கட்டுரை

எலி மூஞ்சிக் காவியம்

6 நிமிட வாசிப்பு

Art Spiegelman’s Maus 1 – A Survivor’s Tale: My Father Bleeds History, Maus 2 – A Survivor’s Tale: And Here My Troubles Began

ஆர்ட் ஸ்பீகல்மனின் மவுஸ் (முதல் பாகம்) சித்திர நாவல் பெரும் கவனத்தைப் பெற்றதற்குப் பின்னான ஒரு காலத்தில் ஜெர்மனிய நிருபர் ஒருவர், ஜெர்மன் புதிய தலைமுறையினருக்கு ஏற்கனவே போதுமான அளவு இனப்பேரழிவுக் கதைகள் இருக்கிற போது, ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்படும் மவுஸ் கூடுதல் என்றும் தாங்கள் பிறப்பதற்கு முந்தைய போர்க்குற்றங்களுக்கு அவர்கள் ஏன் குற்றவுணர்ச்சி கொள்ள வேண்டுமென்றும் கேட்கிறார். அதற்கு ஆர்ட் ஸ்பீகல்மன், “எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை எல்லாரும் எப்போதும் குற்றவுணர்ச்சியோடுதான் இருக்க வேண்டும் போல”, என்கிறார். ஜெர்மனியின் வதைமுகாம் துயரங்களைச் செவி வழி மட்டுமே கேட்டறிந்த, தனது சகோதரனையும் பெரும்பாலான உறவினரையும் இனவழிப்பில் இழந்த, இரண்டாம் உலகப் போருக்குப் பின் பிறந்தவரான ஆர்ட் ஸ்பீகல்மனின் குற்றவுணர்ச்சியே மவுசின் மூலாதாரம்.

மவுசுக்குப் பல வருடங்கள் முன்பு, அண்டர்கிரவுண்டு காமிக்ஸ் (எழுபதுகளின் அமெரிக்க எதிர்க்கலாசார இயக்கங்களின் காமிக்ஸ் முகம்) இதழ் ஒன்றில் வெளிவந்த, ‘நரகபூமியில் ஒரு கைதி’ என்ற ஆர்ட்டின் நான்கு பக்கச் சித்திரக் கதையிலிருந்தே மவுஸ் கிளைத்திருக்கக்கூடும். ஆர்ட்டின் தாய் ஆன்யா பிளேடால் தன் கையைக் கீறிக் கொண்டு செத்ததை இருள் அடர்ந்த சித்திரங்கள் வழியாக மனப்பிறழ்வு மொழியில் சொல்கிறது அக்கதை. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக ஒர் இரவு ஆர்ட்டிடம் வந்த ஆன்யா, அவர் தன்னை நேசிக்கிறாரா என்று கேட்டதற்கு தான் ஆமென்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டதாகவும், அதற்குக் காரணம் தனது தாய் தொப்புள் கொடியைக் கழுத்தில் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததுதான் என்று ஆர்ட் சொல்வதாகச் செல்கிறது கதை.

ஆர்ட்டின் மனப்பதற்றம், ஆன்யாவிடமிருந்து அவருக்கு வந்திருக்கக் கூடும். ஆன்யா முதல் குழந்தைக்குப் (போரில் இறந்துபோன ஆர்ட்டின் சகோதரன் ரிச்சியூ) பின் மன அழுத்தம் கூடிப் பிதற்ற, சில மாதங்கள் செக்கோஸ்லவோக்கியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சையெடுக்கிறாள். போர் அழுத்தம் கூடக்கூட கணவனான வ்ளாடெக் ஸ்பீகல்மனுடன் பல இடங்களிலும் ஒளிந்து திரிந்து பிடிபட்டு ஆஷ்விட்ஸ் (வதைமுகாம்) சேர்கிறாள். ஆஷ்விட்சில் ஆன்யாவின் பாடுகளை நாம் வ்ளாடெக்கின் கூற்று வழியாகவே அறிகிறோம். அங்கே தனது சில சாகசங்கள் மூலம் வ்ளாடெக் ஆன்யாவிடம் தொடர்புகொள்கிறார். செய்தி பரிமாறிக்கொள்கிறார். ரொட்டித் துண்டுகளையும் அனுப்புகிறார். நேசப்படைகள் நெருங்கிய பின் எஞ்சியிருந்த கைதிகளை ஆஷ்விட்சிலிருந்து ஜெர்மனியின் உள் பகுதிகளுக்கு அனுப்புகிறது ராணுவம். விடுவிக்கப்பட்ட ஆன்யா, போருக்கு முந்திய வாழ்விடமான சோஸ்னொவியக் சென்று வ்ளாடெக் வரும் வரை காத்திருக்கிறாள். ’அதற்குப்பிறகு நாங்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தோம்’, என்கிறார் வ்ளாடெக். பல வருடங்கள் தாண்டி கையைக் கிழித்துக்கொண்டு ஆன்யா குளியல் தொட்டியில் ரத்தமாய் கிடக்கும் வரை.

ஆர்ட், மனநலக் காப்பகத்திலிருந்து வீடு வந்த சில மாதங்களிலேயே நடந்த ஆன்யாவின் தற்கொலை அவரைக் குற்றவுணர்வில் தள்ளுவதற்குத் தோதாக உறவினரின் சொற்கள் அமைகின்றன. ஆன்யாவைப் புதைத்த இரவன்று தகப்பனும் மகனும் யூத வழக்கப்படி தரையில் படுத்துக்கொள்கிறார்கள். இரவு முழுவதும் மகனைக் கட்டிக் கொண்டு வ்ளாடெக் அரற்றுகிறார். அது வரையில் தந்தைக்கும் மகனுக்குமான தொடர்புப் புள்ளியாக இருந்திருக்கக்கூடிய ஆன்யா திடீரென்று மறைந்துபோக இருவரும் ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். தாயின் மரணம் அடர்த்தியும் இருண்மையும் கொண்ட சித்திரங்களால் சொல்லப்படுகிறபோது தந்தையின் மாபெரும் துயரக்கதையோ எளிய சித்திரங்களின் வெறுமையான மொழியில் காணப்படுகிறது. மொத்த நாவலுமே (மவுஸ்) ஆன்யாவின் மரணத்திற்கான (நரக பூமியின் கைதி) பின்னிணைப்புதான் போல. நாவல் உருவாக்கும் ஆன்யாவின் சித்திரத்திலிருந்து நமக்கு எழுகிற கேள்விகளில் முதன்மையானது, உலகின் ஆகக் கொடூரமான வதை முகாமிலிருந்து தப்பிப்பிழைத்த ஒருத்தி ஏன் கையைக் கிழித்துக்கொண்டு சாக வேண்டும் என்பதே.

ஆர்ட் தனது தந்தை வ்ளாடெக் ஸ்பீகல்மனிடம் அவரது இரண்டாம் உலகப்போர் அனுபவங்களைக் கேட்பதன், கிட்டத்தட்ட நேர்காணல் செய்வதன் வழியே விரியும் மவுஸ், அவரின் இளமைப் பருவம் முதல் இறப்பு வரை முழுமையாகப் பதிவு செய்கிறது. அதே நேரம், வ்ளாடெக்கின் உலகப்போர் நினைவுகளாக மட்டுமே சுருங்கிவிடாமல், அது உருப்பெற்றுக்கொண்டிருந்த காலத்தின் வாழ்வையும் சேர்த்தே சொல்கிறது. மவுஸின் சித்திரங்கள் கிட்டத்தட்ட வ்ளாடெக் தனது நினைவுகளைச் சொல்கையிலேயே வரைந்தது போலத் தோன்றுகின்றன. ஒரு பத்திரிக்கைக்காரன் நேர்ப்பேச்சைச் சுருக்கெழுத்தில் எழுதுவது போல. ஒரு இடத்தில், ஆர்ட்டின் சிற்றன்னை வ்ளாடெக்கின் கருமித்தனத்தைப் பற்றிப் பொரும, உள்ளே வரும் வ்ளாடெக்கிடம், தான் அதுவரை வரைந்த நாவலைக் காட்டுகிறார் ஆர்ட். பிறகு அங்கே நடந்த உரையாடலை உடனே குறித்துக்கொள்ள வேண்டுமென்றும், இல்லாவிட்டால் மறந்துவிடுமென்றும் சொல்கிறார். கதைசொல்லி கதையை உருவாக்குகிற விதத்தையும் இப்படிக் கதைக்குள்ளேயே காட்டுவது, ஓர் ஆவணச் சித்திரக் கதையாடலாக நாவலை ஆக்குகிறது.

விளாடெக் ஸ்பீகல்மனின் வதைமுகாம் அனுபவங்கள் கிட்டத்தட்ட ஒரு சாகசம் போலவே சொல்லப்படுகின்றன. ஆஷ்விட்ஸுக்குள் சென்றதுமே கண்காணிப்பாளருக்கு ஆங்கிலம் கற்பிக்கும் வாய்ப்பில் கடும் உடல் உழைப்பிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் வ்ளாடெக், பதிலுதவியாக முட்டை, கறி, வெண்ணை என்று ஊட்டம் பெறுகிறார். உடல்வலு, உயிருடன் இருப்பதோடு நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கும் ஆஷ்விட்ஸில் இது விளாடெக்கின் நல்லூழ்தான். வெறும் ஒரு கப் சூப்பும் துண்டு ரொட்டியும் மட்டுமே ஒரு நாளுக்கான உணவு என்பதிலிருந்து விடுதலை. கூடுதலாக, ரொட்டியைச் சேமிக்கும் பழக்கம் மூலம் பல காரியங்களையும் சாதிக்கிறார். ஒரு நாளைய ரொட்டி 3 சிகரெட்டுகளுக்குச் சமம். 200 சிகரெட்டுகள் ஒரு வோட்கா போத்தலுக்குச் சமம். அதன் மூலமே ஆஷ்விட்சிலிருந்து சில மைல் தொலைவிலிருக்கும் பிர்கனாவ் முகாமிலிருந்த ஆன்யாவிற்குச் செய்தியுடன், ரொட்டியையும் கூட அனுப்ப முடிகிறது. மேலும் பிர்கனாவ் முகாமில் நடக்கும் ஒரு வேலை நிமித்தம் அங்கே சென்று ஆன்யாவைப் பார்க்கவும் செய்கிறார். அப்பழக்கம் அவரைக் கடைசி வரை விடாமலிருப்பதை ஆர்ட் காண்கிறார். ஒரு சமயம், உறவினனான ஹாஸ்கல் நகைகளை வாங்கிக்கொண்டு ஏமாற்றியதால் ஆன்யாவின் பெற்றோரைக் காப்பாற்ற முடியாமல் போனதைச் சொல்லிக்கொண்டே வரும்போது, வ்ளாடெக் தெருவில் கீழே கிடக்கும் ஒரு தொலைபேசிக் கம்பியை எடுக்கிறார். ’ஏன் எப்போதுமே குப்பையைச் சேர்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?’, என்று ஆர்ட் கேட்க, ’பயன்படும் ’, என்கிறார். ஆன்யா இறந்த பிறகு வ்ளாடெக்கை மணந்துகொண்ட மாலா, ’விளாடெக்கோடு ஆன்யா எப்படித் தான் வாழ்ந்தாளோ’, என்று ஆர்ட்டிடம் குமுறுகிறாள். மாரடைப்பில் தப்பிப் பிழைத்த வ்ளாடெக் இறுதியில் ஆர்ட்டை மனைவியோடு தன்னுடன் வந்து தங்கும்படி வற்புறுத்துகிறார். வாடகை ஏதும் கொடுக்கத் தேவையில்லை என்கிறார். ஒரு சமயம் மீந்துபோன உணவுப் பொருட்களை அவற்றை வாங்கிய கடையிலேயே கொடுத்து மாற்றிப் புதிய பொருட்களை வாங்குகிறார். இதைச் செய்யும் பொருட்டு அவர் கடை மேலாளரைக் கெஞ்சுவதை வெளியே காரிலிருந்தபடியே கவனிக்கும் ஆர்ட் கூசிப் போகிறார். புதிய உணவுப்பொருட்களோடு காருக்குத் திரும்பும் வ்ளாடெக், தான் வதைமுகாமில் பட்ட துயரங்களையும் தனது மோசமான உடல் நிலையையும் மனைவி தன்னை விட்டுப் போனதையும் மேலாளரிடம் சொன்னேன் என்கிறார். ‘ஹிட்லருக்குப் பின்’ தன்னால் ஒரு சிறு ரொட்டித் துண்டைக்கூட வீசியெறிய முடியாது என்பதை வ்ளாடெக் ஆர்ட்டுக்கு விளங்க வைத்திருக்க முடியாது. கடையிலிருந்து திரும்பும் வழியில் கைகாட்டும் ஓர் ஆப்பிரிக்க அமெரிக்கனை ஃப்ரான்ஸ்வாஸ் (ஆர்ட்டின் மனைவி) காரில் ஏற்றிக்கொள்ள, திகைத்துப் போகிறார் வ்ளாடெக். கொந்தளிக்கும் வ்ளாடெக்கிடம் ஃப்ரான்ஸ்வாஸ், இப்படித்தான் யூதர்களை ஜெர்மானியர்கள் நடத்தினார்கள் எனக் கூற, “யூதர்களும் ஷ்வார்ட்சர்களும் (நீக்ரோ என்ற சொல்லுக்கு இணையான கறுப்பினத்தவரைக் குறிக்கும் யூதச் சொல்) ஒன்றா?”, எனக் கொதிக்கிறார். தனது தந்தையை உள்ளது உள்ளபடியே காண்பிப்பதில் ஆர்ட் ஒருவகையில் ஆசுவாசம் அடைகிறார் போலும்.

போரின் இறுதியில், மிருகங்களைக் கொண்டு செல்லும் ரயிலில், அதன் கொள்ளளவுக்கும் மேலாக கைதிகளை அடைத்து அனுப்பியபோது, தன்னிடமிருந்த போர்வையை மேலே இருந்த கொண்டியில் மாட்டிச் சிறிய ஊஞ்சல் போலாக்கி ஏறிக்கொண்டதன் மூலம், அடைக்கப்பட்ட 200பேரில் உயிர் தப்பிய மிகச்சிலரில் ஒருவராக மீள்கிறார். இப்படி அசாதாரணமான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துகொள்வதன் வழியே பிழைத்துக்கிடக்கும் வ்ளாடெக் ஆர்ட்டுக்கு எப்போதுமே சவாலாக இருக்கிறார். ஆர்ட் ஸ்பீகல்மனுக்குத் தனது தந்தையான வ்ளாடெக் ஸ்பீகல்மனைத் தாண்டி செல்வதே வாழ்வின் ஆகப் பெரிய காரியமாக இருந்திருக்கக்கூடும். ஒரு இடத்தில் ஆர்ட் தனது மனைவியிடம், ‘நான் எனது தந்தையிடம் போட்டியிடத் தேவைப்படாத இடம் அதுதான்’, என்று தான் ஓவியனானதைப் பற்றிச் சொல்கிறார். அது ஒன்றுக்கும் பயனற்றது என்று வ்ளாடெக் சொன்னதையும் மீறி. மற்றொரு சமயம், சிறு வயதில் நாஜிக்கள் தனது பெற்றோரில் ஒருவரை மட்டும் கூப்பிட்டால் யாரை அனுப்புவது என்று நினைக்கும்போதெல்லாம், அப்பாவை அனுப்பிவிட்டு அம்மாவைக் காப்பாற்றவே விரும்பினேன் என்கிறார். அப்படி நினைப்பது ஒன்றும் தப்பில்லையே என்றும் கேட்கிறார்.

நாவலின் உள்ளேயே, தான் ஆஷ்விட்சில் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என்றும், தனது பெற்றோர் அனுபவித்த துயரங்கள் புரிந்திருக்கும் என்றும் சொல்லும் ஆர்ட், அந்தக் குற்ற உணர்ச்சியே மவுஸ் உருவாக்கத் தூண்டியது என்றும் அதைச் செய்து முடிக்க முடியுமா என்றும் மலைக்கிறார். அதோடு, தன்னால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாததும், கற்பனை செய்ய முடியாததுமான போர்க்கால எதார்த்தம் காமிக்சைச் சிக்கலாக்கும் என்கிறார். பல தகவல்கள் விடுபடக்கூடுமென்றும் தவறாகப் பதியப்படலாமென்றும் அஞ்சுகிறார். எடுத்துக்காட்டாக வ்ளாடெக் வேலை செய்த நாஜிக்களின் டின் தொழிற்சாலை எப்படி இருந்ததென்று தன்னால் கற்பனை செய்யவே முடியவில்லை என்று தந்தையின் நண்பரிடம் (ஆஷ்விட்சிலிருந்து பிழைத்தவர்) புலம்புகிறார். பிறகு எந்திரங்களை வரைவது குறித்த தனது வெறுப்பையும்.

மவுசின் இரண்டாம் பாகத்தை தனக்கு முன் பிறந்து போரில் பலியான சகோதரன் ரிச்சியூவிற்கு சமர்ப்பிக்கிறார் ஆர்ட். வ்ளாடெக், ரிச்சியூவின் சாவு குறித்துச் சொல்லும்போது, பாதுகாப்பான இடம் என்று நம்பி தப்புவித்த ஊரிலும் யூதர்கள் வேட்டையாடப்பட, டோஷா (உறவினர்) தனது பாதுகாப்பிலிருந்த மூன்று குழந்தைகளுக்கும் விசம் கொடுத்துத் தானும் குடித்தாள் என்கிறார். இதை யாராவது வ்ளாடெக்கிற்குச் சொல்லியிருக்க வேண்டும். அது உண்மையா என்று உறுதிப்படுத்தியிருக்க முடியாது. அதி உக்கிரமான போர்க்காலத்தைத் தப்பிப் பிழைத்தவர்களுக்கு எஞ்சுவதெல்லாம் இதுபோன்ற கதைகளே. குழந்தைகளைச் சுவற்றில் அடித்துக் கொன்ற கதை, பெண்களைக் கூட்டாக வன்புணர்ந்த கதை, தனது சவக்குழியைத் தானே தோண்டிய கதை, அருவியில் கூட்டமாகக் குளிக்கச் செல்வது போல நச்சுவாயு அறைக்குள் அனுப்பப்பட்ட கதை என. எஞ்சியுள்ள காலத்தில் அவர்கள் அந்தக் கதைகளைப் பிறருக்குச் சொல்லுமாறு சபிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாவலில் யூதர்கள் எலிமூஞ்சியுடனும், ஜெர்மானியர்கள் பூனை மூஞ்சியுடனும் காணப்பட, போலந்தவர் பன்றி மூஞ்சியும் அமெரிக்கர்கள் நாய் மூஞ்சியும் கொண்டிருக்கின்றனர். மவுஸ் முதல் பாக வெற்றிக்குப் பின்னான நேர்காணல் ஒன்றில், ’இஸ்ரேலிய யூதர்களை வரைந்தால் எந்த மிருகமாக வரைவீர்கள்?’ என்ற கேள்விக்கு, ’முள்ளம்பன்றிகள்’, என்கிறார் ஆர்ட். முள்ளம்பன்றிகள் பார்ப்பதற்குக் கொஞ்சம் பெரிய எலிகள் போலவும், வேறு மிருகங்களிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள முட்களைக் வளர்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தால், ஆர்ட் சட்டென்று தான்தோன்றித்தனமாகப் பதில் சொல்லவில்லையென்றே தோன்றுகிறது.


நன்றி: கபாடபுரம்

வரதராஜன் ராஜூ

சித்திரக் கதைகள் எழுதும் / வரையும் வரதராஜன் ராஜு மதுரையில் வசிக்கிறார். காமிக்ஸ், கிராபிக் நாவல்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்துள்ளன. ஆரோன் மெஸ்கின் காமிக்ஸின் அழகியல் குறித்து எழுதிய கட்டுரை இவர் மொழிபெயர்த்து கல்குதிரை இதழில் வெளியானது. இவரது காமிக்ஸ், சித்திரங்களைக் காண — https://carmegam.wordpress.com/

Share
Published by
வரதராஜன் ராஜூ

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago