கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்

10 நிமிட வாசிப்பு

என்னுடைய ‘கவிதை பற்றி’ நூலை முழுமையாகப் படிக்க நேர்ந்த பிரமிள் என்னுடனும் சில நண்பர்களுடனும் நடந்த உரையாடலில் பேசியவற்றை இங்கே முழுமையாகக் குறிப்பிட்டால் அது எனக்கு உவப்பில்லாத ஒரு சுயசரிதைத்தன்மையையும் வரலாற்றையும், ஒரு பெருமையையும் கொண்டுவிடும். பயன்மிக்க முக்கியமான விஷயத்தை மட்டும் இங்கே வெளிப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

“இந்தக் கட்டுரையை எத்தகைய மனதினால் எழுத முடியும் தெரியுமா?” என்று புகழ்ந்து சிலாகித்த பிறகுதான் ஓர் அவரோகணம் போல் தாழ்ந்த சுருதியில் அவர் கூறியது: “நானும் கவிதை குறித்து எழுதியிருக்கிறேன். இப்படி theory for theorysake ஆக நான் எழுதியதில்லை.”

இன்றைக்கும் ஒரு கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கும் இவ்வேளையில் எல்லாவற்றையுமே சமன்செய்தபடி எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

***

கவிதையைப் பற்றி நாம் பேச நினைக்கிறோம். கவிதையைப் பற்றிப் பேசத் தகுதியான ஒரே நபர் கவிதைதான். கவிஞன் தன் கவிதையைக் குறித்துப் பேச விரும்பாமல் போகலாம். ஆனால் அந்த மனம் தன் கவிதையை ஆய்வது நல்லது. தேவையானதும் கூட.

முதலில் கவிதை நிகழ்கிறது. அதன்பிறகுதான் அது தன்னை ஆய்வு செய்கிறது. ஆய்வோ கவிதைக்கு அகப்படாமல் போகிறபோக்கில் அது சொல்லிவிட்டுப்போகும் குறிப்புக்களை நமக்குச் செல்வமாகத் தந்துவிட்டுப் போகிறது. கவிதை குறித்த பேச்சோ வேறுகதை. கவிதையைக் கண்டவர்களுக்கு கவிதையைக் குறித்த பேச்சு ஒரு விளக்கம்தானே ஒழிய கவிதை இல்லை. ஆனாலும் விளக்கமும் ஒரு பொருள்தானே. சிலருக்கு இந்த விளக்கம் போதாமல் ஆகிவிடுகிறது. சிலருக்கு அனுபவித்தவர்களின் விளக்கம் இனிமை தருகிறது. என்றாலும் காண்பதே பேரனுபவம்! கவிதை! விளக்கமும் கூட அனுபவத்தை அடைகிற மனதிற்குள் கவிதையைப் பெய்துவிடத்தான் செய்கிறது. அப்போது அதுவும் ஒரு காணல்தான். ஏதானாலும் சரி. கவிதை எப்போதுமே காண்பதற்கான தகுதியையே இறைஞ்சி நிற்கிறது. சரியான விளக்கத்தின் நோக்கமும்கூட அதுதான். ஆனாலும் விளக்கங்கள் கவிதையனுபவத்தைக் கொடுப்பதில்லை என்பதுதான் கண்கூடான உண்மையும் மானுட அனுபவமும்.

நாம் இப்போது இங்கே செய்யப்போவது கவிதையனுபவம் பற்றிய ஒரு விளக்கமல்ல: ஓர் ஆய்வு. சிறுபார்வை. மீண்டும் முயலும் ஒரு எடுத்துரைப்பு. கவிதையை அனுபவம் கொள்வதற்கான முன்அறிவுகளையோ வரையறைகளையோ வகுத்துவிடாத கவனம். முன்அறிவுகளும் வரையறைகளும் உருவாகிவிட்ட பிறகு கவிதை ஒரு கலையாகிவிடுகிறது. அந்தப் பேரனுபவம் கிட்டுமா என்பது கேள்விக்குறியே, கிட்டும் என்று கூறுகிறார்கள். நாமும் மேலே சொல்லியிருக்கிறோம். விளக்கத்தாலும் ஓர் அகக் காணல் நடக்கலாம் என்று.

கவிதையை ஒரு சிறந்த கட்டுமானமாக அறிந்திருப்பவர்கள் கவிதையைப் படைக்கையில் ஒரு கட்டுமானம் தானே வந்து சேரும்.

உந்துதலையே வைத்துக்கொண்டு இயங்கவேண்டும். மாறாக, உற்பத்தி செய்துவிடுபவர்களால் வாழ்வையோ, கவிதையையோ கண்டுகொள்ள முடியாமலே போய்விடவும் செய்கிறது என்பதே நமது தயக்கமும் அச்சமும். எதையும் கலையாக்கி மகிழலாம். கவிதையை மட்டும் கலையாக்கிவிடக்கூடாது என்று புரிந்துகொண்டிருக்கிறேன். கலையாகும் ஒரு பார்வைதான் – அதாவது ஒரு வகை அழகுதான் கவிதை என்று ஒரு சிலர் தர்க்கிக்க முன்வரக்கூடும். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டபடி நாம் விலகிவிட வேண்டியதுதான். ஆழமற்றது அந்த உவப்பு என்பதை அவர்கள் தாங்களேதாம் அறியவேண்டும். பழமையான சொற்களில் கூற வேண்டுமானால் ஆன்மிகமான ஒரு கண்டடைதலையே கவிதை என வேண்டும். மேல்நோக்கிய ஓர் ஆற்றல் அது. புனிதமான முழுமை உணர்வு அது. ஆறாத புத்துணர்ச்சி மிளிரும் கவிதையின் மதம் இதுவே. வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் நாம் பருகும்தோறும் நோக்கமற்று மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருப்பது. வாழ்வெனும் பெருங்கலையைக் கண்டடைவதற்கான ஒரே வழியாக இதுவே இருப்பதை அறியாத அறியாமையில்தான் நேற்று, நாளை, அகம், புறம், நான், நீ, நன்மை, தீமை என்றெல்லாம் எதையும் பிரித்தே நோக்கி உண்மையை அறிய முடியாதவர்களாகிவிடுகிறோம்.

இந்த ‘மகாநதி’ கவிதையையே பார்க்கலாம்.

அகன்ற இதன் பரப்பைக்கண்டு, கடலோ என வியக்கிறது வானம். வானத்தைத் தன் நெஞ்சில் நிறைத்துக்கொண்டு கிடக்கிற நதிக்கும் வானத்திற்குமிடையே உள்ள காதலோ சொல்லிமாளாத பேரனுபவம். அதன்பிறகுகூட இந்தக் காதல்! இந்தக் காதல்தான் எத்தகையது? எல்லா இடங்களும் காலமும் சுட்டிக்காட்டப்படுவதே கவிதையாக அமைந்துள்ளது. காதல், கவிதை, வாழ்வு என்றெல்லாம் சொல்லப்படுகிற ஒன்றுதான் உறவு என்பதும் என்கிறதா அது? எந்தச் சொற்களுக்கும் வந்துவிடாமலேயே ஓர் அனுபவத்தைத் தொட்டுவிட முடிகிறதா நம்மால்?

மகாநதி

அகன்ற நதியைக் கண்டு
கடலோ என வியந்தது
வானம்.

வானத்தைத்
தன் நெஞ்சில் நிறைத்துக்கொண்டுதானே
நெகிழ்ந்து கிடக்கிறது நதியும்?
கடலோடு கலந்தால் என்ன,
வானோடு கலந்தால் என்ன,
மண்ணோடு கலந்தால் என்ன,
எந்த உயிரோடு கலந்தால் என்ன,
கலக்கும் இந்த உறவுதானே
காதல் என்பது?

கடல் எனும் கவிதையையும் பார்க்கலாம். சின்னஞ்சிறிய செம்பருத்திச் செடியின் கீழே இலையிலிருந்து விழுந்துவிட்ட இரண்டு பச்சைப் புழுக்களிடையே ஓர் உரையாடல் நடக்கிறது.

கடல்

சின்னஞ்சிறிய
செம்பருத்திச் செடியின் கீழ்
வந்துகிடந்தன
இரண்டு பச்சைப்புழுக்கள்.

எங்கிருந்தாலும்
உண்டு முடித்தவுடனே
இலையின் அடியில் வந்து
ஒட்டிக்கொள்ள வேண்டாமா?
எத்தனை முறைகள்
படித்துப்படித்துச் சொல்லியிருக்கிறேன்,
அதுவும் மழைபொழியும் இந்நேரம் –
குறுக்கே பேசாதே –

நீ சொல்ல வருவது புரிகிறது –
இத்தனை ஆயிரம் கால்களை
நாம் எதற்காகப் பெற்றிருக்கிறோம்,
எங்கிருந்தாலும்
நன்றாகப் பற்றிக்கொள்ள வேண்டாமா,
கால்களால் ஆட்டமா போட்டுக்கொண்டிருந்தாய்?

சரி அம்மா, நீங்கள் ஏன்?

நீ விழுந்ததைப் பார்த்து
மனம் பொறுக்காமல்தான்
உனக்காக நானும் குதித்துவிட்டேன்
என் செல்லமே!

அப்போது அங்கே அவர்கள்
மனிதக் குதிங்காலால்
உண்டாகியிருந்த தடக்குழியில்
தேங்கியிருந்த நீர்ப்பரப்பைக் கண்டார்கள்.

அம்மா,
மனிதர்கள் குளம் குளம் என்று
சொல்கிறார்களே அது இதுதானா?

ஆமாம், என் செல்லமே,
நன்றாய்க் கவனித்திருக்கிறாய் நீ.
கடல் என்றும்
இதைத்தான் அவர்கள் சொல்கிறார்கள்
மகாநதி என்றும் சொல்வார்கள்.

இந்த இரு கவிதைகளையும் வாசிப்பதற்கு மட்டுமல்ல, நாம் எப்படி வாசித்தோம் என்பதை அறிவதற்கும் உள்ள ஒரே வழி நாம்தான். அதாவது பிறர் சொற்களை நாம் நாடுவதற்கில்லை. நம்பவும் ஏற்கவும் கூடாது. கவிஞனுடைய சொற்களையும்கூட. அப்பொழுதுதான் நிகழ்கிறது கவிதை. அந்தக் கவிதைப்புலத்திற்குள் ஆழந்து சென்று அல்லது நீந்திச் சென்று அதன் ஆழத்தையோ கரையையோ அடைவதுதான் ஆய்வு எனப்பட வேண்டும். அங்கிருந்துதான் தொடங்குகிறது அறிதல். வாழ்வெனும் மாபெரும் கலையுலகிற்கு நாம் வந்துசேரும் வழி. அறிதலே மயமான ஆற்றற்கனலை அது பெற்றுவிடும்போது மின்னற் பொழுதே தூரமாய் வெளிப்படுவதும் அதுதான். சாலை எனும் பெயருக்கு வழி என்றும் நிலையம் என்றும் பெயர் அமைந்திருப்பதையும் நாம் நினைவுகூர வேண்டிய இடம் இது.

***

‘ஆய்வினால் கவிதைக்குப் பயனில்லை எனினும் சில குறிப்புகளைத் தருகிறது.’ அவை என்ன?

கவிதை காலத்தையும் இடத்தையும் பொருட்படுத்துவதில்லை. காலத்தாலும் இடத்தாலும் ஏற்படுகிற வாதைகளை அது எழுதினாலும், காலம் இடம் கடந்த வெளியில்தான் அதன் வாழ்வும் களிப்பும் நிறைவும் துயரமும் இருக்கின்றன. எந்தக் கவிதைக்கும் ஒரு நாயகன் இருப்பதில்லை. ‘மையம் கிடையாது‘, ‘நான் கிடையாது’ என்றெல்லாம் சொல்கிறோம் இதைத்தான். மகத்தான வெறுமை என்றும் சொல்லலாம். இந்தப் பெருங்களத்தில் நிற்கும் போதெல்லாம்தான் கவிஞன்/மனிதன் ஒவ்வோர் உயிரிலும் தன்னை அறிகிறான். ஒவ்வொரு நிகழ்விலும் அதன் உண்மையை அறிகிறான். ஒவ்வொரு பொருளிலும் அதன் இருப்பை அறிகிறான். எல்லாவற்றிற்கும் இடையே ஓடும் உறவை அறிகிறான். அதன் காதலும் காதலின்மையுமே வாழ்வாக இருப்பதைக் காண்கிறான். மகத்தான ஓர் ஒத்திசைவுக்காகவே அவன் ஏங்கிறான்.

இப்படிப்பட்ட கவிஞன்தானா ‘நான்’ ‘நான்’ ‘நான்’ என்று கூத்தாடுகிறான். இருக்காதல்லவா? நானில் மாட்டிக்கொள்கிற பல கவிஞர்களின் கவிதைகளைப் பார்த்திருக்கிறோம். நமக்குத்தான் எத்தனை சந்தேகங்கள்!

வாழ்வு என்றால் என்ன என்று வரையறுக்க முடியாததைப் போலவேதான் கவிதை என்றால் என்ன, கவிஞன் யார் என்பதையெல்லாம் வரையறுக்க முடியாது. வாழ்வும் கவிதையும் வேறுவேறு அல்ல என்பது நாம் அறிந்தவைதானே. காலம்காலமாகக் கவிதை பற்றிய ஆய்வாளர்கள் தோற்றுக்கொண்டே இருப்பதன் காரணம் இதுதான்.

ஒரே வழிமுறைதான் உள்ளது. கவிதை என நம்மைத் தீண்டிவிட்ட ஒவ்வொரு கவிதை கொண்டும் கவிதையை நாம் வரையறுத்துக்கொண்டே செல்வதுதான் அது. ஒன்று நிச்சயம். கவிதை எழுதுவதற்கு முன்னான கவிஞனின் கவிதையனுபவமும் வாசகன் அடைகிற கவிதையனுபவமும் ஒன்றே என்பதும், அந்த ஒன்றை உத்தேசித்ததே என்பதும்தான் அது. இவற்றிற்கு வெளியே உலவுபவைகளைத்தாம் (நல்ல) கவிதைகளல்ல என்று ஒதுக்கிவிடுகிறோம். இங்கே நான் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வதெல்லாம் நம்மைத் தீண்டிய அபாரமான கவிதைகளை முன்வைத்தே. இந்த முறையில் நீங்களே கவிதையை எடுத்து ஆராய்ந்து பார்க்கலாம்.

அதற்கும், வாழ்வு என்றால் என்ன? கவிதை என்றால் என்ன? (இரண்டுமே ஒரே கேள்விதான் என்பதை அறிவோம்) முதலில் கேள்வி என்றால் என்ன என்பதை நாம் அறிந்துகொள்வோம். பேசுவதற்கென எதுவுமே இல்லாத மவுனத்திலிருந்து நாம் எதைப் பேச முடியும்? நம்மை நோக்கி எறியப்படும் ஒரு பிரச்னையே கேள்வி என்பது. அதற்கான பதில்தான் பேச்சு என்பதே. இப்போதும் அந்த மவுனத்திலிருந்துதான் அந்தப் பேச்சு வந்தாலும் கேள்விக்குள்ளிருந்துதான் பதிலைக் கண்டைந்து எடுத்துக்கொள்கிறது மவுனம். ஆகவேதான் ஒருத்தர் உண்மையை அறிந்துகொள்வதற்கு பிறரை நாடவேண்டிய அவசியமில்லை என்றிருக்கிறது. ஆனால் நாமோ பிறரையே நாடுபவர்களாக இருக்கிறோம். இதுவே இந்த உலகின் மலினத்திற்கும் ஆபத்திற்கும் வீழ்ச்சிகளுக்கும் காரணம்.

இல்லை, இல்லை. சற்றுமுன் நீங்கள் தந்த கவிதையை நானாகத்தான் படித்தேன் என்கிறார் ஒருவர். அது உண்மையானால் ஒரு பிரச்னையுமில்லை. பிரச்னைகள் எங்கிருந்து வருகின்றன? நம் அறியாமையிலிருந்து என்று சொல்லப்படுகிறது அது உண்மையல்ல. உண்மையை நாம் எதிர்கொள்ள முடியாமையிலிருந்தே பிரச்னைகள் வருகின்றன என்பதே உண்மை.

கீழே பிரமிளுடைய ஒரு கவிதை. நம்மை என்னை செய்கிறது என்று பார்க்கலாம். அது நாம் அதை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது. அதற்கு வேண்டியது ஒரு திறந்த மனம். அந்த நிலையில் நாம் ஒரு நுண்மையும் மென்மையுமிக்க நிலையில் இருக்கிறோம். பேரனுபவங்கள் நம்மைப் பற்றிக்கொள்கின்றன, பேருண்மைகளும்தான்.

பாலை

பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன்மணல்
என் பாதம் பதிந்து
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல்தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.

நாம் விளக்கப் போவதில்லை. ஆய்வுதான் செய்வோம் என்று சொல்லியிருந்தோம். இப்போது நம் மனதை அடைந்த அனுபவம் எத்தகையது? சொல்லொணாத ஒரு பேரனுபவம் என்றாலும் நம்மைத் தீண்டிவிட்ட ஒரு புத்துணர்வு என்றாலும் – அதை ஆய்வு செய்வது நல்லதுதான். ஒருவன் தன்னை அறிதலுக்கு நிகரானது அது.

நீங்கள் ஒரு கவிதை வாசகர் என்ற முறையில் உங்கள் அறிவை விழித்தெழச் செய்வதற்கு முன்பே அது உங்கள் இதயத்தைத் தொட்டிருப்பதை உணர்ந்திருப்பீர்கள். ஏனென்றால் கவிதை அங்கிருந்துதான் பிறக்கிறது. கவிதையை உணரத்தக்க இதயமுடைய ஒரு மனம் இயல்பிலேயே உயிரின் ஒத்திசைவினால் உண்டாகும் பெருங்களிப்பைத் தன்னுள் கொண்டது.

நீங்களே இந்தத் கவிதையைப் பிறர் உதவி மற்றும் பிற உதவிகள் எதுவுமே இல்லாமல் ஆய்ந்து பார்க்க வேண்டுகிறேன். அதுதான் உண்மையான பாதை.

***

அண்மையில் சிங்கப்பூர் வாசகர் வட்டம், சிங்கப்பூர் நூலக அரங்கில் நிகழ்த்திய எனது உரையை வீடு வந்ததும் இணையத்தில் கேட்டேன். யாரோ ஒருவரை உற்றுக்கவனிப்பதுபோல. பல இடங்களில் தான் சொல்ல வேண்டியதைத் சொல்லியிருக்கிறார்தான். என்றாலும் பல இடங்களில் நிகழ்ந்த உடல்மொழி, தீர்ப்பு கூறியவை போன்ற விஷயங்கள் அதிருப்தி தருகின்றன. ஒன்று புரிந்தது. நான் மனிதர்கள் அடைய வேண்டிய மனநிலையை நோக்கமாகக் கொண்டிருக்கிறேன். அதைக் காண்பதும் அதை எழுதுவதும் என்பதைக் கவிதையாகக் கொண்டிருக்கிறேன். அரங்கில் பேச நேர்வதோ, நேர்ந்ததோ கவிதை பற்றி. வாழ்க்கை பற்றி. அப்போது கவிதை ஒரு துறையாகவும் கலையாகவும் வனைந்து கொண்டு வந்து உட்கார்ந்துவிடுகிறது. எனது பேச்சு சட்டதிட்டங்களும் தீர்ப்புகளுமாய் மாறிப்போய்விடுகிறது. இதுதான் எனது அதிருப்திக்கும், எப்போதும் என்னிடமிருக்கும் மவுனம் கலைந்து சற்றுத்தாழ இறங்கிவிட்டதற்குமான காரணமாயிருக்கிறது. கவிதைக்கலை அதாவது அப்போதைய அந்த மனிதன் தான் இவ்வளவுதான் உயரம், என்று தன்னுடைய இடத்தைக் குறித்துத் தானே அடைந்த வெட்கம் அது. அதிகமான சொற்களில் குற்றங்களில்லாமல் போகாது என்று பைபிளில் ஒரு சொற்றொடர் இயேசுவுடையது. சொந்த அனுபவம்தான் பேசுகிறது வேறென்ன?

உரையாடலின் இறுதியை நெருங்கியவர்கள்போல் இன்னும் நீங்கள் ஏதாவது சொல்ல இருக்கிறதா, என்றால் சொல்லுங்கள் எனப்பட்டது. அது ஓர் ஆழ்ந்த உரையாடலுக்குச் செல்லும் பாதை. சொல்வதற்கு ஏதுமில்லாத மவுனத்தை வாழ்க்கையின் பிரச்னைகள்தாம் சொல்வதற்குரியதாக மாற்றுகின்றன. அப்போதுதான் உணர்ந்தேன், நம்மிடையே வாழ்க்கைமீதும் கவிதைமீதும் ஆழமான ஒரு தேடல் இல்லை, கேள்வி இல்லை என்பதை. நீங்கள்தாம் கேட்க வேண்டும், தேட வேண்டும் என்று சொன்னதாக ஞாபகம். நானே அப்போதும் இந்த வாழ்வு குறித்தும் கவிதை குறித்தும் தொகுத்துக்கொண்டு பேசியிருக்கலாம். அவையின் நேரம் முடியும் தறுவாயிலிருந்ததும் களைப்பும் காரணமாக இருந்திருக்கலாம். என்றாலும்கூட அதை மறுப்பதற்கில்லை, உண்மைதான். நம்மிடம் தீவிரமான தேடல் இல்லை. நாம் கவிதையை ஒரு கலையாகக் காண்கிறோம், அதன் வழியாக ஓர் உலகியல் இன்பத்தை அடையவே ஆசைப்படுகிறோம். கலையையே ஆய்கிறோம். ஆனால் கவிதை எப்போதும் மனிதனை அழைத்துச்செல்லுமிடம் ஒரு பெருங்களம். அபூர்வமான வாசகர்களும் மனிதர்களுமே அந்தக் களத்தில் தங்கள் வீட்டை நிறுவிவிடுகிறார்கள். நான் தொகுப்பாக இன்னும் பேசியிருந்தாலும் அது ஒரு கருத்துக்களமாகவே ஆகியிருக்கும். அதுவரையும் வாசகர்கள் கேட்ட/கண்ட உண்மையின் கணங்கள் நிறையவே உள்ளன. அவர்களே தொகுத்துக்கொள்ளும்போதுதான் வாழ்வை, கவிதையைக் கண்டடைகிறார்கள்.

இது எப்படி சார், இது எப்படி சார் என்று அகம் தொடர்பான கேள்விகளைக் கேட்கும் அன்பர்களிடம் நான் சொல்ல விரும்புவது அந்தக் கேள்வியை நீங்களே உங்களுக்குள்தான் கேட்க வேண்டும், அறிந்து கொள்ளவேண்டும். அது ஒன்றே சரியான வழி. கவிஞரைப் பாராட்டுகிற ஒரு வியப்பாக இருப்பதைச் சொல்லவில்லை. தீவிரமான நாட்டம் காட்டுபவர்களைத்தாம் சொல்கிறேன். அதற்கு நம் உணர்வாற்றல்தான் வழிமுறை. சக இதயர்கள்தாம் ஆசான்கள். இதுவே நட்பையும் உறவையும் அன்பையும் சமத்துவத்தையும் அறத்தையும் உலகில் விளைக்கும். பிறவோ அழிவு தரும் நச்சுக்கனிகள்தாம் என்பதை நாம் அறிவது ஒன்றும் கடினமானதல்ல. காலம் இடம் அற்ற கவிதைத்கணத்தை நாம் விரித்துக்கொள்ளும் போதெல்லாம் நாம் வந்தடைய வேண்டிய இடத்தை வந்தடைந்துவிடுகிறோம், இல்லையா? இதுதான் வீடுபேறு என்பதும் நிர்வாணம் என்பதும் இங்கிருந்துதான் மானுட உறவு எனும் அதன் செயல்பாடுகள் மலர்கின்றன.

கவிதையை வியக்கும்போது, இந்த நிலையை நீங்கள் எப்படி அடைந்தீர்கள் என்பது கவிஞனை நோக்கிய ஒரு கேள்வியாக இருக்கிறது உங்களிடம்.

பிறக்கும்போதே நாம் அப்படித்தான் இருக்கிறோம். குழந்தைப்பருவத்தில் அது நம்மிடையே வாழ விரும்பித்தான் நம்மோடு ஒட்டிக்கொண்டுவருகிறது. வாழ்வின் பரபரப்புகளில் எண்ணங்களில் தொலைந்துவிட்டது அது. ஒரு சின்னஞ்சிறிய கவிதை எனது குழந்தைப்பருவத்தில் பதிவாகியது. இளமைப்பருவத்தில் எனது ‘குளித்துக் கரையேறாத கோபியர்களில்’ – நான் நினைவு கூர்ந்து எழுதியது.

காலிடம்ளர்
 
சாப்பாட்டு வேளையில்
தண்ணீர் எண்ணித்
தூக்கின செம்பின்
திடுக்கென்ற வெறுமை-
நிலைகுலைத்து
நிலைநிறுத்திய
ஞாபகமூட்டல்?

விளக்கவேண்டுமா?

ஆனால் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். “கவிஞர்கள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை” என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். வெகுகாலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட உண்மைதான் இது. என்றாலும் இதை நாம் ஏற்றுக்கொள்ளக்கூடாது. மாற்றப்பட வேண்டிய மானுட உலகு வெகுகாலமாகவே மாற்றப்படாதிருப்பதின் அடையாளம் இது. அவமானம் இது. பிறப்பு என்பது அவனது குழந்தைப்பருவம் மட்டுமல்ல, ஒவ்வொரு கணமும் என்றாக்க வேண்டும் நாம்.

பிரமிள் உங்களை ஈர்த்திருக்கிறார். ஆனால் பிரமிளைப் போலவே உங்கள் எழுத்துமுறை இல்லை, இது எப்படி என்று கேட்கிறீர்கள்.

ஒன்றாயிருப்பது அதன் அடிநாதம்தான். அண்மையில் திருநெல்வேலியில் பிரமிள் குறித்த ஒரு முழுநாள் கருத்தரங்கு நடந்தது. பார்வையாளனாய்ச் சென்றிருந்த நானும் பிரமிள் குறித்தும் கவிதை குறித்தும் பேச நிர்ப்பந்திக்கப்பட்டேன், அன்பன் ஆர்.ஆர்.சீனிவாசனால். நான் முதன்முதலாகப் பிரமிளில் வீழ்ந்ததற்குக் காரணமாக இருந்த ‘பாலை’ என்ற கவிதையை எடுத்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். இடையில் அந்தக் கவிதையை வாசிக்க நேர்கையில் விழிகள் கசிந்து சிறிது நேரம் பேச முடியாத மவுனம் குறுக்கிட்டுவிட்டது.

நன்றாகக் கவனித்துப்பாருங்கள். ‘ஒரு மரத்தைக் கூடக் காண முடியவில்லை’ என்ற வரியையும். இதை நான் மிக அண்மையில்தான் உணர்ந்தேன். இதில் ஆழ்ந்திருக்கும் பிரமிளின் மனநிலையையும் ஆளுமையையும்கூட அறியாதவர்கள் பலர். என் இரண்டாம் கவிதைத்தொகுப்பிற்கான முன்னுரைக்கு அவரையே நாட இருந்த விஷயம் அறிந்த கவிஞர் ராஜசுந்தரராஜன் அதைப் பிரமிளிடம் கூற பிரமிள் அதற்கு, ‘அதை அவரல்லவா பேச வேண்டும், நீர் என்ன இடையில்?’ என்று உறும, ராஜசுந்தரராஜன் அதை என்னிடம் முறுமுறுக்க நான் அனுப்பிவைத்தேன். ஒரு வாரத்தில் பிரமிளிடமிருந்து எனக்குப் பதில் வந்தது. சொல்லொணா வியப்படைந்த வாசகங்களுடன். அவரே முதன்முதலாக அந்த நூலுக்கு அட்டைப்படம் வரைந்தார். என்னை ஓவியம் தீட்டினார்.

‘மின்னற்பொழுதே தூரம்’ என்ற வரியையே தலைப்பாக்கினார். தமிழில் தனக்குப்பிறகு வர இருக்கும் கவி தேவதேவனே என்றார். எனது புதிய கவிதையியல் முயற்சிகள் அவருக்கு வியப்பையும் திகைப்பையும் உண்டாக்கின. எவரையும் பின்பற்றாத எனது சுதந்திரமான போக்கையும் எழுத்துமுறையையும் ரசித்தார். இவை எதுவுமே வெளியே தெரிந்துவிடாதபடி மறைக்கப்பட்டிருக்க, ஜெயமோகன் களத்திற்குள் குழந்தையாய் வந்தவுடன் மீண்டும் தேவதேவன் ஒரு முக்கியமான கவிஞர் என்கிற பெயர் முன்வந்து நிற்கிறது. ஓர் ஆளுமைக் கலாச்சாரத்திற்குள் துன்புற்றுழலும் காலத்தைப் பற்றி நாம் அறிந்துகொள்வதற்கும் அதைக் கடப்பதற்காகவும் நாம் நம் அவமானங்களை அறிந்துகொள்வது நல்லதுதான். அந்த அளவுக்கான அனுபவங்களை அவசியப்படும்போது நான் சொல்லத் தயாராயிருக்கிறேன். குறிப்பாகப் பிரமிளுடனான என் அனுபவங்கள் மற்றும் பார்வைகள் வாழ்வுக்கும் கவிதைக்கும் ரொம்ப ரொம்பப் பயனுள்ளவை என்றாகும்போது.

நான் கவிதைத்தொகுப்பினை வெளிக்கொணர இருந்தபோது என் கைவசமுள்ள மொத்த கவிதைகளை இரண்டாகப் பிரித்தேன். முதல் தொகுதியான ‘குளித்துக் கரையேறாத கோபியர்களை’ நீராலானவை சார்ந்த கவிதைகளாய்த் தலைப்புகளையெல்லாம் உருவிவிட்டு ஒரு காவியம்போல் அமைக்க முயன்றேன். (பின்னாள் முழுத்தொகுப்பின்போது தலைப்புகளை மீண்டும் இணைத்துக்கொண்டேன்) இரண்டாம் தொகுப்பில் வேறுவேறு முகங்களுள்ள தீவிரமான கவிதைகளைக் கண்ட விமர்சகர்கள் அனைவருமே ஏமாந்துபோனார்கள். தேவதேவன் வேகங்கொண்டு இரண்டாம் தொகுப்பில் முன்னேறிவிட்டார் என்று.

கவிதையில் வளர்ச்சி என்றும் முன்னேற்றம் என்றும் கிடையாது. குறிப்பாக எனது கவிதையில். அதன் புறத்தோற்ற மாறுபாடுகளை வேண்டுமானால் ஏதாவது சொல்லலாம். கவிதையின் அகம் மாறாததும் மாற்ற முடியாததுமான ஓர் இயக்கம். வாழ்வின்பாற்பட்டது. அதைத்தான் நாம் கண்டடைய வேண்டும்.

எனது பள்ளிப்பருவத்தில் நடந்த ஓர் அனுபவம். பாடத்தில் முதன்முதலாய்த் திருக்குறள் அறிமுகமான வகுப்பு. அதை வைத்துத்தான் இன்று அந்த வயதைக் கணிக்கிறேன். திருக்குறளை நல்ல மாதிரி அறிமுகப்படுத்திய தமிழாசிரியர். முழுநூலையும் வாசிக்க விரும்பும் உந்துதல் பெற்று திருக்குறள் நூலைப்பெற்று, காமத்துப்பாலில் நான் கண்டு வியந்து நின்றுவிட்ட ஒரு குறள்:

காணுங்காற் காணேன் தவறுஆய காணாக்கால்
காணேன் தவறுஅல் லவை.

காதலன் காதலி உறவு பற்றிய காதல் கவிதை இது. இதெல்லாம் தெரியாத வயது எனக்கு. ஆனால் நான் கண்ட மனித நட்புறவுகளிலேயே இதை அறிந்திருந்ததுதான் எனது வியப்பின் காரணம். காதலின் இந்த உளவியல், அபாரமான மானுட உச்சத்தைத் தொட்டுள்ளதுதான் காரணம். மேலும் என் மனதில் எப்போதும் உறைந்துள்ள ‘காலம்’ பற்றி இது ஆழமாகக் கூறுகிறது. இவை எல்லாமே எந்த அறிவுத்துணையில்லாமலே என்னைத் தொற்றிக்கொண்ட உண்மைகள்.

காணும்போது
அவர் குற்றங்கள் எதுவுமே
எனக்குத் தெரிவதில்லை

எனும்போது வெளிப்படும் நிகழ்கணம் ஒரு கவிஞனுடையது அல்லவா, அன்பு கொண்ட மனத்தினுடையதும். காணும்போது தவறுகள் எதுவுமே தெரியவில்லை. அப்படியானால் அப்போது காணப்படுவது யாது? ஆகா! வள்ளுவர் எதைத்தொட்டுவிட்டார் பார்த்தீர்களா? காணாதபோது, அவனைக் குதறத் துடித்துக்கொண்டு காத்திருந்த பெண் அவள்.

எனது ஆங்கில ஆசிரியர், ஒரு வகுப்பில் ஏதோ ஒரு பாடத்தில் உதித்த உண்மையை விவரிப்பதற்காக, உரைத்த ஒரு கவிதை விவரணைச் சித்திரத்தில் மயங்கியேவிட்டேன். பின்னாளில்தான் தெரிந்தது அது கீட்ஸின் Ode on a Gretian Urn. ஓடும் காதலியை எட்டிப்பிடிக்க நீண்ட காதலனின் கை அந்த ஓவியம் காலத்தால் நிலைத்துநிற்கிறது அந்த ஜாடியில்.

காலம் பற்றிய இன்னொரு வரியையும் கேட்டேன் அந்தக் காலத்தில். தன் தந்தையால் நன்றாகப் தளுக்கு மிடுக்கோடு பயிற்றுவிக்கப்பட்ட பேச்சாள மாணவன், அப்பா எழுதித்தந்ததை ஒப்பிக்கிறான்: அதில் ஒரு வரி “காலம். காலம் என்பதே கிடையாது என்கிறான் ஓர் அறிஞன்… இன்று என்று சொல்லும்போதே அக்கணம் அது கடந்துவிடுகிறது.”

இதெல்லாம் மறக்காமல் என் நெஞ்சில் பதிந்தது, முன்னமேயே எனக்குள்ளிருந்த மெய்மையினாலேதான் என்பதையே நான் உணரத்தொடங்கினேன். அதைவிட்டு ஒருக்காலும் நான் பிரிந்ததில்லை.

கவிதை
 
எண்ணங்களால் உருவாக்கப்பட்ட
தத்துவங்களல்ல இது.
எந்த மனிதனும்
கண்டேயாக வேண்டிய
உண்மை.
உயிரின் குரல்.
அமைதியின் மொத்தம்.
அழகின் கொண்டாட்டம்.
அன்பின் ஈரம்
அறத்தின் தகிப்பு.
புத்த புன்னகை
நித்தியத்தின் கரங்களிலிருந்து
சுழலும் வாள்.
ஒளிமட்டுமேயான
ஓவியநிலா,
நாம் அறியாதவற்றின்மீது
தோன்றித் தவழ்ந்து ஓடும்
அமுதநதி.
 
உண்மையைச் சொல்வதானால்
அது நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய
ஞாபகம் அல்ல!
 
முழுவாழ்வின் மலர்ப் புன்னகை.
முழுமையின் புனிதத் தொடுகை.

சிதைவும் உயிரின்மையுமல்ல.
உடைந்த ஒரு பகுதி அல்ல.
உடைந்த ஒரு பகுதியின்
கண்ணீரோ கூக்குரலோ
கதறலோ அல்ல.
எனினும்
முழுமையின் முழுவாழ்வின்
கண்ணீர் என்றொன்றும்
காதல் என்றொன்றும்
இருக்கவே இருக்கிறது
ஆற்றல்களெல்லாம் அடக்கப்படாமலேயே
கொந்தளித்துக் குழைந்துகொண்டு கிடக்கும்
அமைதி என்பதும் அதுதான்.
கவிதை என்பதும் அதுதான்.


நன்றி: சுடலைமுத்து

மேலும் பார்க்க

தேவதேவன் கவிதை அரங்கம் – ஆன்ம உரையாடல்
தேவதேவனின் ‘கவிதை பற்றி’ நூல்

தேவதேவன் எழுதும் ‘கவிதையின் மதம்’ கட்டுரைத்தொடர்:

1 thought on “கவிதையின் மதம் – 1: மகாநதியும் கடலும்”

  1. கவிதை குறித்த பல திறப்புகளை அளிக்கும் கட்டுரை. உண்மையில் கவிதை குறித்து அறிய கட்டுரைகளை நாடாதீர்கள். உங்களுக்குள் தேடுங்கள் என்று சொல்வதற்கே ஒரு கட்டுரை தேவைப்படுகிறது என்ற நகைமுரண் புன்னகையை வரவழைக்கிறது. கவிதை அனுபவம் என்பது கிட்டத்தட்ட ஒரு சிற்பத்தை அணுஅணுவாகப் பார்த்து ரசிக்கும் அனுபவம்தான். காலத்தின் இருண்ட ஆழங்களிலிருந்து, காலாதீதம் நோக்கிய அந்த சிற்பத்தின் பயணத்தில் இடையில் வரும் சிறு புள்ளிதான் அதன் பார்வையாளன். இதே மனநிலைதான் கவிதை வாசிக்கும்போதும் தோன்றுகிறது. வாசகன் எனும் சிறு குமிழியின்முன் கவிதையெனும் பிரம்மாண்டம் தன்னை நிகழ்த்திவிட்டுச் சென்று விடுகிறது. நல்லகவிதை என்பது மூளையை எட்டும்முன் இதயத்தை எட்டிவிடும் என்று தேவதேவன் சொல்வது, ஒருவகையில் கவிதையைப் புரிந்து கொள்ள முயற்சிக்காதீர்கள், உணரத் துவங்குங்கள் என்பதைத்தான். கவிதை வாசகர்கள் செய்யும் பிழை என்பது, பெரும்பாலான சமயங்களில் ஒரு கவிதையை மூளையின் துணைகொண்டு வாசித்து அலசிப்பார்த்து அதைப் புரிந்து கொள்ள முயல்வதுதான். இப்படிச் செய்வது அந்தக் கவிதையின் நேரெதிர் திசைக்கு பயணிப்பது போன்றதுதான். “கவிதை என்பது ஆன்மிகமான கண்டதைதல்” என்ற வரி மிக முக்கியமானது. மிக முக்கியமான கட்டுரை. நன்றி.

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்