சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறந்த கதைகளுக்கு தலா ரூ 10000/- [பத்தாயிரம் ரூபாய்] பரிசு வழங்கப்படும். அரூவின் ஏப்ரல் இதழில் வெற்றிபெறும் கதைகளும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கதைகளும் வெளியாகும். இக்கதைகள் அடுத்த ஆண்டு புத்தக வடிவிலும் வெளியாகும்.
தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு சிறுகதைகளில் ஒன்றுக்குப் பரிசை வழங்குபவர் சிங்கப்பூர் ஆர்யா கிரியேசன்ஸ். இவர்களின் Facebook பக்கம் — https://www.facebook.com/Aaria-Creations-516084735569981/
சென்ற ஆண்டு அரூ நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை எழுதியவர்களிடம் அவர்களுக்குப் பிடித்தமான அறிவியல் புனைவு சிறுகதை எதுவென்று கேட்டோம், இவ்வாண்டு போட்டிக்கு எழுதுபவர்களுக்கு உதவக்கூடும் என்கிற எண்ணத்தில். அவர்கள் கொடுத்த பரிந்துரைகள் இதோ.
(‘ம்’ சிறுகதை எழுதியவர்)
என் மனதிற்கு நெருக்கமான அறிவியல் புனைகதை ஜெயமோகனின் விசும்பு, எத்தனை பேரிடம் இக்கதையைக் கூறியிருப்பேன் என்று தெரியாது. எனக்குள் நானே பேசிக்கொள்வதைப் போல மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டிருக்கிறேன்.
பறவைகள் வலசைப் போவதைப் பற்றிய கதை இது. அதுமட்டுமல்லாமல் மனிதனுக்கும் இயற்கைக்குமான போராட்டத்தின் கதையும்கூட. உலகில் எழுதப்பட்ட அத்தனை அறிவியல் புனைகதைகளும் திரும்ப,திரும்ப கூறிக்கொண்டிருக்கும் மையமும் இதுதான். டாக்டர் நஞ்சுண்டராவ் என்ற மையக் கதாபாத்திரம் இயற்கையுடன் ஒரு மோதலில் ஈடுபடுகிறார். இயற்கையை ஆராதிக்கும் அவரின் தந்தை கருணாகரராவ் இதை எதிர்க்கிறார். “காளைச்சாணம்” என்ற வார்த்தையின் மூலமாகத் தன் தந்தையைக் கடந்து செல்கிறார் நஞ்சுண்டராவ். அவருக்கு இயற்கையுடன் வரையறுக்கப்பட்ட ஒரு வெற்றியும் கிடைக்கிறது. வரையறுத்ததும் இயற்கையே.
கதையின் முடிவில் குரலே எழாத பாத்திரமாகிப் போகிறார் நஞ்சுண்டராவ். ஆதிகாலம் முதல் மனிதன் தன் சிற்றறிவின் மூலமாக இயற்கையை வென்றுவிட்டதாகவும், அடக்கி ஆண்டு கொண்டிருப்பதாகவும் எண்ணிக்கொண்டிருக்கிறான். தான் தோன்றியதே இயற்கையின் தோல்வியைப் பறைசாற்றுவதாகப் பிதற்றுகிறான்.
கதையில் கதைசொல்லியாக வரும் அந்த மானேஜரின் கடைசி வரிகள் “என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்”.
(அவன் சிறுகதை எழுதியவர்)
எனக்குப் பிடித்தமான அறிபுனை வில்லியம் கிப்சனும் ஜான் ஷர்லியும் இணைந்து எழுதிய பிலாங்கிங் கைண்ட் (The Belonging Kind). இது வெறும் அறிபுனை மட்டுமல்ல. சமூகத்தோடு இயைந்து வாழ்வதற்காகத் தன் சுயத்தை இழக்கும் மனிதர்களைப் ப்ற்றிய கதையும்கூட. வேறுபாடுகளே அற்ற ஒற்றைப்படையான சமூகங்களை உருவாக்க விழையும் போக்கும், இந்த மற்றவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள ஊக்குவிக்கும் உலகமயமாக்கலும் உலகெங்கிலும் பரவிக் கொண்டிருக்கும் இன்றைய காலங்களில் இந்தக் கதை மேலும் பொருள் பொதிந்ததாகிறது.
(மின்னெச்சம் சிறுகதை எழுதியவர்)
ஜெயமோகனின் உற்றுநோக்கும் பறவை இப்போதைக்கு மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. வேலையின் காரணமாக எழுத விரும்பும் எதையும் எழுதவியலா சபிக்கப்பட்ட மனநிலையில் இருக்கிறேன். என்னை இரண்டாகப் பிளந்து பிழைப்புக்கு ஒருத்தனையும், எழுத ஒருத்தனையும் வைத்துக்கொள்ள முடியுமா என்று காலன் சாமியைக் கேட்க விரும்புகிறேன்.
(கோதார்டின் குறிப்பேடு சிறுகதை எழுதியவர்)
எனக்குப் பிடித்த அறிவியல் சிறுகதைகள் பல இருந்தாலும் இங்கு ஒன்று மட்டுமே குறிப்பிடப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். நான் விரும்பும் அறிபுனைவுகள் எத்தகையவை என்பதை முதலில் குறிப்பிட விழைகிறேன்.
அறிபுனைவு வகைமையில் பல கதைகள் மானுட உணர்வுகளை முக்கியச் சாரமாக எடுத்துக் கொள்ளாமல் தொழில்நுட்ப நுணுக்கங்களையே மையமாக வைத்துக்கொண்டு வித்தைகள் காட்டும் பழக்கத்தில் இறங்குவதுண்டு. அவற்றில் இல்லாமல் போய்விடுகின்ற செறிவு அதை இலக்கியமற்ற படைப்பாக்கிவிடுகிறது. ஆனால் சில கதைகள் அறிவியல் புனைவினை இயல்பான இருப்பின் மீறலாகப் பயன்படுத்திக்கொண்டு அங்கிருந்து உந்தி எழுந்து மானுட மனத்தை ஆராய்வதுண்டு. இது கதையின் உணர்வுகளுக்குப் பல மடங்கு உருப்பெருக்கத் தன்மையை அளிப்பதோடு இதுவரை சஞ்சரிக்காத தளங்களில் பயணிக்கும் பரவசத்தையும் ஒருசேர தருகிறது.
அப்படி வில்லியம் டென் எழுதிய Time in Advance என்ற சிறுகதை சில வருடங்களாக என் மனதில் நிலைத்துவிட்ட சிறுகதைகளுள் ஒன்று. மனிதக் குற்றங்களையும் அதற்கான மனத்தயாரிப்புகளையும் அதிலிருந்து விலகிச் செல்வதற்கான முனைப்புகளையும் தீப்பொறியாகப் பல இடங்களில் சிறப்பாக எழுதியிருப்பார் ஆசிரியர். இந்தக் கதையின் கோணங்களை விரிவுபடுத்தி இன்னும் ஒரு அழகிய நாவலை உருவாக்கி இருக்கலாமே என்று தோன்றியது. காலத்தை எண்ணங்களுக்குள் எடுத்துச் செல்வதும் அதை ஒரு கட்டுக்குள் வைத்து அசைபோடுவதும் இந்தக் கதையின் பிண்ணனியில் நிகழ்ந்திருக்கிறது. அதன் மூலமே மனிதனின் இருப்பை, அவன் தவிப்பைக் கேள்விக்குள்ளாக்க முடியும். கடவுளின் முன் தன் பாவங்களை முன்வைப்பவர்கள் தன் மரணத்தின் மீதான பயத்தினாலேயே அதைச் செய்கிறார்கள். வழிபடுதல் மரணத்தின் தோட்டத்தில் விளைந்த அழகிய மலர் அவ்வளவே! இதை விறுவிறுவெனச் சொல்லி இருப்பது மகிழத்தக்கது. வாசித்துப் பாருங்கள்.
(மூக்குத் துறவு சிறுகதை எழுதியவர்)
2009ஆம் ஆண்டு தமிழ்மகன் எழுதிய ‘கிளாமிடான்’ சிறுகதை முதல் வாசிப்பிலேயே என் மனத்திற்கு மிக நெருக்கமான உணர்வை உருவாக்கியது. சுஜாதா அறிவியல் புனைவு போட்டியில் முதல் பரிசு பெற்றக் கதை இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அறிவியல் வளர்ச்சியின் ஊடாக மனிதர்கள் தாவரங்களாக்கப்படும் பரிணாமம் பற்றிய கதைக்களத்தைத் தொட்டு எழுதியிருப்பார்.
கிளாமிடானோஸ் என்கிற ஒரு ‘செல்’ சூரிய ஒளியின் மூலம் மட்டுமே இயங்கி ஸ்டார்ச் தயாரிக்கக்கூடிய ஒன்றாகும். இதனைக் கிராமத்தில் வசிக்கும் மனிதர்களின் உடலில் செலுத்தி சூரிய ஒளியால் மட்டுமே அவர்களை இயக்கி இலாபமடைய நினைக்கும் மனிதத்திற்கு எதிரான செயலைக் கதாசாரியர் காட்சிப்படுத்தியிருப்பார். அப்படிக் கிராமத்திலிருந்து நகரத்திற்கு அனுப்பவிருந்த விளைபொருள்களுடன் லாரியில் தூங்கிவிட்டதால் கிளாமிடன் என்பவன் (சிறுகதையில் அவனுக்குப் பெயரில்லை) நகரத்திற்கு வந்து சிக்கிக் கொள்கிறான். நகரத்தில் இருக்கும் மருத்துவர் எழிழரசு அவனை விசாரித்துக் கிராமத்தில் நிகழும் இயற்கைக்குப் புறம்பான செயல்களை அறிவதாகக் கதை நிறைவு பெறுகிறது. அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் இடையில் மனித இருப்பு இச்சிறுகதையில் கேள்விக்குள்ளாக்குகிறது. ஆனால், அதே புள்ளியில் கதை முடிந்தும் விடுகிறது. இப்பிரச்சனைக்கான தீர்வையோ அல்லது அதனையொட்டி எதிர்காலத்தில் நடக்கப்போகும் சம்வங்களையோ சிறுகதை விளக்க முனையவில்லை. அறிவியலின் புறத்தாக்கங்கள் மனித இருப்பிற்குள் ஏற்படுத்தும் சலனத்தை மட்டுமே பதிவு செய்கிறது.
அறிவியல் புனைவுக்கு இத்தகைய கச்சிதம் அவசியம் என்றே மறுவாசிப்பில் தோன்றியது. அறிவியல் விளக்கங்களை மட்டுமோ அல்லது அறிவியலால் வாழ்க்கையில் ஏற்படும் புற மாற்றங்களைப் பற்றியோ சொல்வது அறிவியல் புனைவல்ல. அதையும் தாண்டி அறிவியலின் ஊடாக வாழ்வியலைத் தர்க்கிப்பதும் அல்லது வாழ்வினூடாக அறிவியல் கோட்பாடுகளை விமர்சிப்பதும்கூட நல்ல அறிவியல் புனைவுகள்தான் என்று இச்சிறுகதையின் வாயிலாக உணர ஒரு வாய்ப்பும் கிடைத்தது.
(நிறமாலைமானி சிறுகதை எழுதியவர்)
அறிவியல் என்பது ஒரு துறை என்றால் அதன் பகுத்தாய்தலும், கற்பனாவாதமும் பெரும்பாலும் கதையைப் போலவே புரிந்துவைத்திருக்கிறேன். பெரும்பாலும் நம்மைச் சுற்றி நிகழும் சாதாரண கணங்களோடு ஒப்பிட்டே பல இறுகிய கருத்துருக்களைப் புரிந்துகொண்டேன். அதன் அடிப்படையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக எதேச்சையாக வாசித்த புத்தகமே H.G.Wells ன் The Time Machine. (அர்ஜெண்டிய எழுத்தாளரான போர்ஹெஸ் வாசிக்க வேண்டிய எழுபத்தைந்து புத்தகங்களில் இதையும் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.) கிட்டத்தட்ட அறிவியலின் பின்புலத்தைக்கொண்ட அணுகுமுறையும் ஒரு கதைக்கான சொல்முறையோடு கச்சிதமாய்ப் பொருந்திய நாவல். அதாவது உரைநடையில் சில சமயம் கதைசொல்லியின் முன்முடிவுகளும் கண்டுபிடிப்புகளும் வெளிப்படுவதற்கு அக்கதையில் வரும் உரையாடல் எந்தளவிற்குப் பயன்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டதும் இந்த நாவலில்தான்.
அதில் ஓரிடத்தில் காலப் பயணம் பற்றிய விளக்கம் இன்னமும் நினைவிலுள்ளது.
ஒரு புள்ளி என்பது ஒரு பரிமாணம். ஒரேயொரு அளவுகள் கொண்டது. அந்தப் புள்ளியைப் பக்கவாட்டில் இழுத்து அகலமாக்கினால் கிடைப்பது ஒரு கோடு அதாவது நீளமும் அகலமும் இணைந்துகொண்டதால் அது இரு பரிமாணம். அதேபோன்று எந்தவொரு பொருளுக்கு நீளம், அகலம் மற்றும் உயரம் போன்ற அளவீடுகள் உள்ளனவோ அவற்றை முப்பரிமாணப் பொருட்கள் எனலாம். அந்தவகையில் அப்பொருளின் இன்றைய தேதியிலிருக்கும் வயதும், ஒரு நூறாண்டுகளுக்குப் பின்புள்ள வயதும் ஒன்றல்லவே? இவ்வாறு காலமாற்றத்திற்கு உட்படும் எதுவும் காலப் பயணத்திற்கு உட்பட்டதே. கிட்டத்தட்ட மனிதர்களாகிய நாம் அனைவரும் ஒருவகையில் காலப் பயணத்தில்தான் இருக்கிறோம் என்பதையே அந்தக் கதையின் அர்த்தங்களிலிருந்துதான் புரிந்துகொண்டேன். அந்தவகையில் காலம் முன்னோக்கியதைப்போலவே, பின்னோக்கிய காலத்திற்கான தேடுதலே காலப் பயணத்தில் உள்ள பெரும் ஆராய்ச்சிகளுக்கான இடமாகும்.
முன்புகூறிய நீளம் அகலம் போன்று கிட்டத்தட்ட காலத்தை ஓர் அளவீடாக மாற்றி அதன் வேகத்தை யோசித்து, அளவு மதிப்புகளை அதிகமாக்கவோ அல்லது குறைக்கவோ முயலும் ஒரு குழுவினரின் கதை. கச்சிதமாக மிக எளிமையாக இதைப் புரியவைக்க “கார்ட்டீசியன் ஆய அச்சுகளைக்” கொண்டு விளக்க முயன்றிருப்பர். கிட்டத்தட்ட இவையாவும் நாவலில் வரும் ஓர் உரையாடல் போன்ற பகுதியில் வருபவை. நாவலில் வரும் இதர பகுதிகள் மறந்துபோனாலும் நான்கு வருடத்திற்கு பின்பும் இப்போதும் அந்த Concepts நினைவிலுள்ளது. இதை அப்படியே தழுவி சுஜாதா தன் கதையில் எழுதியிருப்பார் (சுஜாதாவின் விஞ்ஞானக் கதைகள் – உயிர்மெய் பதிப்பகம்). ஆனால் சுஜாதாவின் கதைகள் அறிவியலையும் மூடநம்பிக்கைகளையும் ஒன்றாகக் குழப்பிக்கொள்கிறது என்பது எனது எண்ணம்.
அறிவியல் என்பது இன்னொரு துறை. அதிலிருந்து பெறப்படும் சிந்தனைகள் பெரும்பாலும் ஒருவகை உத்தியே. அதைக்கொண்டு ஒரு நாவலுக்கான கதைகூறும் முறையினை வேண்டுமானால் தேர்வுசெய்யலாம் அல்லது கதையின் மையக்கருவைக் கண்டறியலாம். ஆனால் ஒட்டுமொத்த உத்தியே கதையாக மாறிவிடாதபடி சமமான தன்மையில்தான் ஒரு புனைவு என்பது இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்ட பாலபாடமும் அதுதான்.
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…