வயது குறைந்த மரத்தின்
ஊசிக் கிளைகளில்
முதற் தடவையாக தொடை நடுங்கியபடி
சிறு குழந்தையைப்போல்
நடை பயில்கிறதோர் காற்று
கிளைகளின் ஓயாத பேயாட்டம்
அதனைப் பறைசாற்றுகிறது
அது மரத்தின் காலடிக்கும்
கிளைக்குமிடையிலான தூரத்தை
இடைக்கிடை கண்களால் அளந்து கணிக்கையில்
நெஞ்சு பதைபதைத்துக் கிலியுறுகிறது
அதன் பதட்டம் அதிகரித்து
கால் இடறி விழுகையில்
இலையின் நுனியைப் பிடித்து
அந்தரத்தில் தொங்குகிறது
பழுத்த இலையாக இருந்திருந்தால்
காற்று இன்னேரம்
காம்போடு கழன்று விழுந்து
குற்றுயிராய்க் கிடந்திருக்கும்
அல்லது செத்து மடிந்திருக்கும்
சம்பவத்தைக் கிளையின் மீது
ஓய்வெடுத்திருந்த பறவை
அவதானித்த மட்டில்
உடன் தனது றெக்கைகளைக் கொடுத்து
காற்றை மேலே தூக்கிவிடுகிறது
இப்போது மரத்தின் பசுமை மீந்த மடியில்
சம்மாரமிட்டு உட்கார்ந்திருக்கிறது
தப்பிப் பிழைத்த காற்று
அதன் உயிரைச் சேகரம் செய்த திருப்தியில்
கூட்டினுள் குஞ்சுகளை
அரவணைத்தபடி உறங்கும் பறவையின்
இறகுகளை இதமாகக் கோதிவிடுகிறது
இனி அனுபவமிக்க அப்பறவையின்
சிறகுகளைப் பற்றிப் பிடித்தபடி
காற்று நிதானமாக நடை பயின்று
தன் இலக்கைக் கண்டடையும்
நடை பயிலும் காற்று
< 1 நிமிட வாசிப்பு