எனது பெற்றோர், மற்றும் சகோதரிகள், சுற்றம் எல்லோருமே அசைவ உணவுக்காரர்கள்தான். எங்கள் வீட்டின் ஓய்வுநாள் ஞாயிறுதோறும் ஆட்டிறைச்சி உணவு உண்பார்கள். நெடிய நடை நடந்து வெகுதூரம் உள்ள ஒரு கடைத்தெருக்கடைக்குச்சென்று இறைச்சி கொத்தும் அரிவாளையும் இறைச்சியையும், தெறிக்கும் இரத்தத் துளிகளையும் – சமயங்களில் என் முகத்திலும் சட்டையிலும்கூடத் தெறித்துவிடும் – பார்த்தபடி கடைக்காரர் முன்னாலேயே நின்று காத்திருந்து வாங்கிச் செல்வது மிகச்சிறிய வயதிலிருந்தே நான்தான்.
நான் எனது நினைவறிந்த நாளிலிருந்தே மாமிச உணவு எதையுமே அருந்தாதவன் என்பதை யாவரும் அறிவர். இது பற்றிய எந்த எண்ணங்களும் கருத்துகளும் என் மூளையில் கிடையாது. அந்த மாமிச உணவின் மீதும் அதைப் புசிப்பது மீதும் ஓர் இணக்கமும் இல்லாத விலக்கமும் இல்லாத ஒரு மனநிலையில் நான் இருந்தேன். ஒரு ’நல்ல மனநிலை’, ‘அஹிம்சை’ போன்ற எதுவுமில்லை அது என்பது தெளிவாகவே இருந்தது. இது நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டுத்தான் இருந்தது என்றாலும் எதையும் ஆய்ந்து அதன் காரணங்களை இன்னதெனக் காணும் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையே எனது கூர்மையான அறிவாக உள்ள முதிர்பருவத்தின் சிறுவயது அது. அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. எனது எட்டாவது வயதோ, பத்தாவது வயதாகவோதான் இருக்க வேண்டும். வரலாற்றுப்பாடம். ஆசிரியர் உணர்ச்சி பொங்க விவரிக்கிறார், கலிங்கப்போரில் குருதி சிந்த, சிதைந்த உடலங்களுடன் போர்க்களத்தில் விழுந்துகிடக்கும் மனிதர்களைக் கண்ட அசோகன்… அந்தக் காட்சி எனக்குக் கண்கூடாகத் தெளிவாய்க் காண்கிறது மட்டுமின்றி இதற்கு இணையான அதே போலொரு காட்சியும் அப்போது என் நினைவுக்கு வந்தது. பக்கத்துவீட்டு ஒரு சகோதரர் கைக்குழந்தை என்னை மார்பில் வைத்துக் கவனித்துக் கொள்ளவேண்டிய நிலையிலேயே தன் வேலையாக வெளியே வருகிறார். அது ஆடுகள் வெட்டும் இல்லம். அந்த இடத்திற்குள் நுழைகையில் அவர் பாதம் இயங்க இயங்க தோளில் இருக்கும் எனது பார்வைக்கு அலங்கோலமான தோற்றங்களுடன் இரத்தம் சிந்தச் சிதைந்தபடியும், மனிதர்கள் வெட்ட வெட்டத் துடித்து விழுந்தபடியுமான ஆடுகள், அடுக்கடுக்காய்த் தொடர்ந்த ஒரு பெரிய நிலத்தில் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. பிற்காலத்தில் அந்த இடத்தை நான் தூர நின்று பார்க்க நேர்ந்தபோது அது ஒரு சிறிய வீட்டுக்கட்டடத்தில் இரண்டொரு அறைகள் உள்ள அதன் உட்பகுதிதான் என்றிருந்தது.
ஓகோ, இதுதான் காரணமாகி இருக்கிறது என்று தேர்ந்துகொண்டேன் ஒரு பெரிய அறிவாளியாய்.
இன்னும் ஒரு நிகழ்வு: இதுவும் பொதுவாக நினைவு தோன்றியிராத காலத்தின் அபூர்வமான நமது நினைவுகளில் ஒன்றுதான். தார்சாவில் குறுங்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை உருண்டு ஆழமான கீழ்த்தரைக்கு வரும் படிக்கட்டுகளில் மோதிமோதி அதன் வலதுகாலின் மூட்டிலும், மூட்டுக்குச் சற்றே தூரத்திலுமான இரண்டு மிகமிக ஆழமான காயங்கள் – உருண்டது நன்கு நினைவிலுள்ளது – அந்தக் காயங்கள் இப்போதும் தழும்பாக இருக்கின்றன. காட்சிகள் காண்தெளிவுடன் இருக்கின்றன. நான் அந்தப் படிக்கட்டுகளில் கால்களை இளைப்பாற்றி வைத்துக்கொண்டிருக்க தெரு அண்மையிலுள்ள ஒரு நர்ஸ்தான் வெள்ளைச் சீருடையுடன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தொடர்ந்து எனது கட்டுகளை அவிழ்த்து புதிய கட்டுகள் அணிவித்துச் சென்று கொண்டிருப்பார். மறக்கவொண்ணாத அனுபவம் அது. அதே அளவு மறக்க முடியாததுதான் பிற்காலம் ஒன்றில் நடந்ததும். நாங்கள் வீடு வெதுதூரத்திற்கு விலகிப்போய்விட்ட தெரு ஒன்றில் குடியிருக்க வந்துவிட்டோம். அப்போதுதான் வளர்ச்சியடைந்திருந்த நகரத்தின், ஏராளமானவர்கள் பணிபுரியும் பொதுமருத்துவமனைக்கு நானும் அப்பாவும் முதன்முதலாகச் சென்றபோது இங்கேதான் அந்த நர்ஸ் பணிபுரிவதாக அப்பா சொல்ல, நான் அவரைப் பார்க்க வேண்டுமே என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க அழைத்துச் செல்லப்பட்டு அவரைப் பார்த்தேன். எத்தகைய ஒரு பெரிய ஏமாற்றம் நான் அடைந்தது! எத்தகைய துக்கம்! இந்த உலகை நான் அறிந்துகொண்ட இயலா? தாக்கமா? நான் முற்றிலும் எதிர்பாராத முகம் போலிருந்தது அது! உற்சாகமற்று, நலிந்து சலித்த ஒரு வயோதிக முகம்! பணிச்சுறுசுறுப்பிலிருந்தார் அவர், அப்பாவும் தூர இருந்துதான் சுட்டிக்காட்டினார். நானும் தூர இருந்துதான் பார்த்தேன். யாருக்கும் நெருங்கத் தோன்றவேவில்லை.
பொதுவாக நம் நினைவுகளைத்தாம் ‘அனுபவங்கள்’ என்று கூறுகிறோம். (நினைவாகவும் அறிவாகவும் மாறுமுன்னான நிகழ்வை நாம் என்னவென்று சொல்வோம்?) இந்த அனுபவங்களால்தான் உருப்படாமல் போகிறான் மனிதன். மனித வரலாறும்தான். (மனிதனும் மனிதவரலாறும் வேறுவேறா என்ன?) அறிவு என்றும் நாம் இதைத்தான் கூறுகிறோம். அறிவாகவும் நினைவுகளாகவும் மாறும் முன்னான நிகழ்வுகளனைத்தையும் நமது மூளை அறிவாகவே சேமித்துவைத்துள்ளது. இந்த அறிவுக்கு முந்தைய அடிப்படை நிகழ்வையும் நாம் ‘அனுபவம்’ என்றே குறிக்கிறோம். மூளையின் எந்த உறவுகளையும் கொண்டிராத மெய்அனுபவம் அது.
‘நினைவு தெரிந்த நாள் முதலாய்’ என்ற ஒரு சொற்றொடரை நாம் சொல்வதுண்டே. நினைவு, அதைத் தொடர்ந்த சிந்தனைகள், அதைத் தொடர்ந்த செயலும் இருப்பும். இதுதானே நமது வாழ்க்கை. குழப்பமும் துயரமுமான வாழ்க்கை? என்றால் இவை எங்கிருந்து வந்தன? இவற்றின் ஊற்றுக்கண் எது? இங்கேதானே எங்கோ ஓர் இடத்திலிருந்து அது தொடங்க வேண்டும்?
நினைவு தெரிந்த நாட்களுக்கு முந்தைய வாழ்க்கையை நாம் அறிவோமா? நினைவு தெரிந்த நாட்களுக்கு முந்தைய வாழ்க்கை. அதாவது ஒரு சிசுவின்/குழந்தையின் வாழ்க்கை. அது எத்தகையது? அது எவ்வளவு வாழ்ந்தது? எப்படி வாழ்ந்தது? அதன் காலம் எவ்வளவு? காலமற்றது அது என்றால் அது சாமான்யமானதல்லவே. சாமான்யமானதல்ல என்றால், ஒருவேளை இந்த மானுடகுலம் அடையவேண்டிய எல்லையும் எல்லையின்மையுமே அதுவாக இருக்கலாம் எனத் தோன்றுகிறதா உங்களுக்கு?
அந்த அனுபவம் அவ்வப்போது எல்லோருக்குமே கிட்டுவதுதான் என்றால், அதன் பொருள் என்ன? காக்கமுடியாததா, கைப்பற்றவும் கடைப்பிடிக்கவும் முடியாததா அது? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒன்று இல்லாமலிருக்கலாம். நிச்சயமாக, செய்ய வேண்டாததெல்லாம் என்ன என்ன என்று ஒன்று இருக்கிறதை – அதைத்தான் நான் நன்கு அறிந்துகொண்டேன் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன் இங்கே. அதற்கு வேண்டியதெல்லாம் அவ்வப்போது வெற்றுச்சவடால் வார்த்தைகளாய் நாம் சொல்வோமே ‘குழந்தைமை’ ‘குழந்தைமை’ என்று அதுதான் அது.
குழந்தைமை, மிகக் கூர்அறிவுடன் இயங்குவது. கண்ணெதிரே கண்ட காட்சியையே பார்த்தறிவது. தேவைக்கான அனுபவங்களை மட்டுமே நினைவாகப் பதிந்து வைத்திருப்பது. அந்த நினைவுகளையும்கூட நினைவுகளற்ற உளத்தூய்மை கொண்டே செயற்படுத்துவது. குழந்தைமையின் அடித்தளமும் களமும் உளத்தூய்மை எனும் பேரின்மைதாம். நம் அறிவு அறிய வேண்டிய பேருண்மையும் இதுவே. இந்த மெய்யனுபவமே உயிரின் கனல்நிலையை, பேராற்றலை, பேரெழுச்சியைத் தனக்குள் கொண்டிருப்பது. காண்பதையும் காணப்படுவதையும் அறியும் அறிநிலை அது. அறிவு அல்ல; அறிவோ, ஞாபகம் மற்றும் ஞாபகத் தொகுப்புகளாக மாறிவிட்ட நிலையில் அறிநிலையற்ற பயன்படுத்தல்களால் உலகைப் பாழ்படுத்திவிடக்கூடியது. அறிநிலையின் பேரெழுச்சியிலேதான் நம் புலனுணர்வுகளாலான பெருங்களி, பெருந்துயர், வியப்பு, கண்டுபிடிப்பு, படைப்பு எல்லாம் ஓருயிர்போல் தோன்ற இவற்றையே நாம் கவிதை எனக்கொள்கிறோம். குழந்தைமைக்கே உரியது என்கிறோம். கவிதைமூலம் படைப்புமூலம் நாம் சென்றுசேரவேண்டிய இடம் இதுதான். இது மட்டுமேதான். பிற எல்லாமே நம் புலன்அனுபவங்கள்போலும் மேலான ஒரு பொழுதுபோக்காகவே அமைந்துவிடுகின்றன. சமயங்களில் உணர்வுகளை மழுங்கடிக்கும் குப்பைகளாகவும், ஆபத்தான விஷங்களாகவும்கூட.
எல்லாம் சரி. நன்கு புரிகிறது. கலை என்றும் கவிதை என்றும் துறைகளைப் பகுத்தும் தொகுத்தும் படைத்துக்கொண்டிருப்பவர்கள் நாம்தான். மெய்யனுபவத்திலிருந்து வந்தவன் அவ்வனுபவத்தைப் படைப்பாக வடிக்கையில் அவனது அறிவு நினைவுத்தொகுப்பு சிந்தனை முடிவுகளையே சித்திரங்களாகக் காட்டுகிறான். அறிவும், சிந்தனைகளும் சித்திரங்களும் எத்தகைய மனவெழுச்சிதரும் மெய்யனுபவம் இல்லாதவனிடமும்கூடத் தோன்றி படைப்பாக வெளிப்படலாமே. என்றாலும் நல்ல கவிதைகளை – உண்மையை – கண்டுபிடிக்க வழி இல்லாமலா இருக்கும்? ஆனால் ஒருவர் அதனைத் தானேதான் கண்டுபிடித்தாக வேண்டும். தானே கண்டுபிடித்தால்தான் அது உண்மை.
இன்னொரு ஐயமும் கேள்வியும் இருக்கிறது நம்மிடம். கலை மேலான ஒரு பொழுதுபோக்காக இருந்தால் என்ன? நாம் அடைய விரும்பும் வாழ்வின்பத்தைப் போலவே இதுவும் ஒரு சுவைதானே?
அழகும் நியாயமுமான கேள்விதான். பதில், நாம் இந்த வாழ்வை எப்படிப் புரிந்துகொண்டிருக்கிறோம், இந்த வாழ்வோடு எத்தகைய தொடர்பினைக் கொண்டிருக்கிறோம் என்பதைப் பொருத்தது அது. நம் துக்கத்தையும், தாகத்தையும் பசியையும் பொருத்திருக்கிறது அது.
கவிதை அதை நிறைவேற்றுமா? கவிதைதான் அதை நிறைவேற்றும் என்கிறது கவிதையின் மதம். தன்னை விரித்துக்கொள்ளத் தன்னையே அழித்துக்கொண்டு ஒளிர்கிறது கவிதை மட்டுமே. இந்தக் கவிதானுபவத்தையே கண்டவர்; விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்றது ஓர் இதயம். இத்துணை தீவிரமான ஒரு வரியை நாம் வேறெங்குமே கண்டிருக்க முடியாது. கண்டவர் – மெய்மையைக் கண்டுகொண்டவர் – அவ்வனுபவமேயாகிவிடுகிறார். வெளிப்பாடு அவர் வாழ்வு மட்டுமேயாகிவிடுவதால், மொழிவெளிப்பாட்டை ஒரு தன்மய்யம் கொண்ட செயலாகக் கண்டு துறந்துவிடுகிறவராயிருக்கிறார். முயன்று பார்க்கிறார் அவ்வளவுதான்.
விண்டவர் கண்டிலர் என்னும் சொற்கள்தாம் மிகப்பயங்கரமாக ஒலிக்கக் காண்கிறோம். சொற்களை உதிர்ப்பவனை ஐயத்துடன் பார்ப்பது மட்டுமின்றி இவன் மெய்யானவனே இல்லை என்ற நிலைக்கு ஓங்கி அறையவும் துணிந்துவிடுகிறது அது. இந்நிலையில் கவிதையை நாம் ஒரு வெளிப்பாட்டுத்துறையாகத்தான் கொண்டிருக்கிறோம் என்பதை மிகுந்த அடக்கத்துடன் உணர்ந்து கொள்ளவேண்டியவர்களாகவே இருக்கிறோம், இல்லையா?
0
அனுபவம், கவிதை ஆகியவை குறித்து சிங்கப்பூர் அரங்கத்திலும், அதற்குச் சற்று முன்னரே விஷ்ணுபரம் விருது மேடை ஒன்றிலும் பேசிய ஒரு விளக்கமும் படிமமும் முக்கியமானது. அதற்கு முன்னும் பின்னுமாக வெளிப்பட்ட இரண்டு கவிதைகளை இத்தோடு இணைத்திருக்கிறோம்.
‘அனுபவத்’தின்போது எந்த எண்ணங்களும் இல்லை –எண்ணங்களற்ற ஒரு வேளையில்தான் ‘மெய்யனுபவம்’ கூடுகிறது. அழகின் ஈர்ப்பு, ஒரு திகைப்பு, இன்பம், வலி ஆகிய எந்தச் சொற்களில் சொன்னாலும், இன்னும் எத்தகைய புனைவுகளால் படைத்தாலும், அது கூறுபவனின் எண்ணங்களையும் ஆளுமையையுமே சுட்டிவிடுகிறது. ஆனால் ஒரு கவிஞனிடம் உள்ள எண்ணங்கள் எதுவுமே அவனது மெய்யனுபவத்திலிருந்துதான் சேகரமாகியிருக்கும் என்று வைத்துக்கொண்டு நாம் ஏற்றுக்கொள்கிறோம், வேறுவழியின்றி. இதில் பொய்மையும் பாவனைகளும் கலந்துவிட ஏராளமான வழிகளுமிருக்கின்றன என்பது நாம் அறிந்ததே. இதன் காரணமாகவேதான் ஓர் அசல்தன்மையை, நம்பகத்தன்மையைத் தேடுவதும் ஆராய்வதும் நேர்கிறது. இந்த அசல்தன்மை அந்தக் கவிஞனின் பிறபிற கவிதைகளாலும் அவனுடைய ஆளுமையாலுமே கண்டடையப்படுகிறது. அதற்கு ஒரு நெடிய வாசிப்பு தேவை வாசகனுக்கு. இதன் மூலமேதான் கவிஞனும் வாசகனும் உறவாகிறார்கள். உறவுதானே வாழ்வும் உயிரின் இயக்கமும். இவ்வாறுதானே நிகழ முடியும் கவிதையனுபவம்?
கீழே காணும் இரு கவிதைகளுக்கும் முன்னுள்ள அனுபவம் என்னவாக இருந்திருக்கும்? அது ஒரு மெய்யனுபவமாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்ற நிலையில் ஓர் இன்மைப் பெருவெளியைத்தானே நாம் காண்கிறோம்? இல்லையெனில் அவற்றின் பெருமதி என்ன? கேள்வியை அறிபவர்கள் அதன் பதிலையும் தாங்களே அறிந்துகொள்ள முடியும் அல்லவா?
முடிச்சு
ஓ, இங்கேயும் ஓர் இடமிருக்கிறதா
என எட்டிப்பார்த்துவிட்டு
ஏனோ போகாமல் திரும்பிக்கொண்டது
மரக்கிளையினின்று
சிறகு விரிக்க இருந்த பறவை ஒன்று.
வீதியில்
வெளிகாட்டி வெளி திளைத்தவாறு
நடந்து செல்கிறாள் ஒரு பெண்.
வானம் வெளிப்பட
அவள் தோள்களை அணைந்த ஆடையின்
விளிம்புகளை இணைத்த
அந்தக் கயிற்று முடிச்சேதான்
இப்போதைய பிரச்சனையா?
நட்ட நடுவில்
கால்மேல் கால்போட்டமர்ந்தபடி
முடிவிலா உலகப் பெரும்
புரட்சியையே முடித்துவிட்டதுபோல்
தன் அழகு குறித்து
அது காட்டும் பவிசும் பெருமிதமும்தானா
ஒரு கணம் அதைப் பார்க்க நேர்ந்த
அவனிடம் அப்படி ஒரு
புன்னகையைக் கொளுத்திற்று?
0
அகலத் திறந்த முதுகு
அழகாயிருக்கிறதா?
நான் சென்றாலும்
என்னைப் பார்த்துக்கொண்டே
இருக்க வேண்டும் நீங்கள்.
என் முதுகும் உங்களைப்
பார்த்துக்கொண்டே இருக்கும்
நான் உங்களைப்
பிரியமாட்டேன் என்பதை
வேறெப்படிச் சொல்ல?
தன் முதுகைத் தான் அறிந்தோரால்
இயற்றக் கூடியதுதானே இது?
ஆண்களின் அகன்ற
மார்பினுக்கிணையானதில்லையா இது?
எனக்குத் தெரியும்
எங்கள் முகத்தை
நிலவென்றும் தாமரையென்றும்
பாராட்டிய நீங்கள்
ஒளிரும் விண்ணளவு விரிந்த அகம் என
இதனையும் பாராட்டுவீர்கள் என.
நான் எனது ஆணின் மார்பில்
தலைசாய்க்கையில்
என்னை அரவணைக்கும் அவன் கரங்கள்
இளைப்பாறும் இடம் இது.
அழிவில்லாத அன்பின்
அந்த எழிற்தலம்
பின்னுள்ளதும் பின்தொடர்வதும்
எனச் சொல்லக்கூடிய
கடந்தகாலமோ எதிர்காலமோ அல்ல
நாம் யாவருமே கண்டுகொண்டதும்
காலத்தால் இயற்ற முடியாமலிருப்பதுமான
இந்த நொடியே
என்பதைத்தான் சுட்டுகிறதில்லையா?
0
நன்றி: சுடலைமுத்து
தேவதேவன் எழுதும் ‘கவிதையின் மதம்’ கட்டுரைத்தொடர்:- கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்
- கவிதையின் மதம் 11: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்றுவிடற்கு
- கவிதையின் மதம் – 10: அடையாளங்களும் அதன் விஷப்பயிர்களும்
- கவிதையின் மதம் – 9: கடவுள்தான் உன்னைக் காப்பாற்ற வேண்டும்
- கவிதையின் மதம் – 8: காதலும் எண்ணங்களும்
- கவிதையின் மதம் – 7: வாழ்வின் நடனமும் பரலோக ராஜ்ஜியமும்
- கவிதையின் மதம் – 6: இரண்டு சாலைகள் பிரிந்தன ஒரு மஞ்சள் வனத்தில்
- கவிதையின் மதம் – 5: திக்குத் தெரியாத காட்டில்…
- கவிதையின் மதம் – 4: மெல்லிய அசைவுகளும் பயங்கொள்ளி அசைவுகளும்
- கவிதையின் மதம் – 3: குழந்தைமையும் மேதைமையும்