கதை

களப எயிறு

20 நிமிட வாசிப்பு

ஒரு வெள்ளி கொடுத்து அக்கிழவரிடம் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டேன். தேவையுள்ளதோ இல்லையோ, கிழவரிடம் திங்களும் வெள்ளியும் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொள்வது வாடிக்கை. கிழவர் ஆரம்பகாலத்தில் பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் கடைகளின் நடைபாதையில அமர்ந்தபடி தண்ணீர் பாட்டில் விற்பார். இப்போதும் அதே இடம்தான் ஆனால் படுத்தபடிதான் வியாபாரம். உட்கார முடியவில்லை. தாளமுடியாத உடல்சோர்வு இருந்தாலும் கூட நான் நீட்டும் ஒரு வெள்ளியை நாணயத்தைச் சிரிக்க முயன்றபடி வாங்கிக்கொள்வார். அவர் கைமணிக்கட்டில் யானை உருவம் பச்சை குத்தியிருப்பதை ஒவ்வொரு முறையும் தவறாது பார்த்துவிடுவேன். கொடுப்பதும் வாங்குவதும் தவிர்த்து வேறு எந்த உரையாடலும் நிகழ்ந்ததில்லை. அவர் எப்போதும் உபயோகிக்கும் வாசகம்தான் தொடர்ச்சியாக அவரிடம் வாங்க வைத்தது. “எனக்குப் பிச்சையெடுப்பதில் நாட்டமில்லை, அதனால் இந்தத் தண்ணீர் பாட்டிலை வாங்கி எனக்கு உதவி செய்யுங்கள்” எனக்கு உதவி செய்வதன் மூலம் கருணையின் வடிவமான கடவுளை நீங்கள் நெருங்குவீர்கள்” என்று ஆங்கிலத்திலும் சீன மொழியிலும் தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டிருப்பார்.

தொடர்ச்சியாக அவரிடம் வாங்கும் தண்ணீர் பாட்டிலை அலுவலகத்தின் குளிர்பதன பெட்டியில் அடுக்கிவிடுவேன். எப்போதாவது எடுத்துக் குடிப்பதுண்டு. அப்படி நிறைய பாட்டில் சேர்ந்துவிடுவதுமுண்டு. இரண்டு நிமிடம் முன்பாக அலுவலகத்தில் இருப்பதுபோலப் பார்த்துக்கொள்வது என் வழக்கம். நான் நுழையும் முந்தைய நிமிடம் வரை என்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பவர்கள் என் தலை தெரிந்ததும் வேறொருவரைப் பற்றிப் புறம் பேச ஆரம்பிப்பார்கள். நான் எதிலும் கலந்துகொள்பவள் இல்லை. ஒரு எல்லைக்கோட்டுடன் எல்லோரிடமும் பழகுவதைக் கவனமுடன் பின்பற்றி வந்தேன். நியாயம் கேட்பதுபோல என்னிடம் முறையிடும்போதுகூடச் சிரிப்புடன் எதாவது சொல்லிக் கடந்துவிடுவதுண்டு. என்னைப்பற்றியும் கூட இவர்கள் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று யூகித்தாலும் அதை வெளியே காட்டிக்கொண்டதில்லை.

முதலாளிக்கு, நகரத்தில் மொத்தமாக எட்டு சாப்பாட்டுக் கடைகளும், வெளிநாடுகளில் இரண்டு கிளைகளும் இருந்தன. இத்தீவின் கடைகளுக்கு இரண்டிரண்டு பேர் கணக்கு வழக்குகளைக் கவனிப்பதற்கு வேலையிலிருந்தனர். அதில் நானும் இன்னும் இரண்டு பெண்களும் ஓர் ஆணும் மற்றும் தலைமைக் கணக்குப்பிள்ளையும்.

இந்த அலுவலகத்தில் சேர்ந்து நான்கு வருடம் ஆகிறது. இதற்கு முன்பு எங்கும் வேலை செய்ததில்லை. பி.காம் முடித்த கையோடு திருமணமாகி சிங்கப்பூர் வந்தவள். இப்போது வேலைக்குப் போயாக வேண்டிய சூழல். எனக்கு இடது கையில் கட்டை விரல் கிடையாது. ஆனால் முன்பு அங்கே விரல் இருந்தது. அதாவது திருமணத்திற்கு முன்பு. எனக்குக் கட்டை விரல் இல்லாதது குறித்து அலுவலகத்தில் ஏகப்பட்ட கதைகள் உலவிக்கொண்டிருந்தன. ஆனால் நிஜக்காரணம் எவருக்கும் தெரியாது. நேரிடையாக என்னிடம் கேட்டபோது விபத்து ஒன்றில் இழந்ததாகக் கூறினேன். ஆனால் எவரும் அதை நம்பத்தயாராக இல்லை.

அலுவலகத்திலும் வீட்டின் பக்கத்திலும் ஏற்கனவே பழக்கமானவர்கள்தான். புதிதாக அறிமுகமானவர்களின் “உங்க வீட்டுக்காரர் எங்கே” என்ற கேள்வியைத்தான் எப்படிச் சமாளிப்பது என்பது அதை ஒவ்வொருமுறை எதிர்கொள்ளும்போதும் எனக்குச் சவாலாக இருந்தது. அவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார் என்று சொல்லிவிடுவதுண்டு. விரலுக்கு விபத்து. அதோடு சரி.

மகன் இப்போதுதான் பிரைமரி ஒன்று செல்கிறான். கணவன் குறித்த வருத்தமெல்லாம் இப்போது சுத்தமாய் வடிந்துவிட்டது. வழக்குகளுக்கு என்று இப்போது எதையும் செலவழிப்பதில்லை. இரண்டு வருடம் முன்புவரை சம்பளத்தின் கழுத்து வரை அதற்குச் செலவானது. இதற்கு மேற்கொண்டு செலவழிப்பதில் அர்த்தமில்லை என்றவுடன் அதை நிறுத்தியாகிவிட்டது. இப்போதும் நானும் மகனும் மட்டுமே. ஒட்டு வாடகையில் ஓர் அறை. சின்னஞ்சிறிய உலகம். முன்பு நாத்தனார் வீட்டில் தங்கியிருந்தபோது உணர்ந்த பாதுகாப்பின்மை இப்போது இல்லை. அவளும் நல்லவள்தான். நிரந்தர வேலையின்மை அவளது பிரச்சினையாக இருந்தது. அதைவிட வீடு முழுக்க எங்குப் பார்த்தாலும் சிகரெட் புகைத்து அங்கங்கே போட்டு வைத்து வீடு நாறியது. பிள்ளை அதைப்பார்த்து வளரக்கூடாது என்பதும் ஒரு காரணம்.

என் பெயரை முதல்முறையாகக் கேட்பவர்கள் கரிணி என்ற பெயருக்கு அர்த்தம் தெரிந்துகொள்வதை வழக்கமாக வைத்திருந்தனர். அப்பாவுக்கு ஜோதிடத்தில் அதீத நாட்டம். பிறந்த நேரத்தின் அடிப்படையில் யானையின் பெயரை வைக்க வேண்டும் என்று முடிவானபோது இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார். “இவள் ஒரு கூட்டத்தையே வழிநடத்திச் செல்லக்கூடியவள்” என ஏதோ ஒரு பித்தலாட்ட ஜோசியக்காரன் சொல்லிவிட அதன்படி வைத்த பெயர்தான் கரிணி. பெண் யானைக்கு கரிணி என்ற பெயர் உண்டு. ஆனால் நான் இந்த வியாக்கியானமெல்லாம் சொல்வதில்லை. “கருணை மிக்கவள்” என்பதோடு நிறுத்திக்கொள்வேன். அதற்கு கருணை ஓரளவு என்னிடம் இருந்ததுதான் காரணம்.

மகன் வருணை காலை எட்டறைக்குப் பள்ளியில் விட்டு அலுவலகம் வந்து சேர வேண்டும். பகல் இரண்டு மணிக்குப் பள்ளி முடியும், குழந்தைக் காப்பகம் ஒன்றில் மாலை ஐந்தரை வரை பார்த்துக்கொள்வார்கள். ஐந்து மணிக்கு வேலை முடிந்தால் அரை மணியில் காப்பகத்தை அடையலாம். இதில் குழப்பம் ஏதும் நேர்வதில்லை.

எல்லாம் அந்த ஒருநாள் வரைதான். அந்த ஒருநாளில் என் வாழ்க்கையில் மற்றொரு திருப்பம் நிகழ்ந்தது. முதல் திருப்பத்தில் கணவன் சிறைக்குச் சென்றது. அன்றைய தினசரிகளில் முக்கியச் செய்தியாக வந்தது. மெல்ல அச்சம்பவம் மறந்துபோய் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியபோது இந்தத் திருப்பம்.

அன்று நான் பேருந்துவிட்டு இறங்கியபோது மழை பிடித்துக்கொண்டது. நிறுத்தத்திலிருந்து ஏழு நிமிட நடைதான். குடை எடுத்துவரவில்லை. வேகமாக நடந்தால்கூட அலுவலகம் அடைந்துவிடலாம். ஆனால் நனைவதற்குப் பின்பான நாட்களில் சளிபிடிக்கலாம், காய்ச்சல் வரலாம், படுக்கையில் விழ நேரலாம், அப்படி விழுந்தால் நம்மைக் கவனிக்க ஆள் யாருமில்லை. முக்கியமாக வருண். இப்படியான நினைவில் நின்றுகொண்டிருக்கும்போது ஓடிச்சேர்ந்துவிடலாம் என்று ஓட முற்பட்டு எடுத்து வைத்த முதல் அடியிலேயே அந்தத் திருப்பம் நிகழந்தது.

நடைபாதையின் ஓரம் மழையில் நனைந்த ப்ளாஸ்டிக் காகிதத்தின் மேல் கால் வைத்த அடுத்த நொடியில் முன்கால் வழுக்கிக்கொண்டே போக கையில் வைத்திருந்த சாப்பாட்டுப் பொதியைத் தூர வீசிக் கைகளால் தரையில் ஊன்றி விழலாம் என மூளை முடிவெடுத்ததை நேரம் அனுமதிக்கவில்லை. அதற்கு முன்பாக என் முகம் ஒரு பார்க்கிங் கம்பத்தில் முட்டியது. உலோகமும், உலோகமும் மோதும்போது உண்டாகும் சப்தம் போல ஓர் ஒலி கேட்டது. உடல் ஒரு திருப்பு திருப்பி கீழே விழுந்தேன். சுற்றி இருந்தவர்கள் ஓடி வந்தனர். கைதூக்கி எழுப்பினர். எனக்கு ஒரு காயமும் இல்லை. துளி ரத்தமும் வரவில்லை. குழப்பத்துடன் எழுந்த என்னை ஜாக்கிரதையாக இருக்கும்படியும் மழை நின்றவுடன் போகும்படியும் அறிவுறுத்தினர். நான் அதை ஏற்றுக்கொண்டு மறுபடி மழையைவிட்டு ஒதுங்கி அவர்களுடன் நின்றுகொண்டேன்.

விழும்போது ஒரு சத்தம் வந்ததே அது எங்கிருந்து வந்திருக்கக்கூடும்.

நான் எழவில்லை. எழுப்பிவிடும்போது நான் விரைவில் மீண்டேன். கடைவாயோரம் துளி சிவந்திருந்தது. ரத்தமில்லை. உடல் எல்லாம் ஈரம், கால் வைக்காமல் இச்சிறிய குட்டையை கடந்துவிடலாம் என்ற உத்வேகத்தில் சற்று எட்டி வைத்த கால்தான் இடறியது. அதே குட்டையில் விழுந்திருக்கிறேன். சிகரெட் துண்டுகள், பல மாத டீசல் புகைக் கரிகள் அடர்ந்த நீர், டின்கள். எச்சில்கள் என எல்லாம் கலந்திருக்கும். அடிவயிற்றிலிருந்து வாந்தி வருவதுபோல இருந்தது. எப்படி எனத் தெரியவில்லை. ஊரில் இருப்பதுபோலவே ஒருவர் சோடா வாங்கிவந்தார். டின் சோடா. எனக்கு ஒன்றுமில்லை. இடறி விழுந்ததில் அதிர்ச்சி. வழிவிட்டால் நான் சென்றுவிடுவேன் என்பதுபோலப் பார்த்தேன்.

ஒரு பெண்மணி குடை கொடுத்தாள். மெதுவாக சிக்னல் தாண்டிச் செல்லும்போதுதான் என் வார்த்தை உச்சரிப்பில் ஏதோ ஒரு குறைபாடு உண்டானதுபோல உணர்ந்தேன். என்ன என யூகிக்க முடியாமல் முகத்தைத் துடைத்தபோதுதான் எனக்குத் தெரிய வந்தது.

என் வாய்ப்புறம் ஏதோ ஒன்று குறைவது போலிருந்த உணர்வு.

ஒன்றல்ல, ஒன்றரை.

எனது முன்பற்களில் ஒன்று முழுதாகவும், மற்றொன்று முக்கால்வாசி சிதைந்த நிலையில் இருந்தது. ஒற்றை விரல் மேலன்னச் சதையில் ஒட்டியபோது உள்ளுக்குள் அதிர்ந்துபோனேன். தலை சுற்றி வர, அருகில் இருந்த தூணைப் பற்றி நின்றுகொண்டேன். கைப்பையில் இருந்த சிறிய கண்ணாடியை எடுத்துப் பார்த்தேன்.

பிம்பத்தில் தெரிவது நான் இல்லை.

மஃபின் கேக்கின் முன்புறம் கோடு இழுத்தது போல உதடுகள் கருமை நிறம் கோர்த்தபடி வீங்கியிருந்தது. மெல்ல உதடுகளைப் பிரித்துப் பார்த்தால் பூட்டுச்சாவியின் துவாரம் போல இடைவெளி இருந்தது முன் வரிசையில். எத்தனை அலங்கோலம். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது. என்ன வாழ்க்கை இது எப்படி இதைச் சீர் செய்வது? வாழ்வின் ஒட்டுமொத்த சலிப்பும் தோள்மீது ஏறி அமர்ந்து சிரிக்க ஆரம்பித்தது.

அலுவலகத்தை நினைத்தவுடன் கண்ணீர் பெருகியது. எத்தனை லாவகமான சந்தர்ப்பம் அவர்களுக்கு. பார்க்கும் ஒவ்வொரு நொடியும் சிரிப்பார்களே. வேறெங்குமே அடிபடவில்லை. வாய் தவிர்த்த முகம் லட்சணமாகவே இருந்தது. முடி கூட கலையவில்லை.

விடுப்பு எடுக்க முடியாதபடி இன்றைய தினம் வேலை ஒன்று இருக்கிறது. புகைமாசு காலங்களில் மூக்கிற்கும் வாய்க்கும் போடும் கவசம் போல இருந்தால் இன்றைய தினம் சமாளித்து நாளை முதல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்… வழியில் ஒரு கடையில் விசாரித்தேன். பழங்காலத்தில் ராஜாவுக்கு சேவகம் செய்பவர் வாய்பொத்தி பேசுவதுபோல வலதுகையால் வாயைப் பொத்திக்கொண்டு பேசினேன். வேறொரு கடையைக் காட்டி அங்கு கிடைக்கும் என்றார்கள். தரமான மாஸ்க் ஒரு பெட்டி எடுத்துக்கொண்டு அங்கேயே பிரித்து ஒன்றை அணிந்துகொண்டேன். கண்ணாடி எடுத்துப்பார்த்தபோது மாற்றம் ஒன்றும் தெரியவில்லை. எக்காரணம் கொண்டும் இதைக் கழட்டிவிடக்கூடாது. மறந்தும்கூட இதைச் செய்துவிடலாகாது என உறுதி எடுத்துக்கொண்டேன். கடைகள் ஒன்றும் திறந்தபாடில்லை. திறந்த ஏதோ ஒரு கடையில் உள்நுழைந்து புதிய ஆடைகள் வாங்கி அங்கேயே உடுத்திக்கொண்டு பழையதைத் தோம்பில் வீசினேன்.

எப்படிச் சாப்பிடுவது?

சாப்பிடும்போது தெரிந்துவிடுமே! மதியத்திற்கு மேல் விடுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல் எனச் சொல்ல வேண்டும். கடுமையான வைரல் ஃபீவர்.

ஆச்சரியத்தோடும் பீதியோடும் என்னைப் பார்த்தனர். முகத்தைச் சோர்வாக வைத்துக்கொண்டு காய்ச்சல் என்றேன்.

“ஏன் மாஸ்க் அணிந்திருக்கிறாய்” என்றார்கள். என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஒருத்தி மட்டும் அருகில் வந்து கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள். நான் மாஸ்க்கை இறுக்கமாகப் பற்றிக்கொண்டேன். எங்கே விலக்கிவிடுவாளோ என்றொரு பயம்.

“காய்ச்சல் மாதிரி தெரியலயே!” என்றபடி உதடு பிதுக்கினாள்.

உள்காய்ச்சலாக இருக்கும்” என்றாள் இன்னொருத்தி. “முதலாளிக்கு ஒரு செய்தி அனுப்பி விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் தலைமைக் கணக்காளர். ஓரளவு மனிதத் தன்மை உள்ள மனிதர் அவர்.

மாஸ்க் அணிந்துகொண்டு மூச்சுவிடுவது சிரமமாக இருந்தது. உதடுகள் இரண்டும் நேரம் ஆக ஆக, வீங்கிக்கொண்டு மாஸ்க்கையும் மீறிப் புடைக்க ஆரம்பித்தது. அன்றைய கணக்குகள் சரிபார்த்து, செக்குகள் கிளீயர் செய்து, வேலையாட்களின் சம்பளத்தைப் பட்டுவாடா செய்து நிமிர்ந்தபோது மதிய உணவு நேரம் வந்திருந்தது.

“முதலாளி போகச்சொல்லிவிட்டார். விடுப்பு எடுத்துக்கொள்ளுங்கள். சரியானதும் தகவல் சொல்லச்சொன்னார்” என்றார் தலைமைக் கணக்காளர்.

பற்களை எப்படிச் சரிசெய்வது என்ற விஷயத்தைப் பற்றி முன்பே முடிவு செய்திருந்தேன். சைமன் டெண்டல் கிளீனிக் ரயில் நிலையம் போகும் வழியில்தான் இருந்தது. போகும் வழியில் டாக்டரைப் பார்த்துவிடவேண்டும்.

கிளினிக்கில் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருந்தார்கள்.

நான் என் பெயரைப் பதிந்துகொண்டேன். மிக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றாள் உள்ளே இருந்த பெண். ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டேன். தொலைக்காட்சியில் ஒலி இல்லாமல் மிஸ்டர் பீன் ஓடிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட அனைவருமே அதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ ஒரு திகில் படத்தைப் பார்ப்பதுபோல எவருமே சிரிக்கவில்லை. அத்தனை பேருக்குமா பல்லில் பிரச்சனை.

நேரம் இன்று மிக மெதுவாகத்தான் சென்றது. இவ்வளவு மெதுவாக நேரம் தன் வாழ்க்கையில் சென்றதில்லை. ஒருவர் உள்ளே சென்றால் வெளிவரப் பத்து நிமிடங்களுக்கு மேல் ஆனது. தனது முறை வர எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகலாம். கிறித்தவ மார்க்கத் துண்டுப்பிரசுரங்கள் நிறைய அடுக்கி இருந்தார்கள். அதில் ஒன்றை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். அதில் ஒரு வரியைத் திரும்பத் திரும்ப வாசித்தேன்.

என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.

எந்தக் கோணத்திலும் சந்தோஷமாக எண்ணும்படி நமக்கு வாழ்க்கை அமையவில்லையே. இதைப் பொறுமையாக கடந்துசெல்லும்படிதானே நடந்து கொண்டிருக்கிறேன். பிறகேன் இந்தச் சோதனை? ஒரு பெண்ணுக்குப் புன்னகை எவ்வளவு முக்கியம். ஏன் பெண்ணுக்கு? மனித இனத்திற்கே விசேஷ குணமல்லவா அது. முன் இரண்டு பற்கள் இல்லாமல் என் புன்னகை கேலிக்குரியதாகதானே இருக்க முடியும். என் வாழ்க்கை ஏற்கனவே கேலிக்குரியதாகத்தானே மாறிவிட்டது.

பத்து நிமிடம் சோதித்துவிட்டு டாக்டர் சொன்னார். டாக்டரின் முகம் இயேசுவின் முகம்போல கனிவு நிரம்பியிருந்தது. மிகுந்த பரிவுடன் என் முகம் நோக்கிச் சொல்ல ஆரம்பித்தார். ஒரு முழுப்பல்லும், இன்னோர் அறைப்பல்லை நீக்கிவிட்டு அதற்கொரு முழுப்பல்லும் ஆக இரண்டு பற்கள் பொருத்த வேண்டும் என்றார் டாக்டர். அதற்கு விளக்கமும் கொடுத்தார். மேல் விவரங்களை சிஸ்டர் உங்களுக்குச் சொல்வார் என்றார்.

அடுத்த அறையில் ஒரு பெண் இருந்தாள். அவள் வழக்கமாக எல்லா நோயாளிகளிடத்திலும் பாடும் பல்லவி ஒன்றைப் பாட ஆரம்பித்தாள்.

உங்களுக்குத் தற்காலிகமாக பல் சரிசெய்ய வேண்டும் என்றால் ஒரு பல்லுக்கு நூற்றி ஐம்பது, இரண்டுக்கும் சேர்த்து முன்னூறு வெள்ளி ஆகும். உங்களுடைய மற்ற பற்களைக்காட்டிலும் வித்தியாசமாகத் தெரியும் என்பதால் பார்ப்பவர்கள் உடனடியாக கண்டுபிடிக்க வாய்பபுள்ளது, மேலும் இளம் பெண்களுக்கு இதைச் சிபாரிசு செய்வதில்லை.

எனக்கு கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்க சிஸ்டர்.

சரிக்கா நான் தமிழ்லயே சொல்றேன். உங்களுக்கு ரெண்டு பல்லு கட்டணும்னு எழுதியிருக்கார். பல்லுல நிறைய கேட்டகரி இருக்கு, இங்க வேலை செய்றவங்க, ஊர்ல போய் பர்மணண்ட் பல் கட்டிக்கலாங்கறதுக்காக இப்போதைக்கு டெம்ப்ரவரி பல்லு கட்டிக்குவாங்க. பர்மணண்ட் பல்லு கட்டணும்னா நாலஞ்சி கன்சல்டேஷனுக்கு வரணும். ஆர்டர் பண்ணி பல்லு வர வைக்கணும். அதுக்கு ஒருவாரமாவது ஆகும் முக்கியமா செலவு அதிகமா ஆகுங்கறதால டெம்பரவரி செலக்ட் பண்ணிடுவாங்க. இதுல முக்கியமான பிரச்சனை என்னன்னா புதுப் பல்லுக்கும் பழைய பல்லுக்கும் வித்தியாசம் ஈசியா தெரிஞ்சிடும். கட்டின பல்லுன்னு தெரிஞ்சா கூச்சமா இருக்கும்னு சிலபேர் ரொம்ப விலை கூடின பல் ஆர்டர் செய்வாங்க.

விலை கூடினதுன்னா என்ன அது?

சிலபேர் வெள்ளியில, சில பேர் தங்கத்துல செய்வாங்க. ஆனா அதெல்லாம் பழைய காலம். இப்போ யானைத் தந்தத்துல செய்ற பல்தான் ரொம்ப நேச்சுரலா இருக்கும். கட்டின பல்லுன்னு கண்டுபிடிக்க முடியாது. ஆனா அது அளவெடுத்து ஆர்டர் பண்ணனும். கொரியாவுல இருந்து வரும். மூணுலருந்து ஏழு நாள் ஆகலாம்.

எவ்வளவு ஆகும்?

ரெண்டாயிரம் வெள்ளி ஆகும்.

ரெண்டாயிரமா?

ஆமாங்க்கா… ரொம்ப அதிகமா தெரிஞ்சதுன்னா இப்போதைக்கு டெம்பரவரி பண்ணிக்கோங்க. ஊருக்குப் போனா இந்தியாவுல கம்மியா இருக்கும்.

ஊருக்குப் போகமுடியாத சூழலை இவளிடம் எப்படிச் சொல்வது? பாஸ்போர்ட் வேணும். பாஸ்போர்ட் போலீஸ் வசம் உள்ளது. கேஸ் முடியாமல் தரமாட்டார்கள்.

மறுபடி டாக்டரைப் பார்த்து அவரிடம் கேட்டேன். தந்தத்தில் செய்வதுதான் சரியான தேர்வு என்றார்.

அளவெடுத்தார்கள். எவ்வளவு சீக்கிரமோ அவ்வளவு சீக்கிரமாக புதிய பற்களை வரவழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். விரைவாக வரவழைக்க முயற்சி செய்வதாக உறுதி அளித்தபின்பு முன்பணம் செலுத்திவிட்டு வீடடைந்தேன்.

என் முகத்தில் மாஸ்க் இருந்ததால் பிள்ளை சற்றுக் குழம்பிவிட்டான். நிமிர்ந்து நிமிர்ந்து என் முகத்தையே பார்த்து வந்தான்.

வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் தூர எறிந்துவிட்டு அழுதேன். அழத்தானே முடியும். மெல்ல அருகில் வந்து நின்றான். நான் மாஸ்க்கைக் கழட்டுவதற்காகக் காத்திருந்தான். அவனை அணைத்துக்கொண்டேன். பின்புறமாக மாஸ்க்கைக் கழட்டிவிட்டு உதடுகளை இறுக்கமாக மூடிக்கொண்டபடி அவனைப் பார்த்தேன். கண்ணீர் பெருக்கெடுத்தது. வீங்கிய உதடுகளைத் தன் பிஞ்சு விரலால் வருடிக்கொடுத்தபடி என்னாச்சுமா என்றான்.

“அம்மா கீழ விழுந்துட்டேன்பா, அடிபட்டுடுச்சி. சீக்கிரமே சரியாயிடும்பா” என்றேன்.

பல் இல்லாததைக் கவனித்துவிட்டான். மறுபடி அழுகை எனக்குப் பொங்கி வந்தது.

பல்லு விழுந்திருச்சாமா?

ஆமாண்டா தருண் செல்லம் என்பது போல தலையசைத்தேன். கண்ணீரைத் துடைத்தபடி “அழுவாதம்மா சரியாயிடும்” என்றான், எனக்கு மேலும் அழுகை கூடிக்கொண்டே போனது.

ஜன்னலோரம் இருந்த மேசை டிராயரைத் திறந்து ஏதோ ஒன்றைக் கையில் மறைத்தபடி என்னிடம் கையை நீட்டினான்.

மடக்கிய கையினுள் ஏதோ இருந்தது. இது ஒரு விளையாட்டு. அடிக்கடி எதாவது ஒரு பொருளை உள்ளங்கையில் மறைத்து இரண்டில் ஒன்றைத் தொடும் விளையாட்டு.

இப்போது அவன் ஒருகையை மட்டுமே நீட்டியிருந்தான். மெல்ல சிரிப்பை வரவழைத்தபடி அவன் கையை விரித்தேன்.

உள்ளே அவனுடைய சின்னஞ்சிறிய பல் ஒன்று இருந்தது. “இதை நீ ஒட்டிக்கோம்மா எல்லாம் சரியாயிடும்” என்றான்.

இழுத்து அணைத்துக்கொண்டேன். சென்ற மாதம்தான் அவனுக்கு முதல் பல் விழுந்திருந்தது. எனக்கு முதல்பல் விழுந்தபோது சாணி உருண்டையில் மறைத்துக் கூரையில் வீசச்சொன்னார் அப்பா. ஒரு நினைவுக்காகப் பத்திரப்படுத்தி வைத்திருக்கச்சொன்னேன்.

அடுத்த மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு எங்கேயும் செல்லவில்லை. அறைக்குள்ளேயே முடங்கிக்கிடந்தோம். தினமும் கிளினிக்கிற்கு போனில் அழைத்து ஆர்டர் செய்த பல் வந்துவிட்டதா என்று விசாரித்தேன்.

வந்த உடனே கூப்பிடறோம் மேடம். உங்கள் நம்பர் எங்களிடம் இருக்கிறது என்றார்கள்.

நான்காவது நாள் காலை அழைத்தார்கள். பல் வந்துவிட்டது. ஆனால் டாக்டர் மதியத்திற்கு மேல் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார். நான்கு மணிக்கு வந்துவிடுமாறு சொன்னார்கள்.

மாஸ்க்கை அணிந்துகொண்டு புறப்பட்டோம். பல் பொருத்தும் சிகிழ்ச்சை இரண்டு மணி நேரம் நீடித்தது. அதுவரை தனியாக தருண் அமர்ந்திருந்ததை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தேன்.

பொருத்தப்போகும் முன்பாக டாக்டர் பற்களை என்னிடம் காட்டினார். அச்சு அசலாக மனிதப்பல் போலவே இருந்தது. தந்தத்தில் செய்தது என நம்பவே முடியவில்லை. சன்னமாக இழைத்திருந்தார்கள். மிக உறுதியான வெந்நிறப்பற்கள்.

முதல்நாள் ஒருபல்லும் அதற்கடுத்த நாள் இன்னொரு பல்லையும் பொருத்தினார்கள். இப்போதிருக்கும் நிலையில் மிகப்பெரிய தொகை இதற்காகச் செலவழித்திருந்தேன். சிறுகச் சிறுக சேமித்த பணத்தில் ஒருபாதி கரைந்துபோனது,

மிக அற்புதமாக பொருந்தியிருந்தது புதிய பற்கள். முன்பைக்காட்டிலும் என் புன்னகை மேம்பட்டிருப்பதாக உணர்ந்தேன். ஒருவாரத்திற்குப் பிறகு நான் சிரித்தேன். என் சிரிப்பைக் கண்டு இழந்த தன் மகிழ்ச்சியைத் திரும்பப் பெற்றது போலத் தருணும் சிரித்தான்.

அன்று உற்சாகமாக அலுவலகத்திற்குச் சென்றேன். பேருந்து நிறுத்தத்தில் தண்ணீர் வாங்கியபோது கிழவரிடம் சிரித்தபடி காசு கொடுத்தேன். எப்போதுமே என்னிடம் பேசாதவர் அன்று என்னிடம் இரண்டு வார்த்தை பேசினார். அவர் பேசியது எனக்கு மகிழ்ச்சியளித்தது.

வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு அலுவல் வேலைகளில் மூழ்கிப்போனேன். ஒருவாரமாகக் கவனிக்காத கணக்குகள் என் முன்னே வந்து அச்சுறுத்தின. முதலாளி வந்து விசாரித்துச் சென்றார். அவருக்கு ஓரளவு என் முன்கதை தெரியும். அதிக அழுத்தம் நேர்வதைக் கவனமாக தவிர்ப்பதை நான் அறிவேன்.

அன்றிரவு எனக்கு ஒரு கனவு வந்தது. என் கனவில் நான் ஓர் ஆற்றின் கரையோரப் பாறையில் அமர்ந்தபடி தண்ணீருக்குள் காலை நனைத்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன். பாறை மிருதுவாக இருந்தது நீரில் கொதிக்க வைத்த ரப்பர் பந்துபோல இருந்தது அதன் ஸ்பரிசம்… அப்பாறை லேசாக மேலும் கீழுமாக அசைந்துகொண்டிருக்கிறது. பாறை மெல்ல எழும்ப ஆரம்பித்தது. நான் நீருக்குள் விழுந்தேன். நீரிலிருந்து எழுந்து பார்க்கும்போது நான் அமர்ந்திருந்தது பாறை அல்ல. அது ஒரு யானையின் முதுகு என்பதை அறிந்தேன். அந்த யானை என் நெருங்கிய நண்பன் போல நீரை என் மேல் இறைத்து விளையாடியது. ஒரு சிற்றருவி என் மேல் திடீரெனப் பொழிந்ததுபோல இருந்தது. நான் விழித்துக்கொண்டேன். என் இடது கையைத் தலையணையாய் வைத்து தருண் படுத்திருந்தான். ஜன்னல் வழி கசிந்த மெல்லிய வெளிச்சத்தில் அவன் மார்புக்கூடு எழுந்து அமிழ்வது தெரிந்தது. அதைப் பார்த்துக்கொண்டே மீண்டும் உறங்கிப்போனேன்.

காலையில் எழும்போது மங்கலாக நேற்றைய கனவு குறித்து நினைவுகள் எழும்பிப் புகைபோல வந்தன. நான் அதை நினைவுபடுத்த முயற்சித்துத் தோற்றுப்போய்க் குழம்பியபடிப் படுக்கையில் அமர்ந்திருந்தேன்.

எதிரே தருண் சுவற்றுப்பக்கம் பார்த்தபடி இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு சுவற்றைப்பார்த்துக்கொண்டிருந்தான். அந்தத் தோரணை பெரிய மனிதனாகிவிட்டதான பாவனை கொண்டிருந்தது. ஆதுரத்துடன் தருண் என்றழைத்தும்கூட அவன் கவனம் சுவற்றின் மேலே இருந்தது.

போர்வையை விலக்கியபடி எழுந்து தருணின் தோளில் கை வைத்தேன். அப்போதும் அசையாமல் அவன் சுவற்றின் மீது கண்களைப் பதித்திருந்தான். என்னதான் அப்படிப் பார்க்கிறான் என நான் பார்த்தபோது அதிர்ந்துபோனேன்.

சுவற்றில் கால்பந்து அளவிலான யானைப் படம் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. பென்சிலால் மிக நேர்த்தியாக வரையப்பட்டிருந்த அந்த யானை எங்கள் அறைக்குள் நுழைந்த மூன்றாவது உயிர். ஆம் அச்சித்திரம் உயிர் கொண்டிருப்பது போல வரையப்பட்டிருந்தது.

இச்சிறிய வயதில் தருண் இதை வரைய சாத்தியமில்லை. தருண் நான் வரைந்ததாக எண்ணி “எலிஃபெண்ட் சூப்பராருக்குமா எனக்கு டிண்டின் இதே மாதிரி வரைஞ்சுத்தாங்கமா, எல்லா சுவர் முழுக்கவும் படம் வரைஞ்சிடலாம். அப்புறம் நம்மள சுத்தி நாலு பேர் இருப்பாங்க” என்றான்.

எனக்குக் கனவு குறித்து நீரில் அமிழ்ந்த பந்து போல ஒவ்வொன்றாக காட்சிகள் ததும்பி மேலெழுந்தன.

நான் யானையின் மீது அமர்ந்திருக்கிறேன். செம்பழுப்பும், கரிசலும் கலந்த நிறத்தில் ஓர் ஆறு. அதன் கரையில், யானை எழ, நான் விழ, ஒரு சிறிய விளையாட்டு. பிறகு ஆற்றிலிருந்து பிரிந்துசெல்லும் வண்டித்தடம்.

ஒரு குடிசை முன்பாக என் கனவு முடிந்தது. அக்குடிசை வீடு அமைப்பை இதற்கு முன்பு கண்டதேயில்லை. புகை மூட்டத்துடன் கிராமத்தின் தனித்த வீடு. அந்நிலமோ, அம்மண்ணோ, அம்மரங்களோ, அந்த நீர் நிரம்பிய ஆறோ நான் என் வாழ்வில் கண்டதில்லை. குடிசையின் மேற்கூரையில் புகை அரும்பி மேலெழுந்துகொண்டிருந்த நிலையில் நான் உறக்கம் விழித்தேன். துல்லியமாக நான் கனவில் கண்ட அந்த யானைதான் சுவற்றின் இருந்தது.

நான் மிகுந்த கலக்கத்துடன் தருணைப் பார்த்தேன். “சூப்பரா வரைஞ்சிருக்கேம்மா” என்றான்.

நான் கலவரத்துடன் எழுந்து அன்றைய தினப் பட்டியலுக்குள் என்னையும் தருணையும் பொருத்திக்கொள்ள ஆயத்தமானேன். நிறுத்தத்தில் கிழவர் என்னைப் பார்த்து ஏதோ காரணத்தோடு சிரிப்பது போலச் சிரித்தார். நான் உள்ளூர ஒருவித குழப்பத்தோடு கடந்துசென்றேன்…

நாளெல்லாம் என் நினைவில் அக்கனவும், அந்நிலமும் தொடர்ந்து வந்துகொண்டிருந்தது. எதாவதொன்றின் முனைபற்றி என்னை அதிலிருந்து வெளியேறாதவாறு பார்த்துக்கொண்டிருந்தன. நான் அவற்றிலிருந்து மீண்டுவர முயற்சித்துத் தோற்றுக்கொண்டிருந்தேன்.

அன்றைய இரவில் நான் மிகப்பெரிய மூங்கில் காட்டில் தூங்கிக்கொண்டிருந்தேன். கனவில் நான் பெண் அல்ல, ஆண் என்பதை உணர்ந்தேன். மேலும் எனக்கும் அந்த யானைக்கும் உள்ள பந்தம் கிட்டத்தட்ட இப்போதைய என் வயதில் ஓரிரண்டு வருடம் கூடக்குறைய இருக்கலாம். கனவில் நான் மிக மூப்படைந்திருந்தேன். அந்த இள யானை என் வயோதிக நடைக்கேற்ப மத்தகத்தை அசைத்தபடி மிக மெல்ல, கிட்டத்தட்ட தவழ்ந்தபடி வந்துகொண்டிருந்தது. அப்போது ஆற்றங்கரையிலிருந்து நாங்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்.

முந்தைய நாளைப்போலவே தருண் அதே செய்கையோடு சுவற்றைப் பார்த்தபடி இடுப்பில் கையூன்றிக் கொண்டிருந்தான். எனக்குக் கனவு வந்த நினைவேயில்லை. சுவற்றைப் பார்க்காமல் அவனை நோக்கி அதட்டி “சீக்கிரம் பல் தேய்க்கச் சொன்னேன்” திடீரெனச் சாவி குடுத்த பொம்மை போல என்னைத் திரும்பிப் பார்க்காமல் பாத்ரூம் நோக்கி ஓடிவிட்டான்.

நான் சுவற்றைப் பார்க்கலாமா வேண்டாமா என்ற மனப்போட்டியில் பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தேன். சித்திரத்தின் முதல் கோட்டிலிருந்து எனக்கு நினைவு வர ஆரம்பித்தது. அது ஒரு கிராமத்துச் சாலை. இருபுறமும் ஆளுயரப் புற்கள் சூழ்ந்த ஓடைப்பாதை. நிழல் போன்ற வெயில் பெண்டுலம் போலவும் ஆனால் மேலும் கீழும் அசைந்தபடி முன்செல்லும் யானை. அதன் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் ஒருவரின் படம். நேற்று கண்ட அதே குடிசையின் வாசலில் சித்திரம் நிறைவுற்றது.

மிக நிச்சயமாக நானேதான் இப்படத்தை வரைந்திருக்க முடியும். தருணுக்கு இத்தகைய கோடுகள் கைவர சாத்தியமேயில்லை. அதெப்படி இந்த ஓவியம் வரைந்ததாக நினைவின் ஒரு துளிகூட இல்லாமல் போனது. ஒருவேளை எனக்குள் பேய் புகுந்துகொண்டதா என எண்ணிக்கொண்டேன். பேய் ஓர் எல்லைவரைதான் பொறுமை காக்க முடியும். என்னைப்போல துயரங்களை அது பார்த்தால் வணங்கி விடைபெற்றுவிடும். பேய் அல்ல இது. வேறு ஏதோ ஒன்று,

இன்று அலுவலகம் முடிந்ததும் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். முன்கூட்டியே கிளம்பினேன். முதல் நடைத்திறப்பில் தரிசித்துவிடலாம். பெருமாள் கோயிலில் எப்போதும் கூட்டம் அதிகமாக இருந்ததே இல்லை. நல்ல விஸ்தாரமான கோயில். எவருக்கும் தொந்தரவில்லாமல் தூண் ஓரமாக இடம் தேர்ந்து அமர்ந்தபடி கண்ணை மூடித் தியானிக்க ஆரம்பித்தேன்.

கண்விழித்தபோது என் எதிரே சிரம் தாழ்ந்து கண்களெல்லாம் நீர் ஊற்றெடுக்க ஒருவர் கைகூப்பியபடி நின்றிருந்தார். அவர் நின்றிருந்த நேர் எதிர்ப்புறம் மூலக்கடவுள் வீற்றிருந்தார். நான் பதறிக்கொண்டு எழ முற்பட்டேன். அவர் எதையும் உணரும் நிலையில் இல்லை. என் தோள்பையை எடுத்துக்கொண்டு விடுவிடுவென நடந்தேன். வெளியில் வந்ததும் கோயில் பிரகார உஷ்ணக்காற்று மறைந்து ஈரக்காற்று முகத்தில் பட்டதும் ஒரு தெளிவு வந்தது. செருப்பை மாட்டிக்கொண்டபடி மணி பார்த்தேன். பேருந்தைப் பிடித்தால் தருணைக் கூட்டி வர மிகச்சரியாக இருக்கும்.

வெளியில் இரு ஆந்திர ஜோசியக்காரர்கள் நின்றிருந்தனர். மாட்டினால் எதாவது பேசி மனதைக் கரைத்துப் பரிகாரம் வரை இட்டுச்சென்று செலவு வைத்துவிடுவார்கள். அலுவலகத்தில் வேலை செய்யும் தேவகி இதுபோல ஒருமுறை ஏமாந்திருந்தாள். கவனமாகத் தவிர்க்க எண்ணி விடுவிடுவென நடந்தேன். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்.

“எங்க கஜேந்திரன இன்னும் காணும். எதாச்சும் கஸ்டமர் பிடிச்சிட்டானா” எனத் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. என் முன்னே நின்று கரம் கூப்பியவரின் நெற்றிக் குங்குமமும் சந்தனமும், பேசிக்கொண்டிருந்த இருவரின் நெற்றிகளும் ஒன்றுபோல இருந்தன. இவர்களுடன் சேர்ந்தவர்தான் என் முன் கை கூப்பியிருந்தவர். அவரிடம் பேசியிருக்கலாம் எனத்தோன்றியது.

அன்றிரவு நிச்சயம் எனக்குக் கனவு வரும் என்று நம்பினேன். நான் அக்கனவுகளை மெல்ல எனக்குள் அனுமதிக்க ஆரம்பித்தேன். அக்கனவுகளின் வழி ஏதோ ஒரு பாதை உருவாகி வந்தது போலிருந்தது. அதை அனுமதிப்பதின் வழியாகத்தான் அப்பாதையை நான் அறிய முடியும்.

முந்தின நாட்களின் படபடப்புகள் ஏதுமின்றி நான் உறங்கச்சென்றேன்.

அன்றிரவு நான் கண்ட கனவு முன்பு கண்டது போலத் தெளிவில்லாத ஒன்றைப் போல் அல்லாமல் மிக நேர்த்தியாக இருந்தது, இன்னும் சொல்லப்போனால் அது கனவினைபோல் அல்லாமல் நிஜத்தினை ஒத்திருந்தது. என் கண்களும் அந்த யானையின் கண்களும் எதிரும் புதிருமாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நீண்ட நேரம் இருந்தன. நாங்கள் அசையவே இல்லை. மிக நீண்ட பிரிவை எதிர்பார்த்தபடி ஆசை தீரப் பார்த்துக்கொண்டிருந்தோம்.

அன்றைய அதிகாலையின் சித்திரத்தை வழக்கம்போல தருண் எனக்குக் காட்டினான். அந்தச் சித்திரத்தைப் பார்க்கும் ஆவல் எனக்கில்லை. மேலும் எனக்கு அச்சித்திரம் என்னவாக இருக்கும் என நன்றாக நினைவிருந்தது. கண்களை மூடிக்கொண்டு சித்திரத்தின் முன்பு நின்று கொண்டேன். மெல்ல கண்களைத் திறந்து பார்த்தபோது நான் நினைத்ததுதான் சுவற்றில் தீட்டியிருந்தது,

ஒரு யானையும் தளர்ந்த ஒரு மனிதனும் நேருக்கு நேராக நின்று ஆதுரமாகப் பார்த்துக்கொள்ளும் காட்சி அது,

எனக்கு ஒருவாறாக அக்கனவுகள் அளிக்கும் சித்திரம் புரிய ஆரம்பித்தது. பல் சிகிழ்ச்சை நிறைவடைந்த தினத்தில் இருந்துதான் இக்கனவுகள் துளிர்க்க ஆரம்பித்தது. அன்று மாலை அலுவலகம் முடிந்த உடன் நான் அந்த கிளினிக் வாசலில் நின்றிருந்தேன்.

ரிசப்ஷனிஸ்ட் பெண் என்னைப் பார்த்ததும் திகைத்தாள்.

“வேறு ஏதேனும் தொந்தரவு இருக்கிறதா? டாக்டரை இப்போது பார்க்க முடியாது” என்று சொன்னாள்.

“எனக்கு எந்தத் தொந்திரவும் இல்லை. ஆனால் உங்களிடம் பேச வேண்டும். இங்கே அல்ல. வெளியில் நான் காத்திருக்கிறேன்” என்றேன்.

அவள் புரியாதவளாகக் குழம்பி “எதுவாக இருந்தாலும் இங்கேயே கேளுங்கள்” என்றாள்.

நான் காத்திருப்பதாகச் சொன்னதும் அவள் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். இடையிடையே நான் வெளியில் அமர்ந்திருக்கிறேனா எனப் பாசாங்கு செய்வதுபோல வந்து பார்த்துச்சென்றாள். கிளினிக் மூடும் முன்பாக டாக்டர் வெளியேறிச் சென்றபோது ஒருநொடி என்னைக் கவனித்துப் பின் இயல்பாகக் கடந்துவிட்டார். அப்பெண் சொல்லியிருக்கக் கூடும். டாக்டரிடம் எனக்குத் தேவைப்படும் தகவல் கிடைக்காது என்பதால் அவரைத் தவிர்த்தேன்.

அவள் வந்தாள். அவசரகதியில் “இப்ப சொல்லுங்க என்ன பிரச்சினை?” என்றாள். நான் சுருக்கமாகச் சிகிழ்ச்சைக்குப் பின்பான கனவுகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன்.

அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. “டாக்டரிடம் பேசுங்கள்” என்றாள்.

“டாக்டரிடம் வேண்டாம். எனக்கு ஒரு தகவல் வேண்டும்” என்றேன்.

“என்ன தகவல்?” என்றாள்.

“இப்பல் எங்கிருந்து, எப்படி, தயாரித்து இங்கு வருகிறது என்று கேட்டேன்.

தயக்கத்துடன் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பியபடி “மேக்சிமம் எல்லா பற்களும் கொரியாவில் இருந்து வரும். அதுக்கும் மேல் எனக்குத் தெரியாது” என்றாள்.

“யார் அனுப்புவது? கம்பெனி, சேல்ஸ்மேன், விலாசம் ஏதாவது கொடுக்க முடியுமா?” என்றேன்.

“அதெல்லாம் டாக்டர்கிட்ட பேசிக்குங்க, எனக்குத் தெரியாது” எனச்சொல்லி விடுவிடுவென நடக்க ஆரம்பித்தாள்.

எனக்கு அக்கனவுகள் தினமும் வர ஆரம்பித்தன. என் அறையின் சுவர்கள் ஒரு இடம் விடாமல் எல்லா இடத்திலும் சித்திரங்கள் முளைத்திருந்தது.

அச்சித்திரங்களை முழுதாக அறியும்பொருட்டுக் காண்கையில் ஒரு கிராமமும் சில மனிதர்களும், ஆற்றுப்படுகையும், தளர்ந்து முதிர்ந்த ஒரு கிழவனும், புற்கள் வேய்ந்த ஒரு குடிசைவீடும் தூரத்தில் மலைத்தொடர்களும் கொண்ட ஒரு கிராமம். இதில் நான் எவ்விதத்திலும் தொடர்புடையவள் அல்ல. மேலும் அக்கிராமமும் மனிதர்களும் நான் வாழ்வில் முன்பு கண்டறியாதவை. அது இந்தியக் கிராமம் போன்ற அமைப்பில் இல்லை. அம்மனிதர்களும் இந்தியர்கள் அல்ல.

நான் ஒரு மனநல மருத்துவரைப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தேன். அவருக்கு நான் சொன்ன எதுவும் புரியவில்லை.

“சுவற்றில் மோதும்போது தலையில் அடிபட்டதா?” எனக் கேட்டார்.

“தலை சுவற்றில் மோதவில்லை. எனக்கு மூளைப் பிசகும் இல்லை” எனக் கத்தினேன்.

அவர் என்னை சாந்தமாகப் பேசுமாறு கனிவுடன் கேட்டார்.

எனக்கு என்னவோ போல இருந்தது,

நான் அந்தச் சித்திரங்களைப் பார்க்கலாமா” என்றார். சிலவற்றை என் போனில் புகைப்படம் எடுத்திருந்தேன்.

பார்த்தவர் நன்றாக வரையப்பட்டிருப்பதாகச் சொன்னார்.

இன்னொரு கவுன்சலிங் வரச்சொன்னார்.

எனக்கென்ன பிசகு? நான் ஏன் இன்னொருமுறை கவுன்சலிங் வரவேண்டும். அங்கிருந்து கிளம்பினேன்.

மறுநாள் மாலை கிளினிக் ஒட்டியிருந்த காப்பிக்கடையில் அமர்ந்து அப்பெண் வேலை முடிந்து வரும்வரை காத்திருந்தேன். அவள் என்னைக் கவனித்ததும் துணுக்குற்று வேக நடை போட்டாள். நான் அவளைப் பின்தொடர்ந்து எனக்கு உதவுமாறு பணிவுடன் கேட்டேன்.

எவ்விதத்தில் நான் உதவ முடியும் என்று தெரியவில்லை. உதவும் எண்ணமும் எனக்கு உண்டு. ஆனால் உங்கள் பிரச்சனை என்ன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றாள்.

“பற்கள் செய்து தரும் நிறுவனத்தின் பெயரும், சேல்ஸ்மேன் பெயரும் வேண்டும்” என்றேன்.

“அது கஷ்டம். இதுபோல யாருமே முன்பு கேட்டதில்லை. டாக்டருக்குதான் அவ்விவரமெல்லாம் தெரியும்” என்றாள்.

நான் இயலாமையுடன் முகத்தை வைத்துக்கொண்டேன். அவள் முகம் சற்றுக் கனிந்தது.

விடைபெறும் முன்பாக அவள் சொன்னாள். “நாளை மாலை இதே நேரம் வந்தால் நான் உதவி செய்கிறேன்” என்றாள். நான் அவள் கையைப் பற்றி நன்றி கூறினேன்.

அன்றைய இரவின் கனவில் நான் தீட்டிய சித்திரத்தின் முடிவில் யானை ஒரு கூண்டுக்குள் அடைபட்டிருந்தது. மேலும் அது வேறொரு வனத்தின் நடுவில் இருந்தது, எனக்கு ஒன்றுமே புரியவில்லை. சுவற்றில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சித்திரங்களின் காட்சிகள் எனக்குத் தலைவலியை உண்டுபண்ணின. நான் இதிலிருந்து வெளியேற வேண்டும் என நினைத்துக்கொண்டேன். தருண் இப்போதெல்லாம் என்னிடம் பேச அஞ்சினான். ஓரிருமுறை நான் தூக்கத்தில் சுவர்ச்சித்திரம் வரைவதை அவன் பார்த்ததாகச் சொன்னான். எனக்குக் கனவுகள் நினைவிருந்தது போல நானே அதை வரைந்தது நினைவில் இல்லாமல் போனது. தவிர எனக்குச் சித்திரப் பழக்கமெல்லாம் ஒருநாளும் இருந்ததில்லை. பள்ளி நாட்களில்கூட வெகு சுமாராக வரைபவள்.

மறுநாள் ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பெயரும் போன் நம்பரும் எழுதித் தந்தாள். நான் கொடுத்ததாக யாரிடமும் சொல்லவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டாள். அவ்விதமே உறுதி அளித்து அவளுக்கு நன்றி கூறினேன்.

அவள் எழுதிய பெயர் பார்க் ஊன் சாங். கொரியன். போன் நம்பர் எழுதியிருந்ததை வைத்துத் தொடர்புகொண்டு சந்திக்க நேரம் கேட்டேன். “என்ன விஷயமாக?” என்றான்.

எனக்கு என்ன விஷயமாகப் பேசுவது என்று தெரியவில்லை. “இந்திய நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி” என்றேன். “மும்பையா?” என்றான். இல்லை தமிழ்நாடு என்று சொல்லி மேலும் பேச்சை வளர்க்காமல் இது பெரிய ஆர்டர். நேரில் பேசவேண்டும் என்றதும் ஒப்புக்கொண்டான்.

முதலில் அவன் என்னை அலட்சியமாகவே நடத்தினான். என்னை விற்பனைப் பிரதிநிதியாக அவன் நம்பவில்லை என்று அறிந்ததும் என் கடந்த ஒருமாத நிகழ்வுகளைச் சொல்ல ஆரம்பித்தேன். பியர் குடித்துக்கொண்டே சுவாரசியமில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தவன் ஒரு கட்டத்திற்குப் பிறகு கவனமாகக் கேட்க ஆரம்பித்தான். உள்ளே சென்றுகொண்டிருந்த பியர் அவனை மெல்ல இளக்கியது.

“என் மூலமாக என்ன வேண்டும்?” என்றான் முடிவில். அவன் கேட்கும் தோரணையில் எவ்வித உதவியும் செய்யத் தயாராக இருப்பதைப் போலிருந்தான்.

உங்கள் நிறுவனத்தில் பற்களை எங்கு தயாரிக்கிறீர்கள்? அந்த தந்தங்கள் எங்கிருந்து வருகிறது? அது நியாயமான வழியிலா, சட்ட விரோதமாகவா என்பது குறித்து எனக்கு அக்கறையில்லை. எந்த விதத்திலும் அதுகுறித்த விஷயங்களை யாரிடமும் பகிரமாட்டேன். எனக்கு இக்கனவுகளில் இருந்து விடைபெற வேண்டும்.

அவன் மெல்ல புன்னகைத்தான். அவன் சிரிக்கும்போது கண்கள் இரண்டும் மறைந்து போனது. யோசனை ஏதுமின்றிச் சொல்ல ஆரம்பித்தான்.

“பொதுவாகத் தந்தம் எங்களுக்கு இரண்டு நாடுகளில் இருந்து வருகிறது, ஒன்று கிழக்காசியா, இதில் தொண்ணூறு சதவீதம் தாய்லாந்து, பத்து சதவீதம் இலங்கையும் இந்தியாவும். ஆனால் மிக அறிது. ஆப்பிரிக்காவில் இருந்து வருவது இரண்டாவது. இதில் கூடுதல் செலவும் சிக்கல்களும் நிறைந்தது. ஆகவே மிக நிச்சயமாகத் தாய்லாந்து தந்தங்கள்தான் பெரும்பாலானவை.

அவை சிலநேரம் முறைகேடாக வருவதுண்டு, சிலநேரம் சட்டவிதிகளின்படி வருவதுண்டு. தயாரிப்பு நிறுவனங்களுக்கு அதைப்பற்றிய கவலை இல்லை. வெளிப்புறம் சட்டத்தின் உட்பட்டே செயல்பட வேண்டிய நிர்பந்தம். ஆனால் உங்கள் விஷயம் குறித்துத் தீர்மானமாக எதையும் உறுதியுடன் சொல்ல இயலாது. ஆனால் ஒருவிதத்தில் உதவ முடியும்” என்றான்.

“என்ன?” என்றேன்.

“எந்தத் தேதியில் உங்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டது. அதன் அளவு விவரங்கள் கொடுத்தால் ஓரளவு என்னால் சொல்ல முடியும். ஆனால் அதில் எந்தளவு உண்மை இருக்கும் என்பதை என்னால் சொல்ல முடியாது. ஓரளவு யூகம்தான்.”

அவ்விவரங்களை அப்போதே எழுதிக்கொடுத்தேன். ஒருவாரம் கழித்துத் தொடர்புகொள்வதாகச் சொல்லி விடைபெற்றான்.

நான் சித்திரங்களை வரைவதை நிறுத்தி எழுத்துக்கள் எழுத ஆரம்பித்தேன். சித்திரம் வரையும் அளவுக்குச் சுவற்றில் இடமில்லை. அந்த எழுத்துக்கள் எதுவுமே நான் அறிந்த எழுத்துக்கள் அல்ல. தொடர்ச்சியாக ஒரே ஒரு சொல்லைத்தான் இந்த தினங்களில் நான் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரே வடிவைக் கொண்டிருந்ததால்தான் நான் அதை ஒரே சொல் எனக் கருதிக்கொண்டிருந்தேன். அதை ஒரு புகைப்படம் எடுத்துச் சென்று அலுவலகத்தின் அருகில் இருந்த சாப்பாட்டுக்கடையில் காட்டி இது என்ன என்றேன்.

தாய்பாஷையில் எழுதியிருக்கு என்றார்கள். ஓரளவு நான் யூகித்ததுதான். யாருக்காவது படிக்கத் தெரியுமா என்றேன். இங்கே யாருக்கும் படிக்கத் தெரியாது. ஆனால் அட்டைப்பெட்டி எடுக்கும் கிழவர் தாய்லாந்துக்காரன். சாயங்காலமாக இந்தப்பக்கம் செல்வான் அவனிடம் கேட்டால் தெரியும் என்றார்கள்.

பத்துவெள்ளி அவரிடம் கொடுத்தேன். “மாலை இந்த வழியாகச் செல்லும்போது கூப்பிட்டு டேபிளில் அமர வைத்துக் காபி கொடுங்கள். பிறகு என்னை அழையுங்கள்” என எனது போன் நம்பரைக் எழுதிக்கொடுத்துவிட்டு வந்தேன். வேலை ஒன்றும் ஓடவில்லை. என் கண்கள் அழைப்பு வரும் என போனை பார்த்துக்கொண்டே இருந்தது.

அலுவலகம் முடியும் முன்பாகவே போன் வந்தது. நான் கிட்டத்தட்ட அக்கடைக்கு ஓடினேன். அழுக்குச்சட்டையும் தலையிலிருந்து இரண்டு அங்குலம் நீண்ட வட்டக்குல்லாயும் வாயில் ஃகரம் சிகரெட்டும் புகைத்தபடி ஓர் ஆள் அமர்ந்திருந்தார். நான் அவரிடம் புகைப்படத்தைக் காட்டி “இதில் என்ன எழுதி இருக்கிறது” என்று கேட்டேன்.

கண்களின் அருகேயும், தூரமாகவும் அத்துண்டுச் சீட்டினை வைத்துப் பார்த்துவிட்டு தீர்மானமாக “தத் க்வான்” என்றார்.

அப்படியென்றால்?

“இது பெயராக இருக்கலாம், ஊராக இருக்கலாம். எப்படி வேணாலும் இருக்கலாம். ஆனால் ஊர் பெயராக இருக்க வாய்ப்பு அதிகம்” என்றார். அவரை உச்சரிக்கச்சொல்லி ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டேன்.

இணையத்தில் தேடியபோது அது ஓர் ஊர்ப்பெயர் என்று நீண்ட தேடலில் அறிய முடிந்தது. அது ஓர் யூகம் மட்டுமே. அது ஒரு நபரின் பெயராக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் இன்னும் சற்றுப் பொறுத்திருந்து வரப்போகும் கனவுகளின் அடிப்படையில் முடிவெடுப்போம் என்று எண்ணிக்கொண்டேன்.

கொரியனிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. கச்சாப்பொருள் எவ்வழியில் வந்தது என நீங்கள் அறிய வேண்டியதில்லை. ஆனால் அது தாய்லாந்து நாட்டிலிருந்து, இன்னும் சொல்லப்போனால் தென்பகுதியான சியாங் ரை என்ற இடத்திலிருந்து வந்திருக்கலாம். இதற்கு மேல் என்னால் உதவ முடியாது. என்னைத் தொடர்புகொள்ள வேண்டாம் என்று எழுதியிருந்தது.

ஊர்ப்பெயரை நான் குறித்துக்கொண்டேன். நூலகத்திற்குச் சென்று தேடியதில் வரைபடங்கள் வழியாகவும், புத்தகங்கள் வழியாகவும் சில தகவல்களை ஒன்று சேர்த்துப் பார்த்தபோது மிக நிச்சயமாக நான் சுவற்றியில் எழுதியது ஒரு ஆளின் பெயர் அல்ல. அது ஒரு ஊரின் பெயர் என அறிந்துகொண்டேன். என் பற்கள் அந்த ஊரைச் சேர்ந்த யானையின் தந்தத்தில் செய்யப்பட்டதாகக்கூட இருக்கலாம். எனக்குத் தெரியவேண்டிய தகவல்கள் இன்னும் மிச்சமிருந்தன. நிச்சயமாகக் கனவுகள் வழி அத்தகவல்கள் பூர்த்தியடையும் என்று நம்பினேன். எல்லாம் முடிவாகும் பட்சத்தில் நான் அங்குக் கிளம்புவது என்று உறுதிகொண்டேன்.

அன்றிரவு கனவில் நான் வழக்கமாகக் காணும் ஒரு குடிசையின் முன்பு நின்றிருந்தேன். ஆனால் உள்ளே செல்லவில்லை. வீட்டின் உள்ளே ஆள் இருப்பதுபோலத் தெரியவில்லை. அவ்வீடு ஒரு குன்றின் சரிவில் மரத்தால் கட்டப்பட்டு மேலே புற்கள்கொண்டு வேயப்பட்டிருந்தது. முன்புறமும் இடவலப் பக்கங்களிலும் விஸ்தாரமான கட்டுத்தரை.

மறுநாள் நான் கிளம்ப ஆயத்தமானேன். தருணைக் கூட்டிச்செல்வது நல்ல யோசனையாகப் படவில்லை என்பதால் நாத்தனார் வீட்டில் விட்டுச்செல்ல முடிவெடுத்தேன். போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸ் சென்று எனது பாஸ்போர்ட் வேண்டுமென்று மனுசெய்தேன். ஆயிரத்தெட்டு கேள்விகளுக்குப் பிறகு நீண்ட கடிதம் எழுதி கையொப்பமிட்டு வாங்கிக்கொண்டு வீடடைந்தேன்.

என் பயணம் இரண்டு நாட்களுக்குள் முடிந்துவிடுமாறு திட்டமிட்டேன். அட்டை பொறுக்குபவர் என் உடன் வர சம்மதித்திருந்தார். பெரிய செலவில்லை. மொழி தெரியாத ஊரில் எப்படிப் பயணம் மேற்கொள்வது என்ற குழப்பம் நீங்கியது.

பாங்காக் சென்று அங்கிருந்து சியாங் ரை செல்லும் விமானத்தில் தரை இறங்கினோம். மூன்று மணிநேர கார்ப் பயணத்தில் பயா மங்ரை ஊரை அடைந்தபிறகு நான் செல்ல வேண்டிய இடத்திற்கு நானே வழிசொல்ல ஆரம்பித்தேன். காரோட்டி திடுக்கிட்டு என்னைப் பார்க்க ஆரம்பித்தார். “முன்பே இங்கு வந்திருக்கிறீர்களா?” என்றார். எல்லாம் நான் கனவின் வழி அறிந்த பாதைகள்.

ஆற்றுப்பாலத்தின் வழியான பயணத்தின் முடிவில் ஒரு குன்று ஏறிய திருப்பத்தில் நிறுத்தச் சொன்னேன். கார் உள்ளே செல்ல முடியாத இடத்தில் இருந்து நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அப்பாதை நான் கனவில் கண்ட வீட்டில் முடிவடைந்தது,

மிகுந்த ஆவலோடு நான் அவ்வீட்டினுள் சென்றேன். இடதுபுறத் தடுப்பிற்கு அப்பால் சிறு மேடையில் ஒரு வயதான உருவம் படுத்திருந்தது, மெல்ல அவர் முன் நின்றேன். எவ்வித சலனமும் இன்றி அவர் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் அவர் முகத்தை முன்பே அறிந்திருந்தேன். தரையிலிருந்து ஓரடி மேல் இருந்த மூங்கில் மேடையில் அவர் படுத்திருந்தார். நான் தரையில் அமர்ந்து அவர் கைகளைப் பற்றிக்கொண்டேன். ஏனோ என் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. அவரும் அழத்தொடங்கினார். அட்டை பொறுக்குபவருக்கு ஒன்றுமே புரியவில்லை. அவரும் அருகில் வந்து அமர்ந்துகொண்டார். என் கைப்பையிலிருந்து போனை எடுத்து என் அறையின் சுவர்களில் வரைந்திருந்த படங்களை ஒவ்வொன்றாக அவருக்குக் காட்டிக்கொண்டிருந்தேன்.

எழ முயன்று தோற்றுப்போய்க் கலங்கிய கண்களுடன் என் கைகளை மேலும் அழுந்தப் பற்றிக்கொண்டார். எனக்குப் புரியாத மொழியில் அவர் பேச ஆரம்பித்தார். நான் அதைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

செய்தியறிந்த அக்கம் பக்கம் வசிப்பவர்கள் வீட்டு முன்பாகக் கூடினார்கள். அவர்களுக்கு என்ன ஏதென்று புரியவில்லை.

கிழவர் பேசியதை அட்டை பொறுக்குபவர் எனக்கு மொழிமாற்றம் செய்து சொல்ல ஆரம்பித்தார்.

பெரியவருக்கு ஒரு யானை இருந்தது. ஒன்றல்ல இரண்டல்ல முப்பத்தி மூன்று வருடங்கள். அந்த யானையின் பெயர் பத்தி ஹர்ன். அவ்வார்த்தைக்கு தாய் பாஷையில் “அற்புதம்” என்று பொருள். யானையைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. மிகச் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தார். யானையுடன் மட்டுமே அவரைப் பார்க்க முடியும். யானை இல்லாமல் எவரும் அவரைப் பார்த்ததில்லை. ஒருமுறை வீட்டை விட்டு யானையுடன் பயணம் கிளம்பினால் வீடு சேர மூன்று மாதங்களாகுமாம். ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு அடுத்த பயணம். இப்படிப் போய்க்கொண்டிருந்த வாழ்வில் சில மாதங்களுக்கு முன்பு அரசாங்க அதிர்காரிகள் என்று சொல்லி ஒரு லாரியுடன் வந்து யானையைப் பிடித்துக்கொண்டு போனார்களாம். அம்முறை பயணம் சென்றவர் யானையின்று தனியாக வந்ததை கிராம மக்கள் கண்டிருக்கிறார்கள். அப்போது படுக்கையில் விழுந்தவர் அப்படியேதான் இருக்கிறார்.

என்னால் இப்போது முழுதாக ஒரு முடிவுக்கு வர முடிந்தது. என் கனவுகளுக்கும், சித்திரங்களுக்கும் பின் ஏதோ ஒரு கண்ணி இவருடன் முடிச்சு போட்டிருந்தது. ஒரு சிறிய துகள் ஒருவரை கடல் கடந்து இழுத்துவைந்து இங்கே நிறுத்தியிருக்கிறதை நம்பவே முடியவில்லை. முன் பின் அறியாத அம்மனிதனுடன் எனக்கு அன்பு பெருகியது. இரவு முழுக்க நான் அவர் கைகளைப் பற்றியபடி இருந்தேன். சின்ன பீங்கான் குவளையில் கஞ்சி புகட்டினேன். இரவு முழுக்க நிறைய பேசியபடி இருந்தார். ஏதோ ஒரு நொடியில் நான் அவர் கைகளைப் பற்றியபடியே அமர்ந்தநிலையில் உறங்கிப்போனேன்.

விடியலில் கண்விழித்தபோது அவர் சலனமற்றிருந்தார். அவர் கைகளில் இருந்து என் கைகளை விடுவிக்கவே முடியாதபடி மிக இறுக்கமாகப் பற்றியிருந்தது.

உமா கதிர்

வாசகர். சிறுகதைகள் எழுத முயற்சிப்பவர். இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ளவர்.

Share
Published by
உமா கதிர்

Recent Posts

தீரா ஆற்றல் : இலக்கியம்-அறிவியல்-புனைவு

தொழில்நுட்பத்தின் பேராற்றலின் முன் நாம் மூச்சுத்திணறி நிற்கும்போது அதன் அரசியலை, ஆக்கிரமிப்பை, உளவியல் நெருக்கடியை, சூழல் நெருக்கடியை விரிவாகப் பேசுவதற்கு…

2 years ago

அரூ அறிவியல் சிறுகதைப் போட்டி #4 – முடிவுகள்

ஒரு புனைவின் ஆதாரக் கேள்வி வாசிப்பவருக்கும் சரி எழுதுபவருக்கும் சரி, ஏதோவொரு மாற்றத்தை உருவாக்குகிறதா, முன்பறியா இடங்களுக்கு இட்டுச்செல்கிறதா, நமது…

2 years ago

டிராட்ஸ்கி மருது ஓவியத்தொடர் – 10

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கற்பனை உலகிலிருந்து ஐந்து சித்திரங்கள்

2 years ago

அடாசு கவிதை – 16

க்வீ லீ சுவி வரையும் அடாசு கவிதை தொடரின் 16ஆம் பாகம்.

2 years ago

கவிதையின் மதம் 12: வரலாறும் சூழலும் அரைகுறை உள்ளொளியும்

அன்பு நிகழ்த்தும் நம் ஒவ்வொரு அன்றாடச் செயல்களுமே சடங்குகள்தாம் அல்லவா?

2 years ago

திரைகடலுக்கு அப்பால் 7: 1984

அபாய மணி ஒலிக்கும் காரியத்தை வரலாறு நெடுக ஏதோ ஒரு நபர் செய்துகொண்டுதான் இருக்கிறார். அவர் அதைத் தன் கலையின்…

2 years ago