நீளும் எல்லைகள் – 1: விசும்பு – அறிதலின் தொடக்கத்தில்

9 நிமிட வாசிப்பு

தமிழில் அறிவியல் புனைதைகள் என்று எழுதப்படும் பல கதைகளில் திகிலூட்டும் அம்சங்களே மேலோங்கி இருக்கின்றன. மற்றொரு வகைக் கதைகளை டான் பிரவுன் (Dan Brown) தன்மை கொண்டவை என்று சொல்லிவிடலாம். டான் பிரவுனின் நாவல்கள் ஓர் அதிநவீனத் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மரபுப் புதிர் இரண்டையும் இணைத்துப் பின்னப்படுகிறவை. தமிழிலும் இதையொட்டிச் சில நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. டான் பிரவுனின் புனைவுகள் புதிர்க் கதைகளே. அந்தப் புதிரை அபாயம் நிறைந்ததாக மாற்ற அறிவியலையும் சுவாரஸ்யமானதாக மாற்ற ஒரு மரபான விஷயத்தையும் டான் பிரவுன் எடுத்துக்கொள்கிறார். இந்திய அளவில் பிரபலமான வணிக நாவல்கள் சிலவும் டான் பிரவுனின் இந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்டிருப்பதைக் காணலாம்.

தொல் பழங்காலம் எப்போதுமே கற்பனைக்கும் மிகை ஊகங்களுக்கும் இடமளிப்பதாகவே உள்ளது. பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் அப்படியான மிகை ஊகங்களை நிகழ்த்த இயலாது. ஒரு புனைவெழுத்தாளன் சாதாரணமான வரலாற்று ஊகங்களை நிகழ்த்தவே வரலாற்றில் ஆழ்ந்த வாசிப்பும் சமூக இயங்குமுறை குறித்தப் புரிதலும் அவனுக்கு அவசியமாகிறது. அறிவியலிலும் அப்படியான ஊகங்கள் அறிவியலின் அடிப்படை தெரியாமல் செய்துவிடக்கூடியதல்ல. ஆனால் டான் பிரவுனை அடியொற்றி எழுதப்படும் புனைவுகள் தொல் பழங்காலம் குறித்த மிகையான ஊகங்களை முன்வைக்கின்றன. ஒரு விவாதிக்கத்தகுந்த ஊகம் என்ற நிலையில் இருந்து இந்த மிகை ஊகங்கள் கற்பனை என்ற தளத்திற்கு நகர்ந்து அறிவியல் புனைவுகள் என்ற பாவனையில் முன்வைக்கப்படும் பல கதைகள் வெறும் மாயாஜாலக் கதைகளாகிவிடுகின்றன.

அறிவியல் புனைவுக்குத் தொல்பழங்காலம் அல்லது மர்மம் என்கிற அம்சங்கள் ஏன் தேவைப்படுகின்றன என்ற கேள்வியில் இருந்து தொடங்கலாம். பயன்பாட்டு அறிவியலின் நுகர்வோர் என்ற அளவில் நமக்குச் சேவை அளிக்கும் ஒரு துறையாகவே அறிவியல் நமக்கு அறிமுகமாகிறது. இந்தக் கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த அலைபேசியின் இயங்கு முறை எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்கிற எந்த அவசியமும் இல்லை. எந்தக் கருவியை உருவாக்கிய அறிவியல் சூத்திரமும் நாம் இறுதியில் அழுத்த வேண்டிய பொத்தானை நமக்குத் தந்துவிடுவதால் நாம் செயல்படும் துறைக்கு வெளியே இருக்கும் அறிவியல் குறித்து நாம் பெரும்பாலும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அப்படியான ஒரு சிந்தனையைத் தூண்டுவதால் அறிவியல் புனைவுகளில் இயல்பாகவே ஒரு மர்மம் கூடிவிடுகிறது. அறிவியல் புனைவுகள் நாம் ஏற்கனவே மங்கலாக அறிந்த அல்லது துளியும் அறியாத ஒரு வாழ்க்கைச் சித்திரத்தை நமக்குக் காட்டுவதால் அவற்றின் புதுமை மர்மமாக வெளிப்படுகிறது. வரலாற்றுப் புனைவுகள் பொதுப்புத்தியில் உறைந்திருக்கும் சித்திரங்களைக் களைத்து அதிர்ச்சியையோ பரவசத்தையோ உருவாக்குவது போல. அறிவியல் புனைவுகளின் முன்னோடி ஆக்கங்களில் ஒன்றான எச்.ஜி.வெல்ஸின் டைம் மிஷின் (The Time Machine) தொடங்கி இந்த மர்மத்தன்மை தொடர்வதை உணர முடியும்.

இரண்டாவதாக நம் புனைவுகளில் வெளிப்படும் தொல்பழங்கால ஏக்கம். ஒருவகையில் தமிழில் எழுதப்படும் அறிவியல் புனைவுகள் தொல்பழங்காலம் மீதான கவனம் செலுத்துவது ஆரோக்கியமான விஷயமாகவே படுகிறது. எந்தவொரு பண்பாடும் தன்னுடைய அறிவுத்துறைகளில் இருந்தது என்ன என்பதைத் துழாவிப் பார்ப்பது சரியான விஷயமே. ஆனால் நம் மரபு சிக்கலானது. மிக நீண்ட தொடர்ச்சி உடையது. ஆனால் முறையான வரலாற்றுப் பதிவுகள் அற்றது. நம்முடைய அறிவுத்துறைகளிலும் இந்த நிலையே நிலவுகிறது. இந்தத் தெளிவின்மை உருவாக்கும் உயர்வுணர்ச்சி அல்லது தாழ்வுணர்ச்சியினால் செய்யப்படும் மிகைக்கற்பனைகள் அறிவியல் ஊகங்களாக மாற்றப்பட்டு அதுவே பொதுபுத்தியில் உறைந்துபோய் அந்தப் பொதுப்புத்தி சார்ந்த புனைவுகளே நிறையவும் வாசிக்க கிடைக்கின்றன.

மீண்டும் டைம் மிஷினுக்கே செல்லலாம். அந்த நாவலின் தொடக்கத்தில் நீளம் அகலம் உயரம் என்ற அனைவரும் அறிந்த பரிணாமங்களுடன் காலம் என்ற நான்காவது பரிணாமத்தைக் காலப்பயணி கற்பனை செய்கிறார். அந்தக் கற்பனையில் இருந்து ஓர் எந்திரத்தை உருவாக்கி எதிர்காலத்துக்குச் செல்கிறார். ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட அந்த நாவலின் எதிர்காலம் குறித்த பல ஊகங்களை இன்று நாம் மறுத்துவிடலாம் என்றாலும் காலப்பயணம் என்ற அடிப்படை அறிவியல் ஊகத்தை நம்மால் அவ்வளவு எளிதில் கைவிட முடியாது. ஏனெனில் அந்த ஊகத்தில் இருப்பது மனிதனைத் தொடர்ச்சியாகப் புவியோடு இணைத்துக் கட்டும் தொடர்நிகழ்வுகளால் ஆன நிகழ்காலத்தில் இருந்து தப்பிப்பதற்கான ஏக்கம். மனிதக் குலத்தின் நிரந்தர ஏக்கம். அந்த ஏக்கத்துக்கான தீர்வை மதம் அறிவியல் என எது முன் வைத்தாலும் நாம் அதற்குக் கவனம் கொடுக்கவே செய்வோம். வெல்ஸ் தன் நாவலில் எடுத்துக்கொள்ளும் ஊகம் அன்று மேற்கில் பரிணாம இயற்பியலில் விவாதிக்கப்பட்ட ஒன்றாகவே இருக்கிறது. நமக்கான பிரத்யேக அறிவியல் புனைவுகளை எழுதுவதற்கு நம்முடைய அறிவுத்துறைகளில் புழங்கிய ஒரு கேள்வியில் இருந்து ஊகத்தை எடுக்கலாம் என்கிற எத்தனத்தில் இருந்து எழுதப்பட்டவையாக விசும்பு தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் இருக்கின்றன.

அறிவியல் புனைவுகளுக்கு உரிய புதுமையான வாழ்க்கை நோக்கும் நம் அறிவுத்துறைகளில் விவாதிக்கப்படுகினறவற்றில் இருந்து புனைவுக்கான ஊகத்தை எடுத்திருப்பதும் தமிழில் எழுதப்படும் பெரும்பாலான அறிவியல் புனைதைகளில் இருந்து இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் பிரித்து நிறுத்துகின்றன. புதுமை மற்றும் ஒரு சாத்தியமான ஊகம் என்கிற இரண்டிலிருந்தும் இக்கதைகள் முன்னகர்ந்து சில நிரந்தரமான சிக்கல்களுக்கு அல்லது முரண்களுக்கு விடைகாண முயல்கின்றன.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் இயங்கினாலும் இக்கதைகள் அனைத்தையும் பிரபஞ்சத்தின் முன் மனிதனால் அறியப்பட்டுத் தொகுக்கப்பட்ட அறிவியல் என்ற அறிதல் முறை திகைத்து நிற்பது என்று வகுத்துவிடலாம். அல்லது பிரபஞ்சத்தின் செயல்திட்டத்திற்குத் தன்னை ஒப்பு கொடுத்து விலக வேண்டிய புள்ளியில் சென்று நிற்கிற கதைகள் என்று சொல்லிவிடலாம்.

எதிர்காலத்தை முன்வைத்து நிகழ்த்தப்படும் ஊகங்களாக ‘நம்பிக்கையாளன்’ மற்றும் ‘தமிழ் இலக்கிய வடிவங்கள்’ என்ற இரு கதைகளையும் சொல்லலாம். நம்பிக்கையாளன் மதம் என்ற படிமம் நம்முள் வேர்விட்டுக் கிளைத்திருப்பதைப் பேசுகிறது. ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த நம்பிக்கையாளர்கள் அத்தனை பேரும் இறந்த பிறகு சொர்க்கத்தின் கதவுகள் மூடப்படும் என்று அவர்களது மத கிரந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்நிலையில் இறுதி நம்பிக்கையாளனாக — அறிவியல் குறித்தும் அரசியல் குறித்தும் அறிந்தவன் — உயிரோடு இருக்கும் இளைஞன் எடுக்கும் முடிவை நோக்கி இக்கதை செல்கிறது. மூலநூல்வாதம் பேசும் ஒரு மதத்தினருக்கும் உலகின் பிற பகுதியினருக்குமான உக்கிரமான போர் முடிவுக்கு வரவிருக்கும் தருணத்தில் மூலநூலில் சொல்லப்பட்டுள்ள தீர்க்க தரிசனங்களை நம்புவதா கண்முன் இருக்கும் எதார்த்த உலகை நம்புவதா என்ற குழப்பத்தை அந்த இளைஞன் அடைவதை இக்கதை சித்தரிக்கிறது. அவன் கட்டாயத்தின் காரணமாகவே போரிட வருகிறான். தன்னுடன் இருப்பவர்களை இறுதிவரை காப்பாற்ற முயல்கிறான். ஆனால் அவன் முயற்சிகள் தோல்வி அடைகின்றன. அவன் இறக்க முடிவெடுக்கும் தருணம் அவனை மேலும் சிக்கலானவனாக நமக்குக் காண்பிக்கிறது. அந்த இளைஞன் அடையும் திகைப்பை நாமும் அடைகிறோம் என்பதே கதையின் வெற்றி.

‘தமிழ் இலக்கிய வடிவங்கள் – நேற்று, இன்று, நாளை – ஓர் ஆய்வு’ என்ற கதை உரை வடிவத்தில் நிகழ்கிறது. ஆனால் இவ்வுரை இன்றிலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு மனித வாழ்வின் சாத்தியங்களைத் தொட்டுச் செல்லும்படி அமைந்துள்ளது. அன்றைய இலக்கிய வடிவங்கள் குறித்து பேசுவதன் வாயிலாக இக்கதை மனித இனம் மரணமின்மையை எட்டுவதற்கான சாத்தியங்களையும் அன்றும் எஞ்சக்கூடிய கேள்விகளையும் விவாதிக்க முற்படுகிறது.

இறந்தகாலத்தின் முடிவில்லா ஆழத்தை நிகழ்காலத்துடனும் எதிர்காலத்தின் முடிவின்மையுடனும் ஒரே செயல் மூலம் இணைக்கக்கூடிய ஒரு அக நிகழ்வே இலக்கிய வாசிப்பு என்பது.

கதையில் வரும் இக்கூற்று இலக்கியத்தின் பொருத்தப்பாட்டினை சொல்வதோடு எதிர்காலத்தில் எல்லா அறிவுத்துறைகளுக்குமான ஒரு வரையறையைச் சொல்கிறது என்றும் வாசிக்க இடமிருக்கிறது.

‘இங்கே இங்கேயே’ மற்றும் ‘நாக்கு’ இருகதைகளும் இரு விதங்களில் ஒற்றுமை கொண்டவை. இரு கதைகளுமே கச்சிதமான இறுதித் திருப்பத்தையும் ஒரு மர்மத் தொனியையும் கொண்டுள்ளன. இரு கதைகளுமே இறந்த காலத்தில் இருந்து இன்றினை வந்து தொடும் ஓர் அம்சத்தைத் தன்னுள் கொண்டுள்ளன. இங்கே இங்கேயே என்ற கதை அறிவியல் புனைவுகள் குறித்து பேசத் தொடங்கினால் எல்லோருக்கும் சற்று நேரத்தில் நினைவுக்கு வந்துவிடும் கருவான வேற்றுக்கிரகவாசிகளைப் பற்றிப் பேசுகிறது. இக்கதையின் சிறப்பு கதையுடல் முழுக்க வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு மறுக்கப்படுகிறது.

மக்களுக்கு பூமி மீது நம்பிக்கை போய்விட்டது. இங்கேயே நம் வாழ்க்கைச் சிக்கல்களுக்கு ஒரு தீர்வு கிடைக்குமென அவர்கள் நம்பவில்லை.

கிடைக்காத வரை இல்லை என்று கொள்வதே அறிவியலின் நியதி.

இது போன்ற வரிகளின் வழியாக கதை முழுக்க அந்த மறுப்பு தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆனால் கதை முடிவில் வேற்றுக்கிரகவாசிகள் கதை நிகழும் இடத்திற்கு வந்து சென்றதற்கான சாத்தியங்கள் ஆழமாக மறுக்கப்படும் இடத்தை ஒரு பழங்குடி தெய்வ நம்பிக்கையின் வழியே கேள்விக்கு உள்ளாக்கியபடி கதை முடிகிறது. தொல்பழங்காலத்தின் மீதான புகைமூட்டமான அறிதலை நோக்கி அவ்வறிதலின் எல்லையைத் தாண்டாமல் நின்று பேசும் கதையாக இதனைச் சொல்லலாம். வெகு மக்கள் நம்பிக்கைக்கும் அறிவியலுக்குமான மர்மமான இடைவெளியை பேசும் கதையாகவும் இதனை வாசிக்க இடமிருக்கிறது.

நாக்கு தேவையின் காரணமாக தொடங்கிய ஒரு பழக்கம் குறியீட்டு ரீதியாக தொடர்வதைச் சொல்லும் கதை. இக்கதையின் முடிவினை முன்னரே ஊகிக்க முடிகிறது. இத்தொகுப்பின் சற்றே பலகீனமான கதை என்று இதனைச் சொல்லலாம்.

‘பித்தம்’ ரசவாதத்தின் சாத்தியங்களை — ஓர் உலோகத்தை மற்றொன்றாக மாற்றுவதை, பெரும்பாலும் தங்கமாக மாற்றுவதை — பேசுகிறது. ரசவாதம்தான் கதை மையம் என்றாலும் ஒவ்வொரு தலைமுறையிலும் அந்த ரகசியத்தை நெருங்குகிறவனை அது வாழ்வினைக் கைவிடச் செய்து தன் பின்னே அலைய விடுவதும் அவன் உயிரினை எடுத்தபிறகு தன்னை வெளிக்காட்டிகொள்வதும் என்று ரசவாதம் கதை முடிவில் வேறொரு ஆழத்துக்கு நகர்கிறது. மனிதர்களைத் தீராது அலைகழிக்கும் ஞானத் தேடலாக பண்டாரத்தின் வாழ்க்கையை வாசிக்க முடிகிறது. ஒருபுறம் ஒரு தனிமத்தை மற்றொன்றாக மாற்றுவதற்கான சாத்தியங்களைப் பேசிக்கொண்டே ஞானத்தேட்டம் இறைவனை நோக்கி மனிதனை இட்டுச் செல்வதையும் இக்கதை பிரதிபலிக்கிறது. இந்தப் பத்தியை உதாரணமாகச் சொல்லலாம்.

“எனக்கு ஒரு துண்டு தங்கம் வேண்டாம். ஆனா இது ஞானம். ஞானம்னா என்ன? எம்பெருமான் கந்தன்கிட்டே நம்மைக் கூட்டிட்டுப் போற பாதை. அஞ்ஞானத்தோட கதவை மூடி வைச்சு நம்மை அவன்கிட்டேருந்து மறைச்சு வைச்சிருக்கு பாசம். ஒரு சயன்ஸ் கண்டுபிடிப்பு ஒரு கதவு திறக்கிறதுக்குச் சமம். முருகா ஞானபண்டிதா!” என்றார் பண்டாரம். “இப்ப தம்பி சொன்னாரே ஒரு பொருளை இன்னொண்ணா மாத்த முடியாதுண்ணு. மாத்த முடியும். இப்ப நான் சொல்லுதேன் எண்ணைக்கானாலும் ஒரு நாள் மனுஷன் எல்லாப் பொருளையும் எல்லாமா மாத்தத்தான் போறான். அண்ணைக்கு மண்ணையும் கல்லையும் அவன் எரிப்பான் தம்பி. கரும்பாறையைச் சீனியாக்கித் திம்பான். சயன்ஸ் போற வழி அதாக்கும்…”

ஐந்தாவது மருந்து, விசும்பு, பூர்ணம், உற்றுநோக்கும் பறவை ஆகிய நான்கு கதைகளும் வெவ்வேறு வகையில் முக்கியமான கதைகள். கட்டுரையின் தொடக்கத்தில் சொன்னதுபோல மரபினை அறிவியல் புனைகதைகள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதில் முன்னோடி முயற்சிகளாகத் திகழ்கிறவை இந்த நான்கு கதைகளும். வெறும் பகற்கனவையோ மாயத்தன்மையையோ ஊட்டாமல் தமிழ் மரபுக்கும் இன்றைய நவீன அறிதல் முறைகளுக்குமான தொடர்பினை உறுதி செய்யும் கதைகள். இத்தொகுப்பின் மற்ற கதைகளைப் போலவே வாழ்வின் முன் அல்லது பிரபஞ்சத்தின் முன் மனிதனின் அறிதல்கள் திகைத்து செயலற்று நிற்கும் புள்ளியைச் சுட்டுகிற கதைகள்.

‘ஐந்தாவது மருந்து’ சித்த வைத்திய முறைகளில் எய்ட்ஸுக்கு மருந்து கண்டுபிடிப்பதான ஊகத்தில் எழுதப்பட்டுள்ளது. அந்த மருந்துக்கு பின்னிருக்கும் அறிவியலையும் சித்த வைத்தியம் குறித்து நிலவும் மயக்கங்களைக் களைவதாகவும் கதைசொல்லிக்கும் தளவாய்க்குமான உரையாடல்கள் கதையில் இடம்பெறுகின்றன. நோயினைக் கண்காணித்து நோய்க்கிருமியும் தன்னைப் பலப்படுத்திக்கொண்டே வருவதைச் சொல்லிச் செல்லும் கதையில் இப்படி ஒரு வரி வருகிறது.

“இந்த வைரஸ் முதலிலே தாக்கிய பிறகு பல ஆயிரம் வருஷம் தாவர மருந்துகளோட கட்டுக்குள்ள இருந்திருக்கு. ஆனா ஜீவ மருந்து கண்டுபிடிச்ச பிறகு ஆயிரம் வருஷத்திலே மறுபடி தாக்கியிருக்கு. உலோக ரசாயன மருந்துகளை ஐநூறு வருஷங்களிலே தாண்டி வந்திருக்கு. அதாவது அதன் பரிணாம வேகம் அதிகமாயிட்டே இருக்கு. இப்ப மனுஷங்க மருந்துகளை உபயோகிக்கிறது ரொம்ப அதிகம். மனுஷங்க உலகம் முழுக்கச் சுத்திட்டே இருக்காங்க. அப்ப அது சீக்கிரமா அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியை அடைஞ்சுடும். அதாவது அடுத்த தாக்குதல் நூறு வருஷத்துக்குள்ள இருக்கலாம்…”

கதைக்கு வெளியேயும் இவ்வரிகளைப் பொருள் கொள்ள முடியும். சிக்கலாகிக் கொண்டேவரும் மனித மனம் சீரடைந்து கொண்டிருக்கும் சூழல் என அனைத்து வகையான சாத்தியங்களையும் இக்கதை யோசிக்கச் செய்கிறது.

இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என விசும்பினைச் சொல்லலாம். எள்ளலான மொழிநடையில் சொல்லப்பட்டிருக்கும் கதை. பறவைகளின் வலசையை செயற்கையாகக் கட்டுப்படுத்த ஒரு பறவையியலாளர் நினைக்கிறார். அவர் தந்தை (அவரும் பறவையியலாளர்தான்) அது சாத்தியமில்லை என்கிறார். மகன் செயற்கை வலசைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கித் தன் செயல்பாட்டினை வெற்றிகரமாக முடிக்கிறார். ஆனால் உருவாகும் விளைவுகள் அவரது அறிவுத்துறைக்கு அப்பாற்பட்டதாக இருக்கின்றன. மனிதன் ஒவ்வொரு முறையும் இயற்கையின் சமநிலையைக் குலைத்தே ஒவ்வொன்றையும் அறிகிறான். அடைகிறான். ஆனால் இயற்கை அந்தச் சமநிலையின்மையையும் தன் சமநிலையின் ஒரு பகுதியாகவே பாவிக்கிறது என்று இக்கதையை வாசிக்க முடிகிறது. இக்கதையிலும் விசும்பின் முன் மனித முயற்சிகள் சிறுத்து நிற்பதையே உணர்கிறோம்.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘விசும்பு’ தொகுப்பில் இடம்பெற்ற ‘உற்றுநோக்கும் பறவை’ சிறுகதைக்கு ஓவியம் வரையச் சொல்லி ஓவியர் சந்துருவிடம் கேட்டிருந்தோம். அவர் தீட்டிய ஓவியத்தை இங்கே காணலாம்.

‘பூர்ணம்’ மற்றும் ‘உற்றுநோக்கும் பறவை’ இரண்டிலும் இரு உபநிடத வாக்கியங்கள் வருகின்றன. ஆனால் அவ்வரிகளுக்கான கதைகள் போலன்றி கதைப்போக்கில் இயல்பாகவே அவை சொல்லப்படுகின்றன. இரு கதைகளுமே மனம் சார்ந்தவை. பூர்ணம் மனதின் ஒரு பகுதியான மூளையின் திறனை மேம்படுத்துவதன் வாயிலாக ஒரு மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகத் தன்னை உணர்வதைப் பேசுகிறது. நனவிலி மனம் என்ற ஒன்று இல்லாத நிலையை ஒரு மனிதனிடத்தில் ஏற்படுத்தி அந்த நிலையையும் யோகிகளையும் இக்கதை ஒப்பிட்டுப் பேசுகிறது. எளிமையாகச் சொல்வதென்றால் மூளையின் செயல்திறன் முழுமையடைந்த ஒரு மனிதன் என்னவாக இருப்பான் என்ற கேள்வியை நோக்கி எழுதப்பட்ட கதை என்று இதனை சொல்லலாம்.

இத்தொகுப்பின் மிகச் சிறந்த கதை உற்றுநோக்கும் பறவையே. இக்கதையும் மனதை கட்டுப்படுத்துவது சார்ந்தே பேசுகிறது. புராணக் காலத்தில் இருந்தே மனிதனுக்குள் நிலவும் ஒரு முரணை இக்கதை சாராம்சப்படுத்துகிறது. வரலாற்று விசாரணை தொனியில் கதை தொடங்குகிறது. துவாத்மர்கள் என்ற சிறிய மதப்பிரிவு குறித்து ஆய்வு செய்யும் கதைசொல்லிக்குக் கிடைக்கும் தகவல்களாகக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஞானமும் குரூரமும் கொண்ட மனதின் இருநிலையை இக்கதை சித்தரிக்கிறது. மனிதனின் ஆளுமை என்பது தொடர்ச்சியாக சமூகத்துடன் உறவாடுவதன் வழியாக உருவாகி வருவது. ஆனால் அந்தச் சமூகத்தை இயக்கும் விதிகள் சமூக உறவுகளைத் தவிர்த்து தனித்தனிக் குழுக்களாக இயங்கிய மதத்தினரால் உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. இந்த முரண் நம் வாழ்வில் எப்போதுமே பிரதிபலிக்கிறது. தனிமை நமக்கு விதிக்கப்படும்போது சமூகத்துடன் உறவுகொள்ள முனைகிறோம், சமூக உறவுகள் சலிக்கும்போது தனிமையைத் தேர்கிறோம். மதங்கள் நம்முடைய தனிமைக்குப் பொருளேற்றம் தருகின்றன. துவாத்மர்களும் அப்படியொரு தனி மதமாகத் திரள்கின்றனர். நம்முடைய புராணக் கதைகளில் வாசித்திருப்போம் ரிஷி தியான நிலையில் உச்சத்தை எட்டும்போது அவரை உலகியல் இச்சைகள் வந்து பற்றும். அவ்விச்சை பெரும்பாலும் ஒரு பேரழகியாக உருவகப்படுத்தப்பட்டிருக்கும். அவர்களுடைய தவம் கலையும். மனம் ஒன்றில் குவியும்போது அதனைக் கண்காணிக்கும் மனதின் மற்றொரு பகுதி குவியத்திற்கு எதிர்திசையில் நகர்கிறது.

துவாத்மர்கள் மாதத்தில் சரிபாதிநாள் தியானிக்கின்றனர். மறுபாதியில் உச்சபட்ச வெறியுடன் வாழ்வை நுகர்கின்றனர். அவர்களுடைய வன்முறை எல்லை மீறும்போது அவர்களை அன்றைய ஆங்கில அரசு அழிக்கிறது. அவர்களுடைய சமநிலையைப் பேணச் செய்தது எது என்பதே இக்கதையின் ஆதாரக் கேள்வியாக இருக்கிறது. மனிதனின் இருநிலைக்கு எதிரான போராட்டமாக மனதின் நன்மை தீமைகளுக்கு எதிரான போராக இக்கதையை வாசித்துச் செல்லலாம். தன்னைத்தானே கண்காணித்துக் கொள்ளும் மனம் தன்னை எவ்வாறு பகுத்துக்கொள்கிறது என்பதைச் சித்தரிக்கும் ஆளுமைப்பிளவு சார்ந்த கதையாகத் தொடங்கி மனதின் விசித்திரமான ஆழங்களைத் தொட்டுக்காட்டும் கதை என்கிற விதத்தில் இது மிக முக்கியமான கதையாகிறது.

புனைவுகள் எப்போதும் வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்தையும் விசாரணைக்கு உட்படுத்தி சாராம்சப்படுத்துவதன் வாயிலாக வாழ்வின் பொருளை அல்லது பொருளின்மையை உணர்த்துவதாக அமைகிறவை. அறிதல்களுக்கான கருவிகள் பெருகப் பெருக புனைவுகளுக்குள்ளும் அக்கருவிகளின் தாக்கம் பிரதிபலிக்கவே செய்யும். மதம், தத்துவம், வரலாறு, மானுடவியல், உளவியல் எனப் பல துறைகளின் தாக்கம் புனைவுகளில் பிரதிபலிக்கும் போதுதான் ஒரு மொழியின் புனைவிலக்கியப் பரப்பு வளமானதாகவும் காலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாகவும் இருக்கும். அவ்வகையில் தமிழில் குறைவாக எழுதப்படும் புனைவு வகைமையான அறிவியல் புனைவுகளுக்கான ஒரு முன்னோடி முயற்சியாக இத்தொகுப்பினைச் சுட்ட முடியும்.


சுரேஷ் பிரதீப் எழுதும் ‘நீளும் எல்லைகள்’ கட்டுரைத்தொடர்:

உங்கள் கருத்தைப் பதிவிடுங்கள்