நாளின் புன்னகை

< 1 நிமிட வாசிப்பு

ஓர் இனிய நினைவூட்டலைப் போலிருக்கும் புகைப்படக் கண்காட்சிக்குச் செல்கிறீர்கள். தரைக்கு இன்றுதான் வருகுவதோ எனத்தோன்றும் புள்ளினங்கள், அகங்கார நிலக்காட்சிகள், மழைவில் சறுக்குகள் என அழகின் வண்ணங்களின் மெளன வார்ப்புகள்… மின்னல் கொத்தினைக் கண்ணுறுவதென நீங்கள் பார்க்கிறீர்கள், ராணி போல அழுகின்ற சிறுமியின் புகைப்படத்தினையும் அதனருகில் மிதந்துகொண்டிருக்கும் நான்கைந்து குட்டி ஆடுகளின் புகைப்படத்தினையும். ஒரு விடுகதையின் கனவினை விட்டு வெளியேவர முயல்பவனைப் போல் இரண்டையும் இமையாது வெறிக்கிறீர்கள். எங்கிருந்து நுழைந்த மாயையோ… திடுமென ஆடுகளைச் சிறுமியை நோக்கிச் செலுத்த, அவள் கண்களைத் துடைத்துவிட்டு, பக்கத்துப் புகைப்படத்திலிருக்கிற சிறுவனிடம் செல்கிறாள். அப்புறம், இருவரும் நடக்கிறார்கள் வெய்யில் அடித்தபடி, மழை தூறும் வீதியின் புகைப்படத்தில்… நீங்கள் அவர்களைப் பார்க்கிறீர்கள். மேலும் உங்களை அறியாமலேயே புன்னகைக்கிறீர்கள்…

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்