நேர்காணல்

சமகாலக் கவிதைகள்: கவிஞர் வெய்யிலுடன் ஓர் உரையாடல்

15 நிமிட வாசிப்பு

சில மாதங்களுக்கு முன், பேஸ்புக்கில் சமகாலக் கவிதைகள் குறித்த ஓர் உரையாடலைத் துவங்கினார் கவிஞர் வெய்யில். விவாதத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் கவிதை குறித்த ஒரு புத்தகத்தை வாசித்த அனுபவத்தைத் தந்ததோடு, பல கேள்விகளையும் எழுப்பும்படி அமைந்தது. விவாதம் பல்வேறு திசைகளில் கிளை பரப்பியபோதும் சில காரணங்களால் அது தொடரவியலாமல் நிறுத்தப்பட்டது என்பதைப் பலரும் அறிந்திருக்கலாம். அரூ இதழ் அதற்கான களமாகி மீண்டும் அவ்வுரையாடலைத் தொடங்கி வைக்கும் எண்ணத்துடன் அணுகியபோது அதற்கு ஒப்புக்கொண்டார் கவிஞர் வெய்யில். அறிவியல் கவிதைகள், கவிதையில் அரசியல்/சுயசாதி விமர்சனம், கவிதையைக் கற்றுக்கொள்ளுதல், கவிஞர்களின் மொழிசார்ந்த அறிவு, கவிதையின் புதிய வடிவ சாத்தியங்கள் போன்றவை தொடர்பாகவும், சமகாலக் கவிதைப் போக்கு குறித்த மேலதிக விவாதத்தைத் தொடங்கும் விதமாகவும் இவ்வுரையாடல் அமையும். அதன் தொடக்கமாக இதோ சில கேள்விகளும் பதில்களும்!

ம.நவீன்: சமகாலத்துக் கவிதைகளில் அரசியல் நீக்கம் பெற்ற கவிதைகளே அதிகம் இடம்பெறுகின்றன. அரசியல் உள்ளடங்கிய குரலில் கவித்துவம் இருப்பதில்லை எனப் பொதுவாக நம்பிக்கை ஏதேனும் உள்ளதா?

வெய்யில்: உங்கள் கேள்வியில் இடம்பெற்றுள்ள முதல் ஸ்டேட்மெண்ட்டில் எனக்கு ஏற்பு இல்லை. சமகாலத்தில் எழுதப்படும் கவிதைகளில் பெரும்பான்மையானவை அரசியல் நிறைந்தவை என்றே நான் கருதுகிறேன். அரசியல் தொனிக்கின்ற கவிதைகள் கவித்துவம் குறைந்தவை என்ற நம்பிக்கையே மிக நுட்பமான அரசியல்தான்.

தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகிய அனைத்துத் தளங்களும் மிக வலுவாகப் பொருள்முதல்வாத மெய்யியலின்மீது எழுப்பப்பட்டவை என்று நம்புகிறவர்களில் நானும் ஒருவன். சமஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளின் நுழைவு, அவற்றின் அதிகாரத்தால் பரவலாக்கப்பட்ட மதம் மற்றும் கலை இலக்கியங்களின் பிரசார விளைவுகள், தமிழில் பெருமளவு அதன் தனித்துவத்தை நீர்த்துப்போகச்செய்தன.

ஏன், இந்தக் கேள்விக்கான பதிலை இங்கிருந்து தொடங்குகிறேன் என்றால் மொழி, கலை, இலக்கியம் ஆகியவை சமூகத்திலிருந்து தனித்து அதிகாரத்தோடு இயங்கும், வளரும் துறைகளல்ல. சமூக அசைவியக்கத்தின் விளைபொருள்கள் அவை. அவற்றின் பிறப்பும் வாழ்வும் நீட்சியும் சமூக அலகுகளால்; அதிகாரங்களால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த நிர்பந்தங்களிலிருந்தும் வரையறைகளிலிருந்தும் இவற்றை மீறலுக்குட்படுத்தத் துடிப்பவனாக இருக்கிறான் கலைஞன். ஆக, மொழியோ கலையோ இலக்கியமோ அரசியலின் பாதிப்பற்ற ஒன்றாக எப்படி இருக்க முடியும்?

இலக்கியங்கள், சமூகத்தின் பல்வேறுபட்ட தளங்களில் நிகழும் சிதைவுகளின் மாற்றங்களின் சுவடுகளைச் சுமப்பவை. எக்காலத்திலும் சமகால அரசியல் அதிகாரம் முன்வைக்கும் கருத்தியல்கள், நேரடியாக இலக்கியத்தைப் பாதிப்பவை. சங்க இலக்கியத்தில் புறநானூற்றை நாம் அரசியல் வாசிப்பு செய்ய வாய்ப்பில்லையா? கலிங்கத்துப்பரணியில்? சிலப்பதிகாரத்தில்? பக்தி இலக்கிய எழுச்சிக்குக் காரணம் ஆன்மிகம் மட்டும்தானா என்ன? எந்தவொரு இலக்கியப் பிரதியின் எழுத்து, வாசிப்பு, ஆய்வுப் பின்புலத்திலும் அரசியல் இருந்தே தீரும். எழுத்து – வானம்பாடி என்ற இரண்டு இலக்கியப் போக்குகளின் பிரதான விலகுப்புள்ளியே அரசியல் சித்தாந்த நம்பிக்கையும் வெளிப்பாட்டு ஒலி அளவும்தான்.

சரி, கவித்துவத்திற்கு வருவோம். எது கவித்துவம்? எல்லொருக்கும் பொதுவான கவித்துவம் என்ற ஒன்று இருக்கிறதா என்ன? செவ்வியல், நவீனம், பின்நவீனத்தும், எதிர்கவிதைப் போக்குகள் எனக் களம் மாற மாற கவித்துவத்திற்கான வியாக்கியானங்களும் வரையறைகளும் மாறும். 90களில் பெண்ணியக் கவிதைகளும் தலித்தியக் கவிதைகளும் முன்வைத்த அழகியல் மற்றும் கவித்துவம் குறித்த பார்வைகள் முற்றிலும் அதுவரையிலான பார்வைக்கு எதிரானவை இல்லையா? அப்படியானால் அவற்றில் கவித்துவம் இல்லையா?

அத்வைதக் கருத்துகளை, வெற்றுத் தத்துவங்களை ஆன்மிகம் கமழ எழுதி உயர்கவிதை என்று சொல்ல ஒரு கூட்டமிருக்கிறது என்றால், வாழ்வின் ரத்தமும் சதையுமான நாற்றமும் குமட்டலுமான அனுபவத்தைக் கொஞ்சம் சத்தமாக… கொஞ்சம் கோபமாக எழுதி கவிதை என்று சொல்லும் ஒரு கூட்டமும் இருக்கத்தான் செய்யும்.

கவித்துவம், கலாரசனை, கலாபூர்வம் போன்ற வார்த்தைகளை மீண்டும் நாம் உலைக்களத்தில் இட்டுப் பரிசீலிக்க வேண்டும். மேலும், எல்லா கவிதைகளும் எல்லாருக்குமானவையாக இருப்பதில்லை.

பெரு.விஷ்ணுகுமார்: வர்க்கப் பார்வை என்றொரு கருத்தியலைக் குறித்த சிந்தனை புறம் என்றால் எவ்வாறு உணர்ச்சிகரமான அக ஏக்கங்கள்/பால்ய நினைவுகளின் பதிவுகளையும் கவிதையாக்குகிறீர்கள்? ஏதாவதொரு புள்ளியில் இரண்டும் முரண்பாடுகள் கொண்டதல்லவா?

வெய்யில்: அகம் முதலா? புறம் முதலா? என்பது ஆதிகாலம்தொட்டே தொடர்ந்துவரும் தத்துவார்த்தப் பிரச்சனை. வரலாற்றில் புறமே அகத்தை வடிவமைத்தது. பின், அகம் சுரந்து விரிந்து புறத்தைப் பாதித்தது. இன்று அகம் – புறம் என்பதைத் தொடர்பற்ற, முரணான இரண்டு வெளியாக நாம் கருத வாய்ப்பே இல்லை. கவிதைகளை ஒரு நூலாகத் தொகுக்கும் பொருட்டு அல்லது நூலகத்தில் புத்தகங்களைப் பகுக்கும் பொருட்டு, பயன்பாட்டு வகைமைக்காக வேண்டுமானால் மிகும்தன்மை சார்ந்து கவிதைகளை அகம் – புறம் எனப் பிரிக்கலாம். ஆனால், எந்தக் கவிதைக்குள்ளும் அகமும் புறமும் சமவிகிதம் கலந்திருப்பதை நாம் வாசிக்க முடியும். அதுவோர் அணுகுமுறை… (Perspective) அவ்வளவே. ‘புறநானூற்றில் அகம்’ என்றும் ‘அகநானூற்றில் புறம்’ என்றும் சங்கப் பிரதிகளை இன்று மீள்வாசிப்பு செய்யமுடியும்தானே!

எனது புற (நில) இழப்புதான், அகத்தில் கடந்தகால நினைவுகளைச் சூடேற்றுகிறது. ஆழகத்தில் தோன்றும் கனவுகளின் வழியேதான், எனது புறஉலக வாழ்வின் போராட்டத்திற்கான சத்தைப் பெறுகிறேன். இது இடையறாத தவிர்க்கவியலாத உயிரியல் கூத்து. பால்ய நினைவுகளை நோக்கி நான் அகத்துக்குள் போகிறேன் என்றால், புறத்தின் யதார்த்தத்திலிருந்து நான் விலகியிருக்க விரும்புகிறேன் என்று பொருள். நினைவுகளிலிருந்து தப்புவதற்காக, புறத்தொழிலில் தீவிரமாக இயங்குவது மனித வாடிக்கைதானே! இந்தத் தவிப்புதான் கவிதையின் கச்சாப்பொருள். மேலும் விஷ்ணு, வர்க்கப் பார்வை கொள்வது ஏதோ பாவம் என்பதாகத் தமிழ்ச்சூழலில் பார்க்கப்படுகிறது. வர்க்கப் பார்வை, ஒரு கவிஞனின் அழகியல் பார்வையை, உணர்வைக் கூர்மையாக்குமே அன்றி குன்றச் செய்யாது.

அகம் – புறம் என்ற இரண்டு சொற்களுக்கும் தமிழில் நிறைய பொருளுண்டு. அது, இக்கேள்வி பதிலுக்கு அப்பால் மற்றொரு சுவாரஸ்யமான பகுதி!

வே.நி.சூர்யா: நுகர்வு மனோபாவம் தன் உச்சபட்சக் கொதிநிலையை அடைந்து இருக்கிறது, அறம் நகல் செய்யப்பட்டு நகல் செய்யப்பட்டு இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. சாகசங்கள் ஏதுமற்று காலம் தன் ஆன்மீகத்தை இழந்து மதிப்பீடுகள் சூன்யமாக்கப்பட்டு யாவும் கேலிச்சித்திரமாகிச் சாரமற்றுப் போயிருக்கிறது. இக்காலகட்டத்தில்கூடக் கவிதையின் நடனம் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றது, அதை அனுமதிப்பது எது என்று நினைக்கிறீர்கள்? இன்னும் கூர்மையாகக் கேட்கப்போனால், இன்றைக்குக் கவிதையின், கவிஞனின் வேலைதான் என்ன?

வெய்யில்: உண்மைதான்! நுகர்வுவெறியில் அறமதிப்பீடுகள் வீழ, மூன்றாம் உலகப்போருக்கான ஒத்திகையிலிருக்கும் உலகின் கேலிச்சித்திரத் தோற்றம் அப்படியே கண்களில் விரிகிறது. ஆனால், வாழ்க்கை இன்னும் சாகசமாகத்தான் இருக்கிறது. அதன் மீதான வேட்கை இன்னும் குன்றவில்லை. காலம் தன் ஆன்மீகத்தை இழத்தல் என்ற வார்த்தையை – காலம் தன் சாரத்தை இழப்பது அல்லது உயிர்மையை இழப்பது என்பதாகப் பொருள்கொள்கிறேன். உங்கள் கவலை நியாயமானது. ஆனால், தவிர்க்க இயலாதது. இந்தச் சூழலுக்குள் நாம் நம்மைத் தகவமைத்துக்கொண்டே இதற்கு எதிராகப் போராடியாக வேண்டும். ஓடிக்கொண்டிருக்கிற வண்டியைப் பழுதுநீக்குவதுபோல.

இந்தச் சூழலுக்கு எதிராக என்ன செய்வது என்று பொதுவாகக் கேட்டால் நிறைய பதில் இருக்கிறது. கவிதைக்குள் என்று கேட்டால், இன்ஸெப்ஷன் படம் பார்த்திருக்கிறீர்களா சூர்யா? அதில் கதாநாயகன், சிலரின் கனவுக்குள் சென்று அவர்களின் மனதில் சில எண்ணங்களை விதைப்பார் அல்லவா? கவிஞர்கள் செய்யவேண்டியதும் அதுதான்!

கவிதை, ஆதியில் மந்திரமாக இருந்தது (நடனம், ஓவியம் உட்பட பல கலைகள் மந்திரச் சடங்கின் ஒரு பகுதியாக இருந்தன). இயற்கையின் மீதான விருப்பங்களை மந்திரத்தின் வாயிலாகக் கட்டுப்படுத்த, நிகழ்த்த முயன்றான் மனிதன். சொற்களின் வழியே சக்தியை உருவாக்க முயற்சி செய்தான் என்றுகூடச் சொல்லலாம். அதில், குறிப்பிடத்தகுந்த வெற்றியும் அடைந்தான். அவ்வகையில் கவிதை என்பது, நனவு வாழ்வைக் கடுமையாகப் பாதிக்கும் தவிர்க்க முடியாத புனைவுச் செயல்பாடாக இருந்து வந்திருக்கிறது. கவிதையின் பிரதான அம்சம் கனவுநிலை… இசை உண்டாக்குகிற மனவிசைக்கும் மது உந்தும் பிறழ்வுக்கும் நெருக்கமான மொழித்தீவிரம் கொண்டது கவிதை. மனிதன் தனது நினைவின் பெரும்பகுதியை, உளப்புதிர்களை, எதிர்கால இச்சைகளை மற்ற கலை வடிவங்களைக் காட்டிலும் கவிதையில்தான் அதிகம் பதுக்கி வைத்திருக்கிறான். கவிதையைக் கைவிடுவது என்பது, மனித வாழ்வின் ரத்தச்செழிப்புள்ள ஓர் உறுப்பை வெட்டி எறிவது போன்றது. மனிதன் அதை ஒருபோதும் செய்யமாட்டான். மொத்த பூமியையும் அழிப்பதற்கான அணுகுண்டுகளைச் செய்து, அதற்கு அழகான பெயர்களைச் சூட்டுகிற விசித்திர விலங்கு மனிதன். கையில் வெடிகுண்டை வைத்திருக்கும் ஒரு மனநோயாளியை எவ்வளவு சாதுர்யமாக ஒரு மருத்துவர் மீட்பாரோ அப்படி இந்த உலகை மீட்பது உங்கள் கையில் தரப்பட்டிருக்கும் பணி என்று எண்ணிக்கொள்ளுங்கள். “என்ன இது லட்சியவாதமாக இருக்கிறதே!” என்று மிரட்சியடைய வேண்டாம். சும்மா ஜாலியாகச் செய்துபாருங்கள்!

விளம்பர நிறுவனங்கள் எவ்வளவு அழகாகக் கவிதையைக் கையாள்கின்றன… கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்கும் சாப்ட்வேர்கள், வைரஸ்கள், ஆண்ட்டி வைரஸ்களுக்கு எவ்வளவு அழகான கவித்துவம் மிக்க பெயர்களைச் சூட்டுகின்றன… சமீபத்தில் ஐ.நாவில் நமது பாரதப் பிரதமர் மோடி, “யாதும் ஊரே யாவரும் கேளீர்!” என்று முழங்கினாரே கவனித்தீர்களா? கவிதைக்கு இன்னமும் மனிதர்கள் வசியப்படுகிறார்கள் சூர்யா.

மாற்றங்களும் புரட்சிகளும் நிகழும்போது நிகழட்டும். ஆனால், மனிதனுக்கு அவன் யார் என்பதையும் அவனது மகத்தான கனவுகளையும் நினைவூட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இப்போதைக்குக் கவிதைக்கு இந்த வேலையைத் தரலாம். ஏனெனில், மனிதனின் கனவுலகத்திற்குள் சென்று அவனின் ஆளுமையைப் பாதிக்கும் ஆற்றல் கவிதையைத் தவிர வேறு எதற்கும் இல்லை!

றாம் சந்தோஷ்: ’அறம்’ என்பது தமிழ்க் கவிதை மரபில் இருண்ட கால வெளிப்பாடாகக் கொள்ளப்படுகிறது. நீங்கள் குறள் என்னைத் தொந்தரவு செய்யும் என்கிறீர்கள். புதுக்கவிதையாளர்களிடமிருந்து இது வேறுபடுகிறதே?

வெய்யில்: கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு எழுந்த சமண, பௌத்த சமயங்கள் முன்வைத்ததே தமிழர்களின் ‘அறம்’ என்று கருதுகிறீர்களா? தமிழின் தொடக்கக் காலப் பிரதிகளிலேயே உலகம் மெச்சும் மனித மாண்புகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

‘இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்’ என்று மொழிவது தொல்காப்பியம்.

‘அறம்’ என்பது தமிழர் பண்பாட்டில், மொழியில், இலக்கியத்தில் பின்னால் (இருண்ட காலத்தில்) உருவான பண்போ கருத்தோ அல்ல. அது தமிழோடு தோன்றி வளர்ந்தது. ‘இருண்ட காலம்’ என்று நீங்கள் குறிப்பிடுவது ‘களப்பிரர் காலம்’ என்றால், அக்காலகட்டத்தை அப்படிக் குறிப்பிடுவது தவறான நம்பிக்கை மற்றும் வரலாற்றுப்பார்வை என்று பல ஆய்வுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. எதனால், அது இருண்ட காலம் என்று வரையரை செய்யப்படுகிறது? அதில் உங்களுக்கு ஏற்புதானா றாம்? ஒரு தமிழ் மாணவரான உங்களின் இந்தக் கேள்வி என்னை ஆச்சர்யப்படுத்துகிறது…

அறம் (நீதி இலக்கியம்) ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சிறப்புப் பாடுபொருளாக இருந்தது என்றால், அது திருக்குறள், சிலப்பதிகாரம், உள்ளிட்ட இலக்கியங்கள் உருவான காலகட்டம்தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், அங்கிருந்துதான் தமிழரின் அறம் பற்றிய உரையாடல் தொடங்குகிறது என்பதை ஏற்பதற்கில்லை. மேலும், ‘திருக்குறள்’ தமிழனான ஒருவனை மட்டுமல்ல எந்த மொழி பேசுபவனையும் தொந்தரவு செய்யும்தானே! எல்லீஸ், வீரமாமுனிவர் உள்ளிட்ட அயலவரை ஏன் அவ்விலக்கியம் பாதித்தது? ஏன் அது என்னைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று கருதுகிறீர்கள்? புதுக்கவிதைக்காரர்கள் எப்போது அறத்துக்கு எதிராகப் பேசினார்கள்? அப்படி நீங்கள் வரையறுப்பது யாரை? பாரதி, பாரதிதாசன், ந.பிச்சமூர்த்தி, சி.மணி, பிரமிள், ஆத்மாநாம், நா.காமரசன், அப்துல் ரகுமான், என நீளும் பட்டியலில் யார் புதுக்கவிதையாளர்? வைரமுத்து முதல் பா.விஜய் வரை புதுக்கவிதையாளர் என்றே வரையறுக்கப்படுகிறார்கள். இன்னும் நீளும் இந்தப் பட்டியலில் யார் ‘அறம்’ என்ற கருத்தியலை, ‘திருக்குறளை’ ஒதுக்கியது?

அறம் என்ற சொல் எல்லோருக்கும் பொதுவானதா? நடைமுறை உண்மையா? எல்லோருக்கும் பொதுவான அறம் என்ற ஒன்று பயிலப்படுகிறதா? என்று கேட்டால், அது தனிக்கேள்வி; தனி பதில். வர்க்கம் சார்ந்து, சாதி சார்ந்து, மதம் சார்ந்து, பால் சார்ந்து அற நிலைப்பாடுகள் வேறுபடுகின்றன. ஆனால் ஒரு கவிஞனாக, மனித சமூகத்துக்கான குறைந்தபட்ச பொது அறங்களை (ஏற்கெனவே இருப்பவற்றை) நினைவூட்டுவது; காலம் சார்ந்து புதிதாக உருவாக்குவது; அதைப் பிரச்சாரம் செய்வது என் கடமை என்று கருதுகிறேன்.

நீங்களும் நானும் புதுக்கவிதையாளர் என்றே வைத்துக்கொண்டாலும், தமிழர் முன்வைத்த அறம் எது? ஏன் அது பயிலப்படவில்லை? என்ன செய்யலாம்? என்று உரையாடலைத் தொடங்க வேண்டுமே அன்றி அதில் முரண்பட என்ன இருக்கிறது? சரி, இலக்கியம் அறத்தை விலக்கிவிட்டு இந்த உலகிற்கு அது வழங்கப்போவது எதை?

ஜெயமோகனின் ‘அறம்’ சிறுகதை தமிழில் பிரபலமானது. ஃபெர்னாண்டோ ஸோரண்டினோவின் (Fernando Sorrentino) சிறுகதை ஒன்று ‘ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை’, எம்.எஸ் மொழிபெயர்த்து காலச்சுவடில் வெளியானது. இரண்டு கதைகளுக்கும் தொடர்பு உண்டு. ஒரே பிரச்சனை… அதற்கான இரண்டுவிதத் தீர்வுகள்! முதலாமதில் வெளிப்படுவது ஆசிய மனதின் அறம், இரண்டாவது தென் அமெரிக்க மனதின் அறம்.

ஏமாற்றிய ஒருவன் மீது சொற்களை ஏவி காலத்திடம் கையளித்தல், அவன் மீது கத்தியோடு பாய்தல், இரண்டுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், இரண்டுமே கலைஞர்கள் முன்வைக்கும் அறங்கள்…

இது குறித்து நிறைய பேச வேண்டும் றாம். பேசுவோம்!

பெரு.விஷ்ணுகுமார்: Poetic sense ஒவ்வொரு நபருக்கும் மாறுவதே. ஆனாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கவித்துவம் என்ற அளவுகோளிலிருந்து நோக்கினால், அரசியல் ரீதியிலாக முன்வைக்கப்படும் கவிதைகள் ஏனோ கவிதைக்கென்றே செயல்படும் மொழியிலிருந்து எளிதில் விலகிச்சென்றுவிடுவதை எவ்வாறு புரிந்துகொள்வது?

வெய்யில்: ‘எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கவித்துவம்’ இந்த வாக்கியத்தை ஆட்சேபிக்கிறேன். என்னைப் பொறுத்தவரை அப்படி ஒன்று இல்லை. நவீனின் கேள்விக்குச் சொல்லியிருக்கும் பதில் உங்களுக்குமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டுமெனில், மொழியின் மெய்ப்பாடு என்று கொள்ள வேண்டியதுதான். கவிதை வெளிப்படுத்த விரும்பும் மெய்ப்பாட்டிற்கான அடவை மொழியுடல் தரிக்கிறது. கவிதை எதைப் பேச வருகிறது, யாரோடு பேச வருகிறது, அதன் மனநிலை என்ன, அதன் கூடுமான அதிகாரம் என்ன என்பதைப் பொறுத்து அதன் குரல் மாறத்தானே செய்யும். பயன்பாடுதான் மொழியைத் தீர்மானிக்கிறது. கவிதைக்கென்றேயான பிரத்யேக மொழி என்ற மயக்கமெல்லாம் எப்போதோ உடைக்கப்பட்டுவிட்டது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் வெளியில் பொருத்திவைத்துதான், அதற்கான கவித்துவப் பொதுமை அம்சங்கள் குறித்து உரையாட முடியும். பொத்தாம் பொதுவான; எக்காலத்துக்குமான கவித்துவம் என்று எப்போதும் இருந்ததில்லை.

மேலும், அம்மொழி அப்படி விலகிச் செல்வதில் என்ன பிரச்னை? கவிதையின் புனிதம் கெட்டுப்போய்விடுகிறதா? கவிதைக்குத் தன்னைப் பற்றியே சதா சிந்தித்துக்கொண்டிருப்பது மட்டுமே வேலை அல்ல. அதற்கு மேலும் பல வேலைகள் இருக்கின்றன. திராவிட இயக்கங்களின் பின்னாள் மேடை முழக்கங்களில் சலிப்பும் வெறுப்பும் கொண்டவர்கள், உளவியல் ரீதியாக (கவிதை உட்பட) எதுவும் சத்தம்போடக்கூடாது என்ற தீர்மான முடிவுக்கு வந்துவிட்டார்கள். (மொழி விலகல் என்று நீங்கள் குறிப்பிடுவதில் இது முக்கிய அம்சம் என்று நினைக்கிறேன். சரிதானே?)

நீங்கள் குறிப்பிடும்படியான ‘மொழி விலகல்’ சங்க இலக்கியத்திலேயே உண்டு. பாரதியிடம் தொடங்கி இன்றைய கவிதைகள் வரைக்குமேகூட இந்த அம்சத்தைப் பார்க்க முடியும்.

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

என்றெழுதிய பாரதிதான்

குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு;
நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது;
சாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது;

என்றும் எழுதினான். ஒரு கூத்தனைப் போலத்தான் கவிதையும் எல்லாப் பாத்திரங்களிலும் ஆட வேண்டும். இல்லையென்றால் என்ன சவால் இருக்கிறது கவிதையில்? இவ்விடத்தில் சொல்ல மற்றொரு விஷயமும் உண்டு. தமிழில் நாட்டாரியல் என்ற ஒரு துறை உருவாகி வளர்ந்ததின் பின்னான தமிழ் இலக்கியத்தின் மொழியைக் குறித்து தனித்து ஆய்வுசெய்யலாம். அது உங்கள் கேள்விக்கான அரசியல் மற்றும் பண்பாட்டு ரீதியான நல்ல பதிலை வழங்கக் கூடும்.

‘வானம்பாடி’கள் அரசியல் அரசியல்… என்று கத்திக் கதறினார்கள் என்று விமர்சிப்பவர்கள் உண்டு. அப்படியானால், ‘எழுத்து’ மரபினர் கூடத்தான் ‘ஆன்மிகம், இருத்தலியம்’ என மௌனத்தால் முக்கி முனகினர் என்று விமர்சிப்பவர்களும் உண்டு. ஆனால், நான் இந்த இரண்டு போக்குகளுமே அவசியமானவை என்பேன். 2000க்குப் பிறகான கவிதையின் மொழி என்பது, இந்த இரண்டு போக்குகளுக்கும் பிறந்த குழந்தைதானே!? நீங்கள் குறிப்பிடும் ‘கவித்துவ’ மொழியிடமிருந்து விலகிச் செல்லும் கவிதைகளிடம் நிறைய வலிமிக்க கதைகளுண்டு விஷ்ணு.

ம.நவீன்: பத்து ஆண்டுகளுக்கு முன் பெண் படைப்பாளிகளிடம் உடலைக் கொண்டாடும் கவிதைகள் எழுந்துவந்தபோது அதைக் கவிதைச் சூழலில் புதிய அத்தியாயமாகக் கண்டனர். உரையாடினர். பத்து ஆண்டுகளுக்குப் பின் அக்கவிதைகள் மொத்தக் கவிதைச் சூழலில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன?

வெய்யில்: பெண்ணிய உரையாடல்கள் தொடங்கி, கால் நூற்றாண்டை நிறைவுசெய்துவிட்டோம் என்று நினைக்கிறேன். நிச்சயமாக தமிழ்க் கவிதையில் முக்கியமான காலகட்டம் அது. மதம், சாதியம், குடும்ப அமைப்பு ஆகியவை பெண்ணுடலில் செய்த சுரண்டல், தணிக்கை, தீண்டாமை, வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான தர்க்கபூர்வமான வரலாற்றுச் சிறப்புமிக்க எதிர்க்குரலாக அக்காலகட்ட கவிதைகள் எழுந்தன. அப்போது உருவான ஆற்றல்மிக்க அலை, முறையாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும் அதே அளவு உண்மை. உடலரசியல் என்பது பாலியலோடு மட்டுமே தொடர்புகொண்டதாக, ஆண்களுக்கு எதிரான அதிர்ச்சி மதிப்பீட்டுக் குரல் என்பதாக மெல்ல மெல்ல வலுவிழந்தது. சிற்றிதழ்கள், பதிப்பகங்கள், மாற்று சினிமா முயற்சி, போராட்டக்குழு எனப் பல தளங்களில் அவர்கள் ஒன்றிணைய முயன்றும், இயக்கமாகத் தொடர்ந்து திரண்டு இயங்க முடியாத சூழலில் அந்த அலை ஓய்ந்தது.

உலகமயமாக்கலின் தீவிரம், பல புதிய குழப்பங்களையும் தொய்வையும் இலக்கியச் சூழலில் உருவாக்கியதும் உண்மை. இன்று, காட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாகத் துல்லியமாவதுபோல ஒரு சித்திரம் கிடைக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும், ஊடகப்பெருக்கமும், வேலைவாய்ப்பும், அறிவுப் பரவலாக்கமும் மூன்றாம் உலக நாடுகளின் பெண்களிடையே புதிய எழுச்சியை உருவாக்கியிருக்கிறது. தமிழகத்திலும் அந்தத் தாக்கத்தை உணர முடிகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்திய மதவாதச் சூழல், மொழி மற்றும் பண்பாட்டுத் திணிப்பிற்கான முயற்சி, சர்வாதிகாரத்திற்கான ஒத்திகை போன்றவை ஒரு புதிய அரசியல் மற்றும் வாழ்வுச் சூழலை உருவாக்கியிருக்கிறது. இங்கிருந்து, மார்க்ஸ்-அம்பேத்கர்-பெரியார் என்ற புதிய அடையாளத்தோடு வலுவான அரசியல் புரிதலோடு பல பெண்கள் எழுத வந்திருக்கிறார்கள். தொந்நூறுகளில் எழுத வந்தவர்களுக்கு, ‘முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’ என்று திமிறிய அவ்வையும், வெள்ளிவீதியும், ஆண்டாளும், காரைக்காலம்மையும் எப்படி முன்னுதாரணமாகத் தேவைப்பட்டார்களோ, அப்படி இன்றைய புதியவர்களுக்கு 90களில் எழுதியவர்கள் தேவைப்படுகிறார்கள். 90-களின் பெண்ணியக் கவிதைகள் இன்று பரவலாக மீள்வாசிப்பு செய்யப்படுகின்றன/கொண்டாடப்படுகின்றன. ‘விளைவு’ என்று கேட்டால், அக்கவிதைகளின் அதிர்வு இன்னும் நினைவில் நீள்கிறது என்பதைத்தான் சொல்ல வேண்டும். மேலும் ‘அவன்’, ‘மனிதன்’, ‘மானுடன்’ என வரலாறு முழுக்க நிறைந்திருந்த ஆண்மையப்பட்ட எழுதுமுறைக்கும் சொற்களுக்கும் எதிராக, பெண்ணியச் சொற்களும் சிந்தனை மற்றும் விமர்சன நோக்குகளும் தமிழ் மொழிப்போக்கில் சேகரமாகியிருக்கின்றன.

யோனி, முலை என உடலுறுப்புகளின் பெயர்களைக் கவிதைகளில் கையாள நாட்டமற்ற புதிய பெண் கவிஞர்களின் உளவியலில், 90-களின் கவிதைகள் தாக்கம் செலுத்தியுள்ளன என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஓர் அம்சம்தான்.

ச.துரை: சில பதட்டமான பதில்களை வைத்துக்கொண்டேதான் கேட்கிறேன், அம்மாவாசையன்று அக்காளுக்கு என்ன நடந்தது?

வெய்யில்: தெளிவற்ற சிற்சில ஒலிக்குறிப்புகளையும் மங்கலான சில காட்சிகளையும் மட்டுமே நான் பார்த்தேன். ஓரளவுக்கு யூகித்துவிடக்கூடிய அவ்வுண்மையைச் சொன்னால், உங்களுக்கு மனப்பிறழ்வு ஏற்படக்கூடும். அப்பா அதை அறிந்ததால்தான் நிரந்தரப் பச்சையுடைக்கு மாறினார்.

பெரு.விஷ்ணுகுமார்: நாட்டார்கலைசார், வாழ்வியல் முறைசார் போன்றவற்றின் பதிவாக உங்கள் கவிதைகளைப் புரிந்துகொண்டால், அதுவொரு வகையில் வரலாற்றுவகை எழுத்தின் உயர்தர வடிவம் எனலாமா?

வெய்யில்: தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தின், வாழ்வின், மொழியின் மீதான கட்டுக்கடங்காத பெருமித உணர்வுகொண்டவன் நான். அதேசமயம் பரிணாமக்கொள்கை, நவீன அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சி, இடது தத்துவ ஈர்ப்பு, ஜனநாயக அரசியல், பின் நவீனத்துவம் உள்ளிட்ட பல்வேறு போக்குகளின் பிரக்ஞை, நுகர்வுப் பெருங்காலாச்சாரத்தின் புதிய உளவியல் அணுகுமுறை என மொத்தமாகவே வேறு ஒரு பிளவின் குரலாக நான் வெளிப்படுவதும் உண்டு. பிரபஞ்சம் சார்ந்த மனித மனத்தைப் புடம்போடுவதற்கான ஆன்மீகம் சார்ந்த மெய்யியல் சார்ந்த தேடலுள்ள ஒரு பிளவும் எனக்குள் உண்டு. என் எழுத்துகள், நாட்டார் வாழ்வியலின் மீதான விருப்பத்தைப் பாடும் அதேநேரத்தில் அதில் சாதியின் இருப்பு குறித்த அச்சத்தையும் உள்ளூரக் கொண்டேயிருக்கிறது.

சாவு ஊர்வலத்தில் ஆடுபவனாக, வேலன் வெறியாட்டின் புலையனாக, பப்-களில் லேசர் ஒள்ளிக்கீற்றுகளுக்கு நடுவே துள்ளுபவனாக, பிரபஞ்சப் பேரியற்கையின் நடனப் பங்கேற்பாளனாக இன்னும் இன்னுமாக நான் பிளவுண்டிருக்கிறேன்.

நான் குறிப்பிட விரும்புவது இதைத்தான், நான் நாட்டார் வாழ்விற்கு மட்டுமேயான கவிதையுலகப் பிரதிநிதி அல்ல. மேலும், நான் வரலாற்றை எழுத முனையவில்லை. அதைக் கலையாக்கவே முயல்கிறேன். மனித மூளை மட்டுமல்ல, மனமும் என் எழுத்தின் இலக்காக இருக்கிறது. (ஒரு புரிதலுக்காகவே இவ்வுதாரணம். மனம்–மூளை குறித்துப் பேசப் புகுவது தனிப்பெரும் உரையாடல் என்பதால் அதைத் தவிர்க்கிறேன்.)

ஒருவேளை, எனது கவிதை முயற்சியை வரலாற்று வகை எழுத்தின் உயர்தர வடிவம் என நீங்கள் குறிப்பிட்டே ஆக வேண்டுமென விரும்பினால், உயர்தர வடிவம் என்பதற்கு மாற்றாக அழகியல்பூர்வமான வடிவம் என்று மாற்றிக்கொள்ளுங்கள்.

அரூ: அறிவியல் புனைவில் நாவல்கள், சிறுகதைகள் போல அறிவியல் கவிதைகள் சாத்தியமா?

வெய்யில்: கவிதைக்கு விலக்கானது என்று எதுவுமே கிடையாது. யாவும் கவிதைக்குள் இடம்பெறலாம். பல்வேறு துறைசார்ந்த கவிதைகள் உலகெங்கும் எழுதப்பட்டுதான் வருகின்றன. அதேசமயம், ஒரு துறை சார்ந்து, குறிப்பிட்ட கருத்தியல் சார்ந்து, அரசியல் மற்றும் இஸங்கள் சார்ந்து கவிதைகள் எழுதப்படுவதற்கு அந்நிலத்தின் சூழல் முக்கியமான காரணியாக அமைகிறது. தலித்தியக் கவிதைகள், பெண்ணியக் கவிதைகள், எழுவதற்குச் சூழலின் அழுத்தமும் திமிறலும் முக்கியக் காரணமல்லவா? அதுபோல வலுவான புறச்சூழல் அமைய வேண்டும். இனி சூழலியல் கவிதைகள் ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்படலாம். அதற்கான பெரும் அழுத்தம் அடுத்த 10 ஆண்டுகளில் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்கள்.

தொல்காப்பியம், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் ஆகியவற்றில் ஏராளமான வானியல், உயிரியல், உடலியல் செய்திகள் கிடைக்கின்றன. உலகம் ஐந்து இயற்கை நிலைகளால் ஆனது என்பதை ஆதியிலேயே தமிழறிவு கொண்டிருந்தது என்று இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு அறிஞர்கள் வலுவாக நிறுவுகிறார்கள். நிலம் மற்றும் பொழுதை (Time and Space) முதன்மைப்படுத்துவது, காலத்தை சிறுபொழுது பெரும்பொழுது என பகுப்பது, உயிர்களை அறிவுகொண்டு தொகுக்கும் முறை, எண்ணியல், நீர் மேலாண்மை தொழிற்நுட்பம், மழை உருவாகும் அறிவியல், பல விஷயங்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் கையாளப்பட்ட விஷயமாகத்தான் இருக்கிறது. குறிப்பாகப் பனையைப் புல்லினத்தில் அன்றைக்கே வகைப்படுத்திய தமிழனின் தாவர அறிவு மெச்சத்தக்கதுதான். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், உங்கள் கேள்வியில் தொனிப்பது, இன்றைய நவீன அறிவியலை மையமாகக்கொண்ட (Thematic) கவிதைகள். என் வாசிப்பு அனுமானத்தில் அப்படியானவை மிகக் குறைவுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாக எழுதப்பட்டிருக்கின்றன. நவீன அறிவியல் சாதனங்கள் வேண்டுமாயின் கவிதைக்குள் நிறைய வந்திருக்கின்றன. ஐரோப்பியச் சமூகத்தில் நிகழ்ந்ததுபோல இங்கு அறிவொளிக்காலம் என்ற ஒன்று நிகழவே இல்லையே. இந்திய, தமிழ்ச் சமூகத்தில் நவீன அறிவியல் போதியளவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மேலும் அறிவு, கவிதையில் செயல்படக் கூடாது என்று நம்பும் பெரும்பான்மையோரைக் கொண்டது தமிழகக் கவிதை உலகம். இங்கு எப்படி அறிவியல் கவிதை உருவாகும்?

இதுபற்றி யோசித்தால், சட்டென நினைவுக்கு வருவது பிரமிளின் E=mc2 வரிகள்.

இசைவெளியின் 
சிறகு மடித்து
கருவி ஜடமாகிறது

பியானோவின் 
ஸ்ருதிமண்டலம்
வெறிச்சோடிக் கிடக்கிறது

உலகின் முரட்டு இருளில்
எங்கோ 
ஒரு குழந்தை அழுகிறது
ஐன்ஸ்டீனின் கண்ணீர்த்துளியில்
தெறிக்கிறது பரிதி

ஒருகணப் பார்வை.

இக்கவிதையை பலமுறை வாசித்திருக்கிறேன் என்றாலும் ‘ஐன்ஸ்டீன், சார்பியல் கோட்பாட்டுக்கான நிரூபணத்தை எழுத முனைவதற்கு முன் ஒரு கப் காபியோடு அரைமணி நேரம் பியானோ வாசித்தார்’ என்ற செய்தியை அறிந்த பிறகு இக்கவிதையை அணுகுவது சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஆர்க்கமிடீசின் தொட்டியில் 
ஐன்ஸ்டின் அமிழ்கிறான்
வெளியேறிய நீரின் எடை
நாகசாகிக்கு சமமாக இல்லை

இருப்பினும்
ஒரு நீலநிற முண்டாசுக்காரன்
யுரேகா யுரேகா என்று கத்திக்கொண்டு
கூடங்குளம் தெருக்களில்
ஓடிக்கொண்டேயிருக்கிறான்.

நக்கீரனின் இந்தக் கவிதையும்கூட நினைவுக்கு வருகிறது. நேசமித்திரனின் கவிதைகளிலும் ஏராளமான அறிவியல் செய்திகள் இடம்பெறுகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் அரசியல் கவிதைகளாக வகைப்படுத்த முடியுமே தவிர அறிவியல் கவிதைகளாக அல்ல. அப்படியான ஒரு முயற்சியாக பாம்பாட்டிச் சித்தன் ‘இஸ்ரேலியம்’ என்றொரு தொகுப்பு கொண்டுவந்தார். அந்த முயற்சியை மதிப்பிடும் அளவு அதை நான் ஊன்றிப் படிக்கவில்லை. (இரவல் பெற்று கொஞ்சமே வாசித்தேன்.) கடந்த வருடம் பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் வெளியாகியிருக்கும் ‘மிரோஸ்லாவ் ஹோலுப்’பின் கவிதைகள் பாம்பாட்டிச் சித்தனைப் பாதித்திருக்கலாம் என இப்போது அனுமானிக்க முடிகிறது.

இப்போது புதிதாகக் கவிதைக்குள் வந்திருப்பவர்கள், ஆங்கிலப் புலமைகொண்டவர்களாகவும் தொழில்நுட்பம் அறிந்தவர்களாகவும் பல்துறை அறிவு நாட்டம் கொண்டவர்களாகவும் இருப்பதால், விரைவில் அப்படியான முயற்சிகள் நடக்கும் என்று நம்புகிறேன்.

அதீதன் சுரேன்: சமகாலத்தில் கவிஞர்களைப் பட்டியலிடும் சம்பிரதாயம் பெருகிவருவதாகப் படுகிறது. அந்தப் பட்டியல்கள் குறித்து உங்கள் கருத்து?

வெய்யில்: கவிஞர்களைப் பட்டியலிடும் சம்பிரதாயம் எப்போதும் நிகழ்ந்து வருவதுதான். புதிது என்றோ அது பெருகிவருகிறது என்றோ எனக்குப்படவில்லை. மீடியாக்கள் பெருகிவிட்டதால் அதில் எப்போதும் யாரேனும் ஒரு பட்டியலைத் தந்துகொண்டிருப்பதால் அப்படிப்படுகிறது. நீங்கள் குறிப்பிடுவதுபோல யாரேனும் புதுப் புதுப்பட்டியல்களைத் தருகிறார்களா என்ன? எல்லாம் அதே பழைய பஞ்சாங்கப் பட்டியல்தானே!? இந்தப் பட்டியல் விவகாரம் கிராமப் பஞ்சாயத்துபோல எப்போதும் இங்கு இருந்துவருவதுதான். ஒரு தனிப்பட்ட இலக்கியவாதி, சிற்றிதழ் அல்லது இலக்கிய இயக்கம் என யார் போடும் பட்டியல்களிலும் எப்போதும் சார்பு இருக்கவே செய்யும். பட்டியல்கள் மட்டுமல்லாது விருது போன்ற எல்லா விஷயங்களிலும் சாதி, மலினமாக இங்கு முன்னிலைப்படுத்தப்படுகிறது. இதுவும் தமிழ்ச்சூழலில் தொடர்ந்துவரும் விஷயம்தான். கோட்பாட்டு ரீதியான சார்புகள் புரிந்துகொள்ளத்தக்கவை; ஆனால் சாதி சார்ந்த சார்புகள் அருவருக்கத்தக்கவை. எந்தப் பட்டியலின் மீதும் எனக்கு எப்போதும் நம்பிக்கை இருந்ததில்லை. இதில், இன்னொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். வரலாற்றில் சிலருக்கு இப்போதுதான் பட்டியலிடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களிடும் புதுப்பட்டியல்கள் சூழலுக்கு அவசியமானவை; வரவேற்கத்தக்கவை. ஆயினும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல.

பெரு.விஷ்ணுகுமார்: உங்களின் கவிதைகளில் இயங்கும் மொழியை முன்வைத்துக் கேட்கிறேன். மரபை மறுத்து பின்நவீனக் கவிதைகள் இயங்க முயற்சிக்க, (அதாவது எதிர்த்தரப்பில் நின்றபடி) நீங்கள் மீண்டும் மரபை நோக்கிச் செல்கிறீர்களா? அவ்வாறெனில் உங்களை எந்தவகையில் நவீனத்துவ அல்லது பின்நவீனத்துவக் கவிஞராக முன்வைக்கின்றீர்?

வெய்யில்: மரபு என்பதில் மொழி, வடிவக்கட்டுமானம், பாடுபொருள், கருத்தியல்கள் எனப் பல உள்ளடுக்குகள் உண்டு. நவீனம், பின்நவீனம் என்பதிலும் அப்படியே. கலையில் வெளிப்படும் அரசியலை, கருத்தியலைத் தீர்மானிப்பவனாக நான், நவீனன்- பின்நவீனன்- பின் காலனியக் கவிஞன்.

அழகியல், மொழி, வடிவம், என எடுத்துக்கொண்டால் நான் எல்லா தளங்களிலும் வாழ்பவன்.

மரபு முற்றிலுமாக மறுக்கப்பட்டு நவீனம் உருவாகவில்லை. நவீனம் முற்றிலுமாக மறுக்கப்பட்டுப் பின்நவீனம் உருவாகவில்லை. இவை வளர்ச்சிப் படிநிலைகள், இதில் உள்வாங்கிக்கொள்ளப்படுவது கழிக்கப்படுவது என இரண்டுமே உண்டு. ஐரோப்பியச் சமூகத்தில் நிகழ்ந்ததைப்போல – இந்தியாவோ தமிழகமோ – அடிமைச் சமூகம், நிலவுடமைச் சமூகம், முதலாளித்துவச் சமூகம் என ஒவ்வொரு காலகட்டமாக முழுமையாகப் பரிணாமம் அடைந்ததல்ல. இன்றைக்கும்கூட நாம் ஒரே நேரத்தில் ஒரே நிலத்தில் மரபுவாதிகளாகவும் நவீனத்துவர்களாகவும் பின்நவீனத்துவர்களாகவும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் திடீரென இந்த மாற்றத்தை அடைந்தோம். பின்நவீனக் கவிஞர் என நம்பிக்கொண்டிருக்கும் ஒருவர், முறையாகக் கேள்விகளைத் தொகுத்துக்கொண்டு தன்னைப் பரீட்சித்துப் பார்த்தால், அவர் அதிர்ந்துபோவார்.

மரபை ஒருவர் முற்றிலுமாகக் (எல்லா உள்ளடுக்குகளையும்) கைவிடுவதும் சாத்தியமில்லை. 2600 ஆண்டுக்கால நினைவுச் சேகரத்தை இழப்பவன் முட்டாள் அல்லவா? “இனி நீ 16 இலக்க எண் மட்டுமே, வேறு அடையாளம் உனக்குக் கிடையாது,” என்று ஓர் அரசு சொல்ல முனையும்போது, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முதல் மொழியை எழுதிப் பார்த்த எலும்புகள் துஞ்சும் முதுமக்கள் தாழியை அகழ்ந்தெடுத்து வண்ணம்பூசி என் கலையின் வாசலில் வைக்கிறேன்.

‘குற்றத்தின் நறுமணம்’ தொகுப்பு குறித்து என்னால் இப்போது முழுமையாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், அதற்குப் பின்பான மூன்று தொகுதிகளிலும் என் சொற்களை அரசியல் விழிப்புணர்வோடு ஒருமுறை சரிபார்த்த பிறகே பிரசுரத்திற்குத் தந்திருக்கிறேன். எனது நூல் குறித்த ஒரு மதிப்புரையில், ‘தோழர் வெய்யில் எனும் தற்காலப் பாணன்’ என்று கவிஞர் சமயவேல் குறிப்பிட்டிருந்தார். என்னைப் பற்றிய அந்த வாக்கியம் எனக்குப் பிடித்திருந்தது. அதை உங்களுக்கு forward செய்கிறேன்.

இப்போது எனக்கு உங்களிடம் ஒரு கேள்வி: கண்ணகியின் முலை – மரபா? நவீனமா? பின்நவீனமா?

கணேஷ்பாபு: ஒரு கவிதை தன்னுள் புகுந்து பாதிப்பதை ஒவ்வொரு வாசகனும் உணர்ந்திருப்பான். ஒருவகையில் அக்கவிதை அவனை உள்ளூர மறுகட்டுமானம் செய்திருக்கும். உங்களுக்கு இத்தகைய அனுபவத்தை வழங்கிய கவிதைகள் குறித்து?

வெய்யில்: இதோ இந்த நொடியில் இங்கு வாழ்வதைப் போலவே 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்ககாலத் திணை நிலங்களிலும் நான் வாழ்கிறேன். பாலையின் வேட்டைச்சோறு, மருதத்தின் அறுவடைப்பாடல், நெய்தலின் விளரித் துயரிசை, முல்லையின் தேறலும் பறையாட்டமும், குறிஞ்சியின் பெருங்காம யாமப்பனி என வாய்க்கும் தருணங்களிலெல்லாம் அவ்விணையுலகில் வாழ்ந்து வருகிறேன். சங்கக் கவிதைகள் என்னை அப்படியாகப் பாதித்தவை. திருக்குறள் என் ஆளுமையை, அறச்சிந்தனைகளைச் சீர்படுத்திய பொன்வரிகள். திருவாசகப் பாடல்கள் என்னுள்ளிருந்த கொடும் வன்முறை எண்ணங்களின்மீது, பழிதீர்க்கும் வெறிமீது வண்ணம் பூசியவை.

நவீனப் படைப்புகளில் கவிதைகளைக் காட்டிலும் அ-புனைவு எழுத்துகளால்தான் நான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறேன். பிரமிளின் மொழி எப்போதும் எனக்குள் கொதிவெப்பமூட்டுபவை. சுயம்புலிங்கம், களிமண் உருண்டைகளைத் தின்று ஆற்றுத்தண்னீர் குடிக்கும் சுகம். ‘எழுத்து என்பது இறந்த மண்டையோட்டின் பல்வலி’ என்று யவனிகா ஸ்ரீராம் உருவாக்கும் வாதை விலகி ஓட முடியாதது. என்.டி.ராஜ்குமார் சமைக்கும் பன்றிக்கறியில் நான் கொழுப்புத்துண்டு. இன்னும் நக்சல் கவிதைகள், மராட்டியக் கவிதைகள், தெலுங்குக் கவிதைகள், கே.சச்சிதானந்தன், பவித்ரன் தீக்குன்னி, பாப்லோ நெருடா, ழாக் பிரெவர், என அலைக்கழிக்கும் அயல்காற்றின் பட்டியல் நீளம். (உள்ளூர்க் கவிஞர் பட்டியல் சட்டென உணர்வில் வெட்டியது மட்டுமே. அறிவும் திட்டமும் கொண்டு தொகுத்தால் இன்னும் நீளும்) 🙂

பாரதி எப்போதும் தீராத போதை. இமையத்துக் கஞ்சா இலைகளில் நான் வியந்த மாயமும் இசைமையும் விரவிய மொழிக்காந்தல். நானதில் காலமற்றுத் தீர்கிறேன்.


இவ்வுரையாடலில் நீங்களும் கலந்துகொள்ள விரும்பினால் உங்கள் கருத்துகளை/கேள்விகளை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் aroomagazine@gmail.comக்கு அனுப்பவும்.

அரூ குழுவினர்

View Comments

  • //மீடியாக்கள் பெருகிவிட்டதால் அதில் எப்போதும் யாரேனும் ஒரு பட்டியலைத் தந்துகொண்டிருப்பதால் அப்படிப்படுகிறது// ultimated truth.

    இந்தப் பட்டியல் கொடுப்பதில் சில எழுத்தாளர்கள் முன்னிலையில் உள்ளனர். பட்டியலெல்லாம் வாசிக்க உதவுமே தவிர அப்படி இலக்கியத்தைப் பட்டியலிட்டுவிட முடியாது.

Share
Published by
அரூ குழுவினர்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago