அறிவிலுமேறி அறிதல் – 1

3 நிமிட வாசிப்பு

கவிதை, ஆன்மீக அனுபவம், பித்துப் பிறழ்வு நிலை என அகத்தின் வண்ணங்களைத் தொட்டெடுத்துத் தீட்ட முயற்சிக்கும் வேணு வேட்ராயனின் கட்டுரைத் தொடரின் முதல் பாகம்.


காமங் காம மென்ப காமம்
அணங்கும் பிணியு மன்றே நினைப்பின்
முதைச்சுவற் கலித்த முற்றா விளம்புல்
மூதா தைவந்தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே

– மிளைப்பெருங் கந்தன்

முற்றா இளம்புல் முதுஆ

நிதமும் நிகழும் முற்றா இளம்புல்லின் நுனியைத் தன் நாவால் தீண்டும் முதிய பசுவின் நினைப்பில் பல்கிப் பெருகுகிறது அதன் சுவை.

முற்றா இளம்புல் எனும் நிகழ்வும் (விருத்தி) அதைத் தன் நாவால் தீண்டித் தன் சுயத்தின் மூலம் வேறிட்டு அறிதலும் (விகல்பம்) என இவை இரண்டும் இணையும் கணத்தில் புல் எனும் பொருள் உருவாகிறது. இவ்வாறு விருத்தியும் விகல்பமும் இணைந்து பொருள் உருவாவதை ‘ஆத்யவசாயம்’ என்கிறது யோகாசார பௌத்த மரபு[1].

இந்த வேறிட்டு அறிதலை (விகல்பத்தை) நிகழ்த்துவது சுயம்.

“கரணவும் இந்திரியவும் களேபரம் தொட்டறியும் 
அனேக ஜகத்தும் ஓர்க்கில் எல்லாம்
பரவெளி தன்னில் உயர்ந்த பானுமான் தன்
திருஉருவாணு திறஞ்ஞு தேறிடேணம்”

– ஆத்ம உபதேச சதகம்

இயல்பில் நம்மில் ‘உறையும் விழைவுகளும், தளிர்விடும் நினைவுகளுமான'(latent urges and incipient memories’) பெருந்தொகுப்பென ‘வாசனை’கள் (vasanas) இருக்கின்றன. இந்த வாசனைகளே நம் எண்ணங்களின் ஊற்றுக்கண்.

ஒரு கணத்தில் ஓர் எண்ணம் நம் பிரக்ஞையை அடையும்போது அதைக் ‘கரணம்’ வழியாக அறிகிறோம். ‘மனம்’ (மனஸ்) ‘சித்தம்’ ‘புத்தி’ ‘அஹங்காரம்’ என நான்கும் முறையே வினவுதல், நினைவுகளை நாடுதல், அதன் தன்மையை அறிதல், சுயத்தின் மீதான உணர்வுத்தாக்கம் என நான்கு உபகரணங்கள் வழியாகக் கரணம் (Dynamism of inner psyche) ஓர் எண்ணத்தை நனவுப் பிரக்ஞையில் அறிகிறது[2]. பின் அது புலன், உடல் உறுப்புகளின் வழி செயல், செயலின்மைக்கு இட்டுச்செல்கிறது.

இவ்வாறு ஓர் எண்ணத்தின் அந்தத்தில் பிறிதோர் எண்ணம் நம் பிரக்ஞையை அடைகிறது. ஒரு முடிவிலி இழையில் பிரக்ஞை ஆழ்கடல் மணிகளை இடையறாது கோத்துக்கொண்டிருக்கிறது.

இந்தப் பிரக்ஞை கால வெளியில் ஒரு நிரந்தரத்தன்மையைக் கொண்டுள்ளது.

முடிவிலி இழைகொண்டு அந்தரவெளியில் பின்னிய வலைமீது தொடநினைக்கையில் உதிரும் பனித்துளிகளென எண்ணங்கள்.

ஓர் எண்ணத்தை நம் பிரக்ஞை அகவயமாக அறிவது போலவே, ஒரு புறத்தூண்டலை நம் புலன்கள் வழியாக நம் பிரக்ஞை அறிகிறது.

மனித மூளையின் நரம்பு மையங்கள், தன் நுண்அமைப்பில் ஒன்று போலவே தோன்றினாலும், அவை ஒவ்வொன்றும் தனித்த செயல்திறன் (specialized function) கொண்டவையாக இருக்கின்றன.

ஒரு புறத்தூண்டல் நம் மூளை மையங்களை அடையும்போது, மூளையின் வெவ்வேறு மையங்களில் உள்ள செல்கள் வெவ்வேறு கால இடைவெளியில் தூண்டப்படுகின்றன, மேலும் ஒரு புறத்தூண்டலின் வெவ்வேறு குணங்கள் வெவ்வேறு மையங்களில் அறியப்படுகின்றன.

இதனை அறியும் நம் பிரக்ஞையும் கால வெளியில் பரந்துள்ளது(perception and consciousness is distributed in time and space)[3]

(உம்) ஒரு விழித்தூண்டலில் அதன் வண்ணம், வடிவம், அசைவு என ஒவ்வொரு குணமும் ஒவ்வொரு விழிமையத்தால் அறியப்படுகிறது, வெவ்வேறு கால இடைவெளியிலும் (சில மில்லிவினாடிகள்) அறியப்படுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு நரம்பு மையமும் தனித்த செயல்தன்மை கொண்டதாக இருப்பினும், அனைத்து மூளை மையத்திற்கும் பொருந்தும் தன்மை ஒன்று உண்டெனில் அது பொதுமைகளை உருவாக்கும் தன்மை (Ability to abstract) எனலாம். இந்தப் பொதுமைபடுத்தல் வழியாக மூளை அறிதலை அறிவாக ஆக்குகிறது. (இந்த பொதுமை படுத்துதல் நிகழும்போது, அந்த அறிதலின் சில தனித்த இயல்புகளின் இழப்பு நேர்கிறது.)

முற்றா இளம்புல் எனும் அறிதல், கால இடவெளியில் முதிய பசுவெனும் அறிவாக ஆகிறது. இந்த அறிவு பிறிதொன்றிலாத முதலறிதல் கணத்தில் அதிர்ந்து நிற்கிறது.

முதிய பசு தான் இதுவரை அறியாத சுவை ஒன்றை முற்றா இளம்புல் நுனியில் தீண்ட நேர்கிறது.

முடிவிலி இழை அறுந்து ஆழ்கடல் முத்துக்கள் உதிர்கின்றன.

அறிதல், அறிவு, அதற்கு அப்பால் என.

‘அறிவிலுமேறி அறிந்திடுபவன்’ எனத் தொடங்குகிறது ‘ஆத்ம உபதேச சதகம்’.


மேற்கோள்கள்

  1. நவீனத்துவத்துக்குப் பின் கவிதை, தேவதேவனை முன்வைத்து – ஜெயமோகன்
  2. That Alone – Nitya Chaitanya Yati
  3. Neural Concept formation and art – Semir Zeki
வேணு வேட்ராயன் எழுதும் ‘அறிவிலுமேறி அறிதல்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்