(முனைவர் க்வீ லீ சுவியுடன் அரூ குழு நடத்திய ஆங்கில உரையாடலின் தமிழாக்கம்)
தமிழாக்கம்: அதியன் மற்றும் அரூ குழு

சிங்கப்பூரில் வசிக்கும் முனைவர் க்வீ லீ சுவி (Gwee Li Sui) ஒரு காமிக் ஓவியர், கவிஞர், இலக்கிய விமர்சகர் மற்றும் முன்னாள் பேராசிரியர். 1993 இல் வெளியிடப்பட்ட இவரது ‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ (Myth of the Stone) சிங்கப்பூரின் முதல் முழுநீள ஆங்கில கிராஃபிக் நாவல் என்று கருதப்படுகிறது. சிங்கப்பூருக்கே உரித்தான ஆங்கிலப் பேச்சுமொழியாகிய சிங்கிலிஷை அறிமுகப்படுத்த ‘ஸ்பியாக்கிங் சிங்கிலிஷ்’ (Spiaking Singlish) என்கிற புத்தகம் எழுதியுள்ளார். குட்டி இளவரசன் நாவலை The Leeter Tunku என்கிற தலைப்பில் சிங்கிலிஷிற்கு மொழிபெயர்த்துள்ளார். ஆறு கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார், பல சிறுகதை-கவிதை தொகுப்புகளைத் தொகுத்துள்ளார். அரூவின் ஒவ்வொரு இதழிலும் ஒரு விசித்திரமான உயிரினத்தை நமக்கு அறிமுகப்படுத்துகின்ற அடாசு கவிதை காமிக் தொடரை உருவாக்கியவரும் இவரே.
இவரது ‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ லி-ஹ்சு என்கிற அறிவாவலுடைய ஒரு சிறுவனின் கதை. ஒரு கதவைத் திறந்து, நான்கு நெடும் தூண்கள் தாங்கி நிற்கும் ஓர் அற்புத உலகிற்குள் திடீரென்று தள்ளப்படுகிறான். அங்கு ஒரு பெரும் போர் தொடங்க, லி-ஹ்சு வீட்டிற்குத் திரும்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு பல விசித்திரமான உயிரினங்களுடன் தைரியமாக போராட வேண்டும். 1993இல் வெளியான இந்த கிராஃபிக் நாவலுக்கு எந்தவொரு விமர்சனமும் வரவேற்பும் அப்போது கிடைக்கவில்லை. இதற்குக் காரணம் கிராஃபிக் நாவல் என்கிற இதன் வடிவம் மக்களுக்குப் புலப்படாததே என்கிறார் க்வீ.

கிராஃபிக் நாவல் என்பது என்ன? எழுத்துக்கள் சொல்லும் நீண்ட கதையை நாவல் என்கிறோம். அது போல ஓவியங்களும் எழுத்தும் இணைவதிலிருந்து பிறக்கும் கதையே கிராஃபிக் நாவல். இவ்வித்தியாசத்தை மேலும் விளங்கிக்கொள்ள, கிராஃபிக் நாவல்கள், கற்பனை உலகங்களின் கட்டமைப்பு மற்றும் விசித்திரமான உயிரினங்கள் மீதான ஈர்ப்பு குறித்து க்வீயுடன் அரட்டை அடிக்க ஆரூ குழு முடிவு செய்தது. அவரது பேராசிரியப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, கல்விமுறை மற்றும் 18-ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியம் குறித்தும் கேள்விகள் கேட்டோம்.
‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ (Myth of the Stone) எனும் உங்கள் கிராஃபிக் நாவல் உருவான கதையைப் பகிருங்கள். இக்கதைக்கு கிராஃபிக் நாவலின் வடிவத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?
இதன் கதையே வடிவத்தைத் தேர்ந்தெடுத்தது. எனது பல்கலைக்கழக விடுமுறையின் போது ஒவ்வொரு நாளும் வரைந்து ஒரு நீண்ட கதை உருவாக்க திட்டமிட்டேன். அப்போது நான் பட்டபடிப்பின் முதல் ஆண்டை முடித்துவிட்டு இரண்டாம் ஆண்டுக்கு செல்லும் மாணவன். இரண்டு மாதங்கள் விடுமுறை இருந்தன. எனவே தினமும் நான் காலையில் ஸ்குவாஷ் விளையாடிவிட்டு பிற்பகல் விளையாட்டு அரங்க உணவகத்திலேயே அமர்ந்தப்படி ஒரு பக்கம் வரைவேன்.
இப்படியாக புத்தகத்தின் மூன்றில் இரண்டு பங்கை முடித்தேன். மீதி கதையை முடிக்க, எனது இரண்டாம் ஆண்டின் முதல் மாத வகுப்புகளில் கவனம் செலுத்தாமல் மும்முரமாக வரைந்துகொண்டிருந்தேன்.
இந்த கிராஃபிக் நாவல் முற்றிலும் ஸ்கேல் இல்லாமல் வரையப்பட்டது! இது எளிய நடைமுறை காரணத்திற்காகச் செய்யப்பட்டது: ஸ்கேல் வைத்து வரைந்தால் மை தெறித்து தாளில் சீரற்ற அழுத்தத்தை உருவாக்கும். வரைவதற்கு க்வீ பயன்படுத்திய கருவிகள் — ஒரு இயந்திர பென்சில் (mechanical pencil), அழிப்பான், வரை பேனாக்கள் மற்றும் திருத்தும் திரவம்.
‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ இல் நுணுக்கமான விவரங்களைக் கொண்ட ஒரு கற்பனை உலகக் கட்டமைப்பைக் காண முடிகிறது. இதை நிகழ்த்துவதற்கு உங்களைத் தூண்டிய படைப்போ அல்லது படைப்பாளரையோ பற்றிக் கூறுங்கள்.
எனது இளம் பருவத்தில் உலகிலுள்ள பல்வேறு புராணங்களையும் மதங்களையும் வெகுவாக நேசித்த சமயத்தில் ‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ கிராஃபிக் நாவலை உருவாக்கினேன். சி.எஸ்.லூயிஸின் தி க்ரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா (The Chronicles of Narnia) மற்றும் ஜே.ஆர்.ஆர்.டோக்கியனின் தி லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் (The Lord of the Rings) ஆகியவையும் என் மீது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. ஜான் டென்னியல் (John Tenniel) மற்றும் மேக்ஸ் எர்ன்ஸ்ட் (Max Ernst) முதல் ஹாவ் பார் வில்லா (Haw Par Villa) சிற்பங்கள் வரை எல்லா இடங்களிலிருந்தும் எனது ஓவிய பாணிக்கான உந்துதலைப் பெற்றுக்கொண்டேன்.
உங்கள் கிராஃபிக் நாவல் 1993 இல் வெளியானபோது, அதை எப்படி எதிர்கொள்வதென மக்களுக்குத் தெரியவில்லை என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளீர்கள். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஆர்வமின்மை அடுத்தடுத்து கிராஃபிக் நாவல்கள் உருவாக்க முயற்சிப்பதிலிருந்து உங்களைத் தடுத்ததா?
ஆம், நிச்சயமாக. ‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ அச்சில் வெளியான எனது முதல் புத்தகம். அதுவொரு முன்னோடிப் படைப்பாக இருந்தபோதிலும், பத்திரிகைகள் கிராஃபிக் நாவல் எனும் வகைமையைப் பொருட்படுத்தவேயில்லை. நான் அப்போது பிரபலமான எழுத்தாளரும் கிடையாது. எனவே அப்புத்தகம் எந்தவோர் ஊடகக் கவனத்தையும் பெறவில்லை. புத்தகக் கடைகளிலிருந்து அதிவிரைவில் மறைந்துபோனது. நான் சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் வரையத் தொடங்கிவிட்டேன். ஆனால், இதன் பிறகு, நான் வரைவதைக் குறைத்துக்கொண்டேன், என்னை வெளிப்படுத்திகொள்ளக் கவிதைகள் பக்கம் நகர்ந்துவிட்டேன்.
வெளியான பிறகு பல ஆண்டுகளாக இந்த கிராஃபிக் நாவல் ஒரேயொரு விமர்சனம் மட்டுமே பெற்றது… அதுவும் சிங்கப்பூரின் பிரபல செய்திதாளான தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸில் (The Straits Times) அல்ல. சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் மாணவர் இதழான தி ரிட்ஜில் (The Ridge), 1994 இல், அப்போதைய ஹானர்ஸ் மாணவரான க்வீ இந்தப் புத்தகத்தை உருவாக்கியுள்ளார் என்றறியப்பட்டபோது வந்த விமர்சனமே அது.

சென்ற வருடம்தான் நான் மீண்டும் ஒரு கிராஃபிக் நாவல் வெளியிட்டேன். Old Heroes Solve Mystery — முப்பது முழு வண்ணப் பக்கங்களில் மூன்று முதியவர்களின் சாகசங்களைச் சொல்லும் சிறிய காமிக் புத்தகம் இது. Lien Foundation என்கிற அமைப்பு இதன் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டதால், வருத்தப்படாமல் அனைவருக்கும் இலவசப் பிரதிகளை வழங்கிவருகிறேன்.
[இப்புத்தகத்தை இங்கே இலவசமாக வாசிக்கலாம்.]
உங்கள் மனதிற்கு என்றென்றைக்கும் நெருக்கமான கிராஃபிக் நாவல் எது?
தற்போது நினைவுக்கு வருவது ஜோன் ஸ்பாரின் (Joann Sfar) தி ரப்பியின் பூனை (The Rabbi’s Cat). யூத மதகுரு ஒருவருக்கும், அவர் வளர்த்து வந்த பேசும் பூனைக்குமான உறவைச் சுற்றிப் பின்னப்பட்ட கதை அது. ஆனால் அது மட்டுமே அந்நாவலின் மையம் அல்ல. கலாச்சார வேற்றுமைகள், தனிமனிதவாதம், நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்குமான முரண்கள், வாழ்க்கையின் மர்மங்கள் போன்றவை அக்கதையின் ஊடாக ஆராயப்பட்டிருக்கும். பல இழைகளைக்கொண்ட ஜோன் ஸ்பாரின் மாபெரும் இக்கதையில் சித்தரிக்கப்படும் புதிய உலகம் ஆழமான உணர்ச்சிகளை எழுப்பவல்லது.
இலக்கிய உலகில் கிராஃபிக் நாவலை எந்த மிருகமாக நீங்கள் உருவகிப்பீர்கள்?
ஓர் ஒட்டகச்சிவிங்கியாக? ஒட்டகச்சிவிங்கியின் கண்களுக்கு நாம் நினைப்பதைவிடப் பெரிய பரப்பு புலப்படுகிறது. நான் சொல்ல வருவது புரிகிறதா?
இன்று ஒரு கிராஃபிக் நாவலை உருவாக்கத் தொடங்கும் ஒருவருக்கு உங்கள் அறிவுரை என்னவாக இருக்கும்?
வாரக்கணக்கில் அல்லது மாதக்கணக்கில்கூட உங்களை ஓர் அறைக்குள் பூட்டிக்கொள்ளத் தயாராய் இருங்கள். உன்னிப்பான ஒழுக்கம் கோரும் வேலை இது.

ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கும்போது, காட்சியிலோ எழுத்திலோ, படைப்பாளிகள் செய்யும் பொதுவான தவறு என்ன?
பெயர்கள். இடப் பெயர்கள், உயிரினங்களின் பெயர்கள், கதாபாத்திரப் பெயர்கள் — இவற்றின் முக்கியத்துவத்தைக் குறைவாக மதிப்பிடுகிறோம். சரியான பெயர் சூட்டப்பட்ட பொருளுக்குச் சரியானதொரு பொலிவு அமையும். ஒரு பெயர் மிகச்சரியாக இருப்பதாக வாசகர் உணரும் அழகான மின்னற்பொழுதுகளை, படைப்பாளிகள் சில நேரங்களில் உருவாக்கத் தவறிவிடுகிறார்கள். ஒரு பெயர் அது சுட்டும் பொருளுடன் ஆழமாகப் பொருந்தும் தருணம் அது. சரியான பெயரிடுவது எளிதான வேலையல்ல. பெயர்களுடன் நானும் போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
நிறக்குருடு நோய் இருப்பதால் க்வீ பெரும்பாலும் கருப்பு வெள்ளையில்தான் வரைவார்.

நீங்கள் சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் இலக்கியத் துறை இணைப்பேராசிரியராகப் பணியாற்றியுள்ளீர்கள். ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேரம் கற்பிக்க உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால் அவர்களுக்கு என்ன கற்றுக் கொடுப்பீர்கள்?
தங்களுக்கு ஆர்வமூட்டும் எந்தவொரு புத்தகத்தையும் எடுத்து வாசிக்கச்சொல்லிக் குழந்தைகளை நான் பள்ளி நூலகத்தில் விட்டுவிடுவேன். தோன்றுவதையெல்லாம் வாசித்துப் பார்க்கவும், பிடிக்காவிட்டால் வேறு நூல்களைத் தேர்ந்தெடுக்கவும் அவர்களுக்குப் போதுமான நேரம் கொடுப்பேன். எல்லாவற்றையும் புரட்டிப் போட்டு, இறுதியாக ஒரு சிறப்பு புத்தகத்தை ஒவ்வொருவரும் தேர்வு செய்ய வேண்டும். பிறகு இந்தப் புத்தகம் ஏன் இவ்வுலகில் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அவர்கள் வகுப்பினருடன் பகிர வாய்ப்பு கொடுப்பேன்.
நீங்கள் பதினெட்டாம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத்தில் ஆய்வு செய்துள்ளீர்கள். அன்றைய இலக்கியத்திடமிருந்து இன்றைய இலக்கியம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் என்ன?
பதினெட்டாம் நூற்றாண்டு லண்டன் மாநகரத்தில், அச்சு ஊடகச் செயல்பாடுகளுக்குப் பெரும் சாத்தியங்கள் இருந்தன: பத்திரிகைகள், செய்தித்தாள்கள், பஞ்சாங்கங்கள், காதல் நாவல்கள், தூக்கி வீசகூடிய கவிதைகள், மற்றும் பல. எழுத்தாளர்கள் எழுத்தைப் பயன்படுத்துவதற்கான அனைத்து சாத்தியங்களையும் அச்சமின்றி ஆராய்ந்தனர் — அவதூறுக்கான வழக்குகளைச் சந்திக்கும் அபாயம் இருந்தும்கூட. இன்றைய டிஜிட்டல் யுகத்தில், எழுத்தின் பலதரப்பட்ட சாத்தியங்களையும் நம்மால் முயன்று பார்க்க முடிகிறது. தகவல் மற்றும் பிரதிநிதித்துவ வரம்புகளைத் தகர்க்கும் வழிகளைக் கண்டறிந்து வருகிறோம். நாம் கற்றுக் கொள்ளவேண்டிய பாடம், பரந்த மனப்பான்மையுடன இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் அவசரகதியில் எதிர்வினையாற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.

உங்களின் முனைவர் பட்ட ஆய்வு (Honours thesis) ‘தி டின் டிரம்’ (The Tin Drum) என்ற மாயயதார்த்த நாவலைப் பற்றியது. அந்த நாவலைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன?
நவீன உலகத்தில் ஹிட்லரின் நாசிசம் ஏற்படுத்திய திகைப்பான புதிரை ஜெர்மன் எழுத்தாளர்கள் கையாண்ட விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஒரு நாகரிக சமூகம் எப்படி வன்முறையான, மனிதமற்ற ஒரு சித்தாந்தத்திடம் அவ்வளவு குறுகிய காலத்திற்குள் அடிபணிந்தது? இக்கேள்வி என்னை இரண்டு திசைகளில் இட்டுச்சென்றது: கும்பல் வெறியின் உளவியல் (psychology of mass hysteria) மற்றும் அரசியல் பொறுப்பு பற்றிய விவாதம். குண்டர் கிராஸ் எழுதிய ‘தி டின் டிரம்’ மூன்றாம் ரைச்சின் (Third Reich) எழுச்சி மற்றும் வீழ்ச்சியின் மூலம் வாழ்க்கையைப் பதிவு செய்யும் ஓர் அற்புதமான, புதுமையான நாவல். அதில், எனது கேள்விகள் அனைத்தும் ஒன்றிணைந்தன.
எனது ஆய்வறிக்கை தி டின் டிரம்மின் பல்வேறு பகுதிகளையும், சமூக மற்றும் தார்மீகப் பொறுப்பு அவற்றுள் பொதிந்திருப்பதையும் ஆய்வு செய்தது. எவ்விடத்தில் வாழ்ந்தாலும் நம்மை எது மனிதனாக்குகிறது? இதைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். ஒரு பயனுள்ள ஆய்வறிக்கை உங்களை இன்னும் பல ஆழமான கேள்விகளுடன் விட்டுச்செல்ல வேண்டும். இதை எழுதியதிலிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
சிங்கப்பூருக்கே உரித்தான ஆங்கிலப் பேச்சுமொழியாகிய சிங்கிலிஷை அறிமுகப்படுத்த ‘ஸ்பியாக்கிங் சிங்கிலிஷ்’ (Spiaking Singlish) என்கிற புத்தகம் எழுதியுள்ளீர்கள். குட்டி இளவரசன் நாவலை The Leeter Tunku என்கிற தலைப்பில் சிங்கிலிஷிற்கு மொழிபெயர்த்துள்ளீர்கள். இவற்றை சிங்கப்பூருக்கு வெளியே வசிக்கும் ஒரு வெளிநாட்டவர் வாசிப்பதால் என்னவெல்லாம் கிடைக்கக் கூடும்?
உண்மையில் சிங்கிலிஷ் வெறும் பேச்சுமொழி மட்டுமன்று. அது சிங்கப்பூர் மக்களைப் பற்றிய ஒரு பிம்பத்தைக் கொடுக்கிறது — நாங்கள் எவ்வாறு சிந்திக்கிறோம், பன்மொழிச் சமூகமாக எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துகிறோம், சொல்ல முடியாதவற்றை எவ்வாறு இயல்பாகவும் அரசியல் பிரக்ஞையுடனும் சொல்கிறோம். எனவே, ஒரு புதிய மொழி எவ்வாறு இவ்வுலகில் நுழைந்து படிப்படியாக வளர்ச்சிபெறுகிறது என்பதை அறிந்துகொள்ள முற்படுபவர்களுக்கு சிங்கிலிஷ் மொழியை வாசித்து ஆராய்வது பயனளிக்கும். சிங்கிலிஷ் சிங்கப்பூரர்களின் மனங்களுக்குள் புகுந்து எங்களின் நாடியைக் கண்டறிய உதவும் ஒரு தனித்துவமான நுழைவாயில்.
விசித்திரமான உயிரினங்கள் மீதான உங்கள் மோகம் உங்கள் படைப்புகளில் தெரிகிறது (Myth of the Stone நாவலிலும் சரி, அடாசு கவிதை தொடரிலும் சரி). அவை படைத்துருவாக்கம் பெறும் பிராந்தியத்தின் கலாச்சாரப் பண்புகளைக் கொண்டிருக்கும் என்று எண்ணுகிறீர்களா? அந்த வகையில், சிங்கப்பூருக்கே உரிய தனித்துவமான ஒரு விசித்திர உயிரினம் உள்ளதா?
விசித்திரமான உயிரினங்களின் மீதான எனது மோகத்திற்கு ஓர் எளிய அடிப்படைக் காரணம்தான்: என்னால் நிஜ உயிரினங்களை நன்றாக வரைய முடியவில்லை! விசித்திர மிருகங்களுக்கு நிலத்தின் பிரத்யேகக் கலாச்சாரக் கூறுகள் இருக்கலாம். அவை நிலத்தின் கலாச்சாரத்தையே பாதிக்கக் கூடியவையாகவும் இருக்கலாம். இந்த உறவு ஒரு வழிப் பாதையல்ல, சொல்லப்போனால், இதற்கு முடிவுமில்லை. மெர்லயன் சிங்கப்பூருக்கே சொந்தமானது, நிச்சயமாக; இதை இனி விவாதத்திற்கு உட்படுத்தத் தேவையில்லை. ஆனால் மெர்லயனை எதன் உருவகமாகப் பார்க்கிறோம்? பன்முகக் கலாச்சாரவாதமா, பரிணாம வளர்ச்சியா, நடைமுறைவாதமா, சாத்தியமற்ற தன்மையா, குமட்டலா, ஆழமற்ற தன்மையா, தந்திரமா அல்லது ஸீன் போடுதலா? இவை அனைத்தையும் உள்ளடக்கியதே சிங்கப்பூர் எனத் தோன்றுகிறது.

‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ கிராஃபிக் நாவலில்தான் முதல் முறையாக மெர்லயன்கள் கற்பனைக் கதாபாத்திரங்களாகத் தோன்றுகின்றன. நிலத்திலும் கடலிலும் மெர்லியன்கள் எப்படி வாழ்ந்திருக்கக்கூடும் என்கிற தேய்ந்துபோன கேள்விக்கு, தனது ஓவியங்களில் ஒரு விடை அளிக்கிறார் க்வீ — மெர்லயன்களுக்குக் கால்களைக் கொடுத்து.
சிங்கப்பூரில் கனவுருப்புனைவின் (speculative fiction) சமீபகால எழுச்சியைப் பற்றி உங்கள் கருத்து?
இது ஒரு சமீபத்திய எழுச்சியா அல்லது இப்போதுதான் கனவுருப்புனைவுக்குப் போதிய கவனத்தைக் கொடுக்கத் தொடங்கியிருக்கிறோமா? ஜோன் ஹானின் ஸ்டார் சபையர் (Joan Hon’s Star Sapphire), டெரன்ஸ் சுவாவின் தி நைட்மேர் தொழிற்சாலை (Terence Chua’s The Nightmare Factory), ஸ்டெல்லா கோனின் எஸ்டன் (Stella Kon’s Eston) மற்றும் ராஜு செல்லமின் 2084 ஆகியவற்றை யார் நினைவில் கொள்கிறார்கள்? நீண்ட காலமாக இவ்வகைமை புறக்கணிக்கப்பட்டுள்ளது. தற்போது பெருகிவரும் ஆர்வம் நமது மாறிவரும் இலக்கியப் புரிதலைக் காட்டுகிறது.
வெளிநாட்டவருக்கு சிங்கப்பூரின் கனவுருப்புனைவுப் படைப்பைப் பரிந்துரை செய்ய வேண்டுமெனில் எந்த நூலைச் சொல்வீர்கள்?
இன்றைய நிலையில், நான் டேவ் சுவா மற்றும் கோ ஹாங் டெங்கின் தி ப்ராடிஜி (The Prodigy) வரிசையை பரிந்துரைப்பேன். இது ஆறு தொகுதிகள் கொண்ட காமிக் தொடராகும். இதில் தொகுதி ஒன்று மட்டுமே வெளியாகியுள்ளது. செம்மை செய்ய நான் உதவுவதால், இந்தத் தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியும். கோவின் ஓவியங்கள் எப்போதுமே வசீகரிப்பவை. சுவா தனக்கே உரிய சினிமா பாணி கதையை அமைத்துள்ளார். இது ஒரு சிறந்த கூட்டணி!

சிங்கப்பூர் அறிவியல் ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய அறிவியல் புனைகதை எதுவென்று சொல்வீர்கள்? ஏன்?
ஃபிலிப் கே. டிக் (Philip K Dick) அல்லது கர்ட் வன்னேகட் (Kurt Vonnegut) எழுதிய ஏதாவது நூலைச் சொல்ல நினைத்தேன். ஆனால் மேரி ஷெல்லியின் ஃபிராங்கண்ஸ்டைன் நூல்தான் சரியானது! அறிவியலில் அறம் பற்றிய கேள்வியையும், வாழ்க்கைக்கும் அறிவிற்கும் இடையிலான உறவையும் பெரும் வீச்சுடன் எதிர்கொள்கிறது இந்நாவல்.
க்வீ தனக்குச் சொந்தமான முதல் கிராஃபிக் நாவலைத் தானே வரைந்தார். 1993 இல், மாணவராக இருந்தபோது தனது சேமிப்பை வைத்து ஒரு சில காமிக் புத்தகங்களை மட்டுமே வாங்க முடிந்தது. ‘மித் ஆஃப் தி ஸ்டோன்’ மூலம் கிடைத்த பணத்தை வைத்துதான் முதன் முதலில் கிராஃபிக் நாவல்களை வாங்கினார்.
கிராஃபிக் கலைஞர்கள் இன்னும் அதிகமாகவும், திறனுடனும் உருவாகும் பொருட்டு, சிங்கப்பூர்க் கல்வி முறையில் ஏதேனும் மாற்றத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென நினைக்கிறீர்களா?
இது ஒரு விசித்திரமான அனுமானம். சிங்கப்பூர்க் கல்வி முறை எதற்காக அதைச் செய்ய வேண்டும்? கல்வி முறையை மாற்றினால் கலைஞர்கள் தோன்றுவார்கள் என்பதை நான் நம்ப மறுக்கிறேன். வகுப்பைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களின் ஓரங்களில் ஏதாவது கிறுக்கிக்கொண்டிருக்கும் மாணவர்களே பிற்காலத்தில் கிராஃபிக் கலைஞர்கள் ஆகிறார்கள்!
ஒரு நேர்காணலில் காலஞ்சென்ற எழுத்தாளர்களில் போர்ஹேஸ்ஸை உங்கள் மனதிற்கு மிக நெருக்கமாக உணர்வதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இறந்துபோன ஓர் ஓவியருடன் உரையாட உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நீங்கள் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்? ஏன்?
வில்லியம் பிளேக் (William Blake) அல்லது குஸ்டாவ் டோரே (Gustav Doré) – இவர்களின் ஓவியக் கட்டமைப்பும் உத்திகளும் புதிரானவை என்பதால்! நான் அவர்களுடன் உரையாட வேண்டியதில்லை. தோள் பின்னால் நின்றப்படி அவர்கள் வேலை செய்வதை நோட்டமிட விரும்புகிறேன்.
உங்களால் காலப் பயணம் செய்ய முடிந்தால், எந்த வருடத்திற்கு செல்வீர்கள்? அங்கு என்ன செய்வீர்கள்?
காலப் பயணம் செய்து இந்த மிக நீண்ட பேட்டியின் இறுதிக்குச் சென்றுவிடுவேன்.
நிதர்சனத்தில் உள்ள அபத்தத்தைப் பார்ப்பது முக்கியம் என்று நினைக்கிறீர்களா? ஏன்?
ஆஹா, பேட்டியின் இறுதிக்கு வந்துவிட்டேனே! காலப்பயணம் செய்தா இங்கு வந்தோம்? நம்மால் அறிந்திட இயலுமா?
