நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல்

7 நிமிட வாசிப்பு

அறிவியல் புனைவு என்பது புனைவின் ஒரு வகைமையாகத் தொடக்க காலங்களில் எழுதப்பட்டது. ஏதேனும் ஓர் அறிவுத்துறையின் ஓர் அடிப்படைத் தேற்றத்தைப் புனைவின் தருக்கத்தைக் கொண்டு விரித்துச் செல்லும்படி அறிவியல் புனைவுகள் எழுதப்பட்டன. அறிவியல் புனைவெழுத்தில் பெரும்பாலான ஆக்கங்கள் ஊகப்புனைவுகளே (Speculative fiction). ஒரு குறிப்பிட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட மாற்றம் நிகழ்ந்தால் அந்த மாற்றம் அச்சூழலை எப்படிப் பாதிக்கிறது என்று கற்பனை கொண்டு விரித்து எழுதுவதை ஊகப்புனைவு என்று வரையறுத்துக் கொள்ளலாம். இந்த வரையறை அறிவியல் புனைவைப் பொறுத்தவரை மிக வசதியானது. புனைவுத் தருக்கத்துக்கு உட்பட்டு அறிவியலின் சில அடிப்படைகளை மீறாமல் வளர்ந்து செல்லும் புனைவுகளை நாம் சிறந்தவை என்று சொல்கிறோம். சமீபத்தில் வெளியான சீன எழுத்தாளர் சிக்சின் லியூவின் (Cixin Liu) Remembrance of Earth’s Past என்ற பெருநாவல் இவ்வகையிலான அறிவியல் ஊகப்புனைவுகளில் ஓர் உச்சம் எனலாம். மூன்று பகுதிகள் கொண்ட அப்பெருநாவலின் இரண்டு பகுதிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த சீன-அமெரிக்க எழுத்தாளரான கென் லியூவின் The Paper Menagerie என்ற கதைத்தொகுப்பின் சில கதைகள் குறித்து இக்கட்டுரையில் பேசலாம்.

இத்தொகுப்பில் உள்ள புனைக்கதைகள் அறிவியல் புனைவு என்ற வகைமைக்குள் முழுமையாக அடைபடாதவை. தொகுப்பின் பெரும்பாலான கதைகள் அறிவியல் புனைவுகள் என்றாலும் அக்கதைகளும் கூட தங்களுடைய கதைத்தன்மைக்கு அறிவியல் என்பதை ஓர் அடித்தளமாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டுள்ளன என்பது அக்கதைகளின் சிறப்பு என்று சொல்லலாம். முன்பே சொன்னபடி சிறந்த அறிவியல் புனைவுகள் பெரும்பாலும் ஊகப்புனைவுகளாகவே இருக்கின்றன. மற்றொரு வகைமை துப்பறியும் கதைகள். துப்பறியும் கதைகள் பெரும்பாலும் ஓர் அறிவியல் கண்டுபிடிப்பின் இறுதிநிலைப் பயனை உபயோகித்து ஒரு குற்றத்தைத் துப்பறியும் விதமாக அமைக்கப்படும். (ஒரு பிரபலமான உதாரணம் சிசிடிவியைக் கொண்டு திருடர்களைக் கண்டுபிடித்தல்.) ஆனால் இவ்வகை துப்பறியும் கதைகள் பெரும்பாலும் அறிவியல் புனைவு என்று அழைக்கப்படும் தகுதியைப் பெறுவதில்லை.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் ஊகப்புனைவுகள் உள்ளன. அறிவியல் புனைவாகக் கருதப்படும் தகுதியைக் கொண்டு ஒரு துப்பறியும் கதையும் உள்ளது. இவற்றைக் கடந்து அறிவியல் முன்னேற்றம் நம் வாழ்வில் நம்முடைய மதிப்பீடுகளில் செலுத்தியுள்ள நுண்மையான தாக்கத்தைச் சித்தரிக்கும் கதைகளும் உள்ளன. புனைக்கதைகளில் ஒரு பிரிவாகக் கருதப்பட்ட அறிவியல் புனைவு என்ற வகைமைக்குள் கென் லியூ பல்வேறு வகைமைகளைத் இத்தொகுப்பில் முயன்று பார்த்துள்ளார். முன்பே சொன்னது போல இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளும் அறிவியல் புனைவு என்ற வகைமைக்குள் வரக்கூடியவை அல்ல. ஆனால் அனைத்துக் கதைகளிலும் நவீன அறிவியலும் புதுமையான கதை சொல்லல் முறைகளும் மண்ணுக்கு அடியிலான நீரோட்டம் போல மறைந்திருக்கின்றன.

கென் லியூ

கென் லியூ கதை சொல்வதற்குப் பல உத்திகளைப் பயன்படுத்தினாலும் அனைத்தையும் நம் முன் திறந்தே வைக்கிறார். கதைகளில் எந்த இடத்திலும் கரவுகள் இருப்பதில்லை. மேலும் கதைகள் ஒரு குறிப்பிட்ட வடிவத்துக்குள் சிக்காதவையாக இருக்கின்றன. ஐம்பது பக்கத்தில் இருந்து நூறு பக்கம் வரை விரியக்கூடிய கதைகளும் இருபது பக்கங்களுக்குள் முடிந்துவிடும் கதைகளும் ஒன்றிணைந்து இத்தொகுப்பில் உள்ள கதைகளைக் கட்டமைக்கின்றன. கதைகள் அனைத்திலும் சில குறிப்பிடும்படியான பொதுமைகளைக் காண முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் சீனாவில் இருந்தோ ஜப்பானில் இருந்தோ அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஒரு மனிதர்களின் அலைகழிப்புகள் மிக நுட்பமாகப் பேசப்படுகின்றன. நவீன வாழ்வின் நேரமின்மையும் உணர்ச்சியின்மையும் கதைகளின் பின்புலமாக அமைகின்றன.

The Regular ஒரு துப்பறியும் கதை. மனித உடலில் செயற்கைக் கருவிகளைப் பொறுத்துவது விபத்துகள் பெருகிவிட்ட இந்த நாட்களில் மனிதர்கள் முடங்கி விடாமல் தடுப்பதற்கான ஒரு நல்ல வழிமுறையாக உள்ளது. நாம் கவனித்தால் ஒன்றை அறிய முடியும். நம் உடலில் பொறுத்தப்படும் செயற்கைக் கருவிகள் மேலும் மேலும் புத்திசாலித்தனமானவையாக மாறி வருகின்றன. Pacemaker இன்றிருக்கும் ஒரு பிரபல உதாரணம். ஆனால் இந்தக் கருவிகள் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே அவசியமாகிவிட்ட ஒரு காலத்தை இந்தக் குறுநாவல் பேசுகிறது. தன்னை “ரெகுலராக” வைத்துக்கொள்ள நினைக்கும் ஒரு தனியார் துப்பறியும் நிபுணரான ரூத் பாலியல் தொழிலாளியின் கொலையைத் துப்பறிவதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது. ரூத் லா தன்னுடைய உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்கவும் தொழில் போட்டியாளர்களைச் சமாளிக்கவும் தன்னை ஒரு “செயற்கைப் பெண்ணாக” மாற்றிக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பாலியல் தொழிலாளியை யார் கொன்றது, ஏன் கொன்றான் என்பது எங்குமே ஒளித்து வைக்கப்படவில்லை. கொலைகாரனும் துப்பறிகிறவரும் சந்திப்பதுதான் கதையின் உச்சம். ஆனால் அந்தப் புள்ளிக்கு வந்து சேர்வதற்குள் இக்கதை பல விஷயங்களைப் பேசிவிடுகிறது. தன்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் தன்னுடன் இருப்பதைப் படம் எடுப்பதற்காகக் கண்களுக்குள் ஒரு கேமராவைப் பொறுத்திக்கொள்ளும் பாலியல் தொழிலாளிகள், உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்கும் கட்டுப்படுத்திகள் என்று ஒவ்வொரு மனித உடலும் புறச் சாதனங்களால் இயங்குவதை இக்கதை சித்தரிக்கிறது.

தன்னுடலில் ஒரு செயற்கைக் கருவியைப் பொறுத்தி வாழ்வதன் அவசியமும் வலியும் எதிர்காலம் குறித்த நிச்சயமின்மை அளிக்கும் பயமும் என்று ஒரு துப்பறியும் கதை என்பதையும் தாண்டி இக்கதையின் எல்லைகள் நகர்கின்றன. மனித உடல் என்பது இனியும் “இறைவனால் வழங்கப்பட்ட” உறுப்புகளால் இயங்கக்கூடியதல்ல என்பதை உணர்த்தும் கதையாக இருக்கிறது.

இத்தகைய “உருமாற்றத்தின்” கதையாக இத்தொகுப்பில் உள்ள மற்றொரு கதையான Good Huntingஐ வாசிக்கலாம். அவ்வளவாக அறிவியல் தன்மை இல்லாத இக்கதை சீனாவில் ஒரு கிராமத்தில் ஓர் அப்பாவும் மகனும் அக்கிராம வணிகர் ஒருவரின் மகனுடன் உறவுகொள்ள வரும் ஓநாயாக உருமாறும் திறன் கொண்ட ஓர் அழகிய மோகினியை வேட்டையாடக் காத்திருப்பதில் தொடங்குகிறது. அப்பா தாய் மோகினியைக் கொல்கிறார். ஆனால் மகனுக்குச் சிறிய ஓநாயுடன் (மகள் மோகினியுடன்) நட்பு ஏற்படுகிறது. சீனாவின் கிராமங்களுக்குப் பரவும் நவீன வசதிகளும் மின்சாரமும் ரயில்பாதையும் அக்கிராமத்தில் பழமையின் மர்மத்தை அழிக்கின்றன. அப்பா இறந்துவிட மகன் ரயில்வேயில் வேலை செய்யத் தொடங்குகிறான். அவனுடன் நட்பாக இருந்த மோகினி ஓநாயாக மாறும் ஆற்றலை இழக்கிறாள். அன்றாடத் தேவைகளுக்காக விபச்சாரம் செய்யத் தொடங்குகிறாள். அவளைச் சொந்தம் கொள்ளும் ஒரு செல்வந்தன் அவள் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றையும் இரும்பால் மாற்றுகிறான். அவள் வலியுடன் அவற்றைப் பொறுத்துக்கொள்கிறாள். ஓர் எல்லையில் பொறுக்க முடியாமல் அவனைக் கொன்றுவிட்டு நாயகனிடம் வருகிறாள்.நாயகன் அவளைத் தன் திறனால் ஒரு முழுமையான எந்திரப் பெண்ணாக மாற்றுகிறான். ஒரு வன யட்சி யந்திர யட்சியாக மாறுகிறாள். இத்தொகுப்பின் சிறந்த கதையாக இதனைச் சொல்ல முடியும்.

The Waves, Mono No Aware, An Advanced Reader’s Picture Book of Comparitive Cognition, The Man Who Ended History: A Documentary ஆகிய நான்கு கதைகளும் ஊகப்புனைவு வகைமையைச் சார்ந்தவை. இக்கதைகளில் முதன் மூன்றும் விண்வெளி சார்ந்தது. பூமிக்கு வெளியே உயிர் வாழ்வை மனிதர்கள் தேடிச் செல்வதுதான் மூன்று கதைகளின் அடிநாதம் என்றாலும் ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சிக்கல் பேசப்படுகிறது. The Waves என்ற கதையில் பூமியில் மனித உயிர் தோன்றிய புராணக்கதைகள் ஒரு பகுதியாகச் சொல்லப்படுகின்றன. ஆனால் அந்தக் கதைகளைச் சொல்வது ஒரு விண்கலத்தின் தளபதி நிலையில் இருக்கும் மேகி. மனித உயிர் பூமியில் எப்படியெல்லாம் உருமாற்றம் பெற்று வளர்ந்தது என்று கதைகள் வழியாகச் சொல்லப்பட்டுக் கொண்டிருக்க விண்ணில் பயணிப்பவர்களின் உருமாற்றம் நிகழ்வுகளாகச் சித்தரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாற்றத்தையும் அவர்கள் எதிர்கொள்ளும் போது மனம் அடையும் துயர்களையும் அச்சத்தையும் இக்கதை கூர்மையாகப் பேசுகிறது. விண்ணில் பயணிப்பவர்கள் முதுமையடையாமல் இருப்பதற்கான ஒரு மருத்துவ சிகிச்சை வழிமுறையை பூமியில் இருந்து அனுப்புகிறார்கள். விண்கலனில் இருப்பவர்கள் அனைவருமே இளைஞர்களாக இருந்தால் மூன்று நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டிய அந்த விண்கலனின் இருப்புகள் பாதிக்கப்படும் என்று வாதிடப்படுகிறது. ஆகவே ஒரு குடும்பத்தில் ஒருவர் இளமையாக இருக்க முடிவு செய்தால் அக்குடும்பத்தில் ஒருவர் குழந்தையாக இருந்தாக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. மேகி இளமையாக இருக்கத் தீர்மானிக்கிறார். அவர் மகன் பாபி மூன்று நூற்றாண்டுகள் சிறுவனாகவே நீடிக்கிறான். இந்த நீண்ட காலம் அந்தத் தாய் மகன் உறவில் ஏற்படுத்தும் சிடுக்குகளை ஆசிரியர் தொடுகிறார்.

இந்த மூன்று கதைகளிலுமே பூமியைக் கைவிட்டுச் செல்லுதல் என்ற தன்மை தொனிக்கவே செய்கிறது.

இந்த நூலில் உள்ள ஊகப்புனைவுக் கதைகளில் மிகச்சிறந்தது The Man Who Ended History: A Documentary என்ற கதைதான்.

அகேமி கிரினோ என்ற விஞ்ஞானி காலத்தில் பின்நோக்கிச் செல்வதற்கான ஒரு வழியைக் கண்டறிகிறார். ஆனால் அதிலிருக்கும் சிக்கல் அவ்வழியே ஒரேயொரு முறை மட்டுமே ஓர் இடத்துக்குச் சென்று வர முடியும் என்பதுதான். ஒருமுறை பயணித்தபின் அந்தக் காலம் இறந்த காலத்தில் இருந்து நிரந்தரமாக மறைந்துவிடும். கிரினோவின் கணவர் இவான் வே ஒரு வரலாற்று ஆசிரியர். இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் சீனாவில் இருந்து கைது செய்யப்பட்டவர்களைக் கொண்டு மருத்து ஆராய்ச்சி செய்வதற்காக அமைத்த Unit 731 குறித்து அவருக்குத் தெரிய வருகிறது. ஜப்பான் இன்று வரை அப்படி ஓர் இடம் இருந்ததாக ஒத்துக்கொள்ள மறுக்கிறது. Unit 731 இல் இறந்தவர்களுடைய உறவினர்களை இவான் வே தன் மனைவி அகேமி கிரினோ உதவியுடன் அதே இடத்திற்கு அதே காலத்திற்கு அனுப்புகிறார். ஒரு நினைவாக மட்டுமே மனிதர்கள் அந்த இடத்தில் நீடிப்பார்கள். அங்கு அப்படிச் சென்று வருகிறவர்கள் கொடுக்கும் வாக்குமூலங்களும் அங்குப் பணிபுரிந்தவர்களின் நினைவுமீட்டல்களும் அரசியல் நெருக்கடிகளை உருவாக்குகின்றன. முதலில் உலக நாடுகள் ஜப்பானை மன்னிப்பு கேட்கச் சொல்கின்றன. பின்னர் தங்களுடைய நாட்டிலும் இதுபோன்ற இடங்கள் இருப்பதை உணர்ந்து அமைதியாகின்றன. இந்த மொத்த நிகழ்வையும் ஓர் ஆவணப் படத்தின் வடிவத்தில் கென் லியூ எழுதி இருக்கிறார். இந்த நிகழ்வின் ஊடாக ஒரு விஞ்ஞானியின் வரலாற்று ஆய்வாளரின் நினைவுகள் சொல்லப்படுகின்றன. அதிகார அமைப்புகளின் இருட்டான வழிகளில் சென்று திரும்பிய உணர்வைச் சில இடங்களில் இக்கதை அளிக்கிறது. மேலும் ஜப்பானியப் பின்னணி கொண்ட அகேமி கிரினோ சீனப் பின்னணி கொண்ட இவான் வே ஆகியோருக்கு இடையேயான உறவும் இக்கதையில் பேசப்படுகின்றது.

The Literomancer மற்றும் The Paper Menagerie என்ற இரு கதைகளும் நேரடியாக அறிவியல் புனைவுகளாகக் கொள்ளத்தக்கவை அல்ல என்றாலும் மறைந்து போன சீனக் கலைகளின் வழியாகத் தொடர்புறுத்த முயல்வதால் முக்கியமான கதையாகின்றன. இத்தொகுப்பில் உள்ள கதைகளில் அறிவியல் தன்மையும் ஒரு சமகாலச் சிக்கலைப் பேசும் தன்மையும் ஒருங்கே கொண்ட கதையாக The Perfect Match என்ற கதையைச் சொல்லலாம். டிலி என்ற ஒரு மென்பொருள் மனிதர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தயாரிக்கப்படுகிறது. தன்னுடைய வாடிக்கையாளரின் ரசனைகள் தேர்வுகள் சார்ந்து தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டே இருக்கும் ஒரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த மென்பொருள் டிலி. அதனைப் பயன்படுத்தும் சாய் என்ற இளைஞனுடைய அன்றாட வாழ்க்கையினூடாக கதை நகர்கிறது. சாயுடைய காதல் வாழ்க்கையைக்கூட டிலிதான் முடிவு செய்கிறது. அவன் சந்திக்கும் பெண்ணை அவனிடம் கூட்டி வருவதும் அவள் பயன்படுத்தும் டிலிதான். ஆனால் சாய் ஒரு கட்டத்தில் தான் மென்பொருளால் அதிகம் வழிநடத்தப்படுவதாக உணர்கிறான். அதிலிருந்து வெளியேற நினைக்கும் போதுதான் அதன் பிடி எவ்வளவு வலுவானது என்று அவனுக்குப் புரிகிறது. அவனை ஜென்னி என்ற பெண் தொடர்புகொள்கிறாள். டிலி மென்பொருளை உருவாக்கும் நிறுவனத்தின் உலகளாவிய அரசியல் செல்வாக்கையும் சந்தையையும் அவனுக்கு விளக்குகிறாள். மனிதர்களை எவ்வாறு அந்த மென்பொருள் வழிநடத்தத் தொடங்குகிறது என்று அவனுக்குப் புரிய வைக்கிறாள். இறுதியாக ஜென்னியும் அவள் குழுவினரும் சாயுடன் சேர்ந்து டிலியை அழிக்க முயல்கின்றனர். ஆனால் டிலி அவர்களைக் கவனித்து தன்னுடைய எஜமானர்களிடம் சொல்லிவிடுகிறது. இக்கதையின் முடிவு டிலி போன்ற ஒரு மென்பொருள் நம் வாழ்வில் எவ்வகையிலும் தவிர்க்க முடியாததைச் சொல்வதாக இருக்கிறது.

தொகுப்பின் மற்ற கதைகள் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்தவர்களின் வரலாற்றினைப் பேசுகின்றன.

இத்தொகுப்பின் பலம் இக்கதைகளின் மொழிதான் என்று தோன்றுகிறது. பின்நவீனத்துவத்தின் விளையாட்டுத் தன்மையை இக்கதைகளின் மொழி கடந்திருக்கிறது. மிகத் தீவிரமான அதே நேரம் சரளமான உரையாடல் தன்மையிலான நடை இத்தொகுப்பின் கதைகள் முன்வைக்கும் தர்க்கத்தை மறுக்க முடியாததாக மாற்றுகின்றன. மேலும் அறிவியல் புனைவு என்ற துருத்தலோடு அமைக்கப்படாமல் ஒவ்வொரு கதையும் மிக இயல்பாக தன்னுடன் அறிவியலை இணைத்துக் கொண்டிருக்கிறது. அன்றாடம் பயன்படுத்தும் சாதனங்கள், மருத்துவம், பயணங்கள் என்று அனைத்தும் செயற்கை நுண்ணறிவால் வழிநடத்தப்படும் காலத்தில் நம்முடைய அன்றாட உணர்வுகள் எப்படி இயங்குகின்றன எப்படி அர்த்தம் பெறுகின்றன என்பதை நமக்கே காட்டித்தரும் தன்மை உள்ள கதைகளாக இவற்றை வாசிக்கலாம்.


சுரேஷ் பிரதீப் எழுதும் ‘நீளும் எல்லைகள்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்