இன்று ஐசாக் அசிமோவின் நூறாவது பிறந்த நாள். என் மனதுக்கு நெருக்கமான அசிமோவ் சிறுகதைகளின் மூலம் அவர் எழுத்தில் வியக்கவைக்கும் சில தன்மைகளைப் பகிரும் முயற்சியே இக்கட்டுரை.
அசிமோவின் கதைகளைப் படிக்கும்போது மனம் உயரப் பறந்து, பல திசைகளில் சிந்தித்தபடி எங்கெங்கோ உலாவிக்கொண்டிருக்கும். அந்த உயரமான இடத்திலிருந்து மனித இனத்தை, நாம் கடந்து வந்த பாதையை, வரலாற்றை, இன்னும் பல மில்லியன் ஆண்டுகளில் செல்லக்கூடிய திசைகளைப் பார்க்கத் தூண்டும். அதிகம் மண்டையைக் காய விடாமல் காகிதம் போல மெல்லியதான இந்த நிலைக்கு மனதைத் தூக்கிச்செல்வதே அறிவியல் புனைவின் நோக்கமோ எனத் தோன்றவைக்கும். இப்படியெல்லாம் தோன்றுவதற்கு என்ன காரணங்கள் என யோசித்துப் பார்க்கிறேன்.
தர்க்கப்பூர்வமாகச் சிந்தித்துச் செயல்படும் ஓர் எந்திர மனிதனை நீங்களும் உங்கள் நண்பரும் பகுதி பகுதியாக இணைக்கிறீர்கள். எந்திரனைச் சொடுக்கிவிட்டதும், அதன் எஜமானர் நீங்கள் என்பதை நம்ப மறுத்து, உங்கள் ஆணைகளை ஏற்க மாட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்? “என்னைவிடப் பலவீனமான உயிரினம் நீ. நீ எப்படி என்னை உருவாக்கியிருக்க முடியும்?” எனக் கேள்வி கேட்டால்? இதோ இன்னோர் எந்திரனை உன் கண் முன்னால் பொருத்திக் காட்டுகிறேன் என்று செய்து காட்டினாலும், “நீங்கள் வெறும் பாகங்களை இணைப்பவர்கள்தான். என்னை உருவாக்கியவர்கள் அல்ல!” என்று எந்திரன் சொன்னால்?
இதுவே I, Robot தொகுப்பில் இடம்பெறும் Reason கதையில் டோனோவானும் போவெல்லும் சந்திக்கும் பிரச்சனை. சூரியனிலிருந்து ஆற்றலை உறிஞ்சி பூமிக்கு அனுப்புகிறது ஒரு விண்கலம். அதன் செயல்பாடுகளைக் கவனத்தில்கொள்ள சுயமாகச் சிந்தித்துச் செயல்படும் புது எந்திர மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது. எந்திரனின் பாகங்களை ஒன்றாகப் பொருத்தி விண்கலத்தின் பொறுப்புகளை அதனிடம் ஒப்படைத்துவிட்டுப் பூமிக்கு திரும்புவதே டோனோவான் மற்றும் போவெல்லின் வேலை. ஆனால் மனிதர்கள் சொல்வதைக் கேட்காமல் விண்கலத்தின் சூப்பர்கம்ப்யூட்டரைத் தனது எஜமானராகக் கருதுகிறது எந்திரன். அந்த சூப்பர்கம்ப்யூட்டர்தான் மனிதர்களை உருவாக்கியது என நம்பி, அதைக் கடவுளாக வழிபடுகிறது. சுத்தியலால் எந்திரனின் மண்டையை உடைத்தெரிந்துவிடலாம் என டோனோவான் கொதிக்க, போவெல் பொறுமையாக எந்திரனுக்குப் புரியவைக்க பல முயற்சிகள் செய்து பார்க்கிறார்.
Reason கதையில் வரும் தர்க்க உரையாடல்கள் அட்டகாசம். பல தர்க்கங்களுக்குப் பிறகு, ஒரு கட்டத்தில் எந்திரன் சொல்வதுதான் உண்மையோ என டோனோவான் குழம்பும்போது, போவெல் சொல்வான், “தர்க்கம் செய்யும் எந்திரன் அது. தர்க்கத்தை மட்டுமே நம்பும். அதில் ஒரு பிரச்சனை உள்ளது.”
“என்ன பிரச்சனை?”
“நமக்குச் சாதகமாக இருக்கும் அடிப்படைக் கொள்கைகளைத் தேர்வு செய்துகொண்டால், பகுத்தறியும் தர்க்கத்தினால் எதை வேண்டுமானாலும் நிரூபிக்கலாம். நமது அடிப்படைக் கொள்கைகள் வேறு, எந்திரனின் அடிப்படைக் கொள்கைகள் வேறு.”
“எந்திரனின் அடிப்படைக் கொள்கைகளைச் சீக்கிரம் கண்டறிந்து மாற்றிவிடலாமா?”
“அங்குதான் பிரச்சனை. அடிப்படைக் கொள்கைகள் அனுமானங்களின்மீது கட்டமைக்கப்படுபவை, கேள்வி கேட்காமல் நம்பப்படுபவை. பிரபஞ்சத்திலிருக்கும் எந்த சக்தியாலும் அந்நம்பிக்கையை அசைத்துவிட முடியாது.”
எல்லா தர்க்கத்துக்கும் அடிப்படைகள் இருக்கும். அந்த அடிப்படைகளைக் கேள்வி கேட்காமல் உண்மையென எடுத்துக்கொண்டால்தான் அவற்றின்மீது அடுத்தடுத்து தர்க்கங்கங்களைக் கட்டமைக்க முடியும். விஞ்ஞானமும் இவ்வாறே செயல்படுகிறது என்பதை இவ்வுரையாடல் கச்சிதமாகச் சொல்கிறது.
இக்கதை எனக்குள் எழுப்பிய கேள்வி — நாம் உருவாக்கும் இயந்திரங்களின் எஜமானர்கள் நாம்தானா? பல மனிதர்கள் இணைந்து அதிவேக மின் ரயில் உருவாக்குகிறோம், கடைசியில் அந்த ரயில் வந்து செல்லும் நேரத்திற்கு நாமே அடிமையாகிப் போகிறோம். ஆற்றல் சக்திக்காக இக்கதையில் வரும் பூமி விண்கப்பலை நம்பியுள்ளது. விண்கப்பலின் சூப்பர்கம்ப்யூட்டர் சரியாகச் செயல்பட்டால்தான் பூமிக்கு ஆற்றல் கிட்டி மனிதர்கள் உயிர் வாழ முடியும். அப்படியென்றால் எஜமானர் யார்? மனிதனா சூப்பர்கம்ப்யூட்டரா? இதற்கு நேரடியான பதில் எதுவும் அசிமோவ் தருவதில்லை, ஆனால் அவர் படைப்புகள் இப்படிப் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கும். பதில்களை வரையறுக்காமல் அதனை நோக்கிய தேடல் பயணமே அவரது எழுத்தின் அடுத்த தன்மைக்கு இட்டுச்செல்கிறது.
எழுத்தாளருக்கெனச் சில கருத்துகள் இருக்கலாம், அவை முன்முடிவுகளாக உருமாறிப் படைப்புகளில் வெளிப்படும். என்னதான் இருந்தாலும் இயற்கை கடைசியில் மனிதனை வெல்லும் என்று நினைப்பவர் கதை எழுத அமர்ந்தால் கதையிலும் இயற்கையின் கையே ஓங்கி நிற்கும். அசிமோவின் கதைகளை வைத்து அவருக்கு இருந்த நம்பிக்கைகள் எவற்றையும் கணிக்க இயலாது. எந்தவொரு முன்முடிவுகளும் இல்லாமல் எழுதுபவர். கேள்விகளே அவரின் எழுத்தை வழிநடத்துகின்றன. அவர் எழுதிய பல கதைகள் நம் எதிர்பார்ப்பையும் மீறி வேறோர் இடத்திற்குச் சென்று முடியும். Reason சிறுகதையைப் படித்தால் முன்முடிவற்ற முடிவென்று நான் சொல்லவருவது விளங்கும்.
இப்படியான முடிவு வெறும் டுவிஸ்ட் முடிவல்ல. டுவிஸ்ட் என்பது நாம் எதிர்பார்க்காதவொன்று மட்டுமே. ஆனால் அசிமோவ் கொடுக்கும் முடிவுகள் ஒட்டுமொத்தக் கதையின் தத்துவப் பார்வையைப் புரட்டிப்போடும், பல கேள்விகளை உங்களுக்குள் எழுப்பும், எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்வதற்குப் பிரம்மாண்டமான இடமளிக்கும்.
இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு Thermodynamics இன் இரண்டாம் கோட்பாட்டை மையமாகக் கொண்ட கதை The Last Question. இரண்டு விஞ்ஞானிகள் ஓய்வாக மது அருந்தும் வேளையில் தோன்றுகிற ஒரு சந்தேகத்தை சூப்பர்கம்ப்யூட்டரிடம் கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்குப் பதில் அளிக்கத் தற்போது போதிய தகவல்கள் இல்லை என கம்ப்யூட்டர் சொல்லும். அக்கேள்வி எப்படிப் பல மில்லியன் ஆண்டுகள் கடந்தும் அந்த சூப்பர்கம்ப்யூட்டரைத் துரத்திக்கொண்டே இருக்கிறது என்பதே கதை. தான் எழுதிய கதைகளிலேயே அசிமோவுக்கு மிகவும் பிடித்தமான கதை இது. சூப்பர்கம்ப்யூட்டர் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் கண்டறிகிறதா, பதில் என்ன என்பதற்குக் கதையைப் படியுங்கள். அம்முடிவில் விஞ்ஞானத்தையும் மதத்தையும் ஒரு புள்ளியில் இணைத்திருப்பார்.
இவர் எழுதிய End of Eternity நாவலின் முடிவும் இப்படியானதே. காலப் பயணம் சர்வசாதாரண நிகழ்வாகிப்போன எதிர்காலத்தில் கதை துவங்கும். கடந்த காலத்திற்குப் பயணித்துக் கால மாற்றங்கள் செய்வதற்கெனத் தனி அரசாங்கத் துறையே உருவாகியிருக்கும். கடந்த காலத்தில் எம்மாதிரியான மாற்றங்கள் செய்தால் நிகழ்காலம் பயனளிக்கும் விதத்தில் மாறும் எனக் கணித்து அதற்கேற்ப கால மாற்றங்கள் செய்யும் ஒருவனே கதாநாயகன். இப்படி எதிர்காலமற்று மாறிக்கொண்டே இருக்கும் நிகழ்கால உலகே Eternity (நித்தியம்). ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்தைத் தடுக்க நினைத்து நாயகன் செய்யும் செயல் கடைசியில் நித்தியத்தை என்ன செய்கிறது என்பதுவே கதை. காலப் பயணம் குறித்து எவ்வளவோ நாவல்களும் திரைப்படங்களும் வந்திருந்தாலும், காலம் பற்றி அசிமோவ் வரைந்துகாட்டும் மாபெரும் சித்திரம் அவ்வனைத்திற்கும் மாறானது.
அசிமோவின் பல கதைகளில் அரசியலும் ஓர் இழையாக வந்துகொண்டே இருக்கும். தனது கண்டடைதல் அணுகுண்டு உருவாகக் காரணமாக அமைந்ததை நினைத்து ஐன்ஸ்டீன் வருந்தியதை நாம் அறிவோம். எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை. இதை மிக அழகாகக் காட்டிய அசிமோவ் கதைகளில் ஒன்று The Feeling of Power. கால்குலேட்டரைத் தொடர்ந்து பயன்படுத்தும் மனித குலம் ஒரு கட்டத்தில் காகிதம் பென்சில் வைத்து எப்படிக் கணக்கு செய்வது என்பதையே மறந்து போகிறது. அப்படிப்பட்ட ஓர் எதிர்காலத்தில் கால்குலேட்டர் இல்லாமல் கணக்கு போடும் முறையை ஒரு மனிதன் தற்செயலாகக் கண்டடைகிறான். இச்சிறிய கண்டடைதல் எவ்வாறு பேரழிவை நோக்கி மனித குலத்தை இட்டுச்செல்கிறது என்பதே கதை.
Evidence என்கிற கதையில் தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர் ஒருவருக்குத் தனது எதிராளர் மனிதனே இல்லை, எந்திரம் என்கிற சந்தேகம் எழும். இதை நிரூபிப்பதில் ஏற்படும் சிக்கல்களை விவரிக்கிறது கதை. The Dead Past கதையில் காலப் பயணம் செய்யக்கூடிய எந்திரத்தை அரசாங்கம் தடை செய்திருக்கும். காலப் பயணம் செய்ய முனைபவர்களுக்கு அரசாங்கம் எடுத்த முடிவின் அரசியல் காரணங்கள் மெல்ல மெல்லப் புரியவரும். Caves of Steel நாவலில் எந்திர மனிதர்களை வெறுக்கும் மன நிலை மக்களிடையே பெருகிவரும் தருவாயில், முக்கிய பதவியிலிருக்கும் மனிதரை ஓர் எந்திரன் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும். விசாரணையின் முடிவுகள் அரசியல் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் ரகசியமாக நடத்தப்படும். இப்படிப் பல கதைகளில் அறிவியல் துறையில் அரசியல் செயல்படுவதையும், அறிவியல் ஏற்படுத்தும் அரசியல் தாக்கங்களையும் பின்புலமாக வைத்து எழுதியிருக்கிறார் அசிமோவ்.
இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால் எதிரெதிரான அரசியல் நிலைப்பாடுகள் கொண்ட கதாபாத்திரங்களின் நியாயங்களை நமக்குக் காட்டி, பிரச்சனையை மூட்டிவிட்டு, யாருக்கும் சார்பாக நிற்காமல் நம்மையே ஒரு முடிவுக்கு வரும்படி விட்டு அவர் விலகிவிடுவதுதான்.
The Endochronic Properties of Resublimated Thiotimoline என்றொரு சிறுகதையைத் தண்ணீரின் மேற்பரப்பைத் தொடுவதற்கு முன்னரே கரைந்துபோகும் ஒரு வேதிப்பொருளைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் போல எழுதியிருப்பார். அப்படியொரு வேதிப்பொருள் நிஜத்தில் கிடையாது. அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தோரணையைப் பகடி செய்யும் கட்டுரை அது. இப்படியான விளையாட்டுத்தனம் அவரின் பல கதைகளில் உண்டு. முன்பு குறிப்பிட்ட The Last Question என்கிற கதையும் விளையாட்டுத்தனமான ஒரு பந்தயத்திலிருந்து துவங்குகிறது.
அசிமோவின் விளையாட்டுத்தனத்துக்குச் சிறந்த எடுத்துகாட்டு அவர் உருவாக்கிய Azazel கதாபாத்திரம். இரண்டு செண்டிமீட்டர் அளவில் ஒரு சிற்றசுரன், கேட்கும் வரங்களை வழங்குபவன் அஸஸேல். அவனை கோட்டு பாக்கெட்டில் வைத்திருக்கும் ஜார்ஜ் தனது நண்பர்களுக்கு உதவி செய்ய அவனைப் பயன்படுத்தும்போது நடக்கும் ரகளைகளே 18 சிறுகதைகள் கொண்ட தொகுப்பாக வெளிவந்துள்ளது. அறிவியல் புனைவுக்குப் புகழ்பெற்ற அசிமோவ் எழுதிய இந்த மிகுபுனைவு கதைகளும் அட்டகாசம்.
The Gods Themselves நாவலில் மூன்று பாலினங்களுடைய ஏலியன்களையும் அவற்றின் ஊடல்களையும் கற்பனை செய்திருப்பார். (இந்நாவல் குறித்து கமலக்கண்ணன் அரூவில் எழுதிய கட்டுரையை இங்கு வாசிக்கலாம்.) Hallucination சிறுகதையில் வேற்றுக்கிரகமொன்றில் சின்னஞ்சிறு பூச்சிகள் பறந்து திரியும். அவை ஒன்றுசேரும்போது உருவற்ற ஒரு மனம் உருவாகி எண்ணங்கள் வழியாக மனிதர்களுடன் பேசும். இப்படிப் புதிதுபுதிதாகக் கற்பனை செய்ய வேண்டுமென்ற விழைவு அசிமோவின் புனைவுலகம் முழுதும் நிறைந்துள்ளது.
புதியது புரிந்துகொள்ளச் சற்று கடினமாகவும் சிறு அச்சம் ஏற்படுத்துவதுமாக இருக்கும். புதியதை மக்களுக்கு நன்கு பழக்கமான சட்டகத்துக்குள் வைத்தால் அது வினோதமாகத் தோன்றாது, புரிவதற்கும் எளிமையாக இருக்கும் என அசிமோவ் நம்பினார். ஆகவே தனது அறிவியல் புனைவுக் கதைகளுக்குத் துப்பறியும் திகில் கதைகளின் விறுவிறுப்பான கதைப்பின்னலைப் பயன்படுத்திக்கொண்டார். அசிமோவ் கதைகள் விறுவிறுப்பாகச் செல்வதால், அவர் எழுதுவது திருப்பங்கள் கொண்ட கதை மட்டுமே எனத் தவறாகப் புரிந்துகொள்ள வாய்ப்புள்ளது. அவருக்கு எப்போதுமே கதை என்பது ஓர் எண்ணத்தையோ, கண்ணோட்டத்தையோ கடத்தும் கருவி மட்டுமே. சொல்ல வரும் எண்ணம் குழப்பமானதாக, புரிந்துகொள்ளக் கடினமானதாக இருப்பதால்தான் அவரின் கதைசொல்லலையும் கதாபாத்திரங்களையும் எளிமைப்படுத்தினார். “ஒரு கதைக்குள் இரண்டு முரண்பட்ட கண்ணோட்டங்களை உருவாக்குவதில்தான் எனது முழு கவனமும் செல்கிறது. ஆகவே நான் ஆழமான கதாபாத்திர வார்ப்புகளுக்குள் செல்வதில்லை,” என Plotting கட்டுரையில் அவரே சொல்கிறார்.
இந்த எளிமையே அவர் எழுத்தின் பலம். இந்த எளிமையினால் அவர் எழுத்தில் பூடகத்தன்மை இல்லை, அவரின் படைப்புகள் வெறும் கதைப்பின்னல்கள்தான் போன்ற விமர்சனங்கள் எழுவதுண்டு. அது முழு உண்மையல்ல. அசிமோவின் பிரபலமான The Bicentinnial Man மற்றும் The Ugly Little Boy கதைகள் கதைப்பின்னலையும் தாண்டிச் சொல்லப்பட்டிருக்கும் விதத்தில்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப்பட்டிருக்கும் விதத்திற்கு இன்னொரு எடுத்துக்காட்டு அடுத்து வரும் கதை.
நான் இதுவரை குறிப்பிட்ட நான்கு தன்மைகளையும் ஒன்றாகக்கொண்ட அசிமோவின் சிறுகதை ஒன்றுண்டு. 1941இல் எழுதப்பட்ட இச்சிறுகதை Science Fiction Hall of Fame பட்டியலில் இடம்பெற்றுள்ளது. அறிவியல் புனைவென்றாலே இயந்திர மனிதர்கள், வினோத வேற்றுக்கிரகவாசிகள், காலப்பயணம், நெடுந்தூரம் செல்லும் விண்கப்பல்கள் இப்படி ஏதாவதொன்று இருக்க வேண்டியது அவசியம் என்றாகிவிட்டது. Nightfall கதையில் இவை எதுவும் இல்லை.
இக்கதைக்கு வித்திட்டவர் Astounding Science Fiction என்கிற அறிவியல் புனைவிதழின் ஆசிரியர் ஜான் கேம்பல் (John W Campbell). ஒரு நாள் கேம்பலின் அலுவலகத்திற்கு அசிமோவ் சென்றபோது, ரால்ப் வால்டோ எமர்சன் (Ralph Waldo Emerson) எழுதிய Nature கட்டுரையிலிருந்து ஒரு வரியை கேம்பல் படித்துக் காட்டினாராம், “If the stars should appear one night in a thousand years, how would men believe and adore, and preserve for many generations the remembrance of the City of God.” [ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை இரவில் நட்சத்திரங்கள் தோன்றினால், மனிதன் கடவுளின் ராஜ்ஜியத்தை நம்பி, வியந்து, பல யுகங்களுக்குப் பாதுகாத்து வருவானன்றோ?]
பிறகு கேம்பல் அசிமோவிடம் சொன்னாராம், “எமர்சன் சொல்வது தவறு. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நட்சத்திரங்கள் தோன்றினால் மக்களுக்கு நிச்சயம் பித்து பிடிக்கும். இதை வைத்து Nightfall என்கிற தலைப்பில் ஒரு கதை எழுது.” இப்படி அசிமோவ் எழுதத் துவங்கிய கதையே Nightfall.
லகாஷ் என்றொரு கோள். அங்கு பூமியில் மனிதர்கள் போலவே மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். லகாஷிற்கும் பூமிக்கும் ஒரே வித்தியாசம் லகாஷில் ஆறு சூரியன்கள் மாறி மாறி ஒளி பாய்ச்சுவதால் இரவையே கண்டிராதவர்கள் லகாஷ் வாசிகள். 2500 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆறு சூரியன்களுக்கும் ஒரே சமயத்தில் கிரகணம் நிகழ்ந்து முழு கோளும் இருட்டில் மூழ்கும். அப்படியொரு அடர் இருள் சூழவிருக்கும் தருணத்திற்கு அரை மணிநேரம் முன்பு கதை துவங்குகிறது. 2500 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாபெரும் தீ லகாஷ் கோளில் மனித குலத்தை எட்டு முறை அழித்துள்ளது, இதற்கான தடயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்திருப்பதாக ஒரு விஞ்ஞானி சொல்வார். இம்முறையும் அழிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாக அனுமானிப்பார். ஒவ்வொரு முறையும் அம்மாபெரும் தீ எவ்வாறு உருவாகியது, அடர் இருள் சூழும்போது என்ன நடந்தது, அழிவு எப்படி ஏற்பட்டது என்று யாருக்கும் தெரியாது. லகாஷ் வாசிகளின் புனிதப் புத்தகத்தில் ஆறு சூரியன்களும் மறைந்ததும் நட்சத்திரங்கள் தோன்றும், அவை அனைவருக்கும் பித்து பிடிக்கவைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரவையே கண்டிராததால் நட்சத்திரங்கள் என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை, விஞ்ஞானிகள் உட்பட. லகாஷின் கடைசி சூரியனும் மெல்ல மறைய, என்னவெல்லாம் நடக்கிறது, அடர் இருள் கோளைக் கவ்வியதும் என்ன நடந்தது என்பதே கதை.
இக்கதையில் முன்பு குறிப்பிட்ட நான்கு தன்மைகளும் எப்படிச் செயல்படுகின்றன என்று பார்ப்போம்.
கேள்வி எழுப்புதல் – மனித மனதைப் பேரச்சம் கொள்ளச் செய்வது எது? இதுவே Nightfall எழுப்பும் ஆதாரக் கேள்வி. அதுமட்டுமல்ல, உண்மையை முழுதாக அறிந்திட இயலுமா? மதமும் அறிவியலும் சந்திக்கும் புள்ளி ஒன்றுள்ளதா? இக்கதையில் வரும் ஆறு சூரியன்கள் பார்வையிலிருந்து மறைத்துவைத்திருக்கும் பல லட்சம் நட்சத்திரங்கள் போல நம் புலன்களுக்கு இன்னமும் பிடிபடாத வெளிச்சங்கள் உள்ளனவா? அவை என்னவென்றே ஊகிக்கமுடியா நிலையில் நாம் இருக்கிறோமா? இப்படிப் பெரும்வெடிப்பின் துகள்களெனக் கேள்விகளைச் சிதறவிடுகிறது Nightfall.
அரசியல் தாக்கம் – பொதுவாக விஞ்ஞானமும் மதமும் ஒன்றுடன் ஒன்று பேசிக்கொள்ளாது, எதிரிகளைப் போலவே ஒன்றையொன்று பாவிக்கும். இக்கதையில் மத நம்பிக்கையாளர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஓர் ஒப்பந்தம் ஏற்படும். விஞ்ஞானிகளுக்குத் தேவையான சில தகவல்களைப் பெற்றுத் தர மத நம்பிக்கையாளர்கள் உதவுவார்கள். ஆனால் இதில் இரு பக்கமும் அரசியல் சூழ்ச்சியும் நிகழும்.
முன்முடிவற்ற முடிவு – அடர் இருளில் என்னதான் நடக்கிறது என்பதைப் புகைப்படங்கள் எடுக்க விஞ்ஞானிகள் கருவிகளைத் தயார் நிலையில் வைத்திருப்பார்கள். சில நூறு மனிதர்களை முழு பாதுகாப்புடனான பாதாள அறையில் நட்சத்திரங்களின் வெளிச்சம் பட்டுவிடக் கூடாதென்று பத்திரமாக வைத்திருப்பார்கள். கடைசி சூரியனும் மெல்ல மறைய மத நம்பிக்கையாளர்கள் புனிதப் புத்தகத்தின் வரிகளைப் பக்தி ததும்பப் படித்துக்கொண்டிருப்பார்கள். ஒரு கும்பல் விஞ்ஞானிகளின் கூடத்தை அடித்து நொறுக்கக் கிளம்பியிருக்கும். கடைசி ஒளிக்கீற்று மறைந்ததும் என்ன நடக்கும்?
விளையாட்டுத்தனமான கற்பனை – Nightfall கதையில் லகாஷ் கோளில் இருக்கும் விஞ்ஞானிகள் நட்சத்திரங்கள் பற்றி விவாதிக்கும்போது, ஒரு விஞ்ஞானி கூறுவார், “ஒரேயொரு சூரியனைச் சுற்றிவரும் கோள் ஒன்றை கற்பனை செய்து பார்க்கிறேன். அதில் உயிர் உருவாக வாய்ப்பே இல்லை. போதுமான வெப்பமும் வெளிச்சமும் கிடைக்காது. அது சுழன்றால் பாதி நாள் வெளிச்சமாகவும் பாதி நாள் இருட்டாகவும் இருக்கும். ஒளி தேவைப்படும் உயிர்கள் அப்படியொரு நிலைமையில் உருவாக வாய்ப்பில்லை.” அப்படியொரு கோள் இருந்து, அதில் உயிர்கள் உருவாகி, சிந்தனை-மொழி உருவாகி, அரட்டை அடிக்க கைபேசி உருவாகி, அதில் இக்கதையைப் படிக்கும் உயிரை இது புன்னகைக்கச் செய்யும் அல்லவா?
இன்றுவரை வாசகர்களும் விமர்சகர்களும் Nightfall அசிமோவின் சிறந்த கதைகளுள் ஒன்றெனக் கருதுகிறார்கள். ஆனால் அசிமோவ் அப்படிக் கருதவில்லை என Gold தொகுப்பில் Nightfall கட்டுரையில் குறிப்பிடுகிறார். இக்கதை மக்களுக்குப் பிடித்துப்போனதற்கான காரணம் தெரியவில்லை என்கிறார். எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது. அதுவே அவர் எழுத்தின் முக்கியமான ஐந்தாவது தன்மை – அறிவியல், மதம் இரண்டையுமே பாகுபாடின்றி கேள்விக்கு உட்படுத்தி ஒரு புள்ளியில் இணைத்தல். அறிவியல், மதம், மனித வரலாறு எல்லாவற்றையும் நன்கு அறிந்ததாலேயே இது அவருக்குச் சாத்தியமாகியிருக்கும். (அசிமோவ் உயிர் வேதியியல் துறையில் ஆராய்ச்சி செய்தவர். Asimov’s Guide to the Bible என்று 1300 பக்கங்களுக்கு பைபிள் பற்றி புத்தகமும் எழுதியவர். வரலாறு குறித்தும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.)
அறிவியல் புனைவு கதைகளின் மையமே அறிவியலும் தர்க்கமும்தான். தர்க்க முறையை அறிவியல் பின்பற்றினாலும் விஞ்ஞானிகள் ஒன்றும் பேரறிவாளிகள் அல்ல, குறைகள் கொண்ட உணர்வெழுச்சிகளுக்கு உட்பட்ட மனிதர்களே என்கிற புரிதலோடு எழுதுகிறார் அசிமோவ். என்னதான் தர்க்கம் பேசினாலும் காரிருள் இக்கதையில் வரும் அனைத்து விஞ்ஞானிகளையும் துணுக்குறச்செய்கிறது. விஞ்ஞானிகளும் தங்களுக்குத் தெரியாததை நினைத்து மலைத்துப் போவதாக, இருக்கிற தகவல்களை வைத்துத் தவறான அனுமானங்கள் உருவாக்குவதாகக் காட்டுகிறார் அசிமோவ்.
உதாரணத்திற்கு, நட்சத்திரங்கள் என்னவென்றே தெரியாத விஞ்ஞானிகள் ஒரு வேளை இருட்டில் ஒளிக்கு ஏங்குகிற மனித மனதின் கற்பனையாக அவை இருக்கலாம் என ஊகிக்கின்றனர். புனிதப் புத்தகம் பல லட்சம் நட்சத்திரங்கள் வானில் தோன்றும் எனச் சொல்கிறது. “அது எப்படிச் சாத்தியம்? அதிகபட்சம் ஐந்து ஆறு நட்சத்திரங்கள் இருக்கலாம். புனிதப் புத்தகம் மிகைப்படுத்தியிருக்கலாம்,” என்று தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். இதுவே உண்மையான அறிவியல் முறை, தெரியாத விஷயத்தைப் பற்றி பல அனுமானங்கள் உருவாகும், பிறகு அவதானிப்புகள் வழியாக தவறான அனுமானங்கள் தகர்க்கப்படும். இப்படித் தவறான அனுமானங்களுக்கும் இடமளிக்கிறது கதை.
இக்கதையில் மத நம்பிக்கையாளர்களைக் கிண்டல் செய்யப் பல வாய்ப்புகளிருந்தும் அசிமோவ் அதைச் செய்யவில்லை. மதமும் அறிவியல் போலவே உண்மையின் தடங்களைப் பின்தொடர்ந்து அலைவதைக் காட்டுகிறார். ஆனால் உண்மை இரண்டின் பிடியிலிருந்தும் நழுவி ஓடிக்கொண்டே இருக்கிறது. கடைசியில் உண்மையின் பிரம்மாண்டக் காட்சிக்கு முன் அறிவியலும் சரி மதமும் சரி வாயடைத்துப்போய் நிற்கும் தருணத்தைக் காட்டுகிறது Nightfall. இப்படி வாயடைத்துப்போகும் பல தருணங்களுக்கு இட்டுச்சென்று அதுவரை நாம் உலகையும் வாழ்வையும் கண்ட விதத்தைத் திருப்பிப்போடுவதே அசிமோவ் எழுதிய கதைகளின் வெற்றி.
நான் இதுவரை குறிப்பிட்ட ஐந்து தன்மைகளும் அசிமோவின் புனைவுத்தன்மைகள் மட்டுமல்லாமல் நல்ல அறிவியல் கதைகளுக்கான கூறுகளாகவும் தோன்றுகின்றன. கேள்வி எழுப்புதல், விளையாட்டுத்தனமான கற்பனை, அரசியல் தாக்கம், முன்முடிவற்ற முடிவு, அறிவியல்-மதம்-தத்துவம் சந்திக்கும் புள்ளி — இவையே என்னை அசிமோவின் எழுத்துக்குள் மீண்டும் மீண்டும் மூழ்கடிக்கச் செய்கின்றன.
தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…
ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…
ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்
அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?
அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…