கதை

ப்ரோதேஸ்

8 நிமிட வாசிப்பு

1

நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கும்போது நகரமே இரத்த வாடையில் மூழ்கியிருந்தது. ஆண்களின் பொதுக் கழிப்பறைகள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டன. ஆண்கள் வெளியில் நடமாடுவதைக் கண்டால் அடித்துச் சாகடிக்கத் துணிந்து நிற்கும் பெண்கள் கூட்டம் அனைவரையும் நடுக்கத்திற்குள்ளாக்கியது. அம்மா தொடர்ந்து கைப்பேசியின் வாயிலாக என்னைத் தொடர்புகொள்ள முயன்று கொண்டிருந்தார். கடந்த இரண்டு வாரங்கள் நான் அவரிடம் பேசவில்லை. பேசுவதற்குரிய நிதானத்தை நான் இழந்து இருபது நாட்கள் ஆகின்றன.

கடந்த மாதம் ஓரிரு நாட்களில் யாரும் எதிர்பாராத வேளையில்தான் அது நிகழ்ந்தது. உறக்கத்திலிருந்து விழித்த பெரும்பாலான ஆண்களுக்கு அன்றைய தினம் பேரதிர்ச்சி காத்திருந்தது. எப்பொழுதும்போல வேலைக்கு எழும்போதுதான் அதை உணர்ந்தேன். அதற்கு முந்தைய வாரத்தில் நெஞ்சிலும் எலும்பிலும் இருந்த வலியை ஏதோ வேலைக் களைப்பில் உருவானது என்று விட்டுவிட்டேன். அதே வலி நண்பர்கள் சிலருக்கும் வந்தபோதுகூட நான் அதைக் கண்டுகொள்ளவே இல்லை. வழக்கமாக ஏற்படும் தோள் வலிதான் என ஒரு முடிவுக்கு வந்து அலட்சியமாக இருந்துவிட்டேன்.

“சங்கரு… செத்துரலாம் சங்கரு… இதுக்கு மேல என்னை என்னாலப் பாக்க முடிலடா,” என்று அல்பர்ட் கதறி அழும்போது எனக்கு அவன் ஒரு தேவதை போலத் தெரிந்தான். அவன் முற்றிலுமாக மாறியிருந்தான். நான் அறிந்த அல்பர்ட் கிடையாது. அவனுடைய முரட்டு மீசை உதிர்ந்து முகம் வெளிறிக் காணப்பட்டது. உடல் சிறுத்து மெலிந்திருந்தான். முகம் ஒரு பாவக்குழிக்குள் ஒளிந்திருந்தது.

“சங்கரு… என்னக் கொன்னுரு… என் வீட்டுல உள்ளவங்க என்னப் பாத்தாங்கன்னா… அதுக்கு நான் உயிரோட இருக்க வேணாம் சங்கரு… எப்படியாவது என்னக் கொன்னுரு. சாவற எண்ணம் இருக்கற வரைக்கும்தான் எனக்கு இந்தத் தைரியம் இருக்கும் சங்கரு…” அவன் மண்டியிட்டுக் கெஞ்சினான். என் கைகள் நடுங்கின. மனம் அதற்கும் மேலாக அதிர்ச்சியில் உறைந்திருந்தது. மெல்ல எக்கிக் கண்ணாடியின் வழியாகக் கீழே பார்த்தேன். பெண்கள் சிலர் கையில் ஆயுதங்களுடன் நடமாடிக் கொண்டிருந்தனர். அவர்களின் முகத்தில் மூர்க்கம் தெரிந்தது. கடுங்கோபத்தின் மொத்த சேகரிப்பாக அலைந்து கொண்டிருந்தார்கள்.

“சங்கரு. நான் ஆம்பளத் திமிர் பிடிச்சவன். அப்படித்தானே இருந்தேன்? எனக்கு மன்னிப்பே வேணாம். நீ யோசிக்காத… அவுங்கக்கிட்ட சிதைஞ்சி சாகறதவிட… நீ… நீ கொன்னுருடா…” அவனுக்கு மேலும் பேசத் தெம்பில்லாமல் மயங்கினான். பலநாள் தவிப்பு அவனுக்குள் கொதித்து அவனை உக்கிரமாக்கியது. நீண்ட இருள் எங்களைச் சுற்றி வியாபித்துக் கொண்டிருந்தது. நாளைய பகல் எங்களுக்கானது அல்ல. முடிவோடுதான் ‘பெராங்கின் பேரங்காடியின்’ ஆறாவது மாடியில் நின்று கொண்டிருந்தோம். நேற்றைய இரவே பல ஆயிரம் ஆண்கள் கடத்தப்பட்டிருந்தார்கள். அதில் பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுச் சிதைந்த உடல்களுடன் வீசப்பட்டிருந்தார்கள். உயிர் பயம் சூழ்ந்து வந்து ஒரு பூதத்தைப் போல மனத்தில் உட்கார்ந்திருந்தது.

2

சீனியர் ஜான்சன் கடையில் தேநீர், மதிய வெய்யிலில் ஒரு காற்று வாங்கல், நண்பர்களுடன் தீராத அரட்டை, முதலாளிகளைப் பற்றிய கிசுகிசு நகைப்புகள், இரவில் தொங்கல் கடையில் சுமாரான பீயர், மறுநாளும் தொடரும் என்கிற சிந்தனையோடு இன்னும் பற்பல திட்டங்கள்…

இப்படியான வாழ்க்கையின் ஒரு பசித்த நடுநிசியில் எங்குப் போவதென்று தெரியாமல் சுற்றியலைந்து கொண்டிருந்தபோதுதான் நானும் அல்பர்ட்டும் ‘ப்ரோதேஸ்’ கோழியைக் கண்டடைந்தோம். ஆடம்பர விளக்குகள் விட்டுவிட்டு எரிந்து கொண்டிருந்த ‘ப்ரோதேஸ்’ கடை தூரத்திலும் தெளிவாகத் தெரிந்தது. வீட்டில் இக்கடையைப் பற்றிய விளம்பரத் தாள் இன்னும் தபால் பெட்டியில்தான் இருக்கிறது என்பது ஞாபகத்திற்கு வந்தது. இச்சிறிய நகரத்தில் ‘ப்ரோதேஸ்’ கடைகள் ஐந்தாகப் பெருகியிருந்தன. அக்கடைகள் நாடெங்கிலும் மெல்ல வளர்ந்து கொண்டிருந்தன. நடைமுறையில் இருந்த பல துரித உணவுகளுக்குக் கடந்தாண்டு போட்டியாக வந்த ‘ப்ரோதேஸ்’ தனித்த சுவைமிக்க ‘கோழிப் பொறியலை’ அறிமுகப்படுத்தியது.

ஒரு பெருங்கூட்டம் அந்நவீனக் கடைக்குள் அலைமோதிக் கொண்டிருக்கும் காட்சிகூட எங்களை ஈர்த்திருக்கலாம். நாக்கில் அன்று அப்பொறியலை வைத்தது முதல் இன்றுவரை அதன் அதீத ருசி பிரமிக்க வைக்கிறது. இப்பொழுது இவ்வளவு நாசமாகிவிட்ட இவ்வேளையில்கூட வாழ்க்கையா ‘ப்ரோதேஸா’ என்று கேட்டால் நிச்சயாக அந்தக் கோழியைச் சுவைத்த பிறகே எதையும் முடிவெடுப்பேன். அதன் ருசி நாவில், மனத்தில், மூளையில் என அனைத்திலும் கலந்திருந்தது.

முதல் நாள் ருசித்தலுக்குப் பின் நான் விட்டாலும் அல்பர்ட் விடாமல் அக்கடைக்குச் சென்று கொண்டிருந்தான். ஒரு பசித்த வேட்டை நாயைப் போலத் தினமும் ‘ப்ரோதேஸ்’ கோழியின் மீது தீவிரப் பற்று கொண்டோம். நாங்கள் மட்டுமல்ல, ஒரு நகரமே கடைக்குள் அடைக்கலமாயின. மற்ற துரித உணவுக் கடைகள் ‘ப்ரோதேஸ்’க்குப் போட்டியாக பலவகையான உத்திகள், வடிவமைப்புகள் செய்தும் மக்களின் ஆழ்ந்த ருசிக்கு அக்கடைகளே பெருகி வந்து தீனி போட்டுக் கொண்டிருந்தன. தினம் இரவில் அங்கேயே கிடந்தோம். ஒரு போதையைப் போல ‘ப்ரோதேஸ்’ கோழி நாவினில் நர்த்தனமாடிக் கொண்டிருந்தது.

ஏறக்குறைய சில மாதங்களுக்குப் பின் அக்கடையில் எங்களுக்கு அறிமுகமாகி நட்பான முத்துசாமி குடிப்போதையில் அதைச் சொல்லும்வரை ‘ப்ரோதேஸ்’ பற்றி எனக்கு எந்தக் கேள்வியும் எழுந்ததில்லை.

“பாங்! என்னிக்காவது நினைச்சிப் பாத்திருக்கீங்களா…. ‘ப்ரோதேஸ்’ன்னா என்னானு? தெரியாதுதானே? நம்மளாம் பெரிய முட்டாளுங்க. நல்லா சாப்டுட்டு நல்லா பேண்டுட்டு மறந்துறணும். அவ்ளதானே வாழ்க்க?”

“முத்து! என்ன ரொம்ப மப்பு ஏறிருச்சா? சரி கிளம்பு…” என்று அல்பர்ட் சமாதானம் செய்ய முயன்று தோற்றான். முத்துசாமியின் கண்கள் சிவந்து அடிக்கடி ஒரு கோழியைப் போலத் தலையை உதறிக் கொண்டான். தலையைச் சிலுப்பி ஓரக்கண்ணால் என்னைப் பார்த்தான்.

“நீங்க சொல்லுங்க… ‘ப்ரோதேஸ்’ன்னா என்னா?”

நான் அமைதியாக இருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் அது ஏதோவோர் ஆங்கில வார்த்தை. அதற்கு மேல் எந்த ஆராய்ச்சியும் செய்ததில்லை. ஏனோ மூளை வேலைக்கு ஒவ்வாமல் தள்ளி நின்றது. எதையும் சிந்திக்கத் தோன்றவில்லை. வெறுமனே பார்ப்பது சுகமாக இருந்தது. அதே மனவோட்டத்தில்தான் அன்று முத்துவைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“ப்ரோதேஸ்ன்னா… ஆம்பள பொம்பளயோட ஆர்மோன்ஸ் கலப்பு…” என்று முத்து சொன்னதும் எனக்கு அப்பொழுதும் உறைக்கவில்லை. மெல்லச் சிரித்துவிட்டு அல்பர்ட்டைப் பார்த்தேன். அவனும் கிண்டலாகச் சிரித்துவிட்டு மீதி இருந்த ‘ப்ரோதேஸ்’ கோழியின் கால் எலும்பைக் கடித்து மென்றான்.

“பாங்ங்ங்… சொன்னா கேளுங்க. இந்தக் கோழிய சாப்டாதீங்க. இது ப்ரோதேஸ்… ப்ரோகெஸ்தெரோன்… தேஸ்தோஸ்தெரோன்… கலப்பு ஊசி குத்தன கோழிங்க… கிறுக்குப் பிடிச்ச கோழிங்க…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் போதையில் மயங்கினான். அதற்கு மேல் அவனை எழுப்புவது சாதாரண காரியமல்ல. மொறுமொறுவென்று இருந்த ‘ப்ரோதேஸ்’ கோழியின் தொடைப்பகுதி மகா உன்னத ருசி என்று சொல்லத் தோன்றியது.

3

அன்றைய தினத்திலிருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு முத்துசாமி திடீரென ஒருநாள் காணாமல் போனான். அதன் பிறகு அவனைக் கடையில் நாங்கள் பார்க்கவே இல்லை. அன்று போதையின் உச்சத்தில் அவன் சொன்னதைக்கூட என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாமல் போனதுதான் பெரும்தவறென்று தோன்றியது. ஏதோவொன்று மூளையை ஆக்கிரமித்து மெல்ல உடலில் அதீதக் காம உணர்வுகளும் பெருகத் துவங்கியதை எங்களால் உணர முடிந்தது.

எனக்கு அல்பர்ட்டின் மீது உருவான உணர்வுகளே நான் கவனிக்கத் தவறிய இரண்டாவது தவறு. நள்ளிரவு தாண்டியும் உரையாடிக் கொண்டிருந்த இரவில் என்னையும் மீறி நான் அவனுக்கு முத்தமிட்டேன். அவன் அதனை மறுக்காமல் ஏற்றதும் உணர்வலைகள் உள்ளுக்குள் பேரலையுடன் எழும்பி வந்தன. இருவரும் மிருகத்தனமாக நடந்துகொண்ட அவ்விரவில் அல்பர்ட் ஊளையிட்டான். உடல் நெளிந்து, குறுகி, பயந்து மீண்டும் என் மீது பாய்ந்து முத்தமிட்டான். அவனுடைய கவனம் சிதைந்த அத்துமீறல் எனக்குள் பரவசத்தை உருவாக்கியது. என்ன செய்கிறோம் என்றறிய முடியாத நிலையின் உச்சத்தில் இணைந்திருந்தோம்.

‘ப்ரோதேஸ்’ கோழியை வீட்டிற்குக் கொண்டு வந்து தட்டில் வைத்து வெகுநேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். நாவால் நக்கிச் சுவைத்துத் தின்றோம். சுவைத்த களைப்பில் நீண்ட நேரம் உறங்காமல் கிடந்தோம். மதுப்பழக்கம் மெல்ல விலகி ‘ப்ரோதேஸ்’ மாபெரும் போதையாக வளர்ந்து நின்றது. மனமும் மூளையும் மரத்துப் போயிருந்தன. மூளையில் சிந்தனைகள் குறைந்து வெறும் உடலாக இருந்தேன். அலுவலகத்தில் ஏற்பட்ட பலவிதமான கவனக்குறைவால் சக ஊழியர்கள் செய்யும் கிண்டல் என்னை ஒன்றுமே செய்யவில்லை.

எல்லாமும் அன்றைய காலையில் எழும்வரையே. இரவு படுக்கும்வரை நெஞ்சில் உருவான வலியைத் தவிர்க்க முடியாமல் தவித்தேன். அல்பர்ட்டுக்கும் அவ்வலி முன்பே இருந்திருப்பதை அவன் மறைத்துவிட்டான். எலும்பு, சதை, மூளை என எல்லாமும் வலித்தன. எங்கிருந்து அவ்வலி உருவாகிறது என்று கணிக்க முடியாமல் உடல் முழுவதும் பரவி வழிந்தது. அன்று காலையில் முதலில் அல்பர்ட்டுக்குத்தான் பேரதிர்ச்சி. அமைதியிழந்து என் அறைக்கு ஓடி வந்தான். மூலையில் சுருண்டு கத்தினான். அதிர்ந்து எழுந்ததும் என் மார்பு வீங்கியிருப்பதைக் கவனித்தேன். தடவிப் பார்த்தேன். அது வீக்கமல்ல என்று உணர்ந்த அடுத்த கணமே உறைந்தேன். சிறிதாக வளர்ந்திருந்த என் மார்பு வழக்கத்திற்கு மாறாக என்னை எனக்குக் காட்டிக் கொண்டிருந்தது. அல்பட்டிற்கு வளர்ந்து பெருத்திருந்தது.

4

கால் முட்டிகளை நெஞ்சோடு அழுத்தித் தன் மார்புகளை மறைத்துக் கொண்டிருந்தான் அல்பர்ட். அவமானத்தின் நுனியில் எங்கள் உயிர் தகித்துக் கொண்டிருந்தது. அம்மா தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தார். இப்போதைக்கு உலகில் என்னால் முடியாத காரியம் என் அம்மாவின் முன் போய் நிற்பது மட்டுமே. என்னைத் தேடி அவர் நகரத்திற்கு வந்துவிட்டார் என்கிற செய்தியும் அச்சத்தில் ஆழ்த்தியது.

“சங்கரு… அசிங்கமா இருக்குடா. பாவ மூட்ட தொங்குதுடா…” என்று பெருத்துத் தொங்கும் தன் மார்பை வெறியுடன் பிடித்து அழுத்தினான். உயிர் பிதுங்கி மொத்தமாக வெளியில் எந்நேரமும் வெடிக்கலாம் என்பதைப் போலப் பயமுறுத்திக் கொண்டிருந்தன.

“அல்பர்ட்டு… பொறுமையா இரு. செத்துரலாம்னா நம்ம இவ்ள நாள் தாக்குப்பிடிச்சதுக்கு அர்த்தம் இல்லாமல் போய்டும். இந்த நகரத்து விட்டுத் தப்பிச்சிட்டா நமக்கு வேற வழி இருக்கும்… அதுக்கப்பறம் வழி இருக்கும்,” என்று அல்பர்ட்டைச் சமாதானப்படுத்தினேன். அவன் தனக்கு ஆண் என்கிற உணர்வே அற்றுப் போய்விட்டதாகப் புலம்பினான். நான் என் உடலைக் கவனித்தேன். ஆணுக்குரிய எதுவுமே உடலில் மிச்சமில்லை. இது எனது உணர்வுகள் உருவாக்கிய பிரமையா என்றும் தெரியவில்லை.

“எனக்கு ஒரே ஒரு ஆசைடா அல்பர்ட்… எப்படியாவது தப்பிச்சி அந்த ‘ப்ரோதேஸ்’ கடைய உடைச்சி நொறுக்கணும். ஒரு கடையயாவது அப்படிச் செஞ்சோம்னா இதுக்கலாம் காரணம் என்னானு இவுங்களுக்குத் தெரியும்…” என்று மூர்க்கத்துடன் நகரத்தின் பெருவெளியைப் பார்த்தேன்.

அல்பர்ட் உறுமினான். அவன் பற்கள் இருளில் பளபளத்தன. நான் சொல்லச் சொல்ல எழுந்து பாய்வதற்குரிய கோபத்துடன் தென்பட்டான். வாயிலிருந்து எச்சில் ஒழுகக் கோழிகளைக் கடித்துக் குதறத் தயாரானான். அவன் முதுகில் கை வைத்துத் தட்டிக் கொடுத்தேன். எனது செயல் ஒரு மிருகத்தை அடக்கிச் சமாதானப்படுத்தும் தோரணையுடன் இருந்தது. இருவரும் பசி மயக்கத்தில் சுவரோடு சாய்ந்தோம். உறக்கம் கண்களில் ததும்பிக் கொண்டிருந்தது. இருள் சுற்றி வளைத்து ஓர் ஆழ்ந்த நடனத்தில் திளைத்துக் கொண்டிருந்தது.

ஒரு வெண்தேவதை போல சுஜித்தா நின்றிருந்தாள். அவள் உடுத்தியிருந்த வெண்ணிற ஆடை காற்றில் உலாவிக் கொண்டிருக்க சுற்றிலும் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து கொண்டிருந்தன. மகா ருசியின் அடையாளமாக அவளின் புன்னகை. அப்படியே அள்ளி ருசிக்கலாம் என்பதைப் போலத் தவிப்பு தலைக்கேறி நின்றது. கைகளை நீட்டி அவளைத் தொட முயல்கிறேன். கைகள் காற்றில் அசைகின்றன. ஒரு பெரும்வெறுமையின் காட்டம். சடாரென்று சுஜித்தா அம்மாவைப் போல மாறுகிறாள்.

“சங்கரு… அம்மாகிட்ட பேச மாட்டியாடா? பக்கத்துல வாடா… அம்மா உன்ன மறுபடியும் பெத்து வெளியாக்கறன்… நீ திரும்பியும் இந்த உலகத்துக்கு வாடா…”

அம்மா மீண்டும் சுஜித்தா ஆகிறாள். சுஜித்தா மீண்டும் அம்மாவாகிறாள். மூளை கனக்கிறது. அடர்ந்த ஓர் உறக்கம் அல்லது ஞாபகப் பிசகல்.

சட்டென்று விழிப்பு வந்தது. நானும் அல்பர்ட்டும் அங்கேதான் உட்கார்ந்திருந்தோம். நாக்கு பிசுபிசுத்தது. உடலுக்குள் பாம்பு போன்ற ஒன்று ஊர்ந்து அனைத்து உறுப்புகளையும் தின்று கொண்டிருந்தது. நாக்கு மெல்ல வெளியில் அதுவாக வந்து தொங்கியது. வெறுமனே எச்சில் வடிய இருண்ட வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மூளையில் இன்னமும் மிச்சமிருந்த சிந்திக்கும் திறனை உணர முடிந்தது. சுஜித்தா இந்நேரம் எத்தனை ஆண்களைக் கொன்றிருப்பாள் என்கிற கேள்வி மனத்தில் எழுந்தது. அவளுக்கும் எனக்குமான உறவு பத்தாண்டுகளைக் கடந்தது. காதல் என்றோ நட்பென்றோ சொல்லிக்கொள்ள முடியாது. அவை ஏதோ அர்த்தப்படுத்திக் கொள்ளும் வசதிக்காக உருவாக்கப்பட்ட வார்த்தைகள்.

எனக்கு மார்பு வளர்ந்திருந்த அன்றைய மாலையில் அவளைப் பார்க்க வரச் சொல்லியிருந்தேன். இரண்டு நாட்களாக அவளும் என்னிடம் பேசவில்லை. மகிழுந்தை நகர மேம்பாலத்திற்குக் கீழ் நிறுத்திய பிறகும் பரப்பரப்பில் இருந்த என்னால் கீழே இறங்க முடியவில்லை. அச்சமும் அவமானமும் சூழ்ந்து நின்று என் சதைக்குள் முட்டிக் கொண்டிருந்தன. மனம் ஒரு கம்பளிப் பூச்சியைப் போல உடலுக்குள் ஊர்ந்து என்னைக் கரைத்துக் கொண்டிருக்க கருமை பூத்திருந்த வானத்தைப் பார்த்தேன். அவளே மகிழுந்திலிருந்து இறங்கி வந்தாள். உடல் பெருத்து முகம் வீங்கியிருந்தது. நெருங்க நெருங்க அது அவள் இல்லையோ என்கிற சந்தேகமும் கூடியது. வாகனத்தின் கதவைத் திறந்து உள்ளே உட்காரும்போது அவள் வாயெல்லாம் பழுப்பேறியிருப்பதைக் கவனித்தேன். அவள் எந்த அதிர்ச்சியுமற்று என் மார்பைக் கவனித்தாள். அதனை மெல்லத் தொட முயன்ற அவளை நிறுத்தினேன். அழ வேண்டும் என்பதைப் போலத் தோன்றியதும் அப்படியே அவள் மடியில் சரிந்தேன்.

“சங்கரு… எனக்கு ரொம்ப பசியா இருக்குடா… தீரவே மாட்டுது. எவ்ள சாப்ட்டாலும்… பசி வெறியா இருக்கு… எல்லாத்தயும் சாப்டணும்போல இருக்கு… ரெண்டு நாளா… இங்க எதுமே சரி இல்லடா… என் ரூம்புல தங்கியிருந்த மலர்… பக்கத்து வீட்டுல இருந்தானே லோரேஸ்…” என்று நிறுத்திவிட்டுச் சட்டென்று அழத் தொடங்கினாள். கனமாக இருந்த என் மார்பைக் கையில் தாங்கியவாறே நிமிர்ந்து அவளைப் பார்த்தேன். சுஜித்தா அப்படி உடைந்து அழக்கூடியவள் அல்ல. நானே சோர்ந்திருக்கும் தருணங்களில் என்னைத் தாங்கியவள் அவள். அழுகையை நிறுத்தி உறுமினாள். கைகளில் பச்சை நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்தன.

“லோரேஸ் இருக்கான்லே… அப்போ எனக்குக் கொஞ்சம் மயக்கம். பயங்கர பசி. முடில… ஏதோ கத்தற சத்தம் கேட்டு மலர தேடனன்… அவ அங்க இல்ல. சத்தம் கேட்டப் பக்கத்து ரூம்புக்கு நான் போய்ருக்கக்கூடாதுடா…” அவள் கைகள் நடுங்கின. உதடுகள் அதிர்ந்தன. திக்கினாள். கண்கள் சிவந்தன. அவள் வாயிலிருந்து எச்சில் ஒழுக மீண்டும் என் மார்பைப் பார்த்தாள். அவளுக்கு அது விந்தையாகத் தெரியவில்லை; என்ன ஆயிற்று என்றும் கேட்க முனையவில்லை.

“சங்கரு… சதைய பாத்தா… எதைப் பாத்தாலும் பசி மண்டைக்கு ஏறுதுடா…” என்று மீண்டும் என் மார்பை நெருங்கி வந்தவளைத் தட்டிவிட்டு மகிழுந்திலிருந்து வெளியேறி நின்றேன். சிவந்த கண்களுடன் எச்சில் ஒழுக என்னைக் கவனித்தாள். மீண்டும் ஏதோ நினைத்தவளாய் அழத் துவங்கினாள்.

5

இருள் நீண்டபடியே இருந்தது. இங்கிருந்து தப்பிக்க வேண்டும். பித்துப்பிடித்த இந்நகரத்தின் கொடூர வாயிலிருந்து எச்சிலாக ஒழுகியோடிவிட வேண்டும். ஓர் ஆழ்ந்த பசி மீண்டும் உடலுக்குள் ஒரு மிருகத்தைப் போன்று எழுந்து வந்து கொண்டிருந்தது. அதற்குள் அல்பர்ட்டின் தற்கொலை எண்ணைத்தை இங்கேயே அழித்துவிட வேண்டும். மங்கலாகத் தெரிந்த அனைத்தையும் பார்க்க முயன்றேன். இமைகள் பாரமாகிக் கொண்டிருந்ததில் கண்களைத் திறக்கவே அசூசையாக இருந்தது. மீண்டும் கண்களை மூடியபோது அம்மாவின் நினைவுகள். அப்படியே என் அருகில் வந்து அமர்ந்து என்னைத் தூக்கி அவள் மடியில் கிடத்துகிறாள். என் கைகள் கால்கள் சிறுத்துச் சுருங்குகின்றன. வார்த்தைகள் மறக்கின்றன; மொழி பிரள்கின்றது. சிந்தனைகள் மங்குகின்றன. அவள் மார்பில் சுரக்கும் பாலைப் பெருந்தவிப்புடன் நான் அருந்த துவங்குகிறேன். இந்தப் பேரண்டமே என் சிறுத்த கால்களுக்கடியில் அடைக்கலமாகியது.

உடல் சுருண்டு அவ்விருளுக்குள் ஒன்றுமற்றவனாகிப் போகிறேன். பக்கத்தில் இருந்த அல்பர்ட் அவன் மார்பை அவனே பிய்த்தெடுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் சத்தத்தைக்கூட உணர முடியாதபடி, ஓர் சூன்யத்திற்குள் சுருங்கி எனக்கு யார் யாரோ கற்பித்து உணர வைத்த சுயத்தை இழந்து கொண்டிருந்தேன். மூளைக்குள் இருக்கும் ஆர்மோன் சுரப்பி ஸ்தம்பித்து நின்று சிதைந்தது. கடைசியாக நினைவில் இருந்த ஒரே ஒரு சொல்… அதையும் மறந்துகொண்டிருந்தேன்.

கே.பாலமுருகன்

மலேசியா, கடாரத்தில் வாழும் கே.பாலமுருகன் 2005ஆம் ஆண்டு முதல் தமிழில் சிறுகதை, நாவல், சிறுவர் நாவல், சினிமா விமர்சனம், பத்தி, கட்டுரைகள் எழுதி வருகிறார். இதுவரை கல்வி, இலக்கியம் என்று 25 நூல்கள் இயற்றியுள்ளார். தமிழ்மொழிச் சிறப்பாசிரியராகப் பணியாற்றி வரும் இவர் மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள், இடைநிலைப்பள்ளிகள், கல்லூரி, பல்கலைக்கழகஙகளில் மாணவர்களுக்குச் சிறுகதை பயிற்சிகளும் வழங்கி வருகிறார். இதுவரை அநங்கம், பறை, களம் போன்ற சிற்றிதழ்களை நடத்தியுள்ளார். 2009ஆம் ஆண்டு அமரர் சுஜாதா நினைவாக ஆழிப் பதிப்பகம் நடத்திய உலகலாவிய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் ஆசியா பசிபிக் பிரிவில் சிறப்புப் பரிசைப் பெற்றுள்ளார். மேலும், தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் கோ.சாரங்கபாணி ஆய்விருக்கையின் மூலம் 2010ஆம் ஆண்டு தன்னுடைய 'நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்' என்கிற நாவலுக்குக் 'கரிகாற் சோழன்' விருதைப் பெற்ற முதல் மலேசிய இளம் படைப்பாளி ஆவார். இதுவரை தமிழில் பத்துக்கும் மேற்பட்ட பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற இவருடைய சிறுவர் நாவல்/சிறுவர் இலக்கிய முயற்சிகளைப் பாராட்டி அன்னை வேளாங்கன்னி அறிவியல் கலைக்கல்லூரி 2018ஆம் ஆண்டு 'தமிழ் நாயகர் தனி நாயகர்' விருதை அளித்துக் கௌரவித்தது. மேலும், நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை காலக்கட்டத்தில் மாணவர்களுக்காக அவர் வழங்கிய இலவச கல்விச் சேவையைப் பாராட்டி 2020ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருதும் அளிக்கப்பட்டுள்ளது. தன் balamurugan.org என்கிற அகப்பக்கத்தில் தற்போது எழுதியும் வருகிறார். இவருடைய மூக்குத் துறவு என்கிற அறிவியல் சிறுகதை கடந்தாண்டு அரூ அறிவியல் சிறுகதை போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வான பத்து கதைகளில் ஒன்றாகும். இதுவரை எழுதிய நூல்களின் எண்ணிக்கை கல்வி, இலக்கியம் சார்ந்து 38 நூல்கள் ஆகும். சமீபத்தில் இவரது குறும்படத்திற்காக மலேசிய அளவிலான சிறந்த குறும்படம் பிரிவில் சோழன் விருது கிடைத்தது.

View Comments

Share
Published by
கே.பாலமுருகன்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago