மோபியஸும் மெட்டல் ஹர்லண்ட்டும்: ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் ஓர் உரையாடல்

12 நிமிட வாசிப்பு

“என்னைப் பொறுத்தவரை மோபியஸ் பிக்காசோவுக்கு நிகரானவர்.”

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் முதல் முறை பேசும்போதே தன்னை அதிகம் பாதித்த, தன்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய கலைஞராக மோபியஸைக் குறிப்பிட்டார். யார் இந்த மோபியஸ்?

இருபதாம் நூற்றாண்டின் மிகவும் புதுமையான செல்வாக்குமிக்க காமிக் கலைஞர்களில் ஒருவராக இருந்தவர் மோபியஸ். இவரின் இயற்பெயர் ஜீன் ஜெராட் (Jean Giraud). 1938 இல் பாரிஸில் பிறந்தவர். ‘அர்சாக்’ (Arzach), ‘தி ஏர்டைட் கேரேஜ் ஆஃப் ஜெர்ரி கொர்நீலியஸ்’ (The Airtight Garage of Jerry Cornelius), ‘தி இன்கால்’ (The Incal) போன்ற முன்மாதிரியான அறிவியல் மிகுபுனைவுப் படைப்புகளுக்குப் பெயர் பெற்றவர். மெட்டல் ஹர்லண்ட் காமிக்ஸ் பத்திரிகையில் (Heavy Metal) உதித்த புதிய அலை காமிக் கலைஞர்கள் வரிசையின் முன்னணியில் இருந்தவர் மோபியஸ். காமிக் எழுத்தாளர், திரை எழுத்தாளர், ஸ்டோரிபோர்டு ஓவியர் மற்றும் வடிவமைப்பாளராகவும் இயங்கினார். இவரது படைப்புகளின் தாக்கத்தை உலகெங்கும் பல திரைப்படங்களிலும், காமிக் புத்தகங்களிலும், வீடியோ விளையாட்டுகளிலும் இன்றும் காணலாம்.

மோபியஸ் குறித்து ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுடன் அரூ உரையாடிய போது…

மோபியஸின் படைப்புகள் உங்களுக்கு அறிமுகமான காலகட்டத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.

நான் ஓவியக் கல்லூரி மாணவனாக இருந்தபோது, பல வரைகலை வடிவமைப்பாளர்கள் (graphic designers) என்னைக் கவர்ந்தவர்களாக இருந்தார்கள், குறிப்பாக பீட்டர் மேக்ஸ் (Peter Max). பல சைகடெலிக் கலைப்படைப்புகளை உருவாக்கியவர். நான் சென்ற நேர்காணலில் குறிப்பிட்ட ஹெய்ன்ஸ் எடெல்மேன் (Heinz Edelmann) என்கிற ஜெர்மானியக் கலைஞரும் என்னுள் பாதிப்பை ஏற்படுத்தியவர். வரைகலை வடிவமைப்பாளர், சிற்பி, கார்ட்டூன் வரைபவர், ஓவியர், புத்தக வடிவமைப்பாளர், இப்படி எதற்குள்ளும் அவரை அடைத்துவிட முடியாது. எல்லா துறைகளிலும் ஊடாடி வேலை செய்திருக்கிறார். பிறகு, ஜான் லெனிக்கா (Jan Lenica), இவர்களெல்லாம் மெதுவாக எனது ஆதர்சப் படைப்பாளிகள் ஆகிவிட்டார்கள்.

எனது கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டில், ஓர் ஆங்கிலப் பெண்கள் பத்திரிக்கையில், அரைப் பக்கத்துக்கு எச்.ஆர்.கீகரைப் (H.R.Giger) பற்றிய ஓர் அறிமுகக் குறிப்பைப் படித்தேன். அடுத்தது தற்செயலாக, ஆம்னி (Omni) என்கிற இதழில் ஆறு பக்கங்களுக்கு மோபியஸின் ஓவியங்களுடன் ஒரு தொடரைப் பார்த்தேன். நான் அதுவரை கண்டிருந்த அனைத்தையும்விட, அவரின் ஓவியங்கள் என்னைக் கவர்ந்துவிட்டன.

எனது கல்லூரிப் படிப்பு முடித்த பிறகு மெட்டல் ஹர்லண்ட் (Metal Hurlant) இதழின் அட்டையை முதன் முதலில் கண்டேன். அதற்கு முன்னரே எனக்கு அறிவியல் புனைவில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. 1969 இல் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்தபோதே 2001: A Space Odyssey திரைப்படம் பார்த்துவிட்டேன். அது என்னை மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளியது. புரிந்தும் புரியாமலும் என்னைத் தத்தளிக்க வைத்தது. ஆனால் இது எனக்கான படம் என்பது மட்டும் தெரிந்துவிட்டது. இப்படம் புரியாமல் மதுரை திரையரங்கில் சத்தம் போட்டவர்கள் அனைவரும் முட்டாள்கள் எனத் தோன்றியது. இப்படத்தின் வேறொரு வடிவமாகவே நான் ஸ்டார் வார்ஸை கருதுகிறேன். இரண்டும் கணினி வரைகலைத் துறையில் எனது ஆர்வத்தைத் தூண்டின.

இதே காலகட்டத்தில்தான் ஹொடரோவ்ஸ்கி (Alejandro Jodorowsky) டியூன் (Dune) திரைப்படம் எடுக்க அமெரிக்கா சென்றார். அவரது படைப்பின் தாக்கத்தில் ஓவியக் கல்லூரியின் இறுதி ஆண்டில் நானும் என் சகமாணவர்களும் ஒரு நாடகத்தை அரங்கேற்றினோம். ந.முத்துசாமியும், சா.கந்தசாமியும் பார்க்க வந்திருந்தனர். இசை, சைகை நடிப்பு, முகமூடிகள் வைத்து ஹெர்மன் ஹெஸ் (Hermann Hesse) எழுதும் கதைகள் போன்றதொரு கதையை அரூபமான ஒரு நாடகமாக்கினோம். ஹொடரோவ்ஸ்கியும் மோபியஸும் இணைந்து நிறைய படைப்புகளை உருவாக்கியுள்ளனர். இருவரும் ஐரோப்பாவின் முக்கியமான முன்னோடிக் கலைஞர்கள்.

[ஹொடரோவ்ஸ்கியின் ‘சாந்த்தா சான்க்ரே’ திரைப்படம் குறித்து அரூவில் வெளியான பிரதீப் பாலுவின் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.]

1975 ஆம் ஆண்டில் ஃபிராங்க் ஹெர்பெர்ட்டின் (Frank Herbert) ‘டியூன்’ (Dune) என்கிற அறிவியல் புனைகதை நாவலை காமிக்ஸ் எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான ஹொடரோவ்ஸ்கி திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டார். அதற்கான புதிய உயிரினம், கதாபாத்திர வடிவமைப்புகள் மற்றும் ஸ்டோரிபோர்டுகளைச் செய்ய, மோபியஸ் ஹொடரோவ்ஸ்கியுடன் இணைந்தார். இத்திரைப்படம் முடிக்கப்படவில்லை, ஆனால் இருவரும் இணைந்து தொடர்ந்து காமிக் புத்தகங்களை உருவாக்கினர். இவர்கள் உருவாக்கிய ‘தி இன்கால்’ (The Incal) காமிக் டிசம்பர் 1980 முதல் மெட்டல் ஹர்லண்ட் இதழில் தொடராக வெளியானது. 1981 இலிருந்து 1988 வரை ஆறு புத்தகங்களாக வெளியானது.

மோபியஸ் முதன் முதலில் வரைந்த காமிக் புத்தகம் ப்ளூபெர்ரி (Blueberry) என்கிற ஒரு கவ்பாய் (cowboy) கதை. எனக்குக் குதிரை மற்றும் கவ்பாய் படங்கள் வரைவது மிகவும் பிடிக்கும். ஃபிரடெரிக் ரெமிங்டன் (Frederic Remington) என்னும் ஓவியர் கவ்பாய்களின் வாழ்வை நேரடியாகப் பார்த்து வரைந்த ஓவியங்களே, பிறகு வந்த ஹாலிவுட் கவ்பாய் திரைப்படங்களுக்கு ஆதாரமாக அமைந்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்த கவ்பாய் மோகம் மிக அதிகம். இவரும் கவ்பாய் படங்கள் வரைந்தார், ஆனால் அதில் சிறப்பு என்னவென்றால் இவரது ஓவியங்களில் நுண்ணிய விவரங்கள் இருக்கும். தொடக்கத்தில் போஸ்டர் வடிவமைப்பு செய்து, பிறகு ஜிம் ஹென்றிக்ஸின் (Jim Hendrix) இசைத்தட்டுகளுக்கு அட்டை வடிவமைப்பு செய்து, மெல்ல முக்கியமான ஒரு கலைஞராகப் பரிணமித்தார்.

மோபியஸின் ப்ளூபெர்ரி காமிக்கிலிருந்து ஒரு பக்கம்

மோபியஸை நான் காமிக் ஓவியராக மட்டும் கருதவில்லை. சினிமாவில் அவர் வேலை செய்யத் துவங்கியதும் அவரின் பன்முகப் படைப்புகள் அனைத்தையும் நான் கவனிக்கத் தொடங்கினேன். ஏலியன் (Alien) திரைப்படத்தை இயக்கிய ரிட்லி ஸ்காட் (Ridley Scott) ஓவியராக இருந்து, பின்னர் விளம்பரப் படங்கள் இயக்கி, பிறகு திரைப்பட இயக்குநர் ஆனவர். மெட்டல் ஹர்லண்ட் இதழைப் பார்த்தபோது இந்த ஓவியர்களெல்லாம் திரைப்படங்களில் பணியாற்றலாமே எனத் தோன்றியதாகத் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். இவ்விதழைக் கண்ட பிறகே அவர் மோபியஸையும், கீகரையும் ஏலியன் திரைப்படத்தில் வரும் வேற்றுகிரக மிருகத்தை வடிவமைக்கச் சரியான ஆட்கள் எனத் தேர்வு செய்தார். அதுவரை ஐரோப்பாவில் மட்டுமே அறியப்பட்டிருந்த மோபியஸ், ஏலியன் திரைப்படத்தினால் உலகம் முழுதும் கவனத்தைப் பெற்றார். பிரெஞ்சு மொழியில் வெளியான அவரின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டன. இப்படியாக நம்மைப் போன்றவர்களுக்கு எட்டுகிறார்.

மெட்டல் ஹர்லண்ட் என்பது அறிவியல் புனைகதை மற்றும் திகில் கதைகளுக்கான ஒரு பிரெஞ்சு காமிக்ஸ் தொகுப்பாகும். இது டிசம்பர் 1974 இல் காமிக்ஸ் கலைஞர்களான மோபியஸ், பிலிப் ட்ரூலெட் (Philippe Druillet), எழுத்தாளர் ஜீன்-பியர் டியோனெட் (Jean-Pierre Dionnet) மற்றும் நிதி நிர்வாகி பெர்னார்ட் ஃபர்காஸ் (Bernard Farkas) ஆகிய நால்வரால் துவங்கப்பட்டது. இந்த நான்கு பேரும் கூட்டாக ‘லெஸ் ஹ்யூமனாய்ட்ஸ் அசோசியஸ்’ (Les Humanoïdes Associés) என்று அழைக்கப்பட்டனர். இது மெட்டல் ஹர்லண்டை வெளியிடும் பதிப்பகத்தின் பெயராக மாறியது. ‘மெட்டல் ஹர்லண்ட்’ என்கிற பிரெஞ்சு சொற்றொடரின் அர்த்தம் ‘அலறும் உலோகம்’. இவ்விதழின் ஆங்கில மொழியாக்கம் ஹெவி மெட்டல் (Heavy Metal) என்ற தலைப்பில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.

சில மெட்டல் ஹர்லண்ட் இதழ் அட்டைகள்

‘மெட்டல் ஹர்லண்ட்’ போல உங்களுக்குப் பிடித்தமான அறிவியல் புனைவுக்கென்றே வெளியான முக்கியமான இதழ்கள் வேறு ஏதேனும் உள்ளனவா?

எனது கல்லூரி நாட்களில், காமிக் மற்றும் அறிவியல் புனைவு சம்மந்தமான பல இதழ்களைத் தொடர்ந்து வாசித்துவந்தேன். என் நண்பர்களிடமும் பகிர்வேன். 1976 இல் துவங்கப்பட்ட ஸ்டார்லாக் (Starlog) இதழ், ஸ்டார் வார்ஸ் திரைப்படத்தின் உருவாக்கம், பின்கதைகள், இன்னபிற அறிவியல் புனைவுப் படைப்புகளைப் பற்றிய தகவல்களுடன் 2009 ஆம் ஆண்டு வரை வெளிவந்தது. வாரன் பதிப்பகம் (Warren Publishing) வேம்ப்பையரில்லா (Vampirella) என்றொரு பத்திரிக்கை வெளியிட்டது. பேமஸ் மொன்ஸ்டர்ஸ் ஆப் பிலிம்லண்ட் (Famous Monsters of Filmland) என்றொரு பத்திரிக்கையும் அக்காலத்தில் வெளியானது. சிறப்பு ஒப்பனைத் திறனுக்கென்றே ஃபான்கோரியா (Fangoria) என்ற இதழ் ஒன்றும் இருந்தது. இவற்றின் ஒன்றிரண்டு இதழ்கள் மட்டுமே என் கண்களில் தட்டுப்பட்டன. நவீன ஓவியங்களின் அறிமுகத்துக்குப் பிறகு நான் காமிக் புத்தகங்களைப் பார்க்கும் கண்ணோட்டம் மாறியது. அந்த நேரத்தில்தான் இந்தப் புத்தகங்கள் என் கைக்குக் கிடைத்தன.

எனது எட்டாவது வகுப்பில் மதுரை அம்மன் சன்னதி தெருவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பழைய புத்தகக் கடையில் அட்டையில்லாத மேட் இதழை (Mad magazine) முதன் முதலில் பார்த்தேன். நான் ஏற்கனவே படித்துக்கொண்டிருந்த காமிக் புத்தகங்களைப் போல இல்லை அது. 1969க்குப் பிறகு உலகம் முழுவதும் ஒரு மிகப் பெரிய காட்சிப்புரட்சி நடந்தது. ஐரோப்பாவில் இருக்கும் சில சினிமா ஸ்டுடியோக்கள் மூடப்பட்டதும் (Hammer Film Productions), அவற்றின் நூலக வளங்களைக் கொண்டு சில பத்திரிக்கைகள் துவங்கப்பட்டன. இப்பத்திரிக்கைகளில் இயங்கிய ஓவியர்களும் காமிக் கலைஞர்களும் பிறகு வந்த role playing விளையாட்டுகளையும், சினிமாவில் சிறப்புக் காட்சி விளைவுகளையும் (special effects) வடிவமைத்தனர். ஸ்டார் வார்ஸ் திரைப்படம் இவர்களுக்குப் பல வாய்ப்புகளையும் திறப்புகளையும் தந்தது.

‘மெட்டல் ஹர்லண்ட்’ உருவாவதற்குப் பின்னணியில் இருந்த முக்கியமான சமூகக் காரணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

1969 – வன்முறையும் நிர்வாணமும் சினிமாவில் இடம்பெறத் துவங்கிய காலகட்டம். ‘போனி அண்ட் கிளைட்’ (Bonnie and Clyde) திரைப்படத்தின் முடிவில் இருவரையும் சுட்டுக்கொல்லும் காட்சி மறைவு பொதிவற்ற யதார்த்தமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. சாம் பெக்கின்பா (Sam Peckinpah) இயக்கிய ‘தி வைல்ட் பன்ச்’ (The Wild Bunch) திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் உங்கள் கண் முன் வன்முறை நிகழும், ஆனால் அது வன்முறைக் காட்சி கிடையாது. அன்பின் மிகுதியால் நீங்கள் மரணிப்பவர்கள் அருகில் இருப்பீர்கள். இவ்வாறான காட்சிப்படுத்துதல் அப்போதுதான் சினிமாவில் நிகழ்ந்தது. அதற்கு முன்பு வரை முழு நிர்வாணம் (frontal nudity) கிடையாது. அதுவரை ஒருவித மறைவோடு நிர்வாணத்தைக் கையாண்டிருப்பார்கள். மோடிகிலியானியின் (Modigliani) ஓவியங்களைப் போல, பெண்கள் முழு நிர்வாணமாக காமராவுக்கு முன் நடந்து வரும் காட்சிகள் அப்போதுதான் வரத் தொடங்கின. கலவியை நேரடியாகச் சித்தரிக்கத் துவங்குகிறார்கள். இவை அனைத்தும் காமிக் புத்தகங்களுக்குள்ளும் மெல்ல நுழைந்தன. காமிக் புத்தகங்களில் கலவியைக் கவனித்துப் பார்த்தால், ஆரம்ப காலங்களில் நமது தமிழ்த் திரைப்படங்களில் வரும் மரத்தைச் சுற்றித் திரியும் காட்சிகள் போல இருந்தன. பிறகு இரண்டாம் உலக போர் காலகட்டத்தில் போர் வீரர்களை குஷிப்படுத்த ஜேன் (Jane) என்கிற காமிக் கதாபாத்திரம் ஆடைகளை அவ்வப்போது கழற்றிவிடுவாள். இப்படிப் படிப்படியாக மாற்றங்கள் நிகழ்ந்து, 1969இல் முழுமையானதொரு நிலையை எட்டியது.

அதுவரை தூய்மைவாத ஓவியர்கள் காமிக் வரைபவர்களைக் கலைஞர்களாகக் கருதியதே கிடையாது. காமிக் வெறும் குழந்தைகளுக்கான ஊடகம் இல்லை என்கிற சிந்தனை மாற்றம் ஏற்பட்டபோது, இன்னும் நிறைய காமிக் புத்தகங்கள் வெளியாகின. வாரன் பதிப்பகத்தின் பங்கு இதில் முக்கியம். மேட் பதிப்பாளர் வில்லியம் கெய்ன்ஸ் (William Gaines) மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் மீது வைக்கப்பட்ட குற்றசாட்டு — காமிக்ஸ் குழந்தைகளைக் கெடுத்துவிடும். 1954 இல் காமிக்ஸ் கோட் ஆதாரிட்டி (Comics Code Authority) என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு, அமெரிக்காவில் வெளியாகும் அனைத்து காமிக் புத்தகங்களும் தணிக்கை செய்யப்பட்டன. இந்த அமைப்பு கெய்ன்ஸ் வெளியிட்ட பல காமிக் புத்தகங்களுக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதிட்ட கெய்ன்ஸ் சொன்னது, “படிமங்கள் ஒருபோதும் குழந்தைகளைக் கெடுக்காது.”

இந்தப் பின்னணியில்தான் மோபியஸுக்கும் அவரது நண்பர்கள் சிலருக்கும் புதிய வகை படங்கள் வரையும் ஆசை ஏற்படுகிறது. புத்தக வர்த்தகத்தில் இக்கதைகளுக்கு வாய்ப்பில்லாததால், இவற்றுக்கான வேறொரு வெளியாகத்தான் மெட்டல் ஹர்லண்ட் இதழை உருவாக்கினர். தங்களுக்கான களத்தைத் தாங்களே உருவாக்கிக்கொண்டனர்.

‘மெட்டல் ஹர்லண்ட்’ இதழின் சிறப்பு என்ன?

காட்சி வடிவில் அதுவரை சொல்ல முயற்சிக்கப்படாத கதைகளை மெட்டல் ஹர்லண்ட் முன்வைத்தது. மைய நீரோட்டத்தில் வரும் கதைகள் உண்டாக்கிய அயற்சியால் உந்தப்பட்டு இது போன்ற புதிய முன்னெடுப்புகளில் இறங்கினர். ஓவியர்களுக்கே உரிய தாகத்துடன் பல பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்யும் துடிப்புடன் இருந்தார்கள். தோற்றம், கதை அமைக்கப்படுகிற உலகம், கதை சொல்லும் உத்திகள், சட்டக அமைப்பு — இப்படி அனைத்திலும் பரிசோதனை முயற்சிகள் செய்தார்கள். இதில் என்கி பிலால் (Enki Bilal) மற்றும் பிலிப் ட்ரூலெட் (Philippe Druillet) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மோபியஸ் அனிமேஷன் துறையிலும் பல முயற்சிகளைச் செய்திருக்கிறார். சில பாதியில் நின்று போயின. ஏலியன் திரைப்படத்தில் வரும் விண்களத்தின் உள் கட்டமைப்பை இவர்தான் வடிவமைத்தார். பல திரைப்படங்களுக்குக் கலை வடிவமைப்பு செய்திருக்கிறார்.

மோபியஸ் வடிவமைத்த ‘டைம் மாஸ்டர்ஸ்’ (Time Masters) என்கிற அனிமேஷன் திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

மெட்டல் ஹர்லண்ட் இதழுக்குப் பங்களித்தவர்களை ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்தவர்கள் எனச் சுருக்கிவிட முடியாது. அவர்களின் தொடர்ச்சியாகவே என்னை நினைத்துக்கொள்வேன். அவர்கள் பாதையிலேயே நான் பயணிக்கத் தொடங்கினேன். இக்கலைஞர்கள் புதுப்புது தொழில்நுட்ப வளர்ச்சிகளையும் ஏற்றுக்கொண்டனர். மோபியஸ் தனது மகன் அமிகா என்கிற கணினியைப் பயன்படுத்துவதைப் பார்த்துவிட்டு ஓவியங்கள் வரைய அதைப் பயன்படுத்தினார். நானும் அமிகா வைத்துப் பல ஓவியங்கள் தீட்டியிருக்கிறேன்.

1981 இல் ‘ஹெவி மெட்டல்’ (Heavy Metal) என்றொரு அனிமேஷன் திரைப்படம் வெளியானது. மெட்டல் ஹர்லண்ட்டில் வெளியான கதைகளின் தழுவலில் எடுக்கப்பட்ட படம் இது. அவ்விதழில் வெளியான ஒவ்வொரு கதையும் சுமார் பத்து பக்கங்கள் இருக்கும், வெவ்வேறு ஓவியர்கள் வரைந்திருப்பார்கள். இதே பாணியில் அத்திரைப்படத்தையும் உருவாக்கினார்கள் — நான்கு கதைகள், அவற்றை இணைக்கும் ஒரு கதாபாத்திரம், நான்கு கதைகளையும் வெவ்வேறு ஓவியர்கள் வரைந்தார்கள். ஒருவரிடம் மோபியஸின் அம்சம் இருக்கும், இன்னொருவரிடம் கார்பனின் அம்சம் இருக்கும். (ரிச்சர்ட் கார்பன் [Richard Corben] என்கிற அமெரிக்க ஓவியர் நிறங்களால் மட்டுமே ஓர் அமானுஷ்யத் தன்மையை உருவாக்குவார்.)

காமிக் உலகில் மோபியஸ் உண்டாக்கிய பாதிப்பு என்ன?

மோபியஸின் முக்கியமான பங்களிப்பு என்னவென்றால், காமிக் துறையில் வரைவதற்கு அசாதாரண ஒழுக்கம் வேண்டும் என்பதை நிறுவினார். டார்ஸானை (Tarzan) வரைவதற்கு முதலில் மிக்கேலாஞ்சலோவின் சிற்பங்கள் நகர்வது போல வரைய நீங்கள் பழக வேண்டும். எல்லா கோணங்களிலிருந்தும் அச்சிற்பங்கள் திரும்பி, மரத்திலிருந்து மரம் தாவிச் செல்வது போல வரையும் திறன் கொண்ட கலைஞரால்தான் டார்ஸானைத் தொடர்கதையாக வரைய இயலும். இப்படிப்பட்ட கலைஞர்களான ஹோகார்த் (Hogarth) மற்றும் ஹால் ஃபாஸ்டர் (Hal Foster) இன் படைப்புகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்குப் பிறகு, ஒழுங்குடன் வரைவதும் சரி, அரூபமாக வரைவதும் சரி, பல்வேறு விதமான உலகங்களை உருவாக்கி நிதர்சனமாக வாசகனின் கண்கள் முன் விரித்துக் காண்பித்து பல காலகட்டங்களுக்குள் பயணிக்க வைக்கும் சக்திவாய்ந்த மிகப்பெரும் கலைஞர் மோபியஸ். அவரின் படைப்புகள் எல்லா காலத்திற்கும் பொருந்துவதாகவும் உள்ளன.

என்னைப் பொறுத்தவரை மோபியஸ் பிக்காசோவுக்கு நிகரானவர். ஜப்பானிய இயக்குநர் மியாசாகியிடமும் மோபியஸின் தாக்கம் இருந்தது. மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அத்தனை கலைஞர்களுக்கும் மிகப்பெரிய ஆதர்சமாக ஓவியர் மோபியஸ் இருந்தார். சீரான, தெளிவான கோடுகள், கன அளவுடன் ஓவியங்கள் வரையும் பாங்கை அவரிடமிருந்து எல்லோரும் கற்றுக்கொண்டனர். கிட்டத்தட்ட ஐம்பதாண்டு காலம் ஓவியங்கள் தீட்டினார். கணினி வந்தபிறகு அதைப் பயன்படுத்தியும் வரைந்தார். அறிவியல் புனைவு காமிக் வகைமை பிரபலமடைந்து, அடுத்த தலைமுறையினரை ஈர்க்கத் தொடங்கியதில் மோபியஸின் பங்கு மிக முக்கியமானது.

மோபியஸ் உங்களிடம் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தினார்?

நான் மோபியஸைப் பார்த்து அப்படியே வரைய வேண்டும் என்று எண்ணியதில்லை. அவரது படைப்புகளின் ஆன்மாவிலிருந்து உந்துதல் பெற்றேன். அவரது காமிக்குகளின் ஒவ்வொரு சட்டகத்தையும் பார்த்துக்கொண்டே இருப்பேன். நான் சேர்த்துவைத்திருக்கும் காமிக் புத்தகங்களைப் படிக்காமல் அடிக்கடி பார்த்துக்கொண்டே இருப்பேன். எனக்குப் பார்ப்பதே படிப்பது. சட்டகங்களை எவ்வாறு பிரித்திருக்கிறார், ஒரு கதையைக் காட்சிகளாக எப்படி முன்வைக்கிறார் போன்றவற்றைக் கவனிப்பேன்.

என்னுடைய காமிக் ஈடுபாட்டைக் கண்ட எனது நண்பர் ஒருவர், மோபியஸ் கையெழுத்திட்ட காமிக் புத்தகம் ஒன்றை எனக்குப் பரிசாக அளித்தார். அந்த ஒரேயொரு பிரதியை இன்றும் பத்திரமாக வைத்திருக்கிறேன். நான் சமீபத்தில் இத்தாலி சென்றபோது, சிசிலியின் கடைத்தெரு வழியாக நடந்து செல்கையில் ஒரு புத்தகக் கடையைப் பார்த்தேன். அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டும்போது அதில் மோபியஸ் வரைந்த அர்ஸாக் கதையின் எட்டு பக்கங்கள் இருப்பதைக் கண்டதும் அதற்காகவே அப்புத்தகத்தை வாங்கினேன்.

மோபியஸின் அர்ஸாக்

அவரின் பல கதைகள் எனக்குப் பிடித்திருந்தாலும், நான் மிகவும் மதிப்பது அவரின் வலுவான கோட்பாட்டுரீதியான ஒழுங்கை. அவரின் கவ்பாய் கதைகள் சாமானியமானவை அல்ல. ஆரம்பகால அனிமேஷன் படங்களை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் வின்சர் மெக்கே (Winsor McCay). காமிக் உருவாக்கும் திறமை இருந்தால்தான் அனிமேஷன் திரைப்படத்திற்கு எதார்த்தமாக வரைய முடியும். அதை முதன் முதலில் செய்தவர் வின்சர் மெக்கே. இன்றும் அனிமேஷன் துறையில் வாழ்நாள் சாதனை விருது வின்சர் மெக்கேயின் பெயரில் வழங்கப்படுகிறது. அவர் உருவாக்கிய ‘லிட்டில் நீமோ’ (Little Nemo) தொடருக்குக் காணிக்கையாகத் (tribute) தனது அர்ஸாக் கதாபாத்திரம் நீமோவைச் சந்திப்பது போல மோபியஸ் வரைந்தார்.

அர்ஸாக் லிட்டில் நீமோவைச் சந்திக்கும் காட்சி

மோபியஸ் எல்லா காலத்துக்குமான கலைஞர். பிரபலமான பலருடனும் வேலை செய்திருக்கிறார், அரூபமானப் படைப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

உங்கள் பார்வையில் மோபியஸ் வரைந்த காமிக் புத்தகங்களின் சட்டகங்களின் தனித்தன்மை என்ன?

அவரின் சட்டகங்கள் மரபார்ந்தவையாக இருக்காது. ஒரு காட்சியின் அகலப்பரப்பைக் காட்டும் விதமாகப் பல சட்டகங்கள் இருக்கும் (panoramic view). அவரின் ஓவியங்களில் இருக்கும் நுண்ணிய விவரணைகளை உன்னிப்பாகக் கவனித்ததில் நான் வியந்தது, enormous detail! திரைப்படங்களுக்கே உரிய கோணங்களில் காட்சி அமைப்பார். பெரும்பாலும் கீழிருந்து மேல் பார்க்கும் கோணங்களைப் (low angle) பயன்படுத்துவார். காட்சி அகலமாக விரிவாகத் தெரிந்தாலும், சட்டகத்திற்குள் இருக்கும் எந்தவொரு சிறு கோட்டையும்கூட நீங்கள் உதாசீனப்படுத்திவிட முடியாது. எல்லாமே தெளிவான கோடுகள். அவருக்கே உரிய கவித்துமான பாண்டித்யமான பழக்கத்தால் வருகிற ஒருவித வேகம் அவர் ஓவியங்களில் தெறிக்கும். தனது வாழ்நாளின் கடைசி வரையில் அவர் வரைந்த ஓவியங்களில் இந்த ஒழுங்கு சிதையாமல் அப்படியே இருந்தது.

“ஒரு காட்சியின் அகலப்பரப்பைக் காட்டும் விதமாக பல சட்டகங்கள் இருக்கும்.”

Wide lens வைத்து ஒரு காட்சியைப் படமாக்கினால் சட்டகத்துக்குள் முன்புறத்தில் இருப்பதும் பின்புறத்தில் இருப்பதும், அனைத்துமே தெள்ளத் தெளிவாகத் தெரியும். அவரின் ஓவியங்களும் அவ்வாறே இருக்கும். இதன் தாக்கம் உலகின் அனைத்து முக்கியமான கலைஞர்கள் மீதும் இருப்பதைக் காணலாம். மோபியஸைக் கடந்து வராத சினிமா, special effect, காமிக் புத்தகக் கலைஞர்கள் இல்லவே இல்லை.

கிராஃபிக் நாவலின் முக்கியமான அம்சம் எது?

முதலில் காமிக் புத்தகங்களின் தோற்றத்தைப் பார்ப்போம். நான் முன்பு குறிப்பிட்ட வில்லியம் கெய்ன்ஸின் தந்தை மேக்ஸ் கெய்ன்ஸ் அமெரிக்காவில் காமிக் புத்தகங்களின் பெருக்கத்திற்கு வித்திட்டவர். 1920களில் செய்தித்தாள்களில் கடைசி இரண்டு பக்கங்களைக் குழந்தைகளுக்காகவும் விளையாட்டுச் செய்திகளுக்காகவும் பயன்படுத்தினர். இதைப் பார்த்த கெய்ன்ஸ் இப்படி வெளியாகும் பக்கங்களைத் தொகுத்து முதன் முதலில் காமிக்கைப் புத்தகமாக வெளியிட்டார். ஆகவே காமிக் முதலில் செய்தித்தாள்கள் அச்சிடப்படும் அதே பல்ப் (pulp) தாள்களில் வெளியானது. இவர் வெளியிட்ட ஈ.ஸி. காமிக்ஸ் (EC Comics) புத்தகங்களைப் படித்தவர்களே பிற்காலத்தில் அமெரிக்காவில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்கள் ஆனார்கள். எடுகேஷனல் காமிக்ஸ் (Educational Comics) என்கிற பெயரில் மேக்ஸ் கெய்ன்ஸ் நடத்திய பதிப்பகத்தை, அவரின் மகனான வில்லியம் கெய்ன்ஸ் அதே லோகோவை வைத்துக்கொண்டு என்டேர்டைனிங் காமிக்ஸ் (Entertaining Comics) என்று பெயர் மாற்றினார். அதன் தன்மையும் மாறியது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின் ‘காமிக் ஆல்பம்’ என்கிற வடிவில், டின்டின் (Tintin) போன்ற சில கதைகள் வெளியாகின. ஐரோப்பாவின் வட பகுதிகளில் நிறைய காமிக் புத்தகங்கள் வெளிவரத் துவங்கின.

பொதுவாக உயர்தர காகிதம் மற்றும் வண்ணத்துடன் சுமார் 60 பக்கங்களைக் கொண்டுள்ளது ‘காமிக் ஆல்பம்’. இது பெரும்பாலும் தனித்தனிச் சிறுகதைகளைக் கொண்டிருப்பதால், ஒரு காமிக் புத்தகத்திற்கும் கிராஃபிக் நாவலுக்கும் இடையிலான வடிவம் எனக் கருதப்படுகிறது. ‘தி அட்வெண்சர்ஸ் ஆப் டின்டின்’ (The Adventures of Tintin) மற்றும் ஆஸ்டெரிக்ஸ் (Asterix) போன்ற சிறுவர்களுக்கான நகைச்சுவை சாகசக் கதைகளும் டெக்ஸ் வில்லர் (Tex Willer), டையபோலிக் (Diabolic) மற்றும் தோர்கல் (Thorgal) போன்ற பெரியவர்களுக்கான கதைகளும் காமிக் ஆல்பமின் சில எடுத்துக்காட்டுகள்.

70களில் Graphics இதழ் ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளிவரும். ஒரே பத்திரிக்கையில் மூன்று மொழிகளும் இருக்கும். Domus இதழைப் போல. Graphicsஇன் ஓர் இதழ் காமிக் சிறப்பிதழாக வெளியானது. அதில் காமிக் வடிவத்தை ஒன்பதாவது கலை என்று குறிப்பிட்டனர் (Comics The Ninth Art). அதாவது காமிக் ஒதுக்கப்பட வேண்டிய கலை அல்ல, அதுவும் நுண்கலைகளில் ஒன்றுதான் என்று சில விமர்சனப் பார்வைகள் முன்வைக்கப்பட்டன. இதன் பிறகே உலகம் முழுவதும் கிராஃபிக் நாவல்கள் வெளியாவதற்கான சாத்தியம் ஏற்பட்டது.

சிறுகதைகளில் போலவே காமிக்கிலும் ஏழெட்டுப் பக்கங்களில் கதை சொல்லல் வந்து, அது மெதுவாக ஆல்பமாக மாறி, பிறகு கிராஃபிக் நாவல்கள் என்ற வடிவம் பெற்றதற்கு மோபியஸ் போன்றவர்கள் முக்கியமான காரணகர்த்தாக்கள்.

80களுக்குப் பிறகு வந்த பிராங்க் மில்லர் (Frank Miller) போன்ற கலைஞர்கள் அதுவரையிலிருந்த காமிக் முறைகளை மாற்றியமைத்தனர். ஜப்பானின் மாங்கா படைப்புகள் அவர்களைத் தொட்டன, தாக்கம் ஏற்படுத்தின. இந்தக் கலைஞர்கள் இணைந்து பேட்மேன் கதைகளை காமிக் ஆல்பமாக வெளியிட்டனர். வெகுஜன காமிக் இதழ்கள் மெதுவாகச் சேகரிப்பாளர்களின் பதிப்புகள் (collectors’ editions) நோக்கி நகர்ந்தன. தரமான தாள்களில் அச்சிடப்பட்டன. தனித்த கதை சொல்பவர்களாக சிலர் வரத்துவங்கினார்கள். இக்கதைகள் மூலம் 80களின் கடைசியில் மெல்ல கிராஃபிக் நாவலின் வடிவம் உருவாகி வந்தது.

கிராஃபிக் நாவல்கள் வரம்புகள் இல்லாமல் அரசியல் கருத்துகளை வெளிப்படையாகப் பேசின. கலாச்சாரரீதியாகப் பேசின. குறிப்பிட்ட காலக்கட்டங்களைச் சித்தரித்தன. கிராஃபிக் நாவல் கிட்டத்தட்ட சினிமாவைப் போலக் காட்சிகள் மூலம் செயல்படும் ஓர் ஊடகமாக உருவாகியது. காமிக் புத்தகங்களைப் படித்து வளர்ந்துவந்த சமூகம் குறிப்பாக, பிரான்ஸ், ஜப்பான், அமெரிக்கா, ஆகிய நாடுகளில், கிராஃபிக் நாவல் பல்வேறு வடிவங்களைப் பெற்றது. 90களில் நிகழ்ந்த போர்கள் கிராஃபிக் நாவலுக்கு வேறொரு வடிவமும் பேசுபொருளும் வழங்கின. உதாரணத்திற்கு, லே மிசேராபில் (Les Misérables) என்கிற பிரெஞ்சு நாவலைத் தழுவி காமிக் புத்தகம் உருவாக்கபட்டது. பிரெஞ்சுப் புரட்சி காலகட்டத்தைப் பின்னணியாகக்கொண்ட ஒரு கதை அதில் சொல்லப்பட்டது. இப்படியொரு காமிக் உருவாக்கினால் ஒரு திரைப்படம் எடுப்பதற்கான முன் தயாரிப்பு முடிந்துவிட்டதாகக் கருதலாம். ஏனென்றால் காமிக்கின் காட்சிகளை அப்படியே பின்பற்றித் திரைப்படம் எடுத்துவிடலாம். அதனால்தான் இன்று பல காமிக் புத்தகங்களுக்குத் திரைப்பட உரிமை வாங்கிவிடுகிறார்கள்.

பெரும் சுதந்திரமும் சாத்தியங்களும் கொண்ட ஓர் ஊடகமே கிராஃபிக் நாவல், அதுவும் குறிப்பாக எழுத்தாளரும் ஓவியரும் இணைந்து பணியாற்றும்போது. சில வேளைகளில் ஓவியரே எழுதவும் செய்கிறார். இன்று இது மிகப்பெரும் கலைவடிவமாகிவிட்டது. சித்திரங்கள் மூலம் கதை சொல்லுதலை வேறொரு தளத்திற்குக் கொண்டுசேர்த்துவிட்டது கிராஃபிக் நாவல்.


குறிப்பு: முகப்புப் படம் மோபியஸுக்குக் காணிக்கையாக ஓவியக் கலைஞர் டிராட்ஸ்கி மருது வரைந்தது.

மேலும் பார்க்க

In Search of Moebius – மோபியஸ் பற்றிய ஆவணப்படம்
சினிமா மீது மெட்டல் ஹர்லண்ட் இதழ் செலுத்திய தாக்கத்தைக் காட்டும் காணொளி

மோபியஸின் ஓவியங்களைப் பார்க்க
https://www.iamag.co/the-art-of-moebius/

மோபியஸின் அரூப ஓவியங்கள்
https://www.pinterest.com/tofer73/moebius-abstract/

மோபியஸின் படைப்புகளை அறிமுகப்படுத்தும் விரிவான ஆங்கிலக் கட்டுரை
https://www.lambiek.net/artists/g/giraud.htm

அரூ குழுவினர் and டிராட்ஸ்கி மருது

View Comments

  • அற்புதம்
    நண்பர் மருது அவர்களின்
    உரையாடல் புல்லரிக்கச் செய்கிறது. ஓவிய உலகில் மிகப்பெரிய உயரங்களை அவரது தூரிகை தொடுவது நிச்சயம்
    அன்புடன்
    சக்ரவர்த்தி
    திரைக்கலைஞன்
    மும்பை

  • மருதுஅண்ணண் 30வருசமா இதுபற்றி
    பேசிவருகிறார்.இப்போது பொதுப்பேச்சுக்கு வந்திருப்பது
    மேலதிக வெளிச்சம் கிடைத்திருக்கிறது.

Share
Published by
அரூ குழுவினர் and டிராட்ஸ்கி மருது

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago