நேர்காணல்

நேர்காணல்: கவிஞர் இசை

7 நிமிட வாசிப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவிற்கு வருகை தந்து, “பெரிய சித்தாந்தங்களின் துண்டான காட்சிகளையே அன்றாடத்தில் காண்கிறோம்,” என்று சொன்ன கவிஞர் இசையிடம் சில கேள்விகள்.

சுயபகடி என்பது உங்களளவில் என்ன?

எனக்கு அது உண்மையை நெருங்குவதற்கான குதூகலமானதோர் எளிய வழி.

‘பகடி எழுத்தாளர்’, ‘பகடியில் பாய்விரித்துப் படுப்பவர்’ போன்ற பட்டங்களைச் சுமையாக உணர்கிறீர்களா?

ஆம்… சமயங்களில் அது சுமைதான். நான் இதயத்தை அறுத்து டேபிளில் வைத்தாலும் அதை எடுத்துப் பார்த்துவிட்டு, “வாவ்.. பகடியான இதயம்!” என்று சொல்லும் சில வாசகர்களை நான் சந்தித்துவிட்டேன். என்னால் வாசகர்களைச் சிரிக்க வைக்க முடிந்திருக்கிறது. சமயங்களில் கண்ணீர் சிந்த வைக்கவும் முடிந்திருக்கிறது. சிரித்துக்கொண்டே அழ வைப்பதும் இயன்றிருக்கிறது. சிரிப்பிற்கும் அழுகைக்கும் அப்பால் உள்ள விசயங்களை நான் தொடும்போது அவன் கொஞ்சம் குழம்பிப் போகிறான் என்று நினைக்கிறேன்.

சதா அபத்தங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கும் இந்த வாழ்வைக் காண நேரும் ஒரு நுண்ணிய மனம் கொண்ட எழுத்தாளனால் அதைப் பகடி செய்யாமல் இருக்க இயலாது. சிலர் அதை வேறொன்றாக்கிவிடுகிறார்கள். சிலர் அடக்கி வாசிக்கிறார்கள். சிலர் வெடிச்சிரிப்பு சிரிக்கிறார்கள். சமயங்களில் நான் அப்படி வெடிச்சிரிப்பு சிரித்துவிடுவதால் இப்படிப் பட்டங்களைத் தூக்கிச் சுமக்க வேண்டியுள்ளது. “எழுத்தாளன்” என்று ஓர் உயிரினம் உண்டு. “பகடி எழுத்தாளன்” என்று உயிரினம் எங்கும் வாழ்ந்து வருவதாகத் தெரியவில்லை.

எளிய வாகர்களுக்காக எழுதப்படும் கவிதைகளுக்கும், தீவிர வாசகர்களுக்காக எழுதப்படும் கவிதைகளுக்குமான இடைவெளியைப் பகடியைக் கொண்டு சமாளிக்கிறீர்களா?

நான் எழுதும்போது என் முன்னே ஒரு வாசகன் இருக்கிறான். அது உண்மை. ஆனால் அவனது அங்க அடையாளங்களை வைத்து அவன் எளியவனா? வலியவனா? என்று என்னால் பிரித்தறிய முடிவதில்லை. என் கவிதைக்குள் வந்திருக்கும் வெகுஜனக் கூறுகள் அந்தப் பிரதியின் அழகியல் கோரி நின்றதால் வந்தவையே ஒழிய வாசகனைச் சமாளிக்கவோ, கிளுகிளுப்பூட்டவோ சேர்க்கப்பட்டவையல்ல. தவிர கிளுகிளுப்புக்குப் பஞ்சமான காலமா இது? போயும் போயும் துரதிர்ஷ்டம் பீடித்த ஒரு கவிதைக்குள் வந்துதான் அவன் கிளுகிளுப்பாக வேண்டுமா என்ன?

அப்புறம் நீங்கள் சொல்வது போல நான் “இடையில்” இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் எளிய வாசகன் தீவிர வாசகனாக மிரட்டத் துவங்கும் “இடைவேளைப் பொழுதாக” இருப்பதில் வருத்தமொன்றுமில்லை. மகிழ்ச்சியே. அப்படிச் சிலரை நான் இலக்கியத்திற்கு இழுத்து வந்திருக்கிறேன் என்றால் அதற்காக இலக்கிய உலகம் என்னை உரிய முறையில் விழா எடுத்து கெளரவிக்க வேண்டும்.

மீம்களால் சூழப்பட்ட தற்காலத் தமிழ்ச்சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்? மீம்களால் பகடிக் கவிதைக்கு ஆபத்து வந்திருப்பதாகப் பேசிக்கொள்கிறார்களே?

மீம்களும், பகடிக் கவிதையும் நகைச்சுவை என்கிற உணர்வை தோற்றுவிப்பவை என்பதாலேயே இரண்டும் ஒன்றாகிவிட முடியாது. கவிதைக்கு அதற்கான ஆழங்கள் உண்டு.

“நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?” என்கிற பொன்னெழுத்துகளின் கீழே கால்களை அகட்டியபடி மல்லாந்து கிடக்கிற வடிவேலுவின் மீம் எனக்கு ரொம்பவும் பிடித்தது. நமது லட்சிய புருஷர்களின் வீழ்ச்சியைத் துல்லியமாகச் சொல்லிவிட்ட ஒரு மீம். அப்படித் துல்லியமாகச் சொல்லிவிட்டதால் அது ஒரு மிகச்சிறந்த மீம். அப்போதும் அது கவிதையல்ல. கவிதைக்கென்று அதற்கான அமைதியும் ஒழுங்கும் உண்டு. நீங்கள் என்ன ஆட்டம் ஆடினாலும் அதற்குள்தான் ஆட வேண்டும். ஒரு நல்ல மீம் கவிதைக்கான தோற்றுவாயாக இருக்கக்கூடும். அதுவே கவிதையல்ல. எதிலிருந்தும் கவிதைகள் தோன்றலாம் என்பது போல மீம்களிலிருந்தும் தோன்றலாம். அதில் பிழையில்லை.

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

மீம்கள் குறித்து எனக்குச் சில குழப்பங்கள் உண்டு. அவை நமது காலத்தின் கொந்தளிப்புகளைக் கூட்டுகிறதா அல்லது குறைக்கிறதா என்பது ஒரு அடிப்படையான குழப்பம்.

கவிதை சார்ந்து வெளியிடப்படுகிற “மனோ ரெட்” டின் சில மீம்கள் சுவாரஸ்யமானவை.

உங்கள் கவிதைகளை எப்படி எடிட் செய்கிறீர்கள்? கவிதை வெளியிடத் தயாராகிவிட்டது என்பதை எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?

என் கவிதைகள் எதுவும் பேப்பரில் எழுதப்படுபவையல்ல. அவை மனதிற்குள்ளேயே எழுதப்பட்டு அங்கேயே எடிட் செய்யவும் படுபவை. டைப் பண்ணும் போதும் சில மாற்றங்கள் நிகழும். பெரும்பாலான கவிதைகள் ஒரு சிறு நட்பு வட்டத்தின் பார்வைக்குப் போய் வரும். அந்த வட்டம் காலத்தில் மாறி மாறி அமையும். இப்போது சுகுமாரன், ஷங்கர் ராம சுப்ரமணியன், சாம்ராஜ், ஏ.வி.மணிகண்டன், விஷால்ராஜா ஆகியோர் அந்த வட்டத்தில் உள்ளார்கள். இவர்கள் என் கவிதைப் பயணத்தில் மதிப்பு மிக்க பங்களிப்பைச் செய்து வருபவர்கள். கொஞ்சம் ஆபத்தான ஆட்டங்களை ஆடுபவன் என்பதால் என்னை நிதானிக்கச் செய்ய இவர்கள் அவசியப்படுகிறார்கள். இவர்களில் யாரேனும் இருவருக்குப் பிடித்துவிட்டால் கவிதை வெளியிடத் தயாராகிவிட்டதென்று அர்த்தம்.

எடிட் செய்துகொண்டே இருப்பது என் வழக்கம். சில கவிதைகளைத் தொகுப்பிற்கான இறுதி வடிவில்கூட எடிட் செய்திருக்கிறேன். தலைப்புகளைக்கூட மாற்றியுள்ளேன்.

“பொதுவாக எழுத்து துயரத்திற்குத்தான் காது கொடுக்க விரும்புகிறது. மகிழ்ச்சியிடம் அதற்கு சோலி குறைவுதான்” என்று ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறீர்கள்? காதல், மகிழ்ச்சி, நிறைவு ஆகிய உணர்வுகளிலிருந்து தீவிரத்தன்மை வாய்ந்த எழுத்துகள் பிறக்க வழியில்லையா?

ஒருவிதப் பகிர்தலுக்கான தேவையிலிருந்துதான் எழுத்து பிறக்கிறது. நீங்கள் சொல்கிற “நிறைவில்” அதற்கான தேவையில்லை என்றே நினைக்கிறேன். அவனுக்குத்தான் நிறைந்துவிட்டதே.. “பிறகேன் நள்ளிரவு பணிரெண்டு மணிக்கு அவன் சுடுகாட்டுக்குப் போக வேண்டும்”. காதல், மகிழ்ச்சி இரண்டிலும் கொந்தளிப்பான நிலை என்று ஒன்று உண்டு. அது எழுத்துக்கானதுதான். அப்புறம் இதெல்லாம் பேசிப்பார்ப்பதுதான் திட்டவட்டம் என்றில்லை. நானே கூட சோலி குறைவு என்றுதான் சொல்லியிருக்கிறேன். நான் கண்ட அளவில் பல எழுத்தாளர்களின் டிசைன் அப்படித்தான் இருக்கிறது. விதிவிலக்கான டிசைன்களும் இருக்கலாம்.

ரூமியின் காதல் கவிதைகளில் தென்படும் ஆனந்தக் கூத்தை இழப்பின் துக்கதிலிருந்து பார்க்கையில் அதிகம் உணர முடிகிறது என்னால். இன்று இணையத்தில் ஒரு ஜப்பானிய எழுத்தாளரின் வரியொன்றை வாசிக்க நேர்ந்தது “எந்த மலரும் அருகிலிருக்கும் மலருடன் போட்டியிட விரும்புவதில்லை. மலர மட்டுமே செய்கிறது”. இந்த வரிகளை என் பொறாமையின் நரகத்திலிருந்து நான் மேலதிகமாகப் புரிந்துகொள்கிறேன். என் டிசைன் அப்படி.

திருக்குறளில் காமத்துப்பாலிற்குத் தற்போது உரை எழுதிவருகிறீர்கள். அதில் பல இடங்களில் குறுந்தொகையை மேற்கோள் காட்டுகிறீர்கள். குறுந்தொகை மற்றும் காமத்துப்பால் மீது ஈர்ப்பு ஏற்பட்டது ஏன்?

நான் அடிப்படையில் ஒரு கவி. உரையாசிரியன் அல்ல. அது என் வேலையல்ல. ஆனால் காமத்துப்பாலை வாசிக்கையில் பல இடங்களில் பரவசத்திற்குள்ளானேன். அந்தப் பரவசத்தை என்ன செய்வதென்று தெரியவில்லை. காமத்துப்பால் குறித்து விரிவான ஒரு கட்டுரை எழுதினேன். அப்படியும் அந்தக் கவிதைகள் மீதான தவிப்பு அடங்கிவிடவில்லை. எனவே வேறு வழியின்றி உரையாசிரியர் வேடம் புனைய வேண்டி வந்துவிட்டது. தவிர குறளில் காமத்துபாலில்தான் “கவிதைகள்” அதிகம் என்று நினைக்கிறேன். அதற்கு உரை சொல்வதே சவாலானது.

குறள் போன்ற ஒரு பேரிலக்கியத்திற்கு இது போன்ற பல உரைகள் தேவை என்றே எண்ணுகிறேன். எந்த உரையும் முற்றான இறுதியல்ல. அவை தொடர்ந்து விவாதிக்கபட வேண்டிய, கூராக்கப்பட வேண்டிய ஒன்று. ஆர்வமுள்ள எல்லோரும் முயலலாம்.

குறளிற்கான உரைகள் பலதையும் வாசிக்கையில் ஒரு விதப் போதாமையை உணர்ந்தேன். குறளின் அழகில் அமைதியில் பாதிகூட உரையில் வரவில்லை. கவிதையை அப்படிப் பெயர்ப்பது சிரமம்தான். ஆனால் நாம் அதிகப்படியாக முயல வேண்டும். இன்றுள்ள உரைகள் பலதும் அர்த்தம் சொல்கின்றன. கவிதை அந்தக் கெட்டிதட்டிய அர்த்தத்தோடு தீர்ந்து விடுவதில்லையே. பல உரைகள் கவித்துவமான சொற்களுக்குக்கூட முயல்வதில்லை என்பதைக் கண்டேன். எனவே குறளிற்கு நான் என்னளவில் கொஞ்சம் பங்களிக்க விரும்பினேன். அது பயனுள்ள பங்களிப்புதானா என்பதை உரை நூல்வடிவு கண்டதும் முழுக்க வாசித்துவிட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

சில உரைகள் குறளைப் போன்றே இரண்டு வரியோடு சுருங்கிவிடுகின்றன. சில பக்கம்பக்கமாக விளக்கிச் சொல்கின்றன. நான் இரண்டிற்குமிடையே ஒரு கச்சிதத்ததை உருவாக்க முயல்கிறேன். “கவிதையியல்” சார்ந்து பேச விரும்பும் இடங்களில் பேசுகிறேன். முடிந்த அளவு கவித்துமான சொற்களால் உரையைக் கோர்க்க முயல்கிறேன். சில குறள்களை அதன் அதிகாரத் தளையிலிருந்து விடுவித்து ஒரு தனிக் கவிதையாக்கி விளக்கம் சொல்ல முயல்கிறேன்.

என் இயல்பான பகடி மொழி உரை விளக்கத்தில் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டும் என்றும் நம்புகிறேன். இதன் நிமித்தம் புதுத்தலைமுறையில் சிலர் குறளைச் சுமையெனக் கருதாமல் வாசிக்க வரக்கூடும்.

பழங்காலத்திலும் சமகாலத்திலும் காமம் பேசும் கவிதைகளிடையே என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?

சங்கக்கவிதைகளில் பேசப்படும் காதலும் காமமும் சுத்திகரிக்கப்பட்டது என்றே எனக்குத் தோன்றுகிறது. அதில் பரத்தைமை பேசப்பட்டாலும் அதுவும் அன்பின் ஐந்திணைக்குள்தான் வருகிறது. அவை ஏதோ ஒரு விதத்தில் தூய்மைக்கு ஏங்குவதாகவே படுகிறது.நவீனக் கவிதைகள் காதலின், காமத்தின் பரவசங்களோடு சேர்த்து அவற்றின் ஊழல்களையும் பாடுகின்றன. நவீனப் பார்வைகளின் வழியே, நம் நெஞ்சறிந்த உண்மைகளின் வழியே நாம் வந்து சேர்ந்திருக்கும் இடம் இது.

கவிதைக்குள் விளையாட்டாக ஏதாவது செய்து பார்ப்பது தரும் மன உணர்வு என்ன?

“கவிதை பிரிதொன்றில்லாத புதுமை” என்கிற ஜெயமோகனின் வாசகம் என் நெஞ்சத்துள் தங்கிவிட்ட ஒன்று. தீவிரமான ஒன்றைத் தீவிரத்தின் பாவனைகள் ஏதுமின்றித் தொட்டுத் துலக்குவதில் ஒரு வித சாகச உணர்வு வரவே செய்கிறது. சரியாக அந்த சாகசத்தை நிகழ்த்திவிடும் தருணங்களில் நான் அவ்வளவு புதியவன். புத்தம் புதியவன்.

மூளை நரம்பியல் வல்லுநரும், நோபல் பரிசுபெற வாய்ப்புள்ள இந்தியர்களுள் ஒருவராகவும் கருதப்படும் விளையனூர் ராமச்சந்திரனின் நேர்காணல் ஒன்றைச் சமீபத்தில் வாசித்தேன். அதில் இளம் அறிவியலாளர்களுக்குச் சொல்ல விரும்பும் சேதியாக அவர் சொல்லியிருந்தது என்னை மிகவும் ஈர்த்தது.

“பலன்களை எதிர்பார்க்காமல் வேலையைச் செய்துகொண்டேயிருங்கள். விளையாட்டுத்தன்மையையும், தாகத்தையும் விடாதீர்கள். வெற்றிகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நகைச்சுவையுணர்வைத் தக்க வைத்துக்கொள்ளுங்கள். வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்று சொல்லப்பட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு வேண்டவே வேண்டாம்.”

ஆகத்தீவிரமான, எண்ணற்ற புதிர்கள் நிறைந்த மூளை நரம்பியல் என்னும் அறிவுத்துறையில் காத்திரமாக இயங்கும் ஒருவரின் சொற்கள் இவை. விளையாட்டுத்தனம் தீவிரத்திற்கு எதிரானதல்ல. தீவிரத்தில் இனிப்பானது.

இசையும் இளங்கோகிருஷ்ணனும்?

கவிதை ஒரு பிசாசைப் போல் பயமுறுத்திக் கொண்டிருந்த காலத்தில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாகப் பற்றிக்கொண்டோம். கிளுகிளுப்புகளைப் பணயம் வைத்தோம். “நக்கிக்கொள்” என்று கவிதையின் பலிபீடத்தில் இளமையின் சூடான இரத்தத்தை அறுத்துக் கொட்டினோம்.

இருவரும் கொடுத்துப் பெற்றுக் கொண்டது அதிகம். ஓப்பிட்டளவில் அவன்தான் அதிகம் கொடுத்தவன்.

இசையும் சுகுமாரனும்?

அவர் என் வாத்தியார். எழுத்து சார்ந்த கடினமான காரியங்களைத் துவங்கும் முன் அவரிடம் கொஞ்சம் பேசுவது என் வழக்கம். அந்தப் பேச்சில் அவர் என்ன தருகிறார் என்பதைத் தெளிவாகச் சொல்ல இயலவில்லை. ஆனால் பேசி முடித்ததும் அது அவ்வளவொன்றும் கடினமான காரியமில்லை என்று தோன்றிவிடும்.

அவரைக் குறித்த விரிவான கட்டுரையொன்றைத் தடம் இதழில் எழுதியிருக்கிறேன். அதில் நிறைய வாசிக்கலாம் – https://www.vikatan.com/arts/literature/126133-sugumaran

இசையும் மிஷ்கினும்?

“காதலன்” என்கிற விளியில் எல்லாமும் அடங்கிவிடுகிறது. காதலை அவ்வளவு துல்லியமான சொற்களால் விவரித்துவிட முடியாது. அப்படி விவரித்துவிட முடியாது என்பதால்தான் மொழி உதித்த காலம்தொட்டு அது பாடப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரில் அனேகமாக எல்லா அமர்வுகளிலும் “எழுத்திற்கு நேர்மையாக இருத்தல்” என்கிற ஒன்றைப் பிரகடனம் போலச் சொல்லி சில கற்பூரங்களை அணைத்தீர்கள். எழுத்துக்கு நேர்மையாக இருப்பது என்றால் என்ன?

எழுத்துக்கு நேர்மையாக இருப்பதென்பது எழுத்துக்கென்று பிரத்யேக பாவனைகள் இல்லாமல் இருப்பது. என்னிடம் அதைத் தவிர வேறு அறிவு இல்லை. எனக்கு அதைவிட்டால் ஒளிந்துகொள்ள வேறு போக்கிடமில்லை. அதன் வழியாக நடந்து போனால்தான் என்னால் போய்ச் சேரவே முடிகிறது. அப்படிப் பழகிவிட்டது. அப்படியொன்றும் அது கெட்ட பழக்கமுமில்லை என்றே நினைக்கிறேன். சமீபத்திய உரையாடல் ஒன்றில் “பிரதியின் அழகு அதை எழுதுபவனின் நேர்மையில் இல்லை என்று நினைக்கிறேன்,” என்று சொன்னார் நண்பர் பாலா (பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்). இது ஒரு நல்ல குறுக்கீடு. நேர்மை உட்பட பிரதியில் எதையும் திணிக்க வேண்டியதில்லை. நேர்மையை அள்ளிக் கொட்டிப் பிரதியைக் குலைத்துவிட வேண்டியதில்லை என்று அவர் சொல்ல வருவதாக விளங்கிக்கொள்கிறேன். மற்றபடி ஓர் அடிப்படை நேர்மை எல்லாவற்றிற்கும் முக்கியம். எழுத்திற்கு அது மிக முக்கியம் என்றே இப்போதும் நினைக்கிறேன்.

படிமங்களாலும், உருவகங்களாலும் செய்யப்படும் கவிதைகள்தான் காலங்களைக் கடந்தும் புதிதாக நிற்கும் என்கிற கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?

உருவகத்தின் காலம் முடிந்துவிட்டதென்று தோன்றுகிறது. “மனச்சுவர்” என்கிற சொல் பெரிய கொட்டாவியைத் தரக் கூடியதாக மாறிவிட்டதென்பது என் எண்ணம்.

படிமக் கவிதைகள்தான் காலம் கடந்து நிற்கும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

நன்றி நவிலல்

இந்தச் செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ!
இந்தக் கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ!
இந்தச் சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ!
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு!

ஆத்மாநாமின் இந்தக் கவிதை பழசாகிவிடுமா என்ன?

எதுவும் கிடைக்காதபோது
களிமண் உருண்டையை வாயில் போட்டு
தண்ணீர் குடிக்கிறோம்
ஜீரணமாகி விடுகிறது
எங்களுக்கு ஒரு குறையும் இல்லை
நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.

என்கிற சுயம்புலிஙகத்தின் வரியை பழசாக்கும் பொன்னான காலம் நம் சமூகத்திற்கு இப்போதைக்கு இல்லை.

அழுகை வராமலில்லை
ஒரு வைராக்கியம்
உங்கள் முன்னால் அழக்கூடாது.

என்கிற மனுஷ்யபுத்திரனின் எளிய வரிகளைக் கவிதை சார்ந்த என் எல்லா அறிவுகளையும் கொண்டு எத்தனையோ முறை கவிதைக்கு வெளியே தள்ளிவிடப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் கதவை உடைத்துக் கொண்டு அது உள்ளே வந்துவிடுகிறது.

இப்படி காலம் கடந்து வாழும் “plain poetry” களும் நிறையவே உள்ளன.

படிமம் ஓர் அழகு என்பது போல அதுவொரு சுமையும்தான். தவிரவும், பாசாங்குக்காரர்களுக்கு வசதியானதும் கூட. படிமம் போல் ஒன்றை வைத்துக்கொண்டு கவிதை போல் ஒன்றை நிரப்பி வைத்துவிடுவது எளிதான காரியமாக இருக்கிறது. “போல” என்கிற உவம உருபை நீக்கியதற்குக் கூலியாக படிமக் காதலர்கள் மொழியையே எழுதிக் கேட்பதை ஏற்க இயலாது. எல்லாவற்றிலும் முன்னோக்கிய பயணங்கள் உண்டு. கவிதை தன் ஆபரணங்களைக் கழற்றி வைக்கத் துணிந்தபோது அது முதலில் கைவைத்தது படிமத்தில்தான் என்று நினைக்கிறேன். மேலும் படிமம் கொஞ்சம் குழப்பானதும்கூட. அது “partial படிமம்”, “முழுப்படிமம்”, “படிமம் போல” என்று பல வகைப்படும் அளவிற்குச் சிக்கலானது.

கோணங்கி ஒரு கவிதைத் தொகுப்பு எழுதி, மனுஷ் அதை உயிர்மையில் வெளியிட ஆசான் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்வது போன்று ஒரு கனவு வந்தது. அதுவும் உங்களின் முன்னுரையோடு. என்னவாக இருக்கும்?

வேறென்ன? கடவுள் உங்களுக்கு வாழும் காலத்திலேயே ஊழித்திருநாளைக் காட்டியிருக்கிறார்.


நன்றி: செந்தில்குமார், பாலாஜி, மதிக்குமார், சுபா செந்தில்குமார், அயிலிஷா மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் விழா அமைப்பாளர்கள்.

அரூ குழுவினர் and இசை

Share
Published by
அரூ குழுவினர் and இசை

Recent Posts

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago