கசார்களின் அகராதி: சில குறிப்புகள்

4 நிமிட வாசிப்பு

புத்தகம் : கசார்களின் அகராதி — மிலோராத் பாவிச்
தமிழில் : ஸ்ரீதர் ரங்கராஜ்
பதிப்பகம் : எதிர் வெளியீடு

ஒரு படைப்பைத் தீவிரமான வாசகன் ஒருவன் அணுகும் முறை நம்மால் நினைத்துப்பார்க்கவே இயலாதது. ஏனெனில் அவன் ஒரு புத்தகத்தை மொழியாக வாசிப்பதோடு, அர்த்தங்களாகவும் வாசிக்கின்றான். இவ்விரண்டும் இருவேறு வகை என்றளவில்தான் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இரண்டளவிலும் நின்று பேசும் படைப்புகள் சில உள்ளன. ஆகவே அதுபோலான அசாத்தியமான ஒரு படைப்பைத் தமிழ்ப்படுத்துவதில் எப்போதும் சிக்கல்களுண்டு. Detail study/Meaning Study என்ற வகையைப் பொறுத்து மொழிபெயர்ப்பில் எத்தகு திறனுடையவர்களாலும் நிறைவாகச் செய்ய முடியாத படைப்புகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில் எப்படியேனும் கண்டறிந்துவிடும் பிழைகளையெல்லாம் (?) ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தால், இது மிக முக்கியமான வெளியீடு. தமிழில் அதிகபட்ச உழைப்பில் தருவிக்கப்பட்டுள்ளது என்பதை நாவலைப் படிக்கையில் புரிந்துகொள்வீர்கள். மொழிபெயர்ப்பாளருக்கு என் வாழ்த்துகள்!

வரலாற்றுரீதியாக ஒரு படைப்பைப் புனையும்போது உண்டாகும் பெரும் சிக்கல்களுள் ஒன்று தகவல்கள். அதைச் சேகரிக்கும் முறையிலிருந்து துவங்கி அதைப் பிரதியினுள் பயன்படுத்தும் விதம் வரைக்கும் நீடிக்கிறது. தகவல்களாக முன்வைப்பது எளிதான யாராலும் திரட்டிச் சேகரித்துவிடக் கூடியதே. அதை எதிர்கொள்ளும் ஒரு வாசகனுக்கு அறிவின் அடிப்படையில் நினைவுகொள்வதற்கு வசதியாக இருக்குமே தவிர, அதனால் உண்டாகும் ஆச்சரியங்கள் நீடித்த ஒன்றாக இருப்பதற்கு (குறிப்பாக மறுவாசிப்பில்) வாய்ப்புகள் குறைவே. எனில் தகவல்கள் புனையும் கதையினுள் நிகழும் சூழலை விரிவாக எடுத்துரைப்பதற்கு உதவுமே தவிர மொத்த கதையின் பலமாக அமையாது.

உதாரணமாக, இங்கு நாவலில் ஓரிடத்தில் இளவரசி அதே’ எழுவகையான உப்பைப் பயன்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த எழுவகையான உப்புகளின் தேவையென்ன, அதனால் நிகழும் மாயங்கள், அது கதையின் போக்கில் ஒரு வாசகனை எவ்வாறு ஆச்சரியமூட்டுகிறது என்பதே நோக்கத்தக்கது. தகவல்களுக்கு இடையே நிகழ்த்தும் சம்பவங்களும் புனை நிகழ்வுகளும்தான் பயன்படுத்தப்பட்ட தரவுகளைக் கதையோடே இணைத்து வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த நாவலில் வரும் ஒவ்வொரு கருவிகளும் ஆயுதங்களும் காரணத்தோடே பயன்படுத்தப்பட்டிருப்பது அதிகக் கவனத்துடனான வாசிப்பைக் கோருவதாக உள்ளது.

கசார்களின் அகராதி என்னும் நாவலில், தெற்கு ரஷ்யா, வடக்கு காகசஸ், கிழக்கு உக்ரைன், கிரீமியா… என உஸ்பெகிஸ்தானின் வடமேற்கு வரை பரவியிருந்த இனக்குழுவாக வாழ்ந்த காசார்களைப் பற்றிய கற்பனைக் கதையாகவும் அதே சமயம் வரலாற்றை எடுத்துரைப்பதுபோலவும் நாவலின் மொழி வெளிப்படுகிறது. கசார் இனம் அடிப்படையில் உருவ வழிபாட்டு எதிர்ப்பின் தாக்கங்கள் அதிகம் கொண்டது. கசார் இனத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வரிசையாக அறிமுகப்படுத்துவதுபோல நாவல் கூறப்படுகிறது. ஓர் இனக்குழு எவ்வாறு தொடர்ந்து தமது வாழ்வு முறையைப் பொருட்களிலிருந்து ஆயுதங்கள் வரை தேர்ந்துகொண்டனர் என்பதிலிருந்தும், அதைப் பயன்படுத்துவதோடு மர்மமான அவர்களின் அபாரத் திறமைகளையும் சேகரித்து அதை ஆவணப்படுத்தும் பாணியில் கதையின் போக்கு நீள்கிறது. ஆனால் எவ்விடத்திலும் அது தகவல்களை அடுக்கி வைப்பதாகவோ அல்லது வலிந்து உருவாக்கப்பட்ட தரவுகளாகவோ இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் தீர்க்கமாகப் பயணிக்கிறது.

ஒவ்வோர் இனக்குழுவிலும் காணப்படுவதைப்போலவே இங்கும் உயர்குடி மக்களின் விருப்பத்திற்கேற்ப மற்றும் காலமாற்றத்தாலும் மதமாற்றத்திற்கு உட்பட்டு அவர்கள் தனித்தனியே சிதறிப்போவதாகக் கூறப்படுகிறது. இதில் “அவர்கள் தங்கள் மதத்திற்குத்தான்” மாறினர் என்று கிறிஸ்துவம், யூதம், இஸ்லாம் மற்றும் எபிரேய என்ற பல மதத்தின் ஆசிரியர்கள் ஆதாரங்களோடு அவர்களைப் பற்றிய தகவல்களை முன்வைக்கின்றனர். அவர்களின் அசாத்திய திறமைகள், வாழ்வுமுறை துவங்கி கனவு காணும் வழக்கம் வரைக்கும் காலப்போக்கில் எவ்வாறு மாறுபடுகிறது என்று விவரிக்கின்றது. கசார்களாக இருந்த இவர்கள் ஒவ்வொரு மதத்திற்கும் மாறுகையில் அவர்களது பெயரும் மாறுகிறது. பெயருக்கேற்ப பண்புகளும் மாறுவதாகக் காட்டப்பட்டுள்ளன.

உதாரணமாக, கசார் அரசனான காகன் என்ற பெயர் யூதத்தைத் தழுவியதும் கோகன் என்றாகிறது. எனவே சில இடங்களில் காகனும் கோகனும் வெவ்வேறு நபர்களோ என்று எண்ணும் அளவிற்கு அவர்களின் குணங்களும் வெளிப்படுத்தும் முறையும் மாறிக்கொண்டே இருக்கிறது. மதத்தின் வடிவம் எழுதப்பட்டு அதன் பிற்பகுதியில் கசார் விவாதம் என்றும் நடைபெறுகிறது. அதாவது நாவலின் துவக்கத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமாக அறிமுகப்படுத்தி பிற்பகுதியில் அந்த கதாபாத்திரங்களை மீண்டும் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு விவாதம் நடத்துவதாக இருக்கிறது.

இதில் முக்கிய கதாப்பாத்திரங்களாக கருதுவது: அவ்ரம் ப்ராங்கோவிச், கோகன், இளவரசி அதே, மசூதி, மற்றும் சூக் என்கிற பேராசிரியர்.

இதில் அதிகம் ரசித்த பகுதி, கனவு வேட்டையர்கள் எனப்படும் கசார் தொன்மங்களில் வருகிற பூசாரிகள். அவர்கள் ஆதி மனிதர்களான ஆதாமைத் தேடிய வேட்கை கொண்டவர்கள். பிறரின் கனவுகளை ஆழ்ந்து படித்துத் தெரிந்துகொள்கிற, சில சமயம் அவர்களது முடிவினை மாற்றக்கூடிய திறமைசாலிகள்.

அவ்வகையில் இரு முக்கிய குறிப்புகள்:

1

பிறரின் கனவை வாசித்து அறியும் திறன் கொண்டவரான மசூதி “ஒருவரையொருவர் கனவுகாண்கிற இரு நபர்களைத்” தேடிச் செல்கிறார். அதாவது, காகனைப் பற்றி ப்ராங்கோவிச்சும், ப்ராங்கோவிச்சைப் பற்றி காகனும் கனவு காண்கின்றனர். இதில் ப்ராங்கோவிச்சின் மரணம் காகன் கண்ட கனவால் நிகழ்கிறது. இதை எபிரேயப் பகுதிகளில் பாஷாவிடம் மசூதி எடுத்துரைக்கையில்தான் தெரிய வருகிறது.

இதில் மசூதி என்பவர் லூட் இசைக்கலைஞர். நாவலின் இசுலாமியப் பின்னணியில் வருபவர். அவர் தனது கலையைக் கைவிட்டு அல்லது அதிலிருந்து கவனம் விலகி இந்தக் கனவுவேட்டையைப் பழகுகிறார். அவர் அவ்வாறு பழகும்போதெல்லாம் அந்த லூட் இசையின் சாயல் பின்தொடர்ந்தபடியே உள்ளது. மசூதி கனவுக்குள் செல்லும் போதெல்லாம் அந்த லூட் இசை பின்தொடருகிறது. (இதற்குமேல் சில கூடுதல் சிந்தனையோடு எடுக்கப்பட்டதே Inception படத்தின் கதை. ஆனால் கனவு வேட்டையர் என்று இந்த நாவலில் தரப்பட்ட விவரணைகள் யாவும் Christopher Nolan னின் கேமிராவாலும் காட்சிப்படுத்த முடியாதது.)

2

முதல் பகுதியில் சிவப்புப் புத்தகத்தில், முனைவர். இசைலோ சூக் தனது வாயிலிருந்து சாவியை வெளியே எடுத்து அதைப்பற்றி வினோதம் கொள்கிறார். (இறுதியில் அவரது மரணமும் நிகழ்கிறது.) இந்தப் பகுதி நினைவிலிருக்க, பின்னே வரும் இரண்டாவது பகுதியான பச்சைப் புத்தகத்தில் இசுலாமியத்தில் சேரும் முடிவிலிருக்கும் இளவரசி அதே’ தன்னுடைய படுக்கையறையில் சாவியை வைத்துக்கொண்டு எதையோ உச்சரிக்கின்றாள். உடனே சாவி மறைந்துவிடுகிறது. (ஆக தன் இளவரசி அதே’ தான் சூக் என்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது.) ஆனால் இறுதியில்தான் அந்த மர்மம் அவிழ்கிறது. அதாவது காகனின் மனைவியான இளவரசி அதே’, அல்சஃபர் என்பவரைக் காதலிப்பதாகவும் அவருக்குத்தான் அவள் ரகசியமாகக் கடிதம் அனுப்புவதாகவும் காகன் கண்டறிகிறார். ஆகவே சிறை வைக்கப்பட்டுக் கூண்டிலிருந்த அல்சஃபருக்கு இளவரசி அதே’ தன் படுக்கறைச் சாவியை அனுப்பி வந்ததாகத் தெரிய வருகிறது. அல்சஃபருக்குப் பதிலாகத்தான் அங்கிருக்க வேண்டியவராக முனைவர். சூக்-ஐச் சிக்கவைத்து அவருடைய மரணமும் நிகழ்கிறது.

இவையெல்லாம் சிறு சிறு பகுதிகளே, இன்னும் இதுபோல் ஏராளம் உள்ளன. மேலும், நாம் ஒரு சிறுகதை அளவிற்கு யோசிக்கும் கருப்பொருளை ஒரு நீளமான வரியில் ஆசிரியர் எழுதிவிட்டுப் போகிறார். ஏராளமான சுவாரசியங்கள் அடங்கிய பத்திகளால் கோக்கப்பட்ட கனவுலகமே இந்தப் புத்தகம்.

ஆனால், நாவலின் கட்டமைப்பு கசார்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்துவது மற்றும் நாட்குறிப்பின் மொழியில் கூறப்பட்டுள்ளது. அவைகளைக் கதைகளாக அல்லது ஒரு காட்சிவழியே சித்தரிக்காமல் பல இடங்களில் விபரங்களாகவே (கற்பனை கூடுதலாக இருந்தாலும்) விட்டுவிடுவதால் ஒருகட்டத்தில் ஆய்வுக் கட்டுரை படிப்பதைப்போலத் தோன்றுகிறது. ஏனெனில் வெறும் கற்பனைத் தகவல்களால் ஒரு நாவலை எழுதுவது மிகச் சுலபம் என்பது எனது கருத்து.

குறிப்பு

உண்மையில் நான் மேற்கூறிய புரிதலும் நாவலில் வரும் கதையும் தவறாக இருப்பதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை நீங்கள் படிக்கையில் வேறொரு கோணமும் புதியதொரு கதா அர்த்தங்களும் காணக்கிடைக்கலாம். அதுவே இந்நாவலின் தனித்துவம்.

பாவிச்சின் மற்றொரு நாவலான, “Unique Items” இல் அவர் கூற முனைவதைப்போல ஒரு படைப்பிற்கு எண்ணற்ற முடிவுகளும் புரிதலும் கிடைப்பது அப்படைப்பின் ஆழம் சார்ந்தது.

உங்களின் முன்முடிவுகளுக்காகவும் புரிதலுக்காகவும் அந்தப் புத்தகம் ஆண்/பெண் என்று இரு பாலினமாக எழுதப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்